செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

How to Appoint a Judge?

முதல் உலகப் போரில் பிரான்ஸை வழிநடத்திய பிரஞ்சு பிரதமர் கிளமென்சோ இப்படிச் சொன்னார்: “ராணுவத் தளபதிகளிடம் மட்டும் விட்டுவிட முடியாத அளவுக்கு முக்கியமான விவகாரம் போர்.” இதைப் போலவே நீதிபதிகள் வசம் மட்டுமே விட்டுவிட முடியாத அளவுக்கு நீதிபதிகள் நியமன விவகாரம் முக்கியமானது என்பது நிரூபணமாகியிருக்கிறது. அண்மையில் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட தேசிய நீதித் துறை நியமன ஆணைய மசோதா இந்த நிலையை சரிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சி. ஆனால், முந்தைய முறையின் (கொலீஜியம்) மிக முக்கியமான குறைபாடுகள் எதையும் இந்த மசோதா களையவில்லை. மாறாக, நீதித் துறையும் செயலாக்கத் துறையும் அதிகாரத்தைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள மட்டுமே இந்த மசோதா வழிவகுத்திருக்கிறது.
1950-ல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டப்படி உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்குமான நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர் நியமிப்பார். மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி நடக்க வேண்டியவர் குடியரசுத் தலைவர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆக, உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் இருப்பது செயலாக்கத் துறையிடமே. 1973 வரை – அதாவது - ‘‘இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா'' என்ற எதேச்சாதிகார நிலை தோன்றும்வரை இந்த நடைமுறைக்குப் பிரச்சினை ஏதும் வரவில்லை.
ஆளும் கட்சியின் சித்தாந்தத்துக்கு விசுவாசமான வர்களே நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள் என்பது இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் உருவான அவலம். ஒருவர் நீதிபதியாகச் சட்டத்தைத் தெரிந்து வைத்திருப்பதைவிட சட்ட அமைச்சரைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்று கிண்டலாகச் சொல் லப்படும் நிலை அப்போதுதான் உருவானது. 1992-ல் நடந்த ஒரு வழக்கில், காலம்சென்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெ.எஸ். வர்மா தலைமையிலான அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தின் 124-வது பிரிவில் இருக்கும் ‘கலந்தாலோசித்து' என்ற சொல்லுக்கு ‘ஒப் புதலுடன்' என்ற விளக்கமளித்து அதுவரை நீதிபதி கள் நியமனத்தில் செயலாக்கத் துறைக்கு இருந்த அதிகாரத்தை ஒழித்து அதை நீதித் துறையின் வசம் கொண்டுவந்தது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்று இருந்ததை விரிவுபடுத்தி மேலும் இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியமானது உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமனம் செய்வது என்பது 1993 முதல் நடைமுறைக்கு வந்தது.
இது இந்திய அரசியலைமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல, மக்களாட்சி தத்துவத்துக்கும்கூட எதிரானது. அநேகமாக உலகின் வேறு எந்த நாட்டிலும் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிப்பது என்பது கிடையாது. இத் தகைய நிலை தோன்றியதற்குக் காரணம் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் சுயநலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலை தோன்றியதும், அரசியல் வர்க்கம் மக்களிடையே முற்றிலுமாக மதிப்பிழந்ததுமே.
தெளிவில்லாத வழிமுறைகள்
1998-ல் அதுவரை மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருந்த கொலீஜியம், தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் என ஐந்து உறுப் பினர்களைக் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது.
கொலீஜியம் முறையில் செயலாக்கத் துறையின் தலையீடு பெரிதும் குறைக்கப்பட்டது உண்மை. ஆனால், நியமனமுறையின் தரம் உயர்ந்தாகச் சொல்ல முடியாது. உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் தகுதிகள் என்னென்ன, அவர்களைத் தெரிவுசெய்வதற்கான வழிமுறைகள் என்னென்ன போன்ற விஷயங்கள் எதிலும் தெளிவில்லை.
எல்லாவற்றையும்விட முக்கியமாக வெளிப்படைத் தன்மை இல்லை. கொலீஜியம் என்பது தேவைப்படும் நேரங்களில் கூடிக் கலையும் சபையாகவே இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சமீப காலமாக வெளிப்படுத்திவரும் சில தகவல்கள் நீதிபதிகள் நியமனத்தில் நடந்து வரும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.
தோல்வியடைந்த கொலீஜியம்
கொலீஜியம் வருவதற்குக் காரணமாக இருந்த தீர்ப்பை அளித்த ஜெ.எஸ். வர்மாவே பின்னர் வருத்தப்பட்டு கொலீஜியம் முறை இப்படித் தோல்வி யுறும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். ‘அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு' என்ற கண்டுபிடிப்புக்கு அரசியலமைப்பில் எந்த ஆதாரமும் இல்லை என்றபோதிலும் சிறந்த சட்ட நிபுணர்கள் பலராலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதற்குக் காரணம் இன்றைய அரசியல் வர்க்கத்தால் அரசியலமைப்பின் ஆன்மா சிதைக்கப்படுவதிலிருந்து அது பாதுகாக்கிறது என்பதால்தான். ஒருவேளை, கொலீஜியம் மிகவும் சிறப்பானவர்களையே எப்போதும் நீதிபதிகளாக நியமித்திருக்கும் எனில் அதையும் மக்களும் சட்ட நிபுணர்களும் மனதார ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
இதற்கு மாற்றாக இப்போது நிறைவேற்றப் பட்டிருக்கும் மசோதா எந்த வகையிலும் நிலைமையை மேம்படுத்தப்போவதில்லை. தொடக்கத்தில் செயலாக்கத் துறையிடமிருந்த நீதிபதிகள் நியமன அதிகாரம் பின்னர் நீதித் துறையின் கைகளுக்கு வந்தது. இந்தப் புதிய மசோதாவின்படி அந்த அதிகாரம் இப்போது இரு தரப்பாலும் பங்குபோட்டுகொள்ளப்படும் என்பதைத் தவிர்த்து வேறொன்றும் நடக்கப்போவதில்லை. நீதிபதி களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் தகுதிகள் என்னென்ன, அவர்களைத் தெரிவுசெய்வதற்கான வழி
முறைகள் என்னென்ன என்பன எதுவும் இப்போதும் வரையறுக்கப்படவில்லை. அத்துடன் இந்த நியமன முறையிலும் வெளிப்படைத்தன்மை என்பது ஏதுமில்லை.
மேலும் பணிச்சுமை
உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகளும், 24 உயர் நீதிமன்றங்களில் சுமார் 800 நீதிபதிகளும் பணி யாற்றுகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 100 முதல் 200 வரையிலான நீதிபதிகளை நியமிக்க வேண்டியிருக்கிறது. நீதி நிலைநாட்டப்படுவதில் சட்டத்துக்கு இருக்கும் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட முக்கியமானது அந்தச் சட்டத்தை விளக்கி நீதியளிக்கும் நீதிபதியின் ஆளுமை. இந்தக் கருத்தை மனதில் கொண்டு பார்க்கும்போது நீதிபதிகள் நியமனம் எவ்வளவு தீவிரமான விஷயம் என்பது புரியும். இவ்வளவு சுமை கொண்ட பணியை, ஏற்கெனவே பெரும் பணிச் சுமைகளில் சிக்கியிருக்கும் மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் சட்ட அமைச்சரும் நிறைவேற்றுவது என்பது ஆகாத காரியம். இவர்களும் அவ்வப்போது கூடிக் கலையும் சபையாகவே இருப்பார்கள். பிரசாந்த் பூஷண் கூறியிருப்பதைப் போல, ஓய்வுபெற்ற நீதிபதி களையும் மூத்த வழக்கறிஞர்களையும் கொண்ட ‘தி கமிட்டி ஆன் ஜுடிசியல் அக்கவுன்டபிளிட்டி’ என்ற தன்னார்வ அமைப்பு பரிந்துரைத்திருப்பதைப் போன்ற, பரவலான பிரதிநிதித்துவத்தைக்கொண்ட வெளிப்படையான, தேவையான அளவுக்குப் பணி யாளர்களைக் கொண்ட முழு நேர அமைப்பு மட்டுமே நீதிபதிகள் நியமனத்தை முறையாகச் செய்ய முடியும்.
இவர்கள் கருத்தின்படி ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், பொதுவாழ்வில் சிறந்து விளங்குபவர்கள் போன்றோரைக் கொண்டதாக இந்த அமைப்பு இருக்க வேண்டும். அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளையும் கொண்ட குழுவால் பரிந்துரை செய்யப்படும் நபர் இந்த அமைப்பின் (கொலீஜியத்தின்) தலைவராக இருப்பார். அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளையும் கொண்ட குழுவால் பரிதுரைக்கப்படும் ஒருவர், மத்திய அமைச்சரவையால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், மக்களவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி, தலைமை கணக்காளர், மத்திய கண்காணிப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவால் பரிந்துரைக்கப்படும் நபர் என மொத்தம் ஐந்து நபர்களைக் கொண்டதாக இருக்கும். அத்துடன், நீதிபதிகளின் தகுதிகள் மற்றும் நியமன நடைமுறைகள் பற்றி செம்மையான வரையறைகள் கொண்டதாக, முழு நேர மற்றும் முழுமையான வெளிப்படைத் தன்மை கொண்டதாக இந்த அமைப்பு விளங்கும். இத்தகைய ஓர் அமைப்பால் மட்டுமே நீதிபதிகள் நியமனப் பணியை செவ்வனே செய்ய முடியும் என்பது சாமானியருக்கும் புரியக்கூடிய விஷயம்.
ஆனால், இத்தகைய நல்ல அமைப்பு முறை உருவாவதை அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நீதித் துறையினரும்கூட எந்த அளவுக்கு விரும்புகிறார்கள்? அதிகார துஷ்பிரயோகத்துக்கு வாய்ப்பில்லாத அதிகாரத்தால் என்ன பயன் என்றே நம்முடைய மக்களாட்சியின் மூன்று தூண்களும் நினைக் கின்றனவோ..?
- க. திருநாவுக்கரசு, சமூக - அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com

Know about Kadulur

கடல் ஊர். இந்தப் பெயரே பல தருணங்களில் எனக்குக் கிளர்ச்சியைத் தந்திருக்கிறது. எத்தனையோ ஊர்களில் கடல் இருக்கிறது என்றாலும், பெயருக்கேற்றாற்போல, அற்புதமான கடல் ஊர் கடலூர். நீலக் கடல். கண்ணாடிபோல காலடியைத் தழுவும் தெள்ளத்தெளிந்த அலைகள். நீளமான கடற்கரை. கடற்கரையிலிருந்து கொஞ்சம் வெளியே வந்தால், நீளவாக்கில் குறுக்கே செல்லும், படகுகள் ஓடும் பரவனாறு. இன்னும் கொஞ்ச தூரம் கடந்தால், கெடிலம் ஆறு. கேரளத்தை நினைவூட்டக் கூடியவை கடலூரின் கடற்கரைக்கும் பரவனாறுக்கும் இடைப்பட்ட பகுதிகள். சில நிமிஷங்கள் உட்கார்ந்து லயித்தால், அப்படியே காலத்தோடு உறைந்துபோகலாம். அத்தனை ரம்மியம்!
ஒரு ஓடாவியின் கனவு
பரவனாறு தோணித் துறையில் வரிசையாகக் கட்டிக் கிடக்கின்றன சின்னதும் பெரியதுமான தோணிகள். கருப்பமுத்து அம்மன், ஆவணி அம்மன், ஒண்டிவீரன், சண்டக் கோழி... பெரும்பாலும் குலசாமி பெயர்கள் அல்லது சினிமா பெயர்கள். கால்கள் சங்கிலியில் பிணைக்கப்பட்ட கோயில் யானை அசைவதுபோல, தண்ணீரில் கயிற்றுக்குக் கட்டுப்பட்டு அசைந்துகொண்டிருக்கின்றன. சின்னப் பிள்ளைகளின் குறும்பைச் செல்லமாகப் பார்ப்பதுபோல, அவற்றைப் பார்த்தபடியே கரையில் கட்டப்படும் ஒரு பெரும் தோணியைப் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் ஓடாவி ஐயாதுரை. தமிழகத்தின் மூத்த ஓடாவிகளில் ஒருவர். 86 வயது. அனுபவத்துக்குத்தான் வயது; உடலுக்கு இல்லை என்கிறது அவருடைய வேலை.
“ஒரு தோணி கட்டுறதுங்குறது வூடு கட்டுற மாரிதான். என்னா, வூடு கட்டயில நீங்க தப்பு எதனா செஞ்சா, பின்னால ஒரு நா காட்டிக்கொடுக்கும். தோணி கட்டயில தப்பு எதனா செஞ்சா தண்ணீல எறங்குன அன்னிக்கே காட்டிக்கொடுத்துரும். தண்ணீல போவயில எப்படி ஒரு தோணி போவும், காத்தை எப்படி வரிச்சுக்கும், புயலுக்கும் அலைக்கும் எப்படித் தாங்கும்... இப்படியெல்லாம் நெனப்புலேயே ஓட்டிப் பாத்து, ஓட்டிப் பாத்து தோணியக் கட்டணும். அதாம் ஒரு ஓடாவிக்குச் சவாலு” என்கிறார்.
கப்பல் செல்லமுடியாத அளவுக்கு ஆழம் குறைந்த தீவுகளில் சகலப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தும் தோணியை ஐயாதுரை கட்டிக்கொண்டிருக்கிறார். “மொத்தம் நூத்தியிருவதடி நீளம், இருவத்திநாலரையடி அகலம், பதினேழரையடி அடி ஒயரத் தோணி இது. நடுமரம் ஏறா மட்டும் கருமருது. மிச்சமெல்லாம் இலுப்பையும் மலேசிய வேங்கையும். ரெண்டு வருஷமா வேல நடக்குது. இன்னும் ஒரு மாசத்துல எறங்கிடும். ரெண்டரை கோடி ரூவா ஆகியிருக்கு.” ஒரு கனவைப் பார்ப்பதுபோல, பூரிப்போடு பார்க்கும் ஐயாதுரை 17.5 அடி உயரத் தோணியின் உச்சிக்கு, ஏணியில் ஒரு நிமிடத்தில் அநாயாசமாக ஏறி இறங்குகிறார்.
ஊரைப் பற்றிப் பேசும்போது பெருமிதமும் துக்கமும் ஒருசேர அவரைத் தாக்குகின்றன. “எம்மாம் மாரி ஊர் தெரியூமா இது, இன்னா அழகு என் ஊரு? எல்லா அழகையும் தொழிச்சாலைங்களைக் கொண்டாந்து நாசமாக்கிட்டாங்க...” - கண்கள் இடுங்கிப் போகின்றன. பேச முடியாமல் தலை குனிந்துகொள்கிறார்.
போர்களைவிடவும் கொடியவை
தொன்மையான ஊர் கடலூர். கெடிலமாறும் பரவனாறும் கடலும் கூடும் இடத்தில் இருந்ததால், கூடலூர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்று பலருடைய ஆட்சியின் கீழும் இருந்த ஊர். எல்லோருக்குமே கடலூரின் மீது ஒரு கண் இருந்ததன் காரணத்தை ஊரின் வனப்பையும் புவியியல் அமைவிடத்தையும் பார்க்கும்போது ஊகிக்க முடிகிறது. எவ்வளவோ தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது கடலூர். இயற்கைச் சீற்றங்களையும் அடிக்கடி எதிர்கொள்ளும் ஊர். ஆனால், இயற்கைச் சீற்றங்களும் போர்களும் உருவாக்காத பாதிப்பை கடலூரில் நவீன ஆலைகள் உருவாக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.
“காலங்காலமா எங்களுக்குப் பெருமழையும் புயலும் சகஜம். முன்னோருங்க நெறைய போர், சண்டைங்களைப் பார்த்திருக்காங்க. ஆனா, அதெல்லாம் உண்டாக்க முடியாத அழிவை வெறும் 30 வருஷத்துல கொண்டாந்துடுச்சுங்க இந்தத் தொழிற்சாலைங்க. எங்க ஊர் ‘சிப்காட்’ தொழிப்பேட்ட ஒலக அளவுல பேசப்படுற நச்சு மையங்கள்ல ஒண்ணு. நிலத்தடித் தண்ணீ சுத்தமா நாசமாப்போய்டுச்சு. காத்து மூக்குல நெடி ஏறும். ஊருல இல்லாத சீக்கு இல்ல. எம்மா நாளு சும்மாவே பார்த்துக்கிட்டு இருக்கிறது? பத்து வருஷத்துக்கு முன்னாடி, சுத்துச்சூழல்ல அக்கறை உள்ளவங்க களத்துல எறங்கினாங்க. தொடர் போராட்டங்களோட விளைவா, இங்கெ நெறைய ஆய்வுங்களை நடத்தினாங்க. அப்புறம்தான் நம்ப எவ்வளோ பெரிய நச்சு மையத்துல வாழ்ந்துகினுருக்கோம்கிறது ஊர்க்காரங்களுக்குப் புரியவந்துச்சு” என்கிறார்கள்.
தமிழகத்தின் நச்சு மையம்
“இங்கருக்குற 18 பெரிய ஆலைங்களுமே சிவப்புப் பட்டியல்ல வர்ற ஆபத்தான ரசாயனங்களைக் கையாள்ற ஆலைங்க. இவங்க கையாள்ற பல ரசாயனங்க அபாயகரமானதுங்க. கண்ண, தோல, சுவாச உறுப்புங்கள, நரம்பு மண்டலத்த, சிறுநீரகத்த பாதிக்கக் கூடியதுங்க. நாங்க எம்மாம் போராடியும்கூட இங்க உள்ள அதிகாரிங்க அசர்ல. ஆறு வர்சத்துக்கு முன்னாடி நீரி அமைப்பு (NEERI-தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வுக் கழகம்) கடலூர்ல ஆய்வு நடத்துச்சு. ‘கடலூர் ரசாயன ஆலைகள்லேர்ந்து வெளியாவுற நச்சுப் பொகயால இந்தச் சுத்துவட்டாரத்துல இருக்குறவங்களுக்குப் புத்துநோய் வர்றதுக்கான வாய்ப்பு மத்த எடத்தைக் காட்டிலும் ரெண்டாயிரம் மடங்கு ஜாஸ்தியா இருக்கு’ன்னு அந்த ஆய்வறிக்கை சொல்லிச்சு. தேசிய அளவுல இது விவகாரமானதும்தான் கொஞ்சமாச்சும் நடவடிக்கைன்னு ஏதோ எடுக்க ஆரம்பிச்சாங்க” என்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் அருள்செல்வம்.
ஆக்கிரமிப்புகளும் அத்துமீறல்களும்
ஊரின் நிலைமை உருவாக்கும் கவலை பலரையும் போராட்டக் களத்தில் இறக்கியிருக்கிறது. அவர்களில் மருதவாணனும் ஒருவர். பொதுத்துறை வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். “கடலூர்ல எங்க போனீங்கன்னாலும் அரசியல்வாதிங்களோட ஆக்கிரமிப்புங்களையும் ஆலைகளோட அத்துமீறல்களையும் நீங்க பாக்கலாம். ஆலைங்க ஊரை நாசமாக்கிட்டுங்கிறதுக்குப் பின்னாடி ஒரு வரலாறு இருக்கு. தமிழ்நாட்டுல மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்கிற அமைப்பை ஆரம்பிச்சதே 1982-லதான். கடலூர் சிப்காட் 1984-ல அமைக்கப்பட்டது. அந்தக் காலகட்டதுல இன்னிக்கு இருக்குற சுற்றுச்சூழல் விழிப்புணர்வெல்லாம் கிடையாது; அதனால, இந்த ஆலைங்களையெல்லாம் அனுமதிச்சுட்டாங்கங்கிறதை ஒப்புக்கலாம். ஆனா, தண்ணீ நஞ்சாயி, காத்து நஞ்சாயி எப்போ வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கலாம்கிற சூழல் உருவாயிருக்குற இந்த நாள்லேயும் நாம இதை அனுமதிக்கலாமா?
கொடுமை என்னான்னா, உள்ள ஆலைங்களை எதிர்த்து நாங்க போராடிக்கிட்டுருக்குற சூழல்ல, திருப்பூரை அழிச்ச சாயப்பட்டறைத் தொழிலுக்கும் இங்கே அனுமதிச்சு, புது ஆலைங்களுக்கு அனுமதி கொடுக்குது அரசாங்கம். மத்திய அரசாங்கம் தொடர்ந்து தனியார் துறைமுகங்களுக்கும் நிலக்கரி ஆலைங்களுக்கும் அனுமதி கொடுக்குது. நாங்கல்லாம் வாழல; வாழறதுக்காகச் செத்துக்கினுருக்கோம்” என்கிறார்.
ரசாயனக் கடல்
கடலூர் தொழிற்சாலைகளையொட்டி நடந்தால் மனம் பதறுகிறது. பல ஆலைகளின் ரசாயனக் கழிவுகள் குழாய்கள் வழியே கடலுக்குள் கொண்டு விடப்பட்டிருக்கின்றன. கடல் நடுவே அவ்வப்போது கொப்பளித்து நிறம் மாறி அடங்குகிறது தண்ணீர். காலையிலிருந்து மெல்ல நெடியேறிக்கொண்டிருக்கும் காற்று சாயங்காலம் ஆனதும் கடுமையான நாற்றம் கொண்டதாக மாறுகிறது. கண்கள் எரிகின்றன. கண்ணெதிரே புகை ஒரு படலமாக உருவெடுப்பதைப் பார்க்க முடிகிறது. கடற்கரையிலிருந்து தூரத்தில் உருப்பெறும் புதிய துறைமுகங்களும் ஆலைகளும் தெரிகின்றன. கடலோடிகள் கடலை வயிற்றெரிச்சலோடு பார்த்துக்கொண்டிருக்கின்றனர். “தொயில் வுட்டுபோச்சு. காலங்காலமாக் கடலை நம்பியிருந்த குடும்பங்க இன்னைக்கு வேற எதாச்சும் கூலி வேலைக்குப் போயிடலாமான்னு யோசிச்சுக்கினு இருக்குங்க. போராடுறோம். ஒண்ணும் வேலைக்காவல” என்கிறார் சுப்புராயன்.
தலைமுறை தலைமுறையாகக் கடல் தொழிலில் இருந்த புகழேந்தி, தொழில் அற்றுப்போனதால், பிழைப்புக்குக் கறிக்கோழிக் கடைக்குச் செல்கிறார். “சின்ன வயசுல ஒரு வாட்டி கடலுக்குப் போனா, எர்நூரூபாக்கி அள்ளிகினு வருவம். நான் சொல்லுறது அம்பது வர்சத்துக்கு முன்னால. பத்துப் பதினைஞ்சு வர்சத்துக்கு முன்னாடிகூட கரையில ஓடியார்ற வண்ணாத்தி நண்டைப் புடிச்சாலே அன்னிக்குப் பொயப்ப ஓட்டிடலாம். இன்னிக்கு இந்த வயசில நாளெல்லாம் ஒயச்சு சலிச்சாலும் அம்பது ரூவா கிடைக்கலை. என்னா பண்றது? தலையெயித்து. கறிக்கோயி வெட்டுறன். தொறமுகம், நெலக்கரி ஆலையின்னு புச்சு புச்சா கடக்கரையை ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க கடலு அரிக்குது. போயிப் பாருங்க, எத்தன கட்டடம் அரிச்சு இடிஞ்சு வுயிந்து கெடக்குன்னு. மீனு வளம் சுத்தமா காலி. எங்க கஸ்டம் மட்டும் இல்லப்பா இது. எல்லாரு கஸ்டமும்தான். அன்னிக்குப் பத்து ரூவாக்கி ஒரு குடும்பம் மீனு துன்னலாம். இன்னிக்கு நூறு ரூவாக்கி வாங்கி ஒருத்தம் முய்சா மீனு துன்ன முடியாது. திடீர்னு ஒரு நா மீனுங்க கூட்டம் கூட்டமா கடலுல செத்து மொதக்கும். திடீர்னு ஒரு நா சீக்குபுடிச்சி வாய்க்குள்ள கட்டியோட, வவுறு தொங்கிப்போயி வலையில கெடக்கும். கடலால மீனுக்கு மட்டும்தான் பாதிப்பா? மன்சனுக்கு இல்லீயா? யோசிக்கணும். கடலூரு நச்சுக்காத்தும் ரசாயனம் கலந்த கடத்தண்ணீயும் இங்கேக்குள்ளேயேதான் நின்னுக்குமா? உங்கக்கிட்ட வராதா? யோசிக்கணும். எங்க காலம் பூட்ச்சு; நீங்கலாம்தான் இன்னா பண்ணப்போறீங்கன்னு தெர்லபா”
புகழேந்தியின் கேள்விகள் துரத்துகின்றன.

பிரபஞ்சம் வெடித்த அந்த நொடியில்…

http://tamil.thehindu.com/general/education/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article6347740.ece?homepage=true

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02077/sci_2077002g.jpg


இந்த பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் பல கொள்கைகளை உருவாக்கி உள்ளனர். அவற்றில் பிரபஞ்ச பெருவெடிப்புக் கொள்கையைப் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பெரும் வெடிப்பு
பிரபஞ்சம் ஆரம்பத்தில் மிகச் சிறியதாக இருந்தது. மிக வெப்பமாகவும், மிகுந்த அடர்த்தியாகவும் இருந்தது.
பிறகு அதில் ஒரு சமச்சீரின்மை ஏற்பட்டது. அதன் காரணமாக இது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடைந்தது. அதன் போக்கில் பல பொருட்களை அது தோற்றுவித்தது. இன்னமும் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.
காலத்தின் பிறப்பு
வெடித்த கணமே காலமும் விண்வெளியும் தோன்றியது. பிரபஞ்சமும் காலமும் இணைந்து பிறந்த முதல் விநாடியை பிளாங்க் நேரம் என்று சொல்லப் படுகின்ற முறையால் அளக்கிறார்கள்.
ஒரு பிளாங்க் நேரம் என்பது வெற்றிடத்தில் ஒளி ஒரு பிளாங்க் நீளத்தைக் கடக்க ஆகும் நேரம் . (இந்த நீளத்தை தொலைவு அல்லது தூரம் என அனுமானித்துக்கொள்ளுங்கள்.) அதை 1.616252(81)×1035 மீட்டர் என மதிப்பிட்டுள்ளார்கள்.
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் விநாடிக்கு 29 கோடியே 97 லட்சத்து 92ஆயிரத்து 458 மீட்டர்களாகும் (சுமாராக வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர்).
அந்த நொடியில்…
பிரபஞ்சம் வெடித்தபோது அதிவேகமான ஒளி மிக நுண்ணிய தூரத்தைக் கடக்கிற மிக நுண்ணிய காலத்தில் என்னவெல்லாம் நடந்து இருக்கலாம் என நமது விஞ்ஞானிகள் விவாதித்துள்ளார்கள்.
ஒரு நானோவினாடி என்றால் ஒரு வினாடியை 100 கோடியாகப் பிரித்து அதில் ஒரு பங்கு என அர்த்தம். அதற்கும் பல மடங்குகள் குறைவான ஒரு நுண்ணிய காலத்தை 10-43 விநாடி நேரம் என அறிவித்துள்ளார்கள்.
அந்தக் காலகட்டம் வரை பிரபஞ்சத்தின் தோற்றத்தில் என்ன நடந்திருக்கும் என விஞ்ஞானிகள் விவாதித்துள்ளனர். (அதேபோல நுண்ணியமான வெப்ப அளவுகளும் கெல்வின் என்ற அளவால் அளக்கப்படுகின்றன.)
10-43 விநாடி நேரத்தில்
வெற்றிடமாயிருந்த பிரபஞ்சத்தில் ஒரு சமச்சீர் நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்ப நிலை 10 -32 கெல்வினாக இருந்தது.
10 -12 விநாடி நேரத்தில்
பிரபஞ்சம் சிறிய, சூடான அடர்வு மிக்க நிலையிலிருந்தது. வெற்றிடத்தின் ஆற்றல் போட்டான், குளுயான் நிறைந்த ஒரு நிலையாக மாறியது. பிரபஞ்சத்தின் வெப்ப நிலை 10 -12 கெல்வின்.
10 -11 விநாடி நேரத்தில்
பிரபஞ்சம் கதிர் வீச்சால் மட்டும் நிரம்பி இருந்தது. இந்தக் கதிர் வீச்சிலிருந்து குவார்க்குகளும் எதிர் குவார்க்குகளும் சம அளவில் தோன்றின. ஆனால் பிரபஞ்சம் விரிவடையும்போது ஏற்பட்ட வெப்பம் குறைந்த சூழலில் எதிர் குவார்க்குகளைவிட குவார்க்குகளே அதிகம் மிஞ்சின.
10 -10 விநாடி நேரத்தில்
பிரபஞ்ச விரிவின் காரணமாக ஏற்பட்ட வெப்பக் குறைவால் சராசரி துகள் ஆற்றல் வலுக் குறைந்த அணுக்கரு விசையின் ஆற்றல் அளவிற்குக் குறைந்தது. போஸான்கள் உருவாயின. அவை வலுக் குறைந்த அணுக்கரு விசையைக் கடத்துபவையாக மாறின.
10 -4 விநாடி நேரத்தில்
பிரபஞ்சம் விரிவடைவதால் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக நிலை மாற்றம் ஏற்பட்டு குவார்க்குகளும் குளுவான்களும் சேர்ந்து மெசான்களாகவும், புரோட்டான், நியூட்ரான்களாகவும் மாறின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்ப நிலை 30000 கெல்வின் (29,727 செல்சியஸ்).
1 விநாடி நேரத்தில்
புரோட்டான்களும் , நியூட்ரான்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நியூட்ரினோக்களை ஏற்றுக்கொண்டும், வெளியிட்டும் மாறியவண்ணம் இருந்தன. ஆனால் இந்த நேரத்தில் ஏற்பட்ட குளிர்வின் காரணமாக இவற்றின் வினை வேகம் குறைந்து ஒவ்வொரு நியூட்ரானுக்கும் 7 புரோட்டான் என்ற விகிதத்தில் நிலைபெற்றன. இரண்டாம் நொடியில் ஈர்ப்பு விசை தோன்றியது.
100 விநாடி நேரத்தில்
இந்தத் தருணத்தில் பிரபஞ்ச விரிவு மற்றும் குளிர்வின் காரணமாக புரோட்டான்களும், நியூட்ரான்களும் ஒன்றை ஒன்று ஈர்த்து ஒன்று சேர்ந்து எளிய தனிமங்களின் அணுக்கருக்கள் உருவாயின. புரோட்டான்கள் , நியூட்ரான்கள் குறைந்த தொலைவில் அதாவது 10 -15 மீட்டர் தொலைவில் மட்டுமே ஒன்றை ஒன்று ஈர்க்கும். அதிக தொலைவில் அவற்றால் சேர முடியாது. எனவே அணுக்கரு உருவாக அவை சிறிது நேரம் அருகில் இருக்க வேண்டி இருக்கும்.
இது அதிக வெப்ப நிலையில் உள்ளபோது சாத்தியம் ஆகாது. ஏனெனில் அதிக வெப்ப நிலையில் அவை விரைவாகச் செல்லும்போது அவை ஒன்று சேர நேரம் கிடைக்காது.
5 லட்சம் வருடங்களில்
இந்தக் காலத்தில் எலெக்ட்ரான்களின் சராசரி வேகம் குறைந்து அவை புரோட்டான்களால் ஈர்க்கப்பட்டு எளிய தனிமங்கள் உருவாயின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்ப நிலை 3000 கெல்வின்.
நூறு கோடி வருடங்களில்
ஹைட்ரஜன் அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக ஈர்க்கப்பட்டு அணுக்கரு இணைவு ஏற்பட்டு முதல் தலைமுறை விண்மீன்கள் தோன்றின.
200 கோடிகள் முதல் 1300 கோடி வருடங்களில்
விண்மீன்களில் இருந்து மற்ற தனிமங்கள் உருவாயின. இந்த நேரத்தில் பிரபஞ்சத்தின் வெப்ப நிலை 3000 கெல்வினுக்கும் குறைவு. இதன் பின் கோள்கள் உருவாயின. கோள்களில் தனிமங்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாயின. முதலில் நீர் போன்ற எளிய மூலக்கூறுகளும் பின் அமினோ அமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகளும் உருவாயின.
அமினோ அமிலங்களிலிருந்து புரதங்கள் உருவாயின. இவை பின் சிறிய வகை அமீபா போன்ற உயிரினங்கள் உருவாகக் காரணமாயின. பின், பரிணாம வளர்ச்சிப்படி மனிதன் முதலான உயிரினங்கள் தோன்றின. இன்றும் நம் உடலில் இருப்பது அன்று பிரபஞ்சப் பெருவெடியில் தோன்றிய அந்தத் தனிமங்களே.

First Book in Tamil

காகிதத்தில் அச்சடிப்பது என்ற முறை வந்த பிறகு தமிழ் மொழியிலும் அச்சிடல் அறிமுகமானது. இது பெரும்பாலும் மதப் பிரச்சாரத்துக்காக இந்தியா வந்திருந்த கிறிஸ்தவத் துறவியர்களின் முயற்சிகளால் நடந்தது.
இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவச் சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை எனப் பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக் கலை மந்தமாகவே வளர்ந்தது. இதனால் பெருமளவான இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயிருக்கலாம். இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்டவைதான்.
அச்சான முதல் நூல்
முதல் தமிழ்ப் புத்தகம் 1554 -ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகரான லிஸ்பனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு எனும் மூவர்.அவர்கள் தமிழ் அறிந்த இந்தியர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களுடைய கிறிஸ்தவப் பெயர்களைத் தவிர மற்ற விவரங்கள் நமக்குத் தெரியவில்லை.
கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha lingoa Tamul e Portugues) (தமிழில்: “தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு”) என்னும் தலைப்பில் அந்த நூல் வெளியானது. அந்த நூலில் தமிழ்ச்சொற்கள் லத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோர்க்கப்பட்டிருந்தன.
இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல்; இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்து மாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று செக்கோஸ்லேவேகியாவின் தமிழ் அறிஞர் கமில் சுவெலபில் குறிப்பிடுகிறார்.
அச்சில் மூத்தது
மதுரை போன்ற இடங்களில் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்திலேயே இந்தத் தமிழ் அச்சு வெளியீடு நிகழ்ந்தது. தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் ரஷியா (1563), ஆப்பிரிக்கா (1624) மற்றும் கிரீஸ் (1821) நாடுகளில் முதன்முதலாக அச்சிட்ட நூல்களின் காலத்தை விட முந்தையதாக இருக்கிறது.
1865-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலான “தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை” (Classified catalogue of Tamil printed books) 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாகக் கூறுகிறது. தமிழ் அச்சுப்
பண்பாடு: நிறுவனமயமாதல் நோக்கி (1860–1900) என்ற ஆய்வுக் கட்டுரை “1867 – 1900 ஆண்டுகளில், 8578 புத்தகங்கள் அச்சில் வந்திருப்பதைக் காண்கிறோம். விடுபடுதல்களோடு இணைத்து நாற்பது ஆண்டுகளில் (1860–1900) சுமார் பத்தாயிரம் நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டிருப்பதை அறிகிறோம்” எனக் கூறுகிறது.

http://home.infitt.org/ - Tamil Internet Conference

http://home.infitt.org/

மூளையின் ஆய்வுக்காக விருது பெற்ற இந்தியர்

நாம் தினந்தோறும் எழுதுவது, படிப்பது, யோசிப்பது போன்ற எத்தனையோ நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். நமது இந்தச் செயல்பாடுகளுக்கு அடிப்படையாக அமைபவை நமது எண்ணங்கள். இவற்றைக் கடத்துவது நமது உடம்பிலுள்ள நரம்பு மண்டலம்.
நரம்புகளைப் பற்றிய ஆய்வில் இந்தியர் ஒருவர் சிறந்துவிளங்கிவருகிறார். அது மட்டுமல்ல அவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வழங்கும் ஆய்வுக்கான ஊக்கத்தொகையையும் பெற்றுள்ளார். அவர்தான் பார்த்தா மித்ரா. மனித மூளை தொடர்பான ஆராய்ச்சிக்காக பார்த்தா மித்ராவுக்கு, 3 லட்சம் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் 1.81 கோடி ரூபாய் உதவித் தொகையாகக் கிடைத்துள்ளது.
மனித மூளை தொடர்பான ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்க அரசு பிரெயின் (Brain Research through Advancing Innovative Neurotechnologies) என்னும் அமைப்பை நடத்திவருகிறது. புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்டு மனித மூளையின் வடிவமைப்பை ஆராய்வது இதன் நோக்கம்.
நியூயார்க்கில் உள்ள ஆய்வு நிலையம் ஒன்றில் விஞ்ஞானியாக இருக்கும் பார்த்தா மித்ராவுடன் ஃப்ளோரின் அல்பினு என்பவருக்கும் இந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
அவர் அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையில் ஆராய்ச்சியாளராகச் செயல்படுகிறார். இப்போது கிடைத்துள்ள இந்த உதவித் தொகை மூலம் அவர்கள் இருவரும் இணைந்து நரம்பு அறிவியலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.
மூளையின் சிறிய படங்களிலிருந்து நரம்புகளின் அமைப்பையும், செல் வகைகளையும் கண்டறியும் கருவியை அவர்கள் உருவாக்க உள்ளதாகத் தெரிகிறது. விஞ்ஞானி பார்த்தா மித்ரா, அப்சர்வ்டு பிரெயின் டைனமிக்ஸ் என்னும் நூலை எழுதியுள்ளார். இதை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பிரஸ் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு - History

தமிழ்நாடு இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்று. இது இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் உள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன.
மத்திய அரசுப்பிரதேசமான புதுச்சேரி பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு தன் எல்லைகளைக் கொண்டுள்ளது.
எல்லைகள்
தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை, ஆனை மலை , பாலக்காடு கணவாயும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடாவும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.
மதராஸ் மாகாணம்
தமிழகம் முன்பு ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மதராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரிப் போராட்டங்கள் நடைபெற்றன.இதில் சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். மதராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 - ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
பாரம்பரியம்
ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கும் முன்னதாகப் பழங்கற் காலத்தில் இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்த தடயங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் இலக்கியமும் தமிழ் மொழியில் காணக் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; உலக அளவிலான பாரம்பரியக் களங்கள் எட்டு தமிழ்நாட்டில் உள்ளன.
நகர இந்தியாவின் சின்னம்
தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11- வது இடத்தில் உள்ளது. மக்கள்தொகையில் ஏழாவதாக உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவதாக உள்ளது.
மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை அளக்கக்கூடிய மனித வளர்ச்சிக் குறியீட்டில் 2006 - ஆம் ஆண்டில் இந்தியாவின் பத்தாவது மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. இந்தியாவிலேயே அதிகமாக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலம் இதுதான். இந்தியாவின் 6 சதவீத மக்கள்தான் இங்கே வசிக்கின்றனர். ஆனால் இந்தியாவின் 10.56 சதவீத வணிக நிறுவனங்கள் இங்கே உள்ளன.
இந்தியா உருவாக்குகிற மொத்த வேலை வாய்ப்புகளில் 9.97 சதவீதம் தமிழகத்திடம் உள்ளது. அதிகமான வேலைவாய்ப்புகளைத் தருகிற இந்திய மாநிலங்களில் இரண்டாவதாக இது உள்ளது. அது மட்டுமல்ல… தொழிற் சாலைகள் எண்ணிக்கையிலும் மொத்த தொழில்துறை உற்பத்தியிலும் இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது. கறிக்கோழி வளர்ப்பிலும், பால் உற்பத்தியிலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
வெளிநாடுகளின் நேரடி மூலதனத்தைப் பெறுவதில் இந்திய அளவில் மூன்றாவது மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.ஆட்டோமொபைல் தொழில் செழித்துள்ள மாநிலமாகவும் தமிழகம் உள்ளது

****************
சென்னையின் வரலாறு பற்றிய பன்முகப் பரிமாணங்களை நமக்கு ‘சென்னை தலைநகரின் கதை’ எனும் நூலாகத் தந்துள்ளார் பார்த்திபன்.
375 வயதை தொட்டுவிட்டது இன்றைய சென்னை. ஒரு கடலோரக் காலி நிலத்தில் உருவாக்கப்பட்ட கோட்டைக்குள்ளே பெரும்பாலும் ஆங்கிலேயர்களாக இருந்த ஐரோப்பியர்கள் குடியமர்ந்தனர். கோட்டைக்கு வெளியே உருவான இடத்தில் மண்ணின் மைந்தர்களின் குடியேறினர். இந்தக் குடியேற்றங்கள்தான் சென்னை எனும் இன்றைய பெருநகரின் விதை.
இந்த விதை என்பது வெறும் சென்னைக்கான விதை மட்டுமல்ல. அது இந்தியத் துணைக்கண்டத்தின் மேல் அடுத்த சில நூற்றாண்டுகளுக்குக் கவிந்து நின்ற காலனியாதிக்கம் என்ற பெரும் சமூகக் கடைசலின் விதையும் அதுதான் என அழகாக எடுத்துக்காட்டுகிறார்.
வியாபாரம் மட்டும் பார்த்த ஆங்கிலேயர்கள் ஆட்சியாளராக, தண்டனை தரும் நீதிபதிகளாக மாறிய சம்பவங்களின் போக்கை நன்கு படம் பிடித்துள்ளார். ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தின் ஆரம்பகட்ட ஆளுநர்களைப் பற்றிய பகுதிகள் சிறப்பாக உள்ளன.
பல்லாவரம், மயிலாப்பூர் போன்ற ஆயிரக்கணக் கான வருடங்கள் பாரம்பரியமிக்க இடங்கள் சுற்றிலும் இருக்க, வெறும் 375 வயதே கொண்ட ஒரு கோட்டையை மையமாக வைத்து நவீன வரலாறு தனது வளர்ச்சிப் பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறது. இதனைச் சரியாகத் தொட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நேற்றைப் புரிந்துகொள்ள விரும்பும் இன்றின் காதலர்களுக்கும் நாளைய சாதனையாளர்களுக்கும் உதவும் நூல்.
********************