வெள்ளி, 8 ஜூலை, 2016

உலகமயமாக்கலும் இந்தியாவும்: ஒரு மீள்பார்வை

கட்சி 1999 பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது. அதன் புதிய பொருளாதாரக் கொள்கை எளியவர்களுக்கு எதிரானது என்ற தீவிரமான பிரச்சாரமும் அதற்கு ஒரு காரணம். 13 கட்சிகள் கொண்ட ஐக்கிய முன்னணி அரசு தேவ கௌடா தலைமையில் மத்தியில் அரசமைத்தது. புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான தீர்ப்பு என்பதால், அடுத்துவரும் வரவு-செலவு அறிக்கையில் புதிய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று எல்லாரும் எதிர்பார்த்தனர்.
காங்கிரஸ்
காங்கிரஸில் இருந்த ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் மூலமாக ஐக்கிய முன்னணி ஆட்சியில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். புதிய அரசின் முதல் வரவு-செலவு அறிக்கையில் புதிய பொருளாதாரக் கொள்கையின் வெளிப்படையான அம்சங்கள் இல்லை. ஆனால், பொருளாதாரச் சீர்திருத்தங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பணிகளை மீண்டும் செய்ய வேண்டும் என்று தொழில் துறையினரும், பன்னாட்டு நிறுவனங்களும் கூறிவந்தன. இந்தச் சூழலில்தான் 1997-ம் ஆண்டில் பிப்ரவரி 28-ல் இரண்டாவது வரவு- செலவு அறிக்கையைச் சிதம்பரம் தாக்கல் செய்தார். அது புதிய பொருளாதாரக் கொள்கையின் நீட்சியாக இருந்தது. இரண்டாம் கட்டப் பொருளாதாரச் சீர்திருத்தங்களும் அதில் இருந்ததால் ‘கனவு பட்ஜெட்’ என்று வர்ணிக்கப்பட்டது. அரசியல் சமூகக் களத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான சூழலில், இந்த முயற்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
தனி நபர் மற்றும் பெருநிறுவனங்களின் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. கருப்புப் பணத்தை வெளிக்கொணர தானே முன்வந்து கணக்கு காட்டுபவர்களுக்குத் தண்டனை இல்லாமல் வரி செலுத்த ஒரே ஒரு வாய்ப்பு அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்தியப் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டின் உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது. இறக்குமதியின் மேல் விதிக்கப்பட்ட வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. அரசும் மற்ற நிறுவனங்களைப் போலக் கடன் வாங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவை எல்லாமே புதிய பொருளாதாரக் கொள்கையின் நீட்சிதான். இதனால், அன்று சிதம்பரம் வரவு- செலவு அறிக்கையை வாசித்து முடித்தவுடன் மும்பை பங்கு சந்தைக் குறியீடு 6.5% உயர்ந்தது. உலகமயத்தின் அடுத்தகட்ட பயணமாக அந்த வரவு செலவு அறிக்கை அமைந்தது.
- இராம.சீனுவாசன், பேராசிரியர்.

*****************
சீர்திருத்தம் எனும் சொல்லை நமக்கு அவர்கள் இப்படித்தான் அறிமுகப்படுத்தினார்கள். மூன்று இலக்கணங்களோடு: 1. தாராளமயம், 2. தனியார்மயம், 3. உலகமயம். மொத்தத்தில் நவீன தாராளமயம்! 1991-ல் நவீன தாராளமயச் சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. “தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகள் இணைந்த நவீன தாராளமயத்தால் பன்னாட்டு, உள்நாட்டு முதலீடுகள் பெருகும், வேலைவாய்ப்புகள் பெருகும், வறுமை மறையும்” என்றார்கள். கடந்த 25 ஆண்டுகளின் அனுபவம் என்ன?
இந்திய மற்றும் அந்நிய முதலாளிகள் மீதான கட்டுப்பாடுகளை முற்றிலும் நீக்கி அவர்கள் தங்கு தடையின்றி லாபம் ஈட்டுவதை ஊக்குவிப்பதையே நவீன தாராளமயமாக நாம் அறிந்திருக்கிறோம். தனியார்மயத்தின் ஒரு முக்கிய அம்சம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது. இன்னொரு அம்சம், அரசின் பொறுப்பு என்று கருதப்பட்டுவந்த, பொது நன்மை நோக்கில் செயல்பட வேண்டிய கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, லாபத்தின் அடிப்படையில் அவற்றைச் செயல்படுத்துவது.
தாராளமயமும் தனியார்மயமும் இணைந்து அமலாக்கப்படும் நிலையில், லாப நோக்கில் செயல்படும் தனியார் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதும் அவற்றின் மீது சமூக நெறிமுறைகளை விதித்துச் செயல்படுத்துவதும் மிகவும் சிக்கலான விஷயங்களாகிவிட்டன. பொருளாதாரரீதியில் உலகமயத்துக்கு இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு: 1. சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த கட்டுப்பாடுகளை நீக்கி, நாட்டின் பொருளாதாரத்தைப் பன்னாட்டு வணிகத்துக்கு முழுமையாகத் திறந்துவிடுவது. இது பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பொருந்தும். 2. நிதி வடிவில் மூலதனம் நாட்டுக்குள்ளே வருவதையும் அதன் விருப்பப்படி நாட்டை விட்டு வெளியே செல்வதையும் தங்கு தடையில்லாமல் அனுமதிப்பது.
பொருளாதார வளர்ச்சி
உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 1991-2003 காலகட்டத்தில் ஆண்டுக்கு 6%-க்குச் சற்றுக் குறைவாக இருந்தது. 1991-க்கு முந்தைய 10 ஆண்டுகளின் வளர்ச்சி விகிதமும் இப்படித்தான் இருந்தது. 2௦௦3-2௦௦8 காலகட்டத்தில் இது கணிசமாக அதிகரித்தது. பின்னர் சரிந்தது. 1980-81 - 2013-14 காலகட்டத்தில் சராசரியாக 6.1%.
தாராளமய காலத்தில் வளர்ச்சி விகிதத்தில் கூடுதல் வேகம் இருந்ததாகச் சொல்ல முடியாது. எனினும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 6%-க்கும் சற்று அதிகமான வளர்ச்சி விகிதம் இருக்கிறது என்பதைப் புறந்தள்ள முடியாது. இதற்கான காரணங்கள் பல. 1980-களுக்கு முன் மேற்கொண்ட அரசு முதலீடுகள்; அதனால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி தந்த பலங்கள்; 1980-களில் தொடங்கி, பன்னாட்டு அரங்கில் கடன் பெறும் வாய்ப்புகளில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றங்கள்; ஆங்கிலமும் தொழில்நுட்பமும் அறிந்த மலிவான உழைப்புப் படை, லட்டாகக் கிடைத்த மென்பொருள் ஏற்றுமதி வாய்ப்புகள், தாராளமயக் கொள்கை களால் கிடைத்த கூடுதல் லாப வாய்ப்புகள் என்று பல காரணங்கள் உண்டு. இவற்றை உலகமயத்தின் ‘மாஜிக்’ என்று புரிந்துகொள்வது சரியல்ல. மேலும், உலகமயம் தந்துள்ள வளர்ச்சியின் தன்மையால் விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் பிரச்சினைகள் முளைத்துள்ளன.
வளர்ச்சியின் தன்மை
1984-85 - 1994-95 காலகட்டத்தில் வேளாண் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 4.1%. 1994-95 - 2004-05 காலகட்டத்தில் ஆண்டுக்கு 0.6%. மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஈடுகட்டும் அளவுக்குக்கூட உணவு உற்பத்தி அதிகரிக்கவில்லை. மாறாக, தானிய உற்பத்தி சரிந்தது. விடுதலைக்குப் பின் 1950-1995 காலத்தில் இந்த நிலைமை ஏற்படவில்லை. தொழில் துறையின் வளர்ச்சி 1984-85 முதல் 1994-95 காலகட்டத்தில் ஆண்டுக்கு 6.2% ஆக இருந்தது, 1994-95 முதல் 2004-05 காலட்டத்தில் ஆண்டுக்கு 5% எனக் குறைந்தது. இந்த இரண்டு அம்சங்களையும் சேர்த்துப் பார்த்தால், தாராளமயத்தின் முதல் 15 ஆண்டுகளில் பொருள் உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி மந்தமாகவே இருந்ததைப் புரிந்துகொள்ளலாம்.
சேவைத் துறை வளர்ந்தது என்றவுடன் பலரும் வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளையே முதலில் மனதில் கொள்வார்கள். ஆனால், இத்துறைகள் சேவைத் துறையின் ஒரு பகுதியே. இத்துறைகளில் பணிபுரிவோரில் ஒரு சிறு பகுதியினர் வசதியாக இருக்க இயலும் என்றாலும், இங்கும்கூடக் கணிசமான பகுதியினர் நிச்சயமற்ற பணிகளில் குறைந்த ஊதியங்களுக்குப் பணிபுரிகின்றனர். மறுபுறத்தில் சேவைத் துறையில் சிறுவணிகம், வேறு பல குறைந்த வருமானம் தருகின்ற சுய வேலைகளில் ஏராளமான உழைப்பாளிகள் உள்ளனர். இதன் பொருள் என்னவென்றால், தாராளமயக் கொள்கைகள், அவற்றின் முதல் பதினைந்து ஆண்டுகள் அமலாக்கத்தில் பொருள் உற்பத்தி வளர்ச்சியைப் பெருமளவிற்குச் சாதிக்கவில்லை என்பதுடன், நிகழ்ந்த சேவைத் துறை வளர்ச்சியும், ஒரு சிறிய பகுதி நீங்கலாக, பெருமளவிற்கு உற்பத்தித் திறன் உயர்வையோ, உழைப்போர் வருமான உயர்வையோ சாதிக்கவில்லை என்பதுதான். இதையடுத்து, 2004-14-ல் ஓரளவு வேளாண் வளர்ச்சியில் மீட்சி ஏற்பட்டபோதிலும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இடையிடையே அதிகரித்தபோதிலும், தாராளமயம் பாய்ச்சல் வேக வளர்ச்சி தரவில்லை என்பது தெளிவு.
வேளாண் நெருக்கடி
வேளாண் நெருக்கடியின் துயரமான அம்சம் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகள். 1997-2012 காலகட்டத்தில் 2,80,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இத்துயரம் தொடர்கிறது. வேளாண் மக்கள் எதிர்கொண்ட இந்த நெருக்கடிக்கு அரசின் தாராளமய கொள்கைகளே காரணம். அரசின் பட்ஜட் பற்றாக்குறையைக் குறைப்பது என்ற பெயரில் உரம், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட இடுபொருள் மானியங்கள் வெட்டப்பட்டு, உற்பத்திச் செலவு உயர்ந்தது. ஆனால், அளவுக் கட்டுப்பாடு இன்றி அயல்நாட்டு வேளாண் பொருட்களின் இறக்குமதி அனுமதிக்கப்பட்டதால் உள்நாட்டு விளைபொருட்கள் விலை வீழ்ச்சியைச் சந்தித்தன. நிதித்துறைச் ‘சீர்திருத்தங்கள்’ விவசாயக் கடனைக் குறைத்து வட்டி விகிதங்களை உயர்த்தின. விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டது. அரசின் செலவைக் குறைப்பது என்ற தாராளமயக் கொள்கை கிராமப்புறக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அனுமதிக்கவில்லை. பாசனம், வேளாண் விரிவாக்கம், வேளாண் ஆராய்ச்சி அனைத்துமே பலவீனமடைந்தன. பொது விநியோக முறை சீரழிக்கப்பட்டது. தனியார்மயத்தால் கல்வி, ஆரோக்கியச் செலவுகளும் அதிகரித்து விவசாயக் குடும்பங்கள் கடன் வலையில் வீழ்ந்தன. மறுபுறம், அரசின் கொள்கைகள் நிலம் மற்றும் மூலதனக் குவியலை ஊக்குவிக்கும் வகையில் நில உச்சவரம்புச் சட்டங்களை நீக்குகின்றன. விவசாயிகள் நிலம் மற்றும் உற்பத்தி சொத்துகளை இழப்பதன் மூலமும் அரசுகள் இயற்கை வளங்களை அடிமாட்டு விலைக்குப் பன்னாட்டு இன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதன் மூலமும் விவசாயிகளின் துயரம் தொடர்கிறது.
வேலைவாய்ப்புகள் பெருகினவா?
உலகமயத்தால் நிகழ்ந்துள்ள வளர்ச்சி வேலைவாய்ப் புகளைப் பெருக்கவில்லை. தொழில் துறையில், குறிப்பாக ஆலை உற்பத்தித் துறையில், முறைசார் பணியிடங்கள் அதிகரிக்கவே இல்லை. ஒட்டுமொத்தமாக உருவான பணியிடங்களும் அமைப்புசாராப் பணியிடங்கள். 1993 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் ஏதேனும் ஒரு பணியில் (சுய வேலை உட்பட) இருப்போர் எண்ணிக்கை 1.20 கோடி அதிகரித்தது. இது 1983-1994 காலத்திய வளர்ச்சியைவிட மந்தம் என்பது ஒரு செய்தி. ஆனால் மேலும் துயரமான செய்தி, 2004 முதல் 2012 வரை இந்த எண்ணிக்கை 10 லட்சம் மட்டுமே அதிகரித்தது என்பதாகும்.
சாகாக் கோடு
அரசின் வறுமைக் கோடு என்பது ஒரு சாகாக்கோடு என்றுதான் சொல்ல வேண்டும். 2011-12-ல் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு ரூ.50-க்கும் குறைவாக செலவு செய்தவர்கள் கிராமப்புறங்களில் 80%. நகரப்புறங்களிலும் கிட்டத்தட்ட 50% பேர். நாகரிக வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச அம்சங்களை வைத்துப் பார்த்தால், நமது நாட்டில் 80%-க்கும் அதிகமான மக்கள் வறியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நமது நாட்டில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப் பேர் வயதுக்கேற்ற எடையை எட்டாதவர்கள். சஹாரா பாலைவனத்திற்குத் தெற்கே வசிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில்கூட இந்த விகிதம் நான்கில் ஒரு பங்குதான்.
ஏற்றத்தாழ்வுகள்
தொழிலிலும் நிலவுடைமையிலும் பொதுவாகச் சொத்து விநியோகத்திலும் நம் நாட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்கெனவே இருந்துவந்துள்ளது என்றாலும், கடந்த 25 ஆண்டுகளில் இவை பல மடங்குகள் அதிகரித்துள்ளன. 2008-ல் அமெரிக்க டாலர் கணக்கில் ஒரு பில்லியன் டாலர் - அதாவது, 100 கோடி டாலர் சொத்து மதிப்பு கொண்ட இந்தியச் செல்வந்தர்கள் எண்ணிக்கை 41. அதன் பின் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராகப் பெரிதும் சரிந்தது, இந்த எண்ணிக்கையைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர் மாறாக, 2013-ல் இந்த எண்ணிக்கை 53, 2014-ல் 70 என்று அதிகரித்து, 2016-ல் நூறைக் கடந்தது. 130 கோடி மக்கள் வாழும் நாட்டில் 100 ஆகப் பெரிய செல்வந்தர்களின் சொத்து நாட்டின் வருமானத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காக உள்ளது.
இந்தியப் பெருமுதலாளிகள் அவர்கள் சொத்துகளைப் பிரம்மாண்டமான அளவில் அதிகரித்துள்ளனர். நாட்டின் முன்னணித் தொழில் குழுமங்கள் அவற்றின் இணைய தளத்தில் தரும் தகவலின்படியே பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. டாட்டா குழுமத்தின் சொத்து 1990-ல் ரூ.10,922 கோடி. 2012-13-ல் இது ரூ.5,83,554 கோடியாக உயர்ந்தது. இதேபோல, அம்பானி குழுமத்தின் சொத்துகள் ரூ.3167 கோடியிலிருந்து ரூ.5,00,000 கோடியாக உயர்ந்தது. மறுபுறம் சுட்டெரிக்கும் உண்மை என்ன? கணிசமான பகுதி மக்கள் அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறைகூட இன்றி நிற்கிறார்கள். ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், குழந்தைகள், ரத்த சோகையில் வாடும் வளரிளம் பெண்கள், பிறக்கும் 1000 சிசுக்களில் 40 சிசுக்கள் ஒரு ஆண்டுக்குள் இறக்கும் அவல நிலை இப்படி தொடர்கிறது கொடுமைப் பட்டியல்!
பெருகும் ஏற்றத்தாழ்வுகள்தான் கட்டற்ற தாராளமயத்தின் முக்கிய இலக்கணம். கல்வி, வேலை, மக்கள் நல்வாழ்வு, அனைவருக்கும் நாகரிக வாழ்க்கை ஆகிய இலக்குகளை அடைய, மக்கள் நலனை மையப்படுத்தும் மாற்றுப் பாதை அவசரம், அவசியம்!
- வெங்கடேஷ் ஆத்ரேயா, பேராசிரியர், தொடர்புக்கு: venkatesh.athreya@gmail.com
*************************
ஜூலை, 1991 தொடங்கிய புதிய பொருளாதாரக் கொள்கையின் தாக்கம் தெரிவதற்கு முன் நாட்டை ஒரு பெரிய வங்கி - பங்குச்சந்தை ஊழல் உலுக்கியது. ஹர்ஷத் மேத்தா என்ற முன்னாள் காப்பீட்டுத் துறை ஊழியர் திடீரென பங்குச்சந்தையில் நுழைந்து, இந்தியப் பங்குச்சந்தையின் போக்கையே மாற்றினார். அவரால் வங்கிகளுக்கு ரூ.400 கோடி நஷ்டம் ஏற்பட்டது; மும்பை பங்குச்சந்தைக் குறியீடு மூன்று மாதங்களில் இரண்டு மடங்காக உயர்ந்து விழுந்தது.
ஒவ்வொரு வங்கியும் தங்களிடம் உள்ள வைப்புத்தொகைக்கு ஏற்ப அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு வங்கியிலும் அவ்வப்போது வைப்புத்தொகை அளவு மாறுவதால், சில வங்கிகள் தங்களிடம் உள்ள அரசு கடன் பத்திரங்களை விற்கும், சில அவற்றை வாங்கும். இவர்களுக்கு இடையே தரகு வேலை செய்யும் ஹர்ஷத் மேத்தா, ஒரு வங்கியிடம் முன்பணம் பெற்று, மற்றொரு வங்கியில் அரசு கடன் பத்திரத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தை சிறிது நாட்களுக்குப் பிறகு செலுத்துவது; இந்த இடைப்பட்ட காலத்தில் வங்கிப் பணத்தைக் கொண்டு பங்குகளை வாங்கி விற்பது. இதிலும், மிகக் குறுகிய காலத்தில் ஒரு பங்கின் விலையை மிக அதிக அளவில் உயர்த்தி விற்று லாபம் பார்ப்பது ஆகிய வேலைகளில் ஈடுபட்டார். ஏசிசி என்ற நிறுவனத்தின் பங்கு விலை மட்டும் ரூ. 200-லிருந்து ரூ.10,000 ஆக உயர்ந்தது என்றால், அப்போது இவர் ஆடிய ஆட்டத்தைப் புரிந்துகொள்ளலாம். 1991-92-ல் ஹர்ஷத் மேத்தா கட்டிய வருமானவரி முன் பணம் மட்டுமே ரூ.28 கோடி!
இந்த ஊழல் வெளிவந்த உடன், ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்கப்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு 28 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இறந்துபோனார். மன்மோகன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி காங்கிரஸுக்குள்ளிருந்தும்கூடக் குரல்கள் கேட்டன. இந்த ஊழல் புதிய பொருளாதாரக் கொள்கையினால் ஏற்படவில்லை; மாறாக, விதிமீறல்களினால் ஏற்பட்டது என்று அரசுத் தரப்பு சொன்னது. “பங்குச்சந்தையில் நடப்பதை நினைத்து நான் தூங்காமல் இருக்க முடியாது” என்று அப்போது மன்மோகன் சிங் உதிர்த்த வார்த்தைகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின.
*********************
1991 பிப்ரவரியில் இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர் தீபக் நய்யாரைச் சந்தித்தார் மணி சங்கர் ஐயர். “நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருக்கிறது, வெளிநாட்டுக் கடன்களுக்குத் தவணை கட்டுவதற்குக்கூட இயலாத நிலை காணப்படுகிறது” என்று ஐயரிடம் கவலை தெரிவித்தார் நய்யார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராஜீவ் காந்தியிடம் இதை ஐயர் தெரிவிக்க, “உடனே பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கிடம் இதுபற்றிப் பேசுங்கள்” என்றார் ராஜீவ்.
ராஜீவுக்கு நெருக்கமான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆர்.டி. பிரதான் ஒரு தகவலை சுயசரிதையில் பதிவுசெய்திருக்கிறார். “தான் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதை ராஜீவ் காந்தி 1991 மே மாதம் உணர்ந்தார். புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்து நான் அவரிடம் 7 பக்க அறிக்கையை அளித்திருந்தேன். அதைப் படித்த அவர் பன்னாட்டுச் செலாவணி நிதியம், உலக வங்கி உதவியுடன்தான் பொருளாதாரத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டியிருக்கும். அதற்கான பொருளாதார வல்லுநரை அடையாளம் காண வேண்டும் என்றார். ரிசர்வ் வங்கி ஆளுநர் வெங்கிட ரமணன், ஐ.ஜி. படேல், மன்மோகன் சிங் ஆகியோரின் பெயர்கள் அவருடைய பரிசீலனையில் இருந்தன” என்று தெரிவிக்கிறார்.
நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவியேற்கவிருந்த நாளில் காலை 6.30 மணிக்கு பி.சி.அலெக்சாண்டர் புதிய அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதில் நிதியமைச்சகப் பொறுப்பை மன்மோகன் சிங்குக்கு வழங்கலாம் என்றார். அதை உடனடியாக ஏற்ற நரசிம்ம ராவ், நிதியமைச்சகப் பொறுப்பை ஏற்குமாறு மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டார். தான் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு நரசிம்ம ராவ் துணையாக இருப்பார் என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகே மன்மோகன் சிங் அந்தப் பொறுப்பை ஏற்றார்.
- ராமசீனிவாசன், பேராசிரியர்.
******************
உலகமயமாக்கல் எனும் புதிய உலகுக்குள் 1991-ல் இந்தியா நுழைந்தது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய கட்டாயம்; வாங்கிய கடனுக்குத் தங்கத்தை அடமானம் வைக்கும் நிலை என்று தத்தளித்துக்கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரம், கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் துணிச்சலுடன் அந்த முடிவை எடுத்தது. இதோ இன்றைக்கு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் தருணம் இது!
1991 பொருளாதார நெருக்கடி: என்ன பின்னணி?
வெளிநாட்டில் வாங்கிய கடனின் ஒரு தவணையைக்கூட இந்தியா செலுத்தத் தவறிவிடுமோ என்ற இக்கட்டான பொருளாதாரச் சூழல் அக்காலகட்டத்தில் உருவாகி யிருந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுக் கடன் 26%, உள்நாட்டுக் கடன் 55%. அப்போது இந்தியாவிடம் இருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பு இரண்டு வார இறக்குமதிக்குக்கூடப் போதவில்லை. இச்சூழலில், வெளிநாட்டுக் கடன் தவணையை எவ்வாறு கொடுப்பது? இதுமட்டுமல்லாமல், ஏற்றுமதி - இறக்குமதி இடைவெளி அதிகரித்துக்கொண்டே போனது. அரசின் உள்நாட்டுக் கடன் பெருகியதால் இரண்டு விளைவுகள் ஏற்பட்டன ஒன்று, பண அளிப்பு அதிகரித்து விலைவாசி 15%-தைக் கடந்தது. இரண்டு, வட்டி விகிதம் உயர்ந்து தனியார் முதலீடும் தேய்ந்தது.
இந்தச் சிக்கல் வர என்ன காரணம்?
பொருளாதாரச் சிக்கல் என்பது, நேற்று பெய்த மழையில் நனைந்து இன்று காய்ச்சல் வருவது போலன்று. பல ஆண்டுகளாக நடந்துவரும் பொருளாதார நிகழ்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாதது, சாதுரியமான அரசியல் ஆளுமை இல்லாமல் - சரியான பொருளாதாரக் கொள்கை முடிவுகளை எடுக்காமல் இருந்ததன் ஒட்டுமொத்த விளைவுதான் 1991 பொருளாதாரச் சிக்கல்.
அப்படியானால், 1950-90 காலகட்டத்தின் 40 ஆண்டு பொருளாதாரக் கொள்கைகள்தான் இதற்குக் காரணமா?
இல்லை. பொருளாதாரக் கொள்கைகளும் நடவடிக்கை களும் தொடர் நிகழ்வுகளாக இருந்தாலும், 1980-களில் இந்தச் சிக்கலுக்கான விதை ஆழமாக ஊன்றி வளர்ந்தது. இந்த 10 ஆண்டுகளில் 8 நிதி அமைச்சர்கள் இருந்துள்ளனர். இதில், கடைசி 5 ஆண்டுகளில் மட்டும் 6 நிதி அமைச்சர்கள் இருந்திருக்கின்றனர். இப்படியான நிலையில், பொருளாதாரக் கொள்கைகளில் தொடர்ச்சி எப்படி இருந்திருக்கும்?
1980 நிலவரம்தான் இந்தச் சிக்கலின் தொடக்கமா?
1980-ல் நாம் இதுபோன்ற ஒரு பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்தோம். அன்றும் இறக்குமதிக்குப் போதிய அந்நியச் செலாவணி இல்லாமல், அரசின் பட்ஜெட் பற்றாக்குறை அதிக ரித்து, பணவீக்கம் உயர்ந்து, இந்தச் சூழலில் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் ஒரு பில்லியன் டாலர் வரை கடன் வாங்கினோம். இதில் பெரும் பகுதி பெட்ரோலியத் துறையில் முதலீடு செய்யப்பட்டது. 1981-82-ம் ஆண்டு பட்ஜெட்டின் பற்றாக்குறையும் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதற்காக வரி வருவாய் பெருக்கப்பட்டது, பெட்ரோல், உரம், மின்சாரம் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால், அடுத்த ஆண்டே இந்த முயற்சிகள் கைவிடப்பட்டு, மீண்டும் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை உயர ஆரம்பித்தது.
1980-களில் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்ததற்கு என்ன காரணம்?
1980-கள் முழுவதும் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை 7% முதல் 10% வரை இருந்தது. ஒருபுறம் அரசின் வரி வருவாய் அதிகரிக்கவே இல்லை. வரி வருவாயும், வரி அல்லாத வருவாய்களாக இருக்கும் அரசு நிறுவனங்களின் லாபம், அரசுத் துறைகளின் வசூல் என எதுவும் உயரவில்லை. அவற்றை உயர்த்த அரசும் முனையவில்லை. அரசின் செலவுகள் பல வகைகளில் உயர்ந்தது - அரசுத் துறை நிறுவனங்களின் முதலீட்டினை உயர்த்தியது, அதிகக் கடனை அதிக வட்டிக்கு வாங்கியதும் அடுத்த ஆண்டுகளில் அரசின் வட்டிச் செலவை உயர்த்தின. அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியச் செலவுகள் உயர்ந்தன.
அந்நியச் செலாவணிச் சிக்கலுக்கு என்ன காரணம்?
1980-களின் முற்பகுதியில் அரசுத் துறை நிறுவனங்களில் முதலீடுகளை அரசு உயர்த்தியது. அதே நேரத்தில், அரசு நிறுவனங்கள் வெளிநாடுகளில் கடன் வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. முதலீடுகள் உயர்ந்தாலும், அரசு நிறுவனங்களின் லாபம் உயராமல் இருந்ததால், வாங்கிய கடனுக்கான முதலும் வட்டியும் 1980-களின் பிற்பகுதியில் பெருகிக்கொண்டே போனது. இவற்றை அந்நியச் செலாவணி கொண்டுதான் அடைக்க வேண்டும். 1980-களின் பிற்பகுதியில் இந்தியாவில் அந்நிய முதலீடும், இறக்குமதியும் தாராளமாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இறக்குமதி உயர்ந்ததுபோல ஏற்றுமதி உயராமல் இருந்ததால் அந்நியச் செலாவணி செலுத்துநிலையில் இடைவெளி அதிகரித்தது.
இந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த அந்நிய நாட்டுக் கொடைகளும் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தன. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்தது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் வைத்திருந்த சேமிப்புக் கணக்கு வைப்பு நிதியும் குறைய ஆரம்பித்தது.
இது எப்படிப் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது?
1970-களுடன் ஒப்பிடும்போது 1980-களில் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தது. 1980-வரை இந்தியாவின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 3.5% வரைதான் இருந்தது. இதனை ‘இந்து வளர்ச்சி விகிதம்’என்றே பழித்தனர். அதாவது, இந்தியா இதற்கு மேல் வேகமாக வளர முடியாது என்ற எண்ணம் அது. இதைப் பொய்யாக்கும் விதத்தில் 1980-களில் 5% பொருளாதார வளர்ச்சியை அடைந்தோம். ஆனால், இந்த வளர்ச்சி நிலையில்லாதது என்பதை வெகுவேகமாகப் புரிந்துகொண்டோம். 1991-92-ல் இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1.2%தான்.
பணவீக்கம் அதிகரித்ததற்கு என்ன காரணம்?
அப்போதுள்ள நடைமுறைப்படி இந்திய அரசு பட்ஜெட் பற்றாகுறையைச் சரிக்கட்ட இரண்டு வழிகளில் கடன் வாங்கலாம். ஒன்று, மத்திய ரிசர்வ் வங்கியிடம். மற்றொன்று, அதனிடம் உள்ள அரசு வங்கிகளிடம். மத்திய ரிசர்வ் வங்கிக்கு அரசு தன் கடன் பத்திரங்களைக் கொடுத்து, மிகக் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கலாம். மத்திய ரிசர்வ் வங்கியும் அதற்கு இணையாகப் பணத்தை அச்சிட்டு வழங்கும். இதனால் பணவீக்கம் ஏற்படும். அரசுத் துறை வங்கிகளிடம் மத்திய அரசு கடன் வாங்கும்போது, வங்கியினால் தனியார் துறைக்குக் கடன் கொடுக்கப் பணம் இருக்காது. அல்லது அதிக வட்டிக்குத்தான் கடன் கொடுக்க வேண்டும். இதனால், தனியார் உற்பத்திச் செலவு உயர்ந்து பணவீக்கம் ஏற்படும். எனவே, அரசு தொடர்ந்து அதிக பட்ஜெட் பற்றாக்குறை வைத்திருந்ததால், பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போனது.
இதற்கான முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் எதுவும் நமக்குத் தெரியவில்லையா?
1980-களில், மத்திய அரசு ‘தொடர்ந்து பட்ஜெட் பற்றாக் குறையை வைத்திருப்பது தவறு, அதனைச் சரிசெய்ய மத்திய ரிசர்வ் வங்கிடம் கடன் வாங்குவதும் தவறு’ என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் மன்மோகன் சிங்கும்(1982-85), ஆர்.என். மல்ஹோத்ராவும் (1985-90) சுட்டிக்காட்டினர். இது பணவீக்கத்தை அதிகரிக்கிறது என்பதை எடுத்துக்காட்டி எச்சரித்தனர். இதை யாரும் கேட்கவில்லை. குறிப்பாக ஆர்.என்.மல்ஹோத்ரா மத்திய அரசுக்கு 1989 மே மாதம் எழுதிய கடிதத்தில், “தீர்க்கமான முடிவுகள் எடுக்கா விடில், அந்நியச் செலாவணி செலுத்துநிலை பற்றாக்குறை விரிவடையும். குறிப்பாக, குறைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதால், ஏற்றுமதி - இறக்குமதி இடை வெளியைக் குறைக்க வேண்டும்” என்று எச்சரித்தார்.
உலக வங்கி தனது ஆண்டு அறிக்கைகளில் அவ்வப் போது இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்தது. குறிப்பாக, கட்டுக்கடங்காமல் போகும் அந்நியச் செலாவணி செலுத்துநிலை பற்றாக்குறை, பட்ஜெட் பற்றாக்குறை ஆகியவற்றை அந்த அறிக்கைகள் சுட்டிக்காட் டின. உலக வங்கியிடம் கடன் வாங்கப்போவதில்லை என்று நினைத்ததால் அவர்கள் சொல்வதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.
இந்தியா தங்கத்தை அடமானம் வைத்ததாகச் சொல்லப்பட்டதே?
1991 மே 16-ல் இந்திய ஸ்டேட் வங்கி 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை சுவிட்சர்லாந்த்தைச் சேர்ந்த ஒரு வங்கியிடம் விற்றது. 1991 ஜூன் 21-ல் நரசிம்ம ராவ் பிரதமராகவும், மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் பதவி ஏற்றனர். ஜூலை 4-18, 1991 ஆகிய இரண்டு வாரங்களில் நான்கு தவணைகளில் மத்திய ரிசர்வ் வங்கி, இங்கிலாந்து வங்கியிடம் 47 டன் தங்கத்தை அடமானம் வைத்து 400 மில்லின் டாலர் கடன் வாங்கியது. தங்கத்தை அடமானம் வைக்கும் முடிவு முந்தைய அரசு மே மாதமே எடுத்தாலும் அதனைச் செயல்படுத்த ஜூலை மாதம் ஆனது. இதுமட்டுமல்லாமல் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் 220 மில்லியன் டாலர் அவசரக் காலக் கடன் வாங்கினோம். ஜூலை 24, 1991 மன்மோகன் சிங் தனது முதல் பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார்.
இதுதான் புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆரம்பமா?
ஆம். அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த பெட்ரோல், உரம், சர்க்கரை, சமையல் எரிவாயு ஆகிய பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்கப்படுத்தப்பட்டனர். கருப்புப் பணத்தையும் சொத்தையும் மீண்டும் கணக்கில் கொண்டுவந்து வரி செலுத்த ஒரு முறை வாய்ப்பு வழங்கப் பட்டது. வட்டி வருமானம், கமிஷன் வருமானம் வழங்கும் போது வருமான வரிப் பிடித்தம் செய்ய வழி செய்யப்பட் டது. ஏற்றுமதி ஊக்கப்படுத்தப்பட்டது. வெளிநாட்டு முதலீடு களை இந்தியா கவர புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. ஏற்றுமதித் தொழிலில் உள்ள நிறுவனங்கள் இறக்குமதி செய்ய வழிமுறைகள் எளிதாக்கப்பட்டன. இந்திய ரூபாயின் அந்நியச் செலாவணி மாற்று விகிதம் ஜூலை 1 அன்று 9% மீண்டும் ஜூலை 3 அன்று 11% குறைக்கப்பட்டது. இதனால் இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உருவானது.
அடுத்த சில மாதங்களில் பல பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் நிகழ்ந்தன. வரி விதிப்பு எளிமையாகி, வரி விகிதங்கள் குறைந்தன. அரசு செலவுகளைக் குறைக்க முடிவு கள் எடுக்கப்பட்டன. பொதுத் துறை முதலீடுகள் தனியாருக்கு விற்கப்பட்டன. இறக்குமதி எளிமையாக்கப்பட்டு, அதன் மீது வரி விகிதமும் குறைக்கப்பட்டது. பங்குச் சந்தையைக் கண் காணித்து முறைப்படுத்த ‘செபி’க்கு அதிகாரம் வழங்கப்பட் டது. வங்கிகளில் அரசு கடன் வாங்குவது குறைந்து, தனியாருக்குக் கடன் கொடுப்பது ஊக்குவிக்கப்பட்டது. தொழில் துறை மீதான எல்லா கட்டுப்பாடுகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. எல்லாத் துறைகளிலும் தனியார் துறை பங்களிப்பு ஊக்கப்படுத்தப்பட்டது.
நவீன இந்தியாவில் உலகமயம் பிறந்தது!
- இராம. சீனுவாசன்
சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
***************************
அந்த நேரத்துல வீட்டுல ரொம்ப கஷ்டம். வீடே ‘நிறைஞ்ச பாக்கியமா’ இருந்துச்சு. ஒரு பொட்டுத் தங்கம் இல்ல. எல்லாத்தையும் அடகுவச்சுத்தான் சமாளிச்சோம்” என்று சொல்லும் அளவுக்குப் பெரும்பாலான குடும்பங்களில் ஒரு கசப்பான கடந்தகாலம் இருக்கும். அப்படிப்பட்ட நிலை 1990-களில் இந்தியாவுக்கே இருந்தது.
அப்போது வளைகுடா நாடுகளில் போர் நடந்தது. எண்ணைய் விலை உயர்ந்தது. உலக நாடுகளுக்கு இந்தியா செலுத்த வேண்டிய தொகை பல மடங்கு அதிகரித்தது. இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு கரைந்தது. இரண்டு வாரங்களுக்கான இறக்குமதிகளைச் சமாளிக்கும் அளவுதான் நம்மிடம் பணம் இருந்தது. சர்வதேச நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை ஒரு நாடு திரும்பத் தர முடியாமல் போவது என்பது அவமானமாகக் கருதப்படும். அதன் பிறகு, உலக நாடுகளிடம் நம்பிக்கை போய்விடும்.
அந்தக் காலகட்டத்தில் பிரதமராக சந்திரசேகர் இருந்தார். அவரது அரசாங்கம் இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறியது. அப்போதுதான் இந்தியா டன் கணக்கில் தங்கத்தை உலக வங்கியில் அடகு வைக்கும் நிலைக்கு வந்தது. அவருக்கு அடுத்தபடியாக 1991 ஜூன் 21-ல் பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவியேற்றார். பதவியேற்பதற்கு முன்னதாகவே அவருக்கு நாட்டின் பொருளாதார நிலை பற்றி உயர் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். ரூபாயின் மதிப்பைக் குறைக்க வேண்டும் என்று கோரினார்கள். நரசிம்ம ராவ் பதவியேற்றதும் அவரது அலுவலகத்தில் இரவு பகலாகத் தொடர் கூட்டங்கள் நடந்தன. நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் பரபரப்பாக இயங்கின. பிரதமர் நரசிம்ம ராவும் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கும் நிலைமையைச் சிறப்பாகச் சமாளித்தனர்.
ஜூலை 1 மற்றும் 3 தேதிகளில் இரண்டு கட்டமாக ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டது. பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பின. உலக வங்கியின் நிர்ப்பந்தத்துக்கு நாடு பணிந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ‘‘உலக சமூகம் சந்தோஷப்படுவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்தால் நம் நாட்டின் பொருளாதாரம் மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்” என்றார் மன்மோகன் சிங்.
இன்றைக்கு ரூபாய் ஒரு நிலையான மதிப்பைக் கொண்ட பணமாக உருவாகியுள்ளது. அப்போதைய பொருளாதார நிலையைவிட மேம்பட்டதாக நாடு தற்போது மாறியுள்ளது. தங்கம் உள்ளிட்ட அந்நியச் செலாவணி கையிருப்புகள் 11 மாதங்களுக்குத் தேவையான அளவு நம்மிடம் உள்ளது.
**********************




புதன், 6 ஜூலை, 2016

உலக மகா ஒலிம்பிக்: வேடிக்கையும் விநோதமும்

http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8815066.ece?widget-art=four-all

****

ஒலிம்பிக் சகாப்தம்: கறுப்பு வைரம்

ஒலிம்பிக் என்றதும் நினைவுக்கு வரும் சாதனை முகங்களில் முதன்மையானது ஜெஸ்ஸி ஓவன்ஸ். ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் பெரும்பாலோரது பாராட்டுகளை யாராவது ஒருவர் ஒட்டுமொத்தமாக அள்ளிச் செல்வார். அப்படி உச்சபட்ச சாதனை புரிந்தவர்களில் முதன்மையானவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஓவன்ஸ்.
1936-ம் ஆண்டில் ஹிட்லர் ஆட்சியிலிருந்தபோது ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அப்போதுதான் ஓவன்ஸ் உலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.
வறுமையான குடும்பத்தில் பிறந்த ஓவன்ஸ், சிறு வயதில் வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப்பட்டவர். அவரது தாத்தா அமெரிக்கர்களிடம் அடிமையாக இருந்தவர். 10 வயதாவதற்கு முன்பே சின்னஞ்சிறுவனாக வயலில் பருத்தி எடுத்தல், பெட்ரோல் நிரப்புதல், மளிகைப் பொருட்களை கொண்டு போய்க் கொடுக்கும் வேலை என பல்வேறு வேலைகளை ஓவன்ஸ் செய்துவந்தார்.
அமெரிக்காவில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஒஹையோ மாகாணப் பல்கலைக்கழத்துக்காகப் பங்கேற்றபோது, வெறும் 45 நிமிடங்களில் நான்கு புதிய உலக சாதனைகளைப் படைத்தார். பொதுவாகவே கறுப்பினத்தவரை இளக்காரமாகப் பார்க்கும் அமெரிக்கர்களால், ஓவன்ஸின் உலக சாதனைகளை உடனடியாக ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
ஹிட்லர் ஆட்சியின் கீழ் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்றுதான் அமெரிக்கா முதலில் நினைத்திருந்தது. ஆனால், ஓவன்ஸின் மேற்கண்ட அதிரடி சாதனைகள், பெர்லின் ஒலிம்பிக்கில் அமெரிக்கா பங்கேற்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
அதில் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 400 மீ. தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய நான்கு போட்டிகளில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கேற்றார். பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் தங்கப் பதக்கத்தை அள்ளினார். இது ஒலிம்பிக் வரலாற்றில் முதன்மைச் சாதனையாகக் கருதப்படுகிறது.
இன்னொரு விஷயத்துக்காகவும் ஓவன்ஸ் நினைவுகூரப்படுகிறார். நீளம்தாண்டுதல் தகுதிச் சுற்றுக்கு முன்னதாக வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஹிட்லர் வந்திருந்தார். அனைவருடனும் கைகுலுக்கிய ஹிட்லர், ஓவன்ஸிடம் மட்டும் கைகுலுக்கவில்லை. ஆப்பிரிக்கர்கள் வெற்றி பெறுவதை அவர் விரும்பாமல் இருந்ததே காரணம். ஆனால், ஆடுகளத்தில் ஹிட்லருக்கு சரியான பதிலடி கொடுத்தார் ஓவன்ஸ்.
இன்றளவும் உடல்திறனை மட்டுமே நம்பி விளையாடப்படும் தனிநபர் போட்டிகளில், ஆப்பிரிக்கர்களே பெருமளவு வாகை சூடி வருவது குறிப்பிடத்தக்கது.

உலகமயமாக்கல் 25 ஆண்டுகள் ---வளர்ச்சிக்கு அடிகோலிய தீர்க்கதரிசி

உலகமயமாதல் என்பதற்கான பொருளியல் அர்த்தம், நாடுகளிடையே பொருட்கள், பணிகள், முதலீடுகள் எல்லாம் தடையின்றிச் சென்று வர வேண்டும். அதாவது, 1.ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் தடை இருக்கக் கூடாது. அதன்மீது வரி விகிதங்களும் குறைவாக இருக்க வேண்டும். 2. முதலீடுகள் தடையின்றி வந்து செல்ல வேண்டும். இதனுடன் தொடர்புடைய மற்றொரு செய்தி, ஒரு நாட்டின் நாணய மதிப்பு அந்நியச் செலாவணி சந்தையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதாவது, அரசு தன்னிச்சையாக நாணய மதிப்பை நிர்ணயிக்கக் கூடாது.
1992-93 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்கான உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டது. அந்நியச் செலாவணி சந்தையை உருவாக்கவும், படிப்படியாகச் சந்தை முறையில் ரூபாய் மாற்று மதிப்பை நிர்ணயிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1993 டிசம்பர் 15-ல் உலக வர்த்தக நிறுவனம் (WTO) உருவாக்க வரையப்பட்ட உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது. அதன் உறுப்பு நாடாகவும் சேர்ந்தது.
இந்த அமைப்புதான் இன்று உலக நாடுகளின் வர்த்தகம் தொடர்பான அனைத்துப் பொருளாதார அம்சங்களையும் தீர்மானிக்கிறது.
இந்திய இறையாண்மையை எதிர்க்கும் உலக வர்த்தக நிறுவனம் போன்ற ஓர் அமைப்பை ஏற்கக் கூடாது என்றும், இதன் பல அம்சங்கள் இந்திய மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் எதிரானது என்றும் விமர்சனக் குரல்கள் எழுந்தாலும், இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும், 128 நாடுகளும் கையெழுத்திட்டன. ‘இதனால் பன்னாட்டு வர்த்தகம் வளர்ந்து, எல்லா நாடுகளின் பொருளாதாரங்களும் வளரும். மிகக் குறைந்த வளர்ச்சி உள்ள நாடுகளுக்குச் சலுகைகள் உண்டு. எனவே, சிறிய மற்றும் வளரும் நாடுகள் அச்சம் அடையத் தேவை இல்லை’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பன்னாட்டு வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல அம்சங்களில் சட்டரீதியான மாற்றங்களைச் செய்து, இப்போது முழுமையாக உலகப் பொருளாதாரத்துடன் இணைந்த ஒரு நாடாக உள்ளது இந்தியா!
- இராம.சீனுவாசன், பேராசிரியர்.
***********
ஆழி செந்தில்நாத
வாஸ்கோ ட காமா போன்ற ஐரோப்பியக் கண்டுபிடிப்பாளர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் பிரவேசிக்கும் முன்பு, சீனாவின் மிங் வம்சத்தைச் சேர்ந்த அதிசயக் கடல் தளபதியான ட்சங் ஹ, அவரது உலகக் கடல் பயணத்தின் ஒரு பகுதியாக இப்பகுதிக்கு ஒரு பெரும் படையோடு வந்தார். 1409-ல், இலங்கையில் காலி நகரில் அவர் ஒரு மும்மொழிக் கல்வெட்டை நிறுவினார். உலக அளவில் தமது வர்த்தகம் செழிப்புற வேண்டும் என்பதற்காக, அவர் அல்லாவையும் புத்தனையும் தென்னாவரம் நாயனாரையும் அதில் வேண்டிக்கொண்டிருந்தார். அந்தக் கல்வெட்டு சீன, பாரசீக, தமிழ் மொழிகளில் இருந்தது.
அல்லாவையும் புத்தனையும் உங்களுக்குத் தெரியும். ஆனால், தென்னாவரம் கோயிலின் தெய்வத்தை உங்க ளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. வாஸ்கோ ட காமாவை உங்களுக்குத் தெரியும். ட்சங் ஹ பற்றி? ஆசியப் பிரதேசத்தில் சீனமும் அரபியும் பாரசீகமும் வர்த்தக மொழிகளாக இருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்தப் பட்டியலில் நமது தமிழும் இருந்தது என்பதை? தென்னாவரம் கோயிலின் இறைவனை மிங் வம்சத்தின் கீர்த்திமிக்க கடற்தளபதி வேண்டிக்கொள்ள பின்னிருந்த காரணம் பக்தி அல்ல; குமரிப் பெருங்கடலின் அன்றைய புவிசார் அரசியல்.
வரலாற்றின் சதுக்க பூதம்
இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழர்களையும் தமிழகத்தையும் தமிழையும் பற்றி யோசிக்கும்போது, வரலாற்றின் சதுக்க பூதம் நம்மைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. வண்டிவண்டியாய் மயில்பீலிகளைப் பழைய ஏற்பாடு சாலமனின் தேசத்துக்கு அளித்த காலம் முதல் ட்சங் ஹ தென்னாவரம் இறைவனை வேண்டிய காலம் வரை, எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடலின் மையப் பகுதியின் வர்த்தக உரிமையைத் தம்மிடம் வைத்திருந்தது பண்டைய தமிழகம். அவரவர் பகுதியில் அவரவர் வர்த்தகம் என்பது அன்றைய கடல்சார் பட்டுப் பாதை நியதியாக இருந்தது. நமது இடம் நம்மிடம் இருந்தது.
14,15-ம் நூற்றாண்டுகளில் தமிழகம் தன் அரசியல் இறையாண்மையை இழந்தது. ஆனால், அந்தக் காலம் தமிழர்களின் மரபணுக்களில் பதிந்துவிட்டதை யாரும் மாற்ற இயலவில்லை. அதனால்தான் 90-களில் புதிய உலகமயமாதல் ஒன்று அமெரிக்கத் தலைமையில் ஏற்பட்டபோது, அந்தப் புதிய ஒழுங்கில் வெகு இலகுவாகத் தமிழகமும் சென்று ஒட்டிக்கொண்டது.
அன்றைய தமிழர்கள் பிரமாதமான உலக வர்த்தகர்கள். கிபி முதல் நூற்றாண்டின் கிரேக்க நூலான
‘பெரிப்ளஸ் மேரீ எரித்ரேயி' தமிழகத்தின் சேர, பாண்டிய துறைமுகங்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் வர்த்தக வாசல்களாக இருந்தன என்பதைக் காட்டுகிறது. தமிழ் வணிகர்கள் தங்கள் நாட்டின் விளைபொருட்களான முத்தையும் ஆடைகளையும் மட்டும் அங்கே விற்கவில்லை. இமயத்திலிருந்தும் வடகிழக்கு இந்தியாவிலிருந்தும் வாசனைத் திரவியங்களைக் கொள்முதல் செய்து, அவற்றைக் கிழக்குலகுக்கும் மேற்குலகுக்கும் ஏற்றுமதி செய்தார்கள். தமிழக, இந்திய, மேற்குலகப் பண்டங்களின் படங்களுடனான அழகான பட்டியல் ஒன்றை எடுத்துக்கொண்டுதான், தங்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை நல்க வேண்டும் என்று கோருவதற்காக, பிற்காலச் சோழர்களின் தூதுவர்கள் சீனப் பேரரசர்களைச் சந்தித்தார்கள். கடலோடிச் சமூகத்துக்கு வேறென்ன தெரியும்?
உலகமயமாதல் விதை
அந்த மரபணு இன்னும் இருக்கிறது. தமிழகம் நவீன காலத்தின் ஒவ்வொரு பொருளாதார யுகத்திலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்திருக்கிறது. நேருவின் திட்டமிடப்பட்ட பொருளாதார யுகத்தின் அரசு, பொதுத் துறை வேலைகளைப் பெறுவதற்கு இடஒதுக்கீடு என்கிற கருவியை ஏந்தியது. பிறகு, தமிழ் அடையாள, மாநில உரிமை மனநிலையும் இடஒதுக்கீடும் மாநிலம் தழுவிய உள்கட்டமைப்பு வசதியும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தின. 1965 மொழிப் போராட்டத்தினூடாக நாம் தக்கவைத்துக்கொண்ட ஆங்கிலமும் 80-களில் எம்ஜிஆர் காலத்தில் தொடக்கக் கல்வியில் சத்துணவும் இடைநிலைக் கல்வியில் ப்ளஸ் டூ முறையும் உயர் கல்வியில் தனியார் பொறியியல் கல்லூரிகளும் தமிழ் நிலத்தை எதையோ எதிர்பார்த்துப் பண்படுத்திவைத்திருந்தன. 90-களில் உலகமயமாதல் வந்தபோது, அந்த நிலத்தில் விதைகள் விழுந்தன. உலகின் தகவல்நுட்பத் தேவைகளுக்கான சேவைகளை அளிக்க நம்மை நொடிப்பொழுதில் தகவமைத்துக்கொண்டோம். மெய்நிகர் பட்டுப்பாதையில் நமக்கான ஓர் இடத்தை உருவாக்கத் தெரிந்துகொண்டோம்.
இந்த அழகான சித்திரத்தின் மறு பகுதியில் நாம் அபாயகரமான தீங்குகளையும் வெகுவிரைவில் கண்டோம். மனித வளத்தின்மீதும் இயற்கையின்மீதும் உள்நாட்டுப் பொருளாதார இறையாண்மையின்மீதும் வாழ்வின் ஒவ்வொரு கூறின்மீதும் இந்த உலகமயமாதல் ஏற்படுத்திவரும் தீங்குகளை வெகுவிரைவில் கண்டறிந்தோம். அதனால்தான் எவ்வளவு வேகமாக உலகமயமாதலுக்கு உட்பட்டோமோ அதே வேகத்தில் அதன் தீங்குகளுக்கு எதிரான போராட்டங்களையும் நாம் நடத்தத் தொடங்கினோம்.
கார்ல் மார்க்ஸ்தான் சரி
உலகமயமாதல், அது செல்லும் இடங்களில் எல்லாம் உருவாக்கும் ஏற்றத்தாழ்வை தமிழகமும் இன்று காண்கிறது. உலகமயமாதலின் தொடக்க பதிற்றாண்டுகளில் (1990-2010) அந்த ஏணியில் சரசரவென ஏறிய இளைஞர்களின் சமூகப் பின்புலம் வேறு. அவர்களில் பெரும்பாலானோர் மேல், மேல்-இடைநிலைச் சாதிகளிலிருந்து வந்தவர்கள். அந்த ஏணியில் ஏறுவதற்கான வாய்ப்புகள் அற்ற அல்லது மறுக்கப்பட்ட ஒரு பெரும் சதவீத மக்கள் குறிப்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அதனால், கொதித்துப்போயிருக்கிறார்கள். இந்த முரண்தான் இன்று தமிழ்நாட்டில் திராவிட - எதிர் தமிழ்த் தேசியம், ஆதிக்க சாதி எதிர் - தலித் அரசியல், இயற்கைவள மாஃபியா எதிர் - பசுமை இயக்கம் என உருவெடுத்திருக்கிறது. வரலாற்றில் பொருளாயத பின்புலத்தைக் கருத்தில்கொள்ளாமல் எந்த முரணையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. மீண்டும் கார்ல் மார்க்ஸ்தான் சரி: ஏடறிந்த வரலாறு எல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுகளே.
இதற்கிடையில், உலகமயத்தின் இறக்கைகளை அணிந்து மீண்டும் பறந்துசென்றான் தமிழன். சோழர் காலத்துக்குப் பிறகு, கூலிகளாக மட்டுமே சென்றவன், 90-களிலிருந்து சம்பளக்காரனாகச் செல்லத் தொடங்கினான். மெல்ல மெல்ல தனக்கான உலக உறவுகளையும் கலாச்சாரத்தையும் அவன் உருவாக்கிக்கொள்ளத் தொடங்குகிறான். தமிழ் அடையாளத்தை மீட்டெடுக்கிறான். இன்று உலகத் தமிழர் என்றொரு வலைப்பின்னல் இருக்கிறது. அது ஈழத்துக்கும் சென்னை வெள்ளப் பேரிடருக்கும் எதிர்வினை புரிகிறது. அது நூறு உலக நகரங்களிலிருந்துகொண்டு ‘கபாலி’யையும் செல்லினத்தையும் தரவிறக்கம் செய்கிறது. தமிழ்க் கணினி உலகம் ஒன்றே சாட்சி, உலகத் தமிழர்களின் உறவுக்கு.
சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகு, மீளத் திருப்ப முடியாத இந்த உலகமயமாக்கத்தை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதுதான் இப்போதைய கேள்வி. நாம் 90-களுக்கு முந்தைய காலத்துக்குத் திரும்புவது சாத்தியமில்லை. நாம் போக வேண்டிய வழி என்ன?
நமது பலம் எதில்?
நமது வரலாறே நமக்கான அந்த வழியைக் காட்டுகிறது. நவீன வர்த்தகத்தில், புதிய சமூகப் பொறுப்புகளின் வரையறையின் கீழ், நாம் நமக்கான இடத்தை அடைவது மட்டுமே நமது அக, புற நெருக்கடிகளுக்கான தீர்வாகும். தமிழகத்தில் சமூகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திறவுகோலும் அங்கேதான் இருக்கிறது.
உலகமயமாதல் என்பது, இனி ஒருவழிப் பாதையோ ஒற்றைப் பரிமாணமுடையதோ அல்ல. உலகப் பொருளாதாரத்துக்கு ஒவ்வொரு சமூகமும் ஆற்றக்கூடிய பிரத்யேகப் பங்களிப்புகள் உண்டு. இன்ன பொருளை, இன்ன தேசத்திலிருந்து வாங்கினால் சிறப்பு. அப்படியானால், இன்ன பொருளைத் தமிழகத்திலிருந்து வாங்கினால்தான் சிறப்பு என்று கூறும்படியான பொருட்களையும் சேவைகளையும் நாம் அளிக்க முடியுமா? முத்து, பாண்டிய தேசத்திலிருந்து வந்தால்தான் பெருமை. தேறல், யவன தேசத்திலிருந்து வந்தால்தான் கிறக்கம். கார், ஜப்பானிலிருந்தும் ஆலோசனைச் சேவைகள் அமெரிக்காவிலிருந்தும் வந்தால்தான் சரி.
உலக அங்காடியில் நமது பங்கு என்ன என்பதையும், அதை மனித/இயற்கை வளத்துக்குத் தீங்கின்றி உருவாக்கும் வழிமுறைகளையும் நாம் கண்டறிய வேண்டும். நமது பலம் எதில்? திரைப்பட நுட்பங்களா? மென்பொருளா? இயற்கை உணவா? இட்லி - தோசையா? டி-ஷர்ட்டா? எதிர்வரும் காலத்தில் எதில் நாம் கில்லாடிகளாக இருக்கப்போகிறோம்? தகவல் தொழில் நுட்பத்திலா, பசுமை ஆற்றலிலா? நாம் பட்டியலிட்டாக வேண்டும். அதில் நிபுணத்துவம் பெற்றாக வேண்டும். நாம் சுமங்கலித் திட்டங்களை அனுமதிக்கத் தேவையில்லை. நியாயச் சந்தை முறைகளை கைக்கொள்ளும் வணிகங்களுக்கே இனி எதிர்காலம் உண்டு. அதே சமயத்தில்,
‘அவுட்சோர்ஸிங்' முறையில் மட்டுமின்றி, தமிழகத்தின் பிராண்டுகளை உருவாக்கி எடுத்துச்செல்ல வேண்டும்.
தமிழர்களுக்கான அலிபாபா
தமிழ்நாட்டில் இன்று நிலவும் பதற்றங்கள் அனைத்துக்கும் பொருளாதாரமே தீர்வாகிவிட முடியாது. ஆனால், பொருளாதார அடிப்படையைப் புதுப்பிக்காமல் எந்தச் சமூக மேம்பாட்டையும் காண முடியாது, பதற்றத்தையும் தவிர்க்க முடியாது. இன்றைய தமிழக இளைஞர்கள் - குறிப்பாகச் சிறு நகர, கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு - உற்பத்தி சார்ந்த வேலைகள் பெரிதும் இல்லை. மத்திய - மாநில அரசுகளின் திட்டங்களும் மயக்க மருந்துகளும் நம்மைக் கரைசேர்க்கப் போவதில்லை. அதேசமயம், வளர்ச்சி என்ற பெயரால் இழைக்கப்பட்டிருக்கிற கொடுமைகள் நம்மைத் திசைபுரியாத குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன. இத்தனையையும் மீறி நாம் பொருளாதார மேம்பாட்டை அடைய வேண்டும் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், இது நமது பிரத்யேகமான சிக்கல் அல்ல, உலகம் முழுக்கவே இதுதான் சிக்கல்.
இன்றைய பாணியிலான உலகமயமாதல்தான் நமக்குப் புதிது. ஆனால், உலகப் பொருளாதாரம் என்பது மிகப் பழையது. அதில் வேறு சாத்தியங்களைத் தேடி நாம் நமது கப்பல்களைச் செலுத்தியாக வேண்டும். உலகிலுள்ள எல்லாச் சமூகங்களுமே உலகப் பொருளாதாரத்தில் பங்கெடுப்பதற்கான உரிமைகளும் வாய்ப்புகளும் உள்ளவைதான். நாம் நமக்கான பங்கை விட்டுக்கொடுத்துவிட முடியாது. வலுவான ஏற்றுமதிப் பொருளாதாரம் இல்லாமல், எந்த நாடும் முன்னேறிவிட முடியாது. தற்சார்புப் பொருளாதாரம் என்பது கதவை உள்ளிருந்து சாத்திக்கொள்வதல்ல.
ட்சங் ஹவின் மும்மொழிக் கல்வெட்டில் தமிழ் இடம்பெற்றதைப் போல, அதே சீனாவைச் சேர்ந்த ஜாக் மாவின் உலக வர்த்தக இணையதளமான அலிபாபா.காமில் தமிழ் இடம்பெறும் ஒரு நாளுக்காக அல்லது தமிழர்களுக்கான ஒரு அலிபாபா.காம் உருவாகும் ஒரு நாளுக்காக நாம் காத்திருக்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் ஏற்றுமதி, இறக்குமதி நடந்ததை பட்டினப் பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியதை நினைவுகூர்வோம். உலக வணிகம் அவ்வளவு இயல்பானது தமிழனுக்கு. வெறும் ஆறு, ஏழு நூற்றாண்டுகள்தான் அதை நாம் தவறவிட்டிருக்கிறோம். இந்த உலகம் உலகமயமாவதற்கு முன்பே உலகமயமான ஒரு கலாச்சாரத்துக்குச் சொந்தக்காரனாக தமிழனுக்கு ஒரு மீளெழுச்சி அசாத்தியமானதல்ல.
- ஆழி செந்தில்நாதன் மொழி நிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கத்தின் (CLEAR) கூட்டக ஒருங்கிணைப்பாளர், எழுத்தாளர், தொழில்முனைவோர்.
***************

பொருளாதார அரசியலில் தத்துவங்களின் தோல்வி!

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தது. கிறிஸ்தவக் கல்வி அமைப்பு ஒன்று நடத்திய அந்தக் கூட்டம் ‘இந்துத்துவம்’ பற்றி விவாதித்தது. பல தரப்பினரும் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தும் எதிரொலிக்க வேண்டும் என்று கூட்டத்தை நடத்தியவர்கள் நினைத்தார்கள். அவர்களது அழைப்பை ஏற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பில் இருந்த கி.ரவி என்பவர் அதில் கலந்துகொண்டார். இந்துத்துவம் குறித்த விமர்சனங்களுக்குப் பதில் சொன்ன அவர், இந்துத்துவம் என்பது இந்த நாட்டின் மண் சார்ந்தது என்னும் கருத்தை முன்வைத்தார். இன்று நாம் இந்துத்துவம் பற்றிப் பேசுகிறோம், ஆனால், நாம் அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை பெரிதாக வளர்ந்துவருகிறது என்றார். டங்கல் திட்டம், காட் ஒப்பந்தம் ஆகியவையே அந்த அபாயங்கள் என்று சொன்னவர், இவை எப்படி இந்தியாவின் பொருளாதாரத்தையும், அதிலுள்ள அனைத்து சாதி, மத, பண்பாட்டு அம்சங்களையும் பாதிக்கும் என்று விளக்கினார்.
நிறைவுரை ஆற்றிய கோவை ஞானி, இந்துத்துவத்தை விட்டுவிட்டு டங்கலைப் பிடித்துக்கொண்டார். டங்கல், காட் ஆகிய திட்டங்களின் பொருளாதார, பண்பாட்டு ரீதியான விளைவுகளை எடுத்துச் சொன்னார். இடதுசாரிகளும் வலதுசாரிகளும் இணையும் புள்ளியாக உலகமயப் பொருளாதாரம் இருந்தது என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய செய்தி.
மாற்றுப் பொருளாதாரச் சிந்தனைகள்
சங்கப் பரிவார அமைப்பினர் தொண்ணூறுகளில் இரண்டு விஷயங்களை முன்வைத்துப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தார்கள். ஒன்று ராமர் கோயில், இன்னொன்று சுதேசி. ராமர் கோயில் தொடர்பான பேச்சுகள் 1992 மசூதி இடிப்புக்குப் பிறகு நீர்த்துப்போகத் தொடங்கி, வேறு வடிவங்களை எடுத்தன. ஆனால், சுதேசிப் பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. காட் ஒப்பந்தம், டங்கல் திட்டம் ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்பதைப் பற்றி ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆகியவை தீவிரமாகக் குரல்கொடுத்தன. நரசிம்ம ராவ் அரசு லைசன்ஸ் ராஜ்ஜியத்தை ஒழித்துக் கட்டியதைப் பொதுவாக வரவேற்ற பாஜக, தங்கத்தை அடகு வைத்தது, பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளைக் குறைத்தது, காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது முதலான பல அம்சங்களில் அரசைக் கடுமையாகக் குறை கூறியது.
இந்தியாவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு நேருவின் சோஷலிசப் பொருளாதாரக் கொள்கைகளைக் காரணம் காட்டிய பாஜக சித்தாந்திகள், இந்தியாவின் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான பொருளாதாரச் சிந்தனை காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் இல்லாததே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று பேசினார்கள். சுதேசி உணர்வைத் தட்டி எழுப்புவதன் மூலம் நாட்டு மக்களின் ஆற்றல்களைப் பெருக்கி, நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர்களைப் பாடுபடவைக்க முடியும் என்றது. நாட்டின் அடிப்படை வலிமையான விவசாயம், சிறுதொழில்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் இந்தியாவை நெருக்கடியிலிருந்து மீட்கலாம். அந்நிய சக்திகளை நம்ப வேண்டாம் என்பது ஆர்.எஸ்.எஸ். வாதம்.
கே.என்.கோவிந்தாசார்யா, எஸ்.குருமூர்த்தி, முரளி மனோகர் ஜோஷி, கே.எஸ்.சுதர்சன் ஆகியோர் இந்த சுதேசிப் பிரச்சாரத்தை மிகுந்த முனைப்போடு முன்னெடுத்தார்கள். பண்டித தீனதயாள் உபாத்யாயா முன்வைத்த பொருளாதாரச் சிந்தனையான ‘ஏகாத்ம மானவவாதம்’ (ஒருங்கிணைந்த மானுடக் கோட்பாடு) அவர்களது பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையாக அமைந்தது. தனது உள்ளார்ந்த இயல்பு, உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு சமூகம் அல்லது தேசம் தனக்கான அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தீனதயாள் உபாத்யாயா விரிவாகப் பேசுகிறார். கோவிந்தாச்சார்யா, குருமூர்த்தி, சுதர்சன் போன்றோர் இதை அடியொற்றி நமக்கான பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கிவந்தார்கள். நேருவின் சோஷலிசப் பொருளாதாரக் கொள்கைகள் எந்த விவாதமும் இன்றி அமல்படுத் தப்பட்டது என்று குருமூர்த்தி அடிக்கடி குறைபட்டுக் கொள்வார். அதற்கு மாற்றாக காந்தியப் பொருளாதாரக் கொள்கைகளை குருமூர்த்தி போன்றவர்கள் முன்வைத்தார்கள்.
இடதுசாரிகளும் உலகமயமாதலைக் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தியாவை அந்நிய சக்திகளுக்கு விற்பதாகத்தான் அது முடியும் என்றார்கள். சுதேசி முழக்கத்தை அவர்கள் எழுப்பவில்லை என்றாலும் நாட்டின் வளம் அதன் மக்களிடம் இருக்க வேண்டும் என்பதையும் பொருளாதாரக் கொள்கைகள் மக்களை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் எனவும் வாதிட்டார்கள். டங்கல் திட்டம் முதலாளித்துவ அமெரிக்காவின் அடிவருடியாக இந்தியா மாறவே வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டினார்கள். அந்நிய முதலீட்டை நம்புவது, அந்நிய நிறுவனங்களுக்கு இந்தியத் தொழில்துறையைத் திறந்துவிடுவது ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தின் மீதான இந்தியர்களின் பிடியை வலுவிழக்கச் செய்துவிடும் என்றார்கள். தொழிலாளர்கள் நலன் பேணப்படுவதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை எனவும் எச்சரித்தார்கள்.
விடைபெற்றுக்கொண்ட கொள்கைகள்
ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கை, உள்நாட்டுத் தனியார்மயமாவதைப் பெரிதாக எதிர்க்கவில்லை. உலகளாவிய தாராளமயமாக்கலையே தீவிரமாக எதிர்த்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளோ உள்நாட்டுத் தனியார்மயமாக்கலையும் சேர்த்தே எதிர்த்தன. வாதங்களின் அம்சங்களில் இப்படிச் சில மாறுபாடுகள் இருந்தாலும், இடதுசாரிகளும் வலதுசாரிகளும் உலகமயமாதலை எதிர்த்தன.
ஆனால், பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த இடங்களில், இருந்த தருணங்களில் எப்படி நடந்துகொண்டன? மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தையோ சுதேசிப் பொருளாதாரத்தையோ அவை முன்னெடுத்தனவா? நந்திகிராமங்களும் குஜராத் முன்மாதிரிகளும் நமக்குச் சொல்லும் கதை வேறு. காங்கிரஸ் தன் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதைத் தடுக்க இடதுசாரிக் கட்சிகள் போதிய நெருக்கடிகளைக் கொடுக்கவில்லை.
பேசப்பட்ட தேசியப் பெருமிதங்கள்
கம்யூனிஸ்ட்டுகள் நேரடி அதிகாரத்தில் இருந்த இடங்கள் இரண்டு மாநிலங்களோடு நின்றுவிட்டன. ஆனால், பாஜகவின் நிலை அப்படி அல்ல. ஒரு முறை அரைகுறையாகவும் ஒரு முறை முழுமையாகவும் மத்திய அரசின் தலைமைப் பொறுப்பில் அக்கட்சி இருந்திருக்கிறது. இப்போது அறுதிப் பெரும்பான்மை கொண்ட கட்சியாக மத்திய அரசைத் தன் வசம் வைத்திருக்கிறது. 90-கள் தொடங்கி இன்றுவரை எல்லாச் சமயங்களிலும் குறைந்தது 3 மாநிலங்களிலேனும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. சுதேசிப் பொருளாதாரத்தின் மேல் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், அதை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு கட்சிக்கு இருந்துவருகிறது. எனினும், நரசிம்ம ராவும் மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் போட்டுக்கொடுத்த பாதையில்தான் பாஜகவின் ஆட்சியும் பெருமளவில் பயணிக்கிறது.
அது மட்டுமல்ல, காங்கிரஸ் பாணியிலான பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரஸைக் காட்டிலும் வேகமாகவும் தீவிரமாகவும் செயல்படுகிறது. பண்பாட்டுப் பிரச்சினைகளையும் தேசிய உணர்வையும் முன்னிறுத்தும் மரபைக் கொண்ட அக்கட்சி, கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ‘வளர்ச்சி’அஸ்திரத்தைக் கைப்பற்றி அதை வைத்தே போரிட்டது. குஜராத்தில் நரேந்திர மோடி சாதித்துக் காட்டிய ‘வளர்ச்சி’யை முன்னிறுத்தியது. தேசியப் பெருமிதங்கள் பேசப்பட்டன. ஆனால், சுதேசி உணர்வோ நமது பொருளாதாரம் நமது உள்ளார்ந்த ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்னும் பார்வையோ முன்னிறுத்தப்படவில்லை. ‘மேற்கத்திய நுகர்வுக் கலாச்சார’த்தின் தீமைகள் பற்றிப் பல ஆண்டுகளாகப் பேசி வந்த வலதுசாரி சித்தாந்திகளின் ஆட்சியில் நுகர்பொருள் சந்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு அகலமாகத் திறந்துவிடப்பட்டது. தேசப் பாதுகாப்பைத் தாரக மந்திரமாக ஜபிப்பவர்களின் ஆட்சியில் பாதுகாப்பு சார்ந்த உற்பத்தித் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு வழிசெய்யப்பட்டுள்ளது. பாஜக, சுதேசிக் கொள்கையைக் கைவிட்டு விட்டது என்று சங்கப் பரிவார் அமைப்புகளில் ஒன்றான பாரதிய மஸ்தூர் சங்கம் என்னும் தொழிற்சங்க அமைப்பு விமர்சிக்கிறது.
பாஜக அரசுகள் கடைப்பிடித்த பொருளா தாரக் கொள்கைகள் நாட்டுக்கு நன்மை விளை வித்திருக் கின்றனவா இல்லையா என்பது இங்கே விவாதப் பொருள் அல்ல. இதே கொள்கைகளை முன்னிறுத்திய காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்து சுதேசியை முன்னிறுத்திய அவர்கள் கொள்கை என்ன ஆனது என்பதுதான் கேள்வி. மகாராஷ்டிர மாநிலத்தில் என்ரான் என்னும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சங்க அமைப்புகளில் ஒன்றான சுதேசி ஜாக்ரண் மஞ்ச் (விழிப்புணர்வு இயக்கம்) கடுமையாகப் போராடியது. என்ரானுக்கு எதிரான பிரச்சாரம் சென்னையிலும் நடந்தது. என்ரான் போன்ற நிறுவனங்களை உள்ளே விடுவதன் ஆபத்து பற்றிப் பல மட்டங்களிலும் பிரச்சாரம் நடந்தது. சொற்பொழிவுகள், நூல்கள் என்று திமிலோகப்பட்டது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடக்கும் முன்பே பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கையெழுத்திட்ட கோப்புகளில் ஒன்று என்ரானுக்கு அனுமதி வழங்கும் கோப்பு.
அரசியல் அதிகாரம் கிடைக்கும் வரையிலும் சுதேசிப் பொருளாதாரம் பேசிய கட்சி, பதவிக்கு வந்ததும் உலகமயமாதல் கொள்கையைப் பின்பற்றுவது என்றால் அந்தக் கொள்கைதான் செல்லுபடி ஆகும் என்று ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம்? சுதேசிக் கொள்கை காலாவதி ஆகிவிட்டது என்று ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம்?
மாற்றுப் பாதை சாத்தியம்தானா?
ஆர்.எஸ்.எஸ்.ஸோ கம்யூனிஸ்ட்டுகளோ முன்வைத்த பொருளாதாரக் கொள்கைகளுக்கான வெற்றிகரமான முன்னுதாரணங்கள் எங்காவது உள்ளனவா? அரசியல் அதிகாரம் கிடைத்தும் ஏன் அவர்களால் அதை உருவாக்க முடியவில்லை?
உலகமயமாகிவிட்ட சூழலில் மாற்றுப் பொருளா தாரத்தை முன்னெடுப்பது என்றால், அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். மக்கள் கருத்தையும் ஆற்றலையும் திரட்ட வேண்டும். பொருளாதாரத்தின் பாதையை மிகக் கவனமாகத் திசைதிருப்ப வேண்டும். இதற்கு, கொள்கையில் தீவிரமான பற்றுறுதியும் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. சுதேசிப் பொருளாதாரத்துக்காக வரக்கூடிய எதிர்ப்புகளை எதிர்கொள்ளக் கட்சி தயாராக இல்லை. அதற்கான தியாகங்களுக்கோ உழைப்புக்கோ தயாராக இல்லை. பெருநிறுவனங்களின் துணையோடு அரசியல் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவற்றுக்கு ஒத்துவராத பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிப்பது சாத்தியமும் அல்ல.
சுந்தர ராமசாமி எழுதிய ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலில் இப்படி ஒரு வரி வரும்: “இந்திய கம்யூனிஸ்ட்டுகள் கார்ல் மார்க்ஸை ஏமாற்றிவிட்டார்கள்”. காங்கிரஸ்காரர்கள் காந்தியை ஏமாற்றினார்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தீனதயாள் உபாத்யாயாவை ஏமாற்றினார்கள். உலகமயமாதலின் வெற்றி இந்தத் தத்துவங்களைப் பேசியவர்களைப் பார்த்துப் பரிகசிக்கிறது.
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
****************
தொண்ணூறுகளின் மத்தியில் இந்தியாவின் கிராமங்கள் வரை பரவியிருந்த அரசியல் நகைச்சுவைகளில் ஒன்று, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் ஒரு ‘மெளனச் சாமியார்’ என்பது. தமிழ் உட்பட எட்டு இந்திய மொழிகளும், பிரெஞ்சு உள்ளிட்ட ஐந்து அந்நிய மொழிகளும் அறிந்த பெரும் பண்டிதரான நரசிம்ம ராவ், அனைத்து மொழிகளிலும் மெளனம் காத்தவர் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுபவர்களும் உண்டு. உண்மையில், 1990-களின் தொடக்கத்தில் வயது காரணமாக அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த நிலையில், ஆன்மிக அமைப்புகளிலிருந்து அழைப்பு வந்தது. குறிப்பாக, குற்றாலத்தில் உள்ள மெளனசாமி மடத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அதே நரசிம்ம ராவ் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் வளர்சிக்கான பாதையை அகலத் திறந்துவைத்தார் என்பதுதான் வரலாற்றின் சுவாரஸ்ய முரண்!
ஆபத்தில்லாதவர்
இந்திரா அமைச்சரவையில் சிறிதுசிறிதாக முன்னேறி மேலே சென்ற ராவ், ராஜீவ் அமைச்சரவையிலும் முக்கியமான பதவிகளை வகித்தார். எந்த விதத்திலும் தலைமைக்கு ஆபத்து தராதவராக, கொடுத்த வேலையைத் திறம்படச் செய்பவராக இருந்தார் நரசிம்ம ராவ். அப்படியிருந்தும்கூட, 1991 தேர்தலில் 70 வயதான நரசிம்ம ராவ் கழற்றிவிடப்பட்டார். ராஜீவ் படுகொலைக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சோனியா காந்தி, கட்சித் தலைமையைக் கையில் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
கோஷ்டி கோஷ்டியாக ராஜாங்கம் நடத்திய தலைவர்களை விட்டுவிட்டு கோஷ்டியைக் கையில் வைத்திராத நரசிம்ம ராவின் வசம் அந்தப் பதவி சென்று சேர்ந்தது. திறம்படக் காய்களை நகர்த்தி, காங்கிரஸின் தலைவராகி, தேர்தலில் நிற்காமலேயே பிரதமர் ஆனார் நரசிம்ம ராவ்.
திண்டாட்டத்தில் இந்தியா
பஞ்சாப், காஷ்மீர் மாநிலங்களில் தீவிரவாதப் பிரச்சினை காரணமாகத் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் நடைபெற்ற 521 இடங்களில் காங்கிரஸ் 232 இடங்களை மட்டுமே பெற்று, சிறுபான்மை அரசை உருவாக்கக்கூடியதாக இருந்தது. பாஜகவும் தேசிய முன்னணியும் இடதுசாரிகளும் சேர்ந்து, காங்கிரஸைவிட அதிக இடங்களைக் கையில் வைத்திருந்தனர்.
ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நரசிம்ம ராவ் இருந்தார். ஆனால், கட்சியிலேயே அவர்மீது பலருக்கும் மரியாதையும் அபிமானமும் இருக்கவில்லை. அர்ஜுன் சிங், சரத் பவார் போன்றவர்கள் ராவைக் கவிழ்க்கும் எண்ணத்தில் இருந்தனர். சோனியா தலை அசைத்திருந்தால் ராவைத் தூக்கிவிட்டு அந்த இடத்தில் வேறு யாரையாவது உட்கார வைத்திருக்க முடியும். கட்சி, ஆட்சி இரண்டிலுமே தடுமாற்றம். ஆனால் அதைவிட மோசமாக, தேசப் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருந்தது. 1990 வளைகுடாப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. வி.பி. சிங், சந்திரசேகர் தலைமையிலான அரசுகள் நிலையற்றவையாக இருந்ததால், வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியாவுக்குத் தம் பணத்தை அனுப்பத் தயாராக இல்லை.
1984-1989 காலகட்டத்தில் ராஜீவ் நிறைய அந்நியக் கடன்களை வாங்கியிருந்தார். அவற்றை 1991-ல் அடைக்க வேண்டியிருந்தது. இவை எல்லாமாகச் சேர்ந்து, இந்தியாவிடம் வெறும் இரண்டு வாரங்களுக்குத் தேவையான அந்நியச் செலாவணி மட்டுமே கையிருப்பில் இருந்தது. குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குத் தேவையான கையிருப்பாவது இருக்க வேண்டும். எனவே, இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்த தங்கம் அந்நிய நாட்டில் அடகு வைக்கப்பட்டு, அந்நியச் செலாவணிக் கடன் பெறப்பட்டது.
புதிய பொருளாதாரக் கொள்கை
இந்தியப் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்றால், இந்தியா அதுவரையில் பின்பற்றிவந்த சோஷலிசக் கொள்கைகளைத் தூர எறிய வேண்டும். முற்றிலும் மாறுபட்ட, திறந்த பொருளாதாரக் கொள்கைகளை முன்மொழிய வேண்டும். அவற்றைச் செயல்படுத்த சரியான ஆட்களைக் கொண்டுவர வேண்டும். சோஷலிசத்திலேயே ஊறிவந்திருக்கும் தன் அமைச்சரவையையும் கட்சி உறுப்பினர்களையும் சமாளிக்க வேண்டும். தம்மைக் கவிழ்க்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புகளில் ஜெயிக்க வேண்டும்.
புதிய பொருளாதாரக் கொள்கைகளை அதிவேகத்தில் அமல்படுத்தி, அந்நியச் செலாவணியை அதிகப்படுத்தி, பொருளாதாரத்தை முடுக்கி விட்டு, உற்பத்தியை அதிகரித்து, வரிகளைச் சீராகச் சேகரித்து, அரசு வருமானத்தை அதிகப் படுத்தி, கிடைக்கும் வருவாயில் மக்களுக்கான நலத் திட்டங்களைத் தர வேண்டும். தேவையற்ற மானியங்களை நிறுத்த வேண்டும். பழைய தொழிலதிபர்களுக்கு, அந்நிய முதலீடுகளைக் கண்டு அஞ்சாதீர்கள் என்று நம்பிக்கை அளிக்க வேண்டும். புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இவற்றுக்கிடையே எதிர்க்கட்சிகள் செய்யும் குழப்பங்களை எதிர்கொள்ள வேண்டும்.
ராவ் அருமையான குழு ஒன்றை உருவாக்கினார். நிதியமைச்சராக மன்மோகன் சிங், வர்த்தக அமைச்சராக ப.சிதம்பரம் போன்ற திறமைசாலிகள். அவர்களுக்கு உதவி செய்ய அமர்நாத் வர்மா, நரேஷ் சந்திரா, மாண்டேக் சிங் அலுவாலியா, ஜெய்ராம் ரமேஷ், அஷோக் தேசாய், ராகேஷ் மோகன் போன்ற அதிகாரிகள். தொழில்துறை அமைச்சகத்தை ராவ் தன் கையிலேயே வைத்துக்கொண்டார்.
என்னென்ன சீர்திருத்தங்கள்?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு கட்டங்களில் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இந்த மாற்றம் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மிகுந்த பயன் அடைந்தனர். இதன் காரணமாக, ஏற்றுமதியாளர்களுக்கு அரசு அளித்துவந்த மானியம் நிறுத்தப்பட்டது.
24 ஜூலை 1991 அன்று புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது. அதுவரையில், யார் எதை உற்பத்தி செய்யலாம் என்பதை அரசே தீர்மானித்துவந்தது. சில துறைகள் தவிர, இந்தக் கொள்கை முற்றிலுமாக நீக்கப்பட்டது. அரசுத் துறை நிறுவனங்கள் மட்டுமே இயங்கலாம் என்று இருந்த துறைகள் குறைக்கப்பட்டன. பிற துறைகளிலும் தனியார் முதலீடுகளுக்குத் தடையில்லை என்று ஆனது.
ஏகபோகத் தடுப்புச் சட்டங்கள் தளர்த்தப்பட்டன. நிறுவனங்கள் பெரிதாக ஆக முடியாமல் இருந்த செயற்கையான தடைகள் நீக்கப்பட்டன. பல துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது.
அதே தினத்தில் நிதியமைச்சர் மன்மோகன் சிங் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தார். பொருட்களை இறக்குமதி செய்வதில் இருந்த பல்வேறு தடைகள் நீக்கப்பட்டன. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. உரம், சர்க்கரை போன்றவை மீதான மானியங்கள் குறைக்கப்பட்டன.
பிற சீர்திருத்தங்கள்
மேலே சொன்ன சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய பின் 1992-ம் ஆண்டின் இடையிலேயே அந்நியச் செலாவணிக் கையிருப்பு மூன்று மாதத் தேவையைத் தாண்டிவிட்டது. ராவ் நினைத்திருந்தால், அப்படியே பழைய சோஷலிசப் பாதைக்குத் திரும்பியிருக்க முடியும். ஆனால், கம்யூனிஸத்தைக் கடைப்பிடித்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை அவர் பார்த்திருந்தார். சீனாவின் டெங் சியோபிங் சந்தைப் பொருளாதாரத்தைக் கையில் எடுத்து, சீனாவின் நிலையை வெகுவாக உயர்த்தியிருந்ததைக் கவனித்திருந்தார். சிங்கப்பூர், தென் கொரியா, தைவான், தாய்லாந்து, மலேசியா போன்ற தெற்காசிய நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டிருந்த முன்னேற்றங்களைக் கவனித் திருந்தார்.
அரசுக் கட்டுப்பாட்டின் மூலம் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவே முடியாது என்பதையும் தொழில் முனைவோரின் ஈடுபாடு இல்லாமல் தொழில் வளர்ச்சி சாத்தியமே இல்லை என்பதையும் ராவ் மிகச் சரியாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தார். அதனாலேயே பழைய சோஷலிச மாதிரிக்கு ராவ் திரும்ப விரும்பவில்லை.
பங்குச்சந்தைச் சீர்திருத்தம்
இந்தியாவில் பங்குச் சந்தை என்ற ஒன்று புழக்கத்தில் இருந்தாலும் அதில் நிறுவனப் பங்குகளைப் பட்டியலிடுவது அரசின் கையிலேயே இருந்தது. நரசிம்ம ராவ் இதனை மாற்றினார். சந்தையே பங்கின் விலைகளைத் தீர்மானிக்கும் நிலை உருவாக்கப்பட்டது. ஹர்ஷத் மேத்தா ஊழல் போன்றவை இந்தக் காலகட்டத்தில் நடந்ததைத் தொடர்ந்து, அவற்றைத் தடுக்கும் முயற்சியாக, இவ்விஷயத்தில் கண்காணிப்பு வளையம் இறுக்கமானது. பதிவுசெய்யப்பட்டவர்கள் மட்டுமே பங்குச் சந்தையில் தரகர்களாக இருக்க முடியும் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அனுமதிக்கப்பட்டது.
இன்ஃபோசிஸ் மென்பொருள் நிறுவனம் பங்குச் சந்தை மூலம் பணம் திரட்ட முடிந்தது இந்தச் சீர்திருத் தங்களால்தான். இந்திய மென்பொருள் துறை மிகப் பெரிய அளவு விரிவடைய இந்தச் சீர்திருத்தங்களே காரணம்.
1993-ல், தனியார் வங்கிகள் அனுமதிக்கப்பட்டன. அரசுத் துறை மட்டுமே இயக்கிவந்த மின் உற்பத்தி, சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் போன்றவற்றில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. உள்கட்டுமானம் பெரிய அளவு விரிவடைந்தது. தொலைக்காட்சி சேவை, விமான சேவை, செல்பேசி சேவை ஆகிய துறைகளில் தனியார் முதலீடு ஊக்குவிக்கப்பட்டது.
இறுதியாக, உலக வர்த்தக அமைப்பில் இந்தியா உறுப்பு நாடாகியது. உலக வர்த்தகத்தில் இந்தியா முக்கியமான பங்காற்றத் தொடங்கியது. ஏற்றுமதி, இறக்குமதி இரண்டுமே பெருகின.
1994, 1995, 1996 நிதியாண்டுகளில் இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் முறையே 6.7, 7.6, 7.5% என்று இருந்தது. முன்னெப்போதும் இருந்திராத வளர்ச்சி இது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு 1991-ல் இருந்ததைப் போல 15 மடங்கு அதிகரித்திருந்தது. வேலைவாய்ப்பு பெருமளவு அதிகரித்தது. சம்பளங்கள் தனியார் துறையில் மட்டுமல்லாது, அரசுத் துறையிலும் அதிகரித்தன. இதன் காரணமாக வரி வருவாய் அதிகரித்தது. வரி வருவாய் அதிகரித்த காரணத்தால், மக்களின் வாழ்வு நிலை மேம்பட்டது. எனினும், 1996 தேர்தலில் நரசிம்ம ராவ் தோற்கடிக்கப்பட்டார்.
எப்படிச் சாதித்தார்?
கட்சிக்குள் எழும்பிய எதிர்ப்புகளை, நேரு, இந்திரா, ராஜீவ் பெயர்களைக் கொண்டே ராவ் அடக்கினார். எல்லாத் திட்டங்களுக்கும் அடிப்படை நேரு, இந்திராவின் கருத்துகள்தான் என்று ராவ் சொன்னதை காங்கிரஸார் பெரும்பாலும் நம்பினர். அவர்களுடைய சிந்திக்கும் திறன் அதற்குமேல் இருக்கவில்லை. அமைச்சரவையில் ஏற்பட்ட எதிர்ப்புகளையும் ராவ் திறம்படக் கையாண்டார். சோனியாவை வாரம் ஒருமுறை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்து, அவரிடமிருந்து எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் சில ஆண்டுகளுக்குப் பார்த்துக்கொண்டார்.
பாஜகவின் எதிர்ப்பைச் சமாளிக்க அவர்களிடம் இடதுசாரிகள் பற்றிய எச்சரிக்கையை மறைமுகமாக உணர்த்துவதைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். அதேபோல், தனக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று இடதுசாரிகளுக்கு மெளன எச்சரிக்கையும் விட அவர் தயங்கவில்லை.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி நரசிம்ம ராவை ஒட்டுமொத்தமாகக் கைகழுவியது. கட்சியின் அதிகாரபூர்வ வரலாற்றிலிருந்து அவருடைய பெயர் அழிக்கப்பட்டது. அவர் இறந்ததும் அவருடைய பூத உடல்கூடக் கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப் படவில்லை. அவரை எவ்வாறெல்லாம் அவமதிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சோனியா காந்தி ஆதரவாளர்கள் நடந்துகொண்டனர். நடந்துகொள்கின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி குறிப்பிடத் தக்கது. இந்த வளர்ச்சி நாட்டில் அனைவரையும் சென்றடையவில்லை என்பதும், ஏற்றத் தாழ்வு அதிகரித்திருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், 90-களுக்கு முன்பு இருந்ததைவிடவும், இன்றைக்கு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதற்கான ஆதார விசையாக நரசிம்ம ராவ் இருந்தார் என்பதே வரலாறு!
- கட்டுரையாளர் பதிப்பாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: badri@nhm.in

வியாழன், 23 ஜூன், 2016

மூன்றாம் உலக சாதனை -இஸ்ரோ

ரஷ்யா, அமெரிக்காவுக்குப் பிறகு இந்தியா இந்தச் சாதனையைச் செய்கிறது
ஒரே சமயத்தில் 20 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ச்சியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் சாதனைகளுக்கு மேலும் ஒரு மகுடம்! 320 டன் எடையுள்ள நமது ராக்கெட் 1,228 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்துதியது. அவற்றில் இந்தோனேஷியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 17 செயற்கைக் கோள்களும், சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த சத்யபாமா சாட், புணே கல்லூரி மாணவர்கள் தயாரித்த ஸ்லயம் உள்ளிட்ட செயற்கைக்கோள்களும் உள்ளன.
இந்த 20-ல் முக்கியமானது இந்தியாவின் ‘கார்டோசாட் 2சி’. இது பூமியிலிருந்து 505 கி.மீ. உயரத்தில் சுற்றி பூமியைக் கண்காணிக்கும். இது பூமியைச் சுற்றிவரும்போது அதன் பின்புறத்தில் சூரியன் இருக்கும். சூரியஒளி படுகிற பூமிப் பகுதியின் மேலேதான் இந்த செயற்கைக்கோள் செல்லும். இதன் காரணமாக பூமியை நிழல் விழாமல் எளிதாகப் புகைப்படம் எடுக்கும். நாட்டின் எல்லைகளைக் கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளுக்கும் உதவும்.
சீனா 2014-ல் ஒரு செயற்கைக்கோளை 0.65 மீட்டர் பிரிதிறன் (Resolution) கொண்ட கேமராவோடு ஏவியது. அதற்குச் சமமானது இப்போது நாம் அனுப்பியுள்ள செயற்கைக்கோள். அதனால், நாட்டின் எல்லைகளில் வேற்றுநாட்டுப் படைகளின் நடமாட்டத்தைத் தரமான புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் நம்மால் பார்க்க முடியும். இது மட்டுமல்லாமல், இஸ்ரோ சத்தமில்லாமல் ஒரு ‘சதம்’ அடித்துவிட்டது. இதோடு இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி 113 ஆக உயர்ந்துவிட்டது!
மூன்றாம் உலக சாதனை
அமெரிக்கா 29 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தி 2013-ல் உலக சாதனை படைத்தது. அந்த 29-ல் ஒன்றைத் தவிர, மற்றவை ‘கியூப்சாட்’ எனப்படும் மிகச் சிறிய செயற்கைக்கோள்கள். ரஷ்யா 2014-ல் ஒரே சமயத்தில் 33 செயற்கைக்கோள்களை ஏவி நாசாவின் அந்தச் சாதனையை முறியடித்தது. இப்போது 20 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் ஏவியதன் மூலம் வானியல் வரலாற்றில் இந்தியாவின் சாதனை மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறது. இதற்கு முன் இந்தியா 2008-ல் ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை ஏவியதே முந்தைய சாதனை.
பள்ளியில் மணி அடித்ததும் எல்லா பிள்ளைகளும் ஒரே சமயத்தில் வெளியே ஓட முயல்வார்கள். அதனால் நெரிசல் ஏற்படும். தள்ளுமுள்ளு ஏற்படும் அல்லவா? அதுபோலவே 20 செயற்கைக்கோள்களையும் ஒரே சமயத்தில் விண்வெளியில் உந்தித் தள்ளினால், அவை ஒன்றுடன் ஒன்று மோதி சுக்குநூறாகி விடலாம். எனவே, ஒவ்வொரு செயற்கைக்கோளையும் வெவ்வேறு ஒப்புதிசை வேகத்திலும் (relative velocity) வெவ்வேறு திசையிலும் ஏவ வேண்டும். இது சொல்வதற்கு எளிது. ஆனால், இது பெரும் தொழில்நுட்ப சவால்.
சர்க்கஸ் வித்தை
சைக்கிளில் இரண்டு பக்கமும் கட்டிய பானைகளில் ஒன்று விழுந்துவிட்டால் பாலன்ஸ் தவறும் அல்லவா? அதுபோலவே, 20 செயற்கைக்கோள்களை ஒன்றாகப் பொட்டலம் செய்து அனுப்பியதும், அதிலிருந்து ஒன்றிரண்டு செயற்கைக்கோள்கள் வெளியேறினால் ராக்கெட்டின் ஈர்ப்பு மையம் (center of gravity) மாறும். சைக்கிள் மாதிரி ராக்கெட்டும் நிலைகுலையும். அதுபோல செயற்கைக்கோள்களை வெளியே தள்ளும்போது, அவை ஒன்றுடன் ஒன்று விண்வெளியில் மோதிவிடக் கூடாது. எனவே, அவற்றைப் பல திசைகளின் கோணங்களில் பல்வேறு திசைகளில் உந்துதல் கொடுத்து வெளியேற்ற வேண்டும். கண நேரமும் பிசகாமல் துல்லியமாக அனைத்துச் செயல்களும் ஒரு சர்க்கஸ் வித்தைபோல நடைபெற வேண்டும்.
ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்த 17-வது நிமிடத்தில் சுமார் 515 கி.மீ. உயரத்தில் முதலில் ‘கார்டோசாட்’ விண்ணில் உந்தப்படும். அடுத்து, ‘சத்யபாமாசாட்’ சுமார் முப்பது நொடிகள் இடைவெளி விட்டு ஏவப்படும். இவ்வாறு வரிசையாக எல்லா விண்கலங்களும் விண்ணில் செலுத்தப்பட்டு, அமெரிக்காவின் ‘பன்னிரண்டாவது டோவ்’ விண்கலம் கடைசியாக விண்ணில் உந்தப்படும். இவை அத்தனையும் மூன்று நிமிடக் கால அவகாசத்துக்குள் நடந்து முடிய வேண்டும். ராக்கெட் இந்தக் காலகட்டத்தில் வெறும் நான்கு கி.மீ. தூரம் மட்டுமே மேலே சென்றிருக்கும். இந்த இடைவெளியில் செயல்பட அசாத்திய துல்லியம் தேவை.
‘ஒயிட் போர்டு’ துணிச்சல்
இன்னொரு துணிச்சலையும் இஸ்ரோ செய்துபார்க்கப் போகிறது. பல செயற்கைக்கோள்கள் பொதுவாக ஒரே உயரத்தில் விண்ணில் ஏவப்படுகின்றன. இந்த முறையும் எல்லா செயற்கைக்கோள்களும் சுமார் 520 கி.மீ. உயரத்தில் செலுத்தப்படும். ஒருவேளை.. ஒரு செயற்கைக்கோளை 200 கி.மீ. உயரத்திலும் வேறொன்றை 400 கி.மீ. உயரத்திலும் மூன்றாவதை 600 கி.மீ. உயரத்திலும் செலுத்த வேண்டும் என்றால் என்ன செய்வது? இதற்கும் தயாராகிவருகிறது இஸ்ரோ. இதுவரை ‘பாயின்ட் டு பாயின்ட்’ பஸ் மாதிரி ராக்கெட் செயல்படுகிறது. அதை ஒயிட் போர்டு பஸ் மாதிரி நிறுத்தி நிறுத்தி இயக்கப்போகிறார்கள். பலதரப்பட்ட உயரங்களில் வேறுவேறு செயற்கைக்கோள்களைச் செலுத்த வேண்டும் என்றால், ராக்கெட்டின் இன்ஜினை நிறுத்தி நிறுத்தி திரும்ப ஸ்டார்ட் செய்ய வேண்டும். இது துணிச்சலான ஒரு தொழில்நுட்ப சவால். மறுபடியும் ஸ்டார்ட் செய்யும்போது, ராக்கெட்டின் இன்ஜின் நொடியில் ஆயிரம் பகுதி அளவுக்குக்கூடத் தாமதிக்காமல் தவறாமல் ஸ்டார்ட் ஆக வேண்டும். 2015 டிசம்பர் 16-ல் சிங்கப்பூரின் ஆறு செயற்கைக் கோள்களை விண்வெளியில் ஏவும்போது இன்ஜினை நிறுத்தி, நான்கு நிமிடம் கழித்து மறுபடி இயக்கி ஏற்கெனவே இந்தியா பரிசோதித்துள்ளது. அதன் வெற்றியால் உற்சாகம் அடைந்துதான், இந்த முறை இரண்டு முறை இன்ஜினை நிறுத்தி மறுபடி இயக்க இஸ்ரோ துணிந்துள்ளது.
தோல்வி காணாத பிஎஸ்எல்வி
இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் தொடர்ந்து 35 முறை தோல்வியே இல்லாமல் வேலை செய்துள்ளது. 1,000 அல்லது 1,500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை 1,200 கி.மீ. உயரத்துக்கு ஏவ பிஎஸ்எல்வி ராக்கெட்டால் முடியும். மேலும், இது விலை மலிவானது.
இந்தியா 1999-ல் கொரியா மற்றும் ஜெர்மனியின் செயற்கைக்கோள்களை ஏவி இத்துறையில் தனது வணிகத்தைத் தொடங்கியது. இதுவரை அந்நிய நாடுகளின் 57 செயற்கைக்கோள்களை நாம் ஏவியுள்ளோம். இந்திய ராக்கெட்டை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என, அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கின்றன. இந்தியாவின் ராக்கெட் விலை மலிவாக இருப்பதால், இந்த ராக்கெட்டில் கூகுள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் உட்பட 13 அமெரிக்கச் செயற்கைக்கோள்கள் செலுத்தப் படுகின்றன. நேற்றைய வெற்றி இந்தியாவுக்கு உண்மையில் பல வெற்றிகளைக் கொடுத்திருக்கிறது!
- த.வி.வெங்கடேஸ்வரன், அறிவியல் எழுத்தாளர், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி

திங்கள், 30 மே, 2016

காஷ்மீர் பிரச்சினையின் வேர்கள்!

2014 மக்களவைப் பொதுத் தேர்தலின்போதும் அதற்குப் பின்னரும் வாக்காளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் கட்சிக்கு (நாட்டை ஆள) 60 ஆண்டுகளைக் கொடுத்தீர்கள், எனக்கு 60 மாதங்களைக் கொடுங்கள்” என்றார். சமூக வலைதளங்களில் அவருடைய ஆதரவாளர்கள் அதையே இன்னமும் பலமாக, வேறு வகையில் வலியுறுத்தினார்கள். “இந்தியாவின் பிரச்சினைகள் அனைத்துக்குமே காரணம் காங்கிரஸ் ஆட்சிதான்” என்று சாடினார்கள். “அப்படியென்றால், இந்த நாட்டில் எதெல்லாம் சரியாக இருக்கிறதோ அதற்கு நாங்கள்தானே பொறுப்பு?” என்று காங்கிரஸார் எதிர்க்கேள்வி கேட்டார்கள்.
நாடு சுதந்திரமடைந்த 1947 முதலே இந்தியாவுக்குப் பெருத்த பின்னடைவு ஏற்பட்டது காஷ்மீர் பள்ளத்தாக்கில்தான். அது தொடர்ந்து போராட்டக் களமாகத் திகழ்கிறது. அதன் மக்களில் கணிசமானவர்கள் இந்தியக் குடியரசின் ஆட்சியில் இருப்பதை எதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது அங்கே அதிருப்தியும் கோபமும் கொப்பளிக்கிறது. 2014-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு மிகக் குறைந்த அளவே நிவாரணம் அளித்திருக்கிறார்கள் என்ற அதிருப்தி அவர்களுக்கு. மாட்டுக் கறிக்குத் தடை விதிக்க முயன்றதற்கும் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (பி.டி.பி.) கூட்டரசு அமைத்தபோது அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை பாஜக நிறைவேற்றவில்லை. அதனால்தான் முஃப்தியின் மறைவுக்குப் பிறகு, புதிய அரசு பதவியேற்க அங்கே நீண்ட காலம் பிடித்தது.
கல்வி நிலையமா.. ஆயுத சாலைகளா?
இப்போது புதிய சர்ச்சை தோன்றியிருக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் காஷ்மீர மாணவர்களுக்கும் பிற மாநில மாணவர்களுக்கும் இடையில், கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றதைக் கொண்டாடியது தொடர்பாகக் கைகலப்பு ஏற்பட்டது. அது அப்படியே வேறு வடிவங்களில் தொடர்கிறது. பிற மாநில மாணவர்களை காஷ்மீர போலீஸார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முற்பட்டதைப் போலத் தெரிகிறது. எதிர் விளைவாக ஆயிரக்கணக்கில் துணை நிலை ராணுவப் படை வீரர்கள் அக்கல்லூரியின் வளாகத்தில் மத்திய அரசின் ஆணையின் பேரில் நிறுத்தப்பட்டனர். காஷ்மீரக் கல்வி நிலையங்கள் ஆயுதசாலைகளாக மாறிவிட்டன என்றே கொண்டாலும், ஆயிரக்கணக்கில் துருப்புகளை நிறுத்துவதால் அமைதி திரும்பிவிடுமா?
கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினையை மோடி அரசு புத்திசாலித்தனமாகவோ, கருணையுடனோ அணுகவேயில்லை. இந்தியாவுடன் காஷ்மீர் பள்ளத்தாக்கு உணர்வுபூர்வமாக ஒன்றியிருக்கச் செய்யத் தவறிவிட்டது, மத்தியில் நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ். காஷ்மீர் மாநிலத்தின் மாபெரும் அரசியல் ஆளுமை ஷேக் அப்துல்லாவை பிரதமர் ஜவாஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைத்து வைத்தார். பிறகு, 1964-ல் அவரை விடுதலை செய்தார். ஆனால், அடுத்துப் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி அவரை மீண்டும் சிறையில் அடைத்தார். 1967 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திரா காந்தியிடம் வேண்டுகோள் வைத்தார் ஜெயப்பிரகாஷ் நாராயண். அதை மறுத்துவிட்டார் இந்திரா. சில ஆண்டுகளுக்குப் பிறகு முதுமை, நோய் காரணமாக மிகவும் தளர்ச்சியுற்ற நேரத்தில், டெல்லி அரசுக்கு அணுக்கமாக நடந்துகொள்ள முன்வந்ததால் ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார்.
1982-ல் ஷேக் அப்துல்லா இறந்தார். அவருடைய இடத்துக்கு ஃபாரூக் அப்துல்லா வந்தார். காங்கிரஸ் கட்சியல்லாத பிற கட்சிகளின் முதலமைச்சர்களுடன் பேசினார் ஃபாரூக் அப்துல்லா என்ற கோபத்தில், அவருடைய தேசிய மாநாட்டுக் கட்சியை ஃபாரூக்கின் சகோதரி கணவர் குலாம் முகம்மது ஷாவைக் கொண்டே இந்திரா காந்தி உடைத்தார். ஷாவை முதல்வர் பதவியிலும் அமர்த்தினார். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால், அவருடைய மகன் ராஜீவ் காந்தி அடுத்து பிரதமரானார். 1987-ல் நடந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தேர்தலில் கள்ள ஓட்டு உட்பட எல்லா தில்லுமுல்லுகளும் நடந்தன. அதனால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்தது. இவ்வாறு அமைதியின்மை தொடர்கதையானது.
தியாகங்களைக் கவுரவிப்போம்
“நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் நாட்டுக்காகச் செய்த தியாகங்களைக் கவுரவிக்கத்தான் அரசியலுக்கு வந்தேன்” என்று சோனியா ஒரு முறை கூறினார். காஷ்மீர் பிரச்சினையில் அவர், அவர்களுடைய வழியையே பின்பற்றினார். இந்தியாவின் பிற பகுதி மக்களிடமிருந்து காஷ்மீரிகள் தங்களை அந்நியப்படுத்திக்கொள்ளும் வகையில் சில சம்பவங்கள், சோனியாவின் வழிகாட்டுதலில் இந்நாடு நிர்வகிக்கப்பட்டபோது நடந்தது.
அவற்றில் நான்கை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.
1. அடல் பிஹாரி வாஜ்பாய் 2003 ஏப்ரலில் ஸ்ரீநகருக்குச் சென்றார். பத்தாண்டுக் கால இடைவெளிக்குப் பிறகு, காஷ்மீர் சென்ற ஒரே பிரதமர் அவர்தான். 25 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மக்கள் ஜனநாயகக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்து அப்போது பதவியில் இருந்தது. அப்போது நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் வாஜ்பாயின் பேச்சை, தலைமையின் கட்டளைப்படி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காஷ்மீர் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர். மனிதாபிமானத்துடன் காஷ்மீரிகளின் மனப்புண்களை ஆற்ற வழி இருக்கிறதா என்று அறிவதற்காக வாஜ்பாய் அப்போது சென்றிருந்தார். அப்போது காஷ்மீரில் தீவிரவாதத்தின் தீவிரம் குறைந்திருந்தது. சுற்றுலாத் துறை செழித்தது. பிரதமரை ஆதரித்திருக்க வேண்டிய அந்நேரத்தில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் அவரைப் புறக்கணித்தது.
2. பி.டி.பி. கட்சியின் சார்பில் முதல்வர் பதவியை ஏற்ற முஃப்தி முகம்மது சய்யீத் நல்ல நிர்வாகியாக இருந்தார். அநேக ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் மாநிலத்தில் சுமுக நிலை காணப்பட்டது. காஷ்மீர் இனி வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. சோனியா காந்திக்கு நல்ல அரசியல் தெளிவும், தொலைநோக்குப் பார்வையும் சுயமாக இருந்திருந்தால் அல்லது அவருடைய அரசியல் ஆலோசகர்களாவது நல்ல அறிவுரையைக் கூறியிருந்தால் அந்த 6 ஆண்டுகளும் முஃப்தியே முதலமைச்சராகத் தொடரட்டும் என்று அனுமதித்திருப்பார். கட்சிக் கண்ணோட்டத்திலேயே எதிலும் செயல்படும் காங்கிரஸ்காரர்கள் ஒப்பந்தப்படி அடுத்து காங்கிரஸ்காரர்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று முரண்டுபிடித்தார்கள். சோனியா குடும்ப விசுவாசியான குலாம் நபி ஆசாத் முதல்வரானார். தேச நலனைவிடக் கட்சி நலனே பெரிது என்று எடுத்த முடிவால், நல்ல வாய்ப்பு வீணானது.
3. 2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தது. அப் போதும் காஷ்மீர் பிரச்சினை தீர தீவிர முயற்சி மேற்கொள்ளப் படவில்லை. 2009-லும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியே தொடர்ந்தது. அடுத்த ஆண்டே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண மக்களிடம் பேச ஒருவரை நியமிக்க முடிவுசெய்தது. (அதற்கு முன்னதாக 2008-ல் காஷ்மீர் போராட்டங்கள் வலுத்தன. சிறு பையன்கள் கல்வீச்சுப் போராட்டங்களை நடத்தினர்.) தென்னாப்பிரிக்காவிலும் இலங்கையிலும் இந்திய ஹை கமிஷனராகப் பணியாற்றி அனுபவம் பெற்ற கோபால கிருஷ்ண காந்தியை மட்டும் பேசுவதற்கு நியமிக்கலாம் என்ற யோசனை பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது ஏற்கப்படவில்லை. பூசல்கள் நிறைந்த நாடுகளில் பணியாற்றிய அனுபவத்துடன் உருது மொழியில் நல்ல தேர்ச்சியும் பெற்றவர் கோபால கிருஷ்ண காந்தி. நவீன இந்திய வரலாறும் அவருக்கு அத்துப்படி. காந்தி - ராஜாஜி ஆகியோரின் பேரன். அவரை நியமித்திருந்தால் ஹுரியத் தலைவர்கள்கூடப் பேச்சில் பங்கேற்றிருப்பார்கள் என்று உள்துறைச் செயலராக இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் என்னிடம் கூறினார்.
ஆனால், திலீப் பட்கோங்கர், எம்.எம். அன்சாரி, ராதா குமார் என்ற மூன்று பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்தது. எதிர்பார்த்ததைப் போலவே ஹுரியத் தலைவர்கள் அவர்களுடன் பேச மறுத்துவிட்டனர். சோனியாவின் மகன் ராகுல் காந்தி அப்போதுதான் அரசியலில் நடை பழகிக்கொண்டிருந்தார். மகாத்மாவின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ‘இன்னொரு காந்தி’ இடையில் புகுந்து பெயர் சம்பாதிப்பதை சோனியா விரும்பவில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும், காஷ்மீர் மாநிலத்தில் சமாதானம் ஏற்படுத்தத் தவறிய பொறுப்பு மத்திய அரசையே சாரும்.
4. 2012, 2013-ல் ஜம்மு - காஷ்மீர் மாநில முதலமைச்சர் ஓமர் அப்துல்லா மத்திய அரசிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் படிப்படியாக விலக்கிக்கொள்வதைப் பரிசீலியுங்கள். அச்சட்டம் ராணுவத்தினருக்கு அளவற்ற அதிகாரத்தைக் கொடுப்பதால், காஷ்மீரிகள் அதை விரும்பவில்லை” என்று மன்றாடினார். (அச்சட்டம் காஷ்மீரில் மட்டுமல்ல, மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும்கூட ஆயுதப் படைகளுக்கு வரம்பற்ற அதிகாரத்தைத் தருகிறது என்பதுதான் பலருடைய குற்றச்சாட்டு.) எல்லைக்கு அப்பாலிருக்கும் மாவட்டங்களிலாவது சட்டப்படியான அதிகாரத்தை விலக்கலாம் என்று ஓமர் ஆலோசனை கூறினார். ஆனால், அப்படிச் செய்ய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு நம்பிக்கையோ, துணிச்சலோ இல்லை. எனவே, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அத்தகைய நடவடிக்கையை எடுக்காமல் இருந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கைப் பொறுத்தவரை அரசியல் கட்சித் தலைவர்கள் கூறும் யோசனைகளை அல்ல - ராணுவத் தளபதிகள் சொல்லும் யோசனைகளை மட்டுமே மத்திய அரசு எப்போதும் கேட்கிறது என்று அனைவருமே கூறுகின்றனர்.
மூல வேர் எது?
காஷ்மீர் பிரச்சினை ஏன் இன்னும் தீராமல் நீடிக்கிறது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பாகிஸ்தானிய அரசின் - ராணுவத்தின் தீங்கரம் ஒன்று. காஷ்மீர இஸ்லாத்துக்கு வஹாபியிசத்தின் பங்களிப்பு இரண்டாவது. பண்டிட்டுகளை மாநிலத்திலிருந்து வெளியேறச் செய்தது மூன்றாவது. பிற மாநில இந்தியர்களுக்குக் காஷ்மீர் விவகாரத்தில் ஆர்வம் இல்லாதது நான்காவது. இந்திய ராணுவமும் துணை நிலை ராணுவப் படைகளும் மனித உரிமைகளை மீறுவதாகக் கூறப்படும் நிகழ்வுகள் ஐந்தாவது. காங்கிரஸ் கட்சியின் தவறுகளும் குற்றங்களும் ஆறாவது.
காஷ்மீரிகளின் அதிருப்திக்கு மூல வேர் எது என்று ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கோ, மோடிக்கோ தெரியாதது வியப்பே அல்ல; மத, கலாச்சார, அறிவார்ந்த பன்மைத்துவம் என்பதற்கு நேர் முரணானது இந்துத்துவா. ஜனநாயகம், சுதந்திரம், சகிப்புத்தன்மை, பன்மைத்துவம் போன்ற குணங்கள் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் குணங்களாகத் திகழ்ந்தன. மகாத்மா காந்தி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் அதை வளர்த்தனர். அவை அப்படியே அரசியல் சட்டத்திலும் இடம்பெற்றன. துரதிர்ஷ்டவசமாக காஷ்மீர் விவகாரத்தில் அவற்றைத் தவறாகவே பயன்படுத்தி வந்துள்ளனர் நேரு, இந்திரா, ராஜீவ் மற்றும் கடைசியாக சோனியா போன்ற தலைவர்கள்.
தமிழில்: சாரி

India communication

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போதுதான் தொலைத் தொடர்பு துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது என்று சொல்லலாம். அஞ்சல், டெலிகிராப் என தகவல் பரிமாற்றத்திற்குத் தேவையான துறைகளில் பிரிட்டிஷார் கவனம் செலுத்தினர். அதில் பல்வேறு புதுமைகளையும் கொண்டு வந்தனர். அப்படி வளர்ந்த இந்திய தொலைத் தொடர்புத் துறை இன்று சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு துறையாக வளர்ந்து நிற்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் சிறு கிராமங்களுக்கு கூட இன்று இணையதள வசதியும் மொபைல்போன் வசதியும் சென்றடைந்திருக்கிறது.
தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொண்டது என்றே சொல்லலாம். 2ஜி, 3ஜி, 4ஜி என்று அடுத்தடுத்த தொழில்நுட்பத்தை கடந்து நாம் சென்று கொண்டிருக்கிறோம். மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதற்கு மத்திய அரசும் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருவது வரவேற்கப்படவேண்டியது.
# 1851 - கொல்கத்தாவுக்கும் டைமண்ட் துறைமுகத்துக்கும் இடையே முதன் முதலில் மின்னணு டெலிகிராப் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
# 1853 - சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் டெலிபோன் எக்சேஞ்ச் திறக்கப்பட்டன.
# 1882 - 6,400 கிலோ மீட்டர் அளவுக்கு டெலிகிராப் இணைப்புகள் போடப்பட்டன.
# கொல்கத்தாவில் ஆரம்ப காலத்தில் 93 சந்தாதாரர்கள் மட்டுமே இருந்தனர்.
# உலகம் முழுவதும் 658 கோடி தொலைத் தொடர்பு சந்தாதாரர்கள் உள்ளனர்.
# மொத்த சந்தாதாரர்களில் 13 சதவீதம் பேர் இந்தியர்கள். அதாவது இந்தியாவில் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 86.30 கோடி.
# இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 6.1 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது.
# நேரடியாக 22 லட்சம் வேலைவாய்ப்புகளையும் மறைமுகமாக 20 லட்சம் வேலைவாய்ப்புகளையும் அளித்து வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 2.54 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
# உலகிலேயே தொலைபேசி கட்டணம் இந்தியாவில்தான் குறைவானது.
# சர்வதேச அளவில் இன்டர்நெட் வசதியை பயன்படுத்துவதில் இந்தியாவின் இடம் 3.
# 2016-ம் ஆண்டு ஜனவரி மாத தகவலின் படி இந்தியாவில் மொத்தம் உள்ள இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 46.2 கோடி.
# கடந்த 10 வருடங்களாக மிக அதிகமாக அந்நிய நேரடி முதலீடு வரும் துறையாக இந்திய தொலைத் தொடர்பு துறை உள்ளது.
# உலக அளவில் தொலைபேசி மற்றும் செல்போன்கள் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
# அடுத்த ஐந்து ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
# 2020-ம் ஆண்டுக்குள் 127 கோடி சந்தாதாரர்களை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
# 2013-14 ஆண்டு தகவலின்படி இந்த துறையின் மொத்த வருமானம் 4.29 லட்சம் கோடி ரூபாய்.
# 2014-15ம் ஆண்டு நிலவரப்படி இந்தத் துறையின் மதிப்பு ரூ. 1,34,000 கோடிக்கும் மேல் உள்ளது.
# இந்தியாவில் முதல் மொபைல் டெலிபோன் சேவை 1995-ம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்டது.
# இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை 5,00,000 கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது.
# 2014-ம் ஆண்டு தகவலின் படி இந்திய இ-காமர்ஸ் துறையின் மதிப்பு ரூ.1,47,499 கோடி
# 6.5 கோடி மக்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்குகின்றனர்.
# 2016-ம் ஆண்டு இரண்டாவது காலாண்டு படி இந்த துறையின் மொத்த வருமானம் ரூ.47,374 கோடி
# இந்தியாவில் உள்ள செல்போன் கோபுரங்களின் மொத்த எண்ணிக்கை 2.1 லட்சத்துக்கு அதிகம்.
# இந்த துறைக்கு கடந்த ஆண்டு வந்த அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு ரூ.19,443 கோடி