புதன், 14 மே, 2014

தாய்மொழி வழியாகக் கல்வி -உச்ச நீதிமன்ற தீர்ப்பு

அண்மையில் (மே, 2014) உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தாய்மொழி வழியாகக் கல்வி வழங்கச் சட்டத்தின் துணையை நாடுவோருக்கு உச்சந்தலையில் விழுந்த அடி. அப்படிப்பட்ட சட்டம் இந்திய அரசியல் சட்டத்தை மீறியதாகும் என்பது இந்தத் தீர்ப்பின் சாராம்சம். தொடக்கக் கல்வியில் (வகுப்புகள் 1-4) கன்னடம் உள்ளிட்ட தாய்மொழிகள் கல்விமொழியாக இருக்கும் என்ற கர்நாடக அரசின் ஆணையை நிராகரித்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது; அதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மேல்முறையீட்டைத் தள்ளுபடிசெய்து வழங்கிய தீர்ப்பு இது. அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் ஒருமித்த தீர்ப்பு.
அரசியல் சட்டம்
அரசியல் சட்டத்திலுள்ள ஷரத்துகளில் சில, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியவை; சில, அரசின் பொறுப்புகள் பற்றியவை. அரசியல் சட்டத்தில் அரசின் பொறுப்புகள்பற்றிய பகுதியிலேயே ஒரே ஒருமுறை தாய்மொழி என்ற கருத்து வருகிறது. மொழிவழி மாநிலப் பிரிவினை ஆணையத்தின் பரிந்துரையின்மீது (1955) அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஒரு ஷரத்து, ஒரு மாநிலத்திலுள்ள மொழிச் சிறுபான்மையினருக்குத் தொடக்கக் கல்வியை முடிந்தவரை தாய்மொழியில் வழங்குவதை மாநில அரசுகளின் பொறுப்பு ஆக்கியது. மற்றவர்களின் கல்வியை அவர்கள் தாய்மொழியில் தருவது அரசின் பொறுப்பு என்று அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை. இது உச்ச நீதிமன்றத்தின் ஒரு முடிவு.
ஆனால், 1949-ல் மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டின் தீர்மானப்படி எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் தாய்மொழியில்தான் தொடக்கக் கல்வி தரப்பட வேண்டும்; இதைக் கல்விக் கொள்கையாக இந்திய அரசும் ஒப்புக்கொண்டது. கர்நாடக அரசுக்கும் அம்மாநில ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகளுக்கும் இடையே நடந்த வேறொரு வழக்கில் உச்ச நீதிமன்றமும் இதை ஒப்புக்கொண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், புதிய வழக்கில் இந்தக் கல்விக் கொள்கையை அரசு எல்லா வகையான பள்ளிகளிலும் கட்டாயமாக அமல்படுத்தலாம் என்பது தன் பழைய தீர்ப்பின் அர்த்தம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.
சிறுபான்மையினர் தங்கள் நோக்கின்படி பள்ளிகளை நிறுவி நடத்த அரசியல் சட்டம் உரிமை அளிக்கிறது; இந்த உரிமையில் பயிற்றுமொழியை அவர்களே முடிவு செய்வதும் அடங்கும்; அது அவர்களுடைய தாய்மொழி யாகத்தான் இருக்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்த முடியாது என்பது உச்ச நீதிமன்றத்தின் கருத்து. இதைப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சொல்லி யிருக்கிறது; இந்த வழக்கிலும் சொல்கிறது. சிறுபான்மை யினருக்குத் தரப்பட்டுள்ள இந்த உரிமைபற்றிய ஷரத்து, அவர்களுக்குத் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும் வளர்க்கவும் தரப்பட்டுள்ள உரிமை பற்றிய ஷரத்துக்கு அடுத்துவருகிறது. இந்த இரண்டு உரிமைகளுக் கும் தொடர்பு உண்டு; பின்னது முன்னதற்கு ஒரு கருவி என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
அரசின் அதிகார வரம்பு
அரசிடம் பணம் வாங்காமல், மாணவர்களிடம் அதிமாகப் பணம் வசூலித்து நடத்தப்படும் தனியார் பள்ளி களின் பயிற்றுமொழிக் கொள்கைபற்றி அரசு ஆணை யிட முடியாது. ஏனென்றால், கல்வி தருவது அரசியல் சட்டத்தில் தொழில் என்று சொல்வதில் அடங்கும்; லாபத்துக்காகச் செய்தாலும், சேவையாகச் செய்தாலும் அது தொழில்; எந்தத் தொழிலையும் தடை இல்லாமல் செய்ய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு உரிமை அளிக் கிறது. பயிற்றுமொழி பற்றிய அரசின் ஆணை தொழில் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். இது உச்ச நீதிமன்றத்தின் வாதம். அரசுக்குத் தொழிலை நெறிப் படுத்தும் அதிகாரம் உண்டு என்று நீதிமன்றம் ஒப்புக் கொள்கிறது; தொழிலாளர் நலம், சுற்றுச்சூழல் நலம் முதலானவற்றைக் காக்க அரசுச் சட்டம் இயற்றி தொழில்செய்வதைக் கட்டுப்படுத்தலாம். அரசின் கட்டுப் படுத்தும் அதிகாரம் வரம்புக்கு மீறக் கூடாது. கல்வியைப் பொறுத்தவரை பள்ளிகளின் தரத்தை, கல்வியின் தரத்தை நிலைநாட்டுவது அரசின் பொறுப்பு. ஆனால், கல்வியின் தரத்தைப் பயிற்றுமொழி பாதிக்காது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. உயர்நிலைக் கல்வியில் ஆங்கிலம் தரத்தைக் கூட்டுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்; தொடக்கக் கல்வியில் தாய்மொழியோ ஆங்கி லமோ தரத்தைக் கூட்டுகிறது என்று சொல்ல முடியாது. அது எதுவாகவும் இருக்கலாம்; அதைத் தேர்ந்தெடுப்பது பெற்றோரின் உரிமை என்பது உச்ச நீதிமன்றத்தின் வாதம்.
இது ஆதாரமற்ற வாதம். தாய்மொழிவழிக் கல்வி யின் நன்மைகளைப் பற்றிக் கல்வியாளர்களிடம் ஒருமித்த கருத்து இருக்கிறது. இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொள் கிறது. ஆனாலும், இதை உச்ச நீதிமன்றம் உதாசீனப்படுத்து வது கல்வியைத் தொழிலாகப் பார்ப்பதால் என்றே சொல்ல வேண்டும்.
சமூக உணர்வில்லாத கல்வி
பயிற்றுமொழியைப் பொறுத்தவரை தன்னிடம் நிதியுதவி பெறாத பள்ளிகள் அரசின் கொள்கையைப் பின்பற்றாதபோது அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பது அதிகார வரம்பை மீறுவதாகும்; மக்களின் வரிப் பணத்தைக் கொடுக்கும்போதுதான் அரசு நிபந்தனைகள் போடலாம்; இல்லையென்றால் அரசுக்கு அதிகாரம் இல்லை; அரசுப் பள்ளிகளிலும் அரசிடம் நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் தாய்மொழி பயிற்றுமொழியாக இருக்கத் தடை இல்லை என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்கிறது. இந்த வாதத்தை மேலெடுத்துச் சென்றால், தனியார் பள்ளிகள் மும்மொழித் திட்டத்தைக் கைவிடுவது அவற்றின் விருப்பம்; மாநிலத்தின் ஆட்சிமொழியைப் படிக் காமல், அரசின் செயல்பாடுகளில் பங்கேற்க முடியாமல், ஜனநாயகத்துக்கு ஊறு விளைந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை; இப்பள்ளிகள் மனிதநேய, சமூகவியல், வரலாற்றுப் பாடங்களே பள்ளி மாணவர்களுக்கு வேண்டாம் என்று முடிவுசெய்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
எது பேச்சுரிமை?
பொதுநன்மையை விட தனிநபர் உரிமையே முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் அரசியல் சட்டத்தைக் காட்டி வாதிடுகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி பிறப் புரிமை என்னும்போது அந்தக் கல்வியை எந்த மொழியில் பெறுவது என்பதற்கும் உரிமை இருக்கிறது என்ற கர்நாடக உயர் நீதிமன்ற முடிவை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், பேச்சுரிமையின் கீழ் பயிற்று மொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வரும் என்கி றது உச்ச நீதிமன்றம். பேச்சுரிமையில் கருத்து வெளியி டும் உரிமையோடு கருத்து பெறும் உரிமையும் அடங்கியிருக் கிறது. எந்த மொழியிலும் ஒருவர் கருத்தை வெளியிடலாம்; கருத்தைப் பெறலாம். கல்வி, கருத்தைப் பெறவும் வெளியிடவும் ஒரு சாதனம். அது எந்த மொழியிலும் இருக்கலாம். இதுவே நீதிமன்றத்தின் வாதம்.
பேச்சுரிமையைச் சரிவரப் பயன்படுத்தக் கல்வி உதவும்; எனவே கல்விக்கூடங்கள் பேச்சுரிமையை வளர்க்கும் இடங்கள் என்பது உண்மைதான். ஆனால், தொடக்கப் பள்ளியில் தெரியாத மொழியில் கல்வி நடக்கும்போது மாணவர்கள் கருத்து விளக்கம் கேட்க முடியாமல், தங்கள் கருத்தைச் சொல்ல முடியாமல் வாயடைத்துப்போகிறார்கள். இது எப்படிப் பேச்சுரிமை ஆகும்? ஆட்சிமொழியைப் பொறுத்தவரை, எந்த மொழி பேசுபவரும் அரசோடு தொடர்புகொள்ள, அரசின் நன்மைகளைப் பெறத் தங்கள் மொழியில் பேச, எழுத வாய்ப்புக் கேட்பது பேச்சுரிமையின் கீழ், ஜனநாயக நியாயத்தின் கீழ், மனித உரிமையின் கீழ் வரும். கல்வியில் தன் மொழி அல்லாத, தனக்குத் தெரியாத மொழியில் கற்பேன் என்பது எப்படிப் பேச்சுரிமை ஆகும்?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூகத்தின் பொது நன்மையைக் காப்பதில் அரசுக்கு இருக்கும் கடமையைக் குறைத்து, வணிக நிறுவனங்கள் தரும் சாமான்களை வாங்குவதற்குப் பொதுமக்களுக்கு உள்ள உரிமை கல்வியைப் பெறுவதிலும் உண்டு என்று கல்வியைச் சந்தைப்படுத்தும் போக்குக்குத்தான் துணைசெய்கிறது.
- இ. அண்ணாமலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தென்னாசிய மொழிகள், நாகரிகங்கள் துறையில் வருகைதரு பேராசிரியர்

ஆன்டிபயாடிக் - அடுத்த புயல்


அடுத்த புயல் தொடங்கியிருக்கிறது. ஆன்டிபயாடிக் எனப்படும் நோயுயிர்முறிகளைப் பற்றி மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நோயுயிர்முறிகளைக் கொண்டு அபாயகரமான கிருமிகளை நாம் அடக்கிவைத்திருப்பதாகவே வெகு காலமாக நம்பிக்கொண்டிருக்கிறோம். உலகின் முதல் நோயுயிர்முறியான பென்சிலின் மருத்துவத் துறையில் பெரும் புரட்சியைச் செய்தது. பென்சிலினைக் கண்டறிந்த அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்குக்கு நோபல் பரிசும் கிடைத்தது. மருந்துகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினால் நோய்க்கிருமிகளுக்கு மருந்து எதிர்ப்புத் திறன் ஏற்பட்டுவிடும் என்று அவர் அப்போதே எச்சரித்திருந்தார். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.
நிறைய நோயுயிர்முறிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுவந்தாலும் அவற்றைப் பொறுப்பற்ற விதத்தில் பயன்படுத்தியதன் காரணமாக மிகமிக வேகமாகவும் அளவுக்கு அதிகமாகவும் மருந்து எதிர்ப்புத் திறனை நோய்க்கிருமிகள் வளர்த்துக்கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா நோயுயிர்முறிகளையும் முறியடிக்கக்கூடிய 'சூப்பர் பக்ஸ்' என்றழைக்கப்படும் மகாகிருமிகள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. இருக்கும் மருந்துகளை முறையாகப் பயன்படுத்தாவிட்டாலும், புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்காவிட்டாலும் கொள்ளை நோய்களின் யுகத்துக்கே நாம் திரும்ப வேண்டியிருக்கும். இந்த அச்சத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில் உலகச் சுகாதார நிறுவனம், கிருமிகளின் மருந்து எதிர்ப்புத் திறன்குறித்து முதன்முதலாக வெளியிட்டிருக்கும் உலகளாவிய முதல் அறிக்கையும் இருக்கிறது. பாக்டீரியாக்களின் மருந்து எதிர்ப்புத் திறன் உலகின் அத்தனை பகுதிகளி லும் எப்படி ஒரு பெரும் மருத்துவப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது என்பதை அந்த அறிக்கை தெளிவாகத் தெரிவிக்கிறது. “ஒருங்கிணைந்த உடனடி நடவடிக்கைகள் இல்லையென்றால், முன்பெல்லாம் மிக எளிதாகத் தீர்க்கப்பட்ட நோய்கள்கூட மறுபடியும் கொல்லக்கூடியவையாக மாறக்கூடிய காலத்தை நோக்கி நாம் தள்ளப்பட்டுவிடுவோம்” என்று உலகச் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் உதவி இயக்குநர் கெய்ஜி ஃபுகுதா எச்சரித்திருக்கிறார். தொற்றுகள் ஏற்படாமல் தடுப்பது, தூய்மையான சுற்றுப்புறம், சுத்தமான குடிநீர் போன்றவற்றின் அவசியத்தையும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, இது மிகத் தீவிரமான பிரச்சினை. ஏனென்றால், வரவிருக்கும் காலத்தில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தல் இதுவாகத்தான் இருக்கும் என்று சர்வதேச அளவில் முக்கியமான மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் 'நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்’ (சி.டி.சி.) ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. ஒருபுறம், நோயாளிகளின் சுயசிகிச்சை இதற்குக் காரணம் என்றால், இன்னொருபுறம், சக்தி வாய்ந்த மருந்துகளை அளவுக்கு மீறியோ, தேவையற்ற சூழலிலோ மருத்துவர்கள் பரிந்துரைப்பதும், எந்தப் பரிசீலனையும் இன்றி நோயாளிகள் உட்கொள்வதும் இந்தியாவில் அதிகம். குறிப்பாக, 80 சதவிகித நோயுயிர்முறிகள் இந்தியாவில் தேவையற்ற வகையிலேயே பரிந்துரைக்கப்படுகின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை. இதே நிலை நீடித்தால், சாதாரண நோய்களுக்குக்கூடப் பெரும் விலை கொடுக்கும் சூழல் உருவாகும்.
இந்திய அரசின் உடனடி சிகிச்சை தேவைப்படும் நோய் இது

செவ்வாய், 13 மே, 2014

நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: எம்.எஸ். சுவாமிநாதன்

சுதந்திர இந்தியாவின் விஞ்ஞானிகளில் எம்.எஸ். சுவாமிநாதன் அளவுக்குக் கொண்டாடப்பட்டவரும் இல்லை; தூற்றப்பட்டவரும் இல்லை. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா பரிசீலனைப் பட்டியலிலும் நோபல் பரிசுப் பரிசீலனைப் பட்டியலிலும் தொடர்ந்து அவர் பெயர் இடம்பெறுகிறது. ‘டைம்' இதழ் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற 20 பேரில் ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்தது. ஒருபுறம் பசுமைப் புரட்சியின் தந்தை என்று புகழப்படும் அவர், இன்னொரு பக்கம் இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைச் சீரழித்தவர் என்ற சாபத்தையும் எதிர்கொள்கிறார். ஆட்சியாளர்கள் பலருடன் நெருக்கமாகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. இந்திய விவசாயம் - இந்திய விஞ்ஞானம் இரு துறைகளைப் பற்றியும் அவரிடம் பேசினேன்.
இன்றைக்கு உங்களைப் பற்றி இரண்டு கதைகள் சொல்லப்படு கின்றன. நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள்? இந்திய வேளாண்மையில் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தவராகவா? இந்தியப் பாரம்பரிய விவசாயத்தைச் சீரழித்தவராகவா?
நீங்கள் என்னுடைய பின்னணியைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய அப்பா சாம்பசிவம் பெரிய மருத்துவர். கும்பகோணத்தில் சொந்தமாக மருத்துவமனை வைத்திருந்தவர். அந்த மருத்துவமனையை அவருக்குப் பின் பார்த்துக்கொள்ள வேண்டும்; அதற்கேற்ப நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்றே என்னுடைய குடும்பத்தார் ஆசைப் பட்டார்கள். 1954-ல் நான் டெல்லியில் இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தபோது, எனக்கு முன் இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட வாய்ப்புகள் எல்லா வற்றையும் உதறிவிட்டுதான் உள்ளே நுழைந்தேன். அன்றைக் கெல்லாம் பலராலும் அவநம்பிக்கையோடு பார்க்கப்பட்டது விவசாய ஆராய்ச்சித் துறை. இருந்தும் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால், தேச பக்தி என்றால், அதை ஏதோ ஒரு விதத்தில் காரியமாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்த தலைமுறை என்னுடையது. வறட்சியையும் பஞ்சத்தையும் நேரடியாகப் பார்த்துத் துடித்த தலைமுறை என்னுடையது. இந்தியாவின் பிரதமர்கள் அன்றைக்கெல்லாம் நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய எவ்வளவு துடித்தார்கள் என்பதை நேருவின் எழுத்துகளைப் படித்தால் புரிந்துகொள்ள முடியும். சாஸ்திரி வாரத்தில் ஒருநாள் விரதம் இருக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்ட காலம் அது. இன்றைக்கு அபரிமித உணவு உற்பத்திக் காலத்தில் இதையெல்லாம் அறியாதவர்கள் யாரைப் பற்றியும் எதையும் பேசலாம்.
நாட்டில் அன்றைக்கு இருந்த உணவுப் பற்றாக்குறையையும் ஒரு வேளாண் புரட்சிக்கான தேவையையும் யாரும் மறுப்பதற் கில்லை. அதே சமயம், ஆயிரக் கணக்கான வருஷ விவசாயப் பாரம்பரியமிக்க நாடு இது. இப்படியொரு பிரச்சினைக்கான தீர்வுகளைத் தேடும்போது, நீங்கள் எந்த அளவுக்கு நம்முடைய பாரம்பரிய விவசாய முறைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டீர்கள்?
ஒரு ஆராய்ச்சியாளன், இருக்கும் ஆதாரங்களைத் தொடாமல் தன் ஆராய்ச்சியைத் தொடங்க முடியாது. அது போதாதபோதுதான் புதியவற்றை நோக்கி நகர்கிறான். புதிய ரகப் பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான். ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் ஏன் நமக்குத் தேவைப்பட்டன என்றால், அவைதான் நம் தேவையைப் பூர்த்திசெய்ய வல்லவையாக இருந்தன. ஒரு டன் நெல்லை உற்பத்திசெய்ய 20 கிலோ நைட்ரஜனும் 15 கிலோ பாஸ்பரஸும் வேண்டும். செயற்கை உரங்கள் என்றால், இது ஒரு மூட்டை போதும். இயற்கை உரங்கள் என்றால், வண்டி வண்டியாக வேண்டும். இன்றைக்கும் எரு நல்ல உரம்தான். ஆனால், வீட்டுக்குப் பத்து மாடுகள் வளர்ப்பது எத்தனை சிறு விவசாயிகளுக்குச் சாத்தியம்? அடிப்படையில் இந்த மனோபாவம் மோசமானது. எல்லாத் தரப்பினருக்கும் அறிவியலும் வளர்ச்சியும் மாற்றமும் வேண்டும்; விவசாயிகள் மட்டும் அப்படியே அன்றைக்கிருந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்பது. தபால் அனுப்புவதில்கூடத்தான் நமக்குப் பாரம்பரியம் இருக்கிறது - புறாவிடம் கொடுத்தனுப்பிய பாரம்பரியம். ஏன் நமக்கு செல்போன்கள்?
அப்படி என்றால், இந்திய விவசாயிகளிடத்தில் விஞ்ஞானிகள் கொண்டுவந்த பசுமைப் புரட்சியில் தவறே இல்லை என்கிறீர்களா?
இந்தப் பசுமைப் புரட்சி என்கிற சொல்லாடலிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அன்றைக்கு நாட்டின் தேவையைப் பூர்த்திசெய்ய நம்முடைய உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருந்தது. அதற்கேற்ற புதிய ரகப் பயிர்களையும் கூடுதல் மகசூல் தரும் சாகுபடி முறைகளையும் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளான நாங்கள் போராடினோம். நாங்கள் கண்டறிந்தவற்றைப் பரிந்துரைத்தோம். அவ்வளவுதான். அரசாங்கம் அதை நம் விவசாயிகளிடம் எடுத்துச்சென்றபோது, ஒரு கோடி டன்னாக இருந்த நம்முடைய உணவு உற்பத்தி இரண்டு கோடி டன்னாக உயர்ந்தது. இந்திரா காந்திதான் முதலில் அதைக் கோதுமைப் புரட்சி என்றார். கோதுமை மட்டும் அல்லாமல் நெல், பயறு வகைகள் எல்லாவற்றிலும் கூடுதல் உற்பத்தியைத் தரும் ரகங்களை நாங்கள் கொண்டுவந்திருந்ததால், வில்லியம் காட் என்ற அமெரிக்கர் அதைப் பசுமைப் புரட்சி என்றார். எல்லோரும் அதைப் பிடித்துக்கொண்டார்கள். உண்மையில், புதிய ரகப் பயிர்களிடமோ, நவீன வேளாண் முறையிலோ தவறு இல்லை; தவறு என்பது அவற்றை மனிதர்களாகிய நாம் பயன்படுத்திக்கொண்ட முறையில்தான் இருக்கிறது; மனிதனின் பேராசையில் இருக்கிறது. நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி.
அதீதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன் பாட்டைக் குறிப்பிடுகிறீர்களா?
ஆமாம். எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது. இவ்வளவுதான், இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. அந்த எல்லையை மீறும்போதுதான் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.
விவசாயிகள் கைகளில் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கொடுக்கும்போது அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுப்பது கடமை அல்லவா?
உண்மைதான். விவசாயிகளிடத்தில் இவற்றையெல்லாம் எப்படி, எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும்; கூடுதலாகப் போனால் என்னென்ன அபாயங்கள் நேரும் என்பதையெல்லாம் சொல்லிக்கொடுக்க நம்முடைய வேளாண் துறை ஒரு பெரும் இயக்கத்தை நடத்தியிருக்க வேண்டும். அதேசமயம், எல்லா விவசாயிகளுமே தெரியாமல்தான் கூடுதலாகப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்ல மாட்டேன். இந்தப் பயன்பாட்டில் அறியாமையும் இருக்கிறது; பேராசையும் இருக்கிறது.
இந்தியாவுக்கு மரபணு மாற்றப் பயிர்கள் தேவைதானா?
தேவை. ஆனால், அவற்றின் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன? மக்களிடத்தில் அவை கொண்டுசெல்லப்படும்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறதா என்பதை யெல்லாம் உறுதிப்படுத்த நமக்கு ஒழுங்குமுறைக் கட்டுப் பாட்டு அமைப்பு தேவை. முதலில் அது உருவாக்கப்பட வேண்டும்.
ஆனால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வட கிழக்கு இந்தியாவில் சாலையோரக் கடைகளில்கூட மரபணு மாற்றக் காய்கறிகள் விற்கப்படுகின்றன. விற்பவர்-வாங்குபவர் இரு தரப்பினருக்குமே அவை மரபணு மாற்றப் பயிர்கள் என்பது தெரியவில்லை. மக்கள் பரிசோதனைக் கூட எலிகளாக்கப்படுகிறார்கள்?
இது தவறு. அரசின் அமைப்புகள் மக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதி அளிக்க வேண்டும்.
சரி, ஜனநாயகத்துக்கு விஞ்ஞானிகளின் கடமை என்ன?
ஒரே கடமை. அது புதிய ரகப் பயிர் கண்டுப்பிடிப்பாக இருந்தாலும் சரி; கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை கண்டுபிடிப்பாக இருந்தாலும் சரி, அது மக்களின் நல்வாழ்வுக்கான பணி.
ஆனால், மக்கள் நலனுக்கு எதிரான விஷயங்கள் அவரவர் துறை களில் நடக்கும்போது பெரும்பாலும் இந்திய விஞ்ஞானிகள் ஏன் வாய்மூடிகளாக இருக்கிறார்கள்? அரசாங்கம் சொல்லித் தான் விஞ்ஞானிகள் ஒரு விஷயத்தில் இறங்குகிறீர்கள், நல்ல நோக்கத்துக்காகத்தான் அதைச் செய்கிறீர்கள் என்றாலும், காலப்போக்கில் அதன் விளைவுகள் தீமையை நோக்கிச் செல்லும்போது அதை மக்களிடம் தெரிவிப்பது கடமை இல்லையா?
அப்படி இல்லை. விஞ்ஞானிகள் எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசுகிறார்கள். ஆனால், பொதுவில் அவர்கள் அரசாங்கத்தைச் சார்ந்து இருப்பதை நாம் உணர வேண்டும்.
இந்திய விஞ்ஞானிகளின் பெரும்பாலான ஆராய்ச்சிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கங்கள்தான் வழி நடத்துகின்றனவா?
எல்லா நாடுகளிலுமே பன்னாட்டு நிறுவனங்கள் பணம் பண்ணவே ஆசைப்படுகின்றன. எல்லா நாடுகளிலுமே நாட்டுக்காக உழைக்கும் விஞ்ஞானிகள் நாட்டின் நலனையும் தேவையையுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் விஞ்ஞானம் தீர்மான சக்தி இல்லை. அரசியலும் பொருளாதாரமுமே தீர்மான சக்திகள்.
நவீன வேளாண் முறைக்கு மாறி அரை நூற்றாண்டு ஆகும் சூழலிலும்கூட, இந்திய விவசாயம் மெச்சக்கூடிய நிலையில் இல்லை. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தாலும் விவசாயிகளின் தற்கொலை அதிகரிக்கிறது, வேளாண் சாகுபடிப் பரப்பளவு வீழ்கிறது, விவசாயம் கொஞ்சம் கொஞ்ச மாக அழிந்துகொண்டிருக்கிறது... இவற்றையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தப் பிரச்சினைகளெல்லாம் விஞ்ஞானத்தினால் ஏற்பட்டவை அல்ல. அரசியலால் ஏற்பட்டவை. அரசாங்கங்கள் பின்பற்றும் கொள்கைகளால் ஏற்பட்டவை. விஞ்ஞானத்தையும் அரசியலையும் நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. அதே சமயம் ஒரு குடிமகனாக இந்திய விவசாயத்தைப் பற்றி எனக்கும் கவலைகள் இருக்கி்ன்றன. நான் இந்தப் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாமல் இல்லை. வேளாண் ஆணையம் வேண்டும் என்று நான் என்னென்ன விஷயங்களை அன்றைக்குச் சொன்னேனோ, அதைத்தான் இன்றைக்குப் பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். வேளாண் பொருட்களுக்கான விலை நிர்ணயம் என்பது இப்போது உற்பத்திச் செலவு + 15% என்று இருக்கிறது. இதை உற்பத்திச் செலவு + 50% என்று மாற்றுவதில் நாம் சீர்திருத்தத்தைத் தொடங்க வேண்டும். இந்திய விவசாயிகளின் பங்கு வெறுமனே வயலோடு முடியாமல், சந்தையும் அவர்கள் கைகளில் வர வேண்டும். விவசாயம் ஒரு கூட்டுத்தொழிலாக மாற வேண்டும். இந்திய விவசாயிகள் வளம்குன்றா வேளாண்மைக்கு மாற வேண்டும். இந்திய விவசாயத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவந்துவிட நம்மால் முடியும்.

விவசாயிகள்- நதிநீர் இணைப்புத் திட்டம்

நாடு முதன்முதலில் வளர்ச்சியை முன்னிறுத்தி ஒரு தேர் தலைச் சந்தித்திருக்கும் நிலையில், விவசாயிகள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அதாவது, 1951-ல் இந்தியாவின் மக்கள்தொகை 33 கோடி. அன்றைய உணவு உற்பத்தி 500 லட்சம் டன். இன்றைக்கு மக்கள்தொகை 120 கோடி. உணவு உற்பத்தி 2,630 லட்சம் டன். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உணவு உற்பத்தியை அதிகரித்துக்கொடுத்திருக்கிறான் இந்நாட்டு விவசாயி. ஆனால், இன்றைக்கு விவசாயத்தின் நிலையும் விவசாயிகளின் நிலையும் இந்நாட்டில் என்ன? ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான். அப்படியென்றால், இது ஒரு தேசிய அவமானம் இல்லையா? ஒவ்வொரு இந்தியரும் வெட்கப்பட வேண்டிய சமாச்சாரம் இல்லையா? உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றுகிறீர்களே, விவசாயியையும் விவசாயத்தையும் பாதுகாக்க சட்டம் வேண்டாமா?
வளர்ச்சி என்கிற வார்த்தைக்கு இன்றைக்கு ஏன் மக்களிடத்தில் இவ்வளவு மவுசு? அதற்கான ஆணிவேர் விவசாயத்தின் தோல்வியில் இருக்கிறது. நகரங்களில் வளர்ச்சி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமோ, எனக்குத் தெரியாது. கிராமங்களில் எனக்குத் தெரிந்து ஒரே அர்த்தம்தான்... பிழைப்பு. அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்விக்கான துருப்புச்சீட்டாகத்தான் வளர்ச்சி என்கிற வார்த்தையை விவசாயிகள் பார்க்கிறார்கள். ஆனால், நாட்டின் அரசியல் கட்சிகள் விவசாயிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விளிம்புநிலையை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கின்றன என்பதற்கு உதாரணம் இந்தத் தேர்தலையொட்டி வெளியிடப் பட்டிருக்கும் தேர்தல் அறிக்கைகள். விவசாயத்தை மீட்டெடுக் கும் எந்தத் திட்டமும் எந்தக் கட்சியிடமும் இல்லையே?
அரசியல் கட்சிகளிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்?
விவசாயத்தை அணுகும் பார்வையிலேயே மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதுவரையிலான விவசாயக் கொள்கைகள் விவசாய உற்பத்தியையே மைய மாகக் கொண்டிருந்தன. இனி அவற்றை விவசாயிகள் நலனை மையமாகக் கொண்டவையாக மாற்ற வேண்டும்.
எப்படி?
இந்திய வேளாண் துறையை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையாக உருமாற்ற வேண்டும். நாட்டின் நிதிநிலை அறிக்கையில் 20% இத்துறைக்கென ஒதுக்கப்பட வேண்டும். அந்தத் தொகை விவசாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் விவசாயிகள் நலத்திட்டங்களுக்கும் சரிபாதியாய்ப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். விவசாயத்துக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட வேண்டும். இந்தியாவின் அத்தனை நதிகளைகளையும் தேசியமயமாக்க வேண்டும். ஒவ்வொரு நதியின் தொன்மையான பாசன உரிமைகளையும் பயன்பாட்டையும் உறுதிசெய்து, உபரிநீரை மாநிலங்களிடையே பகிர்ந்துகொள்ள வகைசெய்யப்பட வேண்டும். அணைகள் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேசிய விவசாயிகள் ஆணையப் பரிந்துரைப்படி, எல்லா விவசாய விளைபொருட்களுக்கும் மொத்த உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தபட்சம் 50% கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விளை விக்கும் விளைபொருட்களை அங்கேயே மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றிடும் வகையில், வேளாண் தொழிற் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். விவசாயிகள் அவற்றில் பங்குதாரர்களாக்கப்பட வேண்டும். இப்படி நிறைய தேவைகள், எதிர்பார்ப்புகள் எங்களுக்கு இருக்கின்றன. முக்கியமாக விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசியல் கட்சிகள் தீர யோசித்து ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். உதாரணமாக, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் உண்மையான நிலை எங்களுக்கு இன்றுவரை புரியவில்லை.
உங்கள் தேவைகளில் முதலாவதும் உடனடியானதும் எது?
நதிநீர் இணைப்பையே சொல்லலாம். இந்திய நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது 14,900 கி.மீ. நீள இணைப்புத் திட்டம். 37 ஆற்று இணைப்புகள், 3,000 அணைகள் இத்திட்டத்தில் உருவாக்கப்படும் என்று சொல்கிறார்கள். அப்படி நடந்தால், 350 லட்சம் ஹெக்டேர் சாகுபடிக்கு அது உதவும்; 34 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யலாம் என்கிறார்கள். இந்தியாவின் சாகுபடிப் பரப்பு 1,410 லட்சம் ஹெக்டேர். இதில் 40% பரப்புக்குத்தான் நீர்ச் சாகுபடி வசதி இருக்கிறது. மீதி எல்லாம் மானாவாரி. இத்தகைய சூழலில், நதிநீர் இணைப்பு நடந்தால் எவ்வளவு பெரிய மாற்றம் வரும் பாருங்கள். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே தீவிரமாகப் பேசப்பட்ட விஷயம் இது. வாஜ்பாய் காலத்தில் ரொம்பவே பேசினார்கள். அப்புறம் ராகுல் காந்தி இது வேண்டாம் என்று சொன்னதும் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் இந்தப் பேச்சையே கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது மீண்டும் பேச ஆரம்பிக்கிறார்கள். உள்ளபடி நிலை என்ன? எங்களுக்குத் தெரிய வேண்டும்.
ஆனால், நதிநீர் இணைப்புத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு மாபெரும் கேடாகும் என்று சொல்லப்படுகிறதே? மேலும், இதற்காக லட்சக் கணக்கான ஹெக்டேர் நிலங்களைக் கையகப் படுத்துவதுடன் பல லட்சம் விவசாயிகளை அவர்கள் வாழிடங் களிலிருந்து அகற்ற வேண்டும். அவர்களும் விவசாயிகள்தான் இல்லையா?
இத்திட்டத்துக்காக 7.65 லட்சம் ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும்; 15 லட்சம் மக்களை அந்தப் பகுதிகளிலிருந்து அகற்ற வேண்டும் என்கிறார்கள். சுதந்திரம் அடைந்த காலகட்டத்திலிருந்து இதுவரை ஆறு கோடி மக்கள் இந்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். கடந்த பத்து பதினைந்தாண்டுகளில் மட்டும் பெருநிறுவனங்களின் திட்டங்களுக்காக அரசு கையகப்படுத்தியிருக்கும் நிலம் 7.3 லட்சம் ஹெக்டேர். ஆகையால், இந்தக் காரணங்களெல்லாம் சரியானவை அல்ல. உண்மையாகவே இத்திட்டம் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று உறுதிசெய்யப்பட்டால் அதை நாம் கைவிடலாம். ஆனால், அப்படி யாரும் உறுதிசெய்யவில்லையே? ஒருவேளை சூழலைப் பாதிக்கும் என்றால்கூட, இத்தனை பெரிய அளவில் இல்லாமல், சூழலுக்கு உகந்த வகையில் நிச்சயம் சிறுசிறு அளவிலேனும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை நாம் நிறைவேற்ற முடியும். நாட்டின் எல்லா நதிகளையும் சேர்த்தால், நம்முடைய நீராதாரம் 65,450 டிஎம்சி. இதில் 17,500 டிஎம்சி தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறோம். தண்ணீர் விற்கப்படும் ஒரு நாட்டில், 70 கோடி மக்கள் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில் இதை யோசிப்பது அவசியம் இல்லையா? இதேபோலத்தான், நதிகளைத் தேசியமயமாக்குவதும். நதிகள் தேசியமயமாக்கப்படவில்லை என்றால், இந்தியா சிதையும்.
மாநிலங்களின் உரிமைகளுக்கு உட்பட்டு நதிநீர்ப் பங்கீட்டை நியாயமாகச் செய்துகொள்ள முடியாது என்கிறீர்களா?
நிச்சயம் முடியாது. மாநிலப் பிரிவினையின்போது, முல்லைப்பெரியாறு அணை இருந்த பகுதி கேரளத்தோடு சேர்க்கப்பட்டபோது இங்கு எதிர்த்தவர்களிடம், ‘கேரளமும் இந்தியாதான்' என்று கடிந்துகொண்டார் காமராஜர். இன்றைக்கு அப்படிப்பட்ட தலைவரை இந்தியாவில் எங்காவது காட்ட முடியுமா?

ஞாயிறு, 11 மே, 2014

வாக்களிக்காத குடியரசுத் தலைவர்

மக்களவைப் பொதுத் தேர்தலில் வாக்களிக்காத குடியரசுத் தலைவர்களின் பட்டியலில் பிரணாப் முகர்ஜியும் சேரவிருக்கிறார். இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம்: “குடியரசுத் தலைவர் கள் தங்களுடைய நடுநிலையைக் காப்பதற்காகத் தேர்தலில் வாக்களிப் பதில்லை.”
தெற்கு கொல்கத்தாவில் வாக்காளராகத் தன்னைப் பதிவுசெய்து கொண்டுள்ளார் முகர்ஜி. அவர் வாக்களிப்பதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில்தான் “இதற்கு முன்னர் பதவிவகித்த குடியரசுத் தலைவர்களில் பெரும்பாலானவர்களின் அடியொற்றி, நடுநிலையைக் காக்க, வாக்களிப்பதில்லை என்ற முடிவை பிரணாப் முகர்ஜி எடுத்திருக்கிறார்’’ என்று அவருடைய பத்திரிகைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
காலாவதியான, அர்த்தமற்ற ஒரு மரபுக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக் கிறார் முகர்ஜி. 1998-ல் கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலை வராகப் பதவிவகித்தபோது, டெல்லியில் ஒரு வாக்குச்சாவடியில் இதர வாக்காளர்களுடன் அவரும் நின்று வாக்களித்து, ஒரு முன்னு தாரணத்தை ஏற்படுத்தினார். அவருக்குப் பிறகு அப்துல் கலாமும், பிரதிபா பாட்டீலும்கூட வாக்களித்தனர். அவர்களையெல்லாம் நடுநிலை தவறியவர்கள் என்று யாரும் குற்றம்சாட்டவில்லை.
அரசு தெருவுக்குத் தெரு, “வாக்களிப்பது உங்கள் கடமை” என்று நாட்டு மக்களுக்குத் தேர்தல் ஆணையம் மூலம் அறிவுறுத்திக்கொண்டு அதற்காகக் கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு விளம்பரப் படுத்திக்கொண்டிருக்கும்போது, முன்னுதாரணமாக இருக்க வேண்டிய முதல் குடிமகன் வாக்களிக்காததும் அதற்கு நடுநிலையைக் காரணம் கற்பிப்பதும் எந்த வித நியாயம்? மேலும், நாட்டை இந்தக் கட்சிதான் ஆள வேண்டும் அல்லது இவர்கள் ஆளக் கூடாது என்று வாக்களிப்பது எப்படி நடுநிலை தவறியதாகும்?

வியாழன், 8 மே, 2014

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 மையங்களில், பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் விற்பனை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு 2,35,211 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. ஆனால், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்கள் 1,90,850 பேர். அதாவது சுமார் 45,000 பேர் விண்ணப்பங்களை வாங்கியதுடன் சரி. பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்களில் 1,84,930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. கலந்தாய்வு மூலம் 1,26,485 பேருக்கு கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. இவ்வளவுக்கு பின்னர் பொறியியல் கல்லூரிகளில் 79,008 காலியிடங்கள் இருந்தன. இந்த ஆண்டில் பிளஸ் 2 பொது தேர்வை சுமார் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

வழக்கம்போல் இவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை வாங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், எல்லோருமே விண்ணப்பங்களை சமர்ப்பிப்பார்களா என்பது சந்தேகமே. கல்வியை காசாக்கக் கூடாது என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பத்தில் இருந்தே பொறியியல் கல்லூரி படிப்பை காசாக்குகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களிடமே ரூ. 200 வசூலிக்கிறது. மற்ற பிரிவு மாணவர்களுக்கு ரூ. 500.
இணையதளத்தில் எவ்வளவோ வசதிகள் வந்துவிட்ட நிலையில், சரியான வழிகாட்டுதல்களுடன் விண்ணப்பத்தை இலவசமாக இணையத்தில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினால், மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 50ல் செலவு முடிந்துவிடும். இதுவும் வீட்டிலேயே இணையதளத்தை வைத்திருப்பவர்களுக்கு இவ்வளவு செலவு கூட வராது. இதனால் லட்சக்கணக்கான காகிதங்கள் வீணாக்கப்படுவதை தடுத்து சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடியும்

ஆன்டிபயாடிக்ஸ்

உலகளவி¢ல் இந்த நிறுவனம் 114 நாடுகளில் மேற்கொண்ட முதல் விரிவான ஆய்வில்தான், நோய் எதிர்ப்பு சக்தி என்கிற மருந்து இனி செயல்படாது. அதை விட கூடுதல் சக்தியுடன் நோய்களை பரப்பும் ‘சூப்பர் பக்’ என்கிற கிருமியின் செயலாற்றல் உள்ளது என்கிற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

‘சூப்பர் பக்’ என்கிற நோய் பரப்பும் கிருமி எப்படி சக்தி வாய்ந்ததாக வளர்ந்து மனித குலத்திற்கு எமனாக மாறியிருக்கிறது என்கிற தகவல்தான் அதிர்ச்சி அளிக்கிறது. மனித தவறுகள் குறிப்பாக சுகாதாரமின்மை மற்றும் வணிகநோக்கம் ஆகியவையே இதற்கு முக்கிய உள்காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள், அந்த நோயை குணப்படுத்துமா என்பதை உறுதிப்படுத்தாமல், சில மருத்துவர்களால் வழங்கப்படுகின்றன. தேவையில்லாத நிலையிலும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை நோயாளிகளுக்கு அளிப்பது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து தட்டுப்பாடு காரணமாக, இருப்பில் இருக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு தருவதும், ஓவர் டோஸ் மற்றும் குறைந்த டோஸ் மருந்து, மருந்துகளை உரிய காலத்திற்கு நோயாளிகள் எடுத்துகொள்ளாத நிலைகள்தான் ஆன்டிபயாடிக்ஸ் செயல் இழந்துபோன நிலைக்கு காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டி காட்டியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் சிறு நோய்கள் மற்றும் தொற்று நோய் பாதிப்பு என்கிற சிறு விஷயங்களுக்கு கூட மனிதன் மரணம் அடைய வேண்டும்.

உலகளவில் மனிதனை மிரட்டும் இந்த பிரச்னை, இந்தியாவை பொறுத்தவரை வேறுமாதிரியாக இருக்கின்றன. வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்கப்படுகின்றன. அதேபோல எட்டாம் வகுப்பு படித்தவர்கள் மருத்துவர்களாக நடமாடும் நிலை. தரமற்ற தயாரிப்பு மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை பயன்படுத்துவதில் கவனமின்மை ஆகிய காரணங்களும் உள்ளன. குறிப்பாக நோயாளிகளிடம் நோயின் தன்மை, மருத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் வேலை செய்யாத நிலையில், இறுதியாக நாம் அப்படியே சாக வேண்டுமா என்ன? தேவையில்லை அதற்கும் ஒரு வழியை சொல்லியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

குறிப்பாக, உரிய காலத்தில் தடுப்பு ஊசிகளை பயன்படுத்துவது. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையில்லாத சத்து மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது. நோயின் தன்மையை நுணுக்கமாக அறிந்து சிகிச்சை அளிப்பது என்று செயல்பட்டாலே நோய் எதிர்ப்பு சக்தி மனிதன் உடம்பில் அதிகமாக இருக்கும். அதைவிட செலவில்லாமல் ஒரு வழிமுறையை அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆம், கை கழுவிவிட்டு சாப்பிடுங்கள். அதுதான் எல்லா நோய்களுக்கும் ஆரம்பப் புள்ளி. எமனை கையில் வைத்து கொண்டு கை கழுவி அதை துரத்தாமல், ஆன்டிபயாடிக்ஸ் மருந்து எடுக்க முயற்சிக்கலாமா. மருந்துக்கு விடைகொடுப்போம். சுத்தத்தை வரவேற்போம்.