புதன், 25 ஜூன், 2014
செவ்வாய், 24 ஜூன், 2014
கெஜ்ரிவால் அரசியல்
வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். முதல் தேர்தலிலேயே அவருடைய ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் வென்றிருக்கும் 28இடங்கள்; ஆளும் காங்கிரஸை வெறும் எட்டு இடங்களுடன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளி, மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்துக்கு 25ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கொடுத்த தோல்வி, எல்லாவற்றுக்கும் மேல், டெல்லியில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டின் அரசியல் போக்கையும் அவர் தீர்மானிக்கும் வியூகம்… சந்தேகமே இல்லாமல் கவனிக்கப்பட வேண்டியவர் கெஜ்ரிவால்.
கெஜ்ரிவால் ஆம்ஆத்மியைத் தொடங்கியபோது, அவருடைய அரசியல் நோக்கங்கள்பற்றி விரிவாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்மீது பரவலாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள்பற்றி கேட்ட மூன்று கேள்விகள் இவை.
கெஜ்ரிவால் அளித்த பதில்கள் இவை:
லட்சம் கீரிப்பட்டிகள்
கெஜ்ரிவால் குறிப்பிடுவதுபோல, ஊழல்தான் தலையாய பிரச்சினை என்று வைத்துக்கொண்டாலும், அதிலும் சிக்கல் இருக்கிறது. எது ஊழல் என்பதே மறுவரையறைக்குள்ளாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். “அரசாங்கம் கொள்கை முடிவெடுப்பதில் தவறிழைப்பது (கனிம வள ஒதுக்கீடுகளில் முறைகேடு நடப்பது) குற்றம் அல்ல; இதைப் புலனாய்வு அமைப்புகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பிரதமரும் “இன்னமும்கூடக் கொள்கை முடிவுகளுக்கும் ஊழல்களுக்கும் வித்தியாசமே தெரியாமல்தான் இருக்கிறோம் நாம். ஓர் அருமையான கொள்கை முடிவு என்பது மோசமான ஊழலாக இருக்கலாம்; ஒரு மோசமான கொள்கை முடிவு ஊழலற்றதாக இருக்கலாம்” என்று அமைச்சர்களும் பகிரங்கமாகப் பாடம் எடுக்கும் காலகட்டம் இது.
நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவர் கெஜ்ரிவால்; ஆனால், முன்மாதிரி என்று கொண்டாட அவர் செல்ல வேண்டிய பயணம் மிக நீண்டது; இன்னும் அந்தத் திசையையே அவர் பார்க்கவில்லை. சித்தாந்தரீதியிலான வலுவும் தெளிவுமில்லாத மக்கள் திரளும் அவர்களுடைய அரசியலும் ஒருபோதும் நீடித்த தீர்வுக்கு வழிவகுப்பதில்லை; அவை சரியான முன்மாதிரிகளாகவும் இருப்பதில்லை. வரலாறும் சமீபத்திய ‘அரபு வசந்தப் புரட்சி’களும்கூட அழுத்திச் சொல்வது அதைத்தான்.
அதே சமயம், தேசிய ஊடகங்கள் சித்தரிக்கும் ‘இந்திய பாணி அரபுப் புரட்சி’யா இந்த வெற்றி? அமார்த்திய சென் சொல்வதுபோல, மிக முக்கியமான புறப்பாடா? ராகுல் சொல்வதுபோல, ஆம்ஆத்மியிடமிருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமா? சில அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோல,இடதுசாரிகள் பரிசீலிக்க வேண்டிய சித்தாந்தமா ஆம்ஆத்மியின் சித்தாந்தம்? சுருக்கமாக, இந்தியாவின் பெரும்பான்மை ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் கொண்டாடும் முன்மாதிரியா கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசியல்?
நாம் நிறைய உணர்ச்சிவசப்படுகிறோம் என்று தோன்றுகிறது.
தனி சாமானியனா?
முதலில் ‘இது ஒரு சாமானியனின் எழுச்சி; இந்தியாவில் ஒரு சாமானியன் நினைத்தால், என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் கெஜ்ரிவால்’ என்ற கூற்றே அபத்தமானது. டெல்லியின் அதிகாரவர்க்கப் பின்னணியில் வெளிவந்தவர் கெஜ்ரிவால். ‘மகசேசே’ விருதுக்குப் பின் ஊடகங்களுக்கும் மிக நெருக்கமானார். அண்ணா ஹசாரே இயக்கப் போராட்டங்களில் ஊடகங்கள் என்ன ஆட்டம் ஆடின என்பது நமக்குத் தெரியும். கிட்டத்தட்ட அந்தப் போராட்டங்களைத் தேசிய ஊடகங்கள் பின்னின்று இயக்கின. அண்ணா ஹசாரே மவுசு போன பிறகு, கெஜ்ரிவாலை அவை வாரி அணைத்தன. ஓராண்டுக்கு முன் இதே காலகட்டத்தில், ராபர்ட் வதேரா, சல்மான் குர்ஷித், நிதின் கட்காரி என்று வாரம் ஒரு தலையின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியபோது, நாட்டின் 24 மணி நேரச் செய்தித் தொலைக்காட்சிகள் எந்நேரமும் கெஜ்ரிவாலே கதி என்று கிடந்ததும் அவருடைய போராட்டங்கள் பலவும் ஊடகங்களுக்குத் தீனி போடும் வகையில் வடிவமைக்கப்படுவதும் இங்கு நினைவுகூரத் தக்கவை. எப்படியும் அரசியல் வர்க்கம் நினைத்தவுடன் தூக்கி உள்ளே போடும், காணாமல் ஆக்கும் ஒரு சாமானியர் அல்ல கெஜ்ரிவால்.
மூன்று கேள்விகள்
கெஜ்ரிவால் ஆம்ஆத்மியைத் தொடங்கியபோது, அவருடைய அரசியல் நோக்கங்கள்பற்றி விரிவாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்மீது பரவலாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள்பற்றி கேட்ட மூன்று கேள்விகள் இவை.
1. இந்தியா லட்சக்கணக்கான கிராமங்களில் இருக்கிறது. நீங்கள் டெல்லியில் இருந்தே அரசியல் நடத்திவிடலாம் என்று நினைக்கிறீர்களா?
2. முதலாளித்துவமும் தனியார்மயமும் நாட்டையே சூறையாடுகிறது. சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் சாதியம் உறைந்திருக்கிறது. நீங்களோ ஊழலை மட்டுமே பெரும் பிரச்சினையாக முன்னிறுத்துகிறீர்கள். இது சரியா?
3. மக்களே அற உணர்வுகளைப் பொருட்படுத்தாதபோது, அரசியல்வாதிகள் மட்டும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
கெஜ்ரிவால் அளித்த பதில்கள் இவை:
1. டெல்லியில் நாங்கள் தொடங்கியிருக்கிறோம். ஆனால், அதன் வீச்சு காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரி வரை எதிரொலிக்கிறது. இந்தியாவின் எந்தக் கிராமத்துக்கு வேண்டுமானாலும் நீங்கள் சென்று பாருங்கள். எங்கள் போராட்டங்களைக் கிராம மக்கள் சொல்வார்கள்;
2.நீங்கள் குறிப்பிடும் எல்லாப் பிரச்சினைகளுமே இருக்கின்றன என்றாலும், ஊழல்தான் பிரதானமானது. ஏனென்றால், நான்கு பேர் இருக்கும் இடத்தில்,இருவர் சாதியக் கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஒருவர் முதலாளித்துவத்தாலும் இன்னொருவர் தனியார்மயத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், நால்வருமே ஊழலால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்;
3. உலகிலேயே சிறந்த குடிமக்கள் நம்மவர்கள். அரசியல்வாதிகள்தான் கெடுக்கிறார்கள்.
அந்த நீண்ட உரையாடலுக்குப் பின், கெஜ்ரிவால் ஒரு லட்சியவாதியாகத் தெரிந்தாரேயன்றி கள யதார்த்தவாதியாகத் தெரியவில்லை.
லட்சம் கீரிப்பட்டிகள்
டெல்லிகள் அல்ல; பல்லாயிரம் பாப்பாபட்டிகள், கீரிப்பட்டிகள், திருமங்கலங்களின் தொகுப்புதான் இந்தியா. இதன் சகல பிரச்சினைகளின் ஆணி வேர் சாதியத்திலும் இனவாதத்திலும் பிணைந்திருக்கிறது. அரசியல்வாதி என்று கெஜ்ரிவால் குறிப்பிடுவது ஏதோ நூறு பேர் அல்ல; இந்தியாவின் குடியரசுத் தலைவர் முதல் ஊராட்சி உறுப்பினர் பதவியிடம் வரை கணக்கில் எடுத்தால், வேட்பாளர்கள் எண்ணிக்கை மட்டுமே சில கோடிகளைத் தாண்டும் (நாட்டில் உள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை மட்டும் 2.65 லட்சம்). இந்த அரசியல்வாதிகள் எங்கிருந்து வருகிறார்கள்? மக்கள் என்ற தொகுப்பில் இவர்கள் சேர்த்தி இல்லையா? ஓர் ஆசிரியர் பாடம் நடத்தாமல் வட்டித் தொழில் செய்யலாம்; மருத்துவர் கூடுதல் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்; வியாபாரி கலப்படம் செய்யலாம்; இதே சமூகத்திலிருந்து வரும் அரசியல்வாதி மட்டும் நேர்மையாக இருக்க வேண்டும்?
எது ஊழல்?
கெஜ்ரிவால் குறிப்பிடுவதுபோல, ஊழல்தான் தலையாய பிரச்சினை என்று வைத்துக்கொண்டாலும், அதிலும் சிக்கல் இருக்கிறது. எது ஊழல் என்பதே மறுவரையறைக்குள்ளாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். “அரசாங்கம் கொள்கை முடிவெடுப்பதில் தவறிழைப்பது (கனிம வள ஒதுக்கீடுகளில் முறைகேடு நடப்பது) குற்றம் அல்ல; இதைப் புலனாய்வு அமைப்புகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பிரதமரும் “இன்னமும்கூடக் கொள்கை முடிவுகளுக்கும் ஊழல்களுக்கும் வித்தியாசமே தெரியாமல்தான் இருக்கிறோம் நாம். ஓர் அருமையான கொள்கை முடிவு என்பது மோசமான ஊழலாக இருக்கலாம்; ஒரு மோசமான கொள்கை முடிவு ஊழலற்றதாக இருக்கலாம்” என்று அமைச்சர்களும் பகிரங்கமாகப் பாடம் எடுக்கும் காலகட்டம் இது.
அதாவது, ஐந்து லட்சம் கோடி ரூபாய் சுரங்கங்களையோ, அலைக்கற்றையையோ சில ஆயிரம் கோடிகளுக்குத் தனியாருக்கு ஒதுக்கினால் கொள்கை முடிவு; இப்படி ஒதுக்குவதற்காகச் சில நூறு கோடிகளுக்குக் கைநீட்டிச் சிக்கிக்கொண்டால் மட்டுமே அது ஊழல். கெஜ்ரிவால் இதுவரை கடுமையாக எதிர்க்குரல் கொடுத்திருப்பது இந்த ஊழலுக்கு எதிராகத்தான். இந்தப் பின்னணியிலேயே கெஜ்ரிவாலுக்கு பெருநிறுவனங்களின் மறைமுக ஆசி கிடைக்கிறது.
முதல்வன் பாணி அரசியல்
உண்மையில் கெஜ்ரிவால் முன்வைக்கும் அரசியல், இயக்குநர் ஷங்கரின் ‘முதல்வன்’ பட பாணியிலானது. மக்கள் எல்லோரும் நல்லவர்கள்; மேலே உள்ள ஒரேயொரு அரசியல்வாதி மாறினால்கூடப் போதும்; நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொல்லும் அரசியல். அண்ணா ஹசாரே இயக்கக் கூட்டங்களுக்கு நேரில் சென்றவர்களுக்கு ஒரு விஷயம் புரியும். சாமியார்கள் நடத்தும் ‘அற்புத சுகமளிக்கும் கூட்டம்’ பாணி கூட்டங்கள் அவை. எங்கும் தேசியக் கொடி, பெரிய பெரிய திரைகளில் ‘தேசிய உணர்வை’த் தூண்டும் பாடல்கள், தொடர் முழக்கங்கள், நாஜிக்கள் ஹிட்லரின் வருகைக்கு முன் உருவாக்குவதாகச் சொல்லப்படும் உணர்ச்சி அலையைப் பிரதிபலிப்பவை அவை.
இந்த அரசியலில் முக்கியமான அம்சம் என்னவென்றால், நீங்கள் தீவிரமான போராட்ட அரசியலில் இறங்கினால், உருவாகும் எந்த இழப்பும் அபாயமும் உங்களுக்குக் கிடையாது. முக்கியமாக, உண்மையான அரசியலில் இறங்காமலேயே அரசியலில் பங்கேற்கலாம். 70 வயதுக் கிழவர் உண்ணாவிரதம் இருந்தால், சில மணி நேரம் போராட்ட மைதானத்துக்குச் சென்று, வேளாவேளைக்குக் கொடுக்கப்படும் சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கொண்டே ‘போராடலாம்’; நடனம் ஆடத் தெரிந்தால், மும்பை ரயில் நிலையம் சென்று நடனம் ஆடிப் ‘போராடலாம்’.
அலைகளின் வரலாறு
கெஜ்ரிவால் வெற்றிக்கு முக்கியக் காரணம், மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்ட காங்கிரஸின் ஊழல்கள் ஏற்படுத்திய வெறுப்பு. தமிழக அரசியல் பின்னணியில், விளக்க வேண்டும் என்றால், 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க-வுக்கு எதிராக வீசிய ஊழல் எதிர்ப்பு அலையோடு பொருத்திப் பார்க்கத் தக்கது இது (ஊழலுக்கு எதிராகப் பேசி காங்கிரஸிலிருந்து பிரிந்து மூப்பனார் தொடங்கிய த.மா.கா., தி.மு.க-வோடு சேர்ந்து தான் போட்டியிட்ட 39 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 20 மக்களவைத் தொகுதிகளிலும் அப்போது வென்றது; பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா தோற்றார்). இந்திய வரலாற்றில், தேர்தல்களில் ஆதரவு அல்லது எதிர்ப்பு அலை வீசும்போது அதன் வீச்சிலிருந்து வெற்றி - தோல்விகளை ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது.
பாடம் எங்கே கற்பது?
நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவர் கெஜ்ரிவால்; ஆனால், முன்மாதிரி என்று கொண்டாட அவர் செல்ல வேண்டிய பயணம் மிக நீண்டது; இன்னும் அந்தத் திசையையே அவர் பார்க்கவில்லை. சித்தாந்தரீதியிலான வலுவும் தெளிவுமில்லாத மக்கள் திரளும் அவர்களுடைய அரசியலும் ஒருபோதும் நீடித்த தீர்வுக்கு வழிவகுப்பதில்லை; அவை சரியான முன்மாதிரிகளாகவும் இருப்பதில்லை. வரலாறும் சமீபத்திய ‘அரபு வசந்தப் புரட்சி’களும்கூட அழுத்திச் சொல்வது அதைத்தான்.
உலகில் சாமானியர்களிலும் சாமானியர்களை அரசியலை நோக்கி அழைத்து வந்த காந்தி இருந்த இயக்கம் காங்கிரஸ்; சுதந்திரம் அளித்த சர்வ வல்லமையுடன் ஆட்சிக்கு வந்த காங்கிரஸுக்கு அந்நாளிலேயே சிம்ம சொப்பன சாமானிய அரசியலைத் தந்தவர்கள் இடதுசாரிகள். காங்கிரஸும் இடதுசாரிகளும் படிக்க வேண்டிய பாடம் கெஜ்ரிவாலிடம் இல்லை; அவர்களுடைய வரலாற்றிலேயே இருக்கிறது!
‘தி இந்து’, டிச. 2013
முப்பது மைல் தூரத்துக்கு ஒரு சாவடி அமைத்து சுங்கக் கட்டணம்
சென்னையில் ஓடும் ஆட்டோ ரிக்ஷாக்கள் சிலவற்றில் ‘பிரசவத்துக்கு இலவசம்' என்று போடப்பட்டிருக்கும். வண்டியில் அத்தகைய விளம்பரம் செய்திருக்கும் ஓட்டுநரைப் பார்த்து மரியாதை செய்யத் தோன்றும். மனிதாபிமானம் மலிந்துவிட்ட இந்நாட்களில் இப்படியும் சில ஜீவன்கள் இருக்கிறார்களென்பது வியக்க வைக்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்னாலும் இந்நாட்டில் அப்படிப்பட்ட செயலொன்றைச் செய்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. கர்ப்பிணிப் பெண்களைப் படகுகளில் இலவசமாக ஏற்றிச்செல்ல வேண்டுமென்ற கட்டளை கௌடில்யரால் அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செலவற்ற போக்குவரத்தை அனுமதித்த ஜீவகாருண்யச் செயல்கள் இன்று அடையாளபூர்வமாகிவிட்டன.
பள்ளிக்கூட வரலாற்றுப் பாடங்களில் இந்தியப் பேரரசர்கள் பலர் நாட்டுக்குச் செய்த நன்மைகளின் பட்டியலில் நிச்சயம் நெடுஞ்சாலைகள் அமைத்து அதன் இருபுறமும் நிழல்தரும் மரங்களை வளர்த்து, பயணம் செய்வோர்க்கு உதவினர் என்பதும் இருக்கும். சாலையில் வாகனப் பயணம் மேற்கொள்வோரிடம் முப்பது மைல் தூரத்துக்கு ஒரு சாவடி அமைத்து சுங்கக் கட்டணம் வசூல் செய்வதுதான் 21-ம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பு. வாகனங்கள் தடங்கலின்றிச் செல்ல முறையான சாலைகள் அமைத்து, உரிய முறையில் அவற்றை மேற்பார்வை செய்யும் அதிகாரம் அரசமைப்புச் சட்டப்படி மாநில அரசுகளைச் சார்ந்ததே. சாலைகளில் பயணிக்கும் வாகன உரிமையாளரிடமிருந்து மோட்டார் வாகன வரி வசூலிக்கப்பட்டு, அதன் மூலம் மாநில அரசுகள் சாலைகளைப் பராமரித்தன. மோட்டார் வாகன வரியைத் தவிர, நுழைவு வரி போன்ற வேறு சில மறைமுக வரிகளை விதிக்க முற்பட்ட மாநில அரசுகளின் சட்டங்கள் நீதிமன்றங்களின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. மாநில அரசுகள், தங்களது உள்ளாட்சி எல்லைகளினூடே வாகனங்கள் பெருமளவில் வந்துசெல்வதனால் சாலைகளுக்கு ஏற்படும் சேதாரங்களை ஈடுகட்டவும் சாலைகளைப் பராமரிக்கவும் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு வரி என்று பெயரிடப்பட்டிருந்தாலும் உண்மையிலேயே அவை சேவைக் கட்டணங்களே என்று வாதிட்டன. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வணிக நோக்கத் துக்காக இந்தியா முழுவதும் தடையின்றிப் பொருட் களை எடுத்துச்செல்ல வர்த்தகர்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருப்பதனால், நீதிமன்றங்கள் சாலையில் செல்வோரிடம் மாநில அரசுகளின் வரிச் சட்டங்களைக் கூர்மையாக ஆராய்ந்தன.
நுழைவு வரி என்பது வரியல்ல. அது ஒரு சேவைக் கட்டணம் என்ற அடிப்படையில் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்படுத்தி அந்தச் சட்டங்கள் செல்லத் தக்கன என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. வரி விதிப்பதற்கும், சேவைக் கட்டணம் வசூல்செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றங் கள், மாநில அரசு வசூலிக்கும் சேவைக் கட்டணம் உண்மையிலேயே அதற்காகக் கூறப்பட்ட காரணத் துக்காகவே செலவழிக்கப்படுகிறதா அல்லது அவை மறைமுக வரிகளா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரமும் நீதிமன்றங்களுக்கு உண்டென்று அறிவித்தன. மாநிலங்கள் இயற்றிய சட்டங்களைத் தவிர, மத்திய அரசும் தேசிய நெடுஞ்சாலை சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றியது. தேசிய நெடுஞ்சாலைகள் மாநில எல்லைகளையும் தாண்டிச்செல்வதால் அவற்றை அமைத்துப் பராமரிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டென்று வலியுறுத்தியது. தனியார் சாவடிகள் அமைத்து வாகன ஓட்டுநர்களிடமிருந்து சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கும் நடைமுறை, கடந்த நூற்றாண்டு முடியும்வரை கொண்டுவரப்படவில்லை.
சாலைகளால் அழிக்கப்பட்ட இந்தியா
‘இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடன் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தை அமைக்க முற்பட்ட பா.ஜ.க. அரசு, நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் செயல் களைத் தனியாருக்குத் தாரைவார்த்தது. ‘கட்டு, சொந்த மாக்கிக்கொள், செயற்படுத்து (பின்னர் அரசிடம்) திருப்பிக்கொடு' என்ற முறையில் சாலைப் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார்மயப் படுத்தியது. அதில் பெரும் பயனடைந்த நிறுவனங் களில் அம்பானிகளின் ரிலையன்ஸ் நிறுவனமும் அடக்கம். சாலைகளை நேர்படுத்தி, விரிவுபடுத்துவதற் கான செலவை ஈடுகட்டிக்கொள்ள தேசிய நெடுஞ் சாலைகளில் சாவடி அமைத்து, சுங்கம் வசூலிக்கும் உரிமை அந்நிறுவனங்களுக்கு 15 ஆண்டுகள் வழங்கப் பட்டது. சாலை விரிவாக்கத்துக்கான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அதிகாரமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு வழங்கப்பட்டது. தங்க நாற்கரச் சாலைத் திட்டம் செயல்பட ஆரம்பித்துப் பல்லாண்டுகளாயினும், ஆயிரக் கணக்கான நிலவுடைமையாளர்களுக்கு நிலத்தைக் கையகப்படுத்தியதற்கான நஷ்டஈடு இன்னும் வழங்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் முயற்சியில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்கப் பட்டதில், சுற்றுச்சூழலுக்கு விளைந்த கேடும் சொல்லி மாளாது. மரங்களை வெட்டுவது தவிர்க்க இயலாதது என்று வாதிட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் ஈடுகட்ட பத்து மரங்களை நட்டுப் பராமரிக்கப்போவதாக நீதிமன்றங் களிடம் வாக்குறுதியளித்தது. அவர்கள் சொன்ன பத்து மரங்கள் வெறும் அரளிச்செடிகள்தான் என்பதை நீதிமன்றங்கள் புரிந்துகொள்ளப் பல மாதங்களானது. நீர்நிலைகளுக்கும் நீர்வரத்துப் பகுதிகளுக்கிடையே பல இடங்களில் போடப்பட்ட நெடுஞ்சாலைகள் கணிசமாக நீர்நிலைகளை வற்றிப்போகச் செய்ததுடன் விவசாயப் பணிகளையும் முடக்கின.
துண்டாடப்பட்ட கிராமங்கள்
தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவைப் பிணைத் துள்ளதாகக் கூறப்பட்டாலும் அச்சாலைகள் கடந்து செல்லும் கிராமங்கள் அனைத்தும் துண்டாடப் பட்டுள்ளன. நெடுஞ்சாலை செல்லும் பாதையிலுள்ள கிராமங்களைத் துண்டாடாமல் அவற்றை இணைக்கும் வகையில் மேம்பாலங்கள் ஓரிடத்திலும் அமைக்கப் படவில்லை. இங்கிலாந்தில், துண்டாடப்பட்ட ஒவ்வொரு கிராமத்தையும் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலை களுக்கு மேல் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருப் பதைக் காணலாம். சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக் கும் இடங்களில் பயணிகளுக்கான ஓய்வெடுக்கும் அறைகளும் கழிப்பறைகளும், சிற்றுண்டிக் கடைகளும் அமைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். ஆனால், இந்தியாவிலுள்ள நிலைமையோ தலைகீழ். துண்டு படுத்தப்பட்ட கிராம மக்கள் நெடுஞ்சாலையைக் கடக்க முற்படும்போது வாகனங்களால் மோதப்பட்டு உயிர்துறப் பதும், ஊனமடைவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
இந்தியா நெடுகிலும் வழவழப்பான சாலைகள் அமைத்தும் போக்குவரத்துச் சிக்கல்கள் தீராதது மட்டுமின்றிப் பல இடங்களில் சுமுகமான போக்குவரத் துக்கான தடைகள் நீடிக்கின்றன. டெல்லியில் குர்கான் அருகில் இருந்த சுங்கச்சாவடியில் அரியானாவிலிருந்து வரும் வாகனங்கள் பல மணி நேரம் காக்கவைக்கப் பட்டதில் சினமுற்ற டெல்லி நீதிமன்றம், சுங்கம் வசூலிக்கவே தடைவிதித்தது. சமீபத்தில் பரனூரில் சுங்கச்சாவடி அமைத்தது சட்டவிரோதம் என்று தடைவிதித்த சென்னை உயர் நீதிமன்றம் திடீரென்று அவ்வுத்தரவை ரத்துசெய்துவிட்டது. சுங்கச்சாவடிகளில் நடக்கும் வசூல் கொள்ளைகளை எதிர்த்து வரும் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.
மக்களின் கோபம்
சென்னையிலிருந்து பெங்களுரூக்கு கிருஷ்ணகிரி வழியாக வாகனத்தில் செல்வோர் ஒன்பது சுங்கச் சாவடிகளில் கிட்டத்தட்ட ஒருவழிப்பயணத்துக்கு மட்டும் சுமார் 270 ரூபாய் சுங்கம் செலுத்தும் கேவலத்தை வேறெந்த நாட்டிலும் பார்க்க முடியாது. சென்ற ஆண்டு பள்ளிகொண்டா அருகில் ஒரு சாவடியில் சுங்கம் வசூலிக்க உரிமம் பெற்றவர் சுங்கக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியதில் அங்கிருந்த லாரி உரிமை யாளர்கள் கொதித்தெழுந்தனர். மன்றாடிய பின்னும் சுங்கக்கட்டணத்தில் மாற்றம் ஏற்படாததால், சுங்கச் சாவடியருகே 20 சென்ட் நிலத்தை அவர்களே விலைக்கு வாங்கி ஒரு மாற்றுப் பாதையை அமைத்துத் தங்கள் வாகனங்களைக் கொண்டுசெல்ல முற்பட்ட பிறகுதான், உரிமம் பெற்றவர் இறங்கிவந்து கட்டணத்தைக் குறைத்தார். இதற்குள், உயர்த்தப்பட்ட கட்டணத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் மகாராஷ் டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் இருந்த சுங்கச் சாவடிகளை எம்.என்.எஸ். கட்சியினர் அடித்து நொறுக்கினர். நாசிக் நகராட்சியிடம் சுங்கம் வசூலிக்கும் உரிமையைக் கொடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 15 வருடம் சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்றவருக்கு மத்திய அரசு உரிமக் காலத்தை 30 ஆண்டுகள் நீட்டித்து வழங்கியது. அதன் பின்னணி ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கும் அதைப் பராமரிப்பதற்கும் உண்டான செலவினங்களைவிடப் பன்மடங்கு ஆதாயம் பார்த்துவிட்டன இந்த ஏற்பாடுகள். தனியார் நிறுவனங்கள் அரசு ஆதரவுடன் கோடிக் கணக்கில் சுங்கம் வசூலித்துக் கொள்ளையடித்துவருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு. நாசிக்கும் பள்ளிகொண்டாவும் எதிர் காலப் பாடத்தை நமக்குக் கற்பிக்கின்றன.
இந்தியா மிளிர உருவாக்கப்பட்ட நாற்கரச் சாலைகள், மக்களின் செல்வத்தைப் பெருமளவில் கொள்ளை யடித்துக்கொண்டிருக்கும் இரும்பு ஆக்டோபஸ்களாக மாறிவிட்டன. புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு, இந்தப் பிரச்சினையில் தனது கவனத்தைச் செலுத்துமா? அரசமைப்புச் சட்டப்படி, வாகனங்களின் தங்குதடையற்ற போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இரும்பு ஆக்டோபஸ்கள் அகற்றப்படுமா?
- சந்துரு, ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம், சமூக விமர்சகர்
உள்ளாட்சி அமைப்பு - உறைக்கும் உண்மை
திரும்பிப் பார்க்க வைக்கிறது, திருச்சி மாவட்டத்தில், முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்டதும், கிளிக்கூடு ஊராட்சி நிர்வாகத்தின்கீழ் வருவதுமான கவுத்தரச நல்லூரில் சமீபத்தில் நடந்திருக்கும் சம்பவம்.
அந்தக் கிராமத்தின் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்குச் செல்ல, வழியில் உள்ள வாய்க்காலைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிலை. ஒவ்வொரு நாளும் சாகசம் செய்ய முடியுமா? எனவே, அந்த வாய்க்காலைக் கடக்க உதவியாக ஒரு பாலம் கட்டித்தருமாறு அந்தப் பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிவந்தனர். அதன் விளைவாக, பாலம் கட்ட ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான முதல் கட்டப் பணிகளும் தொடங்கப்பட்டன. எனினும், வாய்க்காலில் அதிக நீர்வரத்து இருந்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன. நீர்வரத்து குறைந்த பின்னர், பணிகள் மீண்டும் தொடரும் என்று நினைத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதன் பின்னரும் எந்தப் பணியும் நடக்கவில்லை. என்னவென்று விசாரித்தபோது, ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதி வேறு பணிகளுக்காக மாற்றப்பட்டுவிட்டது என்றும் வேறு ஊராட்சிக்கே மாற்றப்பட்டுவிட்டது என்றும் இருவேறுவிதமான தகவல்கள் கிடைத்தன. தவிர, புதிய திட்ட மதிப்பீடு தயார்செய்த பின்னர் மீண்டும் பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பதில் வந்தது. ஆத்திரமடைந்த மக்கள் என்ன செய்திருக்கின்றனர் தெரியுமா? ஊராட்சி அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட ஊராட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டவர்களைக் கட்டிடத்திலேயே சிறை வைத்தனர். இதுபோன்ற சம்பவங்களின் முடிவில் வேறென்ன நடக்கும்? ‘கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்’ என்று அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை நம்பி, மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இன்னும் 15 நாட்களில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கும் என்றும், ஏழே நாட்களில் வாய்க்காலைக் கடக்க மரப்பாலம் கட்டித்தரப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
இந்த விவகாரத்தில் முக்கியமான விஷயம் மக்கள் மனதில் எழுந்த கோபமும் அதை அவர்கள் வெளிப்படுத்திய விதமும்தான். உள்ளாட்சி அமைப்புகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மக்கள் அறிந்துவைத்திருக்கின்றனர். சட்டமன்றம் போன்ற அமைப்புகள் சட்டத்தை உருவாக்குவதற்கும் அதுதொடர்பான பணிகளுக்காகவும்தான். நிர்வாகம் தொடர்பான அத்தனை விஷயங்களையும் கவனித்துக் கொள்வதோ உள்ளாட்சி அமைப்புகள்தான். அப்படிப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் சற்றும் அக்கறை காட்டுவதில்லை என்பதுதான் பெரும் பிரச்சினை. ஒருகாலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் நிர்வாகம்கூட உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இருந்தது. இன்றும் நாட்டின் பல மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் வசம்தான் போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியங்கள் போன்றவை இருக்கின்றன. உள்ளபடி, மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் தேவைகள் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளைத் திறம்பட நிர்வகிக்க உள்ளாட்சி அமைப்புகளால்தான் முடியும். மக்களின் நேரடிப் பங்களிப்புடன்தான் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட இடம் கிடைக்காதவர்களின் புகலிடமாகவும், குறுநில மன்னர்களின் ஆட்சிப் பிரதேசங்கள் போன்றும் நடைமுறையில் ஆகிவிட்டன உள்ளாட்சி அமைப்புகள். வெறும் முணுமுணுப்பும் புலம்பலும் இனி உதவாது, கோபங்கள் கேள்விகளாக உருவெடுக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது கவுத்தரச நல்லூர் சம்பவம்.
மருந்து தயாரிப்பில் நடக்கும் மோசடி
மருந்து தயாரிப்பில் நடக்கும் மோசடிகளே அதிக விலைக்குக் காரணம். இங்குள்ள பல மருந்து நிறுவனங்களுக்கு தயாரிப்பு யூனிட்டே கிடையாது. அவை தங்களுக்குத் தேவையான மூலப் பொருட்களை வெளியே வாங்கி, மருந்து, மாத்திரைகளை குடிசைத் தொழில்போல தயாரிக்க ஆர்டர் கொடுக்கின்றன. ஒரு கிலோ மூலப்பொருளில் இவ்வளவு மாத்திரைகள்தான் தயாரிக்க வேண்டும் என்று கணக்கீடுகள் உண்டு. ஆனால், அந்த மூலப்பொருளில் சாதாரண சுண்ணாம்பு பவுடரையோ, உணவு மாவுப் பொருளையோ கலந்து தயாரிப்பை இரட்டிப்பாக்கி விடுகின்றனர்.
வியாபாரிகளுக்கு இலவசம்
வியாபாரிகளை கவர்ந்து, தங்கள் தயாரிப்பு மருந்துகளை விற்க பல நிறுவனங்கள் ‘இலவச’ திட்டங்களை அறிவிக்கின்றன. மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் ஏஜென்சி 100 மாத்திரை வாங்கினால், அதற்கு 200 மாத்திரை கூடுதலாக இலவசம். இது வியாபாரிகளுக்கு மட்டும்தான். இதனால், வாடிக்கையாளர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காது. வயிற்றுப் போக்குக்கு பயன்படுத்தக்கூடிய ‘அமிக்காசின்’, காய்ச்சல், தலைவலிக்கு பயன்படுத்தும் ‘பாரசிட்டமால்’, ஆன்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்கு பின்பு பயன்படுத்தக்கூடிய ஊசி மருந்துகள், அல்சர், இருமல் மருந்துகள் போன்றவற்றில்தான் இதுபோன்ற இலவசங்கள் அள்ளித் தரப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதவிர, மருந்து வியாபாரத்தில் ‘பிராண்ட்’ பெயரால் நடக்கும் கொள்ளை மிக அதிகம். பல்வேறு பிராண்ட்களில் இருக்கும் அடிப்படை மூலக்கூறு மருந்து ஒன்றுதான். உதாரணத்துக்கு ஒவ்வாமைக்காக எடுத்துக் கொள்ளும் ‘அவில்’ மாத்திரையின் விலை மிகக் குறைவு. ஆனால், அதில் உள்ள cetirizine Hydrochloride மூலக்கூறு கொண்ட மாத்திரைகள், பல்வேறு பிராண்ட்களில் 10 மடங்கு வரை விலை அதிகம் வைத்து விற்கப்படுகின்றன.
தங்களுக்கு ‘கமிஷன்’ கிடைக்காது என்பதால் அவில் மாத்திரையை பெரும்பாலோர் பரிந்துரைப்பதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ஆமிர்கான் நடத்திய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் இந்தியாவில் பிராண்டின் பெயர்களால் நடக்கும் மருந்து ஊழல்கள் அம்பலமாகின. ராஜஸ்தானில் டாக்டர் சமீத் ஷர்மா என்பவரால் நடத்தப்படும் மலிவு விலை மருந்தகங்கள் பற்றியும் அந்த நிகழ்ச்சியில் ஆமிர்கான் சொல்லியிருப்பார். அந்த மருந்தகங்களில் மருந்துகளின் விலை, வெளிமார்க்கெட்டைவிட சுமார் 10 மடங்கு குறைவு. ஏனெனில் அவர்கள் ‘பிராண்ட்’களை பின்பற்றுவதில்லை.
ஒரே மூலக்கூறு கொண்ட விலை குறைந்த மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்கின்றனர். இன்றும் ராஜஸ்தானில் அந்த மருந்தகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.
வாழைப்பழம் - திருடப்படும் சொத்து
எளிமையின் அடையாளம் வாழைப்பழம். ஏழைகள் வாங்கி உண்ணக்கூடிய அளவில் குறைந்த விலைக்குக் கிடைக்கக்கூடிய பழம். நல்ல காரியம் எதுவானாலும் தட்டின் மேல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மஞ்சள் கனி அது. உண்பதற்கு இனிப்பான பழங்களை மட்டுமல்லாமல் சமையலுக்குக் காயும் பூவும்; இட்டு உண்ண இலை; நல்ல செய்தி ஊருக்குத் தெரிய முழு மரம்; பித்தம் போக்கிட வேர் - என அடி முதல் நுனி வரை அனைத்துப் பாகங்களையும் நமது பயன்பாட்டுக்குத் தருவது வாழை.
முக்கனிகளில் ஒன்றான இதில் பூவன், நாடன், பேயன், செவ்வாழை, கதலி - எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையிலும் சுவை மட்டுமல்லாமல், ஏதாவது ஒரு மருத்துவக் குணமும் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
வளத்தின் அடையாளம்
சங்கத் தமிழ் பாடல்கள் வாழையை, வளமான நிலப்பகுதியின் குறியீடாக அடையாளப்படுத்துகின்றன. மலையும் காடும் வயலும் உள்ள நிலப்பரப்புகள் யாவும் சுவை தரும் வாழையின் வாழிடமாய் இருந்திருக்கின்றன. ’மலைவாழை அல்லவோ கல்வி; அதை வாயாற உண்ணுவாய் போ என் புதல்வி’ எனக் கல்வியின் மேன்மையைச் சுட்டிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார்.
அறிஞர் அண்ணாவின் ‘செவ்வாழை’ சிறுகதை, வாழையை மையமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பு. ‘வாழையடி வாழையாக' எனும் வாழ்த்து வரிகள் இறப்பிலா வாழ்க்கையின் தொடர் இயக்கத்தைக் குறிக்கின்றன.
ஏழைகளுக்குப் பசியை ஆற்றும் இந்த எளிய உணவு, இப்போது பணக்கார மேன்மக்களுக்கு அஜீரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பில் கேட்ஸ் - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்.
இந்திய இளைஞர்களின் முன்மாதிரியாக நம்பப்படுபவர். உலகின் மிகப் பெரிய கணினி மென்பொருள் நிறுவனத்தின் தலைவருக்கும் வாழைப்பழத்துக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது.
மரபணு மாற்றப் பயிர்கள்
இது மரபணு மாற்றப் பயிர்களின் காலம். ’துள்ளும் தக்காளி’, 'துவளாத கத்தரிக்காய்’ எனக் குரலெழுப்பி வந்து கொண்டிருக்கின்றன மரபணு மாற்ற உணவுப் பயிர்கள். மான்சாண்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள், தங்கள் காப்புரிமை விதைகளை ஏழை நாடுகளில் விற்றுப் பெருத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் உணவுப் பயிர்களின் மீது தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவருவதால், கிட்டத்தட்டத் தங்களைக் கடவுளாகவே கருத ஆரம்பித்துவிட்டன போலும்
உயிர்களை உருவாக்குகிறோம்..
உணவை உருவாக்குகிறோம்..
ஊட்டத்தை உருவாக்குகிறோம். - என்ற முழக்கத்தை அவை முன்வைக்கின்றன.
திருடப்படும் சொத்து
வானம் பார்த்த பூமியில் விளைந்து நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ஊட்டம் கொடுத்துக்கொண்டிருந்த புன்செய் பயிர்களை, இப்போது தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. இயற்கை வழி விளைவித்த உணவுப் பொருட்கள் விற்கப்படும் கடைகளை ஒரு நகரத்தில் ஒன்றிரண்டு மட்டுமே காண முடிகிறது.
கம்பங்கூழ் அருந்திப் பழக்கப்படாத வீடுகளில் எல்லாம் தவறாமல் ஹார்லிக்ஸ் புட்டிகள் இருக்கின்றன. சோளம், ராகி, வரகு, சாமையை மறந்துவிட்டுக் காலையில் ஓட்ஸ் கஞ்சி குடிக்கிறார்கள் தமிழ்மக்கள்.
விதைத் தானியமே எடுத்துவைக்க முடியாத விதைகளை மட்டுமே விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கின்றன பன்னாட்டு விதை நிறுவனங்கள். ஒரு விவசாயி தனது அடுத்த விதைப்புக்கு அவர்களை மட்டுமே நாடி கையேந்தி நிற்க வேண்டிய நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
மரபணு மாற்ற வாழை
இந்நிலையில், பில்கேட்ஸ் எடுத்துள்ள சமீபத்திய முயற்சி நமது விவசாயிகளைத் திடுக்கிட வைத்திருக்கிறது. ஆஸ்திரேலியப் பயிர் விஞ்ஞானி ஜேம்ஸ் டேல் என்பவருடன் சேர்ந்து புதிய ஆராய்ச்சி ஒன்றை வெற்றிகரமாக முடித்திருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.
‘வாழைப்பழம் ஒரு முக்கிய உணவு மட்டுமல்ல; மருந்தும்கூட-’ என்பதே அந்த அரிய கண்டுபிடிப்பு. இந்த ’கண்டுபிடிப்பின்’ பயனாக இந்தியா, ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் குழந்தை பிறப்பு மரணங்களைத் தடுக்க முடியுமாம்.
மேலும், பிள்ளை பெறும் தாய்மார்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் ரத்தச் சோகை நோயைத் தவிர்க்கவும் முடியுமாம். தான் கண்டுபிடித்த புதிய வாழையில் இதற்கான மருத்துவக் குணங்களைப் பொதிந்து வைத்திருப்பதாக மார்தட்டுகிறார் பில் கேட்ஸ்.
மான்சாண்டோவின் மறுவடிவம்
‘மான்சாண்டோ நிறுவனம் எவ்வாறு நமது பருத்தி விவசாயத்தைத் திட்டமிட்டு அழித்ததோ, அதே திட்டத்தின் மறுவடிவம்தான் இது. நமது வாழைச் செல்வத்தை முழுமையாக அபகரிப்பது மட்டுமே பில்கேட்ஸின் நோக்கம்’-என எச்சரிக்கை விடுக்கிறார் புகழ்பெற்ற பயிர் விஞ்ஞானியும் சூழலியல் போராளியுமான டாக்டர் வந்தனா சிவா. மான்சாண்டோவின் உணவுப் பயிர் இருப்பில் 5 லட்சம் பங்குகளின் மீது பில்கேட்ஸ் முதலீடு செய்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
நமது வளமார்ந்த பல்லுயிர் சூழலைச் சூறையாடுவதும் உணவு உற்பத்தி, நுகர்வின் மீது தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதும் பல பன்னாட்டு நிறுவனங்களின் ரகசியத் திட்டமாக இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
ஏற்கெனவே ஆந்திர, மராட்டிய மாநிலங்களின் பருத்தி விவசாயிகளுக்கு மலட்டு விதைகளையும், மரணத்தையும் பரிசாய்த் தந்தவை இந்த நிறுவனங்கள்தான். எனவே, பணம் படைத்தவர்கள் விடுத்துள்ள இந்த உணவு ஆதிக்கப் போரை தீரத்துடன் நாம் எதிர்கொள்ள வேண்டும்.
- அவைநாயகன், கவிஞர், தொடர்புக்கு: avainayagan.osai@gmail.com
யோகா - மருத்துவர் கு. சிவராமன்
யோகா, காலங்களைக் கடந்து நின்று நமது உடலுக்கு நல்லது செய்யும் ஒரு அறிவியல் முறை. ஆனால், யோகா அதற்குரிய உண்மையான பொருளுடன்தான் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஒட்டுமொத்தமான புரிதலின்மை தான், நாட்டின் வாழ்வுக்கும் நலவாழ்வுக்கும் இன்றைக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. "நாளையைப் பற்றிய சிந்தனை அவசியமற்றது. இன்றைய தினத்தை இழக்க வைப்பது" எனும் வணிகக் கண்ணிச் சித்தாந்தம் ஆழமாக வேரூன்றிவரும் காலம் இது. நம்மில் பெருவாரியானோர் கட்டாயத்தினாலோ அல்லது வேறு வழியின்றியோ அல்லது போகிறபோக்கில் கலந்துகொள்ளும் மனோபாவத்திலோ இக்கண்ணி சித்தாந்தத்தில் கணிசமாய்ச் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.
நம் மரபும் பாரம்பரியமும் இந்த வாழ்க்கை முறையை எந்தக் காலகட்டத்திலும் எந்த வடிவிலும் கற்றுத் தந்ததில்லை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலும் சரி, நோய் முதல் நாடி நோயைத் தணிக்க எத்தனித்ததும் சரி, முழுமை யாய் ஒட்டுமொத்தப் புரிதலின் விளைவால் ஏற்பட்டவைதான். பாரம்பரியத்தை “அடிப்படை வாதம்; மடமையின் இன்னொரு வடிவம்” எனப் பேசித் திரிவோருக்கு, நெடுநாளாய் உலகில் நிலவிவந்த மடமையை, அடிப்படைவாதத்தைத் தகர்த்த முதல் அறிவியல் நம் பாரம்பரியம்தான் என்பது தெரியாது.
நோய்க்குக் காரணம்
“எல்லா நோய்களுக்கும் துன்பங்களுக்கும் உனது கன்மமும், பிறப்பும், பிசாசும், சாபங்களும்தான் காரணம்” என உலகின் பெருவாரியான கூட்டங்கள் வெகுகாலம் சொல்லி ஆதிக்கம் செய்துகொண்டிருந்தபோது, “உன் உடல்நலத்துக்கு, உன் உடலில் நடைபெறும் உணவால், செயலால், எண்ணத்தால், சூழலால் நீ ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் காரணம்; பிறப்போ/பிசாசோ காரணமில்லை” என உரக்கச் சொன்ன கூட்டம்தான் ஓகத்தை (யோகாவை) படைத்த நம் மூத்த குடியினர். “அண்டத்தில் உள்ளதே பிண்டம்; பிண்டத்தில் உள்ளதே அண்டம்; அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும்போதே” எனப் பிரபஞ்சத்தை நம் உடலுடன் நுட்பமாய்ப் பொருத்திப் பார்த்த முதல் அறிவியல் அவர்களுடையது. சிக்மண்ட் பிராய்டுக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நரம்பு-உளவியல் அறிவியலையும், உடல்-மன ஒருங்கிணைப்பின் பிடிமானத்தையும் உற்றுநோக்கியவர்கள் அவர்கள்.
இன்றைக்கு உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஞ்ஞானம் யோகா. சில வளர்ந்த நாடுகளில் யோகா பயிற்சி செய்யாத கர்ப்பிணிகளுக்கு இன்சூரன்ஸ் வசதி கிடையாது என்கிற அளவுக்கு யோகாவின் வீச்சு பரந்துபட்டது. யோகா, ஆசனம், பிராணாயாமம், மூளையின் ஆழ்மன ஓட்ட வேகத்தை எப்படி அமைதிப்படுத்தி (இதை ஆல்ஃபா நிலை என்கிறார்கள்) மூளையின் செயல்திறனை இன்னும் மேம்படுத்துகிறது என பல நவீன ஆய்வுகளை நடத்தி, உலகே ஏற்கும் தரவுகளைக் கொணர்ந்திருக்கிறார்கள்.
ஆல்ஃபா நிலை
மொஸார்ட் இசைப்பதும், வாட்சன் கிரிக் DNA யின் இரட்டை திருகுகுழல் (Double helix) வடிவத்தைக் கண்டறிந்ததும், ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும் (Theory of Relativity) ராமானுஜனின் எண்கணித சூத்திரங்களும் இந்த ஆல்ஃபா நிலையில்தான் கண்டறியப்பட்டது எனப் பல யோகா ஆசிரியர்கள் கூறுவர். தியானம், பிராணாயாமத்தின் மூலம் ஒருவரால் இந்த ஆல்ஃபா அமைதி நிலையை அடைய முடியும் என்று இன்றைய நவீன அறிவியல் தரவுகள் மூலம் நிரூபிக்கின்றனர், இன்றைய நவீன யோகிகள்.
யோக நித்திரையின் நவீன வடிவமான IRT/QRT/DRT- Instant/Quick/Deep Relaxation Techniques எப்படித் தூக்கமின்மையை (Rapid Eye Movement (REM) Sleep) இயல்பாய் களைந்து நல்லுடலுக்குத் தேவையான, இரவில் மட்டுமே சுரக்கும் மெலடோனினைச் சுரக்க வைக்கிறது என்றும் இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி கழக வழிகாட்டுதலில் நவீன யோகிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இன்னும், இன்றைய துரித வாழ்வின் மிக முக்கிய நலச் சவாலான சர்க்கரை நோயை அர்த்த மகராசனமும் தனுராசனமும் எப்படி கட்டுக்குள் வைக்கிறது, ரத்தக் கொதிப்புக்குச் சீதளி பிராணாயாமமும் விருட்ச/கருடாசனங்களும் எப்படிப் பயனளிக்கின்றன, மாரடைப்பை வரவழைக்கும் இதய நாளத்தின் கொழுப்படைப்பு மூச்சுப் பயிற்சியால் எப்படிச் சீராகிறது, நாட்பட்ட நுரையீரல் நோய்க்கும் ஆஸ்துமாவுக்கும் பிராணாயாமம் எப்படி நுரையீரலின் Forced vital capacity-யை அதிகரிக்கிறது, புற்றுநோய்க்குத் தியானமும் யோகாசனங்களும் பிராணாயாமமும் Natural Killer Cells களை எப்படிக் கூடுதலாக உண்டாக்குகின்றன, எந்த அளவுக்குப் பணிபுரிகின்றன என நவீன அறிவியலின் தரவுகளுடன் மிகத் துல்லியமாய் நிறுவப்பட்டுவிட்டது.
யோகாவின் தோற்றம்
உடலை மனதோடு ஒருமித்துப் பார்த்த அந்தப் பண்டைய யோக மரபுக்கு மேலே கூறப்பட்டுள்ள நவீன வார்த்தைகளும் இயங்கியலும் தெரியாது. ஆனால், விளைவு தெரியும். இயற்கையை வழிபட்ட, இயற்கையின் கூறுகளோடு தன்னைப் பொருத்திப் பார்த்து நலவாழ்வைப் புரிந்துகொள்ள முற்பட்ட, நம் மூத்தகுடியின் புரிதல்தான் யோகா. அது ஒரே நாளில் கட்டமைக்கப்பட்டதாகவோ அல்லது ஒரே முனிவரின் கனவில் உதித்ததாகவும் இருக்க முடியாது. இயற்கையின் அசைவுகளைத் தன் நுண்ணறிவால் நோக்கி, தன்னைத் திருத்தி மேம்படுத்திக்கொள்ள நினைத்த நம் நிலத்து மூத்த இனக் குழுக்கள், இயற்கையின் பிரம்மாண்டங்களையும் தன்னில் மூத்த தாவர உயிரினங்களையும் உற்றுப் பார்த்து, பயந்து, பிரமித்து, வணங்கி, பின் அவற்றை ஆராய்ந்து பெற்ற அறிவுப் படிநிலைதான் யோகா.
இது மத அடையாளங்களில் ஒன்றோ அல்லது இன்னொரு வகையான சடங்கோ கிடையாது. ஆனால், இன்றைக்கு இந்தியாவிலும், ஏன் உலகெங்குமே யோகா அதிகமாய் மத அடையாளத்துடன்தான் பார்க்கப்படுகிறது. இன்றைய யோகாவின் படிநிலைகள் பெரும்பாலும் நவீன யோகக் குருமார்களால் மிக நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்டு, இறை நிலைக்குள் இணைத்துக்கொள்ளும் வழியாகவே மட்டுமே கற்பிக்கப் படுவதுதான் இதற்குக் காரணம்.
முழுமையான யோகா
யோகாவின் சமீபத்திய புதுப் பரிமாணங்கள், ஆதார யோகாவின் அடிப்படை அம்சங்களான இயற்கையை முழுமையாய்ப் புரிந்தும், பிரபஞ்சத்தோடு இந்த மனித உடலைத் தொடர்புபடுத்தி வாழ்வை நலமாய் நகர்த்துவதற்கும், மனதை விட்டு விடுதலையாகி இருப்பதற்கும் தேவையான “முழுமையான” கற்பித்தலை விட்டு விலகி, வெளிநாட்டுக்கான விசா வாங்க மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுப்பது போலக் குறைந்தபட்ச ஆரோக்கியமான உடலுடன் பரம்பொருளுடன் ஐக்கியமாவதற்கான சிறப்புப் பாதையாக மட்டுமே யோகா சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதீத மனஅழுத்தத்துடனும், சமூகப் பிணக்குகளுடனும் சிக்கிச் சிதைந்திருப்போருக்கு இது தெளிவுற்ற பாதையைக் காட்டாமல், பயத்திலோ பரவசத்திலோ இன்னொரு போர்வைக்குள் பொதிந்து கொள்ளும் ஊடகமாகவும் ஆக்கப்பட்டுவருகிறது.
அதன் நீட்சியாய், மறுபடி எதை யோகம் எதிர்த்ததோ, அதே சடங்குகளுக்குள்ளும் சாங்கியத்துக்குள்ளும் அடையாளங்களுக்குள்ளும் செருகிக்கொள்ளும் நிலை உருவாகிறது. பின்னாள் தத்துவ நிறுவனங்களுக்குள் சிக்காத ஆதார யோகாவில் இந்தப் பார்வையும் அடையாளமும் கிடையாது. ஆதார யோகா இறைமறுப்பு/வேதமறுப்புக் கொள்கையாகவும், நம் பழம்மரபின் தாந்திரிகத் தத்துவத்தி லிருந்தும்தான் உருவெடுத்ததாகத் தேவிபிரசாத் சட்டோபாத்தியாய போன்ற தத்துவ அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.
நாட்பட்ட வாழ்க்கைமுறை நோய்க் கூட்டத்தின் பிடியில் நசுங்கிக்கொண்டிருக்கும் துரித வாழ்வின் பயணிகளான நமக்கு, யோகா எனும் பண்டைய புரிதல் மிகப் பெரிய பயனளிக்கும் மருத்துவக் கூறு. அதைத் தாண்டி, அந்தப் புரிதலில் பொதிந்திருக்கும் மற்றக் கூறுகள் இன்னும் விசாலமானவை. தன்னை உணரும் உடலையும், விட்டு விடுதலையாகும் மனதையும் தருவது. தொடர்ந்து அதை மதக் குறியீட்டுக்குள் செருகுவது என்பது இன்னொரு வணிகக் கண்ணி சித்தாந்தமாக மட்டுமே மாறுவதற்கு வழிவகுக்கும். அதன் தனித்துவமான ஒருமித்த முழுமையான, ஒட்டுமொத்தப் பார்வையில் இருந்து விலக்குவ தாகவும் இது அமைந்துவிடக்கூடும்.
கட்டுரையாளர், சித்த மருத்துவர், எழுத்தாளர் தொடர்புக்கு: herbsiddha@gmail.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)