வியாழன், 1 ஜனவரி, 2015

நாஸ்ட்ரடாமஸ்

வரலாற்று முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்துச் சொன்ன தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
* பிரான்ஸ் நாட்டில் யூத வம்சாவளி தம்பதிக்குப் பிறந்தவர். பிறகு தந்தை கத்தோலிக்க மதத்துக்கு மாறினார். 15 வயதில் அவிக்னன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
* இலக்கணம், பேச்சுத் திறன், தர்க்கம், கணிதம், இசை, ஜோதிடக்கலை ஆகியவற்றைக் கற்றார். அப்பகுதியில் கொள்ளை நோய் பரவியதால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இதனால், படிப்பு பாதியில் நின்றது.
* 1521 முதல் 8 ஆண்டுகளுக்கு கிராமங்களில் மூலிகை சிகிச்சை ஆராய்ச்சி செய்தார். மருந்துகளைத் தயாரித்து விற்றார். சில ஆண்டுகள் கழித்து, மான்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவக் கல்வி பயின்றார். இவர் மூலிகை வைத்தியர் என்று தெரியவந்ததால் வெளியேற்றப்பட்டார்.
* மூலிகை ஆராய்ச்சி மற்றும் மருந்து தயாரிப்பை மீண்டும் தொடங்கினார். இவரது ‘ரோஜா மாத்திரை’ பிளேக் நோய் வராமல் தடுத்ததாக மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டதால், பிரபலமானார்.
* பிளேக் வராமல் பலரைக் காப்பாற்றிய அவரால், தன் குடும்பத்தை அதில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இதில் விரக்தி அடைந்தவர் நாடோடியாகத் திரிந்தார்.
lஒரு பாதிரியாரிடம் சீடராகச் சேர்ந்தார். அப்போது இவரது மன நிலையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. வெகுநேரம் வானத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினார். எதிர்காலக் கணிப்புத் திறன் வசப்பட ஆரம்பித்தது. இவர் சொன்னதெல்லாம் நடந்தது. புகழ் பரவியது. கூடவே பிரச்சினைகளும் எழுந்தன.
* இவரது கணிப்புகள், சாத்தானின் எச்சரிக்கைகள் என்றது கத்தோலிக்க திருச்சபை. இவர் மீது மதக் குற்றம் சுமத்தப்பட்டதால் தலைமறைவானார். தனது கணிப்புகளை குழப்பமான கவிதை வடிவில் இவர் எழுதியதற்கும் அதுவே காரணம்.
* இவரது கணிப்பு, வழக்கமான ஜோதிட முறைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. இதற்கு உதவியாக ஒரு பொறி இயந்திரத்தைப் பயன்படுத்தினார். அதை பார்த்துதான் ‘தி செஞ்சுரீஸ்’ என்ற புகழ்பெற்ற ஆரூட புத்தகத்தை எழுதினார். நாஸ்ட்ரெடாம் என்ற தன் பெயரை 1550-ல் நாஸ்ட்ரடாமஸ் என்று மாற்றிக்கொண்டார். பல பதிப்புகளாக வெளிவந்த இவரது புத்தகங்களில் 6,338 தீர்க்க தரிசனங்கள் இடம்பெற்றுள்ளன.
* பல ஜோதிட நூல்களை எழுதியுள்ளார். ‘லெஸ் புராஃபடீஸ்’ என்ற முக்கியமான நூலின் முதல் பதிப்பு 1555-ல் வெளியானது. அவரது மறைவுக்குப் பிறகு, புத்தகம் ஸ்டாக் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தொடர்ந்து பிரின்ட் செய்யப்பட்டது.
* லண்டனின் மாபெரும் தீ விபத்து, நெப்போலியன், ஹிட்லர் ஆகியோரின் எழுச்சி, இரண்டு உலகப் போர்கள், ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு பேரழிவு, அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் போன்ற பல முக்கிய சம்பவங்களை முன்கூட்டியே குறிப்புகளாகத் தெரிவித்திருக்கிறார். மாபெரும் தீர்க்கதரிசியான நாஸ்ட்ரடாமஸ் 63-வது வயதில் மறைந்தார்

ஸ்டீவன் ஆலென் ஸ்பீல்பெர்க்

உலகப் புகழ் பெற்றுள்ள ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான இவருக்கு இன்று (டிசம்பர் 18) பிறந்த நாள். இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 ஓஹியோ, சின்சினாட்டி என்ற ஊரில் பிறந்தவர். அப்பா எலக்ட்ரிகல் என்ஜினீயர். பள்ளிப் படிப்பில் சராசரி மாணவராக இருந்தாலும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். கலிஃபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், கேளிக்கை உலகில் அதிகம் நாட்டம் கொண்டிருந்த இவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் படிப்பை நிறுத்திவிட்டார்.
 இளம் வயதிலேயே குறும் படங்களை எடுத்து, அமெச்சூர் திரைப்படத் தயாரிப்பாளராக மாறினார்.
 சுகர்லான்ட் எக்ஸ்பிரஸ் (1974) இவரை வளர்ந்து வரும் கேளிக்கை உலக நட்சத்திரமாக பிரபலமாக்கியது. யுனிவர்சல் தொலைக்காட்சியில் 1960ல் மிகவும் புகழ்பெற்ற டூயல் என்ற தொலைக்காட்சித் தொடரில் இயக்குநராக பணிபுரிந்தார்.
 இதன் மூலம் இளம் இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.இது இவருக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. 1975ல் ஜாஸ் திரைப்படம் இவரை சூப்பர் இயக்குநராக சர்வதேச அளவில் உயர்த்தியது. நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.
 தொடர்ச்சியான வெற்றிப் படங்கள் மூலம் இவர் வர்த்தகரீதியில் வெற்றி இயக்குநராகவும் மாறினார். திகில், பிரமிப்பு, சாகஸம், கிராஃபிக்ஸ், மந்திர தந்திர காட்சிகள், வரலாறு, யுத்தம், அரசியல், அறிவியல், இலக்கியம் என எதையும் விட்டுவைக்காமல் அனைத்து களங்களிலும் திரைப்படங்களை உருவாக்கினார்.
 இவரது பிரம்மாண்டமான, திகிலூட்டும், சாகஸங்கள் நிறைந்த ஜுராசிக் பார்க் திரைப்படத்தைக் கண்டு உலகமே மிரண்டது. ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் (1993) திரைப்படம் இவ ருக்கு ஏழு அகாடமி விருதுகளையும், முதல் முறையாக சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றுத் தந்தது.
 தி கலர் பர்பிள், ஈ.டி (Extra-Terrestrial) படங்கள் இவருக்கு ஏராளமான விருதுகளையும் உலகம் முழுவதும் பாராட்டு களையும் பெற்றுத் தந்தன. சேவிங் பிரைவேட் ரியான் திரைப்படத்தின் மூலம் சிறந்த இயக்குநருக்கான மற்றொரு அகாடமி விருதையும் பெற்றார். 1982ல் தொடங்கப்பட்ட ஆம்ப்லின் என்டர்டெய்ன்மன்ட் இவரது முதல் சினிமா கம்பெனி.
 இந்த நிறுவனம் பாக் டு தி ஃப்யூச்சர் போன்ற குறிப்பிடத் தக்க பல திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டது. 1994ல் ட்ரூம் ஒர்க்ஸ் எஸ்.கே.ஜே. என்ற புது ஸ்டுடியோ ஒன்றை நிறுவினார்.
 திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களாக ஏறக்குறைய 115 படைப்புகளில் இணை தயாரிப்பாளராகவும், 55 படைப்புகளுக்கு இயக்குநராகவும் ஏறக்குறைய 40 படைப்புகளின் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்கிறார். ஹாலிவுட் திரைப்பட வரலாற்றின் மிகவும் செல்வாக்குப் படைத்த நபர்களுள் ஒருவர்.
 திரையுலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர். கேளிக்கை என்ற அற்புத உலகத்துக்காகவே பிறந்தவர் எனப் புகழப்படுபவர். தனது பழைய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை மீண்டும் புதுப் பொலிவுடன் தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன்

குறுகிய காலத்தில் பல கணித உண்மைகளைக் கண்டறிந்த கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர். கும்பகோணத்தில் படித்தார். பள்ளியில் படிக்கும்போதே கல்லூரி மாணவர்களுக்கான எஸ்.எல்.லோனியின் முக்கோணவியல் மற்றும் அடிப்படை கணித சூத்திரங்களைத் தொகுத்து வழங்கிய ஜி.எஸ்.கார் என்பவரின் புத்தகத்தை படித்து முடித்தவர்.
 சிக்கலான கணித உண்மைகளை மற்றவர் உதவியின்றி தானே புரிந்துகொண்டார். கணக்கில் இருந்த அதிக ஆர்வத்தால், ஆங்கிலப் பாடத்தில் 2, 3 முறை தோல்வி அடைந்தார். அதற்குள் திருமணமும் ஆனது.
 மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தார். பணக்காரர்களிடம் தன் கணித நோட்டுப் புத்தகங்களைக் காட்டி உதவி கேட்டார்.
 1912-ல் சென்னை துறைமுகத்தில் ரூ.25 சம்பளத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது. அங்கு அதிகாரிகளாக இருந்த நாராயண ஐயர், சர்.பிரான்சிஸ் இவரது திறமையைப் பார்த்து வியந்தனர். அலுவலகத்தில் வேலை பளுவைக் குறைத்து, கணித ஆராய்ச்சிக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தனர். அப்போது, தான் கண்டறிந்த சில அரிய கணித மாதிரிகளை இங்கிலாந்து கணிதப் பேராசிரியர்களுக்கு அனுப்பினார்.
 இவற்றில் பல கடிதங்கள் குப்பைக் கூடைக்குப் போனது. பேராசிரியர் ஹார்டி மட்டும் இவரது திறமையைப் புரிந்துகொண்டார்.
 அவரது முயற்சியாலும் பலரது உதவியாலும் 1914-ல் இங்கிலாந்துக்கு புறப்பட்டார். கேம்ப்ரிட்ஜ் சென்றவுடன் ஹார்டியுடன் சேர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
 டாக்டர் பட்டத்துக்கு இணையான டிரினிட்டி கல்லூரியின் பி.ஏ. பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. 1917-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உடல்நிலை சற்று தேறியதும், மீண்டும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.
 இந்தப் பிறவி மேதைக்கு 1918-ல் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் என்ற கவுரவம் கிடைத்தது. அதோடு, நல்ல சம்பளமும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் 1919-ல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். படுக்கையில் கிடந்த நிலையிலும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.
 1914 - 1918 இடையே 3 ஆயிரத்துக்கும் அதிகமான புது கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்; 27 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது ஆராய்ச்சிகளின் அடிப்படைகள் இன்று இயற்பியல் முதல் மின்தொடர்பு பொறியியல் வரை பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
 இவரது நோட்டுப் புத்தகங்கள், காகிதங்கள், எழுதிவைத்த குறிப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிடுவதில் வாட்சன், ஆண்ட்ரூஸ், ப்ரூஸ் போன்ற கணித வல்லுநர்கள் பல ஆண்டுகாலம் செலவிட்டனர். குறுகிய காலத்தில் இவர் கண்டறிந்த கணித உண்மைகளை இன்னமும் புரிந்துகொள்ள முடியாமல் உலகம் முழுவதும் பல கணித வல்லுநர்கள் திணறுகின்றனர். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 33-வது வயதில் மறைந்தார்.

மா சே துங்

சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர், சிறந்த ராஜதந்திரி மா சே துங் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 சீனாவின் ஷாவ்ஷான் கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 6 வயதில் விவசாய வேலைகள் பார்த்தார். 13 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு முழு நேர விவசாயி ஆனார்.
 ‘வேர்ட்ஸ் ஆஃப் வார்னிங்’ என்ற நூலைப் படித்து சீனாவின் பலவீனங்கள், மேற்கத்திய நாடுகளின் வலிமைகளைப் பற்றி அறிந்துகொண்டார். 6 மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றவர்.
 இவருக்கு 18 வயது இருக்கும்போது, சீனா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அங்கு நிலையான, ஒற்றுமையான அரசு ஏற்படவில்லை. இந்நிலையில் இடதுசாரி அரசியல் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன. 1920-ல் கொள்கைப் பற்றுமிக்க பொதுவுடைமையாளர் ஆனார். விரைவில் பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர் ஆனார்.
 ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி படிப்படியாக முன்னேறியது. அந்த காலகட்டத்தில் ஆட்சியை எதிர்த்து தனது ஆதரவாளர்களுடன் நீண்ட நடைபயணம் மேற்கொண்ட இவர், 8 ஆயிரம் மைல் தூரத்தைக் கடந்தார்.
 1935-ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு கட்சி நல்ல வளர்ச்சி பெற்றது.
 அரசை எதிர்த்து நீண்ட நெடிய போர் புரிந்தார். கட்சி வெற்றி பெற்றது. 1949-ல் சீனா குடியரசு நாடானது. மக்கள் சீனக் குடியரசின் முதல் அதிபராக மா சே துங் பதவி ஏற்றார். அப்போது இவருக்கு வயது 56.
 சீனாவின் பொருளாதார நிலை அப்போது அதல பாதாளத்தில் இருந்தது. பழைய மரபுகளில் ஊறிக் கிடந்த பல கோடி மக்கள் படிப்பறிவில்லாமல் இருந்தனர். புதிய சீனாவைப் படைக்கும் மாபெரும் பணி இவர் முன்பு மலைபோல் எழுந்து நின்றது. ‘வலிமையும் வளமும் மிக்க சீனா.. முன்னோக்கியப் பெரும் பாய்ச்சல்’ என்ற மகத்தான தொலைநோக்குடன் நாட்டு முன்னேற்றத் துக்காகப் பாடுபட்டார்.
 செல்வாக்கு படைத்த தலைவராக ஆதிக்கம் செலுத்திய இவரது ஆட்சிக் காலத்தில் சீனா அடியோடு மாறியது. தொழில்மயமாக்கல், கல்வி வளர்ச்சி, விவசாயம், பொது சுகாதாரம் ஆகியவற்றில் நாடு முன்னேற்றம் கண்டது. அரசியல் பொருளாதாரப் புரட்சி மட்டுமின்றி சமூகப் புரட்சியையும் தூண்டினார்.
 நாட்டு மக்களிடையே தீவிர தேசப் பற்றை உண்டாக்கினார். நாடு நவீனமயமானது. பல நூற்றாண்டு கால அந்நிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு, 20-ம் நூற்றாண்டில் சீனா மகத்தான வளர்ச்சி கண்டது.
 சீனாவில் பெரும் தொழிற்புரட்சியும், வேளாண் புரட்சியும் நிகழ்த்திய மா சே துங் ஒரு புரட்சிகரத் தலைவர் மட்டுமின்றி, தற்போதைய சீன வல்லரசின் சிற்பியாகவும் போற்றப்படுகிறார். இவரது கொள்கைகள் மாசோயிசம் என்று புகழ்பெற்றன. 83-வது வயதில் காலமானார்

ரமண மஹரிஷி & ரஜ்னீஷ் சந்திர மோகன் (ஓஷோ)

உலகம் போற்றும் ஆன்மிக ஞானி, அத்வைத வேதாந்த நெறிகளை போதித்த மகான் ‘பகவான் ரமண மஹரிஷி’ அவதரித்த நாள் இன்று (டிசம்பர் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பிறந்தவர். இயற்பெயர் வேங்கடராமன். மதுரை ஸ்காட் பள்ளியில் படித்தார். தந்தை மறைவுக்குப் பிறகு மதுரையில் மாமா வீட்டில் அம்மாவுடன் வசித்தார்.
* திருவண்ணாமலையில் இருந்து வந்த மாமாவின் நண்பர், அந்த ஊர் பற்றி கூறிய விஷயங்கள் இவருக்குள் ஆழமாக வேரோடின. அப்போதே பெரியபுராணம் உள்ளிட்ட ஏராளமான ஆன்மிக நூல்களைப் படித்துவந்தார்.
* இறைவனை அறியும் உந்துதல் பிறந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார். 17 வயதில் சித்தப்பா வீட்டில் இருந்தபோது, திடீரென மரண அனுபவம் போன்ற உணர்வுக்கு ஆளானார். தன்னையே உள்முகமாக கேள்வி கேட்டுக்கொள்ளும் சுய அறிதலை நாடியது அவரது மனம்.
* ‘மரணத்தின்போது உடல் மட்டுமே இறக்கிறது; ஆன்மா அல்ல. நான் என்பது வெறும் உடல்தான். ஆன்மாதான் எல்லாம்வல்ல பரம்பொருள்’ என உணர்ந்தார்.
* உறவினர்கள், வீடு, வாசலைத் துறந்து ரயில் ஏறி திருவண்ணாமலையை அடைந்தார். அருணாசலேஸ்வரர் கோயிலில் தியானம் செய்துவந்தார். சிறுவர்களின் விஷமம் அவருக்குத் தொந்தரவாக இருந்ததால், கோயிலின் பாதாள லிங்கம் அருகே சென்று தியானத்தில் மூழ்கினார்.
* இவரது மகத்துவத்தை உணர்ந்து பலரும் சீடர்களாயினர். அதன் பிறகு விருப்பாட்சி குகை, கந்தாஸ்ரமம், பாலாக்கொத்து என பல இடங்களுக்குச் சென்றார். திரும்பவும் திருவண்ணாமலை அடிவாரம் வந்து தங்கினார். பெரும்பாலும் தியானத்தில் இருந்த அவரை ‘மவுன குரு’ என்றனர் மக்கள். அங்கு ரமணாஸ்ரமம் உருவானது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து இவரிடம் தீட்சை பெற்றனர்.
* இவரது சீடர் காவ்யகண்ட கணபதிமுனி, சமஸ்கிருத பண்டிதர். அவர்தான் இவருக்கு ‘ரமண மஹரிஷி’ என்று பெயர் சூட்டினார். உபநிடதங்கள், அத்வைத வேதாந்த நெறிகளை எல்லோருக்கும் புரியும் வகையில் உபதேசித்தார் ரமணர்.
* அவரது உபதேசங்கள் தொகுக்கப்பட்டு பல புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் முதன்மையானது ‘நான் யார்?’ என்ற புத்தகம். ஆதிசங்கரரின் ‘ஆத்மபோதம்’ நூலை தமிழில் வெண்பாக்களாக வழங்கியுள்ளார். உள்ளது நாற்பது, ஏகான்ம பஞ்சகம், ஆன்ம வித்தை உள்ளிட்ட பல நூல்களை அருளியுள்ளார்.
* கருணையே உருவானவர். எல்லா உயிர்களிலும் உறைந்திருப்பது ஆன்மாதான் என்பதை முழுமையாக உணர்ந்தவர். நாய், பசு, அணில் போன்ற ஜீவராசிகளையும் அவன், இவள் என்றே குறிப்பிடுவார்.
* 58 வயதில் நிர்வாண நிலை அடைந்தார். 71 வயதில் முக்தி அடைந்தார்.


*********
இந்திய ஆன்மீக அறிஞரான ரஜ்னீஷ் சந்திர மோகனின் (ஓஷோ) பிறந்த நாள் (டிசம்பர் 11) இன்று. அவரை பற்றிய அரிய முத்துக்கள் பத்து..
 மத்திய பிரதேசத்தில், குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தவர். பட்டப் படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். சாகர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிறு வயது முதலே தியானத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் 21-ஆம் வயதில் ஞானமடைந்தார்.
 ராய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். ஒன்பது வருட பணிக்குப் பிறகு, அந்த வேலையை ராஜினாமா செய்தார். மனித குலத்தின் விழிப்புணர்வு நிலையை உயர்த்தும் லட்சியத்துடன் புனே நகரில் ஆஸ்ரமம் நிறுவினார்.
 யோகா, ஜென், தாவோயிசம், தந்த்ரா மற்றும் சூஃபியிசம் உள்ளிட்ட அனைத்து விதமான தத்துவங்களை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விவரித்து, ஆன்மிகத்தில் உயர்நிலையை எட்டுவதில் ஆர்வம் கொண்ட சீடர்களுக்கு வழிகாட்டினார். ஏறக்குறைய 15 வருடங்கள் இவர் உரையாற்றியுள்ளார்.
 டைனமிக் தியான முறையை அறிமுகம் செய்தார். ஏராளமான தியான முகாம்களை நடத்தினார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இவரை நாடி சீடர்கள் குவிந்தனர்,  ரஜனீஷ் என்று போற்றப்பட்டார்.
 இவரது உரைகள் 600க்கும் மேற்பட்ட தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. இவை 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காதல், பொறாமை, தியானம், ஆன்மிகம், அரசியல், மனித மனோபாவங்கள், உடல், மனம், ஆன்மா, சொர்க்கம், நரகம் ஆகியவை குறித்து இவர் விளக்கமளித்த கேள்வி-பதில் அமர்வுகள் 40 புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
 புத்தர், ஏசு, நபிகள் நாயகம், ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு அரிய சம்பவங்களையும் மனித குல மேம்பாட்டுக்கு வழிகாட்டும் முன்னுதாரண நிகழ்வுகளையும் தெள்ளத் தெளிவாகவும், எளிமையாகவும் விவரித்துள்ளார்.
 அமெரிக்காவின் ஒரேகான் என்ற இடத்தில் பாலைவனமாக இருந்த 64 ஏக்கர் நிலத்தை இவர் சீடர்கள் வாங்கினர். விவசாய கம்யூனாக அது மாற்றப்பட்டது. ரஜனீஷ்புரம் உருவானது. அங்கே 5000 பேர் வசித்தனர்.
 அரசியல், மதம் சம்பந்தமான புரட்சிகரமான கருத்துக்களை பரப்பியதால் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புக்கு ஆளானார். இதனால், வெகு விரைவில் இந்த கம்யூன் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆனால், சர்ச்சைக்கு இடமான ஆன்மீகக் குடியிருப்பாக மாறியது.
 1985ல் அமெரிக்க அரசு ஏதோ காரணம் காட்டி இவரை கைது செய்தது. சிறையில் அவருக்கு ‘தாலியம்’ என்ற மெல்லக் கொல்லும் கொடிய விஷம் செலுத்தப்பட்டதாக இவரது சீடர்கள் குற்றம்சாட்டினர். விடுதலைக்குப் பிறகு, இவர் வருவதற்கு 21 நாடுகள் தடைவிதித்தன. இறுதியாக, 1987ல் தனது பூனா ஆஸ்ரமம் திரும்பினார்.
 1989ல் சீடர்கள் ‘ஓஷோ’ என்று இவரை அழைக்கத் தொடங்கினர். மதம் என்ற பெயரில் தங்களது சொந்த ஆதாயத்துக்காக மூடத்தனங்களைப் பரப்புவோருக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த ஓஷோ 59-ஆவது வயதில் தன் உடலை விட்டு நீங்கினார்.

மதன் மோகன் மாளவியா

இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான பங்காற் றிய வீரரும், கல்வியாளருமான மாளவியாவின் பிறந்த தினம் இன்று (25 டிசம்பர்). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 உத்தரப் பிரதேசம், அலகாபாத்தில் பிறந்தவர். தந்தை சமஸ்கிருத வித் வான். ஐந்து வயது முதலே மாள வியாவும் சமஸ்கிருதம் கற்றார். பள்ளிப் பருவத்தில் இவர் எழுதிய கவிதைகள் பள்ளி இதழ்களிலும் வார இதழ்களிலும் வெளியாயின.
 கல்வி உதவித் தொகையில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரு ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். சில காலம் தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய பின், அலகாபாத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.
 சிறு வயது முதலே விடுதலை இயக்கத்தில் பங்கேற்றுவந்தார். ஹிந்து மஹாசபை இயக்கத்தை நிறுவினார். பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க இதன் அங்கத்தினர் போராடினர்.
 இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக நான்கு முறை பொறுப்பேற்றுள்ளவர். லக்னோ உடன்பாட்டின்படி முஸ்லிம்களுக்குத் தொகுதி ஒதுக்கீட்டையும், கிலாபத் இயக்கத்தில் காங்கிரஸ் பங்கேற்பதையும் எதிர்த்தார்.
 1920களில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.1928-ல் சைமன் குழுவுக்கு எதிரான போராட்டங்களிலும் பங்கேற்றார். 1932-ல் சுதேசி இயக்கத்திற்கான கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.
 ஆசியாவிலேயே பெரிய பல்கலைக்கழகமாக விளங்கும் பனாரஸ் (காசி) ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவர் இவர். இதற்காக நிதி திரட்டுவதற்காக ஹைதராபாத் நிஜாமிடம் சென்றார். அவருக்கோ ஒரு ஹிந்து கல்வி நிறுவனத்தை நிறுவ இவர் தன்னிடம் நிதி கேட்டது பிடிக்கவில்லை. கோபத்துடன் தன் காலில் இருந்த செருப்பைக் கழற்றி இவர் மீது வீசினார். சற்றும் அமைதி இழக்காத இவர், அவருக்கு நன்றி கூறிவிட்டு அதை வெளியே எடுத்து வந்து ஏலம் விடத் தொடங்கினார். ஏலம் சூடுபிடிக்கத் தொடங்கியது. மிகவும் சொற்ப விலைக்கு வாங்கப்பட்டுவிடலாம் என்பதை ஒரு சிப்பாய் மூலம் தெரிந்துகொண்ட நிஜாம், தன் மானம் பறிபோகாமல் இருக்க அவனிடம் நிறைய பணம் கொடுத்து அதிகபட்ச விலைக்கு அதை வாங்கி வரச்சொன்னார். அந்தத் தொகையை நிஜாமின் நன்கொடையாகச் சேர்த்துக்கொண்ட மாளவியா, நிஜாமைச் சந்தித்து இதற்காக நன்றியும் கூறினாராம்!
 இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1919 முதல் 1938 வரை பணியாற்றினார். 1922-ல் சவுரி சவரா நிகழ்வில் கைது செய்யப்பட்ட ஏராளமான போராட்ட வீரர்களுக்கு ஆதரவாக வாதாடி அவர்களில் பெரும் பான்மையானவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.
 ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைவராக 1924 முதல் 1946 வரை பதவி வகித்தார். இவரது முயற்சியால் இதன் இந்திப் பதிப்பு 1936முதல் வெளியானது. கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்ற மரபை உடைத்தெறியப் பாடுபட்டார்.
 விடுதலைப் போராட்ட வீரர், சமூக நீதிப் போராளி, வழக்கறிஞர், கல்வியாளர், பத்திரிகையாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட பண்டிட் மதன் மோகன் மாளவியா, 85-ஆம் வயதில் காலமானார்

சத்யேந்திரநாத் போஸ் (சத்யன்) 10

ஐன்ஸ்டீனுடன் இணைந்து செயல்பட்ட இயற்பியல் நிபுணரும் விஞ்ஞானத்தில் போஸான் என்னும் புது வகை அடிப்படைத் துகள் (Fundamental Particle) பிரிவைப் படைத்தவருமான இவரது பிறந்த நாள் இன்று (ஜனவரி 1). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 கொல்கத்தாவில் பிறந்தவர். தந்தை ரயில்வேயில் பொறியாளராக வேலை பார்த்தவர். படிப்பில் எல்லா வகுப்பிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்தவர். கணிதத்தில் மிகச் சிறந்து விளங்கினார். கொல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை பெற்றார்.
 அங்கு இவரது ஆசிரியர், ஜகதீஷ் சந்திர போஸ். ரசாயனம், புவியியல், விலங்கியல், மனித விஞ்ஞானம், உயிரின ரசாயனம், பொறியியல் ஆகிய துறைகளில் சத்யன் ஆழ்ந்த அறிவு பெற்றவர்.
இசையில் ஈடுபாடு கொண்டவர். வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, ஜெர்மன் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
 ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வுக்கட்டுரையைப் படிப்பதற்காகவே இவர் ஜெர்மன் மொழி கற்றார். 1924ல் மாக்ஸ் பிளாங்கின் விதி (Max Plank’s Law), ஒளித்துகள் கோட்பாடு (Light Quantum Hypothesis) பற்றியும் கட்டுரை எழுதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி வைத்தார். ஐன்ஸ்டீன் அதனைப் பாராட்டியதோடு அதை விரிவாக விளக்கி தானே ஜெர்மனியில் மொழிபெயர்த்து ஜெர்மன் இயற்பியல் வெளியீடு என்ற அமைப்புக்கு அனுப்பி வைத்தார். ஐன்ஸ்டினின் மகத்தான நட்பைப் பெற்றார்.
 ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு மேடம் கியூரி ஆய்வுக்கூடத்தில் சேர்ந்து இயற்பியல் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
1924ல் டாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் இடத்துக்கு தகுதி வாய்ந்த ஆனால் டாக்டர் பட்டம் பெறாத இவர், ஐன்ஸ்டீன் சிபாரிசில் சேர்ந்தார்.
 30 ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தார். ஐன்ஸ்டீனை இவர் தன் குருவாகப் போற்றினார்.
 இந்த இருவரின் ஆய்வில் போஸ்-ஐன்ஸ்டீன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் ஆகிய கோட்பாடுகள் வெளிவந்தன. இயற்பியல் விஞ்ஞானத்தில் இவரது ஆராய்ச்சிக் களங்கள் பரந்து விரிந்தவை. மேகநாத் ஸஹாவுடன் இணைந்து ‘ஈக்வேஷன் ஆஃப் ஸ்டேட்’ என்னும் இயற்பியல் கோட்பாட்டுக் கட்டுரையை வெளியிட்டனர்.
 போஸான் வளிமத்திற்கு இவரது நினைவாகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டது. தன் குரு ஐன்ஸ்டீனின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். 1954ல் இவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் ராயல் சொசைடியின் ஃபெலோஷிப் கவுரவமும் பெற்றார். ஏராளமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின.
 சமூக சேவையிலும் ஈடுபட்ட வந்த இவர். சுபாஷ் சந்திரபோசின் நண்பர். ஜவகர்லால் நேரு வங்காளம் வந்தபோது இவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் மேதை சத்யேந்திரநாத் போஸ் 80-வது வயதில் காலமானார்.