வெள்ளி, 4 செப்டம்பர், 2015

IT Job in India

நெருங்கிய நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு நண்பர்கள் கும்பலுடன் செல்வது, அன்பான தாத்தா பாட்டியின் பிறந்த நாள் விழாவில் சகோதர சகோதரிகளுடன் இணைந்து கலாட்டா செய்வது போன்றவையெல்லாம் ஐடி துறை நண்பர்கள் பற்றிய சினிமா கதைகளில் சாதாரணமாக இடம்பெறுபவைதான். ஆனால், யதார்த்தத்தில் இது மிகப்பெரிய கனவாகும். இன்று கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களுக்கும் இது கனவு தான்.
ஐடி பணியாளராக ஒருவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது வருடத்துக்கு 12 சி.எல், மாதத்துக்கு அரை நாள் ‘சிக் லீவ’, அது தவிர பிறந்த நாள், திருமண நாளைக் கொண்டாட ‘மை லீவ’ உண்டு என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
“3 பேர் பார்க்க வேண்டிய வேலையை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் விடுப்பு எடுத்தால் எனது நண்பர் மிகவும் கஷ்டப்படுவார் என்பதால் பல நேரங்களில் விடுப்பு எடுப்பதைத் தவிர்த்து விடுவேன். பத்து நாட்களில் செய்ய முடிந்த காரியத்தை ஐந்து நாட்களில் செய்து தருவதாக கிளைண்டிடம் சொல்லி விட்டு, நம்மிடம் அழுத்தம் கொடுப்பார்கள்” என்று நடைமுறையை விளக்குகிறார் ஐடி நிறுவனமொன்றின் தொழில்நுட்ப ஊழியர் சதீஷ்.
விடுமுறை பற்றி நினைக்கத் தொடங்கினாலே “லீவ் இருக்கிறது என்பதற்காக எடுக்கக் கூடாது. புராஜக்ட் முடித்தாக வேண்டும்” என்று மேலாளரின் குரல் நினைவில் வந்து அதட்டும்.
‘தி இந்து’ ஐடி தொடர் கட்டுரைகளைப் பார்த்து, கடிதம் எழுதியிருந்த வாசகர்களில் ஒருவரான தூத்துக்குடியைச் சேர்ந்த தி.மணி, “அமெரிக்க நிறுவனத்திடமிருந்து ‘கால்’ வரும். அது முடித்த பின்னர்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும். இப்படி ஒரு நாள் வேலையை இரவு 11 மணிவரை நீட்டிப்பார்கள். இதற்கு ஓவர் டைம் சம்பளம் கிடையாது. மதிய உணவு இடைவேளை கிடையாது. பொது விடுமுறை நாளில் வேலை வாங்கினால் இரட்டிப்புச் சம்பளம் என்ற விதியும் அமலாவதில்லை” என்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளைக் குறிப்பிட்டிருந்தார். பணியின் காரணமாக நேரம் கடந்து கிளம்பும் பெண்களுக்கு நிறுவனமே வாகன வசதி ஏற்படுத்திக் கொடுப்பதும் தற்போது குறைந்துவிட்டது.
வேலைநேரம் நீட்டிப்பதும், ஊழியர் பற்றாக்குறையும், விடுமுறையை மறுப்பதும் ஏன் தொடர்கின்றன என்று அறிவுசார் பணியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சீதாராமன் கூறும்போது, “ஒரே தொழிலாளியிடமிருந்து எத்தனை அதிகமான உழைப்பு நேரத்தைப் பெற முடியுமோ அதுவே லாபத்தை அதிகரிப்பதற்கான குறுக்கு வழி. இதனால் அந்த ஊழியரின் தனிப்பட்ட வாழ்வில் என்ன நடக்கும் என்பது பற்றி நிறுவனம் கவலைப்படாது. நிறுவனத்தில் ஊழியர் பற்றாக்குறையையும், நிரந்தரமற்ற நிலையைத் தக்க வைப்பதன் மூலம் உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தி அதிகமாகச் சுரண்டுகின்றனர். மிகப்பெரும் நிறுவனங்கள் கூட இந்த நிலையை மாற்றவில்லை என்பது அபாயகரமானது” என்கிறார்.
விடுமுறை வழங்காமல் தவிர்ப்பது ‘முதல் நிலை’ சுரண்டல், முக்கிய விடுமுறை நாட்களிலும்கூட வேலையை நிறுத்தாமல் தொடர்ந்து உழைக்கச் சொல்வது அடுத்த கட்ட சுரண்டல். கடந்த தேர்தலின்போது, பல நிறுவனங்கள் விடுமுறை வழங்காமல், தேர்தல் ஆணையம் தலையிட நேர்ந்தது. ஆனால், எந்த அரசும் இப்படிப்பட்ட தலையீடுகளைச் செய்வதில்லை.
“புராஜெக்ட்டை விரைவில் முடித்தாக வேண்டும். அசாதாரண கால இடைவெளியில் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தாலும், எதிர்க் கேள்வி கேட்காமல் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய நிலை. இந்த வருட சுதந்திர தினத்தன்று அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. எங்கள் குழுவினர் வேலை பார்த்தபடிதான் இருந்தோம்” என்று அதிரவைக்கிறார் பிரபல ஐடி நிறுவன ஊழியர் வெங்கடேஷ்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

India contribution to Science

செங்கோட்டையிலிருந்து செங்கோளை (செவ்வாய்) அடைந்ததன் மூலம் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அசாத்தியமான சாதனை செய்திருக்கிறது. அந்தத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முதலான ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் இது சாதனைதான்.
இதை விட அதிகமாக இந்திய அறிவியலாளர்களால் சாதிக்க முடியுமா? நிச்சயமாக; ஆனாலும் கடந்த 60 ஆண்டு கால இந்திய அறிவியலாளர்களின் செயல்பாடுகளை பெரும் தோல்விகளாகச் சித்தரிப்பது அநீதியானது. இந்தியா தனக்கே உரிய ஆராய்ச்சி, மேம்பாடு வழிமுறைகளைக் கொண்டது.
அவற்றின் பலன்கள் குடிமக்கள் அனைவரையும் சென்றடைந்திருக்கின்றன, நம் தேசத்தை வாழ்வதற்கேற்ற ஒரு இடமாக மாற்றியமைத்திருக்கின்றன. பூமியில் வாழ்பவர்களில் ஆறில் ஒருவர் இந்தியர் என்பதைக் கொண்டு பார்க்கும்போது இந்த எண்ணிக்கையிலான மக்களின் தேவைகளை இந்திய அறிவியல் பூர்த்திசெய்யும் என்றால் அது மனித குலத்துக்கே செய்யும் பெரும் சேவையன்றோ?
பழக்கூடை
சுதந்திரம் அடைந்தபோது இந்தியா என்பது பல்வேறு சமஸ்தானங்கள், நிஜாம்களின் பழக்கூடையாகத்தான் இருந்தது. அப்படிப்பட்ட நாட்டை இந்த 60 ஆண்டுகளில் இந்திய மூளைகள் உலகம் பொருட்படுத்தியாக வேண்டிய ஒரு சக்தியாக மாற்றியிருக்கின்றன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பதும், 121 கோடி வயிறுகளுக்கு உணவு அளித்திருப்பதும் இந்திய வேளாண் அறிவியலாளர்களின் சாதனையே தவிர ஏசி அறைகளுக்குள் உட்கார்ந்து கணினி விசைப்பொறிகளைத் தட்டிக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப ஜாம்பவான்களின் சாதனை அல்ல.
வெறுமனே இந்திய உழைப்பை அவுட்சோர்ஸிங் விட்டதன் மூலமாக ஒன்றும் நாம் உலகின் மருந்துக்கடையாக ஆகிவிடவில்லை. உலகிலேயே மிகவும் குறைந்த செலவில் கிரகம் விட்டுக் கிரகம் செல்லும் செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்துக்கு நாம் அனுப்பியிருக்கிறோம் என்பது நம் விஞ்ஞானிகளின் உழைப்பன்றி வேறு எதன் அடையாளம்? உலகின் தகவல் தொழில்நுட்பத் தலைநகராக பெங்களூரு விளங்குகிறதென்றால் அங்குள்ள ‘இந்திய அறிவியல் நிறுவனம்’ (ஐஐஎஸ்சி) போன்ற நிறுவனங்களெல்லாம் அறிவையும் திறனையும் வளர்த்ததுதான் காரணம்.
நாராயணமூர்த்தியின் குற்றச்சாட்டு
இன்ஃபோஸிஸ் நிறுவனர் சமீபத்தில் இந்தியாவின் உயர் நிறுவனங்களின் பங்களிப்புகளைக் கேள்வி கேட்டு சாட்டையடி அடித்திருக்கிறார். “இவையெல்லாம் நம் சமூகத்தையும் உலகத்தையும் மேம்படுத்துவதற்கு என்னதான் செய்திருக்கின்றன? இந்தியக் கண்டுபிடிப்பு என்று சொல்லக்கூடிய ஏதாவது ஒன்று இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் பகுதியாக ஆகியிருக்கிறதா?” என்றெல்லாம் கேட்டிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கேள்விகள் சரி என்று தோன்றக்கூடும். உண்மையில் இந்தக் கேள்விகள் ஆழமற்றவையே, இந்திய அறிவியல் துறை மீது புரிதல் இல்லாதவையே.
நாராயண மூர்த்தியின் குற்றச்சாட்டை மறுத்துப் பேசும் பாரத ரத்னா சி.என்.ஆர். ராவ் இந்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டுத் துறையில் தகவல் தொழில்நுட்பத் துறையினர் முதலீடு எதையும் செய்யாததைச் சுட்டிக்காட்டிக் குற்றம் சாட்டுகிறார். மூன்றில் இரண்டு பங்கு முதலீடு அரசிடமிருந்துதான் வருகிறது என்கிறார் அவர்.
உலகை இயக்கும் எலி
அரை நூற்றாண்டுக்கு முன்புதான் இந்தியா உணவுப் பற்றாக்குறையால் பீடிக்கப்பட்டிருந்தது; கோதுமை போன்ற தானியங்கள் அமெரிக்காவிலிருந்து கோடிக் கணக்கான டன்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. இந்தியா சிதைந்துகொண்டிருக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள்.
இன்ஃபோசிஸ் நிறுவனம் பிறந்த 1981-ல்தான் இந்தியா தனது 68.3 கோடி மக்களுக்காக 12.9 கோடி டன்கள் உணவுத் தானியங்களை உற்பத்தி செய்தது. 2014-ல் 121 கோடி மக்களுக்காக 26.3 கோடி உணவு தானியங்களை இந்தியா உற்பத்தி செய்திருக்கிறது. 35 வருடங்களில் இரண்டு மடங்கு உற்பத்தி! கடுமையாக உழைத்த வேளாண் விஞ்ஞானிகளும், அவர்களை நம்பிய விவசாயிகளும் இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமாகியிருக்குமா?
இறக்குமதியாளர் இந்தியா இப்போது ஏற்றுமதியாளர் இந்தியாவாக ஆகியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய மூன்றாவது பொருளாதாரத்தைத் தற்போது கொண்டிருக்கும் இந்தியா ‘பாம்பாட்டிகளின் தேசம்’ என்ற நிலையிலிருந்து ‘உலகை இயக்கும் எலியின் (மவுஸ்)’ தேசமாக ஆகியிருக்கிறது.
இந்தியாவும் சீனாவும்
இதனாலெல்லாம் இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிவிட முடியாதுதான். இவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் தொடர்ந்து குறைந்த அளவு நிதியாதாரம், குறைவான பணியாளர்கள் போன்றவை பெரும் பிரச்சினைகளாகத் தொடர்கின்றன. இந்திய அறிவியல் துறையில் 2 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 10 ஆயிரம் மக்களுக்கு 4 ஆராய்ச்சியாளர்கள் என்பது இந்தியாவின் விகிதம்.
இதுவே அமெரிக்காவில் 79, சீனத்தில் 18. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைக்காக 0.9% மட்டுமே ஒதுக்குகிறது. சீனாவோ 2% ஒதுக்குகிறது. ‘பலவீனமான அறிவியல் தொழில் சூழல், தரமான பல்கலைக்கழகங்கள் குறைவாக இருப்பது, வலுவற்ற உற்பத்தித் துறை, வேரூன்றியிருக்கும் சிவப்பு நாடா பிரச்சினை’ போன்றவற்றால் இந்திய அறிவியல் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ‘நேச்சர்’ இதழ் 14-05-2015 அன்று தலையங்கம் தீட்டியிருக்கிறது.
2013-ல் பத்து லட்சம் பேருக்கு 17 என்ற வீதத்தில்தான் இந்தியா காப்புரிமைகளைப் பெற்றிருக்கிறது. சீனா- 541, தென்கொரியா - 4,451 என்ற வீதத்தில் காப்புரிமைகள் பெற்றிருக்கின்றன. இதையெல்லாம் இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
படைப்புத் திறன்
உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி உலக அளவில் மூன்றில் ஒரு குழந்தைக்குப் போடப்படுவது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் தடுப்பூசி மருந்தே. எப்போதும் வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்துகொண்டிருக்கும் ஒரு தேசத்தைப் பொறுத்தவரை இது ஒன்றும் சாதாரணமான சாதனையல்ல.
தொழில்நுட்பத்துக்குச் செலவு செய்வதில் இந்தியா கஞ்சத்தனம் காட்டிவருவது உண்மைதான்; அதற்காக, தரம் குறைந்த தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகிறது என்பதல்ல அர்த்தம். மங்கள்யான் வெற்றிக்குப் பிறகு இந்திய விண்வெளிக் கழகத்துடன் சேர்ந்து பணியாற்ற நாஸாவே முன்வருவது குறிப்பிடத்தக்கது. ‘கிராவிட்டி’ என்ற ஹாலிவுட் படத்துக்கு ஆன செலவை விட மங்கள்யான் அனுப்புவதற்குச் செலவு குறைவாக ஆகியிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
நிலவுக்கு இந்தியா அனுப்பிய முதல் செயற்கைக்கோளான சந்திராயன் - 1 மட்டும் சாதாரண விஷயமா? நிலவில் நீரின் மூலக் கூறுகளை அது கண்டுபிடித்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உலகத்துக்கு பூஜ்யம் எனும் கணித சாதனையை அளித்தவர்கள் இந்தியர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். அந்தப் பங்களிப்புக் கெல்லாம் பண மதிப்பு இட முடியுமா? லாபக் கணக்கின் அடிப்படையில் படைப்புத் திறன் செயல்படுவதில்லை.
இந்திய தேசிய அறிவியல் அகடமியின் தலைவர் ராகவேந்திரா கடக்கர், நாராயண மூர்த்திக்கு இப்படி பதிலளித்திருக்கிறார்: “நாராயண மூர்த்தி சொல்வது முற்றிலும் தவறு. எனினும் அவரை மறுத்துப் பேச நான் முயற்சிக்கப்போவதில்லை. நாம் இன்னும் நன்றாகப் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கத்தில் தந்தை ஸ்தானத்தில் உள்ள ஒருவர் இடித்துக்காட்டியதுபோல் எடுத்துக்கொள்ளவே நான் விரும்புகிறேன்.” இருப்பதைக் கொண்டு உயரத்தை எட்டுதல் என்பது இந்தியர்களின் மரபணுக்களில் உள்ள விசேஷமான பண்பு. இந்தியர்களின் அந்தப் படைப்பாற்றல் சாத்தியத்தைப் போற்றும் தருணத்தில் அந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நாம் கொன்றுவிடக் கூடாது.
- புகழ் பெற்ற அறிவியல் எழுத்தாளர்
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை

Achievers in Mathematics

கணிதத்தில் சாதனைகள் செய்பவர் களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுவதில்லை. நூறாண்டுகளுக்கு முன்னால் கணிதத்துக்கு தரப்பட்ட முக்கியத்துவம் அவ்வளவுதான்.
ஆனால், இன்று கணிதத்தின் துணையில்லாமல் எந்த அறிவியல் பிரிவிலும் பெரிய சாதனைகளை புரிய முடியாது. எனவே, கணிதத்துக்குக் கட்டாயம் நோபல் பரிசு வழங்கலாம் என்ற கருத்து இருந்தாலும், அதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை.
கணிதத்தின் நோபெல்
இதனால், கணித மேதைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற குறை ஏற்பட்டது. இதனைப் போக்க நோபல் பரிசுக்கு இணையாக உருவானதுதான் ஏபல் பரிசு. 2003 முதல் ஆண்டு தோறும் மே மாதத்தில் இது வழங்கப்படுகிறது.
நார்வே நாட்டின் தலைசிறந்த கணித மேதையாகக் கருதப் படுபவர் நீல்ஸ் ஹென்றிக் ஏபல்(1802 1829). வறுமையில் வாடியபோதும் கணிதத்தில் அற்புதமான படைப்புகளை வழங்கினார். 27- வயதிலேயே வறுமையாலும் நோயாலும் இறந்துவிட்டார். இவரது சிந்தனைகள் கணிதத்தின் நவீன வளர்ச்சிக்கு உதவின.
நார்வே நாட்டு அரசு இவரைப் போற்றும் வகையில், அவரது 200- வது பிறந்த வருடமான 2002-ல் ஏபல் நினைவு நிதியை உருவாக்கியது. தற்சமயம் இந்த நிதித் தொகை நார்வே நாட்டின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சமூகத்தில் கணிதத்தின் தரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களை கணித ஆய்வுக்கு ஊக்குவிக்கவும் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டையும் பெற்றவர்
முதல் ஏபல் பரிசு 2003-ம் ஆண்டில் பிரெஞ்சு கணித வல்லுநரான ஜான் பேரே சேரே என்பவருக்கு நார்வே நாட்டு மன்னரால் வழங்கப்பட்டது.
2015-ம் ஆண்டுக்கான ஏபல் பரிசு, ஜான் நேஷ் மற்றும் லூயிஸ் நிரன்பெர்க் ஆகிய இரு கணித அறிஞர்களுக்கும் மே மாதம் 19 ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான பரிசுத் தொகை சுமார் 5 கோடி ரூபாய்.
ஓர் வரிசைக்கு மேலுள்ள பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகளின் இயலை உருவாக்கியதற்காகவும், அதனை இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் பல்வேறு அறிவியல் துறைகளில் செம்மையாகப் பயன்படுத்தியதற்கும் இவ்விருவருக்கும் 2015-ம் ஆண்டுக்கான ஏபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
ஜான் நேஷ் ‘Game Theory’ என்ற கணித உட்பிரிவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்திய ‘நேஷ் சமநிலை’ என்ற கோட்பாட்டுக்கு 1994 -ம் ஆண்டில் நோபல் பரிசை பொருளாதாரத் துறையில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நோபல் பரிசு மற்றும் ஏபல் பரிசு ஆகிய இரு தலைசிறந்த பரிசுகளையும் வென்ற ஒரே நபராக விளங்குகிறார் நேஷ்.
இவரது வாழ்வை மையமாக வைத்து ‘A Beautiful Mind’ என்ற ஆங்கிலத் திரைப்படம் வெளிவந்தது. 2001-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் உள்ளிட்ட நான்கு ஆஸ்கார் விருதுகளை இது தட்டிச் சென்றது.
இப்பரிசை வென்று அமெரிக்காவில் தனது இல்லத்துக்கு ஜான் நேஷ் செல்லும்போது விபத்தில் சிக்கி இவரும் இவரது மனைவி அலிசியாவும் அந்த இடத்திலேயே உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
நோபல் பரிசுக்கு இணையான ஏபல் பரிசை இந்தியாவில் (சென்னையில்) வாழ்ந்து தற்சமயம் அமெரிக்காவில் குடியேறிய திரு. சீனிவாச வரதன் என்ற கணித வல்லுநர் 2007- ல் பெற்றார்.
மேலும் விவரங்களுக்கு www.abelprize.no என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
http://tamil.thehindu.com/general/education/கணிதத்துக்கான-நோபல்-பரிசு/article7603180.ece?widget-art=four-all
தொடர்புக்கு: piemathematicians@yahoo.com 

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

இமெயில் தமிழர்: சிவா அய்யாதுரை நேர்காணல்

இமெயிலைக் கண்டுபிடித்தவர் ஒரு இந்தியர், ஒரு தமிழர். ராஜபாளையத்தில் முகவூரைச் சொந்த ஊராகக் கொண்ட சிவா அய்யாதுரை மும்பையில் ஏழு வயது வரை வசித்தார். அதன் பிறகு தனது பெற்றோர்களுடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். 1978-ல் தனது 14-வது வயதில் இமெயிலைக் கண்டுபிடித்தார்.
இமெயிலைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையைப் பெற்று 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசால் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவுள்ளது. ஆகஸ்ட் 30-ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் டிஜிட்டல் இந்தியா நிகழ்ச்சியில் அவர் கவுரவிக்கப்படுகிறார். சமீபத்தில் அவர் நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அது குறித்து அவர் அளித்த பேட்டி:
கமலோடு என்ன பேசினீர்கள்?
கமல் ஹாசன் எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் சந்திக்கும்போது பல விஷயங்களை ஆழமாக விவாதிப்போம். சமீபத்தில் சந்தித்தோம். இந்த உலகில் எப்படிப் பொய்யை உண்மையாகவும், உண்மையைப் பொய்யாகவும் மாற்ற முடிகிறது என்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.
அதைத் தவிர, வரலாறு, மருத்துவம், கலை எனப் பல விஷயங்களைப் பேசினோம். நாங்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய முயற்சியில் ஈடுபடவுள்ளோம். அது கண்டிப்பாக லாப நோக்கு கொண்ட முயற்சியாக இருக்காது.
நீங்கள்தான் மின்னஞ்சலை கண்டுபிடித்தீர்களா?
நான் இமெயிலை கண்டுபிடித்தது தற்செயலானதுதான். எனக்குக் கணிதத்தின் மீது அதீத ஆர்வம் உண்டு. ஒன்பதாம் வகுப்பிலேயே கல்லூரிப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது என் அம்மா, எனது குரு மைக்கெல்சனிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது எனது கவனம் எல்லாம் மருத்துவத் துறையில்தான் இருந்தது. எனது குருவான மைக்கெல்சென் எனக்கு மருத்துவம் சார்ந்து ஏதாவது பணி கொடுப்பார் என்றுதான் காத்திருந்தேன். ஆனால், எனக்கு அவர் இமெயில் உருவாக்கும் பணியை அளித்தார்.
அலுவலகங்களில் கடிதப் போக்குவரத்தைக் கணினிமயமாக்க வேண்டும் என்பதுதான் 1970-களில் எனக்குக் கொடுக்கப்பட்ட சவால். இன்று உங்கள் மெயிலில் இருக்கும் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஷ் உள்ளிட்டவை அப்போது காகிதங்களாக இருக்கும். அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டியது அங்குள்ள உதவியாளரின் பொறுப்பாகும். அந்தப் பணிகளை எளிமைப்படுத்துவதற்காகவே இமெயில் உருவாக்கினேன்.
எனக்கு அப்போது 14 வயது. இமெயிலுக்கான காப்புரிமை பெற்றிருந்தாலும் அதை நான்தான் கண்டுபிடித்தேன் என்று நான் கூறிக்கொள்ளவில்லை. அதன் பிறகு நான் எனது மருத்துவ ஆராய்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். 2011-ம் ஆண்டில் எனது நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் டைம் பத்திரிகையின் நிருபர் எனது ஆவணங்களைச் சரிபார்த்து ‘இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ என்று கட்டுரை எழுதினார். அதற்குள் இமெயிலை நாங்கள்தான் கண்டுபிடித்தோம் என்று சில ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் பெருமை தேடிக்கொள்ள ஆரம்பித்தன.
ஏன் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை?
உலகெங்கும் பயன்படுத்தப்படும் இமெயிலை ஒரு இந்தியன், கருப்பு நிறத் தமிழன் கண்டுபிடித்தான் என்று அவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இந்தியர்களும் அதை எளிதாக நம்புவதில்லை. புதிய கண்டுபிடிப்புகள் மேலை நாட்டுக்காரர்களால்தான் கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணத்தை நம்மிடமேகூட அவர்கள் விதைத்துள்ளனர். இந்தியர்கள் புதிதாக எதையும் செய்ய முடியாதவர்கள் என்ற எண்ணத்தை இந்தியர்களின் எண்ணங்களிலும் விதைத்துள்ளனர். இது நவீன காலனியாதிக்கம்.
மருத்துவத்தில் உங்களின் சாதனை என்ன?
எனக்கு மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணம் எனது பாட்டிதான். அவர் நோயாளியின் முகத்தைப் பார்த்தே மருந்தைக் கொடுப்பார். நான் சிறுவயதிலேயே எனது பாட்டி வைத்தியத்தின் மந்திரத்தை அறிந்து அதை உலகுக்குக் கொடுப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். அதை நோக்கித்தான் இப்போதும் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
நமது நாட்டில் உள்ள சித்த வைத்தியம் உடலை ஒரு கட்டுப்பாட்டு இயந்திரமாகப் பார்க்கிறது. ஒரு விமானத்தை விமானப் பொறியாளர் பார்ப்பதுபோல. இதனைப் பொறியியல் வார்த்தைகளில் ஆங்கில மொழியில் நான் கொடுத்தேன்.
எங்களது நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக, சைட்டோ சால்வ் என்ற கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளோம். அது அனைத்து ஆய்வக ஆராய்ச்சிகளையும் உள்ளடக்கிய புதிய ஆய்வுமுறை. இதன் மூலம் உடலின் இயக்கத்தையும் அதற்கு ஏற்ற மருந்துகளையும் கணினியின் மூலமே பொருத்திப் பார்க்க முடியும். கணையப் புற்றுநோய்க்கான அனைத்து மருந்துகளின் இயக்கத்தையும் ஆராய்ந்து, சரியான, அதிகப் பயன் கொடுக்கிற மருந்தைத் தேர்வு செய்துள்ளோம். அதனைச் சோதித்துப் பார்ப்பதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.
எக்கோ மெயில் என்று புதிதாக கண்டுபிடித்துள்ளீர்களா?
புகழ்மிக்க எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்வதற்கானவாய்ப்பு கிடைத்தபோது, அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் கிளிண்டன் அலுவலகத்தில் உள்ள மெயில்களை முறைப்படுத்துவதற்கு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற பிறகு உருவாக்கப்பட்டது எக்கோ மெயில். இதன் மூலம் ஒருவருக்கு வரக்கூடிய மெயில்கள் தானாகவே ஒழுங்குபடுத்தப்படும். இந்த தொழில்நுட்பத்துக்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வெற்றிகரமாக 

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

ப. ஜீவானந்தம்

மகாத்மா காந்தியால் ‘இந்த தேசத்தின் சொத்து’ என்று பாராட்டப்பட்டவரும் பொதுவுடமைக் கொள்கைக்காகப் பாடுபட்டவருமான ப. ஜீவானந்தம் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார் (1907). அந்த கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து என்ற பெயரை பெற்றோர் இட்டனர். இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் இவர் எழுதிய முதல் கவிதையே காந்தியையும் கதரையும் பற்றியது.
l பத்தாம் வகுப்பு படித்த சமயத்தில் ‘சுகுணராஜன் அல்லது சுதந்திரவீரன்’ என்ற நாவலை எழுதினார். அடுத்து ‘ஞானபாஸ்கரன்’ என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து, நடித்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார்.
l அந்நியத் துணிகள் பகிஷ்கார இயக்கத்தின்போது தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மகனின் போக்கு தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. தன் கொள்கைக்காக வீட்டைத் துறந்தார் இந்த இளைஞர்.
l அப்போது 17 வயதுதான். 1932-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறையில் இவரது சிந்தனைப்போக்கு மாறியது. கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அந்தசமயத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை சகித்துக்கொள்ள முடியவில்லை. சீறி எழுந்தார்.
l அனல் கக்கும் இவரது பேச்சு இளைஞர்களை எழுச்சியடைய வைத்தன. சிறையிலிருந்தபோது பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதற்காக இவரைக் கைது செய்து கை, கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர் போலீஸார்.
l இவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டு கள் சிறையில் கழிந்தது. நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களும் ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சிபெறச் செய்தன.
l மார்க்சிய கருத்துகளை தமிழில் கூற பல புதிய பதங்களை உருவாக்கினார். 1940களின் இறுதியிலும் 50களிலும் ஜீவா எழுதிய ‘சோஷலிச சரித்திரம்’ மற்றும் ‘சோஷலிச தத்துவம்’ ஆகிய நூல்களைத் தொடர்ந்து ஏராளமான சோவியத் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.
l ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். சென்னை வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 1952 முதல் 1957 வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1959-ல் ‘தாமரை’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.
l 1961-ல் ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இயக்கம், போராட்டம், சிறை என்று பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் இலக்கியத் திறனையும் தக்கவைத்துக் கொண்டவர். ‘புதுமைப் பெண்’, ‘இலக்கியச் சுவை’, ‘மதமும் மனித வாழ்வும்’, ‘சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
l தமிழக அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில் நாகர் கோவிலில் பொதுடைமை வீரர் ப. ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னலம் கருதாமல் இளைய தலை முறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப. ஜீவானந்தம், 1963-ம் ஆண்டு தமது 55-ம் வயதில் மறைந்தார். 

Sathyam Nathella - Siva Aiyadurai - Sundar Pichai

வீட்டுக்கு வாங்கப்பட்ட பழைய காலத்துத் தொலைபேசியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் சென்னை மாநகரின் ஒரு பள்ளி மாணவர். கைவிரலால் சுழற்றிப் பேசக்கூடிய அதில் யாரோடு பேசினாலும் அந்த எண்ணை மனப்பாடம் செய்துகொண்டார். நடமாடும் தொலைபேசி டைரக்டரியாக இருந்த அந்த மாணவர் இன்று உலகின் மிக நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் எனப்படும் திறன்பேசிகளுக்கான அதிநவீனத் தொழில்நுட்பங்களை வெளியிடும் கூகுள் நிறுவனத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறார். அதன் கூட்டங்களில் விரல் நுனியில் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு அலசுபவராக இருக்கிறார்.
அவர்தான் சுந்தர் பிச்சை. அவரது உலகளாவிய புகழ் அவர் தனது வேலையில் காட்டிய கடும் உழைப்பில் இருக்கிறது.
பாதியில் விட்ட படிப்பு
சென்னையின் பல்லாவரத்தில் அமைந்துள்ள இங்கிலீஷ் எலெக்ட்ரிக் கம்பெனியின் ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரின் மகன் அவர். பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். அவர் பட்டப் படிப்புக்குத் தேர்வு செய்தது உலோகவியல் பொறியியல். உலோகங் களின் தன்மைகளை ஆராயும் படிப்பு அது. இந்தியாவில் அதைப் படித்தவருக்கு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கல்வி உதவித்தொகை கிடைத்தது. முனைவர் பட்ட மேற்படிப்புக்காக அங்கே போனார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்குப் போவதற்கான விமானப் பயணத்துக்கான செலவு மட்டும் அவரது அப்பாவின் ஒரு ஆண்டு வருமானத்துக்கும் மேல். அமெரிக்காவுக்குப் போய்விட்டாலும் அங்கே 400 ரூபாய் கொடுத்து (60 டாலர்) ஒரு தோள் பை வாங்க முடியாத நிலை.
பணம் போதாமையோ அல்லது படிப்பு பிடிக்கவில்லையோ தெரியவில்லை. பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பில் வெற்றிபெற முடியவில்லை. பாதியிலேயே நின்றுவிட்டார். அதற்குப் பிறகு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார்
வன்பொருளிலிருந்து மென்பொருளுக்கு
படித்து முடித்ததும் எலெக்ட்ரானிக் சிப்புகளைத் தயாரிக்கும் அல்லய்ட் மெட்டீரியல் எனும் கம்பெனியின் உற்பத்திப் பிரிவில் இன்ஜினீயராகச் சேர்ந்தார், அதன் பிறகு மெக்கன்ஸி கம்பெனி எனும் நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றினார்.
2004-ல் கூகுளில் உற்பத்தி மேலாளராகச் சேர்ந்த சுந்தர், இணையத்தின் தேடுதளங்களான (பிரவுசர்) ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’, ‘பயர்பாக்ஸ்’ போன்றவற்றையே ஏன் நாம் பயன்படுத்த வேண்டும்? கூகுள் தனக்கான சொந்தமான தேடுதளத்தை ஏன் உருவாக்கக் கூடாது என்ற விவாதத்தைக் கிளப்பினார்.
அப்போதைய கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரி அதை வீண் முயற்சி என்று கருதினாலும் கூகுள் க்ரோம் பிறந்தது. உலகளாவிய வெற்றியைப் பெற்றது. இன்று உலகில் உள்ள கணினிகளில் நான்கில் மூன்று பங்கில் தற்போது அதுதான் செயல்படுகிறது. ஜெர்மனி, ஜப்பான், பெரும்பாலான ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தவிர உலகின் பெரும்பாலான நாடுகளில் அதன் ஆதிக்கம்தான் என்கின்றன அமெரிக்கப் பத்திரிகைகள்.
விரியும் கூகுள்
அதன் பிறகு க்ரோம் இயங்குதளத்தையும் மேகக் கணினி தொழில்நுட்பத்தையும் கொண்டு உருவான க்ரோம் புக் கணினிகள் நல்ல விற்பனையில் உள்ளன. கூகுள் டிரைவ், கூகுள் மேப்ஸ், ஜிமெயில் உருவாக்கப்பட்டதில் அவரின் பங்கு முக்கியமானது. அடுத்ததாக, கைபேசிகளுக்கான ஆண்ட்ராய்ட் இயங்குதளம் அறிவிக்கப்பட்டது.
கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் இன்று கைபேசி நிறுவனங்கள் பலவற்றால் பயன்படுத்தப்படுகிறது. சோனி நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் டிவிகளை வெளியிட்டுள்ளது. கைபேசிகளைத் தாண்டி கார் உள்ளிட்ட மேலும் பல பொருள்களில் அது பயன்படுத்தப்படலாம்.
வெறும் கூகுள் தேடுபொறியின் பணிகளை மட்டும் செய்து கொண்டிருந்த அந்த நிறுவனம் தன்னை வேறுபல பணிகளிலும் விரித்துக்கொள்ள உதவியவராகச் சுந்தர் பிச்சை இருக்கிறார். தற்போது கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய தாக்கத்தின் மையமாக அவர் மாறியிருக்கிறார்.
ஜாம்பவான்
கூகுள் நிறுவனத்தின் உரிமையாளர் களில் ஒருவரான லாரி பேஜ், சுந்தர் பிச்சையை “தொழில்நுட்ப அறிவில் மட்டுமல்லாமல் சந்தைப்படுத்தலிலும் திறன்படைத்தவர்” என்கிறார். ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ எனும் நமது முன்னோர்களின் வணிக அறிவின் தொடர்ச்சி சுந்தர் பிச்சையின் மரபணுக்களில் ஓடுகிறது போலும்!
வன்பொருள் எனப்படும் ஹார்ட்வேர் தொடர்புடைய படிப்புகளைப் படித்த சுந்தர் மென்பொருள் எனப்படும் சாப்ட்வேர் துறையில் மிகப் பெரிய உச்சிக்குப் போயிருப்பது வேலையில் அவரது அர்ப்பணிப்பையும், கற்றல். செயல்படுத்தல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் அவர் செய்திருப்பதையும் காட்டுகிறது,
இன்றைய தொழில்நுட்ப உலகின் மகாஜாம்பவான்களாக இருக்கும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களின் வரிசையில் இதோ சுந்தர் பிச்சையும் சேர்ந்திருக்கிறார்.
தார்மிக ஆதரவு
சுந்தர் பிச்சையின் வளர்ச்சி பற்றிய விவாதங்கள் சமூக ஊடகங்களில் நடக்கின்றன. தற்போது அமெரிக்கராக இருக்கும் அவர் இந்தியாவுக்கு என்ன செய்தார் என்ற அளவிலும் பல கருத்துகள் மோதுகின்றன. ஆனால், ஹாலிவுட் படங்களில் புரூஸ் லீ எனும் ஆசியப் போர்க்கலை நிபுணன் நடிகராக வந்த பிறகுதான் வெளிநாட்டுப் படங்களில் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர்களை மரியாதையாகச் சித்தரிக்கும் மாற்றம் வந்தது.
அதுபோல இத்தகைய மாபெரும் நிறுவனங்களின் உச்சிகளுக்கு இந்திய வம்சாவளியினர் போவதேகூட இந்திய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்குமான தார்மிக ஆதரவாகவே இருக்கும். அதுவே விலைமதிப்பற்றதாகும்.
இந்தியாவின் அற்புதமான மனிதர்கள் நமது நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படாமல் வெளிநாடுகளில் குடியேறுகிறார்களே என்ற உணர்வு நாட்டை நேசிப்பவர்களுக்கு வரும். அந்த ஆதங்கத்தை இளைய தலைமுறைதான் சரிசெய்ய முடியும். ஏன் இந்தியாவிலேயே, அல்லது தமிழ்நாட்டிலே ஒரு கூகுள் உருவாகக் கூடாதா? அமெரிக்காவில் உள்ள சுந்தர் பிச்சையின் அனுபவங்களில் பாடம் கற்றுக்கொண்டு ஆயிரம் சுந்தர் பிச்சைகள் தமிழகத்தில் உருவாக மாட்டார்களா என்ன? நிச்சயம் உருவாகுவார்கள். அவர்களுக்கு உற்சாகத்தை வழங்கும் உருவமாக சுந்தர் பிச்சை இருக்கவே செய்வார்.
ஜிமெயில் மட்டுமல்ல, ஈமெயிலும்தான்
சுந்தர் பிச்சைக்கு முன்னதாக உலகின் கவனத்தை ஈர்த்திருந்த தமிழர் வி.ஏ. சிவ அய்யாத்துரை. ‘ஈமெயில்’ தொழில்நுட்பத்தையும் அந்தச் சொல்லையும் கண்டுபிடித்தவர், பல்துறை அறிவுகொண்டவர், தொழில் முனைவோர் என்று பல முகங்களைக் கொண்டவர் அவர். பல்வேறு விருதுகளைப் பெற்றிருப்பவர், பல்வேறு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர். ஆனால், இன்று அவருடைய பெயர் உலக அளவில் அறியப்படுவதற்கு ‘ஈமெயில்’ கண்டுபிடிப்பாளர் என்பதுதான் முக்கியக் காரணம். அவர் கண்டுபிடித்த ‘ஈமெயில்’ வேறு, தற்போதைய ‘ஈமெயில்’ வேறு என்றும், அவருக்கு முன்பே டாம்லிம்ஸன் ‘ஈமெயி’லைக் கண்டுபிடித்திருந்தார் என்றும் வாதங்கள் நிலவுகின்றன. எனினும், உலகின் தலைசிறந்த அறிவுஜீவிகளுள் ஒருவரான நோம் சாம்ஸ்கியே தனது மாணவர் சிவ அய்யாத்துரையின் பக்கம்தான் நிற்கிறார்.
வி.ஏ. சிவ அய்யாத்துரை
சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். சிவ அய்யாத் துரையின் சாதனைகள் எல்லாம் எங்கே தொடங்கின? சிறு வயது ஆர்வத்திலிருந்துதான். அவரது வாழ்க்கையில் அவருக்கு முதல் தாக்கம் அவருடைய பாட்டியிடமிருந்துதான் கிடைத்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த முகவூரில் இருந்த அவருடைய பாட்டி சித்த வைத்தியத்தில் தேர்ந்தவர்; விவசாயியும் கூட. பல்வேறு துறை அறிவையும் ஒன்றுசேர்க்கும் சிவ அய்யாத்துரையின் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது. சிறு வயதிலேயே பெற்றோருடன் அமெரிக்கா சென்ற சிவ அய்யாத்துரை அங்கேயும் கல்வியில் பிரகாசிக்கிறார். 1978-ல், அதாவது தனது 14 வயதில் ஒரு புராஜெக்டாக அவர் கண்டுபிடித்த விஷயம்தான் ‘ஈமெயில்’. அலுவலகத்துக்குள்ளேயே அனுப்பக்கூடிய வகையில் அவர் ‘ஈமெயி’லைக் கண்டுபிடித்திருந்தார்.
அவரது ஈமெயிலில், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ஃபோல்டர்ஸ் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. தான் கண்டு பிடித்திருந்த புதிய வழிமுறைக்கு ‘ஈமெயில்’ என்றும் பெயர் வைத்து அதற்கு காபிரைட்டைப் பதிவுசெய்தார். அப்போது மென்பொருட்களுக்கு பேடன்ட் வழங்கும் வழக்கம் இல்லாததால் காபிரைட் மட்டுமே செய்ய முடிந்தது. 1978-ல் சிவ. அய்யாத்துரை ‘ஈமெயில்’ கண்டுபிடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு ‘www’ என்றழைக்கப்பட்ட உலகளாவிய வலையமைப்பின் வருகை நிகழ்ந்தது. அதற்குப் பிறகு இணையத்தின் விரிவோடு சேர்ந்து ‘ஈமெயி’லும் விரிவடைந்தது. அதன் அடுத்த பரிமாணம் கூகுளின் ‘ஜிமெயில்’. இன்று நம் அன்றாட வாழ்வின் அத்தியாவசியமான விஷயங்களில் ஒன்றுக்குப் பின்னால் தமிழர் ஒருவரும் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே!
- தம்பி

Type in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

Education Loan to Students - 13 Banks in ONe Place - https://www.vidyalakshmi.co.in/Students/

https://www.vidyalakshmi.co.in/Students/