திங்கள், 7 ஜூலை, 2014

சென்னையில் 11 மாடிக் கட்டிடம்

சி.எம்.டி.ஏ மீது குற்றச்சாட்டு
சென்னையில் தரைத்தளத்துடன் கூடிய இரண்டு தளத்துக்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டுமானால் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) அப்ரூவலைப் பெற வேண்டும் என்பது விதி. இந்த விதியை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு துணை விதிகள் இருக்கின்றன. அந்த விதிகளை யெல்லாம் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் முறையாக நடைமுறைப் படுத்துகிறார்களா?
இந்தக் கட்டிடத்திற்கு ஒப்புதல் கொடுத்தபோது, அந்தத் துறையின் அமைச்சர் யார்? 61 பேர் இறந்திருக்கிறார்களே, இதற்குள் அரசாங்கம் அந்த அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? வேறொரு ஆட்சி என்றால், முதல்வரே பதவி விலக வேண்டுமென்று கூறியிருக்க மாட்டார்களா? இந்தக் கட்டிடத்திற்கு அனுமதி கொடுத்த கோப்பில் துறையின் அமைச்சர் கையெழுத்திட்டிருக்கிறாரா இல்லையா?
சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத்த பிறகுகூட, கட்டிடம் கட்டும்போது பிளானிங் பர்மிஷனில் கொடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் கட்டிடம் கட்டப்படுகிறதா என்று ஒவ்வொரு ஸ்டேஜிலும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சென்று கவனிக்க வேண்டும். அப்படி கவனித்தார்களா? அல்லது ஒவ்வொரு முறையும் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வந்து விட்டார்களா?
இந்தக் கட்டிட அனுமதிக்காக தரப்பட்ட விண்ணப் பத்தில் நிலத்தின் மொத்த பரப்பளவு 1 லட்சத்து 11 ஆயிரத்து 684 சதுர அடி என்று கூறப்படுகிறது. அதாவது 10,375.7 சதுர மீட்டர். இதில், திறந்த வெளி இடம், பூங்கா, நீச்சல்குளம் போன்றவற்றுக்கான இடங்கள் போக, 3,986.17 சதுர மீட்டரில், 11 தளங்கள் கொண்ட இரண்டு கட்டிடங்களைக் கட்டுவதற்கு அனுமதி கோரப்பட்டிருக்கிறது. இதற்கான மனு முதலில் பிளானிங் பெர்மிஷன் செக்ஷனில் கொடுக்கப்பட்ட போதே, மண் வள ஆதார உறுதி சான்றிதழ் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் என்.ஓ.சி.க்கள் எதுவுமே இணைக்கப்படவில்லையாம்.
விதிமீறல்கள் - சரமாரி கேள்வி
இந்தக் கட்டிடத்தைக் கட்டிய நிறுவனம், முதலில் துறையின் அமைச்சரைச் சந்தித்துப் பேசி விட்டுத்தான் இந்தப் பணியையே தொடங்கியதாகவும், அதனால்தான் விண்ணப்பிக்கும்போதே இணைக்கப்பட வேண்டிய முக்கியமான சான்றிதழ்களை இணைக்காமலே விண்ணப்பித்தார்கள் என்றும் சொல்லப்படுவது உண்மைதானா?
அதன் பிறகு மண்வள ஆதார உறுதிக்கான சான்றிதழை யாரோ ஒரு பொறியாளரிடம் பெற்று அதனைத் தாக்கல் செய்துள்ளார்கள். இந்தக் கட்டிடத்திற்கு ஒப்புதல் தருவது பற்றி குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றபோது, வரைபடத்தில் உள்ளதைப் போல சாலையின் அகலம் இல்லை, கட்டிடத்தின் பக்கவாட்டு பகுதியிலும் போதுமான காலி இடம் விடப்படவில்லை என்றெல்லாம் பேசப்பட்டபோதிலும், துறையின் அமைச்சர், அதற்கான விதிகளைத் தளர்த்தலாம் என்று தெரிவித்திருப்பதாகக் கூறி, அவ்வாறே முடிவெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் உண்மைதானா?
3-6-2013 அன்றுதான் இந்த நிறுவனத்திற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஓராண்டு காலமாக கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் யாராவது அந்த இடத்தை நேரில் சென்று பார்த்து ஆய்வு நடத்தினார்களா? இந்த இடத்தில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்ட போதே, அந்தப் பகுதியைச் சேர்ந்த சில சமூக சேவகர்கள், அந்த இடம் களிமண் பூமி, அங்கே பல அடுக்கு மாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்காதீர்கள், கொடுத்த அனுமதியை ரத்து செய்யுங்கள்" என்று புகார் கடிதங்கள் எழுதியதாகச் சொல்லப்படுகிறதே, அது உண்மையா இல்லையா?
இதையெல்லாம் மீறி அரசு அனுமதி கொடுத்து விட்டு, அதை மறைக்க பிளானிங் அப்ரூவல்படி கட்டாமல் விதிகளை மீறி கட்டிடம் கட்டியதாக, அந்த நிறுவனத்தின் மீது பழியைப் போட்டு தாங்கள் தப்பிக்க நினைக்கிறார்கள் என்று சொல்லப்படுவது சரியா இல்லையா?
இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்த பிறகு, அந்தக் கட்டிடத்திற்கான அனுமதி கொடுத்தது பற்றிய முழு அறிக்கையும் வேண்டுமென்று முதல்வர், அரசு ஆலோசகரிடம் கேட்டதாகவும், சி.எம்.டி.ஏ.வின் தற்போதைய உறுப்பினர் செயலாளர் கடந்த காலத்தில் எவ்வாறு விதிகள் தளர்த்தப்பட்டு அனுமதி கொடுக்கப்பட்டது என்பதை விளக்கியதாகவும், கடந்த காலத்தில் அங்கே அதிகாரியாக இருந்த வரைக் கூப்பிட்டு விசாரித்த நேரத்தில் அந்த அதிகாரி அமைச்சரின் அறிவுரைப்படிதான் நடந்து கொள்ள வேண்டியிருந்தது என்று விளக்கமளித்த தாகவும் செய்திகள் ஏடுகளில் வந்ததெல்லாம் உண்மையா இல்லையா?
முதல்வரின் கருத்து சரியா?
இவைகள் எல்லாம் உண்மையா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்பாகவே, தற்போது நியமித்துள்ள ஒரு நபர் குழு ஆய்ந்தறிந்து முடிவெடுப்பதற்கு முன்பாகவே, முதல்வர் அந்த இடத்தைப் பார்த்து விட்டு, "சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத்ததில் எவ்வித தவறும் இல்லை, முறையாக அனுமதி கொடுத்துள்ளனர், கட்டிடம் கட்டிய நிறுவனம், விதிகளை மீறி கட்டிடத்தைக் கட்டியுள்ளது" என்றெல்லாம் செய்தியாளர்களிடம் கூறியது சரிதானா?
முதல்வர் இவ்வாறு கூறியிருக்கும்போது, அதை மீறி விசாரணை நீதிபதி எவ்வாறு வேறு கருத்தினைத் தெரிவிக்க முடியும்? விசாரணைக் கமிஷன் நீதிபதியை எவ்வாறு சொல்ல வேண்டுமென்று அறிவுறுத்துவதைப் போல ஆகாதா?
இடிந்த கட்டிடத்திற்காக விதிகளைத் தளர்த்தி இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது ஏன் என்று ஒரு நாளிதழ் எழுதியிருந்தது. அவ்வாறு எழுதியதற்காக அந்த இதழ் மீது அவசர அவசரமாக அரசு வழக்கறிஞர் வழக்கு தொடுத்திருக்கிறார். அது உண்மையை எழுதும் பத்திரிகைகளை மிரட்டுவதாகாதா?
தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த இடத்தைப் பார்க்க வருவதாகச் செய்தி தெரிவித்ததும் மீட்புப் பணிகள் சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டதாகவும் செய்தி வந்தது. அதைப் பற்றி செய்தியாளர்கள் முதல்வரிடம் கேள்வி கேட்டபோது, அந்தக் கேள்வி அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று பதில் கூற முதல்வர் மறுத்து விட்டார் என்ற செய்தியும் ஏடுகளில் வெளிவந்தது.
மண் பரிசோதனை வல்லுனர் ஒருவர், "தற்போது விபத்து ஏற்பட்ட மவுலிவாக்கத்தில் 25 மீட்டர் ஆழம் வரை களிமண்தான் உள்ளது. எனவே 26 மீட்டர் ஆழத்தில் 'பைல் பவுண்டேஷன்' முறையில் அஸ்திவாரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அமைத்திருந்தால் இதுபோன்று கட்டிடம் சரிந்திருக்காது" என்றெல்லாம் கூறியிருக்கிறாரே, இதையெல்லாம் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கவனித்தார்களா?
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீட்பு பணிகளைப் பார்வையிட்ட பின் "இந்தக் கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளது, எனவே சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசே நியமிப்பது பொருத்தமானதா?
இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து, தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து, விசாரணைக்கு எடுத்துக் கொண்டதோடு, இதைப் பற்றி விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட அந்த நோட்டீசில், "பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வந்த விபத்து குறித்த தகவல்கள் அடிப்படையிலும், முதல்வர் அளித்த பேட்டியின் அடிப்படையிலும் இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் கையில் எடுத்துள்ளது. இது ஒரு மிகப் பெரிய மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆணையம் கருதுகிறது.
விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் எனக் கருதி, விபத்து குறித்து இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு தனது விளக்கத்தை அளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
"அடுக்கு மாடி கட்டடங்கள் தொடர்பான சட்ட விதி முறைகளில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும். அடுக்கு மாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தால் அதற்கு அதிகாரிகளே இனி பொறுப்பேற்க வேண்டி நேரிடும்" என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு நேற்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் தமிழக முதலவர் ஒரு நபர் விசாரணைக் குழுவினை அறிவித்திருக்கிறார். இந்தக் கட்டிடத்திற்கு அனுமதி அளித்தது தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே உள்ள சி.எம்.டி.ஏ. அதற்குப் பொறுப்பேற்றிருப்பவர் தமிழக அமைச்சரவையிலே உள்ள ஒருவர். அவர்கள் மீதே பல்வேறு குற்றச்சாட்டுகள், இந்தக் கட்டிடத்திற்கு அனுமதி கொடுத்த நிலையிலே இருக்கின்ற போது, தமிழக அரசே ஒரு நீதிபதியை நியமித்து இதைப் பற்றி விசாரணை நடத்துகிறேன் என்பது எந்த அளவுக்குப் பொருத்தமானது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஒரே ரகுபதி தலைமையில் ஒன்பது விசாரணைகளா?
தற்போது ஜெயலலிதா அமைத்துள்ள ஒரு நபர் குழுவினால் எந்தவிதமான உண்மையும் வெளி வராது என்ற கருத்து பரவலாகச் சொல்லப்படுகிறது. முதலமைச்சர் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை அறிவித்திருக்கிறாரே தவிர, அந்தக் கமிஷன் எத்தனை நாட்களுக்குள் இதுபற்றி விசாரித்து அறிக்கை தர வேண்டுமென்று சொல்லாமல் விட்டிருப்பதிலிருந்தே, இது ஒரு கண் துடைப்பு கமிஷன், அரசினர் தப்பித்துக் கொள்வதற்காக நியமித்துள்ள கமிஷன் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.
2011ஆம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்டவுடன், கழக ஆட்சிக் காலத்தில் சிறப்பாகக் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டியதில் முறைகேடு இருப்பதாகக் கூறி, ஜெயலலிதா அதனை விசாரிக்க நீதிபதி தங்கராஜை நியமித்தார். சில மாதங்களிலேயே அவர் அந்தப் பதவியிலிருந்து விலகியதால், நீதிபதி ரெகுபதியைத்தான் அந்தப் பொறுப்பிலே நியமித்து, அந்தப் பணிகளையும் இவர் ஆற்றி வருகிறார்.
மேலும் இதே நீதிபதி ரெகுபதிதான், தற்போது குண்டர் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் அமைப்பின் நீதிபதியாகவும் உள்ளார். அதுமாத்திரமல்ல; நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாகவும் இதே ரெகுபதிதான் இருக்கிறார். இத்தனை பொறுப்புகளையும் வகித்து வரும்
சிபிஐ விசாரணை தேவை
நிலையில்தான் தற்போது இந்த மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்தது பற்றியும் அவரையே விசாரணை நீதிபதியாக நியமித்திருப்பதில் இருந்தே, இந்த விசாரணை என்பது உள்நோக்கத்தோடு, கண் துடைப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்தக் கட்டிடம் இடிந்து, இதுவரை 61 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்றால் இதற்கு இந்த ஆட்சியினரும், முதல்வரும், இந்தத் துறையின் அமைச்சரும்தான் பொறுப்பேற்க வேண்டும். இதிலே என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன, அதனால் பயன்பெற்றவர்கள் யார் யார் என்ற தகவல்கள் எல்லாம் வெளிவர வேண்டுமென்றால், சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்வதே பொருத்தமாக இருக்கும். இல்லாவிட்டால் இந்த அரசு கண் துடைப்புக் கமிஷனை நியமித்துள்ளது என்றே கருதப்படும்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

சர்க்கரை ஆலை

தமிழகத்தில் 9 தனியார் நிறுவனங்கள் 25 சர்க்கரை ஆலைகளை நடத்துகின்றன. இதில் ஒன்றைத் தவிர மீதமுள்ள 24 ஆலைகள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன.
கடந்த மார்ச் வரை குறைந்தபட்சம் ரூ.4.74 கோடி முதல் ரூ.122.85 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விவசாயிகளிடம் வாங்கிய கரும்புக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகை, நாடு முழுவதும் சுமார் ரூ.12,500 கோடி. உத்தரபிரதேசத்தில் மட்டுமே ரூ.8 ஆயிரம் கோடி. ஆந்திரா, கர்நாடகாவில் ரூ.4 ஆயிரம் கோடி, தமிழகத்தில் ரூ.400 கோடிதான் நிலுவை உள்ளது.
கரும்புக்கான ஆதார விலையை மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் உயர்த்தி நிர்ணயிக்கின்றன. அந்த அளவுக்கு சர்க்கரை விலை அதிகரிக்கப்படுவதில்லை.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3.75 லட்சம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு, இப்போது 2.7 லட்சம் எக்டேராக குறைந்துவிட்டது. இந்தாண்டு மேலும் 16 சதவீதம் குறையும் அபாயம் உள்ளது.
கடந்த 2011-12ம் ஆண்டில் 254.55 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 23.70 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. 2013-14ல் 138 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 12.50 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியானது. 2014-15ம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி, 11.80 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலைகளின் அரவைத் திறன் 250 லட்சம் டன் முதல் 300 லட்சம் டன்னாக இருக்கிறது. அதில் பாதியளவுதான் தற்போது அரவை நடக்கிறது. சர்க்கரை உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. அந்த அளவுக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சர்க்கரை விலை அதிகரிக்க வில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு குவிண்டால் (நூறு கிலோ) சர்க்கரை ரூ.3,600-க்கு விற்றது. பின்னர் ரூ.2,900 ஆக குறைந்தது. ஒரு குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய ரூ.3,120 செலவாகிறது. இதனால், குவிண்டாலுக்கு சுமார் ரூ.300 வரை நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தொழிலாளர்கள் கூலி, கரும்பு விலை உள்ளிட்ட செலவினம் 14 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால், சர்க்கரை விலை 3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இருந்தாலும், எங்களை நம்பி கரும்பு பயிரிட்ட விவசாயிகளின் நலன் பாதிக்கக்கூடாது என்பதால், நஷ்டத்திலும் ஆலையை தொடர்ந்து நடத்துகிறோம்.
சர்க்கரை ஆலைகளின் நிதிச் சுமை அதிகமாகியுள்ளதால், வட்டியில்லா கடன் கொடுத்து உதவ மத்திய அரசு முன்வந்துள்ளது. அந்தப் பணமும் கரும்பு நிலுவைத் தொகையாக விவசாயிகளுக்குத்தான் வழங்கப்படும். இத்தொகையை வேறு நோக்கத்துக்காக யாரும் பயன்படுத்த முடியாது. இத்தொகை சர்க்கரை ஆலைகளின் நிதிச் சுமையை ஓரளவுக்குத்தான் குறைக்கும்.

ஞாயிறு, 6 ஜூலை, 2014

சுயவேலைவாய்ப்பு - தமிழக அரசின் UYEGP, NEEDS மற்றும் மத்திய அரசின் PMEGP

தமிழக அரசின் சுயவேலைவாய்ப்பு திட்டங்களான UYEGP, NEEDS மற்றும் மத்திய அரசின் PMEGP ஆகியவை குறித்தும், அவற்றுக்கு எங்கு விண்ணப்பம் பெறுவது, எவ்வாறு விண்ணப்பம் செய்வது, கடன் உதவி, மானியம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கமாக பார்த்தோம். தற்போது மேற்குறிப்பிட்ட மத்திய, மாநில அரசுகளின் கீ்ழ் சுய வேலைவாய்ப்புக்கு அளிக்கப்படும் பயிற்சி, பயிற்சி காலத்தில் அளிக்கப்படும் உதவித்தொகை குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய மேலாளர் க.ராசு.
UYEGP திட்டத்தின் கீழ் என்னென்ன பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன?
வங்கியாளர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. இதில் 6 நாட்கள் தொழில் சார்ந்த பயிற்சியும் ஒருநாள் மார்க்கெட் சர்வே பயிற்சியும் அளிக்கப்படும்.
வியாபாரம், சேவை, உற்பத்தி ஆகியவற்றின் கீழ் வரும் தொழில்கள் என்னென்ன?
மளிகை கடை, மருந்துப் பொருள், அரிசி என ஏராளமானவற்றை கூறலாம். இவை வியாபாரம் சார்ந்த தொழில்களாகும். கணினி சரி செய்தல், ஜெராக்ஸ் போன்றவை சேவை சார்ந்த தொழில்களாகும். பாக்குமட்டை தயாரிப்பு, ஹாலோ பிரிக்ஸ் தயாரிப்பு போன்றவை உற்பத்தி சார்ந்த தொழில் பிரிவில் வருபவை.
தொழில் முனைவோருக்கான பயிற்சி யார் மூலம் அளிக்கப்படுகிறது?
சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் சார்பில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி நிறைவு செய்த பின் பயிற்சி பெற்றவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயற்சி நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறதா?
UYEGP திட்டத்தின் கீ்ழ் பயிற்சி பெறுபவர்களை ஊக்கும் விக்கும் வகையில் நாளொன்றுக்கு தலா 600 ரூபாய் வீதம் பயிற்சிக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு தலா ஒரு நபருக்கு 900 ரூபாய் வீதம் கட்டணம் அளிக்கப்படுகிறது. வங்கியில் கடன் அளிப்பதாக ஒப்புதல் அளிக்கப்படும் நபர்களுக்கு மட்டுமே தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்படும்.
வங்கிக் கடனில் தள்ளுபடி செய்யப்படும் மானியம் பயனாளிகளுக்கு வழங்கப்படுமா?
நிச்சயம் வழங்கப்படும். நேரடியாக இல்லாமல் வங்கிக் கடனில் தள்ளுபடி செய்யப்படும் மானியத்தொகை தொடர்புடையவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இது மத்திய, மாநில அரசுகளின் 3 சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கும் பொருந்தும்.
NEEDS திட்டத்தில் அளிக்கப்படும் பயிற்சி என்ன?
UYGEP திட்டம் போல் வங்கியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் சேவை, வியாபாரம், உற்பத்தி ஆகியன குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன. ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இரு வாரம் தியரி (கற்பித்தல்) பயிற்சி, ஒரு வாரம் மார்க்கெட் சர்வே அதாவது உற்பத்தி செய்த பொருளை சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்) குறித்த பயிற்சியும், ஒரு வார காலம் அவரது திட்டம் ( புராஜெக்ட்) குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழக வீட்டுவசதித் துறை - 11 மாடிக் கட்டிடம்

ஒரு வாரம் ஆகிவிட்டது சம்பவம் நடந்து. அதை விபத்து என்று குறிப்பிட என் கை கூசுகிறது. 48 வீடுகளைக் கொண்ட 11 மாடிக் கட்டிடம், இன்னும் கொஞ்ச நாட்களில் திறப்பு விழா காணும் நிலையில் இருந்த கட்டிடம், ஒரு இடி மழைக்குச் சிதறி சின்னாபின்னாமாகிறது என்றால், அது விபத்தா; ஊழலின் வெடிப்பா?
நடந்தது படுகொலை. இந்த அமைப்பின் சகல மட்டங்களிலும் புரையோடியிருக்கும் ஊழல்வாதிகள் செய்த படுகொலை. நம் எல்லோருக்கும் இது தெரியும். நம் ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் தெரியும். ஆனால், இன்றுவரை ஒரு பெயருக்குக்கூட, சம்பிரதாய நடவடிக்கையாகக்கூட ஒருவர்கூடப் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவில்லை. ஒருவர்கூடப் பதவி/பணிநீக்கம் செய்யப்படவில்லை. ஊழலின் பெயரால் அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஒருவர்கூடக் கைதுசெய்யப்படவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டிய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) தலைவர் - தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் - ஆர். வைத்திலிங்கம் சம்பவ இடத்தைப் பார்வையிடக்கூடச் செல்லவில்லை. அதிகாரிகள் தரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முக்கியப் பொறுப்பான உறுப்பினர் - செயலர் ஏ. கார்த்திக் ஐ.ஏ.எஸ்., இந்தக் கட்டிடத்துக்கு அனுமதி கொடுக்கும்போது அந்தப் பொறுப்பில் இருந்த ஆர். வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் இருவரும் எந்தச் செய்தியாளரின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கத் தயாராக இல்லை. அமைச்சர் பேச மாட்டார், அதிகாரிகளும் பேச மாட்டார்கள்; யாரும் மக்களுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்க மாட்டார்கள்; எல்லாவற்றையும் தீர்மானிக்கும் அதிகார வர்க்கத்தை இத்தகைய ஊழலுக்கான தண்டணையோடு பிணைப்பதைப் பற்றி மத்திய அரசு இனிமேல்தான் யோசிக்க வேண்டும் என்றால், என்ன நாடு இது?
கொள்ளைக் கொள்கைகள்
இந்தியா நகர்மயமாக்கலை வெறிகொண்டு அணைக்கிறது. இந்தியாவில் வாழும் மூவரில் ஒருவர் நகரத்தில் வாழ்கிறார் என்று பெருமிதம் அடைகிறார் மத்திய நகர்ப்புற அமைச்சர்.
ஆனால், நகர்மயமாதலால் பெருகும் வீடற்றவர்களின் எண்ணிக்கையை (7.8 கோடி பேர்) எதிர்கொள்ள அரசிடம் சரியான திட்டங்கள் ஏதும் இல்லை. வீடுகளின் பற்றாக்குறை 1.87 கோடி. 53% பேருக்குக் கழிப்பறை வசதி இல்லை.
தன்னுடைய குடிமக்களுக்கு வீடு அல்ல; குறைந்தபட்சம் கழிப்பறை வசதியைக்கூட இன்னமும் முழுமையாக உருவாக்கித் தர முடியாத தேசம், தம் ரத்தத்தைச் சிந்தி உழைப்பின் பலனைக் குருவி சேர்ப்பதுபோல சேகரித்து, தாமே ஒரு சொந்த வீட்டை உருவாக்கிக்கொள்ள முனையும் மக்களிடம் அதிகாரவர்க்கம் கொள்ளை அடிப்பதற்கேற்ற கொள்கைகளையே வகுத்துவைத்திருக்கிறது.
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கான நியாயமான விலை இவ்வளவுதான் என்பது யாருக்காவது தெரியுமா? எந்தெந்தப் பகுதியில் எத்தனை அடி அஸ்திவாரம் போட வேண்டும், கட்டுமானப் பொருட்களின் தரமான கலவை நிர்ணயத்தை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை யாராவது அறிவார்களா? இதுபற்றியெல்லாம் அரசுக்கு ஏதாவது அக்கறை உண்டா?
ஒரு வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக்குச் சதுர அடிக்கு இருநூறு ரூபாய் என்பதில் தொடங்கி அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு, பெரும் அங்காடிகளுக்கு என்று ரகம்வாரியாகச் சட்டபூர்வ அனுமதிக்கு இவ்வளவு, சட்ட மீறல் அனுமதிக்கு இவ்வளவு என்று லஞ்ச நிலவரம் சொல்கிறார்கள் தரகர்கள். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் ஆளுக்கொரு அளவையும் கையுமாக ஆய்வு என்ற பெயரில் எதைத் தேடி அலைகிறார்கள் அல்லது யாருக்கு நாடகம் காட்டுகிறார்கள்?
தொழிலாளியா, யார் அது?
தேசிய அளவிலான புள்ளிவிவரங்களும் தரவுகளும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஒருவர் என்கிற கணக்கில் பணியின்போது பாதிப்புக்குள்ளாவதாகச் சொல்கின்றன. தேசியக் குற்றச்செயல்கள் பதிவேடுகூட சென்னையில் 2013-ல் மட்டும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததாகத் தெரிவிக்கிறது.
ஆனால், தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தகவல்கள்படியோ 2008-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் எந்தத் தொழிலாளரும் காயம் அடையவுமில்லை, உயிரிழக்கவும் இல்லை. தகவல் அறியும் சட்டப்படி, கேள்வி கேட்டவர்களுக்கு அப்படித்தான் பதில் சொல்லியிருக்கிறது வாரியம். தொழிலாளர்கள் நலனில் நமக்குத்தான் எத்தனை அக்கறை?
சுரணை எங்கே கிடைக்கும்?
ஒரு சின்ன மழைக்கே இடிந்து விழும் கட்டிடம்; அப்படி இடிந்து விழுந்த ஒரு கட்டிடத்துக்கான மீட்புப் பணிக்கே ஒரு வார கால அவகாசம் தேவைப்படும் நகரம்; இங்கே ஒவ்வொரு நாளும் கட்டப்படுகின்றன பல நூறு கட்டிடங்கள். வழக்கம்போல யாவும் தொடர்கின்றன. ஞாயிற்றுக்கிழமை கட்டுமான நிறுவனங்களின் ஓசி சவாரியில் தொடங்கி மவுலிவாக்கத்தில் முதலீடு பண்ண இது தோதான நேரம் என்கிற கணக்குகள் வரை யாவும் தொடர்கின்றன. ஏன் துளி சலனம் இல்லை? ஏன் ஒரு கேள்வி எழவில்லை? நம் சகமனிதன் சதை தின்று, அவர்தம் உயிர்குடித்துப் பிழைக்கப் பழகுகிறோமா நாம்?

லதா மங்கேஷ்கர்

லதா தீதி (அக்கா) என்று பலராலும் செல்லமாக அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியிருக்கிறார். அதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்திருக்கிறார்.
லதா மங்கேஷ்கர் என்னும் இந்த இசைக்குயில், 1942-ல் தன் கானத்தை இசைக்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கும் மேலாகத் தெவிட்டாத தன் தேன் குரலால் ரசிகர்களைத் தன் இசையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெருமையும் லதா மங்கேஷ்கருக்கு உண்டு. எப்போதும் நிற்காத நதியாக, உட்காராத காற்றாகப் பாடலையே தன் சுவாசமாகக் கொண்டு இயங்கிவருகிறார். சுமார் 980க்கும் அதிகமான இந்திப் படங்களில் பாடி மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த வயதிலும் இன்னிசை வழங்கிவருகிறார். இவர், ஆஷா போஸ்லே, ஹ்ருதயநாத் மங்கேஷ்கர், உஷா மங்கேஷ்கர், மற்றும் மீனா மங்கேஷ்கர் ஆகியோரின் தமக்கை.
இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான பரரத் ரத்னா விருது பெற்ற மகாராஷ்டிராவின் முதல் பெண்மணி என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்தியாவில் பாரத் ரத்னா விருது பெற்ற இரண்டாவது பாடகி இவர். முதலில் விருது பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி.
கண்கலங்கிய நேரு
1962-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முன்னிலையில் லதா மங்கேஷ்கர், திரைப்படம் எதிலும் வராத தேசபக்திப் பாடலைப் பாடினார். இந்தியா- சீனா போரின் விளைவாக மனமொடிந்து துயரத்தில் ஆழ்ந்திருந்த நேருவின் கண்களில் கண்ணீர் கோத்து நின்றது.
“பிரதீப் எழுதி ஸி. ராமச்சந்த்ரா இசை அமைத்த, ‘யே மேரே வதன்கே லோகோ’ என்ற அந்தப் பாடல்தான் நேருவைக் கண்கலங்க வைத்தது” என்கிறார் லதா மங்கேஷ்கர். இந்தப் பாடலை அன்று முதல் தனது எல்லா இசை நிகழ்ச்சிகளின் முடிவிலும் தவறாமல் பாடி அனைவரையும் அழவைத்து வருகிறார்.
மராட்டி மொழி பேசும் கோமந்தக் மராட்டா குடும்பத்தில் பிறந்த லதா, மத்திய பிரதேசம் இந்தூரில் பிறந்தார். அவர் தந்தை பண்டித் தீனாநாத் மங்கேஷ்கர், ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதத்தில் பெரிய மேதை. ஒரு நாடக நடிகராகவும் அவர் விளங்கினார். தான் நடித்த ‘லத்திக்கா’ என்ற நாடகத்தின் பெயரைத் தழுவி லதா என்ற பெயரைத் தனது மூத்த மகளுக்குச் சூட்டினார்.
இசைப் பயணம்
லதாவுக்கு 13 வயதானபோது அவருடைய தந்தை இறந்துவிட்டார். அப்போது குடும்பத்தின் நிதி நிலைமை சற்று மோசமானதை அடுத்து, குடும்ப நிதி வசதிக்காக, ‘மெஹல்’ என்ற படத்தில் பின்னணி பாடினார் லதா. கிஷோர் குமாரை அறிமுகப்படுத்திய கேம்சந்த் பிரகாஷ் இசை அமைத்த ‘ஆயேகா ஆனேவாலா’ என்ற பாடல்தான், லதாவைப் புகழின் உச்சாணிக்கே இட்டுச் சென்றது.
லதா திரைப்படத் துறையில் பிரவேசித்தபோது, ஷம்ஷாத் பேகம், நூர்ஜஹான் போன்ற பின்னணிப் பாடகிகள், கொடிகட்டிப் பறந்தனர். நூர்ஜஹானின் பாணியில் லதா பாடியதாகக் கூறப்பட்டது. ஆனால், விரைவிலேயே லதாஜி, தனக்கே உரிய பாணியில் உருது மொழிக் கவிஞர்களின் பாடல்களைப் பாடத் தொடங்கிவிட்டார். குரலால் மயக்கும் இவர், நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால், ஓரிரு மராட்டிப் படங்களில் நடித்த பின்னர் அதை விட்டுவிட்டார்.
1974-ம் ஆண்டு, லண்டனில் உள்ள ராயல் ஆல்பெர்ட் ஹாலில் இனிய இசைமழை பொழிந்த முதல் இந்தியப் பெண் லதா மங்கேஷ்கர். அந்தக் காலத்தின் பிரபல கதாநாயகியாக இருந்த இந்தி நடிகையும் திலீப் குமாரின் மனைவியுமான சாயிரா பானுவின் குரல்தான், திரைப்படங்களில் தனது குரலுடன் மிகச் சிறப்பாகப் பொருந்துகிறது என்கிறார் லதா.
மதுமதி என்ற படத்தில், சலீல் சௌத்ரி இசையமைத்த ‘ஆஜாரே பர்தேசி’ என்ற பாடல்தான் லதாவுக்கு மிகவும் பிடித்த பாடல். ஓ.பீ. நய்யர் நீங்கலாக மற்ற எல்லா இந்தி இசையமைப்பாளர்களின் இசையிலும் லதா பாடியிருக்கிறார்.
1999-ல், ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தபோது, லதாவின் உடல்நிலை சரியாக இல்லாத காரணத்தால், ஒரு கூட்டத்தில்கூட அவரால் கலந்துகொள்ள முடியாமல் போயிற்று. டெல்லியில் ஒரு எம்.பி. என்ற வகையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டையோ அல்லது எம்.பி.க்கான சம்பளத்தையோ அவர் ஏற்கவில்லை.
இசைக்குள் இருக்கும் கருணை
லதாவுக்கு வைரத்தின்மீது அசாத்திய மோகம். அவர் அணிவது பெரும்பாலும் வைர நகைகளே. ‘அடோரா’ என்ற இந்திய ஏற்றுமதி கம்பெனி ஒன்றுக்கு இவர் வடிவமைத்தும் தந்திருக்கிறார். ‘ஸ்வராஞ்சலி’ என்ற இந்த வைரத் திரட்டிலிருந்த ஐந்து வைரக்கற்கள் ஏலத்துக்கு விடப்பட்டன. அதன் மூலம் கிடைத்த ஒரு லட்சத்து ஐயாயிரம் பவுண்ட் ஸ்டர்லிங் (1 பவுண்ட் ஸ்டர்லிங் - 102 ரூபாய்) பணத்தை 2005-ம் ஆண்டு காஷ்மீர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைப்பு நிதிக்குக் கொடுத்துவிட்டார்.
லதா ஃபவுண்டேஷனின் பல உதவித் திட்டங்களுக்காக லத்தீன் அமெரிக்கா முழுவதிலும் தரும காரியங்களுக்காக ஏராளமாகவும் தாராளமாகவும் நிதி திரட்டிவருகின்றார்கள்.
நீளும் விருது பட்டியல்
84 வயதாகும் இந்த இசைக்குயிலின் இயற்பெயர் ஹேமா. திருமணம் செய்துகொள்ளாமல், இசைக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் இவர். பாரத ரத்னா தவிர, பத்மபூஷன், பத்மவிபூஷன், தாதாசாஹேப் ஃபால்கே, மகாராஷ்டிரா பூஷன் விருது, என்.ஆர். நேஷனல் விருது, நியூயார்கிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் உட்பட ஆறு பல்கலைக்கழகங்களின் கௌரவ டாக்டர் பட்டம் என்று பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
இவருடைய கிரிக்கெட் ஆர்வமும் எல்லை கடந்தது. லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இவருக்காகவே ஒரு நிரந்தர கேலரி ஒதுக்கப்பட்டுள்ளதே அதை நிரூபிக்கும்.
மீரா பஜன்கள், பகவத் கீதை ஸ்லோகங்கள் , கபீரின் தோஹாஸ், சூர்தாஸின் கவிதைகள் போன்ற பல விதமான பாடல்களைப் பாடியிருந்தும், சூஃபி பாடலைப் பாடும் வாய்ப்பு கிடைக்காமலேயே நழுவிவருகிறதே என்று ஆதங்கப்பட்ட லதாவின் கனவு அண்மையில் நனவாயிற்று. லதாவின் சகோதரர் மகன் பைஜ்நாத், இரண்டு சூஃபீ பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்தபின் எச்.எம்.வீ. நிறுவனத்தார் வெளியிட்ட ‘யா ரப்பா’ என்ற ஆல்பத்தில், லதா இரண்டு சூஃபி பாடல்களைப் பாடியுள்ளார்.
திரையிசையில் சாதனை புரிந்த இவர், இன்றைய திரைப்படத் துறைக்குத் தன்னைப் பொருத்தமற்றவராகக் கருதுவதாகக் கூறுகிறார். “சினிமா இப்போது நிறைய மாறிவிட்டது. சினிமா சிறப்பாக இல்லை என்று கூறமாட்டேன். அதில் இப்போது பொருந்தக்கூடியவளாக நான் இல்லை” என்கிறார். 25 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில், 20 இந்திய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ள இந்த இசைக்குயில், தொடர்ந்து தன் குரலைக் காற்றில் பறக்கவிட்டபடியே இருக்கிறது.

For God’s Sake An Adman on the business of religion

மேக்ஸ் வெபர் எனும் சமூகவியல் மேதை “அறிவியல் வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட ஏற்பட உலகில் கடவுள் நம்பிக்கை பெருமளவு குறையும்” என்றார். மாறாக கடவுள் நம்பிக்கையும் அதைச் சார்ந்த வாழ்வியல், வியாபாரக் கூறுகளும் அதிகரித்துள்ளன என்கிறார் அம்பி பரமேஸ்வரன்.
For God’s Sake An Adman on the business of religion என்ற அவரின் புத்தகம் இதை ரசமாய் படம் போட்டுக் காட்டுகிறது. நுகர்வோர் உளவியல் பற்றி இந்திய ஆசிரியர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் குறைவு. அதிலும் தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு அனுபவஸ்தர் எழுதியுள்ளதால் இரண்டாம் சிந்தனை இல்லாமல் உடனே வாங்கினேன்.
தன் 35 வருட விளம்பர உலக அனுபவத்தின் மூலமாக இந்திய வியாபார நிறுவனங்களையும், இந்திய நுகர்வோர்களையும் சுவாரசியமாக அலசுகிறார். ஒரு பக்கம் கூட அலுப்புத் தட்டாத அளவிற்கு, ஒரு நாவல் படிக்கும் மன நிலைக்கு வாசகனைத் தள்ளி கடைசி வரை தன் வசம் வைத்திருக்கும் இவரின் அபார நடை குறிப்பிடத்தக்கது.
தன் பி.ஹெச்.டிக்காக திரட்டிய விஷயங்களைப் புத்தகமாக்கியதால், வெறும் அபிப்பிராயங்களாக இல்லாமல் புள்ளிவிவரக் குறிப்பும், ஆராய்ச்சி சார்ந்த கருத்துக்கள் என்பதால் ஒரு நம்பகத்தன்மை தெரிகிறது.
ஆதாரச் செய்தி ஒன்றுதான். இந்தியன் ஒரு பக்கம் நவீனம் ஆக ஆக இன்னொரு பக்கம் மதம் சார்ந்த நம்பிக்கைகளை முன்பை விட தூக்கிப் பிடிக்க ஆரம்பித்துள்ளான். இந்த முரண்பாடான வளர்ச்சி ஒரு சந்தை வாய்ப்பு. இதை எல்லா நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்
எவ்வளவு பெரிய வண்டி வாங்கினாலும் பிள்ளையார் கோயில் முன் பூஜை உண்டு. ஸ்கிரீன் சேவர்களிலும் அதிகமுள்ள கடவுளும் விநாயகர்தான்!
திருப்பதி பாலாஜிதான் இந்திய கடவுள்களில் வசூல் ராஜா. அடுத்து வைஷ்ணவோ தேவி. பின் சபரி மலை. எல்லா கோயில் பிரசாதங்களையும் ஆன்லைன் மூலம் பெறும் வசதிகளும் வந்துள்ளன. திருப்பதியில் வழிக்கப்படும் தலை முடி அனைத்தும் ஐரோப்பிய நாடுகளில் “விக்” தயாரிப்புக்கு விற்கப்படுகின்றன. அதுவும் ஈ- ஆக்சன் எனும் வலைதள ஏலத்தில் சென்ற ஆண்டு 133 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது.
இது தவிர விசா பாலாஜி கோயில் என ஹைதராபாத் அருகில் ஒரு கோயில் உள்ளதாம். விசா கிடைக்க வேண்டினால் விசா உறுதி என அப்ளிகேஷனும் கையுமாக ஒரே கூட்டமாம்.
உலகிலேயே அதிக மக்கள் பங்கு கொள்ளும் மகா உற்சவம் கும்பமேளா. இதைப் பற்றி ஹார்வர்ட் நிர்வாகப் பள்ளி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதை முறைப்படுத்திச் செய்தால் எவ்வளவு சந்தைப்படுத்தலாம் என்று அதில் விளக்குகிறது. ஒரு நகரையே இதற்காக உருவாக்கிக் கலைக்கலாம் எனத் தெரிகிறது. ஹெலிகாப்டர் தர்ஷன் எல்லாம் வைக்கலாம் என டைரக்டர் ஷங்கர் ரேஞ்சுக்கு யோசித்திருக்கிறார்கள்.
அக்ஷய திருதியை என்று யாரோ ஒரு புத்திசாலி நகைக்கடைக்காரர் கண்டுபிடிக்க அது மக்களை வரிசையில் நின்று தங்கம் வாங்க வைக்கிறது. அது போல விற்பனைக்கு மந்தமான ஆடி, மார்கழி மாதங்களில் ஆடித்தள்ளுபடி, மார்கழி இசை விழா எனத் தமிழர்கள் புத்திசாலித்தனமாக வியாபாரம் செய்கிறார்கள் என்கிறார்.
இந்தியாவின் 80% மதம், இந்து மதம் என்பதால் பெரும்பாலான விற்பனை உத்திகளும் இந்துக்களை நோக்கியுள்ளன என்கிறார் அம்பி. வீடுகளில் வாஸ்து, கல்யாணத்திற்கு முன் மணப்பொருத்தத்திற்கு ஜோதிடம், அசுப காரியங்கள் நடந்தால் ஹோமங்கள் என இந்து வணிகம் நடக்கிறது என்கிறார்.
அது போல நம் ஊரில் ஏன் சைக்கியாட்ரி பெரிதாக போணியாகவில்லை என்று அம்பி கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. அவர்கள் வேலையை கார்பரேட் சாமியார்கள் எடுத்துக் கொண்டுவிட்டார்கள். அதுபோல யோகா, ஆயுர்வேதா போன்றவையும் பக்தி சந்தையின் விரிவாக்கங்கள்தான்.
ஆனால் முஸ்லிம்களை இந்திய வணிகம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கறுப்பு பர்தா அணியும் வங்கதேசத்தில்தான் பெண்களுக்கான நவ நாகரிக உடைகள் தயாரிக்கிறார்கள். அதை அவர்கள் உள்ளே அணிகிறார்கள்! அதுபோல பெண்களை அவர்கள் சமமாக நடத்துவதில்லை என்பதும் சர்ச்சைக்குரிய விஷயம். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் முஸ்லிம்களின் ஆண்- பெண் விகிதம் இந்துக்களின் ஆண்- பெண் விகிதத்தை விட ஆரோக்கியமாக உள்ளது! 2050ல் உலகில் 50% ஜனத்தொகையை எட்டிப்பிடிக்கவிருக்கும் அவர்களை சரியாகப் புரிந்தால் நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளது. Islamic Banking போன்ற விஷயங்கள் இந்தியாவில் பெருகலாம் என்கிறார் ஆசிரியர்.
புடவை, தாலி, திலகம் என அனைத்தும் டி.வி விளம்பரங்களில் வழக்கொழிந்து போனாலும் சீரியல்களில் அவை அனைத்தும் புத்துயிர் பெற்று ஜெகஜோதியாக வருவது யோசிக்க வைக்கும் விஷயம்.
பக்தி சார்ந்த படங்கள், சீரியல்கள், பத்திரிகைகள் என்றுமே தோற்றதில்லை. வெளியூர் செல்கையில் டிபனுக்கு நுழைந்தால் கல்லா ஆசாமி விபூதியும் ஊதுபத்தி வாசனையாக இருந்தால் “நல்ல ஓட்டல்” என நுழைகிறோம்.
பார்ஸி வைத்திருந்த கார் என்றால் நல்ல விலைக்குப் போகுமாம். முஸ்லிம்கள் என்றால் வீடு கொடுக்க மாட்டோம். கர்னாடக சங்கீதம் என்றால் பிராமணர்கள் ஆசிரியர்களாக இருக்க வேண்டும். நர்ஸ் என்றால் கேரள கிறித்துவ சேச்சிகள். வடக்கில் டேக்ஸி ஓட்டுனர்கள் என்றால் சிங்கை நம்பி ஏறுவோம்.
அது போல உச்ச கட்ட வியாபார சீஸன் ஹோலியா, விஷுவா, ரம்ஜானா, கிறிஸ்துமஸா, பொங்கலா, தீபாவளியா, கணேஷ சதுர்த்தியா என்பதை வாழும் மக்களிடம் மதம் சார்ந்த நம்பிக்கைகள் நிச்சயிக்கின்றன.
“ஆனால், வருங்காலத்தில் சாதி, மதப் பிரிவுகள் வேலையிடங்களில் பார்க்கமாட்டார்கள்; எல்லாம் மாறிவிடும்” என்ற இவர் கணிப்பு மட்டும் மணிரத்னம் படத்து கிளைமாக்ஸ் போல இடிக்கிறது.
நீங்கள் எந்த வியாபாரம் செய்தாலும் நம் மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை விற்பனை உத்திகளில் இணைப்பது முக்கியம்.
உதாரணத்திற்கு 2013 ஆய்வுப்படி, இந்தியாவின் திருமணச் சந்தை மட்டும் 1.5 லட்சம் கோடி ரூபாய். அதில் உங்கள் தொழில் எவ்வளவு பைசா பார்க்கிறது?
கடவுள் தேவையில்லை என நாத்திகர்கள் சொல்லலாம். ஆனால் வியாபாரிகளுக்கு கடவுள் அவசியம் தேவை.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!

வெள்ளி, 4 ஜூலை, 2014

சமச்சீர்க் கல்வி -மெட்ரிக் பாடத்திட்டம்-சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம்

சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் நிறை, குறைகள்
மிகக் குறுகிய காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட பாடத்திட்டமல்ல சமச்சீர்க் கல்வித் திட்டம். ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆசிரியர்கள் மட்டுமின்றி சமூக அக்கறையுடைய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கற்றல் முறையில் ஆக்கபூர்வமான பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள் எனப் பலதரப் பட்டவர்கள் பாடநூல்கள் உருவாக்கத்தில் பங்கேற்றனர். புத்தகங்களில் பலரும் புகுத்த நினைத்த புதுமைகளை ஓர் அளவுக்கு மேல் புகுத்த முடியவில்லை. பல ஆண்டு களாக மாறாத தன்மையுடனும், கற்றல் முறையில் பெரிய மாற்றங்களைச் செய்யாமலும் கற்பித்துவரப்பட்டவற்றில் மாற்றங்களைக் கொண்டுவருவது என்பது அத்தனை எளிதல்ல. மேலும், எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதையும் செய்துபார்த்துதான் கற்றுக்கொள்ள முடியுமே தவிர, முன்கூட்டியே அல்ல. தொடர்ந்து பள்ளிக்கல்விகுறித்த விவாதங்கள் தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு நடைபெறாததும் இந்தப் பரிசோதனை முயற்சியின் தன்மையைப் பாதித்தது எனலாம். அடுத்து, ஆசிரியர் பயிற்சிக்கான கல்லூரிகளும் நிறுவனங்களும் ஆயிரம் இருந்தும் கற்றல் முறையைப் பற்றி ஆக்கபூர்வமாக எதுவும் செய்யப்படாமல் இருப்பதும், இந்தப் பயிற்சி மையங்கள் லாப நோக்கத்துக்காக மட்டும் நடத்தப்படுவதும், இத்தகைய புதிய முயற்சிகளின் வீச்சையும் ஆழத்தையும் கட்டுப்படுத்திவிடுகின்றன.
இருப்பினும் அதுவரை இருந்துவந்துள்ள பாடநூல் களுடன் ஒப்பிடும்போது, சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட நூல்கள் மேம்பட்டவையாக உள்ளன என்பதே உண்மை. அவற்றில் உள்ள நிறை, குறைகள் ஒருபுறமிருக்க, அவற்றை மேலும் சீர்ப்படுத்துவதும், அத்தகைய சீர்ப்படுத்துதலை மெட்ரிக் பள்ளி வல்லுநர்கள் சொல்வதைக் கொண்டு மட்டும் தீர்மானிக்காமல், வேறு அளவுகோல்களைக் கொண்டு யோசிப்பதும் அவசியம்.
மெட்ரிக் பாடத்திட்டம்பற்றிப் பேசலாமா?
மெட்ரிக் பள்ளிகள் பயன்படுத்திவந்துள்ள பாட திட்டங்களைப் பற்றிய ஆய்வும் நமக்குத் தேவை. இத்தகைய ஆய்வுக்கான வெள்ளோட்டமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிரன்தர் என்ற ஆய்வு மையம் தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி அகிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் வகுப்பு 1-10 வரைக்குமான சமூகவியல் பாடநூல்களையும் மொழிப் பாடநூல்களையும் (ஆங்கிலத்தையும், அந்தந்த மாநிலத்துக்குரிய மொழிகளைக் கற்பிக்கும் நூல்களையும்) மிக ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தியது. அரசுப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் நூல்களும், தனியார் பள்ளிகள் பயன்படுத்தும் நூல்களும் என தமிழ்நாட்டிலிருந்து 36 பாடநூல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மெட்ரிக் பள்ளிகளில் அன்று பயன்படுத்தப்பட்டுவந்த பல பாடநூல்களும் இதில் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த, ஆங்கிலமும் தமிழும் தெரிந்த, கல்விப் புலத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட வல்லுநர்கள்தான் இந்த ஆய்வைச் செய்தனர்.
தனியார் பள்ளிகள் பயன்படுத்தும் பாடநூல்கள் முன்வைக்கும் சமுதாயப் பார்வை, ஆங்கிலம் என்பதை ஒரு மொழியாகக் கற்பிக்காமல் வாழ்க்கை முறையாக, வர்க்க, சாதி அடையாளத்துக்கான குறியீடாகக் கற்பிக்கும் முறைமை, சமூகவியல் பாடங்களில், குறிப்பாக வரலாறுபற்றிய பாடங்களில் காணப்படும் பழமையான, தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டுவரும் அதே புளித்துப்போன விவரங்கள், புவியியல் பாடங்களை எழுதியவர்கள் இணையத்திலிருந்து அப்படியே தகவல்களை இறக்கி, நமது சூழலுக்குச் சற்றும் பொருத்தமற்ற விஷயங்களைப் பாடங்களாக வழங்கியது - முக்கியமான பாடநூல் பதிப்பாளர்களின் நூல்களும் சரி, பாடநூல் தயாரிப்பை வியாபாரமாக மட்டும் காணும் பதிப்பாளர்களின் நூல்களும் சரி, இந்த இரண்டு வகை நூல்களும் இப்படித்தான் இருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சி.பி.எஸ்.சி. பாடத்திட்ட ஒப்பீடு சரியா?
சி.பி.எஸ்.சி. பாடநூல்களுடன் சமச்சீர்ப் பாடத்திட்டத்தை ஒப்பிட்டுப் பேசும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒன்றை மறந்துவிடுகிறார்கள் - அந்த நூல்கள் இவர்கள் விரும்பும் ‘தரத்தை'யோ, இவர்கள் பயிற்றுவிக்க விரும்பும் போட்டிக்கான கல்வியையோ முன்னிட்டுத் தயாரிக்கப்பட்டவை அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்க்கை நிலைகள், சாதியாலும், பொருளாதார, சமய, பிராந்திய வேறுபாடுகளாலும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் தற்காலச் சமுதாயத்தின் பல்வேறு கூறுகள் ஆகியவற்றை அக்கறையோடும், அதே சமயம் கறாராகவும் பதிவுசெய்யும் பாடங்கள் தேவை என்ற அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளாக, இத்தகைய விஷயங்களைத் தமது எழுத்துகளில் பதிவுசெய்துவரும் தலித் சமுதாயத்தினர், பெண்கள், பழங்குடியினர் ஆகியோரின் புரிதல்களை உள்வாங்கிக்கொண்டு பாடத்திட்டம் அமைய வேண்டும் என்ற அக்கறையிலும்தான் தற்போது அமலில் இருக்கும் சி.பி.எஸ்.சி. பாடநூல்கள், அதாவது, என்.சி.ஆர்.டி. தயாரித்துள்ள நூல்கள் அமைந்துள்ளன. தனியார் நடத்தும் பதிப்பகங்கள் என்.சி.ஆர்.டி. வல்லுநர்கள் செய்த வேலையில் ஒரு பங்குகூடச் செய்யாமல், அவற்றை அடியொற்றி, அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு அவசரஅவசரமாகப் பாடநூல்களைத் தயாரித்தனர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. என்.சி.ஆர்.டி. நூல்களையும் தனியார் பதிப்பகங்களின் நூல்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களுக்கு இது உடனடியாக விளங்கிவிடும்.
உண்மையான தரம் எது?
எனவே, சமச்சீர்க் கல்வியின் தரத்தைப் பற்றிப் பேசுவோர், தரம் என்று எதைக் கூறுகிறார்கள் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. ஏழை, கிராமப்புறக் குழந்தைகளுக்குரிய கல்வி தங்களுக்குப் போதுமானதல்ல என்ற இவர்களின் கூற்று இவர்களது மேட்டுக்குடி மனநிலையைக் காட்டுகிறது. எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான கல்வியைப் பயில வேண்டும் என்பதல்ல நாம் சொல்லவருவது. குழந்தைகளின் வாழ்நிலைச் சூழலுக்கு ஏற்ப வகுப்பறைகளை அமைத்து, அச்சூழலுக்குரிய பிரச்சினைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, வளமான கற்பித்தல் முறைகளைக் கையாண்டு, குழந்தைகளைச் சிந்திக்க வைக்கும் கல்வியையும் அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் கல்வியையும் நாம் வளர்த்தெடுக்க வேண்டும். எல்லோருக்கும் பொதுவான கட்டணமும், மரியாதையும், சாதி வேறுபாடுகளையும் பாகுபாடுகளையும் வெல்லும் பொதுமையும் பள்ளிகளில் இருப்பதுதான் சமச்சீர்க் கல்விக்கான பண்புக் கூறுகளாக இருக்க முடியும். கூடவே, ஆசிரியர்கள் எல்லாச் சமுதாயங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பதும் முக்கியம். அதுபோல, கல்வியை நிர்வகிக்கும் அலுவலர்கள் சமச்சீர் என்பதன் தன்மையை உணர்ந்தவர்களாக இருத்தலும் அவசியம்.
கல்விப் புலத்தில் பல போக்குகள் இருப்பது நல்லது தான். பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதும் முக்கியம். ஆனால், இவற்றை மேற்கொள்வோர், காலம்காலமாகக் கல்வி மறுக்கப்பட்டுவந்துள்ள மாணவர் களின் நலனை, போனால் போகிறது என்ற அலட்சிய மனநிலையுடன் போகிற போக்கில் அணுகினால் எத்தனை சிறப்பான கற்பித்தல் முறை என்றாலும் அதற்குப் பயனில்லாமல் போய்விடும். பன்மைத்துவம் என்ற பெயரில் மறுபடியும் சாதி ஆதிக்கமும் அறிவாளர்களின் அதிகாரமும்தான் எஞ்சி நிற்கும்.
- வ. கீதா, கல்வியாளர், வரலாற்று ஆய்வாளர், தொடர்புக்கு: geethv@gmail.com