புதன், 22 ஜனவரி, 2014

கடவுள்' துகளுக்கு நன்றி

Hindu Magazine

அனைவருக்கும் அறிமுகமாகிவிட்ட 'கடவுள் துகள்' இப்போது நோபல் பரிசைக்கூட பெற்றுத்தரக்கூடிய 'அதிர்ஷ்டக்கார'த் துகளாகிவிட்டது. 'பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்துள்ள எண்ணற்ற துகள்களின் நிறை, பன்மைத்தன்மை போன்றவற்றுக்குக் காரணம், கண்ணுக்குத் தெரியாத பெருங்கடலான ஆற்றல் எங்கும் நிறைந்திருப்பதுதான்' என்று கூறிய இரு இயற்பியலாளர்களுக்குத்தான் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு.
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் டபிள்யு. ஹிக்ஸ் (84), பெல்ஜியத்தில் உள்ள லிபர் டி பிரஸெல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஃபிரான்ஸ்வா ஆங்லெர் (80) ஆகியோர் நோபல் பரிசு பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பரிசுத் தொகையான சுமார் ஏழரைக் கோடி ரூபாயை இவர்கள் சமமாகப் பகிர்ந்துகொள்வார்கள். நோபல் விருதும் விருதுத் தொகையும் ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படும்.
'ஹிக்ஸ் போஸான்'என்று இதைப் பற்றி முதலில் கூறிய ஹிக்ஸ் பெயரால் இந்தத் துகள் அழைக்கப்பட்டாலும் ஊடகங்களால் கடவுள் துகள் என்ற பெயர் பிரபலமாகிவிட்டது. கடவுள் துகள் குறித்த கருதுகோள் 1964-லேயே உருவாகிவிட்டது. ஆனால், ஒரு தலைமுறை விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து, கடந்த ஆண்டில் ஹிக்ஸ் போஸானைக் கண்டுடித்துவிட்டனர். சுவிட்சர்லாந்தில் உள்ள 'செர்ன்'ஆய்வகத்தில் துகள் தாக்குவிப்பான்களில் கோடிக்கணக்கான முறை அணுத் துகள்களை மோதவிட்டுப் பார்த்ததில் ஒருவழியாகக் கடந்த ஆண்டு ஹிக்ஸ் போஸானின் இருப்பு உறுதிசெய்யப்பட்டது.
அணுவின் அமைப்பைப் பற்றி 'செர்ன்'அறிவியலாளர்கள் உருவாக்கிய வடிவம்தான் படித்தர வடிவம் (Standard Model). இந்த 'படித்தர வடிவம்'நம் பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களையும் அதற்கு ஆதாரமான விசைகளையும் (ஈர்ப்புவிசையைத் தவிர) அவற்றுக்கு இடையேயான தொடர்பையும் வரையறுத்தாலும் அது முழுமையடையத் தேவையான கடைசிக் கூறு இந்த ஹிக்ஸ் போஸான்தான். இந்தப் 'படித்தர வடிவ'த்தைப் பொறுத்தவரை, பிரபஞ்சப் பாகுபோல் செயல்படும் ஆற்றலால் இந்தப் பிரபஞ்சமே நிரம்பியிருக்கிறது. அதன் ஊடாகச் செல்லும் துகள்களுக்கு அந்த ஆற்றல் நிறையைக் கொடுக்கிறது. இந்த ஆற்றல் புலம்தான் 'ஹிக்ஸ் புலம்'. காந்தத்தைச் சுற்றி காந்தப்புலம் இருப்பதைப் போலத்தான் ஹிக்ஸ் போஸானைச் சார்ந்து 'ஹிக்ஸ் புலம்' விரவியிருக்கிறது. ஹிக்ஸ் புலம் இல்லையென்றால், எலெக்ட்ரான்கள் போன்ற அடிப்படைத் துகள்கள் ஒளிவேகத்தில் சென்று ஒன்றையொன்று இறுக்கிக்கொள்ளும். அப்புறம் அணுக்களும் இருக்காது, நாமும் இருக்க மாட்டோம்.
இந்தப் பிரபஞ்சமானது துல்லியமான, எளிமையான, எழில்மிகு இயற்கை விதிகளுக்கு உள்பட்டு இயங்குகிறது என்பதை ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த எழிலில் காணப்படும் குறைகளும் இடைவெளிகளும்தான் எல்லாவற்றையும் (நாம் உட்பட) விநோதமானவையாகத் தோன்றச் செய்கின்றன. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, அறிவியல் அறிஞர்கள் தங்களுடைய ஆற்றலைப் போருக்குத் தேவைப்படும் அழிவுக் கருவிகளைத் தயாரிப்பதிலிருந்து திசைதிருப்பி இயற்கையை ஆராயத் தலைப்பட்டதால்தான் மேற்குறிப்பிட்ட பார்வை உருவாகியது. பேரண்டத்தை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்ட அவர்களின் ஆய்வின் விளைவுதான் ஹிக்ஸ் போஸான்.
ஹிக்ஸ் போஸான் என்பது இயற்கையின் சீர்மையுடன் தொடர்புடையது. எல்லாவற்றிலும் இயற்கை ஒரு சீர்மையையும் ஒழுங்கான அமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. பிரபஞ்சத்தின் அடிப்படை விசைகள் யாவுமே, இயற்கையானது எல்லாவற்றிலும் சீர்மையையும் ஒழுங்கையும் ஏற்படுத்த முயல்வதால்தான் என்று 1954-ல் ஆராய்ச்சியாளர்கள் சென் நிங் யாங், ராபர்ட் எல். மில்ஸ் என்போர் அறிவித்தனர். அவர்கள் புரூக்ஹேவன் தேசிய ஆய்வகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாகவும் விளைவாகவும் ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பைக் கருதலாம்.
1964-ல் மூன்று வெவ்வேறு இயற்பியல் அறிஞர்கள் ஹிக்ஸ் துகள் குறித்து வெவ்வேறு இடங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், இது குறித்து முதலில் பதிப்பித்தவர்கள் டாக்டர் ஆங்லெரும் அவருடைய சகா ராபர்ட் பிரௌட்டும்தான். ராபர்ட் பிரௌட் 2011-ல் இறந்துவிட்டார். ஆராய்ச்சியில் அவருக்கும் பெரும் பங்கு உண்டு என்றாலும், இறந்தவர்களுக்கு விருது தருவது மரபு இல்லை என்பதால், அவருக்கு விருது தர மாட்டாது.
டாக்டர் ஆங்லெர் பெல்ஜியம் நாட்டின் எட்டர்பீக் நகரில் 1932-ல் பிறந்தார். பொறியியல், இயற்பியல் படித்தார். 1959-ல் பிரஸெல்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டபோது டாக்டர் பிரௌட்டுடன் சேர்ந்துகொண்டார். ஆங்லெர் பெல்ஜியத்துக்குத் திரும்பியபோது டாக்டர் பிரௌட் அவருடன் சென்றார். இருவரும் இந்தக் கோட்பாடு குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தபோதுதான் இங்கிலாந்து நாட்டின் நியூகேசலைச் சேர்ந்த டாக்டர் ஹிக்ஸ் என்ற இளைஞரும் இந்தத் துகள் குறித்துத் தன்னுடைய பாணியில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்தார்.
ஹிக்ஸ் அனுப்பிய ஆய்வறிக்கையை செர்னில் உள்ள 'பிசிக்ஸ் லெட்டர்ஸ்' பிரசுரிக்க ஏற்க மறுத்தது. அந்த அறிக்கையை அவரே திருத்தி அதன் போட்டியாளரான 'பிசிகல் ரெவ்யூ லெட்டர்ஸ்' நிறுவனத்துக்கு அனுப்பினார். அந்த அறிக்கையின் கடைசிப் பகுதியில் அடிக்குறிப்பாக, புதிய துகள் குறித்தது இந்த ஆய்வு என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதுதான் ஹிக்ஸ் போஸான் என்று இப்போது உலகப் புகழ் பெற்றுவிட்ட கடவுள் துகள். டாக்டர் ஆங்லெர், பிரௌட் ஆகியோரின் ஆய்வுகளையும் குறிப்பிட்டே தீர வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அந்த ஆய்வுக் கட்டுரை பிரசுரிக்க ஏற்கப்பட்டது.
இதனிடையே லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாம் கிப்பிள், ரோசஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்ல் ஹேஜன், பிரௌன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெரால்ட் குரால்நிக் என்ற மூன்று இயற்பியலாளர்கள் தங்களுடைய ஆய்வுகளை அறிக்கையாகத் தயாரித்துவந்தனர். அவர்கள் அதைப் பிரசுரத்துக்காக அனுப்ப முற்பட்டபோது தபால்துறையினர் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். எனவே, ஹிக்ஸ், ஆங்லெர் –பிரௌட் ஜோடி தயாரித்த இரண்டு அறிக்கைகள் மட்டுமே பிரசுரத்துக்கு வந்தன. அதிலிருந்தே யார் முதலில் ஆய்வு செய்தது, யார் முதலில் கண்டுபிடித்தது என்று அவர்களுடைய நண்பர்கள், ஆதரவாளர்கள் வட்டத்தில் பெருத்த சர்ச்சை நடந்துகொண்டேயிருக்கிறது.
கடந்த ஆண்டு ஹிக்ஸ் போஸான் குறித்து ஜூலை 4-ம் தேதி இறுதியாக அறிவித்ததை அடுத்து சர்ச்சைகள் ஓய்ந்தன. அன்றுதான் ஹிக்ஸும் ஆங்லெரும் முதல்முறையாகச் சந்தித்துக்கொண்டனர்.
நோபல் விருது கிடைத்த செய்தியை நிருபர்கள் எங்க்லெர்ட்டிடம் கூறி வாழ்த்துத் தெரிவித்தனர். அவரும் நகைச்சுவையாக, 'இது வருத்தத்துக்குரிய செய்தியல்ல என்றே நீங்களும் நினைத்திருப்பீர்கள்' என்றார்.
சுவீடன் நாட்டு ராயல் அறிவியல் அகாதெமி நிர்வாகிகளால் ஹிக்ஸைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. “வரும் செவ்வாய்க்கிழமை நான் ஊரிலேயே இருக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டுத்தான் எங்கோ போனாராம். இயற்பியலில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக இருந்தாலும் கைபேசியையும் கணினியையும் அவர் பயன்படுத்தவே மாட்டாராம் என்கிறார் அவருடைய நண்பரும் மற்றொரு இயற்பியல் அறிஞருமான ஆலன் வாக்கர்.
ஹிக்ஸ் மிகவும் எளிமையானவர். அவர் ஆய்வுக்கு வருவதும் ஆய்வுக்கூடத்தைவிட்டுப் போவதும் யாருக்கும் தெரியாது. அவருக்கு விருது கிடைக்கும் என்று மோப்பம் பிடித்து, பேட்டி வாங்கிவிட ஒரு நிருபர் எப்படியோ அவருடைய வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். ஒரு ஈயைப் பிடித்து அவருடைய காதில் போட்டு வெளியே அனுப்பிவிட்டாராம் ஹிக்ஸ். ஆனால், எடின்பர்க் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். அடிப்படை அறிவியலுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் இது போன்ற நுண் ஆராய்ச்சிகளுக்குள்ள முக்கியத்துவத்தை மக்களிடையே உணர்த்தும் என்று நம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹிக்ஸ் துகள் குறித்த ஆய்வை ஆயிரக் கணக்கான அணுத்துகள் இயற்பியலாளர்கள் செர்ன் நகரில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஆண்டுக் கணக்காக மேற்கொண்டுவந்தனர். 2012 ஜூலை 4-ம் தேதி இறுதியாக ஹிக்ஸின் கண்டுபிடிப்பை உறுதிசெய்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்கான நோபல் விருதின் பெருமையில் செர்ன் இயற்பியலாளர்களுக்கும் பங்கு இருக்கிறது. செர்ன் கூடத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பல குழுக்களில் ஒன்றின் தலைவரான பேபியோலா கியானட்டி என்பவர், இது மிகவும் பெருமிதத்தையும் திருப்தியையும் தந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
(எங்கும் நிறை பரப்பிரம்மம், யாதுமாகி நின்றது, எங்கெங்கு காணினும் சக்தி என்றெல்லாம் வெவ்வேறு மகனீயர்களால் கூறப்பட்ட வாசகங்கள் அனைத்தும் இந்தத் துகளுக்குப் பொருந்துகிறது. அதனாலேயே இதைக் கடவுள் துகள் என்று பெயரிட்டுவிடவில்லை. இந்தக் கூத்தைச் செய்தது லியோன் லெடர்மேன் என்பவர். பெர்மிலேப் என்பதன் முன்னாள் இயக்குநர். டிக் தெரசி என்பவருடன் சேர்ந்து இந்தத் துகள் குறித்து அவர் புத்தகம் எழுதினார். “இதுவென்ன சனீஸ்வரன் துகள்” என்பதுபோல் எழுதவந்து, வார்த்தைச் சிக்கனம் கருதி – “ஈஸ்வரன் துகள்” என்பதுபோல எழுதிவிட்டார். அதாவது, “கடவுள் படைத்த கண்றாவி துகள்” என்று எழுதப் புகுந்து “கடவுள் துகள்” என்று கைதவறி எழுதி, திருத்தச் சோம்பல்பட்டு அப்படியே அச்சாகியதுதான் இந்தப் பட்டப்பெயர். பத்திரிகையாளர்கள் எப்போதுமே நல்லதை விட்டுவிட்டு, பஞ்ச் வசனங்களையே தேடுகிறவர்கள் என்பதால், இந்தப் பெயரே அவர்களுக்குப் பிடித்துவிட, கடவுள் துகள் என்ற பெயர் நிலைத்துவிட்டது.)
நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

WAR

ஜார்ஜ் க்ளெமாசோ, “போர் என்பது வெற்றியில் முடியும் பேரழிவுகளின் தொடர்ச்சி” என்பார். நவீன உள்நாட்டுப் போர்கள் பேரழிவுகளில் முடியும் குழப்பங்களின் தொடர்ச்சி.

பாரம்பரிய மருத்துவம்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் தன்னுடைய ‘மேற்கத்திய மருந்துகள் - மறுக்க முடியாத சில உண்மைகள்’ கட்டுரையில் (‘தி இந்து’அக்.29) நவீன மருத்துவத் துறையின் சில பக்கங்களை வாசகர்களுக்குச் சொல்லி, பாரம்பரிய மருந்துகள் இன்றைய அறிவியலின் கேள்விகளுக்குப் பதிலளிக்காதவை என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை, தவறான தரவுகளுடன் நிறுவ முயன்றிருக்கிறார்.
நவீன மருந்துகளின் மகத்துவத்தையும் நம் மக்கள் நலவாழ்வுக்கு அவற்றின் பங்களிப்பையும் ஒருபோதும் யாராலும் மறுக்கவோ மறக்கவோ இயலாது. தொற்றுநோய்க் கூட்டத்தைப் பெருவாரியாகக் கட்டுப்படுத்தியதிலும் சரி, அவசர காலச் சிகிச்சையில் அதன் முக்கியத்துவமும் சரி அளப்பரியன. அதேசமயம், பாரம்பரிய மருத்துவ அறிவியலும் அதன் புரிதலும் இதுவரை நம்மை, நம் நலவாழ்வைக் காத்துவந்தன என்பதை மறந்து, ஏதோ பாரம்பரிய மருத்துவம் ‘குறளி வித்தை’என்ற ரீதியில் எழுதுவது, ஏகோபித்த அளவில் சித்தமருத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கும்.
நோய்கள் எல்லாம் கர்மவினையினால், அமானுஷ்ய சக்தியினால் ஏற்படுகின்றன என கிரேக்கம் உள்ளிட்ட உலகின் முன்னோடிச் சமூகங்கள் பேசிவந்த காலத்திலேயே, நோய்களுக்கு எந்தக் கர்மவினையும், பேய் பிசாசும் காரணமல்ல; உடலில் மாறுபாடு அடைந்துள்ள முக்குற்றங்களாலான வளி, அழல், ஐயம் ஆகிய மூன்றும்தான் காரணம் என்றார் வள்ளுவர் (‘மிகினும் குறையினும் நோய்செய்யும் மேலோர் வளிமுதலா எண்ணிய மூன்று’ - திருக்குறள் 941).
பஞ்ச பூதங்களான மண், நீர், காற்று, தீ, ஆகாயத்தின் கூட்டுறவில், இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உப்பு ஆகிய ஆறு சுவைகள் தோன்றி, அந்த ஆறு சுவைகளால் ஆன உணவைச் சாப்பிடும்போது, சாப்பிடும் சுவைக்கு ஏற்றபடி, மூன்று குற்றங்களும் மாறுகின்றன என்ற புரிதலில்தான் சித்த மருத்துவமும், ஆயுர்வேதமும் இன்ன பிற இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளும் இயங்குகின்றன. இது ஒரு பண்டைய புரிதல். தெளிவான ஓர் அறிவியல். தற்கால அறிவியலின் தர்க்கவாதப்படி துல்லியமானது (ப்ரேசிஸ்டு), பாரபட்சமற்றது (டிஸ்பாஷனேட்), தர்க்கரீதியிலானது (ரேஷனால்), தேவைப்படும் விளைவை எப்போதும் தரக்கூடியது (ரீபுரொடியூசபில் கான்டெக்ஸ்ட்).
பல காலம் இந்தப் புரிதலை அறிவியலாக ஏற்றுக்கொள்ள நவீன அறிவியலால் முடியவில்லை. ஆனால், வெகு சமீபத்தில் தன் ஆய்வுக் கண்களை அகலமாக விரித்து, சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் சீன மருத்துவமும் சொல்லிவரும் ‘பிரக்ருதி’(வாத பித்த கப உடல்வாகுகள்) சரிதான் என்றும், ஒவ்வோர் உடலுக்கேற்ற மருந்தையும் படைத்தாக வேண்டும் என்றும் நவீன மருத்துவ உலகின் மரபணு மருந்தறிவியல் (ஜினோஃபார்மசூட்டிக்ஸ்) துறை சொல்ல ஆரம்பித்திருக்கிறது. அந்த மரபணுவியல் (ஜினோமிக்ஸ்) அடிப்படையில், ஏதாவது புது மருந்து அஸ்வகந்தாவில் வந்திருக்கிறதா என அறியாமையில் கேட்ட கட்டுரை ஆசிரியருக்கு, வெகு சமீபத்தில் அஸ்வகந்தாவுக்குத் தடுப்பு மருந்துக்கான துணை மருந்துக்கான (நியூ வேக்சின் அட்ஜுவண்ட்) அமெரிக்கக் காப்புரிமைகூட வழங்கப்பட்டிருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அஸ்வகந்தா எந்த அளவில் வேலை செய்யும், எவ்வளவு சரியான மருந்து எனச் சொல்லும் 697 ஆய்வுக் கட்டுரைகள் இருப்பதாவது அவருக்குத் தெரியுமா?
சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகள் எல்லா வல்லுநர்களுக்கும் பதில் சொல்லும்படியான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை என்ற பிம்பத்தைக் கட்டுரையாசிரியர் எழுப்ப முயல்வதும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் ‘ஆயுஷ்’ துறைக்குக் கீழ் இயங்கும் சித்த, ஆயுர்வேத, யுனானி ஆணையங்கள் தத்தம் மருத்துவத் துறையின் மருந்துகளுக்கான தர நிர்ணயங்களை இன்றைய அறிவியல் கூறுகளின்படி நிர்ணயித்து, சித்த மருத்துவ மருந்தறிவியல் நூல், ஆயுர்வேத மருத்துவ மருந்தறிவியல் நூல், யுனானி மருத்துவ மருந்தறிவியல் நூல் ஆகிய நூல்களைக் கொண்டுவந்து, மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டையும், மருந்துத் தயாரிப்பின் தர மேம்பாட்டையும் கொண்டுவந்திருக்கின்றன.
சித்த, ஆயுர்வேத மருந்துகள் வாதத்தைக் குறைக்கக் கூடியவையா, வலி நிவாரண வழிமுறையா (காக்ஸ்-2 இன்ஹிபிட்டர்) என்ற ரீதியிலான ‘இரட்டை ஆய்வுகள்’ இந்தியாவெங்கும் நடைபெற்றுவருகின்றன. புற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று கண்டறியப்பட்ட மஞ்சளும் வெண்கொடிவேலியும் நவீன மருத்துவப் புரிதல் அடிப்படையிலான ‘பி-53’ மரபணு வெளிப்பாட்டில் (பி-53 ஜீன் எக்ஸ்பிரெஷன்) எவ்விதம் பணிபுரியும் என்பதும், தீர்மானிக்கப்பட்ட செல் மரணத்தை (அப்போப்டோஸிஸ்) எவ்விதத்தில் ஊக்குவிக்கும் என்பதையும் கண்டறிந்து, உயர் மதிப்பீட்டுப் பன்னாட்டு மருத்துவ ஏடுகள் வெளியிட்டு வெகு காலம் ஆயிற்று.
சமீபத்தில், ஒட்டுமொத்தத் தமிழகமே பயந்துபோன சிக்குன் குனியாவையும் டெங்குவையும் நிலவேம்புக் குடிநீர் கட்டுப்படுத்தியதையும் அடுத்தகட்டமாக நிலவேம்பின் ஆண்ட்ரொக்ராஃபைனும் பானிகுலேட்டும் எப்படி வைரஸைக் கட்டுப்படுத்துகின்றன என்ற ஆய்வு தொடங்கியதையும் ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் அறியும்.
கேலன் சொன்னதையும் கலிலியோ சொன்னதையும் மறுத்துப் பின்னூட்டம் தரும் ஆய்வுகள்தாம் மேற்கத்திய மருத்துவ வளர்ச்சிக்கு வித்து என்று வாதாடும் கட்டுரையாசிரியர், “இந்தப் பழம் ஏன் மேலே போகாமல் கீழே வருகிறது?” என்ற நியூட்டனின் சிந்தனையிலும் சரி, “கறந்த பால் முலை புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா” என எழுதிய சிவவாக்கியரின் சிந்தனையிலும் சரி; அறிவியல்தான் அடித்தளத்தில் இருக்கிறது என்பதை மறுப்பாரா?
அன்று மதச் சித்தாந்தத்துக்குள் மாட்டிக்கொள்ள மறுத்த நியூட்டனும், ‘நட்ட கல்லும் பேசுமோ?’ என்ற சிவவாக்கியரும் ஒரே புள்ளியில்தான் அறிவியலைப் பார்த்தனர். மேற்கில் நியூட்டனுக்கும் டார்வினுக்கும் அவர்தம் அறிவியலுக்கும் கிடைத்த அங்கீகாரம், அதே தேடலை வேறோர் அறிவியல் புரிதலுடன் இன்னும் பல நூறு ஆண்டுகள் முன்னரே சொன்ன ஆசிவகக் கணியனுக்கோ வள்ளுவனுக்கோ சிவவாக்கியருக்கோ கிடைக்கவில்லை. பாரம்பரிய அனுபவங்களைக் கட்டவிழ்க்க, பாரபட்சமற்ற பாரம்பரிய மருத்துவப் புரிதலும் வேண்டும்; நவீன விஞ்ஞான ஆய்வுகளும் வேண்டும். இரண்டில் எது குறைந்தாலும் விடை கிடைக்காது. இங்கே முட்டுக்கட்டையாக இருப்பது இரண்டின் ஒருங்கிணைந்த பார்வையும் இல்லாததுதான். கூடவே, ‘தான் மட்டும்தான்’, ‘நானே கடவுள்’, ‘பழசு புரட்டு எனும் பார்வை’, ‘காப்புரிமை’ என்ற கட்டமைப்புக்குள் சிக்கியுள்ள மருத்துவ உலகம்.
ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல், இன்னும் தினசரி காலையில் ஏராளமாய் மருத்துவமனையின் வாசலில் குத்தவைத்துக் காத்திருக்கும் நம் ஊர் விளிம்பு நிலை சாமானியர்களுக்கும் நலவாழ்வைத் தருவதற்கு, காய்த்தல் உவத்தல் இல்லாத பார்வையில் ஒருங்கிணைந்த ஆய்வாலும் சிகிச்சையாலும் மட்டும்தான் முடியும்!
- கு.சிவராமன், மருத்துவர், சமூகச் செயல்பாட்டாளர்

மேற்கத்திய மருந்துகள் - மறுக்க முடியாத சில உண்மைகள்


 Hindu :

சுஷில் குமார் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்.) என்னுடன் வேலை பார்த்தவர். நீரிழிவு நோயால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தவர், பாபா ராம்தேவ் சொன்னார் என்று சுரைக்காய்ச் சாற்றைத் தினமும் குடித்துக்கொண்டிருந்தார். ராம்தேவ் சொல்லாதது, சில சமயம் சுரைக்காய் சாறு விஷமாக ஆகக் கூடும் என்பது. ஒரு நாள், சாறு குடித்த சில மணி நேரங்களில் நண்பர் மரணத்தைச் சந்தித்தார். இந்தியா முழுவதும் பேசப்பட்ட மரணம் அது. அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள்கூட இந்திய மருத்துவ முறைகளின் மீது எவ்வளவு மாளாத, அறிவுபூர்வமற்ற பற்று கொண்டுள்ளனர் என்பதற்கு ஓர் உதாரணம் இது.
நான் இவ்வாறு சொல்வதால், பழைய மருத்துவ முறைகளையோ அவை பரிந்துரைக்கும் மருந்துகளையோ முழுவதுமாக நிராகரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. நமது பாரம்பரிய மருந்துகள், மருத்துவ முறைகள் சிறந்தவை. அதேசமயம், அவற்றால் தீதற்ற நன்மை மட்டுமே விளையும் என்ற முன்முடிவோடு அவற்றை அணுகுவது அறிவுபூர்வமான செயலாகாது. நமது மூதாதையர்கள் தந்தவை என்பதால் அவை கடவுளர் நிலையினை அடைந்துவிட்டன, அவற்றைக் கேள்விகளுக்கு உட்படுத்தக் கூடாது என்று கருதுவது அபாயகரமானது. மேற்கத்திய மருத்துவ முறையின்படி, ஒரு மருந்து மக்களைச் சென்றடைவதற்கு முன்னால் என்னென்ன சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனவோ அதே சோதனைகளுக்கு இந்திய மருத்துவ முறைப்படி பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் உட்படுத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து.
மேற்கத்திய மருத்துவ முறை என்றால் என்ன?
மேற்கத்திய மருத்துவ முறைகளும் மருந்துகளும் அறிவியல் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டவை. அறிவியல் அணுகுமுறைஎன்றால் என்ன என்பதை எனக்கு இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞரான நர்லீகரைச் சந்தித்தபோது தெளிவாக விளக்கினார். கோட்பாடு, சோதனை, கண்டறிதல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடு இந்த அணுகுமுறை. இது படைப்பின் முழு ரகசியங்களையும் நமக்குக் காட்டும் திசையை நோக்கிச் செல்லும், முடிவே இல்லாத சுழற்படிக்கட்டு போன்றது. பயணத்தின்போது இடர்களும் சறுக்கல்களும் ஏற்படலாம். இந்தப் பாதை முழுவதும், தவறான சோதனைகள், பிழையான கண்டறிதல்கள் போன்றவற்றின் எச்சங்கள் சிதறிக்கிடக்கின்றன என்பதை ஒப்புக்கொள்பவர்களின் முதல் வரிசையில் விஞ்ஞானிகள் இருப்பார்கள்.
உதாரணமாக, ரத்தம் உடலினுள் கடல் நீரைப் போல விரிவதும் சுருங்குவதுமாக இருக்கும் என்று மேற்கில் நினைத்த காலம் ஒன்று இருந்தது.முன்னோடிகளில் ஒருவரான கேலன் அவ்வாறுதான் நினைத்தார். கல்லீரல் ரத்தத்தை உற்பத்தி செய்கிறது, அதைத் திசுக்கள் உண்கின்றன என்று அவர் சொன்னார். ரத்த ஓட்டம் என்றால் என்ன என்பதை முதலில் உணர்ந்தவர் இபின் அன் நஃபீஸ் என்ற பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்திய விஞ்ஞானி. ஆனால், பல சோதனைகள் செய்து ரத்தம் எவ்வாறு உடலில் ஓடுகிறது என்பதை நமக்குக் காட்டியவர் ஹார்வி. கேலன் சொன்னதெல்லாம் சரி என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்தச் சுதந்திரம் அவர்களுக்கு இருந்ததால்தான் மேற்கத்திய அறிவியலும் மருத்துவமும் முன்னேற முடிந்தது.
வரலாற்றைப் புதைக்க முடியாது
மேற்கத்திய மருந்துகளைப் பற்றிக் குறை கூறுபவர்கள், அதனால் உலகுக்கு ஏற்பட்ட நன்மைகளைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். பென்சிலின் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், இன்று உலகில் இருப்பவர்களில் 75% உயிரோடு இருக்க மாட்டார்கள். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியக் குடிமகனின் சராசரி ஆயுள்காலம் சுமார் 22 வயதுதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று சுமார் 66 வயது என்றால் அதற்கு முக்கியமான காரணம், மேற்கத்திய மருந்துகள். அம்மையும் ப்ளேக்கும் போலியோவும் முழுவதுமாக மறைந்துவிட்டன. காலரா, காசநோய் என்றாலே மரணம்தான் என்ற நிலை மாறிப் பல நாட்கள் ஆகிவிட்டன. தலைவலிக்கு உடனே நிவாரணம் ஆஸ்பிரினும் பாரஸடமாலும் தருகின்றன. வலியே தெரியாமல் அறுவைச் சிகிச்சை நடக்கிறது. இன்சுலின், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குப் பேருதவிசெய்கிறது. மனநோயாளிகளுக்கு தோரஸைன் ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கர்ப்பத்தடை மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது பெண் விடுதலைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று.
இந்த வெற்றிகளுக்குக் காரணம், மேற்கத்திய மருந்துகள் கடும் சோதனைகளுக்குப் பிறகே மக்களைச் சென்றடைகின்றன என்பதுதான். ஒரு புது மருந்து, கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து சந்தையை அடைவதற்கு 12 ஆண்டுகள் எடுக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளில் 5,000-ல் ஒன்றே எல்லாச் சோதனைகளையும் கடந்து சந்தையை அடைகிறது. அடைந்த மருந்துகளும் சில சமயங்களில் திரும்பப் பெறப்பட்டு மறுசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பெரு நிறுவனங்கள் செய்யும் தகிடுதத்தங்களையும் மீறி உயிர் காப்பாற்றும் மருந்துகள் பல மக்களைச் சென்றடைந்திருக்கின்றன.
இத்தகைய சோதனைகளைப் பாரம்பரிய மருந்துகள் கடந்துவந்திருக்கின்றனவா என்ற கேள்விக்கு, இல்லை என்பதுதான் பதில். அஸ்வகந்தா மூலிகையின் பயன்களைப் பற்றி பல ஆய்வுகள் நடந்துவிட்டன. ஆனால், இதுவரை உருப்படியான ஒரு மருந்துகூட வரவில்லை. மேற்கத்திய வழிமுறைகளை ஏன் கடைப்பிடிக்க வேண்டும், எங்களுக்கு என்று தனி வழிமுறை இருக்கிறதே என்று ஓர் ஆயுர்வேத மருத்துவர் கேட்கலாம். தவறேயில்லை. ஆனால், எந்த வழிமுறை இருந்தாலும் அது வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஏன் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்குச் சரியான பதில் மருத்துவர்தான் சொல்ல வேண்டும். சதி, சூழ்ச்சி என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யக் கூடாது.
இது நாட்டுப் பற்று சார்ந்ததல்ல. மனித உயிர் சார்ந்தது. உடல்நலம் சார்ந்தது.
பி.ஏ. கிருஷ்ணன், எழுத்தாளர்


இந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு

From Hindu Magazine
தாகூர் “இந்தியாவில் அனைத்துத் துயரங்களுக்கும் அடிப்படைக் காரணம் கல்வியறிவின்மை” என்றார். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹாங்காங்கில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வியில் அரசின் முதலீடுகளே காரணம் என்கிறார்கள் பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென்னும் பொருளாதார வல்லுநர் ழான் டிரீஸும். பொருளியலின் தந்தை என்று போற்றப்படுகிற ஆடம் ஸ்மித்தும் “கல்விக்காகச் செலவிடும் ஒவ்வொரு சிறு தொகையும் கல்வியின் அத்தியாவசியக் கூறுகளை ஊக்குவிக்கும்” என்றுதான் சொல்கிறார்.
அரசுப் பள்ளிகளில் குறைபாடுகள் உண்டு. ஆனால், அவற்றை எல்லாம் சரிசெய்ய முடியும். தனியார் பள்ளிகளின் குறைபாடுகளோ சரிசெய்ய இயலாதவை. தனியாரிடம் கல்வி என்பது பண்டம். பொருளின் தரத்தை, சந்தையில் போட்டியே தீர்மானிக்கிறது. கல்வி வணிகப் போட்டியின் தன்மையே வேறு. சந்தை விதிகளும்கூட கல்வி என்னும் பண்டத்துக்குப் பொருந்தாது. எனவே, தனியாரால் தரமான கல்வியைத் தர முடியாது. ஆனால், அரசாங்கம் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கத் துடிக்கிறது.
புதிய திட்டம்
பொதுப்பள்ளி முறையில் உள்ள குறைகளைக் களைந்து வலுப்படுத்தாமல் நட்டாற்றில் விட்டுவிட்ட அரசு, இப்போது தன் பணத்தில் ஒரு தனியார்மயக் கல்வித் திட்டத்தை வேகமாக நடைமுறைப்படுத்த இருக்கிறது. அதுதான் அரசு-தனியார் கூட்டுப் பங்கேற்பில் செயல்படுத்தப்படவுள்ள (பிபிபி) பள்ளிக்கூடத் திட்டம். கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளுக்கு நிகரான பள்ளிகள் என்ற பெயரில் கொண்டுவரப்பட உள்ள இந்தப் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ. கல்வி முறை, பயிற்றுமொழி ஆங்கிலம் என்கிறது அரசு.
இதில், 40% மாணவர்களை அரசு நுழைவுத்தேர்வின் மூலம் சேர்க்கும். 60% மாணவர்களைப் பள்ளி உரிமையாளர் தன் விருப்பம்போல் சேர்த்துக்கொள்ளலாம். அரசு சேர்க்கும் மாணவர்களுக்கும் எட்டாம் வகுப்புக்கு மேல் கட்டணம் உண்டு. 60 விழுக்காடு மாணவர்களின் கட்டணம், ஆசிரியர்களின் சம்பளம், இதர பணி நிலைகள் எல்லாம் தனியார் விருப்பப்படி அமைத்துக்கொள்ளலாம். பள்ளியைப் பள்ளிசாரா பணிக்கும் பயன்படுத்தலாம். மத்திய அரசின் மானியம் 10 ஆண்டுகள் மட்டுமே.
இப்போதைய நிலையில், மாநில அரசு களின் பணி, நிலம் ஒதுக்குதல் அல்லது ஏற்கெனவே இருக்கும் பள்ளியை ஒப்படைத்தல் மட்டுமே. பள்ளியின் முழுக் கட்டுப்பாடு, பள்ளியின் முழு நிர்வாக மேலாண்மை முழுவதும் தனியாருக்கே சொந்தம். நாடு முழுவதும் 3,162 பள்ளிகள் இப்படித் தொடங்கப்பட உள்ளன (தமிழ்நாட்டில் 355).
தனியார் தங்கள் இஷ்டம்போல் பள்ளிக்குப் பெயர் வைத்துக்கொள்ளலாம். பெயருடன் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்யாலயா என்னும் பெயரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதுவே அரசு-தனியார் பங்கேற்பு அடிப்படையில் தொடங்கப்படும் மாதிரிப் பள்ளிகளைப் பற்றிய சுருக்கம்.
பாதிப்புகள் என்ன?
இதனால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளைப் பட்டியலிட்டு கல்வியாளர்கள் மத்திய அரசுக்குக் குறிப்பு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அவை: 1. தனியார் துறை என்பது எல்லா விதத்திலும் பொதுத்துறையைவிட மேம்பட்டது என்பதை அரசே இத்திட்டத்தின் மூலம் ஒப்புக்கொள்கிறது. 2. அரசுப் பள்ளி முறையைவிட, தனியார் கல்விமுறையே சிறந்தது என அரசே முதல்முறையாக ஒப்புக்கொண்ட திட்டம் இது. 3. அனை வருக்கும் சமமான தரமான கல்வி தரப்படும் என்ற அரசியல் சாசனச் சட்ட விதி இதன் மூலம் அப்பட்டமாக மீறப்படுகிறது. 4. கல்வியின் நோக்கம், தேசத்தையும் சமூகத்தையும் ஆரோக்கியமானதாகக் கட்டமைக்கும் செயல்பாடு என்ற அரசியல் சாசனமும் கைவிடப்பட்டிருக்கிறது. 5. உலகில் எங்கெல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் கல்வி உள்ளதோ அங்கெல்லாம் எழுத்தறிவும் கல்வித்தரமும் அதிகமாக உள்ளது. அதே சமயம், எங்கெல்லாம் தனியாரிடம் கல்வி உள்ளதோ அங்கெல்லாம் எழுத்தறிவும் கல்வித்தரமும் குறைவாகவே உள்ளது. 6. இத்திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் பங்குபெறலாம் என்பது, இந்திய அரசின் அடிப்படைக் கல்விக் கொள்கைக்கும் ஆவணங்களுக்கும் எதிரானது. காரணம், கல்வி ஒரு வணிகப் பொருள் என எங்கும் சொல்லப்படவில்லை. 7. இத்திட்டமே லாபம் ஈட்டும் துறைகளுக்கானது. லாபம் வராத துறைகளுக்கு இவற்றைப் பொருத்துவதில் சிக்கல் உள்ளது. 8. கல்வியுரிமைச் சட்டம், தேசிய கலைத் திட்டம் ஆகியவற்றை மீறும் பல அம்சங்கள் இதில் உள்ளன. 9. சமூகப் பங்கேற்பும் சமூகக் கண்காணிப்பும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. 10. தனியாரின் கல்வித் தரம், திறமை, சமூகப் பொறுப்பு போன்றவற்றைப் பற்றி அரசு மிகை மதிப்பீடு கொண்டிருக்கிறது. 11. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைகளை மீறுவது என்பது மாநகரங்களில்கூட சர்வசாதாரண நிகழ்வு. இந்நிலையில், அரசுப் பணத்தையும் நிலத்தையும் கொடுத்துத் தனியாரை நிர்வகிக்கச் சொல்வது விதிமுறை மீறலே; நீதித் துறையில்கூட இவர்களது ஒழுங்குமுறை மீறல்களைக் கட்டுப்படுத்த முடியாது. 12. இத்திட்டம் கட்டற்ற லஞ்சலாவண்யத்தை ஊடுருவச் செய்து, மிக மோசமான விளைவுகளைச் சமூகத்தில் உருவாக்கும். 13. ஜனநாயக நாடுகளில் தற்காலிக நிதிப் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பானதே. இதைப் பயன்படுத்திக்கொண்டு, கல்வித் துறையில் தனியார்மயத்துக்கு வித்திடுவது, அளவிட முடியாத, சரிசெய்ய இயலாத விளைவுகளை இந்தியக் கல்வி முறையில் உருவாக்கும். 30-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இவற்றைப் புறம்தள்ளிவிட முடியாது.
அவசரநிலைக் காலக் கோலம்
இந்தியாவில் அவசரநிலைக் காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டதால் ஏற்பட்ட பல பாதகங்களில் ஒன்றுதான் இந்தத் திட்டம். மாநில அரசு என்பது மத்திய அரசின் உதவியாளர் என்ற பாணியில் மத்திய அரசு நடத்துகிறது. எனவேதான் மாநில அரசுகளின் கருத்தைப் பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியில் மத்திய அரசு வேகமாக இயங்குகிறது. மத்திய அரசு பள்ளிக்கல்வி வளர்ச்சிக்குச் செய்ய வேண்டியது எல்லாம் மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிப்பது மட்டுமே.
அதேபோல், பன்முகத்தன்மை, பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரம் கொண்ட நாட்டில் ‘சி.பி.எஸ்.இ.’ என்னும் ஒற்றைக் கல்விமுறையை நடைமுறைப்படுத்த முனைவது தவறு என மத்திய அரசு உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. இன்று இயங்கிவரும் எந்தப் பள்ளியும் பள்ளியல்ல, இனி வரவிருக்கும் பள்ளிகளே பள்ளிகள் என்னும் தொனியை மாதிரிப் பள்ளிகள் என்ற அறிவிப்பு தோற்றுவிக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலு கையை அள்ளித் தருகிற அரசு, கனிமவள மேலாண்மையில் தனியார்மயமாக்கல் கொள்கை வழியாகச் சட்டரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பான வழிகளிலும் பல லட்சம் கோடி ரூபாய்களை அதே கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொட்டிக்கொடுக்கும் அரசு இப்போது கல்வித் துறையையும் முழுக்க தாரைவார்க்க நினைக்கிறது.
ஆப்பிரிக்காவுக்கும் பின்னே
உலகில் முன்னேறிய நாடுகள் மட்டுமல்ல, ஏழை நாடுகள்கூட நம்மைவிட அதிகமாகக் கல்வியில் முதலீடு செய்கின்றன. 16 ஆப்பிரிக்க நாடுகளைப் பட்டியலிட்டு, அந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியும் தனிநபர் வருவாயும் நம் நாட்டைவிடப் பன்மடங்கு குறைவு எனக் கூறிவிட்டு, அந்நாடுகளின் சமூக வளர்ச்சிக் குறியீடுகளும் மனிதவள மேம்பாடும் நம்மைவிடப் பன்மடங்கு அதிகம் என்று சென்னும் டிரீஸும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் என்னும் ஒரு அளவீட்டில்கூட நாம் இன்னும் எத்தியோப்பியாவைக்கூட எட்டிப்பிடிக்க முடியாது. இதெல்லாம் தற்போதைய மத்திய அரசின் அக்கறையில் இல்லை. கட்டற்ற தனியார்மயத்தில்தான் மக்கள்நலன் மலரும் என்ற மூடநம்பிக்கையில் மத்திய அரசு அது ஆழமாக மூழ்கியுள்ளது!
- நா. மணி, பேராசிரியர்

தாய் மொழி

பா. மதிவாணன்


Thanks to Hindu 

ஜெயமோகன் முன்வைக்கும் வாதங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1. “இனி, ஆங்கிலம் தவிர்க்கவே முடியாதது.”
தவிர்க்கவே முடியாத ஆங்கிலத்தோடு தமிழையும் நம் பள்ளிகளில் இயல்பாகக் கற்ற மிகப் பலர் இப்போதும் இருக்கின்றார்கள். அண்மைக்கால ஆங்கிலப் பிரமை என்பது அரசியல் - வணிகக் கூட்டின் விளைவு.
2. “எழுத்துப் பயிற்சி குழந்தைகள் மீது திணிக்கப்படும் கடின உழைப்பு.’’
சீனம் முதலிய மொழிகளின் பயிற்சியோடு ஒப்பிட்டால், தமிழ் கற்றல் மிகக் குறைந்த உழைப்பே ஆகும்.
3. “தாய் மொழிகள் இந்தியாவில் கைவிடப்படு கின்றன.”
முதல் கூற்றுக்குச் சொல்லப்பட்டதே இதற்கும் பொருந்தும். சில சமூகமேட்டிமைக் குழுக்களை நோக்கிய ஏக்கமும் போலித் தமிழ்க் கூத்தடிப்புகளால் விளைந்த ஏமாற்றமும் பெரும்பான்மை மக்களைத் தாய்மொழித் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாக்கி விட்டன. மேலும் ஒன்று உண்டு. திருச்சியி லிருந்து மயிலாடுதுறை வரை மட்டும் செல்லும் தொடர் வண்டியில் சீட்டு வாங்கினேன். அதில் தமிழே இல்லை. கைவிட்டது மக்களா? அரசா? அரசியலா?
4. “எழுத்துகள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல.”
அடையாளங்களை வலிந்து புகுத்துவதும் கூடாது. மேலும், இந்திய மொழிகள் அனைத்துக்கும் நாகரி வடிவைக் கையாளலாம் என்ற கருத்துக்குப் புதுமைப்பித்தன் முதலியோர் ஆற்றிய எதிர்வினையைப் பார்க்குமாறு வேண்டுகிறேன். (புதுமைப்பித்தன், 1998, அன்னையிட்ட தீ, காலச்சுவடு பதிப்பகம், பக். 354 - 357.)
5. “இன்றைய தொழில்நுட்பத்தில் எந்த எழுத்துருவையும் பிறிதொன்றுக்கு மாற்றலாம்.”
தொழில்நுட்ப முன்னேற்றத்தை எழுத்துப் பயிற்சிக்கும் பயன்படுத்த முயலலாம்.
6. “எல்லா மாற்றங்களும் முதலில் அதீதமாகத் தோன்றும்.”
தமிழைப் படிப்படியே கைவிட்டு ஆங்கிலத்தையே ‘தாய்மொழி’ஆக்கிக்கொள்ளலாம் என்கிற அதீதாதீத மாற்றம்கூடத் தமிழகத்தில் எப்போதோ முன்வைக்கப்பட்டுவிட்டது. வரிவடிவம் உட்பட மரபின் உயிர்ப்போடு மாற்றங்களை இயல்பாக உள்வாங்கிக்கொண்டு தமிழ் தொடர வேண்டும்; தொடர முடியும். ஆனால், பிழைப்புவாதமும் வறட்டுப் பகுத்தறிவும் ஆதிக்க சக்திகளும் அதீத அறிவாண்மையரும் கைகோத்துக்கொண்டால், அப்பாவித் தமிழ் மக்கள் என்னாவார்கள்? ‘விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ? ’- பாரதி.
- பா. மதிவாணன், கல்வியாளர்,

அறிவியலுக்கு பாரத ரத்னா

பி.ஏ. கிருஷ்ணன்

- Hindu Magazine
இந்திய அரசு, சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் அவர்களுக்கு பாரத ரத்னா விருதை அறிவித்திருக்கிறது. நண்பர் ஒருவர் கூறியபடி, ராவ் யார் என்பதே 99 சதவீத இந்தியர்களுக்குத் தெரியாது. இவ்வாறு சொல்வதால், அவரது புகழை நான் குறைத்து மதிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்தியர்கள் அறிவியல்மீது எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
பேரறிஞர்
79 வயதான ராவின் சாதனை உலக அளவில் மெச்சப்படுகிறது. வேதியியல் துறையிலும் நானோடெக்னாலஜி துறையிலும் 1,500 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 45 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஹெர்ஷ் அளவீடு (ஹெர்ஷ் இண்டெக்ஸ்) என்று ஒன்று உலகம் முழுவதும் கையாளப்படுகிறது. இது விஞ்ஞானி ஒருவர் எழுதும் ஆய்வுக் கட்டுரைகள் எந்த அளவு மற்ற விஞ்ஞானிகளால் கவனிக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கும். இதன்படி, ராவின் அளவீட்டு எண் 93+. இவரது கட்டுரைகள் 44,000 முறை விஞ்ஞானிகளால் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே இந்த அளவு உலக விஞ்ஞானிகளால் கவனம் பெற்றவர் இவர் ஒருவர்தான்.
காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ராவ் அமெரிக்காவில் பர்ட்யூ பல்கலைக்கழகத்தில் முனைவருக்கான ஆராய்ச்சி செய்தார். பின்னர், கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1959-ம் ஆண்டு இந்தியா திரும்பியதும் இந்திய அறிவியல் கழகத்தில் (ஐஐஎஸ்சி) சேர்ந்தார். பின்னர், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பணிபுரிந்தார். 1984-ம் ஆண்டு இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராகப் பதவியேற்ற அவர், அங்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் ஜவாஹர்லால் நேரு முதுநிலை அறிவியல் ஆராய்ச்சி மையத்தை பெங்களூரில் நிறுவியவர் இவரே. மையத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் பல ஆண்டுகள் இயங்கினார். ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதன் காரணங்களில் இரண்டைக் குறிப்பிட வேண்டும். ஒன்று, இவர் அறிவியல் நிறுவனங்களைக் கட்டமைத்தது. மற்றது, அவை திறமையாக இயங்க உறுதுணையாக நின்றது. நான் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பில் ராவை இருமுறை சந்தித்திருக்கிறேன். எளிமையானவர். அதிகம் பேசாதவர். செய்வதைத் திறமையாக, தவறேதும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதை விரும்புபவர். அவ்வாறு செய்யவில்லை என்றால், மிகுந்த கோபம் கொள்வார் என்று அவரிடம் பணிபுரிந்த சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இவரது மேற்பார்வையில் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று, கருத்துத் திருட்டு சம்பந்தமாக, சென்ற ஆண்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. பழியைத் தனது மாணவர்மீது போட்டு, தான் தப்பித்துக்கொள்ள முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு இவர்மீது வைக்கப்பட்டது. ஆனால், இவருடைய திறமையைப் பற்றி யாருக்கும் சந்தேகம் கிடையாது. உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அரசுகளும் இவரைக் கௌரவித்துள்ளன.
இந்தியாவில் அறிவியலின் நிலைமை
இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் இருப்பதே இத்தனை நாளும் நம்மில் பலருக்குத் தெரியாதது இந்தியாவில் அறிவியலின் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. “இந்திய அறிவியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன. நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது” என்று அறிவியல் அமைச்சகத்தில் பணிபுரியும், தமிழகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர், சில நாட்களுக்கு முன்னால்தான் என்னிடம் கவலையோடு சொன்னார். நாடு முழுவதும் அறிவியல் துறையில் சேர்ந்து படிப்பவர்களில் திறமையானவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. தொழில்நுட்பக் கல்விதான் வேலைவாய்ப்புகளைத் தரும் என்ற மந்தைபுத்தி இளைய தலைமுறையினரை அறிவியலிலிருந்து அந்நியப்படுத்தி வைத்திருக்கிறது.
ராவின் ஹெர்ஷ் அளவீட்டு எண் 93+ என்று சொன்னேன். இந்தியாவிலேயே முதன்மையானது அவருடையதுதான் என்று எண்ணுகிறேன். ஆனால், உலக அளவில் ஒப்பிடும்போது இவரது சாதனை பெரும் உயரத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியாது. வேதியியல் துறையிலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் வைட்சைட்ஸ் என்பவர் 169 பெற்று முதல் நிலையில் இருக்கிறார்.
இந்திய அறிவியல் ஆராய்ச்சியை உலகம் எப்படி மதிப்பிடுகிறது?
உலகப் புகழ் பெற்ற அறிவியல் இதழான ‘நேச்சர்’, ஒவ்வொரு ஆண்டும் அது வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. 2012-ம் ஆண்டின் அறிக்கை சமீபத்தில் வந்தது. அது தந்திருக்கும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கின்றன. ‘நேச்சர்’ இதழ்களில் 2,236 ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டு, அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. சீனாவுக்கு ஆறாவது இடம். இந்தியாவின் இடம் 24. உலகின் முக்கியமான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியலையும் அது வெளியிட்டிருக்கிறது. 200 நிறுவனங்கள்! ஒன்றுகூட இந்தியாவிலிருந்து இல்லை. சீனத்தின் ஒன்பது நிறுவனங்கள் பட்டியலில் இருக்கின்றன. இதைவிட ஆச்சரியம் தரக்கூடிய தகவல் என்னவென்றால், எதிர்காலத்தில் அறிவியல் துறையில் கவனிக்கப்பட வேண்டியவை என்று ஐந்து நாடுகளை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இவை சீனா, அயர்லாந்து, பிரேசில், கென்யா, மற்றும் சவூதி அரேபியா. இந்தியா, கணக்கிலேயே வரவில்லை. ஆசியாவில்கூட, இந்தியா ஏழாவது இடத்தில் தைவானுக்கும் சிங்கப்பூருக்கும் பின்னால் இருக்கிறது. மொத்த அறிக்கையில் இந்தியாவின் பெயர் இரண்டு இடங்களில்தான் வருகிறது.
வழிதான் என்ன?
இந்த அறிக்கையை வைத்து இந்திய அறிவியலைக் குறைத்து அளவிட முடியாது என்று சொல்வதில் சிறிது உண்மை இருக்கிறது. ஆனால், பிரச்சினைகளையும் குறைத்து அளவிட முடியாது. துடிப்பான பல ஆராய்ச்சியாளர்களிடம் நான் பேசியிருக்கிறேன். ஆராய்ச்சிக் கூடங்களுக்கும், இந்திய அறிவியலின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் அரசு நிறுவனங்களுக்கும், இளைய தலைவர்கள் வேண்டும் என்கிறார்கள் அவர்கள். பெரியவர்கள் வெளியில் நின்று ஆலோசனை வழங்கலாம். ஆனால், நேரடி நிர்வாகத்தில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது என்றும் சொல்கிறார்கள். இளைய விஞ்ஞானிகளின் குரல்கள் அரசுக்குச் சென்றடைய எந்த ஒரு சாதனமும் இல்லை என்பதும் உண்மை. எனவே, வெளிநாடுகளிலிருந்து கனவுகளோடு வந்த பலர், திரும்பச் சென்றுவிட்டனர்.
எதிர்காலம்
சுடர்மிகும் அறிவு படைத்த இளைஞர்களை அறிவியலை நோக்கி வரச் செய்வதே நாம் இன்று செய்ய வேண்டியது. இதை மிக முனைப்போடு செய்துவருபவர் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ராமசாமி அவர்கள். தமிழகத்தைச் சார்ந்தவர். இவரால் கொண்டுவரப்பட்ட ‘இன்ஸ்பையர்’ திட்டம் நாடெங்கும் போற்றப்படுகிறது. 10 வயதில் தொடங்கி 32 வயது வரை அறிவியல் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்குக் குறிப்பிடத் தக்க அளவில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரிடமிருந்து பண உதவியை எதிர்பார்க்காமலே இன்று ஒரு திறமையான மாணவனால் அறிவியலில் உயர்கல்வி பெற முடியும். தமிழகத்தில் இந்தத் திட்டம் அதிகக் கவனிப்புப் பெறாதது ஆச்சரியத்தை அளிக்கிறது.
சி.என்.ஆர். ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கும் செய்தி, இளைஞர்களை அறிவியல் பக்கம் திருப்பும் என்று நம்புகிறேன். குறிப்பாக, தமிழக இளைஞர்களை.
அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் நோபல் பரிசு பெற்ற நால்வரில் மூவர் தமிழர்கள் என்பதை நமது இளைஞர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.