ஞாயிறு, 28 டிசம்பர், 2014

பாலிதீன் பைகளைத் தடைசெய்யத் தயக்கம் ஏன்?

மத்திய அரசு சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய முடிவை எடுத்திருக்கிறது. பாலிதீன் பைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்குறித்துப் பல நிபுணர் குழுக்கள் எச்சரித்திருக்கும் நிலையில், ‘பாலிதீன் பைகள் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படாது’ என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
‘தூய்மை இந்தியா’ என்ற பெயரில் நாட்டைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் மத்திய அரசு, மறுபுறம் சுற்றுச்சூழலுக்குத் தீங்கிழைக்கும் பாலிதீன் பைகளுக்குத் தடையில்லை என்று சொல்வதுதான் விநோதம்.
பாலிதீன் பைகள் தயாரிப்பைக் கட்டுப்படுத்த அவற்றின் மீதான வரியை உயர்த்தலாம் என்று முன்வைக்கப்பட்ட யோசனையையும் துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசு அலட்சியப்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தில், ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாட்டை மத்திய அரசு கவனத்தில்கொள்ளவில்லை. ஒரு ஆண்டுக்குத் தனிமனிதரின் பாலிதீன் பைகள் பயன்பாட்டை வெகுவாகக் குறைப்பது என்று ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள் முடிவெடுத்திருக்கின்றன. பாலிதீன் பைகளின் உற்பத்தியாளர்கள் அதிகம் உள்ள அமெரிக்காவும் இதே முடிவுக்கு வந்திருக்கிறது. 2015 ஜூலை மாதம் முதல் பாலிதீன் பைகளுக்குத் தடை விதிக்கப்போவதாக கலிஃபோர்னியா மாகாண நிர்வாகம் அறிவித்திருப்பதும் குறிப்பிடத் தகுந்தது.
பாலிதீன் பைகளின் ஆபத்தை மக்கள்தான் உணரவில்லை. ஆனால், அரசு நிர்வாகமும் உணரவில்லை என்பதுதான் ஆச்சரியம். இந்தப் பைகள் எளிதில் மக்குவதுமில்லை, உருக்குலைவதுமில்லை. நகரங்களில் பாதாளச் சாக்கடைகளை இவை அடைத்துக்கொள்கின்றன. நிலத்தால் தண்ணீர் உறிஞ்சப்படுவதற்குத் தடையாகவும் இந்தப் பைகள் இருக்கின்றன. நிலத்தில் கொட்டப்படும் பாலிதீன் பைகள் ஆடு, மாடு, மான் போன்ற விலங்குகளாலும், கடலில் கொட்டப்படும் பைகள் மீன்கள், திமிங்கிலம் போன்ற கடல்வாழ் உயிரினங்களாலும் விழுங்கப்படுகின்றன. இவை அந்த உயிரினங்களின் இரைப்பையில் சிக்கி அவற்றை உயிரிழக்கச் செய்துவிடுகின்றன. அது மட்டுமல்லாமல், கடலில் நாம் கொட்டும் குப்பைகளில் பெரும் பகுதியாக பாலிதீன் பைகளும் பிளாஸ்டிக் பொருட்களும் இருப்பதால், கடல் சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.
பாலிதீன் பைகளின் பயன்பாடு பரவிவிட்டதாலும் இந்தப் பைகளின் தயாரிப்பு பெரும் தொழிலாக ஆகிவிட்டதாலும் தடைவிதிப்பதற்கு அரசு தயக்கம் காட்டுகிறது. பாலிதீன் பைகளின் பயன்பாட்டை அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் குறைக்க வேண்டும் என்று 2012-லேயே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. எனவே, மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாலிதீன் பைகளுக்குத் தகுந்த மாற்று என்ன என்பதையும் ஆராய்வது மிகவும் அவசியமானது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மாற்றுப் பொருட்கள் தயாரிப்பில் உலக நாடுகள் பலவும் ஈடுபாடு காட்டி வரும் நிலையில், இந்தியா அதில் காட்டிவரும் அக்கறையின்மை மிகவும் ஆபத்தானது.
இந்தியாவிலேயே சில மாநிலங்களில் பாலிதீன் பைகளின் பயன் பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசும் இதைப் பின்பற்றி சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும். அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திராமல், மக்களே பாலிதீன் பைகளின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டால், மாற்றம் நிச்சயம்.

Best Science Incidents - 2014

அறிவியல் நிபுணர்களைக் கொண்டு ‘தி கார்டியன்’ இதழ் தயாரித்திருக்கும் பட்டியல்
1. மேற்கு அண்டார்டிகாவில் பனிப்படிவுகள் பெருமளவில் உருகத் தொடங்கின – 13 ஜனவரி:
மேற்கு அண்டார்டிகாவில் படர்ந்திருந்த பனிப்படிவுகள், இனி திரும்பவும் பழைய நிலைக்குத் திரும்பாது என்கிற அளவுக்கு உருகி ஆமுண்ட்சன் கடலில் கலந்துவருவதாக 3 ஆய்வுகள் தெரிவித்தன. அடுத்த சில நூறாண்டுகளுக்கு உலகின் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கும். மனிதர்களின் செயலால் பனி உருகுகிறது என்று வழக்கமாகக் கூறும் காரணத்தை இதற்குக் கூற முடியாது. அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆகிய இடங்களுக்கு வேண்டுமானால் இது ஓரளவுக்குப் பொருந்தலாம். ஆமுண்ட்சன் கடலிலேயே பனிப்பாறைகளுக்குக் கீழே கடல் நீர் சூடானதால் இந்த உருகுதல் அதிகரித்துள்ளது. கடல் நீர் சூடேறியதற்கும் மனிதர்கள்தான் காரணமா என்ற ஆய்வும் தொடர்கிறது.
2. எஜமானரின் குரலை நாய்கள் அடையாளம் காண்கின்றன – 21 பிப்ரவரி:
மனிதனின் மூளை எப்படி வேலை செய்கிறது என்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங் மூலம் ஆய்வு செய்கிறார்கள். அதையே வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். உணர்ச்சியூட்டக்கூடிய குரல்களைக் கேட்டால் மனிதர்களாலும் நாய்களாலும் அதற்கு எதிர் வினையாற்ற முடிகிறது என்று மூளைத் திசுக்களின் மடிப்புகளுடைய செயல்பாட்டை ஆராய்ந்ததிலிருந்து அறிய முடிகிறது. தன்னை வளர்க்கிறவர்களுடைய சில வார்த்தை களை நாய்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே மாதிரி கையாலோ கை விரலாலோ சுட்டப்படுவதையும் நாய்கள் புரிந்துகொள்கின்றன. அங்கே போய்ப் படு என்றாலோ அசையாமல் இரு என்றாலோ அதைக் கேட்டு நடக்கின்றன. சுட்டிக்காட்டுவதைக் கொண்டு புரிந்துகொள்ளும் ஒருசில உயிரினங்களில் நாயும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.
3. ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு (அல்லது கண்துடைப்பா?) – 17 மார்ச்:
பேரண்டம் பிறந்தபோது ஏற்பட்ட அலைகளை விண்ணில் அடையாளம் கண்டதாகப் பிரபஞ்சவியலாளர்கள் தெரிவித்தனர். தென் துருவப் பிரதேசத்தின் ஆமுண்ட்சன்-ஸ்காட் விண்நோக்கி, பைசெப்-2 உதவியுடன் இதைக் கண்டுபிடித்ததாக அவர்கள் கூறினர். மிகவும் நுட்பமான விண்நோக்கி மூலம் ஆய்வுசெய்தபோது, மிகவும் பலவீனமான நுண்ணலை கதிர்வீச்சு வெளிப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால், இந்த உற்சாகம் வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. நட்சத்திர மண்டலத்தைச் சுற்றிவரும் விண்வெளித் தூசியை (ஸ்பேஸ் டஸ்ட்) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுசெய்தனர். இந்த ஆய்வுக்குப் பிறகு, முதலில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தகவல் நம்பக மானதுதானா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. என்ன, புருவத்தை உயர்த்துகிறீர்களா? அதுதான் அறிவியல். எந்த ஒரு அனுமானமும் முடிவும் இறுதியானதல்ல. அடுத்த தகவல் கிடைக்கும்போது இந்த முடிவும் மாறும்.
4. நோய் உயிர்முறிகளுக்கு (ஆன்டிபயாடிக்ஸ்) அடங்க மறுக்கும் தன்மையை ஆராயும் ஆய்வுக்கு 10 மில்லியன் லாங்கிடியூட் விருது – 25 ஜூன்:
நோய் உயிர்முறிகள் (ஆன்டிபயாடிக்ஸ்) பலனற்றுப் போகும் வகையில் நோய்க்கான காரணிகள் தகவமைத்துக் கொள்வது மருத்துவ உலகில் பெரிய சிக்கலாக உருவாகிவருகிறது. லாங்கிடியூட் விருது நிறுவப்பட்டு 300 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2014-ல் மனித குலம் எதிர்நோக்கிய 6 முக்கிய சவால்களைப் பட்டியலிடுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
நோய் உயிர்முறிகள் பயனற்றுப்போகும் நிலை மிகப் பெரிய சவால் என்று லிஸ் போனின் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கூறிய கருத்து ஏற்கப்பட்டு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது. மக்களிடமே இப்படிக் கேள்வி கேட்பதால் புதிய கண்டுபிடிப்புகளையும் கூட்டுத் தொழில் முயற்சிகளையும் ஊக்குவிக்க முடிகிறது. ஆயிரக் கணக்கான தனிநபர்களும் அமைப்புகளும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர். நாம் எதிர்பாராத இடத்திலிருந்து தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.
5. கரிப்புகை வெளியீட்டை விண்ணிலிருந்து கண்காணிக்கும் ஆய்வு நிலையம் ஏவப்பட்ட நிகழ்ச்சி – 2 ஜூலை:
புவியின் மேற்பரப்பில் வெளியிடப்படும் கரிப்புகையின் அளவு, அது தோன்றும் இடம், அதனால் ஏற்படும் பருவநிலை மாறுதல்கள் போன்றவற்றைக் கண்காணிக்கவும் தரை நிலையத்துக்குத் தகவல் தரவும் அமெரிக்காவின் வான்டன்பர்க் விமானப்படை தளத்திலிருந்து டெல்டா-2 ரக ராக்கெட் நுண்ணோக்கிக் கருவியைச் செயற்கைக் கோளில் சுமந்து சென்றது. மார்க்-1 என்ற பெயரில் 2009-ல் அனுப்பப்பட்ட முதல் செயற்கைக்கோள் விண்ணில் நிகழ்ந்த விபத்தில் நாசமாகிவிட்டது. இந்த செயற்கைக் கோள் நம்முடைய பூமி எப்படி சுவாசிக்கிறது என்பதைச் சுற்றிச்சுற்றி வந்து தகவல்களைச் சேகரித்து அனுப்பிக்கொண்டேயிருக்கும். அதற்கேற்ப எதிர்காலத்தில் கரிப்புகை வெளியீட்டைக் குறைக்கவும் அறவே தவிர்க்கவும்கூட முடியும்.
6. நாலரை ஆண்டுகள் அடைகாத்த ஆக்டோபஸ் அன்னை – 30 ஜூலை:
கடலுக்கு அடியில், ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில், கும்மிருட்டில், எலும்பையே உறையவைக்கும் கடுங்குளிரில் 53 மாதங்கள் – கிட்டத்தட்ட நாலரை ஆண்டுகள் – உண்ணாமல், உறங்காமல், அசைவு ஏதும் இல்லாமல் ஒரே இடத்தில் உங்களால் உட்கார்ந்துகொண்டிருக்க முடியுமா, அதுவும் முட்டைகளின் மீது? ஒரு ஆக்டோபஸ் அப்படித் தவமிருந்து தன்னுடைய முட்டைகளை அடைகாத்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவு பொறுமையுடன் அடைகாத்தாலும் குஞ்சுகள் வெளிவந்து நடமாடத் தொடங்கும்போது தாய் ஆக்டோபஸ் உடல் கிழிந்து மரித்துப்போவதுதான் உச்சம். எல்லா ஆக்டோபஸ் தாய்க்குலங்களும் இப்படித்தான் செய்கின்றனவா, கடலுக்கடியில் நீண்ட காலம் உணவின்றி வாழும் வலிமையையும் தந்திரத்தையும் அவை எப்படிப் பெறுகின்றன என்கிற ஆய்வுகள் தொடர்கின்றன.
7. பேராசிரியர் ஜான் ஓகீஃப் மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்றது – 6 அக்டோபர்:
பேராசிரியர்கள் ஜான் ஓகீஃப், மே-பிரிட், நார்வேயைச் சேர்ந்த மே-பிரிட், எட்வர்ட் மோசர் ஆகியோர் மூளையின் செயல்பாட்டை ஆராய்ந்து கண்டுபிடித்த அரிய தகவல் களுக்காக நோபல் பரிசு பெற்றனர். ஒரு இடத்துக்குப் போவதற்கான வழியையும் அடையாளமான இடங்களையும் நம் மூளையின் எந்தப் பகுதி பதிவு செய்து உதவுகிறது என்பதை மூவரும் கண்டுபிடித்தார்கள். மகத்தான இந்தக் கண்டுபிடிப்புக்குச் சரியான அங்கீகாரமே நோபல்.
8. வர்ஜின் கேலக்டிக் நொறுங்கல் – 31 அக்டோபர்:
வர்ஜின் கேலக்டிக் என்ற நிறுவனம் விண்வெளிக்கு வர்த்தகரீதியாகப் பயணிகளை ஏற்றிச்செல்லப்போவதாக அறிவித்திருந்தது. 5 ஆண்டுகள் கழித்து ஒருவருக்குப் பயணக் கட்டணம் 2.5 லட்சம் டாலர்கள். கடந்த அக்டோபர் 31-ம் தேதி கேலக்டிக்-2 சோதனை முறையில் பறக்க விடப்பட்டபோது வெடித்துச் சிதறியது. அதை இயக்கிய பைலட்டும் இறந்துவிட்டார். இந்த விபத்தால் விண்வெளிக்குப் பிற மனிதர்களை ஏற்றிச் செல்லும் சாகசப் பயணம் தாமதமாகும் என்பது உறுதியாகிவிட்டது.
9. வால்நட்சத்திரத்தில் பிலே தரையிறங்கியதால் மோனிகா கிராடி அடைந்த உற்சாகம் – 13 நவம்பர்:
வால்நட்சத்திரம் ஒன்றை அதிலிருந்தே ஆராய ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிலே என்கிற நவீன ஆய்வுக் கருவியை பத்தாண்டுகளுக்கு முன்னர் அனுப்பியது. அது 2014 நவம்பர் 13-ல் வால்நட்சத்திரத்தில் இறங்கி தகவலும் புகைப்படமும் அனுப்பத் தொடங்கியதும் விண்ணாய்வு நிலையத்தில் இருந்த மோனிகா கிராடி என்ற பெண் விஞ்ஞானி துள்ளிக்குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிலேயின் சாதனையை இதைவிட அதிகமாக யாரும் கொண்டாடிவிட முடியாது.
10. டிரினில் ஓடு- டிசம்பர் 3:
நேச்சர் பத்திரிகையில் இந்த மாதத் தொடக்கத்தில் வெளியான ஒரு கட்டுரை, மனித குலத்தின் தோற்றத்தை ஆய்வு செய்யும் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்தோனேசியாவின் டிரினில் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கடல்வாழ் உயிரினத்தின் ஓடுதான் அந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், அதன் வயது 5 லட்சம் ஆண்டுகளுக்கு மேல். அதற்காகவா அதிர்ச்சி? இல்லையில்லை, அதன் மீது அப்போதைய மனிதனால் கையால் வரையப்பட்ட சில குறிகள் காணப்பட்டிருக்கின்றன.
அவை வடிவகணிதத்தில் இப்போதும் பயன்படுத்தப்படும் சங்கேதக் குறிகள். வடிவகணித சங்கேதங்களை நவீன மனிதர்களால்தான் (அதாவது சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இப்போது வரை இருக்கும் நவீன மனிதர்களால்) வரைய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறிவரும் நிலையில், இந்தக் கண்டுபிடிப்பு கால வரை யறையை மேலும் முன்னுக்குத் தள்ளியிருக்கிறது.
11. ஓரியான் சோதனைக் கலம் பூமிக்குத் திரும்பியது – 5 டிசம்பர்:
ஓரியான் விண்கலம் கலிஃபோர்னியாவுக்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் சோதனை ஓட்டத்துக்குப் பிறகு பத்திரமாகத் திரும்பி வந்து சாதனை படைத்தது. பூமியைச் சுற்றி மிகக் குறைந்த உயரத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால் பறந்து செல்லும் முயற்சியை ஓரியான் மேற்கொண்டது. ஆளற்ற ஓரியான் கலம் பூமியை விட்டு வெகு தொலைவில் நீள்வட்டப் பாதையில் சுற்றிவிட்டுத் திரும்பியது. மனிதர்களை ஏற்றிச் சென்ற விண்கலங்களைவிட அதி வேகத்தில் பறந்தது. ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்துக்குப் பயணிக்கும் முயற்சிகளுக்கு நாம் இன்னும் எவ்வளவோ முயற்சிக்க வேண்டியிருந்தாலும் இந்த சாகசம் அதற்கான முதல் படி.
12. சூரிய ஒளித்தகடுகள் 40% திறனுடன் செயல்பட புதிய முயற்சி – 8 டிசம்பர்:
சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தின் திறன் மேலும் கூட்டப்பட்டிருக்கிறது. மிக மெல்லிய மேற்பரப்பைக் கொண்ட பாதியளவு மின் கடத்திகள் இருளில் மிக மெதுவாகவும் சூரிய வெளிச்சத்தில் அதிகமாகவும் மின்சார ஆற்றலைக் கடத்தும் திறன் படைத்தவை. இப்போதைக்கு சிலிக்கான் கொண்டுதான் சூரியஒளி மின்சாரப் பலகைகளை அமைக்கின்றனர். இந்நிலையில், சூரியஒளி மின்சாரத் தயாரிப்புத் தகடுகளின் திறன் 40% என்றாகியிருப்பது மிகவும் முக்கியமான முன்னேற்றமே.
- © ‘தி கார்டியன்’, தமிழில்: சாரி

மதிப்புமிக்க தலைவர் நல்லகண்ணு

தே டிசம்பர் மாதத்தில்தான் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய விவசாயிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 1968-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் பாதிப்பை விளைவித்தது. ஞானக்கூத்தன், இன்குலாப், இந்திரா பார்த்தசாரதி, சோலை சுந்தரபெருமாள் உள்ளிட்ட பலரும் பல்வேறு காலகட்டங்களில் இந்தச் சமூகக் கொடுமையைத் தங்கள் படைப்புகளில் பதிவுசெய்துள்ளனர்.
ஆனால் அதற்கு ஆறாண்டுகளுக்கு முன்பு 1962-ல் இதே போன்ற ஓர் அடக்குமுறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் நடத்திவந்த ‘சாந்தி’ இதழில் ‘சூத்திரதாரி’ என்னும் ஒரு சிறுகதை வெளிவந்திருந்தது. ஆர். என். கண்ணன் என்பவர் அந்தக் கதையை எழுதியிருந்தார். அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு. வெளிவந்தவுடனே பரவலாக வாசிக்கப்பட்டு கவனமும் பெற்றது. அந்த எழுத்தாளருக்கு அதுதான் முதல் கதை. அதற்கு முன்பு கட்டுரைகள் எழுதியுள்ளார். முதல் கதைதான் என்றாலும் கதையின் விவரிப்பு கூர்மையானதாக இருந்தது. உண்மை ஒளியும் பொருந்தியிருந்தது. வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்தும் தொ.மு.சியின் ‘பஞ்சும் பசியும்’, பூமணியின் ‘வெக்கை’ போன்ற நாவலை எழுதியிருக்க வேண்டிய அந்த எழுத்தாளர் துரதிர்ஷ்டவசமாக அதன் பிறகு கதையே எழுதவில்லை. அதுவே அவரது முதலும் கடைசியுமான கதையாகிவிட்டது. ஆனால் அவர் தன் வாழ்க்கையைப் பக்கங்களுக்குள் அடக்கவியலாத அனுபவங்களால் ஆனதாக மாற்றிக்கொண்டார். 72 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பொது வாழ்க்கையே இன்றைய சமூகத்திற்கான ஒரு முன்னுதாரணம். தோழர் ஆர்.என்.கே. என அழைக்கப்படும் மதிப்புமிக்க தலைவர் நல்லகண்ணுதான் அந்த எழுத்தாளர்.
முதலாளிகளின் அடக்குமுறை
சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கம்தான் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்தது. அந்த இயக்கமோ பெரும்பாலும் பண்ணையார்களையே நம்பியிருந்தது. சுதந்திர இந்தியாவிற்குத் தேர்தல் வந்தபோது வேட்பாளர்கள் பலரும் பண்ணையார்களே. இல்லையெனில் பண்ணையார்களின் ஆதரவையும் ஆசியையும் பெற்றவர்களாக இருந்தனர். சுதந்திரம் பெற்ற பிறகும் அதே ஆண்டான், அடிமை முறைதான். இந்தச் சூழலில்தான் ‘ஆகாவென்று எழுந்தது யுகப் புரட்சி’. தோழர்கள் பலர் கிராமம் கிராமமாகச் சென்று முதலாளிகளின் அடக்குமுறை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினர். தோழர் நல்லகண்ணு அவர்களுள் ஒருவர்.
கவிதையின் மீது ஈடுபாடு
அந்தக் காலகட்டத்திய நல்லகண்ணுவின் அனுபவம்தான் ‘சூத்திரதாரி’ கதையாக வெளிப்பட்டிருக்கிறது எனலாம். நல்லகண்ணு கவிதையின் மீது ஈடுபாடு கொண்டவர். சுப்ரமண்ய பாரதியும், சுத்தானந்த பாரதியும் இவரது ஆதர்ச கவிகள். கவிதைகளும் எழுதியிருக்கிறார்; மொழிபெயர்த்துள்ளார். ஆனால் கதைக்கு மிக எளிமையான வட்டார வழக்கு மொழியே அவர் தெரிவு. அந்தக் காலகட்டத்திய ரொமண்டிஸிசமும் இவரது கதையில் இல்லை. கதைச் சூழல் குறித்த தேவையில்லாத அழகியல் விவரிப்புகள் இல்லை. இந்த அம்சம், கருத்தைச் சிதைக் காமல் கதைக்குப் பலமாகிறது.
சுதந்திர இந்தியாவின் சிறு கிராமத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சாரம்தான் கதையின் மையம். பண்ணையார்கள் அந்தக் காலத்தில் தனி அரசாங்கங்களாக இருந்தனர் என்பதைக் கதை தொடக்கத்திலேயே சித்திரித்துவிடுகிறது. அவர்களின் தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது என்கிறது கதையின் ஒரு வரி. பண்ணையார்களின் தயவில்தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதற்கு இந்தக் கதை ஆதாரமாகிறது. பண்ணையார்கள் கை நீட்டிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் நிலையில் மக்கள் இருந்துள்ளனர் என்பதும் புலனாகிறது. ஏனெனில் தனக்குப் பணியாத மக்களைக் காவல்துறையை ஏவித் தண்டிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு இருந்துள்ளது.
முனியனின் குடிசை
கைலாசபுரம் என்னும் கிராமத்தை கீழச்சேர்ப் பண்ணை, மேலச்சேர்ப் பண்ணை ஆகிய இரு பண்ணையார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் குமாரசாமியா பிள்ளை பண்ணையார்களின் ஆதரவை நாடி வருகிறார். போட்டியிடுபவர் சொந்தக்காரர். கட்சியும் வேண்டப்பட்ட கட்சி என்பதால் ஆதரிக்கிறார்கள். அந்த ஊரின் பெரும்பான்மை ஜாதி வாக்கை நம்பி அவர்களில் ஒருவரை வேட்பாளராக அறிவித்து தன் கட்சிக்கான அறுவடையைச் செய்ய மற்றொரு புதிய கட்சி முயல்கிறது. இதற்கிடையில் தொழிலாள வர்க்கத்தின் புதிய எழுச்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் களத்தில் இறங்குகிறது.
பண்ணைகளைக் கடந்து செல்லும் கம்யூனிஸ்ட் தோழர்களின் சைக்கிள் பேரணி பண்ணையார்களை நடுநடுங்கச் செய்கிறது. ஒலிப்பெருக்கியிலிருந்து தெறிக்கும் அவர்களது முழக்கங்கள் பண்ணையார்களின் செவிநரம்பை அதிரச்செய்கின்றன. பேரணியின் முன்னின்று செல்லும் முனியன் என்ற ஒரு தலித்தை நோக்கிப் பண்ணையார்களின் தடித்த கன்னங்கள் சிவக்கின்றன. அதுவரை ‘பெளவியமாக’ இருந்த தலித்துகளுக்கு கம்யூனிச இயக்கம் தந்த தைரியம் பண்ணையார்களால் சகிக்க முடியாததாக இருக்கிறது. இறுதியில் முனியனின் வீடு தீப்பற்றி எரிகிறது.
நாட்டார் பாடல்களில் ஈடுபாடு
நல்லகண்ணு சிறையில் இருந்த கால கட்டத்தில் வாசிப்பு, எழுத்து எனத் தீவிரமாக இயங்கியுள்ளார். நாட்டார் பாடல்கள் மீது அவருக்கு உள்ள நாட்டத்தை அந்தக் காலகட்டத்திய அவரது கட்டுரைகளின் வழியே அறிய முடிகிறது. கசப்புக் கவிஞர் என அழைக்கப்பட்ட ஆண்டான் கவிராயன் குறித்து எழுதியுள்ளார். இந்தக் கவிஞர் குறித்த பதிவை உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ நூலில் பார்க்க முடிகிறது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் புனைப்பெயர்களில் ஒன்று ‘ஆண்டான் கவிராயன்’. சமுதாய அநீதிகளைச் சபித்துப் பாட இந்தப் புனைப்பெயரை கவிமணி சூட்டிக்கொண்டுள்ளார். ஆண்டான் கவிராயனின் தனிப் பாடல் திரட்டுகளிலிருந்து பல பாடல்களை நல்லகண்ணு மேற்கோள் காட்டுகிறார். 1950-ல்தான் ஆண்டான் கவிராயன் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவருகின்றன. அதை வாசித்துப் பதிவுசெய்ததில் நல்லகண்ணுவின் நுட்பமான வாசிப்பு நமக்குப் புலனாகிறது. சாதி, மத பேதமின்றி உயரும் ஆண்டான் கவிராயனின் சாடல்களைப் பாரபட்சமின்றிப் பகிர்ந்து கொள்கிறார் நல்லகண்ணு.
பாடல்கள் மூலம் கடந்த சிறைக்கொடுமை
கொண்டாட்டத்திற்கான, தேம்பலுக்கான வடிவமாகப் பாடல்கள் இருக்கின்றன. சிறைகளின் தனிமையை, கொடுமைகளை கைதிகள் பாடல்கள் மூலம்தான் கடந்திருக்கிறார்கள். அவற்றைச் சிறைப் பாடல்கள் எனத் தனியாகப் பட்டியலிடுகிறார் நல்லகண்ணு. அந்தக் காலத்தில் சிறை அதிகாரிகளை ‘சார்’ என விளிப்பது மரியாதைக் குறைவாகப் பார்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகளை விளிப்பதுபோல் ‘துரை’ என்றே விளிக்க வேண்டும். இதை மீறும் கைதிகளுக்குக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளன. “...தீஞ்ச ரொட்டிக்கும்/கையேந்தி நிற்கும் பரிதாபம்/பார்/ சார்... சார்... என்று சொன்னால் ஷட் அப்” என்னும் சிறைப்பாடலை வேடிக்கையாக மேற்கோள் காட்டுகிறார்.
நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் நா. வானமாமலை தொடர்பால் இவருக்கு நாட்டார் பாடல்கள் மீதான ஆர்வம் மிகுந்திருக்கலாம் என அவதானிக்க முடிகிறது. நா.வா. குறித்தும் நல்லகண்ணு எழுதியிருக்கிறார். திரு.வி.க., தமிழ்ஒளி, தொ.மு.சி. ஆகியோர் குறித்தும் மரியாதையுடன் பதிவுசெய்துள்ளார். பாரதி குறித்த அவரது கட்டுரைகள் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.
பாரதியைத் தேடி
காசியில் பாரதி வசித்த வீட்டைத் தேடி அலைந்த கதையைச் சுவாரஸ்யமாகப் பதிவுசெய்கிறார் நல்லகண்ணு. கங்கையின் ஓரத்திலிருந்த ஒரு வீட்டில் பாரதி வசித்துவந்துள்ளார். தன் மாமா மீதுள்ள பயம் கலந்த மரியாதையால் மாடி அறையில் பதுங்கிக்கொண்டிருந்த காட்சியைத் தன் எழுத்துகள் வழியாக நல்லகண்ணு நம் கண் முன்னே உருவாக்கிவிடுகிறார். பாரதிக்கும் அவரது தங்கைக்குமான நேசத்தை நல்லகண்ணு விவரிக்கும்போது பாரதியின் இன்னொரு பக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது.
நீண்ட நெடிய பொதுவாழ்க்கையில் எல்லாவற்றையும் தாண்டி பாரதியும் மார்க்ஸும் நல்லகண்ணுவின் ஆதர்ச புருஷர்களாக இருக்கிறார்கள் எனலாம். இப்போது இவருடைய அலுவலக மேஜையில் இவர்கள் இருவரது நிழற்படங்களை மட்டும் பார்க்க முடிகிறது. இந்த நிழற்படங்களில் இருக்கும் பாரதியும் மார்க்ஸும் இரு தனி நபர்கள் மட்டுமல்ல; 72 ஆண்டுக் காலப் பயணத்தின் மொழியும் அரசியலும்.
- மண்குதிரை, தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

Speaking as a Leader

ஒரு தலைவனைப் போல் பேசுங்கள்’ எனும் ஜீடித் ஹம்ப்ரே எழுதிய (ஸ்பீக்கிங் அஸ் எ லீடர்) புத்தகம் தலைவர்களுக்கு (லீடர் அலுவலகமானாலும் சரி, அரசிய லானாலும் சரி) பேச்சுத்திறன் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைக்கின்றது.
போர்டு ரூமோ அல்லது மீட்டிங் ரூமோ, பொதுமேடையோ அல்லது சாதாரணமாய் பேசும் ஒரு டெலிபோன் காலோ ஒவ்வொரு முறை நீங்கள் பேசும் போதும் அந்தப் பேச்சில் தலைமைப் பண்புகள் நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள்வது எப்படி? என்பதைச் சொல்கின்றார் ஆசிரியர்.
இருபத்தி ஐந்து வருடங்களுக்கும் மேலாக லீடர்ஷிப் பயிற்சிகளை அளித்து வரும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அலுவலகத்தில் அடுத்தவரிடத்தில் பேசும் ஒவ்வொரு பேச்சும் நமக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு. அதை மற்றவர் களிடத்தில் நம்முடைய செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் விதத்திலும் (இன்ஃப்ளுயன்ஸ்), நம்முடைய ஆளுமைத் திறமையை உணர்ந்து நம்மீது ஈர்ப்புகொள்ளும் விதத்திலும் (இன்ஸ்ப்பையர்) உபயோகித்துக் கொள்வது எப்படி என்பதை தெளிவு படுத்துகின்றார். திறமையான லீடர்கள் அவர்கள் வகிக்கும் பதவி மட்டுமே அவர்களுக்கு பெரிய அளவிலான மரி யாதையை உண்டுபண்ணுவது இல்லை என்பதை புரிந்து வைத்திருக்கின்றார்கள்.
தலைவனின் மதிப்பு
ஒரு லீடரின் மதிப்பை உயர்த்துவது என்பது அவர்களை முழுமையாக நம்புபவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில்தான் இருக்கின்றது என் பதையும் தெளிவாய்ப் புரிந்துவைத் துள்ளனர். அதனாலேயே, அவர்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பை, அது மேடைப்பேச்சானாலும் சரி, பிரசன் டேஷனானாலும் சரி, போன் பேசுவதிலானாலும் சரி, ஏன் அலுவலகத்தில் மின் தூக்கியில் (லிப்ட்) சக ஊழியர்களுடன் பயணிக்கும் போதானாலும் சரி முழு மையாக தங்களுடைய தலைமைப் பண்பை வெளிக்காட்டும் விதத்தில் அமைத்துக்கொள்ளத் தவறுவதே யில்லை.
சக பணியாளார், சீனியர் மேனேஜ்மெண்ட், வாடிக்கையாளர், தொழில் கூட்டாளிகள் என பலதரப்பட்ட நபர்களிடத்திலுமே லீடர்கள் பேசும் போது ஒரு சுறுசுறுப்பான பரபரப்பு பற்றிக்கொள்ளும் வகையில் தங்கள் பேச்சை அமைத்துக்கொள்கின்றனர் என்கின்றார் ஆசிரியர்.
லீடர்களின் இந்தப் பண்புகளை ஆராய்ந்தறிந்து ஜீடித் ஹம்ப்ரெயின் நிறுவனம் கண்டுபிடித்ததுதான் லீடர்ஷிப் மாடல் எனும் பேச்சாற்றலை பெருக்கு வதற்கான வழிமுறையை. இந்த மாடல் சொல்வது என்ன என்று பார்த்தால் ஒவ் வொரு சமயத்திலும் ஒரு தலைவனைப் போல் பேசுவது எப்படி? என்பதற்கான விஷயங்களைத்தான்.
இந்த மாடலில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் ஒரு லீடர் தன்னுடைய பேச்சு குறித்த நடை முறைகளை மாற்றியமைத்துக்கொண் டால் அதன் பின்னர் அவர் பேசுவது நீண்டதொரு மேடைப்பேச்சானாலும் சரி, அலுவலகத்தில் லிப்டில் பயணிக்கும் போது பேசும் ஒரு சில வினாடிகளுக்கான பேச்சானாலும் சரி அது முழுக்க முழுக்க தலைமைப் பண்பை கொண்ட பேச்சாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை தருகின்றார் ஆசிரியர். நான்கு படி நிலைகளைக் கொண்ட இந்த மாடலை நீங்கள் பின்பற்றும் போது உங்களின் உள்ளே ஓளிந்திருக்கும் தலைமைப் பண்பு வெளிக்கொணரப்பட்டு மிளிரும் என் கின்றார் ஆசிரியர்.
தலைவனைப் போல் சிந்திப்பது
தலைவனாய் மாற முதலில் தலை வனைப் போல் சிந்திக்க வேண்டும். நான் எந்த மாதிரியான தலைமைப் பண்புகளைக் கொண்டு திகழப்போகின் றேன் என்பதை சிந்தித்து மனதில் உரு வேற்றவேண்டும். அந்தச் சிந்தனை யின் விளைவால் பெற்ற எண்ணங் களை நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு பேசும் வாய்ப்பிலும் நாம் அழுத்தந்திருத் தமாய் வெளிப்படுத்தும் வகையில் நம்முடைய பேச்சை அமைக்க நாம் முயற்சிக்கவேண்டும். நல்ல தலைவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருப்பது ஒரே ஒரு விஷயத்தைத்தான். அவர்களுடைய பேச்சு கேட்பவர்களை ஈர்க்கப்படும் படி அமைக்கப்பட்டிருக்கவேண்டுமே தவிர வெறுமனே தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவதைப் போல் ஒரு போதும் அமைக் கப்பட்டுவிடக்கூடாது எனபதுதான் அது.
இது மட்டுமல்ல நல்ல தலைவர் கள் அடுத்தவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவும், மற்றவர்களிட மிருந்து நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தெரிந்துவைத்துக் கொண் டிருக்கின்றார்கள் என்கிறார் ஆசிரியர்.
தலைவன் போன்ற பேச்சை தயாரிப்பது
நம்முடைய பேச்சைக் கேட்பவர்கள் எந்த விதமான எதிர்பார்ப்புடன் இருப்பார் கள் என்பதை சிறந்த தலைவர்கள் தங்கள் விரல் நுனியில் வைத்துள்ளனர் என்று சொல்லும் ஆசிரியர் பேச்சின் ஆரம்பமே அனைவரையும் அட என்னமா பேசுகின்றார் என நினைக்க வைத்து கூர்ந்து கேட்கத் தூண்டுவதாய் அமைய வேண்டும் என்கின்றார். அப்படி பேச்சைக் கேட்கும் நபர்கள் கூர்ந்து கேட்க ஆரம்பிக்கும் போது உடனடியாக உங்கள் பேச்சின் அடிநாதம் என்ன என்பதைச் சொல்லிவிட வேண்டும் என்கின்றார். தலைவனின் பேச்சில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயமே அந்த அடிநாதம்தான். அதுதான் பவர்புல்லான ஒன்று.
உழைப்பைக் கூட்டவேண்டுமா, திறனை அதிகரிக்க வேண்டுமா, போகும் பாதையை மாற்ற வேண்டுமா, போராட் டம் நடத்தவேண்டுமா என என்ன அப்போது பேசும் பேச்சின் அடிநாதம் என்பதை பேச்சைக்கேட்பவர்கள் கூர்ந்துகேட்கும் போதே உடனுக்குடன் சொல்லிவிடவேண்டும். ஏனென்றால், அந்தப் பேச்சின் வெற்றியே தலைவன் சொல்வதை கேட்பவர்கள் அதை முழுமையாக கேட்டு, நம்பி அதற்குண்டான நடவடிக்கைதனில் ஈடுபட்டால்தான் கிடைக்கும் இல்லையா? என்று கேட்கின்றார் ஆசிரியர்.
தலைவனின் சொல்வன்மை
தலைசிறந்த தலைவர்கள் எந்த வார்த்தையை எங்கு உபயோகப்படுத்து கின்றோம் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார்கள். வார்த்தைகளை மிகவும் திட்டமிட்டு செதுக்கி செப்பனிட்டு தங்களுடைய பேச்சில் இணைப்பார்கள் என்கின்றார் ஆசிரியர். ஏனென்றால், வார்த்தைகளே பேச்சின் கருத்தை எடுத்துச்செல்லும் வாகனமாய் இருக்கின்றது.
கவனத்தை ஈர்ப்பதிலும், நம்பவைப் பதிலும், உளமாரவும் உணர்ச்சிப்பூர்வ மாகவும் செயல்படவைப்பதிலும் வார் த்தைகளின் பங்கு மிகமிக அதிகம் என ஆணித்தரமாகச் சொல்லும் ஆசிரியர் இதனாலேயே வார்த்தைகளைத் தேர்ந் தெடுப்பதில் தலைவர்கள் அதிக கவ னத்தை மேற்கொள்ள வேண்டியிருக் கின்றது என்கின்றார். தெளிவான, பேச்சு வழக்கில் உள்ள, ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சென்றடையக் கூடிய, அலங்காரமான, வலிமையான வார்த்தைகளே சொல்லும் விஷயத்தை அதிரடியாய் கேட்பவரிடத்தில் கொண்டு போய் சேர்க்கின்றது என்பதைத் தலை வர்கள் தெளிவாய்ப் புரிந்துவைத்துக் கொண்டுள்ளனர் என்கின்றார் ஆசிரியர்.
‘தலைவன்டா’ என்ற எண்ணத்தை கேட்பவரிடத்தில் கொண்டுவருதல்
தலைவர்கள் ஒரு நடிகரைப் போல. அவரே சொல்லும் கருத்துக்கும் பேச்சுக் கும் உயிரைக் கொண்டுவருபவர். அது எப்படி பேச்சுக்கு உயிர்வரும் என்கின்றீர்களா? காட்டும் எனர்ஜி, கண்ணில் தெரியும் தீர்க்கம், கை மற்றும் உடல்மொழி, குரலின் ஏற்ற இறக்கம் என ஒரு நடிகராகவே மாறி தன்னுடைய பேச்சுக்கு உயிர்கொடுத்து கேட்பவர்களிடையே ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் தலைவர்கள்.
தனிமனிதர்களிடம் பேசுகின்றீர் களோ அல்லது பெரும் கூட்டத்தில் பேசுகின்றீர்களோ, பேசுவது தலைவன், அவன் நம்முடன் இருக்கின்றான், நான் அவனுடன்தான் இருப்பேன் என்பதை தெளிவாய் வெளிப்படுத்தும் அளவுக்கு உங்கள் நடவடிக்கை இருக்கவேண்டும் என்கின்றார் ஆசிரியர்.
இதெல்லாம் எழுதுவதற்கும் படிப் பதற்கும் நன்றாயிருக்கும். எப்படி இதை யெல்லாம் திட்டமிட்டுச் செய்வது. சாத்தியமில்லாததைப் போல் இருக் கின்றதே என என்னுடைய வாடிக்கை யாளர்கள் என்னிடம் கேட்டதைப் போல் நீங்கள் நினைக்கலாம் என்று சொல்லும் ஆசிரியர் தொடர்ந்து இந்த மாடலில் சொல்லப்பட்டிருப்பவற்றை செக்லிஸ்ட் போல் வைத்துக்கொண்டு உபயோகித்துவந்தால் ஒரு கால கட்டத் தில் உங்களின் வாழ்க்கை முறையாகவே அது மாறிவிடும் என்பதைத்தான் நான் அவர்களுக்கு சொல்லவும் என்னுடைய பேச்சுத்திறனால் உணர்த்தவும் செய் கின்றேன் என்கின்றார்.
எண்ணத்தை செயலாக மாற்றவும், பவர்புல்லான தலைவனாகத் திகழவும் தலைவனுக்குத் தேவையானதும் உதவு வதும் பேச்சுத்திறன் மட்டுமே. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழியினைப் பின்பற்றினால் ஓவ்வொரு முறை பேசும் போதும் நீங்கள் தலைவனாகவே உணரப்படுவீர்கள் என்கின்றார் ஆசிரியர். பின்பற்றிப் பயனடையுங்களேன்.

புதன், 24 டிசம்பர், 2014

மாரிஸ் கோச்லின் & ஐன்ஸ்டீன்

ஆனந்தி எப்பப்பார்த்தாலும் கையில் ரூபிக் கியூபைச் சுழற்றி சுழற்றி விளையாடிக்கொண்டே இருப்பாள். பல வண்ணங்களில் இருக்கும் அந்தக் கியூபை ஆறு புறங்களிலும் சுழற்றி, எப்படிக் கலைத்துப்போட்டாலும், சில நிமிடங்களில் ஒரு பக்கம் முழுவதும் ஒரு வண்ணம் வரும்படி எல்லாக் கோணங்களிலும் அடுக்கிவிடுவாள். நான் பல முறை முயன்றும் என்னால் அந்தக் கியூபை அடுக்க முடியவில்லை. அதே போல அவள் செஸ் விளையாட்டை அபாரமாக விளையாடுவாள். மிகவும் நிதானமாக யோசித்த பின்பே காயின்களை நகர்த்துவாள். ஆனால் பத்து நகர்விலேயே ‘செக் அண்ட் மேட்’ செய்து ஆட்டத்தை வென்றுவிடுவாள்.
பள்ளியைப் பொருத்தவரை ஆனந்தி சராசரியான மதிப்பெண்கள் பெறும் மாணவிதான். செஸ், ரூபிக் கியூப் போன்ற வித்தியாசமான விளையாட்டுகளை மிகவும் சாமர்த்தியமாக விளையாடி வெல்கிறாள்.ஆனால் ஏன் படிப்பில் முதல் மாணவியாக வரமுடியவில்லை என்று எனக்குத் தோன்றும்.
அப்படியல்ல இப்படி!
ஆனால் அந்தக் கேள்வியே தவறு என்பது சமீபத்தில் புரிந்தது. செஸ்ஸில் வெல்லும் ஆனந்தி ஏன் படிப்பில் தோற்கிறாள் என்ற கேள்வி படிப்பை மையமாக வைத்து இருக்கிறது. எப்படியாவது அந்தக் குழந்தை படித்துவிட வேண்டுமே என்னும் ஆதங்கம்தான் அதில் வெளிப்படுகிறது. ஆனால் அந்தக் கேள்வியைப் புரட்டிப் பார்ப்போம். ‘படிப்பில் சராசரியாக விளங்கும் ஆனந்தியை செஸ், ரூபிக் கியூப் விளையாட்டுகளில் வெற்றி பெற வைப்பது எது?’ இப்படிச் சிந்திக்கத் துவங்கினால் ஆனந்தியின் பலத்தை, தனித்துவத்தைப் புரிந்துகொண்டு அவளது ஆற்றலை வளர்த்தெடுக்க முடியும் இல்லையா!
மனதில் காட்சியாக…
உலகை முப்பரிமாணங்களில் காட்சிப்படுத்திப் பார்க்கும் திறன் சிலரிடம் இருக்கும். இவர்கள் வெறுமனே பார்ப்பதோடு நின்றுவிடாமல் மனக்கண்ணில் காட்சி ரீதியாக முன்னோக்கி சிந்தித்துச் செயல்படுவார்கள். ஒரு பொருள் மற்றொரு பொருளோடு இணைந்தால் அதன் வடிவம் எப்படி மாறும் என்பதை நுணுக்கமாகவும் நுட்பமாகவும் மனதில் படமாகக் கணிப்பார்கள். ஏதோ புலன்களுக்குப் புலப்படாத அமானுஷ்யமான சக்தியைப் பற்றிப் பேசுவது போலத் தோன்றலாம். ஆனால் இது அறிவுபூர்வமானது, அறிவியல் அடிப்படையிலானது. இதுதான் காட்சி ரீதியான அறிவுத்திறன் என்கிறார் உளவியல் நிபுணர் கார்டனர். இப்படிப்பட்ட அறிவுத் திறன் கொண்டவர்களால் புதிய உலகை படைக்க முடியும்.
காட்சி ரீதியாகப் படைப்பது என்றால், ஓவியம் தீட்டுவது, புகைப்படம் எடுப்பது, திரைப்படம் உருவாக்குவது என்பவை மட்டுமல்ல. காட்சி ரீதியான அறிவுத் திறனில் மிளிர்பவர்கள் நம்மால் யூகிக்க முடியாதத் துறைகளைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
உலகின் தலை சிறந்த இயற்பியலாளர்களில் ஒருவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் டவரின் வடிவத்தை முதலில் வரைந்த கட்டிடக்கலை நிபுணர் மாரிஸ் கோச்லின்.இத்தகையோரிடம் காணப்பட்ட அறிவுத்திறன்களில் மேலோங்கி இருந்தது காட்சி ரீதியான அறிவுத்திறன்தான்.
அது எப்படி விஞ்ஞானிக்கும், கட்டிடக்கலை நிபுணருக்கும், விளையாட்டு வீரருக்கும், புகைப்படக் கலைஞருக்கும், ஓவியருக்கும் ஒரே விதமான அறிவுத் திறன் இருக்க முடியும் என்கிறீர்களா? அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களே அதற்கு பதில்.
ஒளி பாயுதே
E = MC2 என்ற கூற்று 1905-ல் இயற்பியல் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியது. அந்த கூற்றின் அடிப்படையான சிறப்புச் சார்புக் கோட்பாட்டைக் கண்டறிந்தபோது ஐன்ஸ்டீனுக்கு 26 வயது. மூன்று வயதுவரை ஐன்ஸ்டீன் பேச்சாற்றல் இல்லாத குழந்தையாக இருந்தார். அவர் பள்ளியில் எடுத்த அதிகப்படியான மதிப்பெண் நூற்றுக்கு ஐம்பதுதான். சிறு வயது முதல் இசை கேட்டு ரசிப்பதும் வயலின் இசைப்பதும் ஐன்ஸ்டீனுக்கு பிடித்தமான விஷயங்கள்.
ஐன்ஸ்டீனின் வீட்டுக்கு வந்து டியூஷன் மாஸ்டர் கணிதம் மற்றும் தத்துவத்தைக் கற்பித்தார். அவர் ஒரு நாள் ஐன்ஸ்டீனிடம் குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகம் ஒன்றைத் தந்தார். அதில் “மின்சாரக் கம்பத்துக்குள் மின்சாரம் பாயும் வழி எங்கும் நாமும் ஓடினால் எப்படி இருக்கும்?” என எழுதியிருந்தது. அதைப் படித்தவுடன் ஐன்ஸ்டீனின் அறிவியல் கற்பனைகள் விரியத் தொடங்கின.
“ஒளி என்பது அலையாக இருந்தால் அது உறைந்த நிலையில்தான் காட்சி அளிக்கும். ஆனால் ஒளி பாய்கிறதே. இது அணு பற்றிய கருத்தியலுக்குப் புறம்பானதே” என மனதில் சினிமாவாக ஒளியின் ஓட்டத்தைக் காணத் தொடங்கினார். அன்று தோன்றியக் காட்சியை 10 வருடங்களாக அசைபோட்டதன் விளைவே சிறப்புச் சார்புக் கோட்பாடு.
வான் உயர!
காஸ்டேவ் ஈஃபில் எனும் பொறியாளர்தான் ஈஃபில் டவரைக் கட்டியவர். அவர் பெயர்தான் ஈஃபில் டவருக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு அவரைப் பற்றிப் பேசாமல் ஏன் அதன் கட்டிடக்கலை நிபுணரை பற்றி பேசுகிறோம்? அதற்குக் காரணம், 1063 அடி உயரத்தில் பாரீஸ் நகரின் மிக உயரமானக் கட்டிடமாக விளங்கும் ஈஃபில் டவரைத் தன் மனக்கண்ணில் முதன்முதலில் கற்பனை செய்துப் பார்த்தவர் அதன் கட்டிடக்கலை நிபுணர்களில் ஒருவரான மாரிஸ் கோச்லின்.
பாரீஸ் நகரின் மையத்தில் அனைவரையும் வரவேற்கும் விதமாக ஒரு பிரம்மாண்டமானக் கட்டிடத்தை எழுப்பினால் எப்படி இருக்கும் என முதன் முதலில் கற்பனை செய்துப் பார்த்தவர் அவர் தான். அப்படியொரு பிரம்மாண்டமானக் கட்டுமானத்தை மனிதர்களால் உருவாக்க முடியும் என அன்று வரை யாரும் கற்பனை செய்துப் பார்க்கவில்லை. வெற்றிடத்தில் வானுயர கட்டுமானத்தை ஒருவரால் மனக்கண்ணில் காட்சிப்படுத்திப் பார்க்க முடியுமென்றால் காட்சி ரீதியான அறிவுத் திறனுக்கு அதைவிடவும் சிறந்த உதாரணம் வேண்டுமா என்ன?
விஞ்ஞானிக்கும், கட்டிடக்கலை நிபுணருக்கும் இருப்பது கணிதத் திறன் என்பது பொதுவான நம்பிக்கை. நம் கல்வித் திட்டமும் அந்த அடிப்படையில்தான் செயல்பட்டுவருகிறது. ஆனால் உளவியல் வரலாறு வேறுவிதமான உண்மைகளைத் தன்னுள் வைத்திருக் கிறது. அதைப் புரிந்துகொள்ளத் துவங்கினால் தனி மனிதரையும், ஒட்டுமொத்த உலகையும் புதிதாகப் பார்க்கத் தொடங்குவோம் அல்லவா!

செவ்வாய், 23 டிசம்பர், 2014

Speech by APJ

வானகம் திறந்து வழி விடட்டும்
மேதகு குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய தொடக்க உரை
பாரதியார் 125 ஆண்டுகளாக நம் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். புதுமைப்பித்தன் அவர்கள் 100 ஆண்டுகளாகவும் சுந்தர ராமசாமி அவர்கள் 75 ஆண்டுகளாகவும் நம் நினைவில் இருக்கிறார்கள். சுந்தர ராமசாமி அவர்கள் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலகர்த்தா. காலச்சுவடு தன் காலடித் தடத்தைத் தமிழ் இலக்கியத்தில் எப்படிப் பதித்துக்கொண்டிருக்கிறது என்பதை வானவியல் இயக்கத்தின் மூலம் என் மனதில் இருப்பதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் எல்லோருக்கும் தெரியும். பூமி தன்னைத் தானே கோடிக் கணக்கான ஆண்டுகளாக இடை விடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது, ஒரு சுற்று முடிவதற்கு ஒரு நாளாகும். பகல், இரவு எல்லாம் இந்த ஒரு நிகழ்ச்சியால் நமக்குக் கிடைத்த நன்மையாகும். அது மட்டுமல்ல, பூமி கதிரவனையும் சுற்றிக்கொண்டேயிருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் தெரியும். பூமி கதிரவனை ஒரு சுற்றுச் சுற்றி முடிப்பதற்கு ஒரு ஆண்டுக் காலம் ஆகிறது. அப்படி என்றால், நம் பாரதியார் அவர்கள் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருந்தால் 125 முறை கதிரவனைச் சுற்றி வலம் வந்திருப்பார். நமது புதுமைப்பித்தன் அவர்கள் 100 முறையும் சுந்தர இராமசாமி அவர்கள் 75 முறையும் சுற்றி வலம் வந்திருப்பார்கள்.
நம் எல்லோருக்கும் பூமி கதிரவனைச் சுற்றிவரும் நிகழ்ச்சி ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத் தெரிகிறது. காரணம், பூமியில் நம் வாழ்வு சுறுசுறுப்பான வாழ்வு. இங்கு கூடியிருக்கும் எல்லோரும் கதிரவனைச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். நான் கதிவனைச் சுற்றும் 76ஆவது சுற்றுப்பாதையில் இருக்கிறேன். அதாவது, என்னுடைய வயது 75. இங்கு கூடியிருப்போர் எல்லா வயதிலும் இருப்பார்கள். நாம் எல்லோரும் சேர்ந்து பாரதியாருக்கு அஞ்சலி செலுத்துவோம். புதுமைப்பித்தனின் கற்பனைத் திறனை வாழ்த்துவோம். சுந்தர ராமசாமி அவர்களின் காலச்சுவடின் பணிகளுக்கு நன்றி தெரிவிப்போம். இந்த நேரத்தில் எனக்கு பாரதியாரின் ஒரு அருமையான கவிதை நினைவுக்கு வருகிறது. அவர் 1910ஆம் ஆண்டு எழுதிய பாஞ்சாலி சபதத்தில் சரஸ்வதி வந்தனமாகப் பாடுகிறது.
இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென
     இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென
     வானூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
     பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
     எனதுள்ளம் இயங்கொணாதோ?
இதன் அறிவியல் கருத்து என்னவெனில், அணுக்களில் பரமாணுக்கள் ஒன்றையொன்று சுற்றிவருகின்றன. நம் பூமி கதிரவனைச் சுற்றிவருகிறது. இதுபோலக் கதிரவன், பூமி எல்லாமே சுழற்சியின் இயக்கத்தில் நமது அண்ட சராசரத்தில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. இச் சுற்றல்கள் ஓயாது ஒழியாது நடந்துகொண்டே இருக்கின்றன. அதே போன்று நாமும் ஓயாது, துவளாது முயற்சி செய்தால் இறையருளால் நம் நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்பதில் எள்ளளவும் ஐயமிலலை. பாரதியார் ஒரு விஞ்ஞானிபோல் கவிதை பாடுகிறார். நம் உள்ளங்கள் சிலிர்க்கின்றன.
இன்று தொடங்கி மூன்று நாட்கள் தமிழ் மணம் உலக அளவில் உயர்ந்து நிற்கும். பல்லாயிரம் காலங்களாக வளர்ந்து பரவிய தமிழ் மொழி இன்னும் புதுமையாக, இளமையாக இருக்கிறது. பற்பல நாடுகளில் தமிழ் மொழி கொழிக்கிறது; தமிழர்கள் சிறக்கிறார்கள் பல்வேறு துறைகளில்; அவர்களின் மொழியன்பு தமிழை மேலும் மேலும் ஜொலிக்கவைக்கிறது. இணைய தளங்களில் தமிழ் இலக்கியம், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள் என்று பரிமாணிப்பதைப் பார்ப்பது புது மகிழ்ச்சியைத் தருகிறது.
'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களுக்குத் தாரக மந்திரம். அதையே மகாகவி பாரதி 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று ஊக்கம் விளைவிக்கிறார்.
திரவியத்தோடு கலைச் செல்வங்களும் முக்கியம். அதைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களின் நலனும் முக்கியம். ஏராளமான தமிழர்கள் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல இடங்களில் பணியாற்றுகிறார்கள். நிறைய இடங்களில் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. தமிழ் மொழிப் புத்தகங்கள், தொலைக்காட்சிகள், தமிழிசைக் குறுநாடாக்கள், ஒலி நாடாக்கள் ஆகிய பல்வேறு விதமான தமிழ்ச் சேவைகள் பல நாடுகளில் வாழும் தமிழர்களைத் தமிழ் மொழியுடன் இணைத்திருக்கின்றன.
நான் ஜூலை 7, 2005 ஆண்டில் வாஷிங்டனில் நடந்த பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டிற்கு மல்டிமீடியா டெலிகான்பரன்ஸ் மூலமாக ராஷ்ட்ரபதி பவனிலிருந்து ஓர் கருத்துரை வழங்கினேன். அதில் வழங்கிய கருத்துரையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய ஆசிரியர்களில் ஒருவரான, புரொபஸர் சதீஷ் தவான் 1970களில் இஸ்ரோவின் தலைவராகப் பணியாற்றிவந்தார். அப்போது அவர் இஸ்ரோவுக்கான ஒரு முக்கியமான திட்ட இலக்கை ஏற்படுத்தினார். பிறகு அந்த இலக்கை அடையத் தேவையான நிதி மற்றும் பிற வளங்களையும் வசதிகளையும் ஏற்படுத்தி அத்திட்டத்தை என்னிடம் ஒப்படைத்தார். அத்திட்டம், இந்தியாவின் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் ராக்கெட்டைச் சொந்தமாக இந்தியாவிலேயே வடிவமைத்துக் கட்டுமானம் செய்யும் பெரும் பொறுப்பாகும்.
அந்தத் திட்டத்தை வழிநடத்தி நிறைவேற்றுகிற பொறுப்பை என்னிடம் கொடுக்கும்போது அவர் சொன்னார், "கலாம், நாம் எந்தப் பணியையுமே செய்யாமல் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு குறிக்கோளை முனைப்பாகக் கையில் எடுத்துக்கொண்டு அதை நிறைவேற்ற முற்பட்டால், அந்தக் குறிக்கோளை அடைவதற்குள் பல இடையூறுகளும் பிரச்சினைகளும் தோன்றும். ஆனால் இந்த இடையூறுகளும் பிரச்சினைகளும் நம்மை ஆக்கிரமித்து, நம்மை வழிநடத்திச் செல்ல நாம் அவற்றை அனுமதிக்கக் கூடாது. மாறாக, இந்தப் பிரச்சினைகளைச் சமாளித்து, அதைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நாம் விரும்பிய குறிக்கோளை, இலக்கை அடைய வேண்டும்ஔ என்றார்.
என்ன ஆழமான அறிவுரை! எனக்கு ஒரு வாழ்க்கைக் கல்வியாக என்னை நானே உணர்ந்து, உய்விக்க வந்த அறிவுரை. உடனே எனக்கு ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது. இந்த அற்புதமான இலட்சியக் கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் எவ்வளவு அழகாக இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார் தெரியுமா?
இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படாஅ தவர்.
அதாவது, "ஒருவர் எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அந்தப் பணியில் ஆங்காங்கே பிரச்சினைகள் எதிர்ப்படும். ஆனால் துன்பத்தைக் கண்டு துவளாதவர்கள், பிரச்சினைகள் தமக்குத் தலைமை தாங்கி வழிநடத்தவிடாமல், அந்தத் துன்பங்களுக்குத் துன்பம் கொடுத்து வாழ்வில் வெற்றியடைவர்.
இந்த அறிவுரை, அந்தத் திட்டத்தில் நான் கடுமையான உழைத்த ஏறக்குறைய ஏழாண்டுக் காலம் முழுவதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு ஒரு உறுதுணையாக அமைந்தது.
பாரதியாரின் கவிதைகள் புதுமைப்பித்தனின் கனவுகள், காலச்சுவடின் பணிகள் என இவை எல்லாவற்றையும் ஒன்றாக நாம் சிந்திக்கும்பொழுது இந்தப் பூமியில் உள்ள அறுநூறு கோடி மக்கள் சிறப்பாக நல்வாழ்வு காண வேண்டும். பூமியில் ஓர் அமைதியான, ஆக்கப்பூர்வமான ஒரு வாழ்வு வர வேண்டும். இதை வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில் டெலிகான்பரன்ஸ் மூலமாகப் பேசும்பொழுது வலியுறுத்தினேன். பல நாடுகளிலிருந்து வந்திருக்கும் பல தமிழர்களும் தமிழன்பர்களும் கூடியிருக்கும் இந்த அவையிலும் திரும்பச் சொல்கிறேன். தமிழ் ஒரு பிரதேச மக்களின் மொழி மட்டுமில்லை. மனித வாழ்வை, உலகத் தரத்திலுள்ள எல்லா மனிதருடைய வாழ்வை மேம்படுத்தி இவ்வுலகத்தை, மனித சமுதாயத்தை, சிறப்புடன் மகிழவைக்கும் அறிவுக் களஞ்சியம். நீங்கள் இதை நினைவுகூர்ந்து உங்கள் படைப்புகளைச் செய்தால் உலகுக்கு மிகவும் நன்மை கிடைக்கும். நமக்கு பூமியில் கிடைத்திருக்கும் இந்த வாழ்வை உபயோகமாகப் பயன்படுத்த வேண்டும். அதை எப்படிச் செய்ய முடியும் என்று நினைக்கும்போது எனக்கு அவ்வையார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. அந்த அற்புதமான பாடலை எனது நண்பர் திரு. ய.சு. ராஜன் அவர்களுடன் சேர்ந்து நானும் பாடப்போகிறேன்.
அரிது அரிது மானிடராதல் அரிது
     அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்தாலும்
     ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
     தானமும் தவமும்தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தக் காலையில்
     வானகம் திறந்து வழிவிடுமே
உங்கள் எல்லோருக்கும் வானகம் திறந்து வழி விடட்டும். இந்தக் கவிதையின் கருத்துக்கள் நம் வாழ்வின் குறிக்கோளாக இருந்தால் பாரதியார் கண்ட கனவு நனவாகும். புதுமைப்பித்தனின் எண்ணங்களுக்கு ஒரு உருவகம் அமையும். காலச்சுவடுக்கு ஓர் இலக்கணம் அமையும். உங்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

Books Like to Buy (Tamil - Bharthy Kavithaigal; Vu.Ve.Sa)

உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நூல்களின் தனிச்சிறப்பு அவற்றில் இடம்பெற்ற முன்னுரைகள் என்பதில் சந்தேகமில்லை. பதிப்பாசிரியர் ப.சரவணன் உ.வே.சா. முன்னுரைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாகப் பதிப்பிக்கவிருக்கிறார். காலச் சுவடு பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் இந்தப் புத்தகத்துக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் கொடுத்த அணிந்துரையிலிருந்து சில பகுதிகள் இங்கே…
உ.வே. சாமிநாதையரின் முன்னுரைகள் பெரும் தகவல் களஞ்சியங்களாகவும் ஆவணத் தன்மை கொண்டவையாகவும் விளங்குகின்றன. அவை பலதரப்பட்டவை. நூற்செய்திகள் அனைத்தையும் ஒருசேரக் கொடுத்துவிடும் முன்னுரைகள் உண்டு. தமிழ்விடு தூது நூலுக்கான முன்னுரை அதற்கு பொருத்தமான சான்று. தூது இலக்கணம் தொடங்கி தமிழ் விடு தூதின் பொருளைச் சுருக்கித் தருதல் எனத் தொடர்ந்து பதிப்பு சார்ந்த விஷயங்களைப் பேசி முடிகிறது அது. பல சிறு நூல்களுக்கு இத்தகைய முன்னுரைகள் அமைந்திருக்கின்றன. பெரும்பாலான சிற்றிலக்கியங்கள், புராணங்கள் ஆகியவற்றின் முன்னுரைகள் இத்தன்மையவை. சில பொதுச் செய்திகளையும் பதிப்புத் தகவல்களையும் மட்டும் கொடுக்கும் முன்னுரைகள் இன்னொரு வகை. சங்க இலக்கியம், காப்பியங்கள் உள்ளிட்டவற்றின் முன்னுரைகளை இதற்குச் சான்றாகச் சொல்லலாம். இத்தகையவற்றில் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் என விரிவான பகுதி தனியே எழுதப்பட்டிருக்கும்.
அவர் பதிப்பித்த நூல் பட்டியலைக் காணும்போது சங்க இலக்கியங்களையும் காப்பியங்களையும் பதிப்பித் தவர் சாதாரணமான புராணங்களையும் சிற்றிலக்கியங் களையும் பதிப்பிக்க ஏன் முனைந்தார் என்று தோன்றும். அந்நேரத்தைச் சிறந்த நூல் ஒன்றைப் பதிப்பிக்கச் செலவிட்டிருக்கலாமே என்றும் எண்ணம் வரும். அகநானூற்றைப் பதிப்பிக்க எண்ணியுள்ளார். கம்பராமாயணத்தைப் பதிப்பிக்கும் எண்ணமும் இருந் துள்ளது. இம்முன்னுரைகளை வாசிக்கும்போது சாதாரண நூல்களைப் பதிப்பிக்க அவர் நேரம் செலவிட அவசியம் நேர்ந்துள்ளது எனப் புரிகிறது. அவர் நபர்களையும் மரபான நிறுவனங்களையுமே சார்ந்து தம் பணிகளைச் செய்ய முடிந்தது. அச்செயல்பாட்டில் ஒருவரின் வேண்டு கோளை ஏற்று அதற்காக ஒரு சாதாரண நூலைப் பதிப்பிக்க நேர்ந்திருக்கிறது.
தமிழ் நூல்களின் பதிப்பு வரலாறு முறையாக எழுதப்பட இவற்றில் பல தரவுகள் உள்ளன. ஏடுகளின் குடிவழி அறிவதற்கு அவர் ஏடு தேடிய இடங்கள், குடும்பங்கள், புலமை மரபினர் பற்றிய பல்வேறு தகவல்கள் சான்றாகும். பதிப்பை உருவாக்கவும் அதை அடுத்தடுத்து மேம்படுத்தவும் அவர் கையாளும் முறைகள், அவற்றைக் கற்றுக்கொண்ட செயல்கள், நாடிய உதவிகள், பின்னிணைப்புகளின் அருமையை உணர்ந்த பாங்கு ஆகியவற்றைக் கண்டறியலாம். தமிழ் நூல் பதிப்புகளுக்கென உள்ள தனித்தன்மைகளை விரிவாக இவை கொண்டிருக்கின்றன. ஒரு நூலின் முன்னுரையில் அடுத்து அவர் பதிப்பிக்க உள்ள நூல் பற்றிய விவரத்தை வெளிப்படுத்துவது உண்டு. அதன் தேவையும் அப்படிப்பட்ட பதிப்பு மரபு ஒன்றையே அவர் உருவாக்கியமையும் முக்கியமானவை.
ரூ. 1000 மதிப்புள்ள இந்த நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 650-க்குக் கிடைக்கும். இந்தச் சலுகை ஜனவரி 5, 2015 வரை மட்டுமே.
தொடர்புக்கு: காலச்சுவடு பதிப்பகம், தலைமை அலுவலகம் 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 91-4652-278525, மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com, chennai@kalachuvadu.com

*************

பதிப்பாசிரியர்: பழ.அதியமான் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து…
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு ஆகிவிட்ட பாரதி கவிதையில் அவர் என்ன நவீனமான சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் இன்றைய நவீன வாசகனுக்குப் பொருள் தெரியாத சொற்கள் அதிகமாக இருக்கின்றன. பழந்தமிழ்ச் சொற்கள், தமிழாகிய சம்ஸ்கிருதச் சொற்கள், சித்தாந்த சொற்கள், சென்ற நூற்றாண்டில் மிகுதியும் பயன்படுத்தி, இந்நூற்றாண்டில் வழக்கு குறைந்த சொற்கள் என அவை பலவாறு அமையும்.
பழந்தமிழ் சொற்களில் சில அல், எல், அளி, முரல், வாலை, நால்வாய், தூத்திரை என்பன சில சான்றுகள். தமிழாகிய சம்ஸ்கிருத சொற்களில் சில கன்னன் (கர்ணன்), வன்னக் களஞ்சியம் (வர்ணக்களஞ்சியம்) போன்றன. தொடக்க காலத்தில் கர்ணனை, தமிழாக்கி கன்னன் என்றெழுதிய பாரதி பின்னால் பாஞ்சாலி சபதத்தில் கர்ணன் என்றே குறிப்பிடுகிறார் (150). சித்தாந்த சொற்கள் அத்துவாக்கள், கரணம், கைதவம் முதலியன. சென்ற நூற்றாண்டில் மிகுதியாகப் பயன்பட்டு, இந்நூற்றாண்டில் வழக்கு குறைந்த சொற்கள். அவையாவன: நவை, நசை, மிசை, நிருதர், கரிசகல், நொய்ம்பு, மொய்ம்பு.
நூறாண்டு கடந்த பின்னரே பாரதிக்குப் பொருள் எழுத வேண்டியிருக்கிறது என்று எண்ண வேண்டியதில்லை. பாரதியே பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகத்துக்குப் பொருள் விளக்கமும் குறிப்புகளும் எழுதி வைத்துள்ளார். அக்குறிப்புகள், இப்பதிப்பில் அவ்வவ் இடத்தில் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஓரிரண்டு.
மலர் விழிக் காந்தங்கள் காந்தத்திற்குரிய கவர்ச்சித் தொழில் செய்து கொண்டிருக்கும் (மாதர்) விழிகள். உரியோர் பந்துக்கள் (பந்துகளுக்கு உறவினர் என்று பொருள் கொடுக்க வேண்டியது இன்றைய நிலைமை), கதலி ஒருவகை மான்.
இந்தப் பதிப்பு யாருக்கு?
பாரதி கவிதைகளை இக்காலத் தலைமுறையினரும் வெகு சரளமாக படிக்க இப்பதிப்பு வசதி செய்துள்ளது. சந்தியின் இருப்பால் சரளமாகப் படிக்க இயலாதவர்கள் இனி வேகமாகப் படித்துச் செல்ல முடியும். பாரதியின் தமிழைப் பொருள் புரிந்து நுணுக்கமாகப் படிக்க இப்பதிப்பு உதவி புரியும். பாரதி ஆய்வில் ஈடுபடுவர்களுக்கும் பாரதியை மொழி பெயர்ப்பவர்களுக்கும் இப்பதிப்பு உதவும்.
என் மகள் ஆழி அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் காலை நான் படித்துக்கொண்டிருந்த பாரதி பாடலைப் பக்கத்தில் வந்து நின்ற அவளை எதேச்சையாய் வாசிக்கச் சொன்னேன். அவளால் வாசிக்க முடியவில்லை. அவள் வாசிக்குமாறு பாரதியை எழுதித் தருவதாக அப்போது உறுதி அளித்தேன். பள்ளி இறுதிக்குள்ளாவது முடித்துத் தருவதாகச் சொன்ன நான் அவளது மூன்றாண்டுக் கல்லூரி கல்வி நிறைவுறும் சமயம் வாயில் நுரை தள்ள அப்பணியை முடித்து அவள் கையில் தருகிறேன். இனி அவள் தடுமாறாமல் படிக்கக்கூடும் ஆயிரமாயிரம் இளைய தமிழ்த் தலைமுறையுடன் இணைந்து.
ரூ. 750 மதிப்புள்ள இந்த நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ. 490-க்குக் கிடைக்கும். இந்தச் சலுகை ஜனவரி 5, 2015 வரை மட்டுமே.
தொடர்புக்கு: காலச்சுவடு பதிப்பகம், தலைமை அலுவலகம் 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 91-4652-278525, மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com, chennai@kalachuvadu.com