திங்கள், 5 மே, 2014

‘ரா' (ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்)

இந்தியத் தூதரகத்துக்குப் பெருஞ்சேதம் விளைவித்தவர் களையும் இதே முறையிலேயே தண்டித்துவிட வேண்டும் என்று ‘ரா' (ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆப்கானிஸ்தானின் தேசியப் பாதுகாப்பு இயக்குநரகத் தலைமை அதிகாரி அம்ருல்லா சாலேவுடன் இது தொடர்பாகப் பேசியபோது, அவரும் உதவுவதாக ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான ஜிஹாதி குழுக்களைக் கொண்டு லஷ்கர்-இ-தொய்பா தலைவன் ஹஃபீஸ் முகம்மது சய்யீதின் தலைக்குக்கூட குறி வைக்கப்பட்டது. இவ்வளவு விரைவாக இந்திய உளவுப்பிரிவுத் தலைவர் போட்ட திட்டம் நடக்கவில்லை. நாராயணன் விரும்பியபடிச் செயல்பட இந்தியாவின் ‘அரசியல் தலைமை’ அனுமதிக்கவில்லை. “குண்டுக்குக் குண்டு என்ற ரீதியில் நாம் பதிலடி கொடுத்தால் வன்முறைதான் அதிகமாகும். எனவே, நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறிவிட்டார்.
2010-ன் தொடக்கத்தில் நாராயணனின் பதவிக்கு வெளியுறவுத் துறை அதிகாரி சிவசங்கர் மேனன் நியமிக்கப் பட்டார். கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் ‘சமாதானப் புறா’க்கள் அமர்த்தப்பட்டன.
மோடியின் வழிமுறையே வேறு
“பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட, பயங்கரவாதிகளுக்குப் புரிகிற மொழியில் பேச வேண்டும்” என்று பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி கடந்த வாரம் பேசியிருக்கிறார். அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு இந்த விவகாரத்துக்கு முடிவுகட்டத் துணிச்சலான முடிவுகளை எடுத்தாக வேண்டும். கராச்சியில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்படும் தாவூத் இப்ராஹிமைப் பிடிக்க முயற்சிக்காமல் இன்னமும் தயங்கிக்கொண்டிருப்பது ஏன் என்று மோடி கேட்டது அர்த்தம் பொதிந்தது. பயங்கரவாதத்தை ஒடுக்கு வதில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேற்று மையை அவர் பட்டவர்த்தனமாகத் தோலுரித்துக் காட்டினார். பயங்கரவாதிகளைப் பிடிக்க அமெரிக்காவுடன் இந்தியா கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறிய உள்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டேவை அவர் கடுமையாகச் சாடினார். “பயங்கரவாதிகளை என்ன செய்யப்போகிறோம் என்று எந்த நாடாவது முன்கூட்டியே தெரிவிக்குமா?” என்று கேட்டார்.
“சர்வதேசப் பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார் என்று திட்டவட்ட மாகத் தெரிந்த பிறகு, பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கேட்டுக்கொண்டா அமெரிக்கா அந்த நாட்டுக்குள் நுழைந்து அவரைச் சுட்டுக்கொன்றது? பின் லேடனைக் கொல் வதற்கு முன்னால் அமெரிக்கா எல்லாப் பத்திரிகை நிறுவனங் களுக்கும் செய்திக்குறிப்பு அனுப்பியா தமுக்கடித்தது? பத்திரிகைகளுக்குச் சொல்லிவிட்டா பயங்கரவாதிகள்மீது நடவடிக்கை எடுப்பார்கள்?” என்று மோடி அடுக்கடுக்காகக் கேட்டிருக்கிறார்.
மக்களவைப் பொதுத்தேர்தலில் வாக்காளர்களைக் கவர்வதற்காகத்தான் மோடி அப்படிப் பேசினார் என்று கூறிவிட முடியாது. மோடிக்கு ஆலோசகர்களாக இருப்பவர்கள் சொல் லித்தான் அவர் அப்படிப் பேசினார் என்றாலும்கூட, அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்களாக இருப்பது அவசியம். பயங்கரவாதிகள் விஷயத்தில் இந்தியாவின் மொழி, இனியும் ‘மென்மொழியாக’ இருக்காமல், ‘வன்மொழியாக’ மாற வேண்டும் என்றே பாது காப்புத் துறை வட்டாரங்களும் உளவு அமைப்புகளும் விரும்புகின்றன.
 
அமெரிக்க ஆதரவு?
1999 கார்கில் போருக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிராக யார் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடுத்தாலும், அமெரிக்கா நமக்குச் சாதகமாகவே இருக்கும் என்ற அனுமானத்திலேயே பாதுகாப்புகுறித்த நிலைப்பாட்டை அரசு வகுக்கிறது. இந்த நம்பிக்கை சரியானதே என்று நிரூபிக்கும் வகையில் சில புள்ளிவிவரங்களும் இருக்கின்றன. 2002 முதல் 2013 வரையிலான காலத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்செயல்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்திருக்கிறது. மும்பை மீது நடந்த பயங்கரவாதிகளின் தாக்கு தலுக்குப் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-தான் இருந்தது என்பது சர்வதேசச் சமூகத்துக்கே சந்தேகமறத் தெரிந்து விட்டதால், ஜிகாதிகளை இந்தியாவுக்கு எதிராக ஏவிவிடுவதை அது குறைத்துக்கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலைமை மாறிவிட்டது. இந்தியா மீது தாக்குதல்கள் மீண்டும் தொடங்கிவிட்டன. ஜிகாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளும் தோற்றுவருகின்றன. ஜிகாதிகளில் ஒரு பிரிவினரிடம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இருந்த செல்வாக்கு சரிந்துவிட்டது. ஜிகாதிகளின் எண்ணிக்கை பெருகிவருவதால், பாகிஸ்தானின் அரசியல் கட்சிகள் அவர்களைத் திருப்திப்படுத்த நினைக்கின்றன. பாகிஸ்தான் அரசு ஆதரிக்கும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளில் உள்ள பஞ்சாபிய முஸ்லிம்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க தலிபான்கள் முயற்சி செய்துவருகின்றனர்.
“பாகிஸ்தானில் ஷாரியா அமைப்பு முறையை ஏற்படுத்த நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நாளை காஷ்மீரத்துக்கு விரிவுபடுத்துவோம். பிறகு, இந்தியாவுக்கும் கொண்டுசெல்வோம்” என்று தேரிக்-இ-தலிபான் தலைவர் வாலி-உர்-ரெஹ்மான் எச்சரித்திருக்கிறார்.


ஒரே கேள்வி
இப்போதைய எளிய கேள்வி இதுதான்: பாகிஸ்தான் ஜிகாதிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கெல்லாம் இந்தி யாவும் இனி இதே போலப் பதிலடி தருமா?
1980-களின் தொடக்கத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி களுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இயக்குநரகம் ஆயுதங் களையும் தளவாடங்களையும் அளித்தது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உடனே பதிலடி தருமாறு உத்தர விட்டார். இந்த வேலைக்காக ‘டீம்-எக்ஸ்’, ‘டீம்-ஜே’ என்ற இரண்டு குழுக்களை ‘ரா’ ஏற்படுத்தியது. முதல் குழு பாகிஸ்தானைக் குறிவைத்தும், இரண்டாவது காலிஸ் தானிகளைக் குறிவைத்தும் செயல்பட்டன. இந்திய நகரங் களைக் குறிவைத்து காலிஸ்தானிகள் நடத்திய ஒவ்வொரு தாக்குதலுக்கும் லாகூரிலும் கராச்சியிலும் பதிலடி தரப்பட்டது. “இப்படிப் பதிலடி தர நாம் நிறைய விலைகொடுக்க வேண்டியிருந்தது” என்று ‘ரா’ அமைப்பின் முன்னாள் அதிகாரி பி. ராமன் 2002-ல் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படி உளவு அமைப்புகளின் வேலைகளுக்கு எதிர்வேலை பார்க்கும் வழிமுறையில் இந்தியா மிகத் தாமதமாகத்தான் இறங்கியது.
1947-ல் இந்தியாவை விட்டு வெளியேறிய பிரிட்டன், எதிர் உளவு வேலையில் புதிய அரசு ஈடுபடாதவாறு தடுக்க, முக்கியமான ஆவணங்களையெல்லாம் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டது. எந்தவிதத் தடயமும் இல்லாமல் அழித்துவிட்டது. இந்திய அரசு உதித்தபோது, அதன் உளவுப்பிரிவுக்குக் கிடைத்ததெல்லாம் காலி மர பீரோக்களும், வெற்று ரேக்குகளும்தான்!
உளவுப்பிரிவில் பிரிட்டிஷ்-இந்திய அதிகாரியாகப் பணி யாற்றிய குர்பான் அலி கான், பாகிஸ்தானில் உளவுப்பிரிவு அதிகாரியாகப் பணிசெய்யப் போனபோது, பிரிட்டிஷ் அதிகாரிகள் அழிக்கத் தவறிய மிச்சமிருந்த ரகசிய ஆவணங் களையும் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டார். “காலி பீரோக்களையும் வெற்று ரேக்குகளையும் வைத்துக்கொண்டு இந்திய உளவுத் துறை செயல்படத் தொடங்கியது ஒரு வகையில் சோகமாகவும் ஒரு வகையில் நகைச்சுவையாகவும் இருந்தது” என்று உளவுப்பிரிவுத் தலைவராக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் எல்.பி. சிங் பதிவுசெய்திருக்கிறார். டெல்லியில் இருந்த ராணுவ உளவுப்பிரிவு இயக்குநரகத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைக் காட்டும் ஒரு வரைபடம்கூட மிச்சம் இல்லாமல் துடைத்து வைக்கப்பட்டிருந்தது. 1947-48-ல் பாகிஸ்தான் படைகள் ஊடுருவுவதை அவர்களுடைய வானொலித் தகவல்களை இடைமறித்துக் கேட்டபோது உறுதிசெய்துகொள்ளவும், இந்தியத் துருப்புகளை எங்கிருந்து எங்கே அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்கவும் கைவசம் வரைபடம்கூட இல்லாமல் திண்டாட நேர்ந்தது!
 
பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது நாசவேலைகளை ரகசியமாகச் செய்து முடிப்பதே அதன் போர்த் தந்திரமாக இருந்துவருகிறது. உளவுத் துறை மூலம் சேதத்தை ஏற்படுத்துவதை அது பலமான ஆயுதமாகவே இன்னமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆயுதங்களிலும் ஆள்பலத்திலும் தன்னைவிடப் பெரிதான இந்திய ராணுவத்தைக் களத்தில் எதிர்கொண்டு வெற்றிபெற முடியாது என்பதால், அவ்வப்போது திடீர்த் தாக்குதல்களை நடத்தி, கடும்சேதத்தை விளைவிப்பதையே சிறந்த தற்காப்பு உத்தியாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. இந்தத் தாக்கு தல்களை ‘வழக்கமற்ற போர்’ என்று பிரதமர் நேரு வர்ணித்தார்.
சீனாவுடன் மோதல் ஏற்பட்ட 1962-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்தியாவும் ‘இப்படி எதிர்த் தாக்குதல்’ நடத்தும் உத்தியில் திறனை வளர்த்துக்கொண்டது. அமெரிக்கா அதற்குப் பயிற்சி தந்தது. சீனத்தின் உள்ளே வெகுதூரம் ஊடுருவிச் சென்று உளவு பார்க்க ‘ரா’ அப்போதுதான் ஏற்படுத்தப்பட்டது.
 
எஸ்டாப்ளிஷ்மெண்ட்-22
1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த உத்தியை இந்தியா கையாண்டது. மேஜர் ஜெனரல் சுர்ஜீத் சிங் ஊபன் தலை மையில் ஏற்படுத்தப்பட்ட 'எஸ்டாப்ளிஷ்மெண்ட்-22' என்று சங்கேதப் பெயரிடப்பட்ட படைப்பிரிவு, வங்கதேசம் என்று இப்போது அழைக்கப்படும் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் வெற்றிகரமாகச் செயல்பட்டது. இந்திய யூனியனில் சிக்கிம் சேர அப்பிரிவு காரணமாக இருந்தது. இலங்கையைச் சேர்ந்த சில தமிழ் குழுக்களுக்குப் பயிற்சி அளித்தது. மியான்மரில் சீன ஆதரவு அரசுக்கு எதிராகப் போரிட்ட சில ஆயுதக் குழுக்களுக்கும் பயிற்சியளித்தது.
குஜ்ரால், ராவ் காலத்தில்…
‘ரா' அமைப்பு இதுபோலப் பதில் தாக்குதல் நடவடிக் கைகளில் இனி ஈடுபடக் கூடாது என்று கூறி பிரதமர் ஐ.கே. குஜ்ரால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, “நாட்டின் கிழக்குப் பகுதியில் இனி ‘ரா' செயல்பட வேண்டாம்” என்று உத்தரவிட்டார். 1999 கார்கில் போருக்குப் பிறகு உளவுத் துறை அதிகாரிகள் அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம், “உளவுப்பிரிவின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன, அதை அவிழ்த்துவிட வேண்டும்” என்று மன்றாடினர். வாஜ்பாய், வேண்டாம் என்றும் மறுக்கவில்லை, சரி என்றும் அனுமதிக்கவில்லை. மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களுக்குப் பாடம்புகட்ட இந்தியாவிடம் எந்த ஆயுதமும் இல்லை. “போர் தொடுக்க நேரும்” என்று பாகிஸ்தானை வெட்டியாக மிரட்டினார் வாஜ்பாய். போர் என்பது செலவு அதிகம் பிடிக்கும், உயிர்ச்சேதம் அதிகம் ஏற்படும் பெரிய நடவடிக்கை. உளவுப்பிரிவின் பதிலடி அப்படிப்பட்டதல்ல.

பேட்டி : விஜயகுமார் ஐ.பி.எஸ்

ஆனால், இவ்வளவு கண்காணிப்பு அமைப்புகள் இருக்கும் சூழலிலும் இன்னமும் இந்தியக் காவல் துறை காலனியாதிக்க அணுகுமுறையோடுதானே மக்களை அணுகுகிறது?
நம்முடைய அடிப்படையிலேயே உள்ள பிரச்சினை இது. பிரிட்டிஷார் கொடுத்த கட்டமைப்பைக் கொண்டுதான் நம்முடைய எல்லாத் துறைகளும் கட்டப்பட்டன. ஏனைய துறைகளை எல்லாம் பிரிட்டனில் எப்படி அமைத்தார்களோ அதேபோல அமைத்த பிரிட்டிஷார், காவல் துறையை மட்டும் லண்டனில் ஒரு மாதிரியும் டெல்லியில் ஒரு மாதிரியும்தான் அமைத்தார்கள். சுதந்திரத்தின்போதே நாம் மாற்றம் கொண்டுவந்திருக்க வேண்டும். அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடக்கிறது. அப்புறம் நம்முடைய ஊடகங்களும் பொது அமைப்புகளும்கூட ஒரு காரணம் என்று சொல்வேன். சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக்கி, காவல் துறையின் பிம்பத்தை மோசமாக்கி விட்டார்கள். இவ்வளவு பரந்து விரிந்த நாட்டில், மொத்த மக்கள்தொகைக்கு இருக்கும் காவல் துறையினர் எத்தனை பேர், எல்லா இடங்களிலும் அவர்கள் இருப்பது சாத்தியம்தானா என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, ஒரு சங்கிலிப் பறிப்பைக்கூட ஒட்டுமொத்தக் காவல் துறையின் தோல்வியாக விமர்சிக்கும் சூழல் இங்கே நிலவுகிறது. ஒரு குற்றம் என்பது அது சம்பந்தப்பட்ட சமூகத்தின் பல்வேறு கட்டுமானங்களோடும் சம்பந்தப்பட்டது. அங்கே சரியில்லை என்றால், இங்கேயும் அது எதிரொலிக்கும். ஆனால், ஒட்டுமொத்தத்தையும் சேர்த்துச் சிந்திப்பதில்லை.
நம்முடைய காவல் துறையின் பெரிய பலம் என்ன? பெரிய பலவீனம் என்ன? அதன் மிகப் பெரிய தேவை என்ன?
ஐந்து லட்சம் பட்டதாரிகளிலிருந்து 150 பேர் காவல் துறை அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் முறை உலகில் வேறு எங்கும் இல்லை. அவ்வளவு திறனும் அறிவும் நம்மிடம் இருக்கிறது. இது பலம். இந்தப் பலத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதது பலவீனம். தேவை எதுவென்றால், சீர்திருத்தம்.
எதைச் சீர்திருத்தம் என்று குறிப்பிடுகிறீர்கள்?
நம்முடைய காவல் துறை 19, 20, 21 இந்த மூன்று நூற்றாண்டு களுக்கும் இடையில் கிடந்து அல்லாடிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம் பெண்களை உயிரோடு கொளுத்தும் போன நூற்றாண்டுக் குற்றவாளிகளை எதிர்கொள்கிறோம்; இன்னொருபுறம், அடுத்த நூற்றாண்டின் சைபர் குற்றங்களை நிகழ்த்தும் குற்றவாளிகளையும் எதிர்கொள்கிறோம். ஆனால், அதற்கேற்ற நவீனக் கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோமா என்றால், இல்லை என்றே சொல்வேன். 1. தேர்தல் ஆணையம்போல, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இரண்டுக்கும் அப்பாற்பட்டுச் செயல்படும் சுதந்திரம் இருக்க வேண்டும். 2. ஆட்களை அதிகரிக்க வேண்டும். 3. காலத்துக்கேற்ப நவீனமயமாக்க வேண்டும். 4. காவல் துறையுடன் ஏனைய துறைகளுடனான செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்... இப்படி நிறைய வேண்டும்கள் இருக்கின்றன.

புதன், 9 ஏப்ரல், 2014

தண்ணீரில் ஏற்றத்தாழ்வு

நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின் வாக்கு தமிழகத்தில் திரும்பத் திரும்பத் தண்ணீரைப் பற்றிப் பேசக் கூடியவர்களால் சொல்லப்படுகிறது. அவர் சொல்வது நல்ல நீரைப் பற்றி, உப்பு நீரைப் பற்றி அல்ல என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், நல்ல நீரைப் பற்றிய விவரங்கள் நமக்கு அதிகம் தெரியாது.
உலகில் இருக்கும் தண்ணீரில் 97.5% கடல் தண்ணீர். மீதமுள்ள 2.5% நல்ல தண்ணீரில் மூன்றுக்கு இரண்டு பங்குக்கும் மேல் ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதிகளிலும், இமயமலை போன்ற பனிமலைகளிலும் உறைந்துகிடைக்கிறது. மீதமுள்ள பங்கில் பெரும் பகுதி நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீர். கிடைக்கும் தண்ணீரில் 0.26% மட்டுமே ஏரிகளிலும் குளங்களிலும் நீர்த்தேக்கங்களிலும் ஆறுகளிலும் இருக்கிறது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
தண்ணீரில் ஏற்றத்தாழ்வு
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்போலத் தண்ணீர் கிடைப்பதிலும் உலகில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் இருப்பவர்களில் ஒவ்வொருவருக்கும் வருடத்துக்கு 1.5 மில்லியன் கனமீட்டர் தண்ணீர் கிடைக்கிறது! ஆனால், குவைத்தில் இருக்கும் நல்ல தண்ணீர் ஒவ்வொருவருக்கும் வருடத்துக்கு 10 கனமீட்டர் தேறினால் அதிசயம். இந்தியாவைப் பொறுத்த அளவில் நமக்குக் கிடைக்கும் தண்ணீர் தலைக்கு சுமார் 2,200 கனமீட்டர்கள்.
சீனர்களுக்கும் 2,250 கனமீட்டர்கள் கிடைக்கிறது. கிடைப்பது குடிநீருக்கு மட்டுமல்ல. பாசனத்துக்கு, குளிப்பதற்கு, தொழிற்சாலைகளுக்கு, நமக்கு உணவாகப்போகும் மிருகங்களுக்கு - இவை எல்லாவற்றுக்கும்தான்.
இன்று உலகின் மக்கள்தொகை சுமார் 700 கோடி. இது 2050-க்குள் 900 கோடிக்கும் மேல் உயர்ந்துவிடும். உலகில் உணவு உற்பத்தி ஓரளவுக்கு மேல் அதிகரிக்க முடியாது. காரணம், விளைநிலங்களின் தட்டுப்பாடு அல்ல. தண்ணீர்த் தட்டுப்பாடு. 2050-ல் தண்ணீர் அப்போதைய தேவையை விட 27% குறைவாகக் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் தட்டுப்பாடு இருக்காது.
வளரும் நாடுகளில்தான் தட்டுப்பாடு. அடிமேல் அடி அவர்கள் மீதுதான் விழும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டால் அது எல்லை நிலங்களுக்காக இருக்காது; தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் ஏற்படும் முரண்களுக்காக இருக்கலாம்.
இந்தியாவின் நிலை
தண்ணீர்த் தட்டுப்பாடு என்றால் என்ன என்பதை ஐ.நா. சபை நிர்ணயம் செய்திருக்கிறது. வருடத்துக்குத் தலைக்கு 1,700 கனமீட்டர்களுக்கு மேல் தண்ணீர் இருக்கும் நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு அறவே இல்லை என்று சொல்லலாம். 1,700 கனமீட்டரிலிருந்து 1,000 கனமீட்டர்கள் கிடைக்கும் நாடுகளில் மக்கள் தண்ணீர் குறைபாட்டை உணர்வார்கள். ஆனால், கடுமையான தட்டுப்பாடு 1,000 கனமீட்டர்களுக்கும் குறைவாகக் கிடைக்கும் இடங்களில்தான் நிகழ்கிறது.
முழுவதுமாகப் பார்த்தால், இந்தியாவில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லை என்று சொல்லலாம். ஆனால், நமக்குக் கிடைக்கும் தண்ணீரில் சுமார் 90% விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், கிடைக்கும் தண்ணீரை நாம் திறமையாகப் பயன்படுத்துவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கடலில் கலக்கும் நீரின் அளவு மிக அதிகம். இந்திய நதிகள் உலக நதிகளின் நீர் அளவில் 4% மட்டுமே சுமக்கின்றன.
ஆனால், அவை சுமக்கும் வண்டலின் அளவு 35% சதவீதத்துக்கும் மேல்! இதனாலேயே நதிகளின் ஆழம் குறைந்து கரைகள் உடைபட்டு வெள்ளங்கள் ஏற்படுகின்றன. பல சமயங்களில் யாருக்கும் பயனின்றி தண்ணீர் அழிவையே ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டின் நிலை
சென்ற வாரம் சென்னையில் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் இருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “தண்ணீர்த் தட்டுப்பாடு உண்டா?” என்று கேட்டேன். “கிடையவே கிடையாது” என்றார். “காசு கொடுத்தால் டேங்கரில் தண்ணீர் வந்துவிடும்.” “மாதம் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?” “இரண்டாயிரம் இருக்கும்.” மாதம் இரண்டாயிரம் தண்ணீருக்காகச் செலவுசெய்யும் வசதிபடைத்தவர்கள் தமிழகத்தில் அதிகம் இருக்க மாட்டார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? இந்தக் கேள்விக்குச் சரியான விடை இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் 750 கன மீட்டர்கள் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது என்று தமிழக அரசின் ஆவணம் ஒன்று கூறுகிறது. தட்டுப்பாடு நிலை என்று ஐ.நா. சபை நிர்ணயித்த 1,000 கனமீட்டர்களை விட இது 25% குறைவு. பாலைவனப் பிரதேசம் என்று சொல்லக்கூடிய ராஜஸ்தானில் தலைக்கு 780 கனமீட்டர்கள் கிடைக்கிறது. நமது நிலைமை பாலைவனத்தைவிட மோசம். கிடைக்கும் நீரில் 45 சதவீதத்துக்கும் மேல் நிலத்தடி நீர்.
நிலத்துக்கு மேல் கிடைக்கும் நீரில் சுமார் 30 சதவீதத்துக்கு நாம் அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்கிறோம். அண்டை மாநிலங்களிலும் உபரி நீர் அதிகம் இல்லை என்பது நமக்குத் தெரியும். ஏற்கெனவே நிலத்துக்கு மேல் கிடைக்கும் நீரில் 95 சதவீதத்தையும், நிலத்துக்குக் கீழ் கிடைக்கும் நீரில் 80 சதவீதத்தையும் வருடந்தோறும் பயன்படுத்திக்கொண்டுவருகிறோம். இதில் 75% சதவீதம் விவசாயத்துக்குப் பயன்படுகிறது.
வழி என்ன?
தமிழகம் நகரமயமாகும்போது தண்ணீரின் தேவையும் அதிகமாகிறது. விவசாயத்துக்கு உபயோகிக்கப்படும் நீரின் அளவு குறைந்தாலும், நகரங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நீங்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அண்டை மாநிலங்கள் முன்னேறும்போது அவர்களது தேவைகளும் அதிகரிக்கும். எனவே, நாம் தண்ணீருக்கு மற்றைய வழிகளைத் தேட வேண்டிய அவசியம் இருக்கிறது.
விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் நீரின் அளவை உற்பத்திக்கு ஊறு ஏற்படாமல் குறைக்க வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, அரிசி உற்பத்திக்கு ஒரு கிலோவுக்கு 5,000 லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. இதை 50 சதவீதத்தைக் குறைத்து உற்பத்தியையும் அதிகரிக்கலாம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. ஆனால், இது நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறி.
நதிகளை இணைப்பது ஒரு வழி. போகாத ஊருக்குப் போகும் வழி. அப்படியே இணைக்கப்பட்டாலும், நாம் நாட்டின் கடைக்கோடியில் இருப்பதால், எல்லோருக்கும் போக மிச்சம் இருப்பதுதான் வந்துசேரும் அபாயம் இருக்கிறது. மிச்சமே இல்லாதும் போகலாம்.
மற்றொன்று, கடல் நீரை நல்ல நீராக்கும் வழி. இன்று இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு, இதைப் பெரிய அளவில் செய்வது சாத்தியம் அல்ல. பணம் அதிகமாகச் செலவாகும். மேலும், இந்த முறையினால் ஏற்படும் கழிவுகளை அகற்றுவது மிகவும் கடினமான காரியம்.
எனவே, இருக்கும் நீர் ஆதாரங்களை அழியாமல் நாம் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தண்ணீரைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டியது அதைவிட அவசியம். வருமுன் காக்கத் தவறினால், சென்னை போன்ற நகரங்களில் வாடகையை விட தண்ணீருக்கு அதிகம் பணம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகலாம். தட்டுப்பாடு ஏற்பட்டால் துன்பப்படப்போகிறவர்கள் கீழ்த்தட்டு மக்களே.
- பி. ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர்,

Speech from APJ.A.K

என்னிடம் ஒரு குழந்தையை ஏழு ஆண்டுக்கு கொடுங்கள். பின்னர்
கடவுளோ அல்லது சாத்தானோ அக்குழந்தையை எடுத்து செல்லட்டும். ஆனால் அந்த குழந்தையை அவர்களால் மாற்ற முடியாது என்றார் சிறந்த ஆசிரியரான பெஸ்டோலோஸ்ஸி. இதுதான் சிறந்த ஆசிரியரின் சக்தி.



ஒவ்வொரு வாரத்திலும் ஒரு மணி நேரம் சாதனையாளர்களை பற்றி அறிமுகப்படுத்தப்படும் ஒரு வகுப்பு இடம்பெற வேண்டும். இளம் சிந்தனையாளர்களை உயர்த்துவது என்ற அடிப்படையில் இந்த வகுப்பு அமைய வேண்டும். புத்தர், கன்பூசியஸ், செயின்ட் அகஸ்டின், கலீபா உமர், மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன், ஆப்ரஹாம் லிங்கன் உள்ளிட்ட சாதனையாளர்கள், தலைவர்கள், விஞ்ஞானிகள் பற்றியும் நமது நாகரிகம் தொடர்பான விஷயங்களையும் கற்றுத் தர வேண்டும்.

அக்னிச் சிறகுகள்

அக்னிச் சிறகுகள்: ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் பற்றிய சுயசரிதை (1999) ISBN 8173711461
  • நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
  • தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம்; திசை தெரியாத குழப்பம். இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப் பெரிய பிரச்சனை.
  • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
  • நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
  • சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
  • கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களை தூங்க விடாமல் செய்வது.
  • பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துனியுங்கள்.
  • பயந்தால் வரலாறு படைக்க முடியாது.
  • ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும் போது, தான் காண்பதை தவராக எடைப்போடக் கூடும். பெறும்பாலானோர்களின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால் தாங்கள் என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள். எந்த ஒரு நபரும் நேர்மையோடும் நியாயத்தோடும் தன்னை எடை போட்டுப் பார்ப்பதில்லை.
  • நாம் எல்லோரும் ஒரு தெய்வீக நெருப்பாகத் தான் பிறந்துள்ளோம். நாம் அந்த நெருப்பில் நமது சிறகுகளைக் கொடுத்து அதனுடைய நன்மைகளை உலகில் நிரப்ப முயற்சி செய்ய வேண்டும்.
  • இன்னல்களும் பிரச்சனைகளும் நாம் வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!.
  • கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை! பாதைக்கான ஒளியை!.
  • ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்!.
  • கால எல்லையைத் தவிர வேறு எந்த வித்த்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.
  • எந்த அளவிற்கு உங்களைடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவரம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்.
  • அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
  • நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உணைமையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்.
  • காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!
  • ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல, உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.
  •  

    இளம் வாக்காளர்களுக்கு!!!

    http://tamil.thehindu.com/opinion/columns/இளம்-வாக்காளர்களுக்கு/article5890334.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication

    உங்களைப் போலவே ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் 90 ஆயிரம் இளம் வாக்காளர்கள் இணைந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் தகவலைப் பார்த்து வியந்துபோனேன். வாக்களிப்பது மிக முக்கியமான ஒரு ஜனநாயக நடவடிக்கை என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு வாக்குதான். கோடீஸ்வரர் என்பதற்காக யாருக்கும் 10 வாக்குகள் கிடையாது. இந்தியர்கள் அனைவரும் சமம் என்பதுதான் இதன் பொருள்.

    பொறுப்பான குடிமக்களாக, தங்களது ஜனநாயகக் கடமையை நன்கு உணர்ந்த மக்களாக இன்னமும் முழுமையாக நாம் மாறவில்லை என்பதில் கல்வித் துறைக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது. இதுபற்றி பாடத்திட்டத்தில் எதுவும் இருக்கக் கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லை. ஆனாலும், இனம்புரியாத உதாசீனம் வியாபித்திருப்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சாதித் தலைவர்கள் பற்றிய வீரவழிபாடு, சகித்துக்கொள்ள முடியாத உயர்வு நவிற்சியோடும் பரவசத்தோடும் பேசப்படும் புராணக் கதைகள் என்று சாதிய அபிமானத்தையும் மத உணர்ச்சிகளையும் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் திணிக்கும் அரசுகளுக்கு நமது ஜனநாயகப் பயணம்குறித்தும் அதன் உண்மையான கதாநாயகர்கள்குறித்தும் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல வேண்டும் என்ற சாதாரண பிரக்ஞைகூட எழாதது ஆச்சரியம்தான்.

     நமக்கு ஜே.சி. குமரப்பாவைத் தெரியாது; மாபெரும் புரட்சியை நம் கண்முன் நிகழ்த்திக் காட்டிய ஜகன்நாதன்-கிருஷ்ணம்மாள் இணையரைத் தெரியாது; பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தும், அப்பழுக்கற்ற லட்சியவாதிகளாக, மக்கள் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பார்வதி கிருஷ்ணன் போன்ற பல தலைவர்களைத் தெரியாது.

    சிறப்பான நிர்வாகம்

    இன்று இதை நிராகரிக்கவும் புதிய அரசியலை உருவாக்கவும் பெரும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது; முதல்முறை வாக்களிக்க வரும் உங்களுக்கும் இருக்கிறது. இந்தியா போன்ற எண்ணிலடங்கா மொழிகளும் பண்பாடுகளும் கொண்ட நாட்டில், அதன் அடிப்படையான பன்முகத்தன்மையை அங்கீகரிக்கவும், கொண்டாடவும் தெரிந்த அரசியல் கட்சி அவசியம். ஒரே மொழி, ஒரே மதம் இருந்தால் மட்டுமே நாட்டில் ஒற்றுமை இருக்கும் என்ற அபத்தமான அரசியல் நிலைப்பாடு, சீரழிவை மட்டுமே உறுதி செய்யும் என்பதை நீங்கள் அறிய வேண்டும். சிறப்பான நிர்வாகம் என்ற சொல்லாடல் உங்களில் பலருக்குப் புல்லரிப்புகளை ஏற்படுத்தலாம். நிர்வாகம் சிறப்பாக இருப்பது அவசியம்தான்; ஆனால், நவீன அரசியலைக் கூர்ந்து நோக்கினால், கடந்த நூறாண்டுகளில் சிறப்பாக நிர்வாகம் நடைபெற்ற நாடுகள் என்றால் அது ஹிட்லரின் ஜெர்மனி போன்ற ஒருசில நாடுகள்தான். ஆனால், அவற்றின் அழிவுகளை நினைத்தாலே மனம் பதறுகிறது. சிறப்பான நிர்வாகம் என்பது மக்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வதுதான். சில தனிநபர்கள் சில பெருமுதலாளிகளின் கைப்பாவையாகச் செயல்படும் நிர்வாகம் கண்டிப்பாகச் சீரழிவை மட்டுமே தரும்.

    சட்டத்தின் எல்லைக்கு உட்பட்டு, கருத்தொற்றுமையின் அடிப்படையில் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் ஆளுமைகளை இனம்காண வேண்டும். தங்களுக்கென்று எந்த சொத்தும் இல்லாமல், பொதுவாழ்க்கையில் அசாதாரணமான அர்ப்பணிப்புடன் செயல்படும் மகத்தான தலைவர்கள் நம்மிடம் இன்றும் இருக்கிறார்கள்; இப்படியும் அரசியல் தலைவர்கள் இருந்தார்களா என்று உங்களில் சிலர் ஆச்சரியப்படும் அளவுக்குப் பல அப்பழுக்கற்ற மக்கள் தொண்டர்கள் அவர்கள். மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடி சிறை சென்றவர்கள், அதை வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயங்கள் தேடத் தெரியாதவர்கள்

    Congrats to Dr.Maharaj Paan

    ரோடா-வைரஸ்' என்ற கிருமியால் பரவும் கொடிய நோய்க்கு டெல்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் டாக்டர் மகராஜ் பான் என்பவரின் தீவிர முயற்சியால் 30 ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள 13 அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் அவருக்கு இதில் ஒத்துழைப்பை நல்கியுள்ளன. 1985 முதல் அந்த டாக்டர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறார். முதல்முறையாக இந்தத் தடுப்பு ஊசியைப் போட்டுத் தொடர் ஆய்வு மேற்கொண்டதில் 56.4% இது வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறது. இந்தத் தடுப்பு ஊசி போடப்படுவது மேலும் அதிகரித்தால், இந்த நோயைக் கட்டுப்படுத்திக் கோடிக் கணக்கான இளம் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றிவிடலாம்.
    குழந்தை பிறந்தது முதல் இரண்டு வயதுக்குள்ளாக இந்த ரோடா வைரஸ் தீவிரமாகத் தாக்கும். காய்ச்சல், வயிறு அல்லது குடல் வீக்கம் இதன் அறிகுறிகள். குழந்தை வாந்தி, பேதியால் உடலின் நீர்ச்சத்தைக் கணிசமாக இழந்துவிடும். குளிர்காலத்தில்தான் இந்த வைரஸ் அதிகம் தாக்கும். இந்த வைரஸ்கள் 'ஏ' முதல் 'ஜி' வரை பல பிரிவுகளாகப் பகுத்தறியப்பட்டுள்ளன. மலப் பரிசோதனை மூலம்தான் தொற்றைக் கண்டுபிடிக்க முடியும். சுகாதாரமற்ற இடங்கள் இந்த வைரஸ் பெருகக் காரணம். ஒரு குழந்தையின் மலத்திலிருந்து இன்னொரு குழந்தைக்கு இந்த வைரஸ் பரவும். சமையல் செய்கிறவர்கள் கைகளைக் கழுவிச் சுத்தம் செய்யாமல் தின்பண்டங்களைத் தயாரிக்கும்போதும் இது பரவும்.

    இந்த நோய்க்கு ஆண்டுதோறும் உலகெங்கும் சுமார் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை குழந்தைகள் பலியாகின்றனர். இவர்களில் மிகப் பெரும்பாலானோர் ஏழைகள். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததாலேயே உயிரிழப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு வயதுக்கும் குறைவான சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் இந்தக் கிருமியால்தான் இறக்கின்றனர். உலகில் இந்நோயால் இறக்கும் இளம் சிசுக்களில் 25% இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 5 வயது வரையில் உள்ள குழந்தைகளை இந்த வைரஸ் தாக்கும். இந்தத் தடுப்பு மருந்தை வேலூர் சி.எம்.சி. உள்பட மூன்று மையங்களில் குழந்தைகளுக்குக் கொடுத்து சோதித்துப் பார்த்து, இது பாதுகாப்பானது என்ற சான்று பெறப்பட்டிருக்கிறது. இப்போது இதன் விலை சுமார் 60 ரூபாய்தான். அரசே இதைத் தடுப்பு ஊசிகளுடன் சேர்த்துப் போடும் இயக்கத்தைத் தொடங்கினால், கணிசமான உயிரிழப்பைத் தடுத்துவிடலாம். நாளடைவில் இந்த வைரஸினால் ஏற்படும் பாதிப்பையே குறைத்துவிடலாம்.

    ரோடா-வைரஸ் காய்ச்சலுக்குச் சில தடுப்பு மருந்துகள் இருந்தாலும் ‘116-இ' என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்பு மருந்துதான் சக்திவாய்ந்ததாக இருக்கிறது. இந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க 30 ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தாலும் இப்படிப்பட்ட அரிய செயல்களை இந்தியர்களாலும் செய்ய முடியும் என்று உலகுக்குக் காட்டியிருக்கிறோம். இந்த வெற்றி மாபெரும் மக்கள் இயக்கமாக உலகெங்கும் பரவி, கோடிக் கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றட்டும்

    திங்கள், 7 ஏப்ரல், 2014

    I-Vote : ஐ-வோட்

    ஐ-வோட் ஐக்கிய அரபு அமீரகம், சுவிட்சர்லாந்து மற்றும் பல அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஐ-வோட் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்கள், வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கும் அமெரிக்க ராணுவத்தில் தங்கள் மக்கள் வேலை செய்யும்போது அவர்களின் ஐ-வோட்டை ஏற்றுக்கொண்டன. நம் நாட்டில்கூட குஜராத் மாநிலம் காந்திநகர் நகராட்சித் தேர்தலில் 2011-ல் சிலரால் ஐ-வோட் பயன்படுத்தப்பட்டது.
    ஐ-வோட் என்றால் என்ன?
    இணையம் மூலமாக வாக்கைப் பதிவுசெய்வது ஐ-வோட். இணையத் தொடர்பு இருக்கும் ஒரு கணினி யின் மூலம் ஒரே இணையதளத்தில் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் பதிவுசெய்யும் வாக்கு உங்கள் கணினியில் இல்லாமல் வேறு இடத்தில் உள்ள மைய சர்வரில் சேமித்துவைக்கப்பட்டு, அட்டவணையிடப்பட்டு, தேர்தல் முடிவுகளில் உள்ளடக்கப்படும். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள கணினி, கைபேசி, அல்லது தேர்தலுக்காக அரசு ஏற்படுத்தும் கணினி மையம் என்ற ஏதாவது ஒன்றின் மூலம் உங்கள் வாக்குகளைச் செலுத்தலாம்.
    ஐ-வோட் பயன்படுத்துவதால் என்ன பயன்?
    ஒன்று, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டியதில்லை. வாக்குச்சாவடிக்குச் செல்வதற்கான நேரமும் சிரமமும் மிச்சம். எனவே, ஐ-வோட் பயன்பாட்டில் இருந்தால், வீட்டில் இருந்தவாறே பலரும் வாக்களிக்க முன்வரலாம். 2009-ல் நடந்த பொதுத்தேர்தலில் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்காளர்களே வாக்களித் தனர். இந்த சதவீதம் ஐ-வோட் முறையில் உயரும்.
    இரண்டு, இப்போது இருப்பதுபோல் லட்சக் கணக்கான வாக்குச்சாவடிகளும் அவற்றுக்கான பாதுகாப்புச் செலவும் மிச்சம். இதனால் மட்டுமே, பல நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். சட்டம்- ஒழுங்குக்கும் எந்த ஆபத்தும் வராது. கடந்த முறை, எட்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் இருந்தன. இரண்டரை லட்சம் போலீஸ்காரர்களும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். பல லட்சம் அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடிகளை நிர்வகித்தனர்.
    மூன்று, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முடியாது. ஒரு தேர்தல் கணினி சேவை மையத்தில் மதியம் 12 மணிக்குக் கலவரம் ஏற்பட்டு, வாக்களிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். ஐ-வோட் மூலம் போடப்படும் வாக்குகள் மைய சர்வரில் சேமிக்கப்படுவதால், வாக்குப் பதிவு பாதியில் நிறுத்தப் பட்டாலும், அதுவரை பதிவான வாக்குகள் பத்திரமாக சர்வரில் இருக்கும். மறு வாக்குப்பதிவில், அதுவரை வாக்களிக்காதவர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும். எனவே, வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது சிரமம், மறுவாக்குப்பதிவு செய்வது எளிது.
    நான்கு, இப்போது ஒரு வாக்குச்சாவடியில் நான்கு அல்லது ஐந்து அரசு ஊழியர்கள் இருந்தால் மட்டுமே வாக்கு செலுத்த முடியும். வாக்காளரை அடையாளம் காண்பது, வாக்கு செலுத்த அனுமதிப்பது, வாக்கு செலுத்தப்பட்டதற்கான குறியை இடுவது என்று பல வேலைகள் உண்டு. இவை எதுவுமே ஐ-வோட்டில் வேண்டாம். இந்த அனைத்து வேலைகளையும் கணினியே செய்யும்.
    உங்களை அடையாளம் கண்டால் மட்டுமே அது வாக்களிக்க அனுமதிக்கும். நீங்கள் ஒருமுறை வாக்களித்தால், மறுமுறை வாக்களிக்க முடியாது. அல்லது உங்களை மீண்டும் அடையாளப்படுத்திக்கொண்டால் மட்டுமே மீண்டும் உங்கள் வாக்கை மாற்றியமைக்க முடியும்.
    ஐந்து, நாடு முழுவதும் ஒரு சில நாட்களில் மொத்தத் தேர்தலையும் நடத்தி முடிக்கலாம். இப்போது இருப்பதுபோல ஒரு மாதத் தேர்தல் திருவிழா நடத்த வேண்டியதில்லை.
    ஆறு, நம்மில் பலர் வியாபாரம், வேலை நிமித்தமாக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்கிறோம். நாம் சென்ற இடத்திலிருந்து இணையதளம் மூலமாக வாக்களிக்கலாம். விடுதிகளில் உள்ள மாணவர்கள் வாக்களிக்காமல் இருப்பது அதிகரித்துவருகிறது. இவர்களுக்கும் ஐ-வோட் பயனுள்ளதாக இருக்கும்.
    ஏழு, முதியோர், உடல் ஊனமுற்றோர், உடல் நலம் குன்றியவர்கள் வீட்டில் இருந்தவாறே வாக்களிக்கலாம். பார்வையற்றவர்கள்கூட ஹெட்ஃபோன், குரல் அடையாளக் கருவி போன்றவற்றைப் பயன்படுத்தி யாருடைய துணையும் இல்லாமல் வாக்களிக்கலாம்.
    ஐ-வோட் முறையைச் செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் என்ன?
    ஐ-வோட் முறையைச் செயல்படுத்துவதில் இரண்டு அடிப்படைச் சிரமங்கள் உள்ளன. ஒன்று, கல்வியறிவு. இரண்டு, ஐ-வோட் பயன்படுத்த எல்லா இடங்களிலும் இணைய வசதி இருக்க வேண்டும். இந்தியாவில் 120 கோடிக்கு மேல் மக்கள்தொகை இருந்தாலும், அதில் 16.4 இணையச் சந்தாதாரர்கள்தான் உள்ளனர் என்றும், எட்டில் ஏழு பேர் கைபேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்துவதாகவும் டி.ஆர்.ஏ.ஐ. கூறுகிறது. ஐ-வோட் முறையில் உள்ள கடும் சவாலும் சிரமமும் இவைதான்.
    ஐ-வோட் முறையின் தொழில்நுட்பப் பிரச்சினைகள் என்ன?
    ஐ-வோட் முறையை எதிர்ப்பவர்களின் காரணங்கள் தொழில்நுட்பரீதியானது. உலக அளவில் நம்பகமாக வாக்களிக்கும் முறை என்பது “ஒருவர் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் வாக்களிக்க வேண்டும், அவ்வாக்கு ரகசியமானதாக இருக்க வேண்டும், அளிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.” வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி, வாக்குச் சாவடியில் வாக்களிப்பதன் மூலமாகவும், அதற்குப் பிறகு, வாக்குச்சீட்டுகள் பாதுகாக்கப்பட்டு வெளிப்படையாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதன் மூலமாகவும் மேற்கண்ட விஷயங்களை உறுதிசெய்ய முடியும்.
    ஐ-வோட் முறையிலும் ஒருவர் தன்னிச்சையாக, சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிசெய்ய முடியும். ஆனால், அவ்வாக்கு ரகசியமாக உள்ளதா, அளிக்கப்பட்ட வாக்குகள் வேறு ஒருவரால் மாற்றப்பட்டனவா, அளித்த வாக்குகள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனவா என்பதில் குழப்பங்கள் நிறைய உள்ளன.
    உண்மையான வாக்காளர் நீங்கள்தான் என்பதைக் கணினி கண்டறிய நவீன மின் அட்டை தேவைப்படும். எஸ்தோனியா நாட்டில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையில் ஒரு மைக்ரோசிப் உண்டு. அதை அடையாளம் காண்பதற்கான சாதனமும் கணினியில் உண்டு. அல்லது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அந்த மென்பொருளைப் பதிவிறக்கம்செய்துகொள்ளலாம். இதுமட்டுமல்லாமல், மின் கையொப்பம் போன்ற தொழில்நுட்பங்களும் தேவை. இவையெல்லாம் இருந்தால் மட்டுமே நம்மால் ஐ-வோட் அளிக்க முடியும். இந்தியா போன்ற பெரிய நாட்டில் இது சாத்தியமில்லைதான்.
    சில மென்பொருட்களைப் பயன்படுத்தி, அளிக்கப்பட்ட வாக்குகளை மைய சர்வரில் பாதுகாத்து எண்ணிக்கையில் சேர்க்க முடியும். மைய சர்வரில் இந்த வாக்குகள் திருடப்படாமல் இருப்பதைக்கூட ஓரளவுக்கு உறுதிசெய்யலாம். ஆனால், உங்கள் வீட்டில் உள்ள கணினியில் வைரஸ் இருந்தாலோ, அல்லது வேறு வகையில் உங்கள் வாக்குகளைத் திருத்தியனுப்பும் வசதியை வேறு ஒருவர் பெற முடிந்தாலோ, ஐ-வோட் முறை நம்பகத்தன்மையை இழந்துவிடும்.
    உலகில் பல தனியார் நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் ஐ-வோட் முறையைப் பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் உள்ளன. இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இவர்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளும் இதுதான்,
    “ஐ-வோட் முறையைப் பரீட்சார்த்த முறையில் தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே, ஒரு நாட்டில் அந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும்.” முதல்கட்டமாக எங்கெல்லாம் அஞ்சல் வாக்குகள் உள்ளனவோ அங்கெல்லாம் ஐ-வோட் முறையின் பயன்பாட்டை நாம் அறிமுகப்படுத்தலாம்.