வியாழன், 9 ஜூலை, 2015

அடுக்கக விதிகளை விரிவுபடுத்துவோம்

வெளிநாடுகளில் இருப்பதுபோன்ற கட்டுமான விதிகள் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
கடந்த ஆண்டு ஜூன் 28 அன்று அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. 61 பேர் பலியாயினர். மவுலிவாக்கம் என்ற பெயர் சென்னையைத் தாண்டி, இந்தியாவைக் கடந்து, உலக நாக்குகளில் புரண்டது.
இந்த விபத்துக்கு விதிமீறல்கள்தான் காரணம் என்றனர் சிலர். சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கான ஒப்புதல்கள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ) ‘வளர்ச்சி விதி’களின்படி வழங்கப்படுகின்றன.
மனை அமைந்திருக்கும் சாலையின் அகலத்தைப் பொறுத்து, கட்டிடத்தைச் சுற்றிலும் இடைவெளிகள் இருக்க வேண்டும். மனையின் பரப்பைப் பொறுத்து கட்டுமானப் பரப்பு நிர்ணயிக்கப்படும். இன்னும் வாகன நிறுத்தம், கட்டிடத்தின் உயரம், மழை நீர் சேகரிப்பு போன்ற பலவும் விதிகளில் இடம்பெறுகின்றன.
இந்தியாவின் பிற நகரங்களிலும் இவ்வாறான ‘வளர்ச்சி விதிகள்’ அமலில் உள்ளன. மவுலிவாக்கம் கட்டிடத்துக்கு இந்த விதிகளின்படியே ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பிறகு எங்கே தவறு நேர்ந்தது? விபத்து நடந்த உடனேயே ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம், பொதுப்பணித் துறை ஆகிய நிறுவனங்களின் வல்லுநர்கள் குழுவில் இடம்பெற்றனர். அவர்கள் கண்டறிந்த சில குறைபாடுகள் வருமாறு: கான்கிரீட்டின் அடர்த்தி குறைவாக இருந்தது. இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட ஊடுகம்பிகள் தரம் தாழ்ந்தவையாக இருந்தன. அடித்தளம் அமைக்கப்பட்ட ஆழத்தில் மண்ணின் தாங்குதிறன் போதுமானதாக இல்லை. முக்கியமாக, வாகனங்கள் நிறுத்துவதற்கான கீழ்த்தளத்தில் வரைபடத்தில் காட்டப்பட்டிருந்த சில தூண்கள் கட்டப்படவேயில்லை.
பொறியியல் வரைபடங்கள்
மவுலிவாக்கம் செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாயின. அவற்றை வாசித்த என்னுடன் பணியாற்றும் சீனப் பொறியாளர்களால் இதை நம்ப முடியவில்லை. வரைபடத்தில் உள்ள தூண்களை ஒப்புதல் இல்லாமல் எப்படி நீக்க முடியும் என்று கேட்டார்கள். ஹாங்காங்கில் இப்படி நடக்காது. வளர்ந்த நாடுகள் எங்கும் நடக்காது. ஏனெனில், அங்கெல்லாம் கட்டிடத்தின் விரிவான பொறி யியல் வரைபடங்களை அரசு அங்கீகாரம் பெற்ற கட்டமைப்புப் பொறியாளர் (ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயர்) சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்ற 11 மாடி அடுக்ககத்துக்குச் சுமார் 200 பொறியியல் வரைபடங்கள் வேண்டிவரும். தளங்கள், உத்தரங்கள், தூண்கள், அடித்தளங்கள் முதலான அனைத் துக் கட்டமைப்பு உறுப்புகளின் விவரங்களும் வரைபடங் களில் இடம்பெறும். இத்துடன் விரிவான கணக்கீடுகளும் மண் பரிசோதனை அறிக்கைகளும் சமர்ப்பிக்க வேண்டும். கட்டிடம் முறையாகக் கட்டப்படுகிறதா என்று கண்காணிக்கிற பொறுப்பும் பொறியாளருக்கு உண்டு.
ஆனால், இவை எதுவும் சென்னையில் மட்டுமில்லை, இந்திய நகரங்கள் பலவற்றிலும் கட்டாயமில்லை. மேற்குறிப் பிட்ட ‘வளர்ச்சி விதி’களின்படி திட்ட வரைபடங்களைக் கட்டிடக் கலைஞர் (ஆர்கிடெக்ட்) சமர்ப்பிப்பார். அதனடிப் படையில் ஒப்புதல் வழங்கப்படும். இந்தியாவில் பொறியியல் வரைபடங்கள் கோரப்படுவதில்லை. கட்டிடத்தின் தரத்துக்கும் உரிமையாளரே பொறுப்பு. விரிவான விதிகள் இல்லாமல், எல்லா உரிமையாளர்களும் முறையாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?
மூன்று சம்பவங்கள்
இப்போதைய விதிகள் போதுமானவையல்ல என்பதற்கும் பொறியியல் வரைபடங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பதற்கும் சமீபத்தில் நடந்த மூன்று சம்பவங்களைக் குறிப்பிடலாம்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சி.எம்.டி.ஏ., கட்டிடக் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தது. ஒரு கட்டிடத்தின் பணி நிறைவடையும்போது கட்டிடக் கலைஞர் கட்டமைப்பு பொறியாளருடன் இணைந்து கட்டிடம் வலுவானது என்று சான்றளிக்க வேண்டும் என்பதே அது. இந்தியக் கட்டமைப்புக் கழகம் (ஐ.ஐ.ஏ) இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்திய தேசிய கட்டிட விதித் தொகுப்பின்படி, கட்டிடக் கலைஞர்கள் கட்டமைப்பின் வலிமைக்குப் பொறுப்பேற்க வேண்டாம் என்பது அவர்கள் வாதம். அடுக்கக உரிமையாளர்கள் பலரும் பணி நடக்கும்போது தங்களை மேற்பார்வையிடப் பணிப்பதில்லை என்றும் சில கட்டிடக் கலைஞர்கள் தெரிவித்தனர். கட்டிடக் கலைஞரும் கட்டமைப்புப் பொறியாளரும் தரத்துக்குப் பொறுபேற்க வேண்டுமென்பது சரியானது. ஆனால், அதை நடைமுறைப்படுத்த விதிகளை விரிவுபடுத்த வேண்டும்.
இரண்டாவது சம்பவம் - இவ்வாண்டுத் தொடக்கத்தில் சி.எம்.டி.ஏ. 37 அடுக்ககங்களின் பணியை நிறுத்தி வைத்தது. குற்றங்கள் பாரதூரமானவை. அனுமதிக்கப்பட்ட தளங்களைக் காட்டிலும் கூடுதல் தளங்களைக் கட்டியது, அத்தியாவசியமான சில தூண்களை அகற்றியது போன்றவை. இவையெல்லாம் ஒப்புதல் வழங்கப்பட்ட திட்ட வரைபடங்களின் விதி மீறல்கள். பொறியியல் வரைபடங்கள் சமர்ப்பிக்கப்படாததால் அவற்றில் மீறல்கள் நடந்திருக்கின்றனவா என்பது தெரியவில்லை.
மூன்றாவது - இரண்டு மாதங்களுக்கு முன்னால் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தை எதிர்கொள்கிற விதத்தில் வடிவமைக்கப்படவில்லை என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தை மனித எத்தனத்தால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், அவை நிகழும் சாத்தியங்கள் உள்ள பகுதிகளைக் கணிக்க முடியும். அந்தப் பகுதிகளில் நிலநடுக்கத்தை நேரிடுகிற ஒசிவுத் தன்மையுடன் கட்டிடங்களை வடிவமைக்க முடியும். இந்தியா நான்கு நிலநடுக்கப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது- குறைவானது, மிதமானது, தீவிரமானது, மிகத் தீவிரமானது. சென்னை மிதமான பாதிப்புப் பகுதி. அடுக்ககங்கள் அதற்கேற்றாற் போல் வடிவமைக்கப்பட வேண்டும். அதைப் பரிசோதிக்க பொறியியல் வரைபடங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
படிப்பும் பயிற்சியும்
பொறியியல் வரைபடங்களைத் தயாரிப்பதற்கும், பணியை மேற்பார்வையிடுவதற்கும் தகுதி வாய்ந்த கட்டமைப்புப் பொறியாளர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். பொறியியல் படிப்பை முடித்ததும் ஒருவர் பொறியாளர் ஆகிவிடுவதில்லை. தொடர்ச்சியான படிப்பும் பயிற்சியும் தேவை. ஹாங்காங்கில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வடிவமைப்பிலும் களப்பணியிலும் அனுபவம் பெற்ற பொறியியல் பட்டதாரிகள் ஹாங்காங் பொறியாளர் கழகத்தின் தேர்வை எதிர்கொள்ளலாம். தேர்வு பெற்றவர்கள் கழகத்தின் உறுப்பினர்களாக முடியும். இவர்களில் விருப்பமுள்ளவர்கள் அரசு அங்கீகாரத்துக்கான அடுத்த கட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் கடுமையானவை. ஹாங்காங் அடுக்ககங்களுக்குப் பெயர் போனது. அவை நல்ல தரத்திலும் போதுமான பாதுகாப் போடும் கட்டப்படுவதற்கு விரிவான விதிமுறைகளும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தனியார் துறைப் பொறியாளர்களுக்கும் கட்டிடக் கலைஞர்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கும் பங்கும் முக்கியக் காரணிகளாகும். இவர்களுக்குப் பொறுப்பு உண்டு, அதிகாரம் உண்டு, தவறிழைத்தால் தண்டனையும் உண்டு.
தற்போது இந்தியப் பொறியியல் கழகத்தில் பொறியியல் பட்டமும் எட்டு ஆண்டு அனுபவமும் உள்ளவர்கள் உறுப்பினர்களாகிவிடலாம். கழகம், வளர்ந்த நாடுகளைப் போல் உறுப்பினராவதற்குத் தேர்வு முறையைக் கொண்டுவர வேண்டும். கழகத்தின் உறுப்பினர்களிலிருந்து தகுதியான பொறியாளர்களைத் தெரிவு செய்யலாம். இது நடைமுறைக்கு வரும்வரை மைய - மாநில அரசுகளின் பணியாளர் தேர்வாணையங்கள் கட்டமைப்புப் பொறியாளர்களுக்குத் தேர்வுகள் நடத்தலாம்.
விரிவான விதிகள்
அடுக்ககங்களுக்குப் பொறியியல் வரைபடங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். பணி நடைபெறும்போது கண்காணிப்பும் வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தத் தகுதிவாய்ந்த பொறியாளர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
‘இந்தியாவில் எல்லாவற்றுக்கும் விதிகள் உள்ளன; அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் சுணக்கம் உள்ளது’ என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், அடுக்ககங்களைப் பொறுத்தமட்டில் இப்போதுள்ள விதிகள் போதாது. அவற்றை விரிவுபடுத்த வேண்டும். அரசு நிறுவனங்களும் கல்வி நிலையங்களும் பொறியியல் கழகங்களும் இது குறித்துச் சிந்திக்க வேண்டிய தருணமிது. மவுலிவாக்கத்தின் நினைவுநாள் அதற்குத் தொடக்கம் குறிக்கட்டும்.
- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்,

சாதிவாரியிலான தகவல்களை உடனே வெளியிட வேண்டும்!

தகவல் என்பது அறிவு அல்ல என்று சொல்வார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். உண்மைதான். அதேசமயம், தகவல் ஒரு பெரும் அரசியல். சொல்லப்படும் தகவல்களைவிட சொல்லப்படாத தகவல்கள் கூடுதல் அரசியல் பெறுமதி உடையவை. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, சாதிவாரியாக நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் விவரங்களைச் சமூகப் பின்னணியுடன் வெளியிடுவதில் மோடி அரசுக்கு என்ன சிக்கல்?
நேற்று முன்தினம் ‘வெல்த் எக்ஸ்’ நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. “அடுத்த மூன்று ஆண்டுகளில் - 2018-ல் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 4.37 லட்சமாக உயரும்” என்றும் “இந்த எண்ணிக்கை அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளில் - 2023-ல் அப்படியே இரட்டிப்பாகும்” என்றும் தெரிவிக்கிறது அந்த ஆய்வறிக்கை. இது நடக்கச் சாத்தியமற்ற கதை அல்ல என்பதற்குச் சில மாதங்களுக்கு முன் வெளியான ‘நியூ வேர்ல்ட் வெல்த்’ அமைப்பின் ஆய்வறிக்கை ஒரு சான்று. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு வேகமாக அதிகரித்திருக்கிறது என்பதைப் பட்டியலிட்ட அந்த ஆய்வறிக்கை பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை புணேவில் மட்டும் 317% அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டியது.
ஒருபக்கம் நாடு வளர்கிறது, பொருளாதாரம் மேல் நோக்கி எழுகிறது என்றெல்லாம் இதுபோன்ற தகவல்கள் வாயிலாக நமக்குச் சொல்லப்படும் சூழலில்தான், மறுபக்கம் தலைகீழான வேறு தகவல்களும் வெளியாகின்றன. எந்த அரசாங்கம் பொருளாதாரம் மேலே போய்க்கொண்டிருப்பதாகச் சொல்கிறதோ, அதே அரசாங்கம் தொகுத்த தகவல்கள் அமிலச் சொட்டுகளாக நம் மீது விழுந்து அதிரவைக்கின்றன.
சரிபாதி வறிய இந்தியா
இந்தியாவின் ஆன்மா எங்கிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமோ, அந்தக் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 49% பேர் வறுமையில் இருக்கிறார்கள் என்கிறது. இந்திய அரசின் ‘சமூகப்பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு 2011'-ன் அறிக்கை. கிராமப்புற இந்தியாவில் உள்ள 17.91 கோடிக் குடும்பங்களில், 10.08 கோடிக் குடும்பங்களுக்கு (56%) சொந்தமாக ஒரு பிடி நிலம் கிடையாது. 13.34 கோடிக் குடும்பங்கள் (74.5%) ரூ.5000-க்கும் குறைவான வருமானத்திலேயே பிழைக்கின்றன. 9.16 கோடிக் குடும்பங்கள் (51%) வருமானத்துக்கு உடல் உழைப்பு வேலைகளையே நம்பியிருக்கின்றன. 5.39 கோடிக் குடும்பங்கள் (30%) விவசாய வேலைகளை நம்பியிருக்கின்றன. 4.21 கோடிக் குடும்பங்கள் (23.5%) இன்னமும் எழுத்தறிவு அற்றவை. கிட்டத்தட்ட 2.37 கோடிக் குடும்பங்கள் (13.25%) சுற்றிலும் மண் சுவர் எழுப்பி, ஒப்புக்கு மேலே கூரைபோல மஞ்சம் புல்லையோ, தென்னை ஓலைகளையோ கொண்டு மூடிய, கதவுகள் அற்ற அல்லது கோணிச் சாக்கு போன்றவற்றைக் கதவுபோல மூடிய கச்சா வீடுகளிலேயே வசிக்கின்றன.
நகர்ப்புற இந்தியாவின் நிலைமை கொஞ்சம் மேம்பட்டது என்றாலும், அங்கும் அவலங்கள் வேறு முகங்களில் வெளிப்படுகின்றன. நகர்ப்புறங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 6.5 கோடிக் குடும்பங்களில், 65 லட்சம் குடும்பங்களை (10%) அடிப்படை வசதியான குடிநீர் வசதியே இன்னமும் எட்டவில்லை எனும் ஒரு தகவல் போதுமானது, நம்முடைய நகர்ப்புற ஏழைகளின் நிலையைச் சொல்ல. குடிநீரில் தொடங்கி குடியிருப்பு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என்று ஒவ்வொரு காரணிகளும் நகர்ப்புறப் பெரும்பான்மை இந்தியர்களை வேட்டையாடும் கதையைச் சொல்கின்றன.
யார் அந்தக் குப்பை பொறுக்கிகள்?
இந்தியச் சமூகக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நரம்புகளும் சாதிய அதிகார அடுக்குகளால் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் பிறக்கும் ஒரு குழந்தையின் உணவு, உடை, வாழ்விடம், கல்வி, தொழில், திருமணம், எதிர்காலம் என யாவுமே அந்தக் குழந்தையின் சாதியுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், சாதியின் பெயரால் காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களையும் பின்தள்ளப்பட்டவர்களையும் தூக்கிவிட இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக்கான வழிகளை நாம் தேடுகிறோம். ஆனால் உண்மையில், அரசின் சமூகநலத் திட்டங்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சென்றடைந்திருக்கின்றன? இதுவரை அளிக்கப்பட்டிருக்கும் சமூகநீதித் திட்டங்கள் எந்த அளவுக்குப் போதுமானவையாக இருந்திருக்கின்றன? இதற்கான நிச்சயமான பதில்கள் நம்மிடம் இல்லை.
டெல்லியில் மட்டும் 3 லட்சம் பேர் குப்பை பொறுக்கிப் பிழைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், வெளியிலிருந்து தம் வீட்டுக்கு வரும் ஒரு அலுவலரிடம், “என் குழந்தைகள் குப்பை பொறுக்குகிறார்கள்; அதை வைத்துத்தான் பிழைக்கிறோம்” என்றோ, “என்னுடைய வீட்டுக்காரர் பிச்சை எடுக்கிறார்; அதை வைத்துத்தான் நாங்கள் பிழைக்கிறோம்” என்றோ எத்தனை பேர் நம்முடைய சமூகச் சூழலில் சொல்லிவிடுவார்கள்? கிராமப்புற இந்தியாவில் குறைந்தது, 4.08 லட்சம் குடும்பங்கள் குப்பை பொறுக்கிப் பிழைப்பதாகவும் 6.6 லட்சம் குடும்பங்கள் பிச்சையை நம்பிப் பிழைப்பதாகவும் இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
சுதந்திரத்துக்கு 67 ஆண்டுகளுக்குப் பின்னரும் இடஒதுக்கீடு தேவையா என்று கேள்வி கேட்பவர்கள் இருக்கிறார்கள். பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டுக்குக் குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு 67 ஆண்டுகளுக்குப் பின்னரும், பிச்சையையும் குப்பையையும் பிழைப்புக்கு வழியாக நம்பி வாழ்பவர்கள் எந்தெந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய இந்நிலைக்கான அடிப்படையான காரணங்கள் என்ன, அந்தக் காரணங்களில் சமூகம்சார் காரணிகள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதெல்லாம் நமக்குத் தெரிய வேண்டாமா?
மத்திய - மாநில அரசுகள் செய்வதென்ன?
சாதிவாரியிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்பட்டால், இந்தியாவில் அழுத்தப்பட்ட மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது மட்டும் வெளிவரப்போவதில்லை; மாநிலங்களுக்கு மாநிலம் அவர்களுடைய நிலைமை எப்படியெல்லாம் மாறுபடுகிறது என்கிற விவரங்களும் வெளியே வரும். கூடவே, ஆதிக்க அரசியல்வாதிகளின் உண்மையான முகமும் வெளியேவரும்.
இதே காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் யுனிசெப் அமைப்பின் ‘குழந்தைகள் தொடர்பான துரித ஆய்வறிக்கை’யின் தரவுகள் இதற்குச் சரியான உதாரணம். அரசின் ஆய்வறிக்கையோடு, இந்த ஆய்வறிக்கையை ஒப்பிடும்போது குஜராத், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களின் குழந்தைகளைக் காட்டிலும் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் நிலை மேம்பட்டதாக இருப்பது தெரியவருகிறது. அதாவது, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை மோசம்; எல்லா மாநிலங்களிலும் பெரும்பாலும் அவர்கள் கடைசி அடுக்கிலேயே இருக்கிறார்கள் என்றாலும், மாநிலங்களுக்கு மாநிலம் அவர்களுடைய சமூகப் பொருளாதாரச் சூழலில் மாறுபாடு இருக்கிறது என்கிற உண்மையை ‘யுனிசெப்’ அறிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட குழந்தைகளைக் காட்டிலும் சத்தீஸ்கரில் உள்ள பெரும்பான்மைக் குழந்தைகள் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மை வெளியே வரும்போதுதான், முட்டை அரசியலின் முக்கியத்துவம் வெளியே வரும். தமிழகப் பள்ளிகளில் மதிய உணவில் ஐந்து முட்டைகள் வழங்கப்படுவதற்கும் சத்தீஸ்கரில் சைவத்தின் பெயரால் முட்டையே மறுக்கப்படுவதற்கும் பின்னணியிலுள்ள அரசியல் வெளியேவரும். ‘குஜராத் மாதிரி’ என்று வளர்ச்சிக்கு உதாரணமாகக் கொண்டாடப்பட்ட குஜராத்தைக் காட்டிலும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயர்ந்திருக்கும் உண்மை வெளியே வரும்போதுதான், எந்த வளர்ச்சி உண்மையான வளர்ச்சி, யாருக்கான வளர்ச்சி உண்மையான வளர்ச்சி எனும் சமூகநீதி அரசியலின் முக்கியத்துவம் வெளியே வரும்.
குடிநீர் முதல் சுடுகாடு வரை சாதி ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாட்டில், ‘சாதி மறுப்பு’ அல்லது ‘சமூக நல்லிணக்க நோக்கம்’ என்ற பெயரில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதிரீயிலான விவரங்களை மறைப்பது போன்ற அபத்தம் வேறு இல்லை. மோடி அரசு சாதிவாரியிலான தகவல்களை உடனே வெளியிட வேண்டும்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

புதன், 8 ஜூலை, 2015

வறுமையின் பிடியில் கிராமப்புறங்கள் - SECC Report

மத்திய அரசு வெளியிட்டுள்ள சமூக, பொருளாதார, சாதிக் கணக்கெடுப்பு (எஸ்.இ.சி.சி.) அறிக்கைகளின் முடிவுகள் கவலை தருகின்றன. 90% குடும்பங்களில் குடும்பத்தின் தலைவர் அல்லது யாராவது ஒருவர்கூட அதிகபட்சம் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பதில்லை. பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தலா ஒரு துண்டு நிலம்கூட இல்லை. பெரும்பாலானவர்கள் அன்றாட உடலுழைப்பில் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டுதான் குடும்பம் நடத்துகின்றனர். அந்த வருமானமும் நிரந்தரமல்ல. 20% குடும்பங்களிடம்தான் பைக் அல்லது கார் போன்ற வாகனங்கள் இருக்கின்றன. “இந்தியா வேகமாக வளர்ந்துவருகிறது, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் வல்லரசாகப்போகிறது” என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடுகிறவர்கள் சற்றே நிதானித்துப் பார்க்க வேண்டிய பல உண்மைகள் இந்த ஆய்விலிருந்து வெளிவருகின்றன.
கிராமப்புறக் குடும்பங்களை வறுமைக் கோட்டுக்கும் கீழிருந்து வெளியே தூக்கிவிடக்கூடிய வேலைவாய்ப்புகள் அரசிடமும் இல்லை, தனியாரிடமும் இல்லை. விவசாயத் துறையில் பெரும்பாலானவர் களுடைய வருமானம் பட்டினி இல்லாமல் கஞ்சி குடிக்கத்தான் இருக்கிறதே தவிர, மறு முதலீடு செய்து விவசாயத்தை வளப்படுத்தும் அளவுக்கு இல்லை. இயந்திரங்களின் பயன்பாடும் பாசன வசதிகளும் மிகமிகக் குறைவு. விவசாயத்துக்கான கடனுதவி மிகச் சிலருக்குத்தான் கிடைக்கிறது. கிராமங்களில் 3% குடும்பங்களில்தான் பட்டதாரிகள் இருக்கின்றனர்.
பெண்களே குடும்பத் தலைவர்களாக இருக்கும் குடும்பங்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் குடும்பங்களின் நிலைமை இன்னும் மோசம். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சமூக, பொருளாதார நிலைமை மிகவும் பின்தங்கி இருக்கிறது. முன்னேறிய மாநிலங்கள் என்று கருதப்படும் தமிழ்நாடு, கேரளம் ஆகியவற்றில்கூட கிராமப்புறக் குடும்பங்களின் வருவாய் குறைவு. நகர்ப்புற ஏழைகள் நிலைமை ஓரளவு பரவாயில்லை என்றாலும் குடிநீர், சுகாதாரம், குடியிருப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அதிர்ச்சிதரத்தக்க பல அம்சங்கள் நிலவுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் வழங்கியபோது, வறுமையை ஒழிக்க மாநிலங்கள் தங்களுக்கு வேண்டிய திட்டங்களை வகுத்துக்கொள்ள உதவும்வகையில் இந்தத் தரவுகள் உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது.
அரசுத் துறைகளில் உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்துவதே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உற்ற வழி. கிராமப்புற, நகர்ப்புற வீட்டுவசதித் தேவைகளைப் பூர்த்திசெய்வது, சாலைகள் அமைப்பது, குடிநீர் அளிப்பது, போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு, பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்றவற்றுக்கு அதிகம் செலவிட்டாலே ஏழைகளின் பெரும்பாலான தேவைகள் பூர்த்தியடையும். பொது விநியோகத் திட்டம், கிராமப்புற - நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவற்றை அனைவருக்கும் விரிவுபடுத்த வேண்டும். வறுமை ஒழிப்புத் திட்டங்களைத் தத்தமது தேவைக்கேற்ப மாநில அரசுகளே வடிவமைத்து நிறைவேற்ற சுதந்திரம் அளிப்பதுடன் போதிய நிதியையும் ஒதுக்க வேண்டும்.
சாதி அடிப்படையில் சமூக, பொருளாதார வளர்ச்சி எப்படி என்ற தகவலையும் ஊட்டச் சத்துக் குறைவு எப்படி இருக்கிறது என்ற தகவலையும் அரசு வெளியிட மறுக்கிறது. தர்மசங்கடத்தை விளைவிக்கக் கூடிய தரவுகளை அரசு மூடி மறைக்கக் கூடாது. அந்த விவரங்கள் மக்களிடையே கோபத்தையும் கடும் விவாதத்தையும் ஏற்படுத்தினாலும் அவற்றிலிருந்து நல்ல தீர்வுகளும் வழிகளும் பிறக்கக்கூடும். அப்போதுதான் இந்த ஆய்வின் நோக்கம் நிறைவேறும்

ஒபாமா-கேர்' திட்டம்

ஒபாமா-கேர்’ மருத்துவக் காப்பீட்டு மானியத் திட்டம் தொடர்பான விசாரணை முடிந்து, அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அளிப்பதற்கு முன்னால் இருக்கையின் நுனிக்கே வந்துவி்ட்டேனா? இல்லை; அறையின் குறுக்கிலும் நெடுக்கிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தேன்; உட்காரக்கூட முடியாத அளவுக்குப் பதற்றமாக இருந்தேன்; லட்சக் கணக்கானவர்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்க முடியாதபடிக்கு நீதிமன்றம் எதையாவது கூறிவிடுமோ, ஆயிரக் கணக்கானவர்களுக்கு மிகுந்த பணச் செலவு ஏற்பட்டு ஓட்டாண்டிகளாகும் அளவுக்கு எதையாவது சொல்லிவிடுமோ, ஆயிரக் கணக்கானவர்கள் சிகிச்சை பெற முடியாமல் தங்களுடைய ஆயுள் முடிவதற்கு முன்னாலேயே மேலுலகு செல்லுமளவுக்குத் தீர்ப்பு இருந்துவிடுமோ என்று அஞ்சினேன்.
ஆனால், தீர்ப்பு அப்படியெல்லாம் வந்துவிடவில்லை. சட்டபூர்வமாக இந்தத் திட்டத்தை நாசப்படுத்தும் முயற்சிகளும் இணையதளங்கள் வாயிலாக இந்தத் திட்டத்துக்கு எழுந்த கண்டனங்களும் இப்போது பழங்கதையாகிவிட்டன. சுகாதாரச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் கவனம் செலுத்த முடியும். ஒரே சமயத்தில் அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவையையும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ இன்சூரன்ஸையும் அளிக்கக் கொண்டுவரப்பட்டது ‘ஒபாமா-கேர்’ திட்டம். குறைந்த வருவாய்ப் பிரிவினரை அதிக எண்ணிக்கையில் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதே அரசின் லட்சியம். இந்தத் திட்டம் அமலுக்கு வந்து ஓராண்டு பூர்த்தியாகிவிட்டது. இரண்டாவது ஆண்டில் இது எப்படி அமலாகிறது?
இதன் ஆதரவாளர்களால் உணரப்பட்டதைவிட நன்றாகவே அமலாகிக்கொண்டிருக்கிறது. இந்தச் சட்டத்தின் அடிப்படையான நோக்கத்திலிருந்து ஆரம்பிப்போம்; இதுவரை மருத்துவ இன்சூரன்ஸ் காப்பு பெறாதவர்களைக்கூட இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருவதே இதன் நோக்கம். ‘இதனால் பலன் பெறுவோர் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிடக் குறைந்துவிடும்’ என்று இந்தத் திட்டத்தை எதிர்த்தவர்கள் சொன்னார்கள். உண்மை என்னவென்றால், 1.5 கோடிப் பேர் புதிதாக மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்துக்குள் வந்தார்கள்.
ஓரளவுக்குத்தான் பலனா?
இன்னும் பல லட்சம் பேர் இந்தத் திட்டத்தின் கீழ் வராதபோது இது ஓரளவுக்குத்தான் பலன் தரும் திட்டம் என்ற விமர்சனம் சரிதானா? இல்லை, இந்தத் திட்டத்தின் கீழ் பல லட்சம் பேர் வராமல் இருப்பதற்குக் காரணம், அவர்கள் வசிக்கும் மாகாண அரசுகள், ஃபெடரல் அரசு (மத்திய அரசு) கொண்டுவந்த திட்டத்தின் கீழ் சேர்ந்துகொள்ள அவர்களுக்கு அனுமதி மறுத்ததால்தான். அத்துடன் அந்தச் சட்டமே எல்லோரையும் அதன் வரம்புக்குள் கொண்டுவருவதற்காகக் கொண்டுவரப்பட்டது அல்ல. உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் குடியேறியோருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் வழங்க அது கொண்டுவரப்படவில்லை. அனைவருக்கும் இன்சூரன்ஸ் என்று அறிவிக்காததால், சில பிரிவினர் அதன் பலனைப் பெற முடியாமல் தனியே நிற்பது தவிர்க்க முடியாதது. மசாசூசெட்ஸ் மாகாணத்தில் கடந்த 10 ஆண்டு களாக அனைவருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் அமலில் இருக்கிறது. ஆனால், அதன் மக்கள்தொகையில் முதுமையை எட்டாத வயதினரில் 5% பேர் அத்திட்டத்தின் கீழ் வராமல் விடுபட்டுப்போகின்றனர்.
இதையே ஒரு அடையாளமாக வைத்து, ‘ஒபாமா-கேர்’ மூலம் பலன் அடைவோர் எவ்வளவு என்று பார்க்கலாம். அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்ட முதலாவது ஆண்டில் அதன் வரம்பின் கீழ் வராதோரின் எண்ணிக்கை 16% ஆக இருந்தது. இரண்டாவது ஆண்டில் அது 7.5% ஆகக் குறைந்துவிட்டது. அதாவது, இரண்டாவது ஆண்டிலேயே நாம் 80% பேருக்குப் பயன்களை வழங்கிவிட்டோம்.
எந்த அளவுக்குப் பயன்?
இத்திட்டம் எந்த அளவுக்குப் பலன் அளித்திருக்கிறது. மிகவும் மலிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்கள், பல நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது என்று நழுவிவிடும். இதனால் அந்தத் திட்டத்தின் வரம்பில் வராத நோய்கள் ஏற்பட்டால் பாலிசிதாரர் தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்துகொள்ள வேண்டும். ஆனால் ‘ஒபாமா-கேர்’ திட்டமானது, இன்சூரன்ஸே செய்யாத நிலைமையைவிட மேலானது. ஒன்றிரண்டு நோய்களுக்கு மட்டும் இன்சூரன்ஸ் தரும் திட்டங்கள் சட்ட விரோதம் என்று அரசு அறிவித்திருக் கிறது. அப்படியும் அதையொட்டிய சில திட்டங்கள் இப்போதும் அமலில் இருக்கின்றன. அதைவிட ‘ஒபாமா-கேர்’ திட்டம் பலனுள்ளது. புதிய திட்டம் காரணமாக நோய்வாய்ப்படும் பலருக்கு ஏற்படும் நிதி நெருக்கடி குறைந்திருக்கிறது. பெரும் பாலானோர் புதிய திட்டம் குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர்.
செலவுகள் எப்படி?
இந்தத் திட்டத்தில் சேருவோருக்கு ஏற்படக்கூடிய செலவுகள் எப்படியிருந்தன? 2013-ல் இந்தத் திட்டம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது பலரும் எச்சரித்தனர். இந்தத் திட்டம் காரணமாக இனி அமெரிக்காவில் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துகொள்வதற்கான செலவு பலமடங்கு அதிகரித்துவிடும் என்று. ஆனால், நடந்தது என்னவோ வேறு; பல்வேறு நிறுவனங்களும் மருத்துவக் காப்பீட்டுக்கான சந்தா தொகையைக் குறைக்கத் தொடங்கின. இந்த ஆண்டு சரி, 2015-ல் எல்லா நிறுவனங்களும் சந்தாவை அதிகரித்துவிடும் என்று 2014-ல் எதிர்ப்பாளர்கள் அறிவித்தனர். 2015-ல் உயர்ந்தது, ஆனால் அது வெறும் 2% அளவுக்குத்தான். இப்போதும் அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. 2016-ல் ஏறத்தான் போகிறது என்று எச்சரிக்கிறார்கள். உண்மைதான், ஏறும் - ஆனால் மிதமாகத்தான் அந்தச் சுமை இருக்கும். அதாவது, இன்சூரன்ஸ் திட்டங்களுக்கான பிரீமியம், எதிர்பார்க்கும் அளவைவிடக் குறைவாக, மிதமாகத்தான் உயரும்.
அத்துடன் ஒட்டுமொத்தமாக சுகாதாரத்துக்காகச் செலவிடும் தொகை கணிசமாகக் குறைந்திருக்கிறது. மருத்துவத்துக்கு ஆகும் செலவு கட்டுப்படுத்தப்பட்டது ஒரு காரணம், மருத்துவ சேவையை அதிகம்பேருக்கு அளித்தது மற்றொரு காரணம்.
பொருளாதாரப் பக்க விளைவுகள் என்ன?
‘ஒபாமா-கேர்’ திட்டம் அமலாக வாக்களித்தால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலர் எச்சரித்தனர். ஆனால், அரசு திரட்டிய தரவுகளை ஆராய்ந்தபோது, இத்திட்ட அமலால் எந்தத் துறையிலும் பெருமளவு வேலைவாய்ப்பு குறைந்ததாகத் தெரியவில்லை. மாறாக, மாதந்தோறும் சராசரியாக 2,40,000 வேலைவாய்ப்புகள் பெருகின. 1990-களிலிருந்து பார்க்கும்போது இந்த அளவுக்கு வேலைவாய்ப்புகள் பெருகியிருக்கவில்லை.
இறுதியாக, இந்தச் சுகாதார சீர்திருத்த நடவடிக்கையால் அமெரிக்க வரவு-செலவு திட்டத்தில் பற்றாக்குறை பல மடங்காக உயர்ந்துவிடும் என்று எச்சரித்தார்களே அது என்னவாயிற்று? உண்மையில் பற்றாக்குறை குறையத்தான் ஆரம்பித்தது. ‘ஒபாமா-கேர்’ திட்டத்தை ரத்து செய்தால்தான் பற்றாக்குறை அதிகரிக்குமே தவிர, அமல்படுத்தினால் அல்ல என்று நாடாளுமன்றத்தின் பட்ஜெட் தொடர்பான அலுவலகம் சமீபத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.
இந்த அம்சங்களையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது, எதிராளிகள் எவ்வளவோ எச்சரித்தும், கூடாது என்று முட்டி மோதிப் பார்த்தும் ஏழை - எளியவர்களுக்கும் சுகாதார இன்சூரன்ஸை விரிவுபடுத்தும் ‘ஒபாமா-கேர்’ திட்டமானது எல்லா வகைகளிலும் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை களையே செய்திருக்கிறது. அது தன்னுடைய இலக்கைப் பூர்த்திசெய்துவிட்டது. அதற்கான செலவு எதிர்பார்த்தபடி அதிகரிக்காமல் கட்டுக்குள்ளேயே இருந்தது. அதைவிட, கோடிக் கணக்கான அமெரிக்கர்களுக்குத் தரமான மருத்துவ வசதிகளும் நிம்மதியும் கிடைக்க உதவியிருக்கிறது.
விஷம் கக்கியது ஏன்?
கோடிக் கணக்கான மக்களுக்கு நன்மையை அளித்த ஒரு சட்டத்துக்கு ஏன் அரசியல்ரீதியாக இந்த அளவுக்கு விஷம் கக்கினார்கள் என்று உங்களுக்கு வியப்பு ஏற்படலாம்! வலதுசாரிக் கட்டுப்பெட்டிகளான குடியரசுக் கட்சிக் காரர்கள் ஒரே ஒரு விஷயத்துக்குத்தான் அஞ்சினார்கள்; அது என்னவென்றால், ‘அரசாங்கம் நேரடியாக நடவடிக்கை எடுத்தால், அது மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத் திவிடும் என்பது மக்களுக்குப் புரிந்துவிடும்’ என்பதற்காகத்தான்.
இதே காரணத்துக்காகத்தான் 1993-ல் கிளிண்டனின் சுகாதாரத் திட்டத்தை அழிக்க முற்பட்டார்கள்; அதையே ஒபாமாவின் திட்டத்துக்கும் செய்ய முற்பட்டார்கள். ஆனால், அந்த முயற்சி தோற்றுப்போய், திட்டம் பிழைத்துக்கொண்டது. இப்போது திட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கட்டுப்பெட்டிகளுக்கு இனி ‘உறங்கா இரவுகள்’ காத்திருக்கின்றன. அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியை நினைத்தாலே நெஞ்சுக்குள் இனிக்கிறது!
© ‘நியூயார்க் டைம்ஸ்’ தமிழில் சுருக்கமாக: சாரி

செவ்வாய், 7 ஜூலை, 2015

அறிவியல் உலகிலும் பாலியல் பாகுபாடு!

ஏதேனும் மூன்று தொழில்நுட்ப ஜாம்பவான்களின் பெயர்களைச் சொல்லும்படி உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். அவர் உதிர்க்கும் பெயர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க், ஜெஃப் பெசாஸ், லாரி பேச், செர்கே பின் இப்படியாகத்தான் இருக்கும். தப்பித்தவறிக்கூட ஒரு பெண்ணின் பெயரை அவர் சொல்லப்போவதில்லை.
தொழில்நுட்பம் என்பதே ஆண்களின் கோட்டையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. உலகின் முதல் புரொகிராமர் ஒரு பெண். அறிவியல்ரீதியாகக் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்தவர் ஒரு பெண். அவர்தான் அடா லவ்லேஸ். அதே போல நெட்வொர்க் கம்பியூட்டிங்கில் அடிப்படையான ஸ்பானிங் ட்ரீ புரோட்டோகாலைக் கண்டுபிடித்தவர் ராடியா பெர்ள்மேன். அவ்வளவு ஏன், இணையதள புரோட்டோகாலைக் கண்டுபிடித்ததே ஜுடித் எஸ்ட்ரின் எனும் பெண்மணிதான்.
லவ்லேஸ், பெர்ள்மேன், எஸ்ட்ரின் என்பவை நாம் கேள்விப் படாத பெயர்களாக இருப்பதற்குக் காரணம் என்ன? எத்தகைய உள்நோக்கமும் இன்றி வெறும் கவனக்குறைவினால் விடுபட்டுப்போன பெயர்களா இவை? அப்படி ஒருபோதும் நம்பிவிட வேண்டாம் என வாதாடுகிறது ‘லீன் அவுட்: தி ஸ்டிரகிள் ஃபார் ஜெண்டர் ஈகுவாலிட்டி இன் டெக் அண்ட் ஸ்டார்ட்-அப் கல்சர்’ எனும் புத்தகம். அமெரிக்கப் பெண் தொழிலதிபரான எலீசா ஷவின்ஸ்கி, பல்வேறு பெண் தொழில்நுட்பக் கலைஞர்களின் 25 கட்டுரைகளைத் தொகுத்து இப்புத்தகத்தைப் படைத்துள்ளார். அடுத்த மாதம் இந்நூல் வெளிவர உள்ளது.
‘இணையத்தை உருவாக்கியவர்கள் ஆண்களே!’ என ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளிவந்த சர்ச்சைக்குரிய கட்டுரையின் வரிகளை எழுதிவிட்டு, அதன் அருகிலேயே ‘இந்தக் கட்டுக்கதை அப்பட்டமான பொய்’ என்ற வாசகத்துடன் இந்நூலைத் தொடங்குகிறார் ஷவின்ஸ்கி. “ஆப்பிள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களில் அளப்பரிய பங்காற்றியவர்கள் பெண்களே. அவர்களுடைய பங்களிப்புகளைத் தடயமின்றி அழித்துவிட்டார்கள் மார்க் சக்கர்பெர்க், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற ஆண்கள். அவ்வாறு மறைக்கப்பட்ட வரலாற்றை வெளியுலகுக்கு உரக்கச் சொல்வதுதான் ‘லீன் அவுட்’ எனும் இப்புத்தகத்தின் நோக்கம்.
எலீசா ஷவின்ஸ்கியின் ‘லீன் அவுட்’ புத்தகம் ஃபேஸ்புக் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க்கின் எழுத்துக்கு விடப்பட்ட சவால் எனலாம். ஷெரில் சாண்ட்பர்க் எழுதி பரபரப்பாக விற்பனையான நூல் ‘லீன் இன்: விமன், வொர்க், அண்ட் தி வில் டூ லீட்’. இதில் பெண்கள் பணியிடங்களில் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் அவர்களேயன்றி, சமூகக் கட்டுப்பாடோ அரசியல் சூழ்ச்சியோ அல்ல என்றார் சாண்ட்பர்க். குடும்பத்துக்காக உழைக்கப் பிறந்தவர்கள்தான் பெண்கள் எனத் தங்களைப் பற்றித் தாங்களே நினைத்துக்கொள்பவர்கள் பெண்கள்தான். இதனால்தான் அவர்களால் தொழில்ரீதியாக உச்சத்தை எட்ட முடிவதில்லை. இதற்குத் தீர்வு பெண்கள் அவர்களுடைய தொழிலில் மூழ்க வேண்டும். ஆனால், ஷெரில் முன்வைக்கும் இந்தக் கூற்றை ‘லீன் அவுட்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் முற்றிலுமாக மறுக்கின்றன.
கற்பனையான திறமைசாலிகள்
‘வெள்ளை நிற ஆண் தொழிலாளர்கள் மட்டுமே முன்னுதாரணமான தொழில்நுட்ப மேதைகள்’ எனும் நம்பிக்கையை அடித்து நொறுக்குகிறார்கள் ‘லீன் அவுட்’ புத்தகத்தின் கட்டுரையாளர்கள். அவர்களில் ஒருவர்தான் ஓரினச் சேர்க்கையாளர், திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட விளிம்பு நிலையினரின் உரிமையை விவாதிக்கும் பெண்ணியவாதியான கேத்தரின் கிராஸ். பணிச் சூழலில் பாலியல் பாகுபாட்டை விவாதப் பொருளாக்குகிறது கேத்தரின் கட்டுரை. மேலோட்டமான பார்வைக்கு பால், நிற வேறுபாடு அற்ற ஆரோக்கியமான தளம்போலத் தொழில்நுட்ப உலகம் தோன்றலாம். ஆனால், அதன் பிறப்பிடமே ஆணாதிக்கம்தான் என்கிறார் கேத்தரின்.
அடுத்தபடியாக, ஜெஸ்சே ஹாஸின் ‘பாலுறவுப் பாகுபாடுபற்றிப் பேசலாம் வாங்க!’ எனும் கட்டுரையும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் தொழில்நுட்ப உலகில் கொடிகட்டிப் பறக்கும் 96.5% பேர் ஆண்களே என்கிறார் ஜெஸ்சே. அது ஏன் என்பதைக் காட்டும் சம்பவம் இதோ. “ஹே ஜி, உன்னுடன் உடலுறவு கொள்ளாமல் நான் பெர்லினை விட்டுப் போக மாட்டேன். என்ன சொல்கிறாய்?”- இப்படி பெர்லினில் நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்கம் ஒன்றில் ஒரு பெண் பங்கேற்பாளரிடம் ஒரு பெரும்புள்ளி முதலீட்டாளர் கேட்டார்.
இதில் ‘ஜி’என்பது ஜெஸ்சே ஹாஸ்தான். அதிகாரம் செலுத்தும் கருவியாகப் பாலியல் எவ்வாறு பிரயோகிக்கப்படுகிறது என்பதை அழுத்தமாக விவாதிக்கிறார் ஜெஸ்சே. பாலியல் துன்புறுத்தல் அதன் ஒரு முகம் மட்டுமே என்கிறார் அவர். இப்படிப் பல காரணங்கள் பணிச் சூழலில் பெண்களின் வேலையை, பதவி உயர்வை, இழப்பீட்டை நிர்ணயிக்கின்றன.
ஆண் புரொகிராமர்களின் கலாச்சாரம், இணைந்து வேலைபார்க்கும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களின் பிரச்சினைகள் இப்படி ஆழமான தனிப்பட்ட அனுபவங்களையும் பரந்துபட்ட சிக்கல்களையும் பேசுகின்ற கட்டுரைகளின் தொகுப்பாக ‘லீன் அவுட்’ புத்தகம் உள்ளது. சேண்ட்பர்க்கின் ‘லீன் இன்’ புத்தகத்துக்கு நேர் எதிர்த் திசையில் ஷெவின்ஸ்கியின் ‘லீன் அவுட்’ புத்தகம் நிற்பதற்கு முக்கியக் காரணம், ஷெவின்சி பெண்களை வெளியே அழைக்கிறார்.
தங்களுக்கு உண்மையாக இருக்கும்படி அழைப்புவிடுக்கிறார். ஆண்கள் வடிவமைத்து அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலுக்குள் பெண்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்ளக் கூடாது. இனியும் மவுனம் சாதிக்காமல் வாய்விட்டுப் பேச வேண்டும். பிரச்சினையைத் தவிர்க்காமல் நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். ஆண் பிள்ளைகளில் ஒருவராக இல்லாமல், தெறித்து வெளியே வர வேண்டும் என அறைகூவல் விடுக்கிறார் ஷெவின்ஸ்கி.
அமெரிக்காவில் உள்ள சிலிகான் வேலியை மனதில் வைத்து எழுதப்பட்ட நூலாக ‘லீன் அவுட்’ இருந்தாலும் அதன் விவாதப் பொருள் இந்தியா உட்பட ஒட்டுமொத்த உலகுக்கும் பொதுவானதுதான்.
கொஞ்சமும் சளைக்காத இந்தியா
இந்தியாவின் தொழில்நுட்பக் கலாச்சாரமும் இதே போன்றுதான் உள்ளதா? இதற்கு சரியான பதில், இந்தியப் பெண் தொழில்நுட்பத் தொழிலதிபர்களிடம்தான் கிடைக்கும். ஆனால், அவர்களுடைய பதில் குழப்பமடையச் செய்கிறது.
“நிச்சயமாக! இந்தியாவில் நடத்தப்படும் பெருவாரியான தொழில்நுட்பச் சந்திப்புகள் ஆண்களால் நிரம்பிவழிகின்றன. ஒரு பெண் பேச்சாளர்கூட இல்லாமல் எப்படித் தொழில் கூட்டங்கள் நடத்த முடியும் என நான் அடிக்கடி கேட்பதுண்டு” என்கிறார் மேட் ஸ்ட்ரீட் டென் எனும் நிறுவனத்தின் துணை இயக்குநரான அஷ்வினி அசோகன். ஒன்பது வருடங்களாக சிலிகான் வேலியில் வேலை பார்த்த அனுபவம் மிக்க அஷ்வினி தொழில்நுட்ப அலுவலகச் சூழலைப் பொறுத்தவரை மேற்கத்திய நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது. ஆனால், அது வெளிப்படையாக இல்லை என்கிறார்.
“குறிப்பாக, இந்தியாவில் சமத்துவத்தை நிலை நாட்ட யாரும் போராடுவதில்லை. எங்களுடைய மிகப் பெரிய பிரச்சினையே எப்படி வீட்டை விட்டு வெளியே வருவது என்பதுதான்” என்கிறார்.
அஷ்வினியின் கூற்றை வழிமொழிகிறார் அமெரிக்கா சென்று திரும்பியிருக்கும் தொழில்நுட்ப வல்லுநரான பெங்களூருவைச் சேர்ந்த மைனா பிசிநீர். “இந்தியாவைப் பொறுத்தவரை பெண் பிள்ளைகள் படித்து முடித்துவிட்டு, வேலையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே பெரும் எண்ணிக்கையில் பெண்கள் இடைநின்றுபோகும் நிலை உள்ளது. அடுத்து, திருமணம் ஆனதும் மேலும் பலர் இடைநின்றுபோகிறார்கள். அடுத்து, குழந்தை பெற்றவுடன் மிக அதிக எண்ணிக்கையில் வேலையிலிருந்து இடைநின்றுபோகும் நிலை உள்ளது. ஆகையால், பணியிடத்தில் தலைமைப் பொறுப்புக்குப் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கையே மிகவும் சொற்பம்தான்.”
அஷ்வினியும் மைனாவும் ஒருசேர ‘லீன் அவுட்’ வெளிப்படுத்தும் தத்துவத்தை முன்மொழிகிறார்கள். ஆனால், அதற்குத் தொழில்துறையின் தற்காலப் பணிச் சூழல் முதலில் மாற்றப்பட வேண்டும். அப்படியானால் எங்கிருந்து தொடங்குவது?
“முதலாவதாக, உங்கள் அலுவலகத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கென்று ஒரு அறை ஏற்படுத்திக் கொடுங்கள். இரண்டாவதாக, குழந்தைகளைப் பராமரிக்க ஏதுவான சூழலை ஏற்படுத்தித் தாருங்கள். மூன்றாவதாக, தொடர்ந்து அலுவலக நிகழ்ச்சிகள் நடத்தும்போது அவை பகல் வேளைகளில் நடத்தப்பட வேண்டும். நான்காவதாக, அலுவலகக் கூட்டங்களை ஒருங்கிணைக்கும் போது குறைந்தபட்சம் ஒரு பெண் உறுப்பினராவது அந்தக் குழுவில் இடம்பெற வேண்டும்” என்கிறார் அஷ்வினி.
இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை கூகுள் மற்றும் இண்டெல் நிறுவனங்கள் எடுத்துள்ளன என்பது நம்பிக்கை தரும் செய்தி. ஆனால், சுந்தர் பிச்சையும் சுந்தரியும் ஒரே ஆடுகளத்தில் விளையாட நெடுந்தொலைவு பயணிக்க வேண்டும் என்பது மட்டும் உறுதி!
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில்: ம.சுசித்ரா

திங்கள், 6 ஜூலை, 2015

ground water

உலக அளவில் நிலத்தடிநீர் வேகமாக வற்றிவருகிறது. வெவ்வேறு நாடுகளில் பரந்து விரிந்துள்ள பகுதிகளில் மிகப் பெரியவை என்று 37 நிலத்தடிநீர் இருப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மிகப் பெரிய கடல் என்று கற்பனை செய்யக்கூடிய அளவுக்கு நீர்வளம் பெற்றிருந்த இவற்றில் சரிபாதிக்கும் மேல் வேகமாக உறிஞ்சப்பட்டதால், மிக மோசமான அளவில் குறைந்துவிட்டன. மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை இனி 100% கடைப்பிடித்தால்கூட இந்த நிலத்தடிநீர்த்தேக்கங்கள் இனி நிரம்புவது சந்தேகம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கிரேஸ் என்ற செயற்கைக்கோள் கட்டமைப்பைப் பயன்படுத்தி, புவியைப் புகைப்படங்கள் எடுத்ததுடன் பல்வேறு நீர்ப்பயன்பாட்டுத் தரவுகளையும் பெற்று ஆராய்ந்து இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது உலக மக்களுக்கு மட்டுமல்ல, நாடுகளுக்கும் எச்சரிக்கை தரும் செய்தியாகும்.
உலகின் 37 மிகப் பெரிய நிலத்தடிநீர் இருப்புத் தேக்கங்களில் சுமார் 21 இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருக்கின்றன. இழந்த நீரைப் பெற மீண்டும் தங்களைத் தாங்களே வலுப்படுத்திக்கொள்ளும் திறனை இந்த நிலத்தடி நீர்த்தேக்கங்கள் இழந்துவிட்டன. இவற்றிலிருந்து 2003 முதல் 2013 வரையில் எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவைப் பெற்று நாசா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. 13 நிலத்தடி நீர்த்தேக்கங்கள் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டன. நிலத்தடிநீர் இருப்பு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது என்று கலிஃபோர்னியாவில் உள்ள நாசாவின் ஆய்வுக்கூட முதன்மை ஆய்வாளர் ஜே ஃபேமிகிளிட்டி புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி எச்சரிக்கிறார்.
நிலத்தடிநீரின் பங்கு 35%
உலக அளவில் மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் 35% நிலத்தடியிலிருந்து கிடைப்பவை. வறட்சிக் காலங்களில் அதிக ஆழத்துக்குத் துளையிட்டு தண்ணீரை மென்மேலும் உறிஞ்சி எடுக்கின்றனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஆற்று நீரும், நிலத்துக்கு மேலிருந்த நீர்நிலைகளும் அடியோடு வற்றிவிட்டதால் இப்போது நிலத்தடிநீரை ராட்சத ஜெட்டுகள் வைத்து உறிஞ்சி எடுக்கின்றனர். கலிஃபோர்னியாவில் இப் போது பயன்படுத்தப்படும் நீரில் 60% நிலத்தடிநீர்தான். சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பயன்பாடு அதிகபட்சம் 40% ஆகத்தான் இருந்தது. இந்த ஆண்டின் இறுதியில் கலிஃபோர்னி யாவில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொட்டுநீரும் நிலத்தடி நீராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலத்தடிநீர்ப் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பது மக்கள்தொகை மிகுந்த வளரும் நாடுகளில்தான். இந்தியாவின் வட-மேற்கு எல்லைப் பகுதிகளிலும் பாகிஸ்தானிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் இந்த நிலை காணப்படுகிறது. இங்கெல்லாம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மாற்று வழியில் நீரை வழங்க வேறு நீர் ஆதாரங்களே கிடையாது. இங்கு அடியோடு தண்ணீர் வற்றிவிட்டால் சமூக அமைதி குலைந்து அதனால் நிச்சயமற்ற நிலை ஏற்படும்.
நிலத்தடிநீர் அளவு குறைந்ததால், இப்பகுதிகளில் புவிஈர்ப்பு விசையிலும் லேசான மாற்றங்கள் ஏற்படுவதை நாசாவின் செயற்கைக்கோள்கள் பதிவுசெய்து அனுப்பியிருக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் ஏற்படக்கூடிய விளைவுகளில் இதுவரை இடம்பெற்றிராத, முக்கியமான நிகழ்வு இது. நாம் பேசிக்கொண்டிருப்பது வெறும் தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சினை மட்டுமல்ல என்பது மட்டும் புரிகிறது. நிலத்தடிநீர் நிரம்பிய பகுதிகளில் புவியின் அழுத்தம் அதிகமாகவும் நீர் குறைந்த பகுதிகளில் சற்றே குறைவாகவும் பதிவாகிறது.
புவியின் மிகப் பெரிய நீர்த்தேக்கங்கள் காலப்போக்கில் எப்படி மாற்றம் அடைகின்றன என்பதை ஆய்வுசெய்ய நமக்குக் கிடைத்துள்ள முதல் வாய்ப்பு இது என்று ஓரிகான் மாகாண பல்கலைக்கழக நீரியியல் துறை ஆராய்ச்சியாளர் கார்டன் கிராண்ட் கூறுகிறார்.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஏற்பட்ட தண்ணீர் திரட்சியால் உருவானவை இந்த நிலத்தடி நீர்த்தேக்கங்கள். இப்பகுதியில் அடர் மழை பெய்தாலும் அத்தனை நீரும் அப்படியே பூமிக்குள் இறங்கி இழப்பைச் சரி செய்துவிடுவதில்லை. மிகக் குறைவான அளவுக்கே நீர் உள்ளே கசிந்து இறங்குகிறது. எஞ்சியவை மேற்பரப்பில் தேங்கி பிறகு வழிந்தோடியோ ஆவியாகியோ காணாமல் போகிறது. பனி உருகும்போதும் மழை பெய்யும்போதும் கிடைக்கும் நீரில் மிகச் சிறிதளவுதான் இந்த நிலத்தடி நீர்த்தேக்கங்களில் போய்ச் சேருகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தண்ணீர் வேண்டும் என்றால், தரைக்கடியில் துளையிட்டு தண்ணீரை உறிஞ்சுவது உலகின் எல்லாப் பகுதியிலும் இப் போது வழக்கமாகிவிட்டது. ஆனால், காலவரம்பின்றி தன்ணீர் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று ஃபேமிகிளிட்டி சுட்டிக்காட்டுகிறார்.
நிலத்தடி நீர்த்தேக்க ஆயுள்
உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் நிலத்தடி நீர்த்தேக்கங்களின் ஆயுளானது அதன் மீது இருக்கும் மக்கள் தொகை, அவர்களுடைய தண்ணீர்ப் பழக்கம், தண்ணீரை எடுக்க அவர்கள் கையாளும் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பொருத்து வேறுபடுகிறது. உதாரணத்துக்கு, ஆஸ்திரேலியாவின் கேனிங் ஆற்றுப்படுகையானது உலகிலேயே நீர்வளத்தை இழப்பதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதேசமயம், ஆர்ட்டீஷியன் வடிநிலத்தில் உள்ள நிலத்தடி நீர்த்தேக்கம் தண்ணீர் வளத்துடன் நன்றாக இருக்கிறது.
சுரங்கத் தொழில் நடைபெறும் இடங்களில் குறிப்பாக, தங்கம், இரும்புத்தாது கனிமங்கள் மற்றும் பெட்ரோல், இயற்கை எரிவாயு போன்றவற்றின் அகழ்வுப் பணியின்போது அதிக தண்ணீர் செலவிடப்படுகிறது.
உலகிலேயே மிகவும் அதிகமாக நிலத்தடித் தண்ணீர் எடுக்கப்படுவது அரேபியப் பகுதியாகும். இங்கு மட்டும் 6 கோடி மக்கள் நிலத்தடிநீரைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவாக இருக்கும் சிந்துசமவெளி, லிபியா, நைஜர் ஆகியவற்றுக்கான முர்சுக் - ஜாடோ வடிநிலமும் அப்படிப்பட்டவைதான்.
அட்லான்டிக் கடலோரத்திலும் வளைகுடா கடற்கரையோரச் சமவெளியிலும்கூட நிலத்தடிநீர் இழப்பு கணிசமாகிவிட்டது. இது தென்கிழக்கு கடலோரப் பகுதி முதல் ஃபுளோரிடா வரை நீள்கிறது. அதே வேளையில், இந்நாட்டின் நடுப்பகுதியில் உள்ள மூன்று பெரிய நிலத்தடி நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு நல்ல நிலையில் உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே நிலத்தடிநீரானது மேலும் கசிந்து நிலத்தடிநீர்த் தேக்கப் பகுதியில் திரள்கிறது. ஆனால், எஞ்சியவை வெப்பத்தில் ஆவியாகியோ, கடலில் போய் விழுந்தோ வீணாகிவிடுகிறது. கடலில் நீர்மட்டம் உயர்வதற்கு 40% காரணம் நிலத்தடிநீரை உறிஞ்சி எடுத்து மனிதர்கள் பயன்படுத்திவிட்டு, அப்படியே கடலில் போய்விழ அனுமதிப்பதுதான் என்று ஜப்பானிய ஆய்வாளர்கள் 2012-ல் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
புவிவெப்பமடைதலும் காரணம்
நிலத்தடிநீர் வேகமாகக் குறைய மற்றொரு காரணம் புவி வெப்பமடைவதுதான். பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் வெயிலும் அனலும் அதிகரிப்பதால் வறட்சி தீவிரமாக இருக்கிறது. அதே வேளையில், பூமத்திய ரேகைக்குத் தொலைவில் உள்ள துருவப் பகுதிகளில் கன மழையும் குளிர் மழையும் அதிகரிக்கின்றன. தண்ணீர் இருப்பில் நிலவும் சமமின்மையைப் போக்க இயற்கையே சில சுய திருத்த நடவடிக்கைகளை எடுக்கிறது. நிலத்தடிநீரை வெளியே எடுத்துச் சிறிது பயன்படுத்திய பிறகு ஆவியாகும் பெரும்பகுதி நீர் குளிர்ந்து துருவப் பகுதிகளில் மழையாகப் பொழிந்துவிடுகிறது. ஆனால், நிலத்தடி நீர்த்தேக்கங்களுக்கு அதனால் பலன் கிடைப்பதில்லை.
இந்தத் தகவல்கள் உலக நாடுகளுடைய கண்களைத் திறக்கும் என்று எதிர்பார்க்கலாம். மழை நீரைச் சேமிப்பது முதல், மரம் வளர்ப்பது வரை நாம் திட்டமிட வேண்டியது நிறைய இருக்கிறது!

1929 Economic slowdown - USA

ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் லண்டன் பிஸினஸ் கல்லூரியில் தெரிவித்த கருத்துகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 1930களில் நடந்த சர்வதேச பொருளாதார மந்த நிலை (Great Depression) மீண்டும் வரலாம் என்று கூறினார். 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் சப் பிரைம் கிரைஸிஸ் உருவாகும் என்று முன்கூட்டியே கணித்தவர் ராஜன் என்பதால் அவர் கூறிய கருத்து அனைவரது புருவத்தையும் உயர்த்தியது. ஆனால் மறுநாளே ரகுராம் ராஜன் கூறியது இந்த அர்த்தத்தில் அல்ல என்பது போல ரிசர்வ் வங்கி மறுப்பு வெளியிட்டிருந்தது.
வரலாற்றை திரும்பி பார்க்க ராஜன் ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறார். ஒரு முறை பின்னோக்கி செல்வோம்.
என்ன நடந்தது?
1929-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி அமெரிக்க பங்குச்சந்தை 13 சதவீதம் வரை சரிந்தது. அந்த திங்கள்கிழமை கருப்பு திங்கள் என்றே அழைக்கப்பட்டது. அடுத்த நாளும் கடுமையாக சரியவே அந்த நாளையும் கருப்பு செவ்வாய் என்றே வரலாற்றில் குறிப்பிட்டுள்ளனர். 1929-ம் ஆண்டின் உச்சத்தை விட 1932-ம் ஆண்டு 89 சதவீதத்துக்கும் மேலாக பங்குச்சந்தை சரிந்தது. பங்குச்சந்தை சரிவு என்பது பொருளாதார மந்த நிலையின் ஒரு பாதிப்பே தவிர மந்த நிலையின் ஆரம்பம் அல்ல.
சரிவின் காரணம்?
1929-க்கு முன்பே பொருளாதார மந்த நிலை தொடங்கி விட்டது. 1920களில் அமெரிக்காவில் நுகர்வு கலாசாரம் உருவானது. இந்த நுகர்வு கலாசாரம் அமெரிக்க தொழில்துறைக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம் ஆனால் பொருளாதாரத்துக்கு பாதகமாக அமைந்தது. பெரும்பாலான நுகர்வுகள் கடனில் இருந்தன. இதனால் பொருளாதார வளர்ச்சியில் நிச்சயமற்ற தன்மை உருவானது.
இதற்கிடையே அமெரிக்காவில் விவசாய பொருட்களின் விலையும் குறைந்துகொண்டே வந்தது. முதலாவது காரணம் உற்பத்தி அதிகரிப்பு. உலகப்போர் சமயத்தில் வீரர்களுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்வதற்கு விவசாயத்துறை விரிவடைந்தது.
மேலும் இந்த விரிவாக்க நடவடிக்கைகள் இயந்திரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டன. இதனால் உற்பத்தி அதிகமானது. பொருட்களின் விலை குறைந்தது. கடனில் இயந்திரங்கள் வாங்கப்பட்டதால், விவசாயிகளுக்கு சுமை அதிகரித்தது. இதனால் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை கைவிட்டனர்.
இதுதவிர, 1920-ம் ஆண்டுகளில்தான் கார் உற்பத்தி தொடங்கியது. அந்த வகையிலும் நுகர்வு அதிகரித்து வளர்ச்சி உருவானது. 1925 களில் கார் விற்பனையில் மந்த நிலை உருவானது. மேலும் கட்டுமானத்துறையிலும் மந்த நிலை உருவானது.
1927-ம் ஆண்டுகளில் பங்குச்சந்தையில் ஊக வணிகம் அதிகரித்தது. பங்குச்சந்தையில் ஊக வணிகம் அதிகரித்த அதே சூழலில் அமெரிக்க மக்களும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். கிட்டத் தட்ட 40 லட்சம் அமெரிக்கர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தார்கள். அதுவும் கடன் வாங்கி...
பங்குச்சந்தை முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளுக்கு கடன் கொடுக்கும் சூழ்நிலையில் அமெரிக்க வங்கிகள் இல்லை. பங்குச்சந்தை விதிமுறைகள் சரியாக வகுக்கப்படாததால் ஊக வர்த்தகம் அதிகம் நடந்தது. இதற் கிடையே நிறுவனங்களின் லாப நஷ்ட கணக்குகளுக்கும் அவற்றின் பங்கு விலைகளுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தன. அக்டோபர் 23-ம் தேதி ஜெனரல் மோட்டார்ஸ் பங்கு சரிவை சந்தித்தது. வீழ்ச்சி ஆரம்பம் ஆனது. 1929-ல் இருந்த உச்சத்தை மீண்டும் தொடுவதற்கு அமெரிக்க பங்குச்சந்தைக்கு 27 வருடங்கள் தேவைப்பட்டது.
விளைவுகள் என்ன?
பங்குச்சந்தை சரிந்ததால், பணக்காரர் களுக்கு பணம் மட்டுமே இழப்பு, ஆனால் தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக இருந்தது. கிட்டத்தட்ட 1.5 கோடி மக்கள் வேலை இல்லாமல் தவித்தார்கள்.
தவிர வங்கிகளுக்கு கடுமையான விதிமுறைகள் இல்லாததால் வங்கிகள் முதலீட்டாளர்களின் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தன.
பங்குச்சந்தையும் சரிந்ததால் முதலீட் டாளர்களுக்கு பணத்தைத் திருப்பி கொடுக்க முடியவில்லை. அவர்களின் பணத்தை இன்ஷூரன்ஸ் செய்யவில்லை. (1934-ம் ஆண்டுதான் வங்கி டெபாசிட்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது). இதனால் வங்கிகள் தங்களது மற்ற சொத்துகளை விற்று பணம் கொடுக்க ஆரம்பித்தன. இதனால் ரியல் எஸ்டேட் சரிந்தது. 80 சதவீதத்துக்கும் மேலான கட்டுமான திட்டங்கள் நிறுத்தப்பட்டன.
இதனால் பல வங்கிகள் மூடப் பட்டன. இந்த செய்தி பரவி ஒரளவு செயல்பட்டுக் கொண்டிருக்கும் வங்கி களில் முதலீட்டாளர்கள் பணம் எடுக்க முற்பட்டதால், பல வங்கிகள் திவால் ஆனது. 1929க்கு முன்பு இருந்த வங்கி களில் பாதிக்கும் மேற்பட்ட வங்கிகள் 1933-ம் ஆண்டு காணாமல் போயின.
குறைவான பணம் மட்டுமே புழக்கத்தில் இயங்கி வந்தது. இதனால் பணவாட்ட சூழ்நிலை உருவானது. அமெரிக்க பொருளாதாரம் சரிய சரிய, அதன் தொடர்ச்சியாக மற்ற உலக நாடுகளும் சிக்கலில் தவித்தன. அப்போது இருந்து பிக்ஸட் கரன்ஸி முறையும் அதற்கு ஒரு காரணம் ஆகும். முதல் உலகப்போர் சிக்கலில் இருந்த பல ஐரோப்பிய நாடுகளுக்கு, இந்த பொருளாதார மந்த நிலை மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. பல ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு உதவி செய்துகொண்டிருந்தது. அங்கேயே பிரச்சினை வந்ததால் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கடன் குறைந்தது. குறிப்பாக இங்கிலாந்தும், ஜெர்மனியும் மிகவும் பாதிக்கப்பட்டன. ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக இருந்தது.
மீண்டும் சகஜ நிலை?
இந்த மந்த நிலைமை அமெரிக்க அரசியலையும் மாற்றியது. 1929 முதல் 1933-ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் ஹெர்பர்ட் ஹோவர். மந்த நிலை இருந்தாலும், அதனைச் சரியாக கணிக்கத் தவறியவராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க மக்களின் மனநிலையை குறை சொல்லியபடியும், பெடரல் அரசு எந்தவிதமான உதவியும் செய்ய முடியாது என்றும் மறுத்துவிட்டார்.
இதனால் 1932-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹோவர் தோற்கடிக்கப்பட்டு ரூஸ்வெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு பொருளாதாரத்தை மீட்பதற்கு கடுமையாக நடவடிக்கைகள் எடுத்தார். நான்கு நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை கொடுத்து, வங்கிகளை மீட்கும் நடவடிக்கைகளை எடுத்தார். அதன் பிறகு வங்கி சட்டம் இயற்றப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு திவாலான வங்கிகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. நிலையை சீராக்குவதாக நேரடியாக மக்களிடம் பேசி நம்பிக்கையை உயர்த்தினார்.
இவர் காலத்தில்தான் வங்கி டெபாசிட்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்யும் முறையையும், பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தை (எஸ்இசி) அமைத்தார்.
அரசாங்க முதலீடுகளை அதிகரித்தார். மெல்ல மெல்ல வேலை இல்லாத சூழ்நிலையை குறைத்தார். ஆனாலும் 1930களின் இறுதியில் வேலையில்லாத சூழ்நிலை அதிகமாகவே இருந்தது. 1939-ம் வரை 17 சதவீதம் வரையிலும், 1941-ல் 14 சதவீதமாகவும் வேலை இல்லாதவர்களின் விகிதம் இருந்தது. அதாவது அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் களம் இறங்கும் வரையில் மந்த நிலை தொடர்ந்தது. அதன் பிறகுதான் தேவை அதிகரித்தது.
ரகுராம் ராஜன் இது போன்ற சூழல் மீண்டும் நிகழலாம் என்று கணித்து சொல்லியிருந்து, பிறகு மக்களை பதற்றத்துக்குள்ளாக்க வேண்டாம் என்பதற்காக, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என மறுத்திருக்கலாம் என்ற யூகங்களும் எழுகின்றன.
எது எப்படியோ வரலாறு மீண்டும் திரும்பாமல் இருந்தால் நல்லது.
karthikeyan.v@thehindutamil.co.in