ஜார்ஜ் ஈஸ்ட்மேன் பிறந்த நாள்- ஜூலை 12
இன்றைக்கு அநேகமாக எல்லோருடைய கையிலும் செல்போன் இருக்கிறது. அதில் கேமரா மட்டுமில்லை, வீடியோ கேமராவும்கூட இருக்கிறது. ஆனால், 115 ஆண்டுகளுக்கு முன்புதான் சாதாரண மக்களும் படம் எடுக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதற்குக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் ஈஸ்ட்மேன். ஜூலை 12 அவருடைய பிறந்த நாள். இந்த நேரத்தில் ஒளிப்படக் கலை பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?
$ போட்டோகிராபி என்றால் ஒளியை வரைவது என்று அர்த்தம்.
$ பிரான்ஸைச் சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நைப்ஸ் 1826-ல் ‘கேமரா அப்ஸ்க்யுரா’ என்ற கருவியின் மூலம் முதல் ஒளிப்படத்தை எடுத்தார். அதற்கு முன்பாக, கேமரா அப்ஸ்க்யுராவை துல்லியமாகப் பார்ப்பதற்கும், வரைவதற்கும் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். ஒரு பெட்டியில் இடப்பட்டிருக்கும் துளை வழியாக, ஒரு காட்சி தலைகீழாகத் தெரிவதுதான், இந்தக் கருவியின் அமைப்பு. நைப்ஸ் எடுத்ததுதான், ஒரு கேமரா மூலம் எடுக்கப்பட்ட முதல் படம். இதை எடுக்கச் செலவழிக்கப்பட்ட நேரம், 8 மணி நேரம்.
$ ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் 1861-ல் முதல் வண்ணப்படத்தை எடுத்தார். சிவப்பு, நீலம், மஞ்சள் ஃபில்டர்களைக் கொண்டு டார்டன் துணி ரிப்பனை மூன்று முறை படமெடுத்தார். பிறகு மூன்றையும் இணைத்து வண்ணப்படத்தை உருவாக்கினார்.
$ ஜார்ஜ் ஈஸ்ட்மேன் எல்லோரும் படம் எடுப்பதற்கான வழிமுறையை 1888-ம் ஆண்டில் கண்டறிந்தார். அந்த ஆண்டுதான் பிலிம் சுருளுக்கான காப்புரிமையை அவர் பெற்றார். இந்த ஃபிலிம்சுருளே கேமராவுக்குள் காட்சியைப் பதிவு செய்துகொள்கிறது.
$ கொடாக், என்ற தன் நிறுவனத்துக்கான பெயரை, கேமராவில் உள்ளே உள்ள ஷட்டர் உருவாக்கிய சத்தத்தின் அடிப்படையில் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் வைத்தாராம்.
* லூமியர் சகோதரர்கள் சினிமாவை மட்டும் உலகுக்குத் தரவில்லை. ஒளிப்படங்களில் பயன்படக்கூடிய வண்ணமேற்றும் செயல்முறையையும் உருவாக்கினர். அதற்கு வசதியாக ஆட்டோகுரோம் பிளேட்டை 1907-ல் அறிமுகப்படுத்தினர்.
$ ‘கிளிக்' செய்தால் படமெடுக்கும் முறை 1900-ம் ஆண்டில் வந்தது. எளிமையான, விலை குறைந்த அந்தக் கேமராவின் பெயர் பிரவுனி. ஒரு அட்டைப் பெட்டியில் ஃபிலிம் சுருள் வைக்கும் மரப்பட்டை ஒன்றுடன், ஒரு அமெரிக்க டாலர் விலையில் அது கிடைத்தது. இதைத் தயாரித்தவரும் ஜார்ஜ் ஈஸ்ட்மேன்தான்.
$ நிலவில் மனிதன் கால் பதித்தபோது ஹாசில்பிளாட் நிறுவனத்தின் கேமரா புகழ்பெற்றது. நீல் ஆம்ஸ்டிராங் முதன்முதலில் நிலவில் நடந்த காட்சிகள், அந்தக் கேமராக்கள் மூலமே படமெடுக்கப்பட்டன. ஆம்ஸ்டிராங் தலைமையிலான குழு நிலவின் பாறை மாதிரிகளைப் பூமிக்கு எடுத்துவர வேண்டி இருந்ததன் காரணமாக ஏற்பட்ட கூடுதல் எடையால், நிலவிலேயே 12 கேமராக்களை விட்டுவர வேண்டியிருந்தது.
$ இன்றைக்கு டிஜிட்டல் கேமராக்கள் பெருகிவிட்டன. முதல் டிஜிட்டல் கேமராவைக் கொடாக் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீவ் சாசன் என்ற பொறியாளர் 1975-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கினார். மூன்றரை கிலோ எடை கொண்ட அது, கருப்பு வெள்ளைப் படங்களை எடுத்தது.
$ கணினிமயமாக்கப்பட்ட டிஜிட்டல் கேமரா மூலம், ஃபியூஜி நிறுவனம் 1988-ல் டிஜிட்டல் முறையில் படங்களைப் பதிவுசெய்யத் தொடங்கியது.
$ மும்பையைச் சேர்ந்த இதழியல் ஒளிப்படக் கலைஞர் திலிஷ் பாரேக் உலகிலேயே அதிகக் கேமராக்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். 4,425 வகை கேமராக்கள் அவரிடம் உள்ளன. இதில் 2,634 பழமையான அரிய கேமராக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1977-ல் இருந்து கேமராக்களைச் சேகரிக்க ஆரம்பித்த இவரிடம், 1907-ம் ஆண்டை சேர்ந்த கேமராக்கள்கூட உள்ளன.
$ ஃபேஸ்புக் பயனாளர்கள் ஒரு நாளைக்கு 35 கோடிக்கும் மேற்பட்ட ஒளிப்படங்களைப் பதிவேற்றுகிறார்கள் என்கிறது ஒரு கணக்கு.
$ கி.பி. 1800-களில் எடுக்கப்பட்ட மொத்தப் படங்களின் எண்ணிக்கை அளவுக்கு, உலகில் இன்றைக்கு வெறும் 2 நிமிடங்களில் படங்கள் எடுக்கப் படுகின்றன. உலகெங்கும் தற்போது எடுக்கப்படும் படங்களில் 30 - 50 சதவீதம் செல்போனில் எடுக்கப்படுபவையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக