புதன், 3 டிசம்பர், 2014

11 மாநிலங்களில் பருத்தி கொள்முதல்

11 மாநிலங்களில் பருத்தி கொள்முதல்
பருத்தி விலை குறைந்ததால் 11 மாநிலங்களில் மத்திய அரசு நிறுவனமான பருத்தி கார்ப்பரேஷன் (சிசிஐ) மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதாக மத்திய வேளாண் இணையமைச்சர் மோகன்பாய் குந்தாரியா தெரி வித்தார்.
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதார விலையில் (எம்எஸ்பி) பருத்தி கொள்முதல் செய்யப்படுவதாக அவர் கூறினார். இப்பகுதியில் குறைந்தபட்ச ஆதார விலையைக் காட்டிலும் குறைவான விலையில் விற்னையாகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க குறைந்தபட்ச ஆதார விலையில் அதாவது ஒரு குவிண்டால் ரூ. 4,050-க்கு வாங்கப்படுவதாக அவர் கூறினார். பருத்தி விளையும் 11 மாநிலங்களில் மொத்தம் 92 மாவட்டங்களில் 341 மையங்கள் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதாக அவர் கூறினார்.
கையிருப்பு, தேவை, உற்பத்தி இவற்றின் அடிப்படையில் பருத்தி விலை நிர்ணயிக்கப்படுவதாக அமைச்சர் விளக்கம் அளித்தார். ஏற்றுமதி சரிவு, உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு காரணமாக குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் பருத்தி விலை சரிந்ததாக அவர் கூறினார்.

மருந்து பொருட்களின் விலை

காப்புரிமை பெற்ற மருந்து விலையை நிர்ணயிக்க குழு
காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த அரசு எத்தகைய நடவடிக்கை எடுத் துள்ளது என்ற கேள்விக்கு, மக்களவையில் நேற்று எழுத்து மூலமாக அளித்த பதிலில் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் கூறியது:
காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக அமைச்சகங்களுக்கிடையே இணைச் செயலர்களை உள்ள டக்கிய குழு அமைக்கப்பட் டுள்ளது. இக்குழு காப்புரிமை பெற்ற மருந்துகளைக் கண்டு பிடிப்பது மற்றும் அவற்றுக்கு எந்த அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வது போன்ற ஆலோ சனைகளை வழங்கும் என்றார்.
சில காப்புரிமை பெற்ற மருந்து பொருள்களை தயா ரிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் அனுமதிமறுக்கப்பட்டதால் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அந்நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை மூலப்பொருள் அடிப்படையில இந்திய நிறுவனங்கள் தயாரிப்பதே இதற்குக் காரணமாகும் என்றும் அவர் கூறினார்.
மருந்து விலை கட்டுப்பாட்டு பிரிவு
மருந்துப் பொருள்களின் விலை விவரம் குறித்த தகவல்களை அளிக்க அனைத்து மாநிலங்களிலும் விலை கட்டுப்பாட்டு பிரிவை தொடங்குவது குறித்து பார்மசூடிகல்ஸ் துறை பரிசீலித்து வருவதாக அவர் மேலும் கூறினார். இந்தப் பிரிவு மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு ஆலோசனை அளிக்கும்.
உலகிலேயே இந்தியாவில்தான் மருந்துப் பொருள்களின் விலை அதிகமாக உள்ளதாகக் கூறப் படுவது குறித்த கேள்விக்கு விளக்கமளித்த அமைச்சர், மருந்து விலைக் கட்டுப்பாட்டு விதி 2013-ன் அடிப்படையில்தான் விலைகள் நிர்ணயம் செய்யப்படு கின்றன. பிற நாடுகளில் மருந்து விலை விவரம் தற்போது கை வசம் இல்லை என்றும் அவர் பதிலளித்தார்.

**************

தனியார் நிறுவனங்களின் லாபத்துக்காக, இந்தியாவில் மருந்துப் பொருட்களின் விலையில் கடுமையாக அதிகரிக்கிறது என்பதும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
நாட்டில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக, தேசிய மருந்து பொருள் விலை நிர்ணய ஆணையம் கடந்த 97-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு 348 மருந்துகளை பட்டியலிட்டு அவை முக்கியத்துவம் வாய்ந்தது என இந்த ஆணையம் அறிவித்தது. கடந்த மே 29-ம் தேதி 108 அத்தியாவசிய மருந்து பொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயித்து இந்த அமைப்பு உத்தரவு பிறப்பித்தது.
நாடு முழுவதும் ஆறு கோடி ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உள்ளனர். இதய நோயாளிகள் 5.7 கோடி, நீரிழிவு நோயாளிகள் 4.1 கோடி, எய்ட்ஸ் நோயாளிகள் 2.5 லட்சம், காசநோயாளிகள் 22 லட்சம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 11 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசு அதிகபட்ச விலையை நிர்ணயித்தது.
ஆனால், மருந்து விற்பனை நிறுவனங்களின் நெருக்கடிக்கு பணிந்து இந்த உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. உள்நோக்கத்துடனும் வணிக நிறுவனங்களுக்கு சாதகமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவால் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கிறது. கோடிக்கணக்கான நோயாளிகளின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்தச் சூழலில், சமீபத்தில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இவ்விவகாரத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி பி.ராஜீவ் எழுப்பினார்.
அப்போது அவர் கூறும்போது, "எய்ட்ஸ், காசநோய், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் இந்நோய்களால் அவதிப்படும் சாமானிய மக்கள் மேலும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சில தனியார் மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படும் வகையில் தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தவறான மருந்து கொள்கைகளை வகுத்திருப்பதாலேயே இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசின் இந்தக் கொள்கை தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.
இதய நோய், நீரிழிவு நோய், எய்ட்ஸ் நோய், காசநோய், புற்றுநோய் முதலானவற்றால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான இந்தியர்களின் எத்தனை பேர் பணக்காரர்கள், எவ்வளவு பேர் எழை, நடுத்தர மக்கள் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். பெரும்பான்மையானவர்கள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களே என்பது தெளிவாகத் தெரியவரும்.
புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட தங்களது உறவுகளைக் காப்பாற்ற நன்கொடை வேண்டி கையேந்தி நிற்கும் ஏழைகளுக்கு இந்த அரசு செய்தது என்ன? 300 பேரிடம் கையேந்தியவர்கள் இனி 3000 பேரிடம் கையேந்தட்டும் என்று நினைக்கிறதா இந்த அரசு?
பெட்ரோல் விலை உயர்ந்தாலோ, டீசல் விலையை அதிகரித்தாலோ அதன் தாக்கம் உடனடியாக நம் சமூகத்தில் வெளிப்படுகிறது. அரசின் மீது அதிருப்தி உடனடியாகவும் வலுவாகவும் பதிவு செய்யப்படுகிறது.
ஆனால், ஏழை - எளிய மக்களைக் கொல்லும் மருந்து விலை உயர்வு குறித்து நம் சமூகம் திரண்டு போராடாதது ஏன்? இந்தப் பாதிப்பின் தன்மை ஒட்டுமொத்த மக்களுக்கு எளிதில் புரியாது. அவர்கள் நேரடியாக பாதிப்புக்கு உள்ளானால்தான் அதன் கொடூரம் தெரியும். கடும் நோயால் பாதிக்கப்பட்ட உறவுகளை மருத்துவமனையில் விட்டுவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் எப்படி வீதிக்கு வந்து போராட முடியும்?
மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியக் கூடிய விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படும் மோடி தலைமையிலான அரசு, பெரும்பாலான மக்களின் பார்வையிட படாத, அதேவேளையில் அவர்களைக் கடுமையாக பாதிக்கும் மருந்துகள் போன்றவற்றை விலையை உயர்த்த வழிவகுப்பது எந்த வகையில் நியாயம்?
"தயவுசெய்து பெட்ரோல் விலையையே நீங்கள் உயர்த்திக் கொள்ளுங்கள் மோடி!" என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

***********

போபால் சம்பவத்தின் 30-வது ஆண்டு நினைவு

யூனியன் கார்பைடு நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தி செய்யவே வந்தது. ஒரிஜினல் 'மேக் இன் இந்தியா' என்று கூறலாம்.
டிசம்பர் 2, 1984 அன்று மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடந்த விஷவாயு கசிவு சம்பவத்தை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து ஒரு கடிதம் எழுதியுள்ளது.
இந்த 5 அமைப்புகளுமே போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்படவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை பெற்றுத் தருவதற்காக போராடி வருகின்றன.
ஆயிரக்கணக்கான உயிர்களைப் பழிவாங்கிய, பல நூறு சந்ததிகளை இன்றளவும் நோயாளிகளாக உலாவ விட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தான போபால் சம்பவத்தின் 30-வது நினைவு தினத்தையொட்டி இக்கடிதத்தை அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளனர்.
கடிதத்தின் சாராம்சம்:
"போபால் சம்பவம் நடந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், பேரழிவை ஏற்படுத்திய விபத்துக்கு காரணமான டோ கெமிக்கல்ஸ் நிறுவனம் போபால் மாவட்ட நீதிமன்றம் முன்னர் இதுவரை ஆஜராகவில்லை. இந்நிலையில்தான், அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தி வருகிறது.
இந்தியாவை உற்பத்தியாளர்களின் கூடாரமாக்க வேண்டும் என்ற முனைப்பில் அரசு உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய அழைக்கும் அதே நேரத்தில் அவர்கள் இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வலியுறுத்தப்பட வேண்டும்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்ய அறைகூவல் விடுப்பதில் உற்சாகமாஅ செயப்லடும் தங்கள் அரசு அவர்களை இந்திய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படவும் அறிவுறுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.
யூனியன் கார்பைடு நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தி செய்யவே வந்தது. ஒரிஜினல் 'மேக் இன் இந்தியா' என்று கூறலாம்.
எனவே எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்" இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மத்திய உர மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் அனந்த குமாருடன் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கை விரைவில் நடைமுறைக்கு வரும் என தாங்கள் நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாட்சி சொல்லும் அருங்காட்சியகம்:
போபால் சம்பவத்தின் 30-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி “Remember Bhopal” என்ற அருங்காட்சியம் ஒன்று பொதுமக்கள் பார்வைக்காக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிலரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு ஒழிப்பேழைகளாக வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாக 50 ஒழிப்பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அத்தனையும் வேதனையின், பேரழிவின் சாட்சியங்கள். அதுதவிர, சில நினைவுப் பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அவையும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்தவையேயாகும்.
இந்த அருங்காட்சியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரமா லட்சுமி ஒரு பத்திரிகையாளராவார். அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருளிலும் நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த அருங்காட்சியத்தை தொடங்க காரணம் என்றும் இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தானமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல எனவும் அவர் கூறினார்.
தமிழில்: பாரதி ஆனந்த்

***********

அந்தப் புகைப்படத்துக்கு வயது 30. ஆனால், அந்தப் புகைப்படத்தில் இருக்கும் குழந்தைக்கு இரண்டு வயதுகூட இருந்திருக்காது. விஷவாயுவால் மரணமடைந்த எண்ணற்ற உயிர்களில், பெயர் தெரியாத அந்தக் குழந்தையும் அடக்கம். உலகின் ‘புகழ்’பெற்ற 10 புகைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அந்தப் புகைப்படம், இந்தியாவில் நடைபெற்ற ஒரு கொடிய படுகொலையின் (விபத்தென்று எப்படிச் சொல்வது?) நினைவுச்சின்னமாக ஆகிவிட்டது.
1984-ம் ஆண்டு, டிசம்பர் 2-ம் தேதியின் நள்ளிரவில் தொடங்கியது அந்தப் பேரழிவு. பூச்சிமருந்து உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் போபால் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட விபத்தில், வெளியான மீத்தைல் ஐசோசயனைடு நிகழ்த்திய கோரதாண்டவம்தான் அந்தப் பேரழிவு. 3,787 பேர் மரணமடைந்தார்கள் என்றும், 5,50,000 பேர் கடும் பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் அரசு புள்ளிவிவரங்கள் கொடுத்திருந்தது. ஆனால், அதிகாரபூர்வமற்ற கணக்குகள் தெரிவிக்கும் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகம். கிட்டத்தட்ட குட்டி ஹிரோஷிமாவே நிகழ்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஹிரோஷிமாவைப் போலவே இன்னும் போபாலில் பின்விளைவுகள் கடுமையாகத் தொடர்வதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைத் தவிர, மற்ற எல்லோருக்கும் போபால் பேரழிவு என்பது வெறும் செய்தியாக மாறி நினைவுகளின் ஒரு மூலையில் புதைந்துபோனதுதான் பெருந்துயரம்.
இதுபோன்ற பேரழிவுகளுக்கும் சரி, சிறு விபத்துக்களுக்கும் சரி, எளிய இலக்காவது ஏழை மக்கள்தான். இந்தியாவில் ஏழைகளின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. பெரும்பாலான விபத்துக்களும் பேரழிவுகளும் அரசுகளின், நிர்வாகங்களின் அலட்சியத்தால்தான் நடைபெறுகின்றன என்பதற்கு போபாலைவிடப் பொருத்தமான உதாரணம் இன்னொன்று இருக்க முடியாது. எந்தத் தீங்குமற்ற தொழிற்சாலை என்றும், மக்களுக்கு மகிழ்ச்சியையும் வளத்தையும் அள்ளித்தரும் என்றும் தொடங்கப்பட்ட ஒரு தொழிற்சாலை, இறுதியில் மக்களுக்கு மரணத்தையும் தொடர் பாதிப்புகளையுமே அள்ளித்தந்தது.
உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும் அதில் இருந்த ரசாயனங்கள் வெடிக்கக் காத்திருக்கும் அணுகுண்டுகளைப் போன்றவை. உற்பத்தி இல்லாத தொழிற்சாலைக்குத் தீவிர பராமரிப்பு அநாவசியம் என்று கருதிய நிர்வாகத்தையும், அப்படிப்பட்ட ஒரு தொழிற்சாலையில் என்னென்ன ரசாயனப் பொருட்களை வைத்திருக்கிறார்கள், அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும், சரியான பராமரிப்பு நடைபெறுகிறதா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள விரும்பாத அரசையும் தவிர, போபால் பேரழிவுக்கு யார் காரணமாக இருக்க முடியும்? அங்கே பணிபுரிந்த ஊழியர்களுக்குக்கூட அங்கே வைக்கப் பட்டிருந்த பொருட்களின் அபாயத்தையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சரிவரத் தெரிவிக்கப்படவில்லை என்பது இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும், அணுஉலைகள் உட்பட.
போபாலுக்கு முன்னும் பின்னும் ஏராளமான தொழிற்சாலை விபத்துக்கள் இந்தியாவில் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், போபால் அளவு ஒரு தொழிற்சாலைப் பேரழிவு இந்திய வரலாற்றில் வேறெதுவும் கிடையாது.
அப்படிப்பட்ட பேரழிவுக்குப் பிறகும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனில், வேறு எதற்குத்தான் இங்கே நீதி கிடைக்கும்? அப்படிப்பட்ட ஒரு பேரழிவுக்குப் பிறகும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை எனில், வேறு எப்போதுதான் நாம் பாடம் கற்றுக்கொள்ளப்போகிறோம்?
********
வறுமையிலிருந்து மீள்வதற்காக பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு யூனியன் கார்பைடு நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக சேர்கின்ற நாயகன், ஒற்றை மனிதனாக பத்திரிகை நடத்தி அப்பாவி மனிதர்களை அறியாமையிலிருந்து மீட்கக் பார்க்கும் பத்திரிகையாளர், வேலையில் பிழை ஏதும் நிகழ்ந்திடக் கூடாது என்று பொறுப்பாக நடந்து கொள்ளும் இன்ஜினியர், பேட்டி எடுப்பதற்காக இந்தியா வரும் பெண் பத்திரிகையாளர், வர்த்தகத்தை விரிவுபடுத்தும் சிந்தனையில் மட்டும் விழுந்து கிடக்கும் அமெரிக்க முதலாளி, இன்னபிற உதிரி கதாபாத்திரங்களின் கட்டமைப்பில் படத்தின் கதையம்சம் அமைந்திருக்க, இப்பேரழிவு நடப்பதற்கு முன் நடக்கின்ற நிகழ்வுகளை கோர்க்கின்ற ஊசியாக படத்தின் திரைக்கதை அமையப் பெற்றிருந்தது.
யதார்த்தமாக ஒரு திரைப்படம் பார்க்கும்போது படத்தின் நடிகர்கள், திரைக்கதை, பின்னணி இசை, இயக்கம் இதைப் போன்ற அம்சங்களை நாம் கவனிப்பதுண்டு. ஆனால், இப்படத்தில் நாம் முக்கியமாக உற்று நோக்குவது, படத்தின் மையக்கதையினையே. கதையின் பின்னணி எப்படி கூறப்பட்டிருக்கிறது? இதுவே இப்படத்தில் நாம் பொதுவாக தேடும் அம்சம்.
வருடங்கள் பல கடந்தபோதும், போபால் பேரழிவைப் பற்றி கூறுவதற்கு பெரிய பெரிய இயக்குனர்களே முன்வராதபோது நமக்கு பரிச்சயம் அற்ற ஓர் இயக்குனர் இக்கதையை எப்படி கையாள்வார் என்ற ஐயப்பாடு மனதில் இருந்தது. சர்வதேச மேடைகளில் படைக்கப்பட்ட படம் இது என்பதால் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு மறைமுகமாக வளைந்து கொடுத்திருக்குமோ என்கிற சந்தேகமும் இருந்தது. ஆனால் இவை யாவும் படம் பார்த்த பிறகு தகர்த்தெறியப்பட்டது.
போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் பாதுகாப்பு மூன்றாம் தரமாக கருதப்பட்டதை இப்படம் சாடுகிறது. பேரழிவு நடக்கும் சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பொறியாளர் மீதேன் ஐசோசைனேட் என்கிற விஷ வாயுவின் தாக்கத்தால் முச்சுத் திணறி இறக்கிறார். அந்த ஓர் உயிரின் இழப்பு நிறுவனத்தாலும் அன்றைய அரசாங்கத்தாலும் கண்டுக்கொள்ளப்படாமல் போகின்றது.
தவறு நிகழ்ந்தபோது அதை சரி செய்யும் உடனடி நடிவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நிறுவனத்தில் காசை மிச்சப்படுத்தும் பொருட்டு தகுதியற்ற ஊழியர்கள் சரியான பயிற்சியின்றி கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வர்த்தகத்தை பெருக்கும் நோக்கத்துடன் மட்டும் யூனியன் கார்பைட் நிறுவனம் இயங்கியதாகவும் இப்படம் கடுமையாக சாடுகிறது.
இந்தியாவிற்கு வருகை தரும் யூனியன் கார்பைடின் நிறுவனராகிய வாரன் ஆண்டேர்சனை அமெரிக்க பத்திரிகையாளர் சந்திக்கும்போது "உங்கள் நிறுவனத்தில் நாற்பதாயிரம் கிலோ மீதையில் யசோ சைனைட் பயன்படுத்துகின்றீர்களே அது மிக அதிகமென்று உங்களுக்குத் தெரியாதா? அமெரிக்காவில் இவ்வளவு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதென்று உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்கிறார்.
"நீ ஒரு அமெரிக்க பெண் தானே? இது அமெரிக்காவல்ல, இந்தியா. இங்கு பிரச்சினை என் நிறுவனமல்ல, மலேரியா. அதை அழிப்பதற்கான பூச்சிக்கொல்லிகளையே நான் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறேன்" என்கிற வசனம் படத்தில் வருகிறது.
நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு கோளாறுகளையும், வரம்பு மீறல்களையும் அறிந்தும், அதைக் கண்டுகொள்ளாதவாறு நிறுவனர் செயல்பட்டார் என்பதையும் இப்படம் பதிவு செய்துள்ளது.
அமெரிக்கர்கள் ஆராய்ச்சி செய்வதற்கும், வர்த்தகம் செய்வதற்கும் இந்திய உயிர்கள் எலி போல மலிவாக விற்கப்படுவதையும், அத்தனை உயிர்களின் இழப்பினை வர்த்தக இழப்பாக மட்டும் கண்ட வாரன் ஆண்டேர்சனின் மனப்பாட்டையும், உயிர்களின் இழப்பிற்கு மன்னிப்பு கூட கேட்க மறுத்த அன்றைய அரசாங்கத்தையும், யூனியன் கார்பைடு நிறுவனத்தையும் இப்படம் கடுமையாக சாடுகிறது.
எந்த ஒரு நிறுவனம் இயங்குகின்றபோதும் கோளாறு நடப்பதற்கான சாத்தியம் என்ன என்பதையும், அப்படி ஒரு பிரச்சினை என்று வரும் போது உயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் அப்போது என்ன எடுக்கப் பட்டதென்றும் இயக்குனர் கேட்கிறார்.
இந்நிகழ்விற்கு அன்றைய அரசாங்கமும் ஒரு முக்கிய காரணம் என்பதையும், பொருள் ஈட்டும் பொருட்டில் இந்திய மக்கள் சுய பாதுகாப்பில் அலட்சியம் காட்டுகின்றனர் என்பதையும் இப்படம் வன்மையாக பதிவு செய்துள்ளது.
இத்தனை தைரியமாக ஒரு பேரழிவின் பின்புலத்தை இப்படத்தில் வைத்து, தான் உணர்ந்த நிகழ்வுகளை இணைத்து, அதை வளைந்து கொடுக்காமல் தான் நினைத்ததை நினைத்தவாறே வெளிப்படுத்திய விதத்தில் இயக்குனர் ரவி குமார் சிறப்பு பாராட்டு பெறுகிறார்.
இன்று வரை போபாலில் நிலத்தடி நீரில் நச்சுக் கழிவுகள் கலந்துள்ளதையும் கான்சர் போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் இருந்தும் மக்கள் வேறு வழியின்றி அந்நீரையே அருந்தி வருவதையும் இயக்குனர் பதிவு செய்துள்ளார்.
திரைப்படம் முடிந்தபின்னும் நம் மனதில் ஏற்படுத்தும் நீடித்த தாக்கத்தை வைத்தே அதன் தரம் தீர்மானிக்கப்படுகிறது.
A pray for rain - Movie
**************
1984, டிசம்பர்-2 அதிகாலை அந்தக் கொடிய விபத்து நடந்த தருணத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்த மொத்த மீத்தைல் ஐசோசயனைடின் அளவு 63 டன். 610, 611, 619 ஆகிய எண்கள் இடப்பட்ட கலன்களில் மொத்த மீத்தைல் ஐசோசயனைடும் வைக்கப்பட்டிருந்தன. விதிமுறைப்படி, இந்தக் கொள்கலன்களெல்லாம் பாதிக்கு மேல் நிரப்பப்படக் கூடாது. ஏதாவது வேதிவினை நிகழ்ந்தால் அதைத் தடுப்பதற்கான வேதிப்பொருளைச் செலுத்துவதற்காகத்தான் அப்படி ஒரு விதிமுறை. ஆனால், 610 என்ற கலனில் 42 டன் மீத்தைல் ஐசோசயனைடு வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அந்தக் கலனின் முழுக் கொள்ளளவு இது. அப்பட்டமாக எல்லாம் மீறப்பட்டன என்பதற்கு ஓர் உதாரணம் இது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிக்கன நடவடிக்கை என்று சொல்லி முன்னரே கைவிட்டிருந்தார்கள்.
ஊழியர்களின் அறியாமை, நிர்வாகத்தின் பொறுப்பற்றதனம், அரசின் அலட்சியம் எல்லாம் சேர்ந்து இந்தப் பேரழிவை நிகழ்த்தியது.
மரணத்தின் திசை
போபாலின் ஹமீதியா மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை நிகழ்த்தியபோது தெரிந்த அறிகுறிகள் சுட்டிக்காட்டிய திசை ஒன்றுதான்: ஹைட்ரோசயனைடு அமிலம். அந்த அமிலத்துக்கு ஒரு எதிர்மருந்து இருக்கிறது: சோடியம் தையோசல்ஃபேட். இந்தக் கண்டுபிடிப்பை பெரிய டாக்டரிடம் தெரிவித்தபோது அவர் நம்பவில்லை. ஹைட்ரோசயனைடுக்கு இங்கே என்ன வேலை என்பதுதான் அதற்குக் காரணம். உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடிலிருந்து ஹைட்ரோசயனைடு அமிலம் உருவாகக் கூடும் என்பது அந்த பெரிய டாக்டருக்குத் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்திருந்தால் ஏராளமானோரை உடனடியாகக் காப்பாற்றியிருந்திருக்கலாம்.
இறப்பிலும் ஆதாயம் தேடி…
முன்வாசலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தை அனுப்பி போபால்வாசிகளைக் கொன்ற அமெரிக்கா, பின்வாசல் வழியாக வேறு சிலரையும் அனுப்பியது: அமெரிக்க வழக்கறிஞர்கள்! பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்கள் இப்படியெல்லாம் பேசினார்கள்: “யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சும்மா விடக் கூடாது. நாங்கள் உங்களுக்காகவே வந்திருக்கிறோம். அமெரிக்காவில் அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்து, உங்களுக்கு உரிய நிவாரணம் வாங்கித்தருகிறோம். சாதாரணத் தொகையல்ல: ஆளுக்கு ரூ. 10 லட்சம். மொத்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எங்கள் கட்டணம்.”
உண்மையான வில்லன்
உண்மையான வில்லன் மீத்தைல் ஐசோசயனைடு அல்ல, ஹைட்ரோசயனைடு அமிலம்தான். போபால் பேரழிவில் பெரும்பாலான மரணங்களுக்கும் பாதிப்புகளுக்கும் காரணம் அதுதான். உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடு பல்வேறு வாயுக்களாகப் பிரிகிறது. அதில் ஒன்றுதான் ஹைட்ரோசயனைடு அமிலம்.

அமெரிக்காவில் இன்னும் நிறவெறி

ரோசா பார்க்ஸ் பேருந்துச் சம்பவம் நடந்த தினம் 1 டிசம்பர், 1955
அமெரிக்காவில் இன்னும் நிறவெறி நீங்கவில்லை என்பதே ஃபெர்குசன் படுகொலை உணர்த்தும் பாடம்.
மைக்கேல் பிரௌன் என்ற கருப்பின இளைஞரைச் சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் மீது, குற்றம் சுமத்தத் தேவையில்லை என்று அமெரிக்க நீதிமன்ற ஜூரிகள் செய்த முடிவால், அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தைச் சேர்ந்த ஃபெர்குசன் பகுதியே கொந்தளிப்பில் இருக்கிறது. “ஜூரிகளின் முடிவு ஏமாற்றமாகத்தான் இருக்கிறது; சட்டப்படியான ஆட்சி என்பதே நம்முடைய வழிமுறையாக இருக்கிறது. எனவே, இதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்” என்று ஏமாற்றம் தொனிக்கக் கருத்துத் தெரிவித்திருக்கிறார் அதிபர் பராக் ஒபாமா.
ஒபாமா சொன்னதைச் சற்றே பகுத்து ஆராய்வோம். அமெரிக்க அரசியல் சட்டம் இயற்றப்பட்டபோது, நாட்டு மக்கள்தொகையில் ஐந்தில் மூன்று பங்கினர் கருப்பர்களே. ஆனால், வாக்குரிமை என்பது நிலம் சொந்தமாக வைத்திருந்த வெள்ளையர்களுக்கு மட்டுமே தரப்பட்டிருந்தது. அமெரி்க்கா சட்டப்படி நடக்கும் நாடுதான்; ஆனால், அந்தச் சட்டம் வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டுமே சில சலுகைகளை அளித்து வந்திருக்கிறது.
அடையாள அங்கங்கள்
ஒரு கொள்ளை, வழிப்பறி, அடிதடி, தீ வைப்பு, கலவரம் அல்லது கொலை போன்றவற்றில் ஈடுபட்டவர் என்று போலீஸார் சந்தேகிக்கும்போதெல்லாம், “கருப்பு நிறம், தடித்த உதடுகள், முரட்டுத்தனமான தோற்றம், நல்ல உயரம், தேக்கு மரம் போன்ற தேகம், தலையில் தொப்பி, அழுக்கான - கசங்கிய உடை” என்று அடையாளங்களைக் கூறுவார்கள். அது பெரும்பாலான கருப்பின ஆண்களுக்குப் பொருந்தி விடும். வெள்ளையர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும்போது, தொலைக்காட்சிகளிலோ வானொலி யிலோ இதே போல அங்க அடையாளங்கள் விவரிக் கப்படுவது கிடையாது. இப்படிப் பட்ட அறிவிப்புகளுக்குப் பிறகு, சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப் படும்போது சுட்டுக் கொல்லப்படுவதற்கான வாய்ப்பு கருப்பினத்தவர்களைப் பொறுத்தவரை 300%. கருப்பு என்றாலே ஆபத்து அல்லவா?
டேரன் வில்சனால் சுட்டுக் கொல்லப்பட்ட கருப் பினத்தைச் சேர்ந்த மைக்கேல் பிரௌன் நல்ல பையனா? சம்பவம் நடந்த நாள் முதல் இன்று வரை இது தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஒரு கடையில் ஏதோ சாமானை எடுத்துக்கொண்டு, கடைக்காரரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடினார் என்பதே அவர் மீதான புகார். அதற்காக மட்டும் அவரை விரட்டிச் சென்று சுட்டதாக போலீஸ் அதிகாரி கூறவில்லை, மைக்கேல் பிரௌனைப் பார்த்தபோது, பேயைப் பார்த்ததுபோல இருந்ததாம்.
நியாயத் தீர்ப்பு என்பது ‘புனிதர்களுக்கு’ மட்டும் வழங்கப்படக் கூடாது ‘பேய்களுக்கும்’ உண்டு!
ரோசா பார்க்கின் சத்தியாகிரகம்
ரோசா பார்க் என்ற கருப்பினப் பெண்ணின் போராட் டத்தை நினைவுகூருங்கள். கருப்பாக இருப்பதால், பேருந்தின் பின்பக்கத்தில்தான் போய் உட்கார வேண்டும் என்பதை ஏற்காமல் எத்தனை தீரத்துடன் போராடினார். அவருக்காக மான்ட்கோமரி மாநிலக் கருப்பினத்தவர்கள் பொதுப் பேருந்தில் ஏறாமல் வேலைக்கும் வீட்டுக்கும் நடந்தே சென்று தங்களுடைய எதிர்ப்பை எத்தனை நாட்களுக்குத் தொடர்ந்தார்கள்? அவருக்கும் முன்னதாக கிளாடி கால்வின் என்ற பள்ளிக்கூடச் சிறுமி, இதே போன்ற அவமானத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியதுடன், கை முஷ்டியை உயர்த்திக் காட்டி நிறவேற்றுமை கூடாது என்று உரிமைக் குரல் எழுப்பினார். வெள்ளையர்களுக்காகக் கருப்பர்கள் இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது என்று சொன்னதற்காக ரோசா பார்க்கின் அயல் வீட்டுக்காரர் ஒருவர் 1950-ல் அடித்தே கொல்லப்பட்டார். ஆனால், தையல் கலைஞரான ரோசா பார்க் பெயர் பிரபலமாகிவிட்டது. கிளாடி கல்வின் ஏழை என்பதாலும் திருமணம் செய்துகொள்ளாமலே கர்ப்பம் தரித்துவிட்டார் என்பதாலும் சிவில் உரிமைக் கழகங்கள் அவரை முன்னிலைப்படுத்தாமல் ரோசா பார்க்கை முன்னிலைப்படுத்தின.
அலபாமா மாநிலத்தின் மான்ட்கோமரி நகரில் பேருந்தின் முதல் 10 இருக்கைகளில் வெள்ளையர்கள் மட்டும் அமரலாம். அதன் பின்னால் உள்ள இருக்கைகளில் கருப்பர்கள் அமரலாம். ஆனால், வெள்ளைக்காரர் யாராவது வந்தால், அவருக்கு இடம் கொடுக்க எழுந்து பின்னால் போக வேண்டும். இடமில்லாவிட்டால் நின்றுகொண்டுதான் வர வேண்டும். வெள்ளையர் அருகில் இருக்கை காலியாக இருந்தால்கூடக் கருப்பர்கள் உட்காரக் கூடாது. மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக இருந்த கருப்பர்கள் இந்த அவமானத்தை எதிர்த்துப் பேருந்துகளில் ஏறுவதையே புறக்கணித்ததால், மான்ட்கோமரி நகரப் பேருந்து நிறுவனங்கள் வசூலின்றி நஷ்டமடைந்தன. கலகம் செய்வதாக சிவில் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவர்களுடைய கோரிக்கை நியாயமானது என்று தீர்ப்பளித்த நீதிமன்றங்கள் நிற அடிப்படையில் பேருந்துகளில் இருக்கைகளைப் பிரிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது.
பொறுத்தது போதும்
ஃபெர்குசன் சம்பவம் தொடர்பான ஜூரிகளின் கருத்தைத் தொலைக்காட்சிகள் நேரடியாகவே ஒளி பரப்பின. கருப்பினத்தவர்களின் கோபம் மீண்டுமொரு மக்கள் எழுச்சிக்குக் காரணமாகிவிட்டது. இந்த எழுச்சி நாடு முழுக்கப் பரவியது. நியூயார்க் நகரில் மக்கள் ஊர்வலமாகச் சென்றார்கள், பாலங்களில் போக்குவரத்தைத் தடுப்பதற்காகத் தடுப்புகளை ஏற்படுத்தினார்கள். பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும்தான் சிறிய நிகழ்ச்சியைப் பெரிதுபடுத்தி விட்டன என்று அதிகாரிகள் குற்றம் சாட்டினார்கள்.
ஜூரிகளில் 9 பேர் வெள்ளையர்கள், 3 பேர் கருப் பினத்தவர்கள். சந்தேகப்படும் நபரின் முதுகை நோக்கிச் சுடலாம் என்று 1979-ல் பிறப்பிக்கப்பட்ட ஒரு ஆணையை ஜூரிகளின் பார்வைக்காகக் கொடுத்தார்கள். அப்படிச் செய்யக் கூடாது என்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ஒரு தீர்ப்பின் நகலைத் தர வசதியாக மறந்துவிட்டார்கள். வழக்கமாக ஜூரிகள் ஒரே நாளில் சாட்சியங்களையும் பிற தடயங்களையும் பார்த்துவிட்டு முடிவெடுப்பார்கள். இந்த வழக்கில் 25 நாட்களுக்கு ஆய்வு நடந்தது. 60-க்கும் மேற்பட்ட சாட்சிகளை ஜூரிகள் விசாரித்தனர். அரசுத் தரப்பு வழக்கறிஞர் நேரில் ஆஜராகி, சில விளக்கங்களை அளித்தார். குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகூட 4 மணி நேரம் தன்னுடைய தரப்பை எடுத்துரைத்தார். வழக்கமாக, அரசு வழக்கறிஞர் குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டு என்ன என்று மட்டுமே குறிப்பிடுவார். இந்த வழக்கில் அப்படி எதையுமே கூறாமல் விட்டுவிட்டார். எனவே, ஜூரிகள் எதைத் தீர்மானிக்க வேண்டும் என்று இலக்கில்லாமல் விடப்பட்டது.
5 நிமிடத்தில் முடிய வேண்டியது
நீதிமன்ற நடவடிக்கைகளைத் தினமும் கவனித்துச் செய்தி தரும் ஜெனிஃபர் கானர்மேன் கூறுகிறார், “இம் மாதிரியான வழக்குகளில் சான்றுகளும் தடயவியல் அறிக்கைகளும் ஜூரிகளின் பார்வைக்கு விடப்படும். குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என்று மட்டும் ஜூரிகள் வாக்களிப்பார்கள். சில சமயம் 5 நிமிஷங்களில் எல்லாம் முடிந்துவிடும், இதைப் போல 3 மாதங்களுக்கு இழுத்துக்கொண்டிருக்காது”.
அரசுக்கு நான் செலுத்தும் வரிப்பணம் போலீஸ் அதிகாரிகளின் கவனக் குறைவான செயல்களால், பாதிக்கப்பட்டவர் குடும்பங்களுக்கு நஷ்டஈடாகச் செல் வதை ஏற்க முடியாது. தவறு செய்த அதிகாரி சிறைத் தண்டனையும் இல்லாமல், அபராதமும் இல்லாமல், பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, முழு ஓய்வூதியம் பெறுவதையும் சகித்துக்கொள்ளவே முடியாது.
சட்டப்படியான ஆட்சி நடக்கும் நாடு நம்முடையது என்ற புகழ்ச்சிகளால் ஆகப்போவது ஏதுமில்லை. அதை உண்மையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். பழைய சட்டமானாலும் புதிய சட்டமானாலும் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். நிற அடிப்படையில் பாரபட்சமான தீர்ப்பை வழங்கக் கூடாது. கருப்பர்கள் உயிர் மட்டும் முக்கியம் என்று கூறவில்லை. அனை வருடைய உயிரும் சமம்தான், முக்கியம்தான். இதைக் கடைப்பிடிக்காமல் பாசாங்கு செய்வதால் ஜனநாயகம் தழைத்து ஓங்கிவிடாது.
தி கார்டியன், தமிழில்: சாரி

செவ்வாய், 2 டிசம்பர், 2014

பெண் குழந்தைகள் - யுனிசெஃப் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை

அதிரவைக்கிறது, யுனிசெஃப் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை. 2007-லிருந்து இந்த ஆண்டு வரை இந்தியா இழந்த பெண் குழந்தைகள், பெண் சிசுக்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் இருக்கலாம் என்கிறது யுனிசெஃப்பின் அந்த அறிக்கை. உலக அளவில் 161 நாடுகளின் மக்கள்தொகை ஒரு கோடிக்கும் குறைவு என்பதைப் பார்க்கும்போது, இந்த விபரீதத்தின் தீவிரம் மேலும் உறைக்கிறது.
இதற்கிடையே, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இந்தப் பிரச்சினை தொடர்பாகத் தாக்கல் செய்யப் பட்ட பொதுநல மனுவை விசாரித்தபோது மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய கடமையிலிருந்து தவறிவிட்டன என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆண்/பெண் கருவைப் பகுத்தறியும் சோதனைக்கூடங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கவும் பெண் குழந்தைகள் பிறக்காமல் கருவிலேயே அழித்துவிடும் கொடுஞ்செயலைத் தவிர்க்கவும் அரசுகள் தவறிவிட்டன என்றும் சாடியிருக்கிறது.
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தைக் கேட்டால் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையையே ஏன் அடிப்படை அலகாக அரசு காட்ட வேண்டும், 2014-ல் என்ன விகிதம் என்ற கேள்விக்கு ஏன் நேரடியாகப் பதில் தரப்படவில்லை என்றும் அமர்வு கேட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விகிதாச்சாரத்தை அறியும் வழிவகை காணப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது.
மேலும், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைப் பரிசோதித்துத் தெரிவிக்கக் கூடாது என்று 1994-ல் சட்டம் இயற்றிய பிறகு, அதை மீறியதற்காகக் குற்றச்சாட்டுப் பதிவுகளுக்கு உள்ளானோர் எத்தனை பேர், தண்டனை பெற்றோர் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரத்தை அரசு வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது. கருவிலே பெண் சிசுக்கள் கொல்லப்படுவதைப் பெருமளவில் தடுக்கத் தவறிய மாநிலங்கள், இது தொடர்பான தகவல்களை டிசம்பர் 10-க்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
ஆண்/பெண் குழந்தைகளுக்கு இடையிலான விகிதம் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருவதை அரசும் ஒப்புக்கொண்டிருக்கிறது. அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரங்களும் அதிரவைக்கின்றன நம்மை. 1991-ல் 1,000 ஆண்களுக்கு 945 பெண்கள் என்று இருந்த விகிதம் 2001-ல் 927 ஆகவும், 2011-ல் 918 ஆகவும் குறைந்திருப்பதை என்னவென்று சொல்வது? பெண் சிசுக்களைக் கருவிலும், பிறந்த பிறகும் கொல் வதைத் தடுப்பதற்குக் கடுமையான சட்டங்கள் வந்த பிறகுதான் விகிதாச்சாரம் மேலும் சரிந்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சினையில் வேறு பரிமாணங்கள் புலப்படுகின்றன. பெண் குழந்தைகளை விரும்பாத பெற்றோருக்கு உதவும் வகையிலான மருத்துவத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தையும், அறம் தவறிய மருத்துவத்தின் பெருக்கத்தையும் தவிர, வேறெந்தக் காரணத்தைச் சொல்ல முடியும்?
நம் சமூகம் எந்த அளவுக்கு ஆணாதிக்கச் சமூகமாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் பெண்சிசுக் கொலை. திருமணத்துக்கு உரிய சுமையாகவும், போகத்துக்கு உரிய பொருளாகவும் மட்டுமே பெண்களைப் பார்க்கும் பார்வை நம்மிடமிருந்து முற்றிலும் நீங்காத வரை இந்தப் படுகொலைகளை எந்த சட்டத்தாலும் தடுத்து நிறுத்தவே முடியாது என்பதுதான் உண்மை

தமிழக மொத்த மின்சாரத் தேவை ஆண்டுக்கு 91 ஆயிரத்து 642 மில்லியன்

தமிழக மொத்த மின்சாரத் தேவை ஆண்டுக்கு 91 ஆயிரத்து 642 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சத்தைக் குறிக்கும்) யூனிட்களாகும். சுமார் 34,253 மில்லியன் யூனிட்கள் சொந்த மின் உற்பத்தி மூலமும், 30,534 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் மத்திய அரசின் மின் நிலையங்கள் மூலமும், 6,082 மில்லியன் யூனிட்கள் மரபுசாரா எரிசக்தி மூலமும் பெறப்படுகின்றன.
மீதமுள்ள மின் தேவையில் 16.28 சதவீதம் நீண்ட கால ஒப்பந்தப்படி, 5,007 மில்லியன் யூனிட், நடுத்தர கால ஒப்பந்தப்படி 3,723 மில்லியன் யூனிட், 6,185 மில்லியன் யூனிட் குறுகிய கால ஒப்பந்தப்படி வாங்கப்படுகிறது. குறைந்த விலை மின் நிலையங்களில் 2,829 மில்லியன் யூனிட்டும், அதிக விலை மின் நிலையங்களில் 2,950 மில்லியன் யூனிட்டும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தட்டுப்பாட்டைத் தீர்க்கவே ஒழுங்குமுறை ஆணையத்தின் மெரிட் ஆர்டர் டிஸ்பேட்ச் மூலம், அதிக விலை மின்சாரம், 3.22 சதவீதம் கொள்முதல் செய்யப் படுகிறது.
அனைத்து வகை குறைந்த விலை ஆதாரங்களில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்ட பின்பே, இங்குள்ள நீண்ட கால ஒப்பந்தத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம், மின் தேவையை சமாளிக்கும் பொருட்டு மொத்த மின் தேவையில் வெறும் 3.22 சதவீதம் கொள்முதல் செய்யப்படுகிறது. குறைந்த விலை ஆதாரங்களில் மின்சாரம் கிடைக்கும்போது, இந்த அதிக விலை மின்சாரம் வாங்கப்படுவதில்லை.
1992-ம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தனியார் மின் உற்பத்தியாளர்களை ஊக்கு விக்கும் கொள்கைப்படி, 1996 முதல் 1999 வரை 7 தனியார் மின் உற்பத்தியாளர்களிடம், மின்சாரம் கொள்முதல் செய் யப்பட்டது. இந்த நிறுவனங்களின் எரிபொருள்கள் அதிக விலையானதால், மின்சார கொள்முதல் விலை ரூ.12.50 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலை யான யூனிட்டுக்கு ரூ.3.50-க்கு வாங்கினால், மொத்த மின் தேவையில் வெறும் 9,800 மெகா வாட் (75 சதவீதம்) அளவுக்கே மின் விநியோகம் செய்ய முடியும். மீதமுள்ள தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் மின் தடை செய்ய வேண்டியிருக்கும்.

*****************
தமிழக மக்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது மின் கட்டணம் உயர்த்தப்படக் கூடும் என்ற தகவல். ஏழைகள், குறைந்த பயன்பாட்டாளர்கள் அச்சப்படத் தேவை யில்லை என்று ஆளுங்கட்சி வட்டாரங்களும் மின் துறை அமைச்சரும் உறுதியளித்தாலும் மக்கள் மனதில் நிம்மதி ஏற்படவில்லை.
தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கும் மின்சாரத் தேவைக்குமான இடைவெளி தொடர்ந்து நீடிக்கிறது. 2012-13-ல், 67,208 மில்லியன் யூனிட் என்றிருந்த தமிழகத்தின் மின் தேவை 2013-14-ல் 76,445 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட இது 14% அதிகம். 2014-15-ல் நம்முடைய தேவை 91,642 மில்லியன் யூனிட்களாக இருக்கும். அதாவது, முன்பைவிட 20% அதிகம் இருக்கும் என்கிறார் மின்துறை அமைச்சர். கடுமையான மின் பற்றாக்குறையைக் குறைக்க முன்னெடுக்கப்பட்ட மின்உற்பத்தித் திட்டங்கள் இன்னமும் நிறைவடையாத சூழலில், சொந்த மின்உற்பத்தி மற்றும் மத்திய அரசின் மின்உற்பத்தி நிலையங்களின் மூலமாக 70% தேவையையே தமிழகத்தால் பூர்த்திசெய்துகொள்ள முடிகிறது. ஏனைய 30% தேவையை நாம் வெளியிலிருந்து மின்சாரத்தை வாங்கியே பூர்த்திசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இப்படி வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பாக, அரசு தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும். அப்படி எடுக்கப்படும் கொள்கை முடிவு, தனியார் உற்பத்தியாளருக்கும் கையைக் கடிக்காமல், மின்வாரியமும் பாதிக்கப்படாமல் ஒரு நியாயமான விலை நிர்ணயத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திடமிருந்தும் லான்கோ என்ற தனியார் நிறுவனத்திடமிருந்தும் ஒரு யூனிட் ரூ. 5.14 என்கிற விலையில் அரசு மின்சாரத்தை வாங்குகிறது. இதேபோல, வேறு சில தனியார் நிறுவனங்களிடமிருந்தும் ரூ. 4.91 என்ற அளவிலான விலையில் மின்சாரத்தை அரசு வாங்குகிறது. ஆனால், குறிப்பிட்ட 4 தனியார் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ரூ.12.50 என்ற விலைக்கு ரூ. 3,687.50 கோடி கொடுத்து வாங்குவதாக வெளியாகும் தகவல்கள் அதிரவைக்கின்றன.
சட்டப் பேரவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். முந்தைய திமுக அரசைச் சுட்டிக்காட்டி அவர் அளித்திருக்கும் விளக்கங்கள் திருப்தி அளிப்பதாக இல்லை. கடந்த அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் விளைவாகத்தானே இந்த அரசை ஆட்சிப் பீடத்தில் மக்கள் உட்கார வைத்திருக்கிறார்கள்? இப்படி ஆங்காங்கே யாருக்கும் தெரியாமல் விழும் ஓட்டைகள் பின்னாளில் நிறுவனங்களை நஷ்டக் கணக்கை நோக்கித் தள்ளுகின்றன. மக்களுக்கு மின்விநியோகம் முக்கியம். அந்த விநியோகம் விநியோக அமைப்பை நஷ்டப்படுத்திவிடாமல் இருப்பதும் முக்கியம்!
இந்த நேரத்தில் மின்சிக்கனத்தை வலியுறுத்தி மக்களிடையே அரசு பிரச்சாரம் மேற்கொள்வதும் நல்ல விளைவுகளைத் தரும். அதேசமயம், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையிலான மாற்றுமுறை மின்சாரத் தயாரிப்பிலும் அரசு அதிகக் கவனம் செலுத்த வேண்டிய சமயம் இது
*******************************

திங்கள், 1 டிசம்பர், 2014

Olympiad Links

http://www.hbcse.tifr.res.in/

http://www.hbcse.tifr.res.in/publications

http://olympiads.hbcse.tifr.res.in/olympiad-books

http://olympiads.hbcse.tifr.res.in/

http://msta.in/


http://www.nbhm.dae.gov.in/

http://nius.hbcse.tifr.res.in/

http://nopr.niscair.res.in/bitstream/123456789/16983/1/SR%2050%284%29%208-13.pdf

http://www.teacherplus.org/


http://www.smallhandbigart.com/