செவ்வாய், 24 ஜூன், 2014

முன்னணி 500 நிறுவனங்களில் 38 தமிழக நிறுவனங்கள்

டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் நிறுவனம் இந்தியாவின் 500 முன்னணி நிறுவனங்களை வரிசைபடுத்தி இருக்கிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 38 நிறுவனங்கள் இடம் பிடித்திருக்கின்றன. இந்த நிறுவனத்தின் 14வது ஆண்டு அறிக்கை இதுவாகும்.

சர்வதேச விமான தயாரிப்பு - டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் and RUAG

டாடா குழும நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம், சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனமான ருவாக் (RUAG) உடன் சேர்ந்து விமானத்தயாரிப்பில் ஈடுபட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஹைதராபாதில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனத்தின் தலைவர் ராமதுரை, ருவாக் நிறுவனத்துடன் இணைந்து முழுமையான விமானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளோம்.
இது இந்திய விமானபோக் குவரத்து துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.
அடிபாட்லா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமையவுள்ள ஆலை டாடாவின் நான்காவது திட்டமாகும். தற்போது அமைக்கப் படவிருக்கும் திட்டம் முழுமையான விமானம் தயாரிப்பு நிறுவனமாக மாறும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
இந்த விழாவில் தெலுங்கானா முதல் அமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்றார். ருவாக் நிறுவனத்தின் துணைத்தலைவர் மார்டின் பல்மன்னும் (Martin Buhlmann) இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
ஸ்விஸ் நாட்டை சேர்ந்தது ருவாக் நிறுவனம். இதன் தலை மையகம் பெர்ன் நகரத்தில் இருக்கிறது.
இந்தத் துறையில் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் திட்டமாக இது இருக்கும் என்றும், தெலுங்கானா மற்றும் ஹைதராபாதுக்கு முக்கிய திட்டமாக இருக்கும் என்றும் எஸ்.ராமதுரை தெரிவித்தார். இந்திய ஐரோப்பா கூட்டணி இந்த திட்டம் ஒரு சிறந்த உதாரணம் என்றும் அவர் தெரிவித்தார். இன்னும் ஐந்து வருடங்களில் ஏரோஸ்பேஸ் துறையில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம் இருக்கும் என்று அதன் தலைவர் ராமதுரை தெரிவித்தார்.
அடிபாட்லா சிறப்பு பொருளாதார மண்டலம் (ஏரோஸ்பேஸ்) சர்வதேச அளவில் செயல்பட்டுவரும் குறிப்பிடத்தகுந்த மண்டலம் என்று தெலுங்கான முதல்வர் தெரிவித்தார். மேலும் தெலுங்கான பகுதியில் ஆராய்ச்சி மையங்களும், ஆய்வகங்களும் இருப்பது இந்த துறைக்கு சாதகமான அம்சம் என்றார்.
ருவாக் நிறுவனத்தின் மார்டின் கூறும் போது டோர்னியர் விமானம் பல ஆண்டுகளாக இந்தியாவில் இயங்கி வருகிறது. இங்கு மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியது பெருமையாக இருக்கிறது.
இந்தியாவில் டாடா போன்ற ஒரு வலிமையான கூட்டாளி கிடைத்திருப்பதால் இந்த கூட்டணி பல ஆண்டுகள் நீடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திங்கள், 23 ஜூன், 2014

பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்கின்றனவா ? -அட்லாஸ்ட் 2030

பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்கின்றனவா என்பதை அறிவதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக மிகப் பெரிய தொலைநோக்கி ஒன்று விண்ணுக்குச் செல்லத் தயாராகிவருகிறது. பூமியில் மட்டுமல்லாமல், விண்ணிலும் தொலைநோக்கிகள் சுற்றிவந்து விண்வெளியைப் படமெடுத்து பூமிக்கு அனுப்பிவருகின்றன. 1990-ல் ஏவப்பட்ட ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி அவற்றில் மிகப் பெரியது. இது பூமியின் சுற்றுப்பாதையில் வலம்வந்துகொண்டே தனக்கு இடப்பட்ட பணியைச் செவ்வனே செய்துவருகிறது. தற்போது, அதைவிடப் பெரிய, துல்லியமான விண்வெளித் தொலைநோக்கியை உருவாக்கும் பணியில் அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ‘அட்லாஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைநோக்கி, வரும் 2030-ல் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த வாரம் பிரிட்டனின் போர்ட்ஸ்மெளத் நகரில் நடைபெறும் தேசிய வானியல் கூட்டத்தில் இந்தத் திட்டம் குறித்த தகவல்களை, ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி என்ற அமைப்பின் தலைவரும் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் மற்றும் விண்வெளி அறிவியல் துறைப் பேராசிரியருமான மார்ட்டின் பார்ஸ்டோவ் விவரிக்க உள்ளார். இந்த ‘அட்லாஸ்ட்' விண்ணில் 10.5 லட்சம் கிலோமீட்டர் தொலைவில், கிட்டத்தட்ட பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தைவிட நான்கு மடங்கு தொலைவில் விண்ணில் அமைக்கப்பட உள்ளது.
இதன்மூலம், பூமி போன்ற கோள்களைத் துல்லியமாகப் படமெடுக்க முடியும் என்பதுடன் அந்தக் கோள்களின் வளிமண்டலங்கள் குறித்தும் தகவல்களைச் சேகரிக்க முடியும். “30 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்களை இந்தத் தொலைநோக்கியால் காண முடியும். அந்தத் தொலைவுக்குள் காணக்கிடைக்கும் கோடானுகோடி கோள்களில் பூமியைப் போன்ற கோள்கள் குறைந்தபட்சம் 60 இருக்கலாம்” என்று மார்ட்டின் பார்ஸ்டோவ் கூறுகிறார். இதில் பொருத்தப்படும் கண்ணாடியின் விட்டம் மட்டும் 65 அடிக்கும் மேல் இருக்கும். இத்தனை பெரிய கருவியைச் சுமந்துசெல்ல ராக்கெட்டுகளால் முடியாது என்பதால், கட்டுமானப் பொறியியலில் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் இதன் பாகங்களை எடுத்துச் சென்று விண்ணில் அதைப் பொருத்துவார்கள் என்கிறார் மார்ட்டின். உலகம் எத்தனை சிறியது!

வளர்ச்சியா, இயற்கையா?

தொழிற்சாலைகள் அமைக்க, சுரங்கங்கள் வெட்ட, மேம்பாலம் கட்ட, நெடுஞ்சாலைகள் போட, கட்டுமானங்களை நிறுவ நிலங்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தேவை அரசுக்கும் இருக்கிறது, தனியார் தொழில் நிறுவனங்களுக்கும் இருக்கின்றன. இந்த நிலங் களைக் கையகப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தீர்க்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. ‘நிலம் கையகப்படுத்தலில் நியாய மான இழப்பீடு, வெளிப்படையான நடவடிக்கைகள், மறுவாழ்வு, மறு குடியமர்த்தல் சட்டம் -2014' என்று அதற்குப் பெயர்.
புதிய சட்டம் இயற்றப்பட்டு ஆறு மாதங்கள்தான் ஆகின்றன என்றாலும், புதிய பிரதமர் நரேந்திர மோடி தொழில்துறையின் நண்பர் என்பதாலும் வளர்ச்சிதான் தனது தாரக மந்திரம் என்று அவர் முழங்கிய தாலும் இந்தச் சட்டத்தை மேலும் எளிமையாக்கி, நீர்த்துப்போக வைக்க சிலர் கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர். அதிகச் செலவில்லாமலும் தங்களுக்கு வேண்டிய இடத்தில், வேண்டிய அளவில் நிலங்களை எளிதில் வாங்கிவிட அவர்கள் விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் நியாயமாக இல்லை. ‘பொதுத் தேவைகளுக்காக' நிலங்களைக் கையகப்படுத்தலாம் என்று 1894-ம் ஆண்டு நிலக் கையகப்படுத்தல் சட்டத்தில் உள்ள பிரிவை பெரும்பாலும் தவறாகவே இதுவரை பயன்படுத்திவந்துள்ளனர்.
2014 ஜனவரியில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம், பல வகைகளிலும் பழைய சட்டத்தைவிட மேம்பட்டது. இழப்பீட்டுத் தொகையைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு திட்டத்துக்காகப் பலருடைய நிலங் களைக் கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டால், பாதிக்கப்படுவோரில் 80% பேருடைய ஒப்புதல் தேவை என்ற நிபந்தனை சட்டத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது. இதனால், சமூகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுவாழ்வு தரப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
கிராமப்புறங்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்குச் சந்தை மதிப்பைப் போல ஆறு மடங்கு இழப்பீடு தரப்பட வேண்டும் என்று முதலில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், சட்டத்தில் மூன்று மடங்கு கொடுத்தால் போதும் என்று குறைக்கப்பட்டது. பலவகைப் பயிர்கள் விளையும் நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்று முதலில் கூறப்பட்டது. தொழிலதிபர்கள் கேட்டுக்கொண்டதையடுத்து அந்தப் பிரிவும் கைவிடப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கோ அரசாங்கங்கள் செவிமடுப்பதில்லை.
இந்த நாட்டின் வலிமைக்கு ஆதாரமாக விளங்குவது விவசாயமும் வனவளமும்தானே தவிர, வீட்டுவசதித் திட்டங்களும், நூற்றாண்டுக்கும் குறைந்த ஆயுள் உள்ள தொழிலகங்களும் சுரங்கங்களும் அல்ல. முதலில் இந்தச் சட்டத்தை அப்படியே அமல்படுத்தி, அதன் அனுபவத் தின்பேரில் இதில் மாற்றங்களைச் செய்யலாம். அப்போதும்கூட வனவளம், விவசாய வளம், நில உரிமையாளர்களின் நலன் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கெனவே, தோல் பதனிடும் தொழிற்சாலைகளையும் சாயப்பட்டறைகளையும் அனுமதித்துவிட்டு, நீர்வளத்தையும் நிலவளத்தையும் பாழடித்ததிலிருந்து இன்னமும் நாம் பாடம் கற்கவில்லை. தற்காலிக லாபத்துக்காக இயற்கை வளங்களை அழிப்பதைப் போன்ற தற்கொலை முயற்சிகளை இத்தகைய சட்டத் திருத்தங்கள் மூலம் அரசு மேற்கொள்ளக் கூடாது என்பது முக்கியம்.

தட்டச்சு இயந்திரத்தின் தந்தை - கிறிஸ்டோபர் லதாம் சோல்ஸ்

தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என்று அழைக்கப் படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் லதாம் சோல்ஸ் (பிப்ரவரி, 14, 1819 - பிப்ரவரி 1890). இவர் விஸ்கான்சின் மாகாணத்தின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். தி கெனொசா டெலிகிராஃப் எனும் செய்தித்தாளையும் நடத்தி வந்தார். இன்றுவரை பயன்படுத்தப்படும் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கியவர் அவர்தான். அவருக்கு முன்னதாகவே பலர் தட்டச்சு இயந்திரங்களை உருவாக்கினர். எனினும் வணிகரீதியாக வெற்றி அடைந்த தட்டச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் இவரே. ஒருநாள் அவரது நிறுவனத்தின் அச்சுக்கோப்புத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அவர்கள் இல்லாமலேயே அச்சுக்கோப்புப் பணியைச் செய்வதற்காக ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க சோல்ஸ் முயன்றார்.
பிறகு, புத்தகங்களுக்கு எண்கள் பதிக்கும் ஒரு கருவியை அவரும் அவரது நண்பர் சாமுவேலும் சேர்ந்து 1866-ல் தயாரித்தனர். அவர்களோடு கார்லஸ் கிளிட்டன் எனும் ஒரு வழக்கறிஞரும் சேர்ந்துகொண்டார். முதலில் பியானோ போன்ற அமைப்பில் ஒரு இயந்திரம் தயாரிக்கப்பட்டது. அதைக்கொண்டு பெரும்பாலும் மரத்தாலான தட்டச்சு இயந்திரத்தை அவர்கள் தயாரித்தனர். 1868-ல் இதே நாளில் அதற்குக் காப்புரிமை கிடைத்தது. இந்த இயந்திரத்தில் சோல்ஸ் ஒரு ஒப்பந்தத்தைத் தட்டச்சு செய்தார். முதன்முதலில் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணம் அதுதான். ஜேம்ஸ் டென்மோர் என்பவர் அவர்களின் காப்புரிமையின் கால்வாசியை வாங்கிக்கொண்டார். தட்டச்சு இயந்திரத்தை மேலும் நவீனப்படுத்த டென்மோர் முயன்றபோது நால்வர் குழுவில் இரண்டு பேர் விலகிக்கொண்டனர். பின்னர், சோல்ஸ், டென்மோர் ஜோடி அந்தப் பணியைத் தொடர்ந்தது. கணினி, செல்போன்களில் பயன்படும் குவார்ட்டி கீபோர்டு எனப்படும் முறையையும் சோல்ஸ்தான் கண்டுபிடித்தார்.1890 பிப்ரவரி 17-ல் காசநோயால் சோல்ஸ் மரணமடைந்தார்.

அரசுப் பள்ளிகளில் ஆயிரம் குறைகள் இருக்கின்றன (தனியார் பள்ளிகளைப் போலவே).

பள்ளிக் கல்வி மேலாண்மைத் தகவல் மைய ஆய்வறிக்கையின்படி, தமிழகத்தில் 500 பள்ளிகளில் வெறும் ஐந்து குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர். அரசின் அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை என்றாலும், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1,000 பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் மட்டும் மூடப்பட்டிருக்கின்றன என்கிறது ஓர் ஆய்வறிக்கை. ராமகோவிந்தன்காடு பள்ளிக்கூடம் ஆயிரத்து ஒன்றாக இருக்கலாம். இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த மூடப்பட்ட வெற்றுக்கட்டிடம் சிதிலம் அடையும். ஒரு பெருமழை நாளில் உத்திரமும் சுவர்களும் உடைந்து குட்டிச்சுவராகும். புதர்களும் புற்றுகளும் வளரும். பாம்புகள் நுழையும். 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்த அந்தக் கோயில், நம்முடைய சுயநல வேட்கையையும் சமூக அலட்சியத்தையும் பிரகடனப் படுத்திக்கொண்டு புதர் மண்டிய ஒரு சமாதிபோல் நிற்கும். இந்தியாவின் 100 பள்ளிகளில் 40 பள்ளிகள் இன்றைக்குத் தனியார் பள்ளிகள். அடுத்த சில 10 ஆண்டுகளில் மீதியுள்ள 60 பள்ளிகளும் இப்படிச் சமாதிகள் ஆகலாம்.
பள்ளிக்கூடங்களின் அடிப்படை என்ன?
வெகு நாட்களுக்கு முன் நேரில் கிடைத்த ஓர் அனுபவம் இது. நன்கு படித்த, நல்ல வசதியான பெற்றோர்கள் அவர்கள். நம்மில் பலரையும்போல, அரசுப் பள்ளிக்கூடத்தின் மீது அவர்களுக்கும் ஒவ்வாமை. ஊரின் பெரிய தனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தார்கள். குழந்தை களை உருப்படிகளாகப் பாவிக்கும் சூழலைப் பார்த்து அதிர்ந்து, அடுத்த வகுப்பில் வேறு ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கும் அதே அதிர்ச்சி. மீண்டும் இன்னொரு தனியார் பள்ளி. தங்கள் குழந்தைகள் சுதந்திரமாக, சந்தோஷமாகப் படிக்க வேண்டும் என்று நினைத்த அவர்களுக்கு மீண்டும் அதே அதிர்ச்சி. மாற்றுக் கல்விமுறையில் கற்பிக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்த்தார்கள். அங் கும் அவர்களுக்குத் திருப்தி இல்லை. கடைசியாக, குழந்தைகள் வீட்டிலிருந்து தானே படிக்கும் சூழலை உருவாக்கினார்கள். குழந்தைகள் அபாரமாகப் படித்தார்கள். சந்தோஷமாக இருந்தார்கள்.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் சமீபத்தில் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தைகள் அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்கள். என்ன விஷயம் என்று கேட்டபோது, அந்தப் பெற்றோர்கள் சொன்னார்கள்: “குழந்தைகள் வீட்டிலிருந்து படித்தபோது பாடப்புத்தகங்களில் இருந்த பாடங்களை நன்றாக உள்வாங்கிக்கொண்டார்கள். ஆனால், சமூகத்தில் என்ன நடக்கிறது என்றே அவர்களால் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. சரி, தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம் என்றால், அங்கும் இதேதானே நடக்கிறது? அவரவர் வசதி, சமூக அந்தஸ்துக்கு இணையான குழந்தைகளுடன் மட்டுமே படிக்க வாய்ப்புள்ள குழந்தைகளால் அங்கு என்ன கற்றுக்கொள்ள முடியும்? கல்வியின் முக்கிய மான செயல்பாடே சமூகத்தைப் படிப்பதுதான் அல்லவா? ஒரே மாதிரியான மனிதர்களுடன் உரை யாடி, உறவாடும் குழந்தைகளால் எப்படி உலகைப் புரிந்துகொள்ள முடியும்; வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள முடியும்?” - முக்கியமான ஒரு கேள்வி இது.
கல்வியின் அடிப்படை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. அதாவது, ஒரு குழந்தையிடம் உறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டுவந்து சமூகத்தின் வளத்தோடு அதைப் பொருத்துவதில். சமூகத்தைப் படிப்பதிலிருந்தே அதைக் குழந்தை தொடங்க வேண்டும். சக மனிதனின் இன்னல்களை, துயரங்களைப் பார்த்து ஊற்றெடுக்கும் அன்பும் இரக்கமும் கோபமும் எழுச்சியும்தானே சமூக விடுதலைக்கான ஆதாரம்?
தலைமுறைகளின் தவம்
ஒரு அரசுப் பள்ளிக்கூடம் என்பது வெறும் செங்கற் களால் மட்டுமா எழுப்பப்படுகிறது? ஒவ்வொரு பள்ளியின் பின்னணியிலும் எத்தனையெத்தனை மனுக்கள், எத்தனையெத்தனை போராட்டங்கள்? சாலையில் நடக்கும் சக மனிதனின் கால் தடம், தன் காலில் பட்டால் தீட்டு என்று சொல்லி, அவன் தன் இடுப்பில் துடைப்பம் ஒன்றைக் கட்டிக்கொண்டு தன் காலடிச்சுவடுகளைப் பின்புறமாகக் கூட்டியபடியே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த சமூகம் இது. சாலையில் எங்கேனும் எச்சிலைத் துப்பி விட்டால், தீட்டாகிவிடும் என்று கழுத்தில் மண் கலயத்தைக் கட்டிக்கொண்டுதான் நடக்க வேண்டும் என்று சக மனிதனுக்கு ஆணையிட்டிருந்த சமூகம். இப்படிப்பட்ட சமூகச் சூழலில், எல்லாப் பாகுபாடுகளையும் கடந்து, எல்லோர் வீட்டுப் பிள்ளைகளும் சரிசமமாக உட்கார்வதும் படிப்பதும் சாப்பிடுவதும் உரையாடுவதும் உறவாடுவதும் எத்தனை தலைமுறைகளின் நூற்றாண்டு தவம்? இந்தியாவில் எந்த அமைப்பாலும் உருவாக்க முடியாத சமூகநீதி அமைப்பு அரசுப் பள்ளியில் சாத்தியமானது. அந்த அமைப்புகளைத்தான் இன்றைக்கு ஒவ்வொன்றாகக் கொன்று புதைத்துக் கொண்டிருக்கிறோம்.
அரசு மட்டும்தான் காரணமா?
அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யார் காரணம்? உடனே நம் பார்வை அரசையும் அரசியல்வாதிகளையும் நோக்கிச் செல்லும். கொஞ்சம் நம் கைகளையும் உற்றுப்பார்க்கலாம். அரசுப் பள்ளிகளின் தோல்விக்கான காரணிகளில் அரசும் அரசியல்வாதிகளும் தவிர்க்கவே முடியாத வர்கள் என்றாலும், அவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்லர். இன்னும் சொல்லப்போனால், முதன்மைக் குற்றவாளிகள் பெற்றோர்களாகிய நாம்தான்.
நூறு ரூபாய் செலவில்லாமல், ஒரு மணி நேரம் காத்திருக்க வைக்காமல் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்கின்றன அரசுப் பள்ளிகள். கூடவே, பாடப்புத்தகங்கள், புத்தகப்பையில் தொடங்கி சைக்கிள், மடிக்கணினி வரை வழங்குகின்றன. ஆனாலும், அதிகாலையிலிருந்தே வரிசையில் நின்று காத்திருந்து, லட்ச ரூபாய் கொடுத்து, படாத பாடுபட்டு தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு, பணம்பிடுங்கிகளிடம் மாட்டிக்கொண்டு புலம்பவே துடியாய் துடிக்கிறோம். ஏன்?
அவலப்போக்கின் ஆரம்பம்
அரசுப் பள்ளிகளில் ஆயிரம் குறைகள் இருக்கின்றன (தனியார் பள்ளிகளைப் போலவே). சீரழிவுக்கு அடிப்படைக் காரணம் என்ன? நம்முடைய பொறுப்பற்றத்தனம். நம் அருகில் இருக்கும் அரசுப் பள்ளி நம் சொத்து; அங்கே பல்லாயிரங்களில் ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் நம் வரிப்பணம்; அங்கே நம் குழந்தைகளுக்குத் தரமான கல்வியைக் கொடுக்க வேண்டியது இந்த அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை; அதற்காகக் கை உயர்த்திக் கேள்வி கேட்பது நம்முடைய உரிமை என்ற எண்ணம் நம் ஒவ்வொருவருக்கும் இருப்பின் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?
சமூகத்தில் யாருடைய குரல்களுக்கு எல்லாம் அதிகாரத்தின் வலு இருக்கிறதோ, அவர்கள் எல்லோரும் இன்றைக்குத் தனியார் பள்ளிகளை நோக்கி நகர்ந்துவிட்டோம். நம்முடைய பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் இல்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அரசுப் பள்ளிகளுக்கும் நமக்குமான தொடர்பு அறுந்துவிட்டது. எஞ்சி இருப்பவர்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் இருப்பவர்கள். குரல்களற்ற ஏழைகள். காலையில் விடிந்தவுடன் கூலி வேலைக்கு ஓடி, இரவில் வீடு திரும்பும் அவர்களால் யாரை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியும் அல்லது அவர்கள் கேள்விக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?

வெள்ளி, 20 ஜூன், 2014

2001 முதல் அகதிகள் தினம் - June 20

அகதிகளின் நிலைபற்றிய ஒரு ஆய் வரங்கை ஐ.நா. 1951-ல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக 2000-ல் ஐ.நா. இயற்றிய ஒரு தீர்மானத்தில் 1951 கூட்டத்தின் 50-வது ஆண்டுவிழாவை ஒட்டி, ஜூன் 20-ம் தேதியை அகதிகளுக்கான ஒரு உலக நாளாக அறிவித்ததையொட்டி, 2001 முதல் அகதிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. 

உலகத்தில் 2011-ம் ஆண்டு வரை அகதிகளாக மாறும் சூழலுக்குத் தள்ளப்பட்டவர்கள் சுமார் 4 கோடியே 33 லட்சம் பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் குழந்தைகள். தங்களுக்கு அடைக்கலம் தருமாறு பல்வேறு நாடுகளுக்கு அகதிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர். 171 நாடுகளில் 8 லட்சத்து 76 ஆயிரத்து 100 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாக இடம் பெயர்பவர்களும் உள்ளனர். அவர்களுக்கும் ஐ.நா. உதவிசெய்கிறது. 64 நாடுகளில் வசிக்கும் 35 லட்சம் பேரை நாடற்ற மனிதர்கள் என்று ஐ.நா. அடையாளம் கண்டுள்ளது. உலக அளவில் அவர்களது எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. பிற நாடுகளிலிருந்து வந்த அகதிகள் இந்தியாவிலும் உண்டு.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் அகதியா
னவர்கள், வங்கதேசப் போர், ஆப்கானிஸ்தான் போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், திபெத் அகதிகள், பர்மா அகதிகள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் இந்தியாவில் உள்ள அகதிகளில் முக்கியமானவர்கள். நாகரிகம் வளராத காலத்தில் உணவுக்காகப் புதிய இடங்களைத் தேடிச்சென்ற மனிதர்கள், இன்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலைந்துதிரிகிறார்கள்!