திங்கள், 18 மே, 2015

America - China - India

இன்றைய சூழலில் வெளிப்பார்வைக்குப் புலப்படாமல் ஏராளமான விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ‘ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்’ என்ற கோட் பாடு ஹாங்காங்குக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவைச் சித்தரிப்பதற் காகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், உண்மை என்ன தெரியுமா? அமெரிக்க-சீனப் பொருளாதாரங்களின் எதிர்காலம் இன்று ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக் கிறது. எந்த அளவுக்கு என்றால் அவைதான் நாம் உற்றுநோக்க வேண்டிய ‘ஒரே நாடு: இரண்டு அமைப்புகள்’ என்கிற அளவுக்கு.
ஆண்டுதோறும் இரு தரப்புக்கும் இடையில் 60,000 கோடி டாலர்கள் அளவில் நடக்கும் வர்த்தகம்; அமெரிக்காவில் படிக்கும் 2,75,000 சீன மாணவர்கள், சீனாவில் படிக்கும் 25,000 அமெரிக்க மாணவர்கள்; அமெரிக்க வேளாண் பொருட்களுக்கான மிகப் பெரிய சந்தையாக சீனா இருப்பது; சீனாவிடம் அதிகமாகக் கடன் வாங்கிய நாடாக அமெரிக்கா இருப்பது; சீனாவில் அமெரிக்கா செய்துவரும் முதலீட்டைவிட அமெரிக்காவில் சீனா செய்யும் முதலீடு கடந்த ஆண்டு முதல்முறையாக அதிகரித்திருக்கிறது.
ஆனால் இதற்கெல்லாம் ஆழத்தில் சென்று பார்த்தால் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் மற்ற நாட்டினால் மேலும்மேலும் குழப்பமடைந்துகொண்டே இருக்கின்றன. சீன அதிகாரத் தரப்பினர் அமெரிக்காவைத்தான் தங்கள் பொருளாதார முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறார்கள்; முதலாளித்துவத்தை அவர்கள் கற்றதும் அங்கேதான். ஆனால், 2008-ல் உலகப் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும் அளவுக்கு அமெரிக்கா அசிரத்தையாக இருந்தது அமெரிக்காவின் வல்லரசு பிம்பம் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணம் சீனாவில் ஏற்படத் தொடங்கியது. அமெரிக்காவின் இந்த வீழ்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து சீன அதிகாரத் தரப்பினர் இன்னும் மீளவேயில்லை.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை சீனா உருவாக்க முயன்றபோது அமெரிக்காவின் பொருளாதாரக் கூட்டாளிகளான தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகள் அதில் சேராமல் இருப்பதற்கான வேலைகளை ஒபாமா வட்டாரம் செய்ய முயன்றபோது சீன அதிகாரத் தர்ப்பு குழம்பிப்போனது. அமெரிக்காவின் கவலையெல்லாம் அந்த வங்கி சர்வதேசத் தரத்துடன் இயங்க வேண்டும் என்பதுதான் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஜாக் லீயு வெளிப்படையாகவும், பொறுப்பாகவும் வலியுறுத்திவந்த அதே நேரத்தில் ஒபாமாவின் வட்டாரம் அமெரிக்காவின் கூட்டாளிகள் அந்த வங்கியில் சேருவதைத் தடுப்பதற்கான வேலைகளில் முனைப்பாக இருந்தது.
ஜப்பானைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் அமெரிக்காவை உதாசீனப்படுத்திவிட்டு சீனத் தலைமையில் இயங்கும் அந்த வங்கியில் சேர்ந்துகொண்டன. அமெரிக்கா சீனாவைத் தனக்குக் கீழே வைத்திருக்கத்தான் விரும்புகிறதே தவிர தனது பங்காளியாக வைத்திருக்க அல்ல என்ற உறுதியான எண்ணத்தை சீன விமர்சகர்களிடையே இந்த ஒட்டுமொத்த விவகாரமும் மேலும் மேலும் வலுப்படுத்தவே செய்தது.
இந்தச் சூழலில் அமெரிக்கர்கள் சீன அதிபர் ஜீயிடம் கேட்கிறார்கள்: “என்ன விஷயம்?”
புரையோடிய ஊழலால் சீனாவின் ஒரு கட்சி ஆட்சி முறை நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது. ஊழலுக்கு எதிரான ஜியின் நடவடிக்கைகள் ஒரு கட்சி ஆட்சி முறைக்கு எதிரான அச்சுறுத்தல்களை ஒழித்துக்கட்டுவதை இலக்காகக் கொண்டவை என்பது தெளிவு. அதைப் போலவே, அவர் தனது அரசியல் எதிரிகளையும் ஒழித்துக்கட்டிக் கொண்டிருப்பதுபோலவும் தோன்றுகிறது. ராணுவம், பொருளாதாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் அதிக அளவில் அதிகாரங்களைத் தன்னிடத்தில் ஜி வைத்திருக்கிறார். மாவோவின் காலத்துக்குப் பிறகு இவ்வளவு அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்ட பிறிதொரு தலைவர் சீனாவில் கிடையாது.
“கம்யூனிஸக் கட்சியின் அதிகார பீடத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அதிகாரங்களைத் தன்னகத்தே குவித்துக்கொண்டிருக் கிறார் ஜி” என்கிறார் வில்லி வோ-லாப் லாம் என்ற அரசியல் நோக்கர். “சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குக் காரணமே ராணுவம், பொருளாதாரம் ஆகியவற்றின் மீதான அதிகாரத்தை கம்யூனிஸக் கட்சி இழந்ததுதான் என்று ஜி நம்புகிறார்” என்பது வில்லியின் வாதம்.
சோவியத் எப்படி சரிந்தது என்பதில்தான் அவர் அதிகம் கவனம் செலுத்த விரும்புகிறாரே தவிர அமெரிக்கா எப்படி வெற்றி பெற்றது என்பதில் அவர் கவனம் செலுத்தவில்லை. அவருடைய களையெடுப்பு நடவடிக்கைகளால் அதிகார மட்டம் உறைந்துபோயிருக்கிறது. பெரிய பெரிய முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார்கள். ஜியின் களையெடுப்பு நடவடிக்கைகளின் இலக்கு ஊழல் மட்டுமல்ல, மெலிதாக வெளிப்படும் எதிர்ப்புகளும் அவற்றின் இலக்கே.
பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டுப் பாடப் புத்தங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. இணையத்தில் பதிவுகள் இடுவது, சீனாவின் முக்கியமான இணையதளங்களைத் தேடுவது போன்ற செயல்களெல்லாம் இந்த அளவுக்கு என்றுமே கட்டுப்படுத்தப்பட்டதில்லை. அதே சமயம், ‘கண்டுபிடிப்புகள்’ என்ற திசையை நோக்கி சீனாவை வலுவாக நகர்த்தத் தொடங்கியிருக்கிறார் ஜி. உற்பத்தி செய்வது, இயந்திர பாகங்களை ஒன்றுசேர்ப்பது போன்ற நிலையிலிருந்து சீனப் பொருளாதாரத்தை அதிக அளவு அறிவுழைப்பு தேவைப்படும் வேலைகளை நோக்கி நகர்த்துகிறார். ஆனால், களையெடுப்புகள் எந்தப் புத்தாக்க முயற்சிக்கும் வித்திடுவதுபோல் தெரியவில்லை.
முதலீட்டாளர் அந்துவான் வான் அக்ட்மால் என்னிடம் சொன்னது போல்தான்: சீனாவிலேயே புத்தாக்கம் செய்வது என்பதை சீனா வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், சீனாவில் தொழிலாளர் ஊதியமும், அமெரிக்காவில் புத்தாக்கமும் அதிகரித்து வருகின்றன. இதனால், அமெரிக்கா தனது நாட்டுத் தொழில் நிறுவனங்களை அவற்றின் அடுத்த உற்பத்திப் பிரிவுகளை சீனாவில் அல்ல, அமெரிக்காவில் தொடங்கும்படி தூண்டிக்கொண்டிருக்கிறது.
விலை மலிவான எரிசக்தியும், மேலும் இலகுவான, திறந்த அறிவுப் பங்கேற்பும் கலந்த செயல்முறையை அமெரிக்கா கொண்டிருக்கிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் புதுத் தொழில் நிறுவனங்களும் தங்கள் அறிவுசக்தியை பெரும் தொழில் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதால் புதுப் புதுக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. இதனால் எல்லாமே முன்பைவிட விரைவாகவும் நுட்பமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்படுகின்றன.
இதனால்தான் ‘புதிதாக முளைவிடும் மகத்தான சந்தை’யாக அமெரிக்கா உருவாகிவருவதாக வான் அக்ட்மாயேல் குறிப்பிடுகிறார். “பெரிய மாற்றம் இது,” என்கிறார் அவர். “யார் மலிவாக உற்பத்தி செய்வார்கள் என்பதைப் பற்றித்தான் இருந்தன கடந்த 25 ஆண்டுகளும். அடுத்த 25 ஆண்டுகளோ, யார் சாமர்த்தியமான பொருட்களை உற்பத்தி செய்வார்கள் என்பதைப் பற்றித்தான் இருக்கும்” என்கிறார் அவர்.
ஆனால், அதிபர் ஜி இணையத்தையும் அரசியல்ரீதியிலான எதிர்ப்பையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு சீனா பெரியது, புத்திசாலித்தனமானது என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் புத்தாக்கத்தில் சாதித்துவிட முடியும் என்றும் அவர் நம்புவதைப் போல் தோன்றுகிறது. இன்றைய உலகில் இதுதான் பெரும் சவால்.
- © தி நியூயார்க் டைம்ஸ், 
சுருக்கமாகத் தமிழில்: ஆசை

***********
மூன்று நாட்கள் பயணமாக சீனாவுக்கு வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை, சீனா - இந்தியா இடையிலான உறவுகளில் மட்டு மல்லாமல், பிராந்திய புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிபர் ஜி ஜின்பிங்கின் சொந்த மாகாணமான சீனாவின் வட மேற்கு மாகாணமான ஷான்ஜியின் தலைநகரான ஜியானிலிருந்து தனது சீன சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் மோடி. கடந்த செப்டம்பரில் இந்தியா சென்றிருந்த அதிபர் ஜி ஜின்பிங், மோடியின் சொந்த ஊரான அகமதாபாதிலிருந்துதான் தனது பயணத்தைத் தொடங்கினார். வழக்கமான நடை முறையில் அல்லாத இந்த ‘சொந்த ஊர்’ அரசு நடைமுறை, இரு நாடுகளும் தங்களுக்கிடையில் கலாச்சாரப் பரிமாற்றங்களை அதிகரிப்பதிலும் இரு தலைவர்களுக்கு இடையிலான நட்பை வலுப்படுத்துவதிலும் உறுதியுடன் இருப்பதை உணர்த்துகிறது.
இந்தியப் பிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியத் தலைநகரான புது டெல்லிக்குச் செல்லாமல், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு முதலில் சென்றார் அதிபர் ஜி ஜின்பிங். இதற்குப் பதில் மரியாதை செலுத்தும் வகையில் ஜியான் நகரில் தரையிறங்க மோடி முடிவுசெய்தார்.
வரலாற்றைப் பார்த்தோமானால், 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியும் பயணியுமான யுவான் சுவாங், தனது இந்தியப் பயணத்தை ஜியான் நகரிலிருந்துதான் தொடங்கினார். அப்போது சீனாவின் டாங் வம்ச அரசின் தலைநகராக ஜியான் இருந்தது. இந்தியாவில் 16 ஆண்டுகள் தங்கி புத்த மத வேதங்களைச் சேகரித்தார் யுவான் சுவாங். மோடியின் மாநிலமான குஜராத்துக்கும் யுவான் சுவாங் சென்றிருக்கிறார் என்ற தகவல் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக இருந்துவரும் கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியான உறவுகளை எடுத்துக்காட்டுகிறது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த பத்தாண்டுகளாக வளர்ந்துவரும் இருதரப்பு உறவு, இந்த இரண்டு பிராந்திய சக்திகளை ஒன்றுக்கொன்று ஈர்க்கச் செய்திருக்கிறது. கடந்த பத்தே ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு ரூ. 44 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 4.4 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் ரூ. 6.3 லட்சம் கோடியாக இது உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008-லிருந்து இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளராக சீனாதான் இருக்கிறது. சீனா இறக்குமதி செய்யும் நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கிகள் நிறுவப்பட்டதில் இந்தியாவும் சீனாவும் முக்கியப் பங்கை வகித்தன.
இத்தனை இருந்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆரோக்கியமானதாகவும் பல காலம் நீடிக்கக்கூடிய தாகவும் வைத்திருப்பதில் சீனாவும் இந்தியாவும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், வர்த்தக நிலைப்புத் தன்மையின்மை, குறைந்த அளவிலான நேரடி முதலீடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியிருக்கிறது.
இந்தியத் தொழில்துறை மற்றும் உள் கட்டமைப்புப் பணிகளுக்கான முதலீடு இன்னும் 5 ஆண்டுகளில் ரூ. 1.26 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்று கடந்த செப்டம்பரில் இந்தியா சென்றிருந்தபோது அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக சீனாவுக்கு வரும் மோடி தன்னுடன் 3 மாநில முதல்வர்களையும் அழைத்து வந்தார். உள்நாட்டு வளர்ச்சியில் அவர் கொண்டிருக்கும் அக்கறையை இது காட்டுகிறது.
இருநாடுகளுக்கும் இடையிலான ராஜாங்க ரீதியான தடைக்கல்லாகவும், சில சமயம் இருநாட்டு உறவு மேம்பாடு அடைவதற்குத் தடையாகவும் இருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை. எனினும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கடைபிடிப்பதால், எல்லையில் இருநாடுகளும் ஒரு முறை கூடத் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளவில்லை என்பது ஆறுதலான விஷயம். அமைதி மற்றும் ராஜாங்கக் கொள்கையில் சீனாவும் இந்தியாவும் கவனம் செலுத்தினால் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவில் மட்டுமல்லாமல் ஆசிய வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும்.
தமிழில்: வெ. சந்திரமோகன்.

- சீன நாளிதழ்
************

Present England

ஆச்சர்யமூட்டும் வகையில் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில், ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி. கருத்துக் கணிப்புகள் அனைத்துமே ‘இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது, இழுபறி நிலைமையே ஏற்படும், சிறிய கட்சிகள் ஆதரிக்கும் கட்சியால்தான் ஆட்சியை அமைக்க முடியும்’ என்று கூறிய நிலையில், மீண்டும் ஆளுங்கட்சியையே ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள் மக்கள்.
நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 331 தொகுதிகளில் வென்றுள்ளது. எட் மிலிபாண்ட் தலைமையிலான லேபர் கட்சியால் 232 தொகுதிகளைத்தான் பெற முடிந்திருக்கிறது. ஸ்காட்லாந்தின் 59 தொகுதிகளில் 56-ல் ஸ்காட்லாந்து தேசிய கட்சி வென்றதால் லேபர் கட்சிக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டுவிட்டது. இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளிலும் லேபர் கட்சிக்குக் கணிசமான தோல்வி ஏற்பட்டிருக்கிறது. இத்தோல்விகளுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று கட்சித் தலைமைப் பதவியை மிலிபாண்ட் ராஜிநாமா செய்திருக்கிறார். கடந்த முறை ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், வாக்காளர்களிடம் நம்பகத்தன்மையை இழந்த லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு (எல்.டி.பி.) மிகப் பெரிய தோல்வி ஏற்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலில் 57 தொகுதிகளில் வென்ற அது, இப்போது வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் இங்கிலாந்து உறவை பிரதான அரசியலாக்கிவந்த யுனைடெட் கிங்டம் இன்டிபென்டன்ஸ் கட்சியும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. கட்சி ஒரே ஒரு இடத்தை வென்றிருக்கும் சூழலில், அதன் தலைவர் நைஜல் ஃபரேஜ் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.
இந்த முடிவுகள் எல்லாம் சில செய்திகளைச் சொல்லாமல் இல்லை.
இங்கிலாந்தில் இப்போது நிலவரம் அவ்வளவாகச் சரியில்லை. அரசு தேசிய சுகாதார திட்டத்துக்கு ஒதுக்கும் நிதி போதவில்லை. ஊழியர் பற்றாக்குறையால் திண்டாடுகிறது சுகாதாரத் துறை. உயர் கல்வியோ நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனியாக மாறிக்கொண்டிருக்கிறது. நகரமயமாக்கலின் வேகத்துக்கு கட்டமைப்புகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. குடியிருக்க வீடுகள் கிடைப்பது பெரும் பாடாகிவருகிறது. போக்குவரத்து, மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்துகொண்டே வருகின்றன.
சுமார் 10 லட்சம் பிரிட்டிஷ் மக்கள் அன்றாடம் அரசு தரும் இலவச உணவைத்தான் நம்பியிருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் நாட்டின் வறியவர் எண்ணிக்கை 8 லட்சம் அதிகரித்திருக்கிறது. அதாவது 1.32 கோடியாக இருந்த வறியவர்களின் எண்ணிக்கை 1.4 கோடியாக உயர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் இடையில் ஆட்சியில் இருந்த கட்சியே அதிக தொகுதிகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் பொருளாதார நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டி ஏற்கெனவே சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அரசு, மேலும் மக்கள் நலத்திட்டங்களில் 1,200 கோடி பவுண்ட் அளவுக்கு ஒதுக்கீட்டை வெட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியும் வென்றிருக்கிறது என்றால், அது சுட்டிக்காட்டும் செய்தி என்ன? எதிர்க் கட்சிகளால் மக்கள் ஏற்கக் கூடிய அளவில் ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைக்க முடியவில்லை. எதிர்க் கட்சிகளுக்கு இது பெரிய பாடம்.
இந்த வெற்றியால் ஆளும் கட்சியும் பெரிய கொண்டாட்டத்தில் இறங்கிவிட முடியாது. தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து நீடிப்பதா, வெளியேறுவதா எனும் முடிவெடுப்பது உட்பட நிறைய சவால்கள் அரசுக்குக் காத்திருக்கின்றன. வெற்றி சவால்களையே பரிசாகக் கொடுத்திருக்கிறது!

வியாழன், 7 மே, 2015

Krishna Water to chennai

தமிழகத்துக்கு இதுவரை ரூ.662 கோடி செலவு

-டி.செல்வகுமார்
தெலுங்கு கங்கை திட்டம் தொடங்கியதில் இருந்து (1983 முதல்) இதுவரை ஆந்திர அரசுக்கு தமிழக அரசு இது வரை ரூ.662 கோடி கொடுத்துள்ளது.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, கிருஷ்ணா நதியில் ஆந்திர அரசு ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் தலா 3.9 டிஎம்சி வீதம் 15.6 டிஎம்சி தண்ணீர் எடுத்து சைலம் அணையில் தேக்குகிறது. பின்னர், அங்கிருந்து சோமசீலா, கண்டலேறு அணைகள் வழியாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி-யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி-யும் சென்னை குடிநீருக்கு திறந்துவிடப்படுகிறது.
கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான செலவு முழுவதும் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப் படையில் ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்கிறது ஒப்பந்தம். கிருஷ்ணா நீர் கால்வாயில் இரு மாநிலங்களுக்கான பொது கால் வாய் பகுதிகளில் (மொத்தம் 14 இடங்கள்) பராமரிப்பு உள்ளிட்ட செல வினங்களுக்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவிட்டிருப்பதாக ஆந்திரம் கூறுகிறது.
இருமாநிலங்களுக்கும் பொது வான கால்வாய் பகுதிகளில், கள ஆய்வு செய்தும், சம்பந்தப் பட்ட ஆவணங்களை சரிபார்த்தும் அவ்வப்போது செலவுத் தொகையை கொடுத்து வருகிறது தமிழக அரசு. அந்த அடிப்படையில் தெலுங்கு கங்கை திட்டம் தொடங்கிய 1983-ம் ஆண்டு முதல் இந்தாண்டு மார்ச் வரை ரூ.662 கோடியை ஆந்திராவுக்கு தமிழ்நாடு வழங்கியுள்ளது. 1983-ல் இருந்து 1996 வரை ரூ.512 கோடியும், குறைந்தபட்சமாக 1985, 1995-ல் தலா ரூ.5 கோடியும், அதிகபட்சமாக 2013ல் ரூ.100 கோடியும், இந்தாண்டு மார்ச் மாதம் ரூ.50 கோடியும் தமிழகம் வழங்கியுள்ளது. கிருஷ்ணா நீரைப் பயன்படுத்தி ஆந்திர அரசு தனது பாசனப் பகுதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்போதுகூட 3 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கான பணிகள் நடக்கின்றன.
நீர் திறக்கப்படும் காலத்தை மாற்ற திட்டம்
ஜூன் 1 முதல் மே 31 வரையிலான தண்ணீர் ஆண்டைக் கணக்கிட்டு கிருஷ்ணா நீர் திறந்துவிடுவதால், இரண்டு போகம் சாகுபடி செய்யும் ஆந்திர விவசாயிகள், 3-வது போகம் சாகுபடி செய்யவும் முயற்சிக்கிறார்கள். இதனால், சென்னைக்கு தேவையான அளவு கிருஷ்ணா நீர் வந்து சேராமல் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, கிருஷ்ணா நீர் திறந்துவிடும் காலத்தை மாற்றுவது குறித்தும், சென்னைக்கு கூடுதலாக கிருஷ்ணா நீர் வரும்போது அதனை தேக்கி வைப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது பற்றியும் பொறியாளர்கள் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது. அது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

சென்னைக்கு நீரைப் பிரிக்கும் சாய்கங்கா கால்வாய்

- கி.கணேஷ்
சென்னைக்கான கிருஷ்ணாநீரின் பங்கு சைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து வந்தாலும் அந்த நீரை ஒழுங்குபடுத்தி நமக்கு அனுப்புவது கண்டலேறு அணையில் அமைந்துள்ள முதன்மை நீர்ப்போக்கிதான். கண்டலேறு அணைக்கு தென்பகுதியில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த முதன்மை நீர்ப்போக்கி வழியாக தான் கண்ட லேறு- பூண்டி கால்வாயில் நீர்திறந்து விடப் படுகிறது.
கண்டலேறு முதன்மை நீர்ப்போக்கி பகுதியை பார்வையிட சென்ற போது அங்கு அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் கட்டப் பட்டுள்ள சுவரில் உள்ள கசிவை அடைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. முதன்மை நீர்ப்போக்கியின் ஐந்து மதகுகளும் மாற்றப்பட்டு, நவீன அமைப்புடன் கூடிய மின்சக்தியில் இயங்கும் மதகுகள் ரூ.1.6 கோடியில் அமைக்கப் பட்டுள்ளன.
இம்மதகுகள் வழி யாகதான் சென்னைக் கான 12 டிஎம்சி, நெல் லூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் பாசனத்துக்கான நீரும் அனுப்பப்படுகிறது. கண்டலேறுவில் 8.4 டிஎம்சியை விட அதிக மான நீர் இருக்கும் போது வினாடிக்கு 1000 முதல் 1600 கன அடி சென்னையின் குடி நீருக்காகவும், 100 அல்லது 200 கன அடி அளவுக்கு பாசனத்துக்காகவும் தண்ணீர் திறக்கப் படுகிறது. குடிநீர் மற்றும் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பதுடன் தலா 3 மெகாவாட் வீதம் 9 மெகா வாட் மின்சாரமும் இங்கு கிடைக்கிறது. மதகுகள் வழியாக தயாரிக்கப்படும் மின்சாரம் அதே மதகை இயக்க பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
சாய் கங்கா கால்வாய்
கண்டலேறு முதன்மை கால்வாயில் இருந்து திறக்கப்படும் நீர், கால்வாய் வழியாக 2.6 கி.மீ., இயற்கையாகவே அமையப்பெற்ற சிறிய நீர்த்தேக்கத்துக்கு வருகிறது. அங்குதான் சென்னைக்கு கிருஷ்ணா நீரை தனியாக பிரித் தனுப்பும் சாய்கங்கா கால்வாய் அமைந்துள்ளது.
இங்குள்ள ஆறு மதகுகள் வழியாக அப்பகுதி யில் சாய்கங்கா கால்வாய் என்றழைக்கப்படும் கண்டலேறு -பூண்டி கால்வாயில் நீர் திறக்கப் படுகிறது. இங்கிருந்து தான் சென்னைக்கான பிரதான கால்வாயும் தொடங்குகிறது.
சாய்கங்கா கால்வாய், கண்டலேறு நீர்ப்போக்கி மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளில் உள்ள 5 மதகுகளை இயக்குபவர்கள் சுழற்சி அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போத்திரெட்டிபாடு முதன்மை நீர் போக்கி
ஸ்ரீசைலம் அணைக்கு அருகில் போத்தி ரெட்டிபாடு முதன்மை நீர் போக்கி அமைந் துள்ளது. சைலம் அணையில் 842 அடிக்கும் மேல் நீர் இருந்தால் மட்டுமே இந்த நீர் போக்கிக்கு தண்ணீர் கிடைக்கும்படி இது கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு நீர் திருப்பி விடப்படுகிறது. இந்த நீர் போக்கியில் வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடி திறந்து விட முடியும். ஆனால், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இந்த நீர்போக்கியின் திறனை அதிகரிக்க முயன்ற போது, தெலங்கானா பகுதிகளுக்கு கிடைக் கும் நீரின் அளவு குறைந்து விடும் என்று அப்பகுதி யினர் எதிர்த்தனர். அதே நேரம், வறட்சியான ராயலசீமா பகுதிகளுக்கு அதிக நீர் தேவைப் பட்டதால், நீர் போக்கியின் திறன் அதிகரிக்க வேண்டும் என்றும் குரல்கள் வலுத்தன.
பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு வினாடிக்கு 44 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடும் திறன் கொண்டதாக போத்திரெட்டிபாடு நீர் போக்கி மேம்படுத்தப்பட்டது. ஸ்ரீசலைம் அணை யில் 854 அடிக்கு மேல் நீர் இருந்தால்தான் போத்தி ரெட்டிபாடு நீர் போக்கி முழு திறனுடன் செயல்பட முடியும். இதையடுத்து, 16.34 கி.மீ தூரத்தில் பானக்செர்லா என்ற இடத்தில் மற்றொரு நீர் போக்கி அமைந்துள்ளது

முடுக்கிவிடப்பட்ட கிருஷ்ணா திட்டம்: நினைவுகூர்கிறார் மு.க.ஸ்டாலின்

- எஸ்.சசிதரன்
சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் இருந்த போதுதான் கிருஷ்ணா நதிநீர் சென்னை வந்தது. இதை யொட்டி ‘தி இந்து’வில் வெளி யாகும் கிருஷ்ணா பயணக்கட்டு ரைக்காக அவரை சந்தித்து கருத்து கேட்டபோது, அவர் கூறியது:
எம்.ஜி.ஆரும், என்.டி.ஆரும் உருவாக்கிய “தெலுங்கு கங்கை” திட்டப்பணிகள், நான் சென்னை மேயராக இருந்த போது முடுக்கிவிடப்பட்டு, சென் னைக்கு முதன் முதலில் கிருஷ்ணா நீர் கொண்டு வரப் பட்டது. கண்டலேறு முதல் பூண்டி வரையுள்ள கால்வாய்கள் பலப் படுத்தப்பட்டு, நீர் தங்கு தடை யின்றி சென்னைக்கு வருவது உறுதி செய்யப்பட்டதும் திமுக ஆட்சியில்தான். அதற்காக ரூ.200 கோடி நிதியளித்து சத்ய சாய் பாபா பேருதவி தெய் தார். அவரை, 21.7.2007-ல் திமுக தலைவர் கருணாநிதி கவர வித்து விழா நடத்தினார். அவ்விழா வில் பேசிய அவர், “ஆன்மிக வாதியாக பாபாவும், அரசியல் வாதியாக நானும் ஒரே மேடை யில் பங்கேற்பது பலருக்கு ஆச்சரியமூட்டும்” என்றார். மக்கள் பணி என்றால் ஆன்மிகவாதிகளின் உதவியையும் பெறத் தயங் காதவர் அவர்.
இது மட்டுமின்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் போக்கு வதற்காக மீஞ்சூர், நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங் களை நிறைவேற்றிக் கொடுத்த தும் திமுக ஆட்சிதான். குடிநீர் திட்டங்களை நிறை வேற்றுவதற்காக குடிநீர் வடிகால் வாரியம் என்ற தனி வாரியத்தை உருவாக்கியவர் கருணாநிதி. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ராமநாதபுரம் மாவட்ட கூட்டுக் குடிநீர் திட்டம், நாகை கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை திமுக ஆட்சியில் நிறைவேற்றப் பட்டவை.
இப்போது நிலுவையில் உள்ள வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டமும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதுதான்.
தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை முதலில் அமல்படுத்தியதும் திமுகதான். அதேபோல் மாநிலத்துக்குள் நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவெடுத்து, இரு திட்டங்களை அறிவித்தவர் கருணாநிதி. ரூ.2180 கோடியில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தில் ரூ.180 கோடி-க்கு மேல் முதல் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அதேபோல், ரூ.369 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி-கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டமும் திமுக அறிவித்த திட்டம்தான்.

தெலுங்கு கங்கை தொடங்கும் வெளுகோடு நீர் தேக்கம்

-வி.சாரதா
வெள்ளோடு நீர்தேக்கம்
நந்தியால் அருகில் 11 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது வெளு கோடு சமநிலை (balancing reservoir) பராமரிப்பு நீர்த்தேக்கம். குடிநீர், பாசனம் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொள் ளாமல், அதிகபட்ச நீரினை குறிப்பிட்ட காலம் தேக்கி வைத்து உரிய பகுதிகளுக்கு அனுப்புவதற்காக கட்டப்படுவதே சமநிலை பராமரிப்பு நீர்த்தேக்கம் எனப்படும்.
இதில் அதிகபட்சமாக 16.95 டி.எம்.சி நீர் தேக்கி வைக்க முடியும். இது சென்னையில் உள்ள நான்கு முக்கிய நீர் தேக்கங்களின் ஒட்டுமொத்த கொள்ளளவை (11.05 டி.எம்.சி) விட அதிகமாகும். போத்திரெட்டிபாடு நீர்போக்கியிலிருந்து ஈர்ப்புவிசையால் ஓடிவரும் கிருஷ்ணா நீர் சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து சென்னைக்கு மட்டு மல்லாமல், கடப்பா, கர்னூல், மாவட்டங்களுக்கும் நீர் மொத்தமாக திறந்துவிடப்படுகிறது.
இங்கு தொடங்கும் கால்வாயே தெலுங்கு கங்கை கால்வாய் எனப்படுகிறது. இதன் குறைந்தபட்ச நீர் தேக்க அளவு (டெட் ஸ்டோரேஜ்) 0.046 டி.எம்.சி. அதற்கு கீழே நீர் இருப்பு இருந்தால், கால்வாய் மூலம் வெளியேற்ற முடியாது. இதற்கும் சோமசீலா அணைக்கும் இடையே, பத்வேல் என்ற இடத்தில் பொத்லூரூவீர பிரம்மேந்திர ஸ்வாமி நீர் தேக்கம் அமைந்துள்ளது.
பயணிப்போம்..

Blogs I liked in Tamil

http://writersamas.blogspot.in/
http://www.jeyamohan.in/
http://www.nisaptham.com/
https://ensanthosh.wordpress.com/
http://www.writermugil.com/
http://amuttu.net/
http://enganeshan.blogspot.in/
http://www.musicshaji.blogspot.in/
http://www.inmmai.com/p/blog-page.html
https://anandchelliah.wordpress.com/
http://www.athishaonline.com/
http://pitchaipathiram.blogspot.in/

Books for children

டுமுறைக்கு என்ன செய்யப் போறீங்க? வெயில் சுள்ளெனக் கொளுத்தும் நேரத்தில் வெளியே விளையாடாமல், புத்தகங்களைப் படிக்கலாமே! எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்ற குழப்பம் வேண்டாம். கீழே கொடுத்திருப்பவை உங்களுக்கு உதவும்:
ஆண்டர்சன் கதைகள்
டென்மார்க்கைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் உலகப் புகழ்பெற்ற குழந்தைகளுக்கான எழுத்தாளர். அவருடைய பிறந்தநாளான ஏப்ரல் 2 சர்வதேசக் குழந்தைகள் புத்தக நாளாக அனுசரிக்கப்படும் அளவுக்குப் பிரபலமானவர். அவர் எழுதிய அற்புதங்களும் கற்பனையும் நிரம்பிய கதைகளின் தொகுப்பு தமிழிலேயே கிடைக்கிறது. உலகப் புகழ்பெற்ற குழந்தை இலக்கியங்களைத் தமிழுக்குத் தந்த யூமா. வாசுகியின் எளிமையான, சரளமான மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924
சிட்டுக் குருவியின் சீரிய அறிவு
நம் கைகளுக்குள் அடங்கிவிடும் சிட்டுக் குருவியால் பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறோம். ஆனால் சிட்டுக் குருவி எவ்வளவு புத்திசாலி என்று இந்தக் காஷ்மீர் கதை சொல்கிறது. ஒரு காட்டில் தீ பிடித்துவிடுகிறது. பறவைகளின் ராஜாவான மயிலால் தீயை அணைக்க வழி கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது, சிட்டுக் குருவி வழி கண்டுபிடிப்பதுதான் கதை. எழுதியவர் சுரையா ரசூல், தமிழில் ஆர். ஷாஜஹான்.
நேஷனல் புக் டிரஸ்ட், தொடர்புக்கு: 044-28252663
பச்சை நிழல்
குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகள் தீர்ந்து போய்விட்டது போலப் பெற்றோர்கள் திணறுகிறார்கள். ஆனால், முன்காலத்தைப் போலவே குழந்தைகளுக்குச் சொல்வதற்கு நிறைய நல்ல கதைகள் இருக்கின்றன என்கிறது, குழந்தைகளுக்கான எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய இந்தத் தொகுப்பு. குழந்தைகள், அவர்களுடைய உலகில் இயல்பான கற்பனையுடன் உலாவ இக்கதைகள் கைகொடுக்கும்.
என்.சி.பி.எச். வெளியீடு, தொடர்புக்கு: 044-26359906
காட்டுப் பள்ளிக்கூடம்
குழந்தைகளுக்கான பாடல்களின் முக்கிய அம்சமே எளிமையான வார்த்தைகளும் பாடுவதற்கும் ஏற்ற தன்மையும்தான். இந்தப் புத்தகத்தில் உள்ள பாடல்களில் அந்தத் தன்மை நன்கு கூடிவந்துள்ளது. பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளியின் முதல்வர் வெற்றிச்செழியன் எழுதியுள்ள பாடல்களின் தொகுப்பு நூல் இது.
மக்கள் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை, தொடர்புக்கு: 044-24782377
யுரேகா கோர்ட்
புகழ்பெற்ற புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி ஒரே நேரத்தில் நடந்திருந்தாலும், ஒருவர்தான் புதிய கருவி-பொருளின் முக்கிய அம்சத்தைக் கண்டுபிடித்திருப்பார். அதேநேரம் ஒரு கண்டுபிடிப்புக்கு இருவர் சொந்தம் கொண்டாடவும் கூடும். இதில் யாருடைய பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வித்தியாசமான வகையில் எழுதியிருக்கிறார் குழந்தைகளுக்கான அறிவியல் எழுத்தாளர் இரா. நடராசன்.
விகடன் பிரசுரம், தொடர்புக்கு: 044-42634283
விழிப்புணர்வுப் பாடல்கள்
"எதனாலே? எதனாலே?
மின்மினிப் பூச்சியின் பின்னால் அடிக்கடி
விளக்கொண்ணு மின்னுது எதனாலே?...
குருவியும் காக்கையும் பறப்பதைப் போலவே
பூனை பறக்கலே எதனாலே?..."
இதைப் போன்று குழந்தைகளே பாடக்கூடிய அறிவியல், சமூகம், சுற்றுச்சூழல் பற்றி எளிமையாக, பிரபலமான பாடல்களின் தொகுப்பு. தொகுத்தவர் எஸ்.டி. பாலகிருஷ்ணன்.
அறிவியல் வெளியீடு, தொடர்புக்கு: 044-28113630
மாத்தன் மண்புழுவின் வழக்கு
உழவனின் நண்பன் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் மண்புழுதான் காலம் காலமாகப் பூமியை உழுது செழிப்பாக்கி வருகிறது. இப்படிப்பட்ட மண்புழுக்களின் வாரிசான மாத்தன், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தரப்படும் ஓய்வூதியத்தைத் தனக்கும் தர வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பிக்கிறது. அது நியாயமான வேண்டுகோளாக இருந்தும், அரசு அதை ஏற்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது மாத்தன். நீதிமன்றத்தில் தன் வாதத்துக்கு ஆதாரமாக இயற்கையின் முக்கியத்துவத்தை அது அற்புதமாக விளக்கும் சுவாரசியமான புத்தகம். மலையாளத்தில் எழுதியவர் பேராசிரியர் எஸ். சிவதாஸ், தமிழில் யூமா. வாசுகி.
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924
யானைகள்
யானை பிடிக்காத குழந்தைகள் உண்டா? ஆனால், யானைகளைப் பற்றி என்னவெல்லாம் நமக்குத் தெரியும்? யானைகளைப் பற்றி நமக்குத் தெரியாத சில விஷயங்களை இந்தப் புத்தகம் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது.
யுரேகா புக்ஸ், தொடர்புக்கு: 044-28601278
யானைச் சவாரி
தோட்டத்திலே வைக்கோல் போர்
பரப்பி இருக்குது
தொட்டுப் பார்க்க மெத்தை போல்
சொகுசாய் இருக்குது
படுத்துப் புரண்டு விளையாட
ஆசை பிறக்குது
அம்மா பார்த்தால் அடி விழுமோ
அச்சம் தடுக்குது.
இப்படி, பிரபல எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய சுவாரசியமான குழந்தைப் பாடல்களின் தொகுப்பு.
புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடு, தொடர்புக்கு: 044-24332924
ஏழு நிறப் பூ
ரஷ்ய இலக்கிய மேதைகளின் குழந்தைக் கதைகள் படிக்க எளிமையானவை, சுவாரசியமான அம்சங்கள் நிரம்பியவை. நமக்குப் பக்கத்திலேயே நடந்தது போலப் பல விஷயங்கள் நடக்கும் இக்கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யூமா. வாசுகி.
என்.சி.பி.எச். வெளியீடு, தொடர்புக்கு: 044-26359906

People who shined after failing in School Studies

இன்றைய நமது கனவு நாயகர்கள் பலரும் தேர்வில் தோற்றவர்கள் அல்லது பள்ளிக் கல்வியில் பலவீனமானவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
* ஆர்.கே. நாராயணன். பல்கலைக்கழகத்தின் ஆங்கில தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர். பின்னாட்களில் ஆங்கில இலக்கியத்தில் அசைக்க முடிக்யாத ஆளுமையாக உயர்ந்தார்.
* பள்ளிப் பாடங்களை வெறுத்தவர் ஜி.டி.நாயுடு. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியை ஐந்து ஆண்டுகள் கற்பிப்பதை கண்டு சலிப்புற்றவர், ஓர் ஆண்டிலேயே அந்த பொறியியல் கல்வியை தனது மாணவர்களுக்கு கற்பிக்க முடியும் என்று சொல்லி செய்துகாட்டினார்.
* விமானி ஆக ஆசைப்பட்டார் அப்துல் கலாம். அதற்கான தேர்வில் ஒரு கிரேடு மதிப்பெண் குறைந்தது. ஜனாதிபதி ஆகிவிட்டார்.
* பள்ளியில் டிராவிட் சரியாக படிக்கவில்லை. பல ஆண்டுகள் அணியிலும் இடம் பெற முடியவில்லை. அந்த காலகட்டத்தில் தனது பைக்கில் அவர் எழுதி வைத்த வாக்கியம்: “கடவுள் தாமதப்படுத்துவது என்பது தரவே மாட்டார் என்று அர்த்தம் அல்ல”
* பத்தாம் வகுப்பு தேறாத சச்சினின் சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படவில்லை.
* பணிச்சூழல், குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். இசையால் உயர்ந்தார். ஆஸ்கர் தேடிவந்தது.
* இந்தியாவில் முதியோர் சிகிச்சைத் துறையை உருவாக்கியவர் மூத்த மருத்துவர் வி.எஸ்.நடராஜன். மதிப்பெண் குறைவாக பெற்றதால் மறுதேர்வு எழுதிய பின்பே எம்.எம்.சி-யில் இடம் கிடைத்தது.
* ஸ்டீவ் ஜாப்ஸ். பள்ளிக் கல்வியில் மிக, மிக சுமார் ரகம். இவர்தான் பின்னாட்களில் ஆப்பிள் என்கிற நிறுவனத்தை உருவாக்கினார்.
* ஆறாவது கிரேடு தோல்வி அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில்தான் பின்னாட்களில் இங்கிலாந்தின் பிரதமர் ஆனார்.
* பதினாறு வயதில் படிப்பு பிடிக்காமல் உதறிய வால்ட் டிஸ்னி அள்ளியது ஆறு ஆஸ்கர் விருதுகள்.
* முதல் வகுப்புடன் ‘டாமி படிக்க லாயக்கில்லை’ என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட எடிசன்தான் இன்று எல்லோர் வீட்டில் ஒளி விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்.
* பள்ளி படிப்பில் தோல்வி அடைந்த ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்ததுதானே விமானம்.
* டார்வினை அவருக்கு பிடிக்காத மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட்டனர். மயக்க மருந்து இல்லாமல் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதைப் பார்த்து பயந்து படிப்பை உதறியவர், பின்னாளில் தனக்கு பிடித்த பரிணாமவியல் தந்தை ஆனார்.
* அலெக்சாண்ட்ரே குஸ்தவ் ஈஃபிள். பொறியியல் படிக்க விரும்பி விண்ணப்பித்தார். தகுதி இல்லை என்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பின்னாட்களில் அவர் கட்டியதுதான் ஈஃபிள் டவர் மற்றும் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை.
* ஐன்ஸ்டின் மற்றும் எடிசன் ஆகியோர் கற்றல் குறைபாடு (Dyslexia) கொண்ட குழந்தைகள். இவர்கள் இல்லை எனில் பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாத்தியம் இல்லை