புதன், 11 பிப்ரவரி, 2015

தாமஸ்-ஆல்வா-எடிசன்

உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிறந்ததினம் இன்று (பிப்ரவரி 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சி கனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க் கப்பட்டார்.
 ஆசிரியர் திட்டியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் 10 சென்ட் அளித்து உற்சாகப்படுத்தினார்.
 பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறு வயதில் இருந்தே அவருக்கு உண்டு. கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன் தானும் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்தி ருக்கிறான்.
 ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங் களை 11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார் எடிசன்.
 ரயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் பணியாற்றிய போது, ரயில் பெட்டியையே அச்சகமாக மாற்றி ‘வீக்லி ஹெரால்டு’ வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். அங்கு சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார்.
 ஒருமுறை அங்கு அவர் வைத்திருந்த பாஸ்பரஸ் எரிந்து ரயில் பெட்டியில் தீப்பற்றியது. ரயில்வே அதிகாரி ஆத்தி ரமடைந்து அறைந்ததில் அவரது ஒரு பக்கக் காது கேட்காமல் போனது.
 இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த விஷயங்கள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை பெற்றார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் அல்ல.
 மென்லோ பார்க் பகுதியில் 1876-ல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிபெருக்கி, கிராமஃபோன், மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
 ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார்.
 எடிசன் 84 வயதில் மறைந்தார். அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

பொதுச் சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்


ஒரு அரசை தேர்ந்தெடுக்க தேர் தலில் வாக்களித்து, அரசின் செல வுக்கான வரி கட்டிய நமக்கு அரசிடமிருந்து சில பொதுச் சேவைகளைப் பெரும் உரிமை இல்லை, அதற்காக ஒரு சட்டம் தேவைப்படுகிறது, அதுதான் பொதுச் சேவைகளைப் பெறும் உரிமைச் சட்டம் (Right to Public Services Act RPSA).
இதற்கான ஒரு சட்ட வரைவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இது போன்ற சட்டங்கள் 2௦ மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த முயற்சி மேலும் வளரவேண்டும்.
சட்டத்தின் அம்சங்கள்
தமிழகத்தில் உள்ள சில அரசு அலுவல கங்களில் ஒவ்வொரு சேவைக்கும் யாரை அணுகவேண்டும், அந்த சேவை எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்; புகார் இருந்தால் யாரிடம் கொடுக்கவேண்டும் என்ற விவரங்கள் எழுதப்பட்டிருக்கும். இவை போன்ற அம்சங்களை கொண்டது தான் RPSA.
ஒரு குடிமகன் சிரமமில்லாமல், செலவு இல்லாமல் சில குறிப்பிட்ட பொதுச் சேவைகளை அரசிடமிருந்து பெறுவதற்காகவும், அவை பெறுவதில் உள்ள குறைகளை நீக்கவும், RPSA வழி செய்யும். இதனால் மக்களுக்கு அரசின் பொது சேவைகளை குறித்த நேரத்தில் குறித்த தரத்தில் பெறுவது உறுதிசெய்யப்படும்.
RPSA கீழ் வரும் எல்லா பொதுச் சேவை களுக்கும், அளிக்கப்படும் மனுக்களை பெற்றதற்கான ரசீது வழங்கப்படவேண்டும். அதே போல் அதில் அந்தச் சேவை எவ்வளவு நாட்களில் வழங்கப்படும் என்பதையும் குறிப்பிடவேண்டும். சேவையை அளிப்பதற்கான பொறுப்பு எந்த அரசு அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது என்பதும் இச்சட்டத்தில் குறிப்பிடப்படும்.
குறிப்பிட்ட பொதுச் சேவைகளை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டாலோ அல்லது கொடுக்கவில்லை என்றாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ அதற்காக மேல்முறையீடு செய்யலாம். குறைகள் களையப்படுவதுடன் அதற்கான நஷ்ட ஈடும் வழங்கப்படவேண்டும்.
இவ்வாறு உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு சிவில் நீதிமன்றத்தில் உள்ளது போல அலுவலர்களை அழைப்பது, கோப்புகளை கேட்பது போன்ற உரிமைகள் உண்டு. இந்த RPSA சட்டத்தை செயல்படுத்த ஒரு குறிப்பட்ட அரசுத் துறை நியமிக்கப்படும். அதேபோல் விண்ணப்பதாரர் கேட்ட பொது சேவை கொடுக்கப்படாதபோது, அதற்கான நஷ்டஈடும் சட்டத்தில் குறிப்பிடப்படும்.
RPSA சட்டத்தில் சாதி சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, நிலம் தொடர்பான சான்றிதழ்கள் என்ற பல பொது சேவைகளை பெறுவது இந்த RPSA கீழ் வரும்.
RPSA அவசியம்
பொதுவாக அரசு அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட சான்றிதழைப் பெறு வதில் பல சிக்கல்கள் உள்ளன. யாரிடம் முறையிடுவது என்பதில் தொடங்கி, என்னென்ன சான்றிதழ்களை வழங்கவேண்டும், எவ்வளவு காலம் ஆகும், என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதும் மற்றுமொரு சிக்கல்.
இவை யெல்லாம் ஊழலுக்கும், சேவையை உரியகாலத்தில் பெறமுடியாமல் இருப் பதற்கு காரணங்கள். இவற்றை களைவதே RPSAவின் நோக்கமாகும். ஒருவர் இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றதாலேயே அவருக்கு அரசு செய்யவேண்டிய சேவைகள் பல உண்டு.
அரசு எவ்வித செலவும் இல்லாமல் குறித்த நேரத்தில் அச்சேவைகளை கொடுப்பது அரசின் கடமை, அச்சேவைகளை பெறுவது குடிமகனின் உரிமை. நமது தேர்தலில் வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் உரிமை, இந்த உரிமை நம் எல்ேலாருக்கும் சமமாக வழங்கப்பட்டுள்ளது அதேபோல் பொது சேவையை பெறுவதும் நமது உரிமை அதனை RPSA நிறைவேற்றுகிறது.
RPSA மேலும் செய்யவேண்டியது என்ன?
இதுவரை RPSA அமலில் உள்ள மாநிலங் களில் எல்லாம் எல்லா அடிப்படை சேவைகளும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட வில்லை. இங்குள்ள அட்டவணையில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் RPSAயின் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏழைகள் அதிக சிரமப்பட்டு பெற வேண்டிய நிலம் தொடர்பான சான்றிதழ்கள் இந்த சட்டத்தில் சேர்க்கப்படுவதில்லை.
அப்படி சேர்த்தால் நிலம் தொடர்பான எல்லா அரசு ஆவணங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு பல சிக்கல்கள் தீர்க்கப்படும். மேல்முறையீட்டு அதிகாரிகள் மாவட்ட தலைமை அலுவலகத்திலோ அல்லது மாநில தலைமை அலுவலகத்திலோ இருப்பதால் ஏழைகள் தங்கள் குறைகளைத் தீர்க்க சிரமப்படவேண்டியுள்ளது.
இதற்கு கம்ப்யூட்டர்-இணையம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேல்முறையீட்டை எளிமைப்படுத்தவேண்டும். RPSA வந்த பிறகு பல அரசு அலுவலகங்கள் சீராக செயல்படத் துவங்கியுள்ளன. ஆனாலும் இவை மேலும் வளர வேண்டும். தமிழக அரசு இதுபோன்ற சட்டத்தை எப்போது கொண்டுவரும்?
ஒரு குறிப்பிட்ட சான்றிதழைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன. யாரிடம் முறையிடுவது என்பதில் தொடங்கி, என்னென்ன சான்றிதழ்களை வழங்கவேண்டும், எவ்வளவு காலம் ஆகும், என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதும் மற்றுமொரு சிக்கல். இவையெல்லாம் ஊழலுக்கும், சேவையை உரியகாலத்தில் பெறமுடியாமல் இருப்பதற்கு காரணங்கள்.
இராம.சீனுவாசன் seenu242@gmail.com

வியாழன், 5 பிப்ரவரி, 2015

Pollution control - Leather..Tamilnadu

பெரும்பாலான தோல் தொழிற்சாலைகள் பாதுகாப்பற்ற சூழலிலேயே இயங்குகின்றன.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வாரம் நடந்த அகோர விபத்தானது தோல் தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பாதுகாப்புகுறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 10 உயிர்களைப் பலிவாங்கிய இந்தச் சம்பவம், தோல் தொழில் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. தமிழ்நாட்டில் இதுவரை பட்டாசு ஆலைகள் மட்டுமே பணிபுரிவதற்குப் பாதுகாப்பற்ற இடமாகக் கருதப்பட்டன. இந்தப் பட்டியலில் தற்போது தோல் தொழிற்சாலைகளும் சேர்ந்திருக்கின்றன. இதற்கான காரணங்களை, இந்த மாவட்டத்தில், இந்த தொழிற்சாலைகள் உருவான வரலாற்றோடு இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியம்.
தமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்தான் தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் வேலூர் மாவட்டம்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டதும், மிகப் பெரும் அளவிலான தோல் ஏற்றுமதியைக் கொண்டதுமாகும். இந்தியாவிலேயே முதன்முதலாக இங்குதான் தோல் உற்பத்திக்கூடங்கள் தொடங்கப்பட்டன. கர்நாடக நவாபின் காலத்தில் இது தொடங்கப்பட்டது. 18-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான ராபர்ட் கிளைவ், கர்நாடக நவாபான சந்தா சாகிபுடன் இணைந்து ராணிப்பேட்டைப் பகுதியில் இதனைத் தொடங்கினார். தோல் உற்பத்திக்குத் தேவையான மாட்டுத் தோலை முஸ்லிம்கள் அதிகம் கைவசம் வைத்திருந்ததால் ராபர்ட் கிளைவ் இதற்காகச் சந்தா சாகிபின் துணையை நாடினார். இதற்கான உற்பத்திச் சூத்திரங்களை ராபர்ட் கிளைவ், சந்தா சாகிபுக்குக் கற்பித்தார். மேலும், மூலத் தோலை தொட்டிகளில் சுண்ணாம்புடன் நீறவைத்து அதனைப் பதனிடுவதற்காகத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்ததால், இந்தத் தொழிலுக்குச் சாதகமாக அமைந்தது. மற்றவர்கள் தொடத் தயங்கும் மாட்டுத் தோலை இவர்கள் குறைந்த கூலியைப் பெற்றுக்கொண்டு, பிரிட்டிஷாருக்குப் பதனிட்டுக் கொடுத்தனர். இந்த மரபு இப்போதும் தொடர்கிறது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உருவாக்கம்
இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கான அமைச்சகம் என்பது இந்திரா காந்தி காலத்தில்தான் தொடங்கப்பட்டது. 1974-ல் அவசரச் சட்டம் மூலம் தொடங்கப்பட்ட இந்த அமைச்சகத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவில் தொழிற்சாலை மற்றும் பிற காரணிகளால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாப்பது, இந்திய வனங்கள் மற்றும் வன உயிரிகளைப் பாதுகாப்பது. இதனைத் தொடர்ந்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதன் கட்டுப்பாட்டின் கீழ் அமைக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் 1980-களுக்குப் பிறகே இந்தியாவில் தொடக்கம் பெற்றன.
தமிழ்நாட்டில் 1982-ல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கண்காணிப்பதும் கட்டுப் படுத்துவதும்தான் இந்த வாரியத்தின் முக்கியமான வேலையே. ஆனால், பெரும்பாலும் இந்தத் துறை செயல்படாமலே இருக்கிறது. அரசுத் துறைகளிலேயே செயல்படாத துறை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள். துறை சார்ந்த ஆர்வமற்ற பிரதிநிதிகள், தேவையற்ற அரசியல் தலையீடுகள், மிதமிஞ்சிய ஊழல் போன்றவைதான் அதற்குக் காரணம். இதன் தொடர்ச்சிதான் சமீபத்திய கொடூர விபத்துகள்.
சுற்றுச்சூழல் கட்டுப்பாடு
தோல் தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை பல நிறுவனங்கள் வளர்ச்சியடைந்தபோதும் சட்டப்படி இப்போதும் சிறுதொழிற்சாலைகளாகவே இருக்கின்றன. மேலும், சுற்றுச்சூழல் தீங்கு வகைப்பாட்டின்படி, இவை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் சிவப்பு வகை தொழில்முறையாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் அடிப்படைகளான மறு பயன்பாடு, மறு சுழற்சி, மறு ஊட்டம், மறு மீட்பு போன்றவை தோல் தொழிற்சாலைகளுக்கு அதிகம் பொருந்துகின்றன. ஆனால், இவற்றை இந்தத் தொழிற்சாலைகள் சரியாகக் கடைப்பிடிப்பதில்லை.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, தோல் தொழிற் சாலைகள் தங்களின் பாரம்பரிய சுண்ணாம்பு உற்பத்தி முறையிலிருந்து, அதிகம் தீங்கு நிறைந்த வேதிப்பொருட்களுக்கு மாறின. இவை பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளால் தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்கள். மேலும், அனுமதிக்கப்பட்ட வேதிப்பொருட்களில்கூடக் குறிப்பிட்ட அளவில்தான் தனிமங்களும் சேர்மங்களும் மூலக்கூறுகளும் இருக்க வேண்டும் என்பது சர்வதேச விதி. ஆனால், வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், அவற்றைப் பயன்படுத்தும் தோல் தொழிற்சாலைகளும் இந்த விதியைக் காற்றில் பறக்கவிடுகின்றன. குறிப்பாக, தோல் தொழிற்சாலைகள் பயன்படுத்தும் முக்கிய வேதிப்பொருளான குரோம் என்பது மனித உடலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கக்கூடியது; சிறியவர் முதல் பெரியவர் வரை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதிலிருந்து வெளிவரும் நச்சுவாயுக்களும் மிக அபாயமானவை.
அறிவியல் முறைப்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பும், தொழிற்சாலைப் பாதுகாப்பும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை. இந்நிலையில், வேதிப்பொருட்களும் தண்ணீரும் கலந்து பதனிடப்படும் தோலானது, இந்தத் தொழிற்சாலைகளுக்குப் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் சேர்த்தே உருவாக்கிவிடுகிறது. காரணம், அபாயகரமான வேதிப்பொருட்கள் மற்றும் தண்ணீர் கலந்த உற்பத்திச் செயல்முறை, நிலத் துக்கும் மனிதர்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் கழிவு நீரையும் சேற்றையும் வெளியேற்றுகிறது. இன்றைய காலகட்டத்தில் இந்த இரண்டையும் சுற்றுச்சூழலுக்கு எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்தாமல் நன்னீராக மறுசுழற்சி முறையில் அதாவது பூஜ்ஜியக் கழிவு வெளியேற்ற முறையில் வெளியேற்றும் தொழில்நுட்பங்கள் உருவாகி விட்டன. மேலும், சேற்றைக்கூடப் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கும் தொழில்நுட்பங்களும் உருவாகியிருக்கின்றன.
ஆனால், இவற்றை வேலூர் மாவட்டக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பெரும்பாலும் கடைப் பிடிப்பதில்லை. வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை சிப்காட், மேல்விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் தோல் தொழிற்சாலைகள் இணைந்து பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ராணிப்பேட்டையின் ஒரு பகுதி தவிர, மற்ற எதுவுமே கழிவு வெளியேற்றத்தில் நவீனத் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதில்லை. பல நிலையங்களும் இவற்றோடு இணைந்த தொழிற் சாலைகளும் அதிகாலையில் குறிப்பிட்ட அளவு கழிவுநீரைப் பாலாற்றில் திறந்துவிடுகின்றன. பல ஆண்டு களாக நடைபெற்றுவரும் இந்தச் சட்ட விரோதச் செயல்பாட்டால் பாலாறு இன்றைக்கு நஞ்சாறாக மாறி விட்டது. நிலத்தடி நீரும் விவசாயமும் காலியாகிவிட்டன. உற்பத்தி என்பதைத் தாண்டி வியாபார மனோபாவம் கொண்ட இந்த முதலாளிகள், லாபத்துக்காக இம்மாதிரி யான சட்டவிரோதச் செயல்களைச் செய்கிறார்கள்.
தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் நலன்
தோல் தொழிற்சாலைகள் பெரும்பாலும் தொழிலா ளர்கள் வேலைசெய்வதற்குப் பாதுகாப்பற்றவை யாகத்தான் இருக்கின்றன. அபாயகரமான வேதிப் பொருட்களுடன் உற்பத்தியில் ஈடுபடுவதற்குத் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் பெரும்பாலும் அவர் களுக்கு வழங்கப்படுவதில்லை. மேலும், குறைந்த கூலியுடன் அதிக நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சில நிறுவனங்களில் வார விடுமுறைகூட வழங்கப்படுவதில்லை. அதுபற்றிய எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் இங்குள்ளவர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் குறிப்பிட்ட அளவு வடஇந்தியத் தொழிலாளர்களும் அடங்குவார்கள். இவர்களுக்கான தங்குமிடம் என்பது மாட்டுக் கொட்டகையைவிட மோசமானது. இங்குள்ள சில நிறுவனங்கள் இரு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளம் வழங்கும் முறையைக் கடைப்பிடிக்கக் கூடியவை என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய உண்மைகளில் ஒன்று. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர்களும், தொழிற்சாலை ஆய்வாளர்களும் எதையும் கண்டு கொள்வதில்லை. தொழிற்சாலைகளின் ‘கவனிப்பே’ இதற்கெல்லாம் காரணம்.
ஏற்றுமதி மூலம் அதிக வருவாயைக் கொடுக்கும், இரண்டு லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பளிக்கும் இந்தத் தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புக் குறைபாட்டின் உச்சத்துக்குச் சென்றுவிட்டால், மனித உயிர்களைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். இந்தச் சம்பவத்துக்குப் பிறகாவது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து, சுற்றுச்சூழலையும் மனித உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். தமிழக அரசின் தார்மீகக் கடமை அதுதான்.
- இஜாஸ் அகமது, சமூக விமர்சகர், தொடர்புக்கு: ijaz_ahmed@outlook.com

பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்துங்கள்!

சமீப காலமாக அதிகம் விவாதத்துக்குள்ளாகியிருக்கும் விஷயங் களில் பொது விநியோகத் திட்டமும் ஒன்று. உணவுப் பாதுகாப்புச் சட்டம் அனுமதிக்கும் அளவைவிட அதிகமாக, சராசரியாக ஒருவருக்கு 11 கிலோ உணவு தானியம் மாதந்தோறும் தேவைப்படுகிறது. இந்த அளவு கொடுப்பதாக இருந்தால், இப்போது இருப்பதைவிட அதிக அளவு தானியங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். மானியச் செலவையும் அரசு ஏற்க வேண்டும். ஆண்டுதோறும் பொது விநியோகத்துக்காக 610 லட்சம் டன்கள்தான் உணவு தானியத்தைக் கொள்முதல் செய்ய முடியும்.
அது இப்போது இருக்கும் மக்கள்தொகையில் பாதிப் பேருக்குக்கூடப் போதாது. இதற்கிடையில், பொது விநியோகத் திட்டத்துக்கென அளிக்கப்படும் உணவு தானியங்களில் 47% - அதாவது, கிட்டத்தட்ட சரிபாதி - உரியவர்களுக்குப் போய்ச்சேர்வதில்லை என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்தச் சூழலில், ‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் - 2013’ சிறப்பாக அமல்படுத்தப்படுவதற்காக இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் சாந்தகுமார் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, முக்கியமான சில பரிந்துரைகளைச் செய்திருக்கிறது. ‘மக்கள்தொகையில் 67% பேருக்குப் பதிலாக 40% பேருக்கு மட்டும் மானிய விலையில் உணவு தானியங்களை, அதுவும் ஒரு நபருக்கு 7 கிலோ என்று உயர்த்தி அளிக்க வேண்டும். நெல், கோதுமை போன்றவற்றுக்குக் கொள்முதல் விலையாக அரசு எவ்வளவு தருகிறதோ அதில் சரிபாதி விலைக்கு இதை விற்கலாம்’ என்பவை அவற்றில் முக்கியமானவை.
குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை. தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் உணவு தானியங்கள் மானிய விலையில் அல்லது விலையில்லாமல் தரப்படுகின்றன. சாந்தகுமார் குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டால், இவ்விரு மாநிலங்களுக்கும் மானியச் சுமை பெரிதும் கூடிவிடும். அத்துடன் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் உணவு தானியங்களின் அளவும் குறைக்கப்படலாம்.
தானியங்களின் விலை, அளவு போன்றவை ஒரு புறம் இருந்தாலும், அவற்றின் தரமும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. குறைந்த விலையில் கொடுத்தாலும் தரமற்று இருப்பதாலேயே பலர் தானியங்களை வாங்க மறுக்கின்றனர். எனவே, நல்ல தரத்தில், நியாயமான விலையில் உரிய கால இடைவெளியில் உணவு தானியங்களை வழங்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய தேவைக்கேற்ற விநியோகத் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்துவதும் வலுப்படுத்துவதும் முக்கியம். தமிழகமும் சத்தீஸ்கரும் பொது விநியோகத் திட்டத்தில் முன்னோடி மாநிலங்களாக இருக்கின்றன. இதைப் பிற மாநிலங்களும் பின்பற்றினால் மக்களுக்குப் பலன் கிடைக்கும்.
பொது விநியோகத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை இன்னும் மேம்படுத்துவது எப்படி என்பதுதான் அரசின் சிந்தனையாக இருக்க வேண்டுமே தவிர, எப்படிக் குலைப்பது என்பதல்ல. மானியத்தைக் குறைப்பது, ஒழிப்பது மட்டுமே லட்சியமாக இருக்கக் கூடாது.

புதன், 4 பிப்ரவரி, 2015

நம் பள்ளிப் பாடநூல்களில் இவ்வளவு பிழைகளா???

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article6859782.ece?homepage=true&theme=true


தமிழ்ச் சூழலில் பள்ளிப் பாடநூல்களை ஆய்வு செய்வது ஒரு சுவாரசியமான வேலை. நம் கல்வி முறையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு இது மிகவும் அவசியமானது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடநூல்களை இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
தவறான தகவல்கள்
ஒரு பாடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் 27 என்று பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஆனால், உறுப்பு நாடுகள் மொத்தம் 28. இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படும் லைபீரியா ஓர் ஆப்பிரிக்க நாடு. அதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் என்ன சம்பந்தம்? லாத்வியா, குரேஷியா ஆகிய இரு நாடுகளும் பட்டியலில் விடுபட்டிருக்கிறது.
ஐ.நா. சபையின் சிறப்பு நிறுவனங்களின் பட்டியலில் ‘உலக வங்கி’ (ஐ.பி.ஆர்.டி.) என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. விளக்கப் படத்திலோ, ‘பன்னாட்டுக் கிராமப்புற வளர்ச்சி வங்கி’ என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘புனரமைப்புக்கும் மேம்பாட்டுக்கு மான பன்னாட்டு வங்கி’யில் (இன்டர்நேஷனல் பேங்க் ஃபார் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன் அண்டு டெவலப்மென்ட்) கிராமம் நுழைந்தது எப்படி?
சமணத்தின் சின்னமாக ஒரு பாடத்தில் தர்மச் சக்கரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது சமணத்தின் சின்னமல்ல. ஸ்வஸ்திகா, மூன்று புள்ளிகள், பிறை வடிவத்தின் மீது ஓர் புள்ளி போன்றவற்றை உள்ளடக்கிய சின்னமே சமணச் சின்னமாக அறியப்படுகிறது.
வடுவூர் பறவைகள் புகலிடம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருவாரூர் மாவட் டத்தில்தான் வடுவூர் இருக்கிறது. அதேபோல், நரிமணம் (பனங்குடி) எண்ணெய் சுத்திகரிப்பாலை இருப்பது நாகப்பட்டினம் மாவட்டத்தில்தான்.
பாலைநில மக்கள் கள்ளர் என்பது தமிழ்ப் பதிப்பில் கள்வர் என்று திருத்தப்பட்டுள்ளது. ஆங்கிலப் பதிப்பில் ‘கள்ளர் ஆஃப் பாலை’(Kallar of Paalai) என்றுதான் நீடிக்கிறது.
தலைவர்களைக் கொச்சைப்படுத்துதல்
தாழ்த்தப்பட்டோருக்கான அம்பேத்கரின் விடுதலை இயக்கமான ‘பஹிஷ்கிரித் ஹிதகரிணி சபா' (Bahishkrit Hitaharini Sabha) என்பது ‘பாசிகிருகித் காரணி சபா' என்று முதல் பதிப்பில் கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்த பதிப்பில் (2012) இன்னும் மோசம், பகிஷ்கிருத்திகாராணிசபா என்று மாற்றப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 25,1927 ‘குடியரசு’ இதழிலிருந்து பெரியாரின் சாதிப் பட்டம் நீக்கப்படுகிறது. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில் வெளிப்படையாக அதனை ஓர் இயக்கமாக முன்னெடுத்த பெரியாரின் பெயர் பாடப் புத்தகத்தில் ‘ஈ.வே. ராமசாமி நாயக்கர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், தனது வாழ்நாள் இறுதிவரை சாதிப் பெயரைச் சுமந்த எஸ்.சத்தியமூர்த்தி அய்யர், வாஞ்சி அய்யர் போன்றவர்கள் எஸ்.சத்தியமூர்த்தி, வாஞ்சிநாதன் ஆக மாறிவிடுகிறார்கள்.
மொழியாக்கக் குளறுபடிகள்
ஃபேக்ஸ் (Fax), இன்புட் (Input), ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (Fast Breeder Reactor), மொபைல் டவர்ஸ் (Mobile towers), டிரான்ஸ்ஜென்டர் (Transgender), ரிமோட் சென்ஸிங் (Remote sensing), மகத் மார்ச் (Mahad march) போன்ற சொற்கள் ‘பிரதிகள், இடுபொருள், ஊதுஉலைகள், மின்னஞ்சல் கோபுரம், திருநங்கைகள், தொலைநுண்ணுணர்வு, மகத் மார்ச் பேரணி’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், சரியான மொழிபெயர்ப்பு முறையே ‘தொலைநகல், உள்ளீடு, அதிவேக ஈனுலைகள், கைபேசிக் கோபுரங்கள், மாற்றுப்பாலினம், தொலை உணர்வு, மகத் பேரணி’ என்பதாகும்.
ஹிட்லர் ‘பெயின்ட’ராக வியன்னாவில் சில காலம் பணியாற்றி னாராம். பெயின்டர் (painter) என்று சொன்னால் நம்மூர் வழக்கில் வண்ணமடிப்பவர் என்றுதானே புரிந்துகொள்வார்கள். ஓவியராகப் பணியாற்றினார் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.
எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் (electric-electronic) வித்தியாச மின்றி மொழிபெயர்த்துவிடுகிறார்கள். முன்னது ‘மின்னியல்’; பின்னது ‘மின்னணுவியல்’. மார்க்சியம் என்பது தமிழ்ச் சொல்லாகவே ஆகிவிட்ட நிலையில், மார்க்ஸிஸம் என்று எழுதுவதுதான் நடக்கிறது.
கருத்தியல் தெளிவின்மை
ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வெளிநாட்டுக் கொள்கைகள் முற்போக்கானவை என்றும் தேவதாசிகளைப் பற்றிச் சொல்லும்போது, ஆலய சேவகிகள் என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இவர்கள் இறைப் பணி மற்றும் கலைப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டார்கள் என்றும், காலமாற்றத்தால் பிரபுக்கள், ஜமீன்தார்கள் ஆகியோரால் இம்முறை சீரழிக்கப்பட்ட தாகவும் சொல்லப்படுகிறது. பாசிசம், நாசிசம், தேவதாசி முறை ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியமென்ன?
புள்ளிவிவரங்களில் நம்பகமின்மை
மரபுசாரா மின்சக்தி உற்பத்தியில் மிகுந்த இடர்ப்பாடுகள் இருப்பதாகப் பட்டியல் கொடுக்கப்படுகிறது. ஒலி மாசு, அதிகப் பண முதலீடு தேவைப்படும் நிலை, வானொலி-தொலைக்காட்சி அலைகளுக்கு இடையூறு, வனவிலங்குகள் வாழிட அழிப்பு என்று இடையூறுகள் பட்டிலியடப்படுகின்றன. ஆனால், அணு மின்சக்தி, அனல் மின்சக்தியின் இடர்ப்பாடுகள் மருந்துக்குக்கூடச் சொல்லப்படவேயில்லை.
இந்திய அளவில் அனல் மின்சக்தி உற்பத்தி 70%, நீர் மின்சக்தி 25% என்றும் அணு மின்சக்தி 272 மெ.வா. என்றும் சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் சதவிகிதத்தில் கூற வேண்டுமல்லவா? 31.07.2014 நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த மின்உற்பத்தி 2,50,257 மெ.வா.; இதில் நிலக்கரி, எரிவாயு, டீசல் போன்றவற்றால் கிடைக்கும் அனல் மின்உற்பத்தி 1,72,986 மெ.வா. (69.1%), நீர் மின்சக்தி 40,799 மெ.வா. (16.3%), அணு மின்சக்தி 4780 மெ.வா. (1.9%) புதுப்பிக்கத் தக்க எரிசக்தி 31,692 மெ.வா. (12.7%) என்பதுதான் அரசின் புள்ளிவிவரம்.
வரலாற்றுத் திரிபுகளும் மறைப்புகளும்
1940-ல் முகமது அலி ஜின்னா தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார் என்றும் 1946-ல் நேருவின் இடைக்கால அரசில் பங்கேற்க மறுத்து, தனது தனிநாடு கோரிக்கையில் பிடிவாதமாக நின்றதாக பிரிவினைக்கான பழி ஜின்னா மீது சுமத்தப்பட்டு இளம் உள்ளங்களிடையே காழ்ப்புணர்ச்சி உருவாக்கப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரஸும் இந்துத்துவமும் இணைந்து வளர்ந்த வரலாற்றை மறைத்துவிட்டு, ஜின்னா மீது பிரிவினை முத்திரை குத்துவது நியாயமாகுமா?
ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை போன்ற இந்துத்துவ அமைப்புகளைத் தொடங்கிய அனைவரும் காங்கிரஸ்காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இரு அமைப்புகளில் அங்கம் வகிக்கக் கூடாதென 1936-ல் காங்கிரஸ் கட்சியில் தீர்மானம் கொண்டுவரும்வரை இந்நிலையே நீடித்தது. இந்தக் கலாச்சாரத் தேசியவாதிகளின் வல்லாதிக்க வெறியை ‘இந்தியா வல்லரசாகும்’ என்று சொல்லி, பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைப்பது நியாயமாகுமா?
கலெக்டர் ஆஷ் 4 பேரைச் சுட்டுக் கொன்றதாகவும் அதற்குப் பழிதீர்க்கவே அவரது கொலை நடைபெற்றதாகவும் சொல்லப்படுகிறது. 1908 மார்ச் 18-ல் வ.உ.சி. கைது செய்யப் பட்டவுடன் தூத்துக்குடியில் கடையடைப்பும் போராட்டங் களும் நடைபெற்றபோது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர். மேலும், வாஞ்சிநாதனின் சட்டைப் பையிலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் துப்பாக்கிச் சூடு குறித்து எதுவும் இல்லை. மாறாக, ‘கேவலம் கோ மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை… கொல்லும் செயலுக்கு” முன்னோட்டம் என்கிறரீதியில்தான் அந்தக் கடிதத்தில் இருந்தது.
பெரியார், அண்ணா, திராவிட இயக்கம்
1947 ஆகஸ்ட்15-ஐ பெரியார் துக்க நாளாக அறிவித்தபோது, அண்ணா அதை மறுத்து இன்ப நாள் என்றது, தேர்தலில் பங்கேற்க அண்ணா விரும்பியது, கடவுள் மறுப்புக் கொள்கையில் அண்ணாவுக்கு இருந்த தயக்கம் போன்ற வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு, தி.மு.க. உருவாக்கத்துக்கு பெரியார்-மணியம்மை திருமணம் காரணமாக்கப்படுகிறது.
சேலம் மாநாட்டுக்கு முன்னதாகவே ஆகஸ்ட் 05, 1944 ‘கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று திருத்தி அமைத்தல்’ என்று ‘குடியரசு’ இதழில் துணைத் தலையங்கம் பெரியாரால் எழுதப்பட்டுள்ளது. மேலும், சேலம் செவ்வாய்ப்பேட்டையில் நடந்த நீதிக் கட்சி மாநாடு தொடர்பான ‘குடியரசு’ இதழ் தலையங்கங்களில் (ஆகஸ்ட்12,19 -1944) திராவிடர் கழகம், திராவிட நாடு குறித்தும் பெரியார் எழுதியுள்ளபோது, அண்ணா பெயரை மாற்றியதாகச் சொல்வது எந்த அளவுக்கு உண்மை?
இவ்வளவு பிழைகள் மலிந்த பள்ளிப் பாடநூல்களைத் தமிழ் அறிவுலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல. இது பொருட்படுத்தத் தக்கதல்ல என்று கருதினால், அது மாபெரும் தவறு. வருங்காலச் சந்ததியை வழி நடத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.
- மு. சிவகுருநாதன், ஆசிரியர், சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: musivagurunathan@gmail.com

திங்கள், 2 பிப்ரவரி, 2015

Gandhi

Omandur Ramasamy Reddiar

விடுதலைப் போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (Omandur Ramasamy Reddiar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 1). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தவர். தமிழகத்தில் குடியேறிய தெலுங்கு ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர். வால்டர் ஸ்கட்டர் பள்ளியில் படித்தார். சட்டம் பயின்றவர். மிக இளம்வயதி லேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.
 இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டு வரப்படுகின்றன என்று பட்டேலுக்கு எச்சரிக்கை செய்தார். அதன்பின்னர் அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்திய தேசத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது.
 காமராஜர் ஆதரவுடன் 1947-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவி ஏற்றார். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டவர். விவசாயிகள், மற்றும் ஏழை, எளியவர்களின் முன்னேற்றத் துக்காக சிந்தித்து பல முனைப்புகளை தொடங்கியவர்.
 1949 ஏப்ரல் வரை முதல்வராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலத்தில் சென்னை கோயில் நுழைவு அதிகாரச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இதன்படி, தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை பெற்றனர். ஜமீன், இனாம்தார் முறைகளையும் இவர் ஒழித்தார்.
 ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தை இயற்றினார். கோயில்களில் வழக்கத்தில் இருந்த தேவதாசி முறையை ஒழிக்கவும் சட்டம் கொண்டுவந்தார்.
 முதல்வராக இருந்தபோது ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிச்சைதான் எனக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ கூடாது என்றும் வெளிநாட்டில் இருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்த எளிய அரசியல்வாதி.
 முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு இவரது மனம் ஆன்மிகத்திலும், சமூக சேவையிலும் நாட்டம் கொண்டது. வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு, சமரச சுத்த சன்மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
 வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க நிலையத்தையும் நிறுவினார். வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் என பல தொண்டு அமைப்புகளை நிறுவினார்.
 எதையும் வெளிப்படையாகப் பேசும் துணிச்சல்காரர். சிறந்த எழுத்தாளர், ராஜதந்திரி, சமூக சேவகர். நேர்மையும், துணிச்சலும் மிக்க, கறைபடாத அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர், 1970-ம் ஆண்டில் தனது 75 -வது வயதில் காலமானார்.
 இவரது நினைவாக சொந்த ஊரில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இவரது தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.