வெள்ளி, 24 ஏப்ரல், 2015

http://kamarajar.blogspot.in/

http://kamarajar.blogspot.in/

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

பொருள்:
எங்களின் மனம் வெற்றியடையும் வலிமை பெறுக
மற்றவர்களின் வெற்றிக்கு (பாடுபடும்) முன்பு
நமது வெற்றிக்கு உழைக்க முயலுவோம்
ஏற்றத்தாழ்வு பேதங்களை இதயத்திலிருந்து எடுத்திட
இனிய நண்பன் இழைத்த தவறினைப் பொறுத்திட
எங்கள் மனதிற்கு வலிமை தருக
பொய்களிடமிருந்து விலகி நிற்கவும்
உண்மைகளை நெஞ்சில் உரமாகக் கொள்ளவும்
எங்கள் மனதிற்கு வலிமை தருக
இன்னல் வரும் பொழுதில்
அறத்துடன் நிற்கவும்
அற வழியில் செல்லவும்
எங்கள் மனதிற்கு வலிமை தருக.
இந்தப் பாடலைப் பாடிய வாணி ஜெயராம் தன் குரல் வளமையால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்தார். இந்தப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பினால் இந்திப் பட உலகில் பெரும் சலசலப்பு எழுந்ததாகச் சொல்வார்கள். இந்தியாவின் நைட்டிங்கேல் என்று புகழப்படுபவர் லதா மங்கேஷ்கர்.
வாணி ஜெயராமைப் பாடவைப்பதை அவர் எதிர்த்ததாகச் செய்தி. வாணியை ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்களின் படங்களில் இனிப் பாட மாட்டேன் என்று லதா சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்த இந்திப் பாடலுக்கு இணையான தமிழ்ப் பாடலைப் பார்ப்போம்.
திரைப்படம்: ஆட்டோகிராஃப். பாடலாசிரியர்: பா. விஜய்.
இசை: பரத்வாஜ். பாடியவர்: சித்ரா
பாடல்:
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள்தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம்தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சைப் போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா
துக்கம் இல்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளைக் கொண்ட இந்தப் பாடலுக்குத் தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘விவசாயிகள் படுகொலை’ ‘விவசாயிகளின் தற்கொலைகள்’

முக்கால் மணி நேரத்துக்கு ஒரு விவசாயி உயிரை மாய்த்துக்கொள்ளும் இந்த நாட்டில், ஒரு விவசாயியின் தற்கொலையால் நாடாளுமன்றம் முடக்கப்படுவது அசாதாரண நிகழ்வுதான். காண்டாமிருகத் தோலைவிடக் கடினமான, கருணைக்கோ, சொரணைக்கோ இடமே இல்லாததாகிவிட்ட இந்திய அரசியல் வர்க்கத்தின் இதயத்தைக் கொஞ்சமேனும் சுரண்டியிருக்கிறது ஒரு மரணம். விபத்துகளால் உருவாகும் வரலாற்றின் போக்கை திசை மாற்றும் சக்தி சில தற்கொலைகளுக்கு உண்டு. கஜேந்திர சிங்கின் ஆன்மா சாந்தி அடையட்டும்!
வரலாற்றுச் சூதாட்டத்தில் விதியின் காய் நகர்த்தல்போலவே தோன்றுகிறது கஜேந்திர சிங்கின் தற்கொலை. ஒரு அரசு எல்லா எதிர்ப்புகளையும் மீறி, பேய் வெறியோடு மக்கள் விரோத மசோதா ஒன்றை நிறைவேற்ற முற்படும் சூழலில், தலைநகரில் சாமானியர்களின் கட்சி என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஆம் ஆத்மி கட்சி, அதற்கெதிராகப் போராடுவதாகச் சொல்லி நடத்தும் பொதுக்கூட்டப் பகுதியில், பல நூறு போலீஸாரும் சில ஆயிரம் கட்சிக்காரர்களும் பார்க்க ஒரு விவசாயி தூக்கிட்டுக்கொள்வதும், அதைப் பார்த்துக்கொண்டே அந்தக் கட்சி ‘போராட்ட’த்தைத் தொடர்வதும் சொல்லும் செய்தி என்ன? இந்த நாட்டில் ஆளும்கட்சி மட்டும் அல்ல; எதிர்க்கட்சிகளும் போலிகளால் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டின் முதுகெலும்பு என்று நம் பாடப்புத்தகங்கள் சொல்லும், நாட்டுக்குச் சோறிடும் அறுதிப் பெரும்பான்மையினரான விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முதலில் அவர்கள்தான் கிளர்ந்தெழ வேண்டும்.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தரும் தகவல்களின் படியே கடந்த 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டு களில் மட்டும் 39,553 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். 2014-ம் ஆண்டுக்கான ஆவணக் காப்பக விவரம் வரும் ஜூலையில்தான் வெளி யாகும் என்றாலும், நல்ல அறிகுறிகளுக்கான வாய்ப்புகள் தெரியவில்லை. ஏனென்றால், இந்திய விவசாயிகள் தற்கொலைகளின் தலைமை கேந்திரமான மகாராஷ்டிரத்தில் - நாட்டின் தலைமைத் தொழில் கேந்திரம், நாட்டின் பணக்கார மாநிலம், நாட்டிலேயே அதிகமானோர் நகரங்களில் வசிக்கும் மாநிலமும்கூட - கடந்த ஆண்டு 1981 விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கின்றனர் என்கின்றன ஊடகங்கள். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் இந்த எண்ணிக்கை அங்கு 601 ஆகியிருக்கிறது. நாடு முழுவதும், 1995 முதலான கடந்த 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.
இந்த எண்ணிக்கைகள் எல்லாம்கூட உண்மையில் சொற்பம் தான். காவல் நிலையங்கள் தவிர்க்க முடியாமல் பதியும் / அரசாங்கங்கள் தவிர்க்க முடியாமல் தரும் எண்ணிக்கைகள். விவசாயிகள் தற்கொலைகள் செய்தியாக மாறி தரும் சங்கடங்களால் விவசாயிகள் தற்கொலைகளைப் பல மாநிலங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இருட்டடிப்பு செய்கின்றன. உதாரணமாக, பத்துக்கும் இருபதுக்கும் அல்லாடும் மக்களைக் கொண்ட, மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கத்தால் பீடிக்கப்பட்ட சத்தீஸ்கரில் கடந்த மூன்றாண்டு களில் நடந்த விவசாயிகள் தற்கொலை என்று அங்கு ஆளும் பாஜக அரசு தரும் எண்ணிக்கை இது: 2011-ல் 0; 2012-ல் 4; 2013-ல் 0. மூன்று வருடங்களுக்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக 1567 தற்கொலைகள் நடந்து கொண்டிருந்த, தற்கொலையில் முன்னணியிலிருந்த மாநிலம் அது. சத்தீஸ்கரில் குழந்தைகூட அரசாங்கம் தரும் இந்தப் புள்ளிவிவரத்தைப் பார்த்தால் நகைக்கும். கூசாமல் மறைக்கிறார்கள்.
தமிழகத்திலும் இதைப் பார்த்தோம். கடந்த 2012-ல் காவிரியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகின. இழப்பைத் தாங்க முடியாமல் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி மாவட்டங்களில் உயிரை மாய்த்துக்கொண்டனர். இழப்பீடு கேட்டு, விவசாயிகள் நீதிமன்றம் சென்றபோது, வேளாண் பிரச்சினையால் எவரும் சாகவில்லை என்று நீதிமன்றத்திடம் கூறினார்கள் மாவட்ட ஆட்சியர்கள்.
இப்படியெல்லாம் மறைத்தது போக, பதிவுசெய்யப்பட்ட விவரங்கள்தான் கடந்த 20 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்ட கதையைச் சொல்கின்றன. இந்தியாவின் 6.38 லட்சம் கிராமங்களிலும் வருமானத்துக்கு வழியில்லாமல் மறுகி மறுகிச் சாவோரின் எண்ணிக்கை நம்மிடம் இல்லை. வேளாண் தோல்வியின் காரணமாக, தம் சந்ததியினருக்கும் இந்தத் தொழில் வாய்த்துவிடக் கூடாது எனும் விரக்தியால், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக நிலத்தையும் விற்றுவிட்டு தொழிலையும் விட்டுவிட்டு நடைப்பிணங்களாக நகரங்களில் திரிவோரின் எண்ணிக்கை நம்மிடம் இல்லை.
சமீபத்தில் படித்த ஒரு கதை இது. தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில், இளைஞர்கள் பலரால் கொடூரமாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட ‘நிர்பயா’வின் பெற்றோரின் கதை அது. ஒரு சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த அவர்களுக்கு இருந்த ஒரே ஆதாரம் கொஞ்சம் நிலம். பெண்ணின் படிப்புக்காக, அவளுடைய எதிர்காலக் கனவுக்காக அந்த ஆதாரத்தையும் விற்றுவிட்டுதான் நகரத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இப்போது பெண்ணும் இல்லை, நிலமும் இல்லை. ஏதோ இருக்கிறோம் என்கிறார்கள். இந்தக் கதைகளுக்கெல்லாம் எண்ணிக்கை கிடையாது.
ஆனாலும், 3 லட்சம் உயிர்கள் சாதாரண எண்ணிக்கை இல்லை. சென்ற நூற்றாண்டின் முதல் படுகொலையான நமீபிய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களைப் போலக் கிட்டத்தட்ட 6 மடங்கு இது. கிட்டத்தட்ட இது ஒரு இனப்படுகொலைதான். அரசின் கொள்கைகளின் விளைவாகத் தொடர்ந்து ஒரு இனம் - தொழில் சார்ந்து - மரணத்தை நோக்கித் தள்ளப்படுகிறது. தங்கள் வாழிடத்தைவிட்டு விரட்டப்படுகிறது. இந்தப் பின்னணியில், நெருக்கடியில் உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒரு விவசாயியின் மரணத்தை எப்படித் தற்கொலை என்று நாம் சொல்ல முடியும்? ஏன் இதன் தீவிரம் நமக்கு உறைக்கவில்லை?
வார்த்தைகளின் அரசியல் முக்கியமானது.
முன்பு நாட்டின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவராக இருந்து, இப்போது அரசின் ஊதுகுழலாகிவிட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் எம்.ஜே. அக்பர், நிலம் கையகப் படுத்தும் மசோதாவை ஆதரித்து சமீபத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக் கிறார். அதில் அரசுக்கு ஆலோசனையாக அவர் எழுப்பி யிருக்கும் கேள்வி இது: “நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு, மறுகுடியமர்வு, நியாயமான இழப்பீட்டுக்கான உரிமை வழங்கும் மசோதா’ என்ற இதன் பெயரை நாம் ஏன் ‘நிலம், நிலமற்றோரின் பொருளாதார மறுவாழ்வு மசோதா’ என்று அழைக்கக் கூடாது?”
வார்த்தைகளின் அரசியல் முக்கியமானது.
நாம் ஏன் இன்னும் ‘விவசாயிகள் படுகொலை’யை, ‘விவசாயிகளின் தற்கொலைகள்’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம்?
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

வியாழன், 23 ஏப்ரல், 2015

http://www.tamilagaasiriyar.com/


கிராஸ், கலியானோ: போருக்கு எதிரான இரு குரல்கள்

நாவலாசிரியராக, கவிஞராக, இலக்கிய விமர்சகராக, வாய்ப்பு கிடைக்கும்போது சிற்பக் கலையிலும் சித்திரம் வரைவதிலும் ஈடுபட்டவராக, ஜாஸ் இசைப் பிரியராக, நவ-தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவராக, சுற்றுச்சூழல் கேடுகளுக்கு எதிராக உரக்கப் பேசுபவராக வாழ்ந்தவர் குந்தர் கிராஸ். உருகுவேவில் பிறந்து, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவின் வலுவான போர் எதிர்ப்புக் குரல்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர் எட்வர்டோ கலியோனா. இருவரின் மறைவாலும் உறுதியான போர் எதிர்ப்பாளர்கள் இருவரை இந்த உலகம் இழந்துவிட்டது.
நாஜிகள் இழைத்த பெருங்கேடுகளிலிருந்து ஜெர்மானிய சமுதாயம் இன்னும் விடுபடவில்லை என்று கருதியவர்களில் கிராஸும் ஒருவர். தமது தலைமுறையைச் சேர்ந்தவர்கள், நாஜிகளின் வளர்ச்சிக்கு எவ்வாறு உணர்வுபூர்வமாக உதவினார்கள் அல்லது கண்டும் காணாததுபோல் இருந்தார்கள் என்பதைத் தன் படைப்புகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர் கிராஸ். “எந்தவொரு உன்னத லட்சியத்துக்காக நடத்தப்படும் போரிலும்கூட, மனிதத்தன்மையை அழிக்கச் செய்யும் அம்சம் இருக்கவே செய்யும்” என்றார் கிராஸ். கருத்துச் சுதந்திரமும் மனித உரிமைகளும் ஒடுக்கப்பட்டபோதெல்லாம் உரக்கக் குரல்கொடுத்த அவர், அணு ஆயுதக் குவிப்புக்கும் ஆயுதப் போட்டிக்கும் எதிரான கருத்துகளைப் பிரச்சாரம் செய்தார்.
நாஜிப் படையில் கிராஸ்
தமது 79-ம் வயதில் முதலில் ஒரு ஜெர்மானியப் பத்திரி கைக்குக் கொடுத்த நேர்காணலிலும், பின்னர் அடுக்கடுக்கான தமது நினைவுகளை விரிவாக எடுத்துரைக்கும் ‘பீலிங் தி ஆனியன்’ (வெங்காயத்தை உரித்தல்) எனும் சுயசரிதையிலும் தமது 17-ம் வயதில் நாஜிகளின் ‘வாஃபென் எஸ்.எஸ்.’ என்னும் கொலைப் படைப் பிரிவில் சேர்ந்து 18 வயது நெருங்கும் வரை அதில் பணிபுரிந்திருந்ததைப் பதிவுசெய்தார்.
நாஜிகளின் அதீத தேசியவாதத்தை விமர்சனபூர்வமாகப் பகுத்தாயும் மனப்பக்குவமோ சிந்தனையாற்றலோ பதின்வயது கிராஸுக்கு இருந்திருக்க முடியாது. தவிர, 1945-லிருந்தே அமெரிக்க ராணுவ ஆவணங்களில் காணப்படும் இந்தத் தகவல் பிரெஞ்சு நாளேடான ‘ல ஃபிகரோ’வால் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டதுதான். ஆனாலும், ஜெர்மனியிலும் பிற நாடுகளிலுமுள்ள வலதுசாரி சக்திகளுக்கு கிராஸையும் அவரது கொள்கைகளையும் அவதூறுசெய்ய இந்தத் தகவல் பெரிய துருப்புச் சீட்டாகப் பயன்பட்டது. “கிராஸ் 17-ம் வயதிலிருந்தே உணர்வுபூர்வமான நாஜியாக இருந்திருக்கிறார், தனது புத்தகங்களின் விற்பனைக்குப் பாதிப்பு ஏற்படாமல் செய்யவே இந்த விஷயத்தை அவர் மூடி மறைத்திருக்கிறார்” என்றெல்லாம் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டார்கள். இந்தப் பிரசாரத்தில் வலதுசாரி சக்திகளோடு அமெரிக்க, ஜெர்மானிய ராணுவ ஆக்கிரமிப்புகளை ஆதரிக்கும் பசுமைக் கட்சி, ஜெர் மன் இடது கட்சி ஆகியனவும் வெறித்தனமாகப் பங்கேற்றன.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இராக், ஆஃப்கன் ஆகியவற்றில் அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இன்றைய ஜெர்மன் அரசாங்கம் மேன்மேலும் பங்கேற்பது நாஜிகளின் அரசியல், ராணுவவாதத்துக்கு ஒப்பானது என்று கூறிவந்தவர் கிராஸ். மேலும், 1990-ல் மேற்கு ஜெர்மனியுடன் இணைக்கப்பட்ட கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் முதலியோரைக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களது வேலை வாய்ப்புகளைப் பறித்தல், விசாரணைக்கு உட்படுத்துதல் போன்றவற்றை ஜெர்மன் அரசாங்கம் செய்தது நாஜிகளின் ஒடுக்குமுறையைப் போன்றது என்றும் அவர் விமர்சித்துவந்தார். யூதர்களுக்கு நாஜி ஜெர்மனி இழைத்த கொடுமைகளுக்குப் பரிகாரமாக இஸ்ரேலுக்கு உதவி செய்தல் என்னும் பெயரால் அந்த அரசாங்கம், அணு ஆயுத ஏவுகணைகளைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலொன்றை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவுசெய்ததை விமர்சித்து ‘சொல்லித் தீர வேண்டியது என்ன?’ என்னும் கவிதையையும் கிராஸ் வெளியிட்டார். இஸ்ரேல், உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறிய அவர், அந்த நாட்டு அரசையும் மக்களையும் வேறுபடுத்திப் பார்த்தார். எந்த அணு ஆயுதத்தையும் கொண்டிராத ஈரான் மீது பொய்ப் பழிகளைச் சுமத்துவதை விமர்சித்த அதேவேளை, “யூதர்கள் இனப் படுகொலை செய்யப்படவே இல்லை, அது ஜியோனிஸ்ட்டுகளின் கட்டுக்கதை” என்று கூறிவரும் ஈரானிய அரசியல்வாதிகளையும் கண்டனம் செய்தார்.
குற்றவுணர்வின் எச்சம்
அவர் மீது நல்லெண்ணம் கொண்ட சிலரோ, கிராஸ் ஏன் இத்தனை காலம் ‘வாஃபென் எஸ்.எஸ்.’ விவகாரத்தை மறைத்து வைத்திருந்தார் என்ற கேள்வியை எழுப்பினார்கள். எல்லோருக்கும் பதில் கூறும் விதமாக அவர் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்: “அந்தக் குற்றத்தில் எனக்கு செயலூக்கமுள்ள பங்கேற்பு இருந்தது என்று யாரும் என் மீது குற்றம் சுமத்த முடியாது என்றாலும், கூட்டுப் பொறுப்பு என்று இன்று பொதுவாக எல்லோராலும் சொல்லப்படும் ஒன்றின் எச்சம் இன்று வரை என்னுள் இருந்துவருகிறது. எனது வாழ்க்கையில் இன்னும் எஞ்சிய நாள்களில் நான் அதனோடுதான் வாழ்ந்தாக வேண்டும்.”
அந்த ‘எச்சத்தோடு’ கடைசி நாள் வரை வாழ்ந்த அவர், இறப்புக்குச் சில நாள்களுக்கு முன் ‘எல் பயஸ்’ என்னும் ஸ்பானிய நாளேட்டில் வெளிவந்த நேர்காணலில், உக்ரைன், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகியவற்றில் உள்ள மோசமான நிலைமை, இராக்கில் அமெரிக்கர்கள் ஏற்படுத்தியுள்ள பேரழிவு, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் அட்டூழியங்கள், சிரியப் பிரச்சினை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இப்படி எச்சரித்தார்: “எல்லா இடங்களிலும் போர். முன்பு நாம் செய்த அதே தவறையே மீண்டும் இழைக்கும் அபாயத்தில் இருக்கிறோம். இதை உணர்ந்துகொள்ளாவிட்டால், தூக்கத்தில் நடப்பதுபோல மூன்றாவது உலகப் போரில் நுழைந்துவிடுவோம்!”
எட்வர்டோ கலியானோ
அமெரிக்க இந்தியர்களுக்கு ‘அறிவொளி’ ஊட்டுவதற்காக (கிறிஸ்தவ மதமாற்றம்தான்) ஸ்பானிய ஆட்சியாளர்களால் தென்னமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட கத்தோலிக்கப் பாதிரியார் பார்த்தலோமி டெ லாஸ் காஸாஸ் மனிதநேயம் மிக்கவர். கொலம்பஸில் தொடங்கி, மெக்ஸிகோ, பெரு போன்றவற்றைக் கொடும் வன்முறையின் மூலம் ‘வெற்றிகொண்டவர்களான’ ஹெர்னன் கோர்டேஸ், பிஸ்ஸாரோ போன்ற ஸ்பானியர்கள் அடுத்தடுத்து நடத்திய கொலை, கொள்ளை நிகழ்வுகளில் பல்லாயிரக் கணக்கான அமெரிக்க இந்தியர்கள் கொல்லப்பட்டதை பார்த்தலோமி இப்படி எழுதினார்: “ஸ்பானியர்கள் தமது கைகளில் சிலுவைகளையும் இதயங்களில் தங்கத்தின் மீதிருந்த தணியாத ஆசையையும் வைத்துக்கொண்டு முன்னேறினார்கள்.”
கோகா, தங்கம், வெள்ளி, பருத்தி, வாழை போன்ற பழவகைகள், விலங்குகளின் தோல்கள், கம்பளி நூல், பெட்ரோலியம், இரும்பு, நிக்கல், மங்கனீஸ், தாமிர, அலுமினிய உலோகத் தாதுக்கள், உரமாகவும் வெடிபொருளுக்கான மூலப் பொருளாகவும் பயன்படும் நைட்ரேட்டுகள், தகரம் - இவையெல்லாம் லத்தீன் அமெரிக்கா என்னும் உடலின் நாளங்கள். அவற்றின் ஒரு பக்க முனைகளைப் பிளந்து நுழைந்த ஸ்பெயின் முதலிய மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கருங்கடல் தீவு நாடுகள் வரை சென்று அத்தனை வளங்களையும் கொள்ளையடித்துக்கொண்டு அந்த வெட்டுண்ட முனைகள் வழியாகத் திரும்பி வரும் வரலாற்றைச் சொல்லும் காவியம்தான் இந்திய, தமிழக வாசகர்களுக்கு கலியானோவை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ‘லத்தீன் அமெரிக்காவின் பிளந்த நாளங்கள்.’
அந்த நூலின் முக்கியத்துவத்தை அவரே விளக்குகிறார்: “லத்தீன் அமெரிக்காவின் வதைபட்ட வரலாற்றினூடே கழுத்து நெரிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட புரட்சிகளின் ஆவிகள் அனைத்தும் புதிய அனுபவங்களாகத் திரும்பி வருகின்றன, நிகழ்காலம் ஏதோ கடந்த காலத்தின் முரண்பாடுகளால் ஆரூடம் சொல்லப்பட்டுத் தோற்றுவிக்கப்பட்டதுபோல. வரலாறு என்பது பின்னோக்கிப் பார்க்கும் தீர்க்கதரிசி: வரலாறு எதுவாக இருந்ததோ, எதற்கு எதிராகப் போராடியதோ, அதன் காரணமாக அது வரப்போவது என்ன என்பதை அறிவிக்கிறது.”
சர்வதேச நிதியம், உலக வங்கி, நவதாராளவாதப் பொருளாதாரம், நுகர்வுப் பொருள்களுக்கான விளம்பரங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள், கார்ப்பரேட் ஊடகங்கள், மத நிறுவனங்கள் முதலியனவும்கூட உலகிலுள்ள ஏழை, நடுத்தர மக்கள் மீது உலக முதலாளித்துவம் நடத்தும் போர்கள்தான் என்பதை வலுவாகச் சொன்னவை காலியானோவின் படைப்புகள்.
போதைப் பொருளுக்கு எதிரான போர்
கிறிஸ்தவ ஒழுக்க நெறிகளின் பெயரால், ‘உன்னதமான சமூக/குடும்ப விழுமியங்க’ளின் பெயரால் கோகா பயிரிடும் தென்னமெரிக்க நாடுகள் மீது அமெரிக்க அரசாங்கத்தால் பல பத்தாண்டுகளாகவே ‘போதைப் பொருளுக்கு எதிரான போர்’ நடத்தப்பட்டுவருகிறது.
ஒரு வண்டு வானத்தில் பறப்பதைக்கூடத் துல்லியமாகக் கண்டு பிடிக்கும் அதிநவீன கருவிகளைக் கொண்டுள்ள அமெரிக்கா வுக்கு, தென்னமெரிக்க நாடுகளிலிருந்து நாள்தோறும் பல சிறு விமானங்களில் கொகெய்ன் கொண்டுவரப்படுவது தெரியாதா என்ன? பல லட்சம் பில்லியன் டாலர் பெறுமதியுள்ள கொகெய்ன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மாஃபியா கும்பல்களின் முக்கியப் புள்ளிகள் ஏன் இதுவரை கைதுசெய்யப்படவில்லை?
தென்னமெரிக்க அரசுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அந்தக் கண்டம் முழுவதையுமே தனது கண்காணிப்பில் வைத்திருக்கவுமே அமெரிக்கா ‘போதைப் பொருளுக்கு எதிரான போரை’ நடத்துகிறது. பல நூற்றாண்டுச் சுரண்டலின் காரணமாக, கோகா பயிர் வளர்ப்பதைத் தவிர எந்த வாழ்வாதாரமும் இல்லாத சிறு, குறு விவசாயிகள்தாம் அமெரிக்காவின் விமானக் குண்டு வீச்சுக்குப் பலியாகிறார்கள். சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடும் கிளர்ச்சியாளர்கள் இந்தப் ‘புனிதப் போரின்’ பெயரால்தான் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்படுகிறார்கள். அமெரிக்க ராணுவ இயந்திரம் இலகுவாக வேலை செய்ய ஊற்றப்படும் எண்ணெய் வகைகளிலொன்றுதான் இந்தப் போர். கூடவே, ‘உலக முதலாளித்துவ மாய்மாலச் சொல்லாடல்களின் முன்னோடி விக்டோரியாப் பேரரசியின் இறுக்கமான ஒழுக்க நெறி’ என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் கலியானோ.
விக்டோரியாதான் முன்னோடி
விக்டோரியாவின் ஆட்சியின் கீழ்தான் இந்தியாவிலுள்ள விளைநிலங்கள் கஞ்சா சாகுபடிக்கு மாற்றப்பட்டு, அபினி சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. லட்சக் கணக்கான சீனர்கள் அபினிக்கு அடிமையானதைக் கண்ட சீன அரசு, அபினி வணிகத்தைத் தடை செய்தது. அந்த அரசை ஒடுக்க பிரிட்டிஷ் போர்க் கப்பல்கள் சென்று பல்லாயிரக் கணக்கான சீனர்களைக் கொன்று குவித்தன. அந்தப் போர்க் கப்பல்களுக்குப் பின்னால் டன் கணக்கில் அபினியை ஏற்றிச் சென்ற வணிகக் கப்பல்கள் சென்றன. ஆனால், விக்டோரியாவின் வாயிலிருந்து ‘போதைப் பொருள்’, ‘போர்’ என்னும் சொற்கள் ஒருபோதும் வெளிவந்ததில்லை.
உலக முதலாளித்துவமும் சுற்றுச்சூழல் மாசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதைத் தன்னுடைய ‘சில்ரன் ஆஃப் தி டேஸ்: எ காலண்டர் இன் ஹ்யூமன் ஹிஸ்டரி’யில் கலியானோ இப்படிச் சொல்கிறார்:
“ஒரு நாள் ஐன்ஸ்டின் தமது நண்பர்கள் சிலரிடம் கூறினார்: ‘இந்தப் புவிப் பரப்பிலிருந்து தேனீக்கள் காணாமல் போய்விடு மானால், மனிதனின் ஆயுள் காலம் நான்கு ஆண்டுக் காலத் துக்கு மேல் இருக்காது. தேனீக்களும் இருக்காது, மகரந்தச் சேர்க்கையும் இருக்காது... மனிதர்களும் இருக்க மாட்டார்கள்.’ நண்பர்கள் நகைத்தனர். ஐன்ஸ்டின் சிரிக்கவில்லை.”
உலகில் தேனீக்களின் எண்ணிக்கை இப்போது குறைந்துகொண்டே இருக்கிறது. இது கடவுளின் சித்தத்தினாலோ சாத்தானின் சாபத்தினாலோ அல்ல, மாறாக கீழ்க்கண்டவற்றால்தான் நிகழ்கிறது என்பதை ‘புவி நாள்’ அனுசரிக்கப்படும் தருணத்தில் நாம் ஒப்புக்கொள்வோமாக:
“இயற்கைக் காடுகள் கொலை செய்யப்படுவதும் பண்ணைக் காடுகளின் எண்ணிக்கை பெருகுவதும்; பயிர்களின் பன்மைத் தன்மையை வரம்புக்குட்படுத்தும் ஒற்றைப் பயிர், ஏற்றுமதிக்காக சாகுபடி செய்யப்படுவதும்; பூச்சிகளோடு சேர்த்து மற்றவற்றையும் நஞ்சு கொல்வதும்; பணத்தைக் கர்ப்பமாக்கி, மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்கள் இருப்பதும்; விளம்பரங்களைப் பார்த்து நாம் வாங்கும் இயந்திரங்கள் கதிர்வீச்சைக் கக்குவதும்!”
- எஸ்.வி. ராஜதுரை, மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர். இவரது மொழிபெயர்ப்பில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ நூல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
தொடர்புக்கு: sagumano@gmail.com
இன்று உலகப் புத்தக தினம்

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

Story about Amul

சினிமா உலகத்தில் ஒரு சென்ட்டி மென்ட் ‘ரஜினி என்ட்ரி சாங் எஸ்பிபி பாடினால் படம் சூப்பர் ஹிட் ஆகும்.’
இந்த அடிப்படையில் எஸ்பிபி-யை ரஜினியின் லக்கி மஸ்கட் (Lucky Mascot) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். Mascot என்றால் அதிர்ஷ்டம் கொண்டு வரும் பொருள் அல்லது மனிதன் என்று அர்த்தம். சினிமாவில் மட்டு மல்ல, தொழிலிலும் இத்தகைய முகங்களாக சில மஸ்கட்கள் இருக்கிறார்கள். பொசி ஷனிங்கில் இவர்களுக்கு முக்கிய இடம் உண்டு.
1940 காலகட்டம். பெஸ்டன்ஜி எடல்ஜி தலால் (Pestonji Edulji Dalal) என்பவர்தான் இந்தியாவின் பெரிய வெண்ணெய் வியாபாரி. இவருடைய செல்லப் பெயர் பாலி (Polly). இந்தப் பெயரின் அடிப்படையில், தன் தயாரிப்புக்கு பால்சன் (Polson) வெண்ணெய் என்று பெயர் வைத்தார்.
இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ராணுவம், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு இவர்தான் வெண்ணெய் சப்ளை. ஆகவே, அரசாங்கமும், இவருக்குப் போட்டியே வராதபடி சலுகைகள் தந்தார்கள். குஜராத் மாநிலத்தில் கிராம வீடுகளில் எருமை மாடுகள் வளர்ப்பார்கள். ஆகவே, ஏராளமான பால் உற்பத்தி. மாட்டு சொந்தக்காரர்களிடமிருந்து ஏஜென்டுகள் மூலம் அடிமாட்டு விலைக்கு பாலை வாங்கினார் பாலி.
இந்த அநியாயத்தை ஒழிக்க, சர்தார் வல்லபாய் பட்டேல் குஜராத்தில் பால் தயாரிப்பாளர்கள் கூட்டுறவுச் சங்கம் தொடங்க ஊக்கம் கொடுத்தார். 1946 - இல் Kaira District Milk Co-operative Milk Producers Union Limited தொடங்கியது. இது, Gujarat Co-operative Milk Marketing Federation என்னும் மாநிலம் முழுக்கக் கிளைகள் கொண்ட அமைப்பாக வளர்ந்தது.
தயாரிப்புப் பொருட்களுக்கு அமுல் (AMUL) என்னும் பெயர் வைத்தார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் - கூட்டுறவுச் சங்கங்களில் ஒரு அங்கமான Anand Milk Union Limited ன் பெயரில் முதல் எழுத்துகளைச் சேர்த்தால் AMUL என்று வரும், இரண்டாவது காரணம், அமுல் என்றால் சமஸ்கிருத மொழியில் பெரு மதிப்புள்ளது என்று அர்த்தம்.
அமுல் குழந்தை
1946 முதல் அமுல் வெண்ணெய் விற்பனை தொடங்கியது. சந்தையில் கால் ஊன்றிவிட்ட பால்சனோடு அமுல் போட்டி போடத் திணறியது. 1966 - இல் வெண்ணெய் விற்பனை சில லட்சங்களே. அமுல் கம்பெனித் தலைவர் வர்கீஸ் குரியன் (Verghese Kurien) பால்சன் விற்பனையை முந்துவதற்கு என்ன செய்யலாம் என்று திட்டமிட்டார்.
தன் விளம்பர ஏஜென்சியான அட்வர்ட்டைசிங் அண்ட் ஸேல்ஸ் புரமோஷன் கம்பெனி உயர் அதிகாரிகளோடு ஆலோசனைகள் நடத்தினார். ஒரே ஒரு சிக்கல். பால்சன் பணபலம் கொண்டவர். கூட்டுறவு நிறுவனமான அமுல் கம்பெனியிடம் பணவசதி குறைவு. குறைந்த செலவில் மக்கள் மனங்களில் அமுல் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும்.
அமுல்,விளம்பர ஏஜென்சி இருவரும் வித்தியாசமாகச் சிந்தித்தார்கள். பொசிஷனிங்கை இரண்டு விதங்களில் உருவாக்கத் திட்டமிட்டார்கள்.
முதல் வியூகம், ஒரு மாஸ்கட். துறுதுறு முட்டைக் கண்கள், குறும்புப் பார்வை, கொழு மொழு கன்னம், மூஞ்சி நிறையக் குறும்பு, வெண்ணெய் திருடும் கண்ணன் மாறுவேடப் போட்டியில் இந்தக் காலப் பெண் குழந்தை வேஷம் போட்டால் இப்படித்தான் இருந்திருப்பான். பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா, பேசும் பொற்சித்திரமே என்று பாசத்தோடு கட்டி அணைத்துக் கொள்ளத் தூண்டும் ஈர்ப்பு. அன்றும், இன்றும், என்றும் நான்கு வயதான இந்தப் பெண்ணுக்குத் தனிப் பெயர் கிடையாது. அமுல் குழந்தை (Amul Moppet) என்றே அழைக்கப் படுகிறாள்.
1966 இல் பிறந்த அமுல் பாப்பாவின் பெற்றோர் - அட்வர்ட்டைசிங் அண்ட் ஸேல்ஸ் புரமோஷன் கம்பெனியின் இயக்குநர் ஸில்வெஸ்ட்டர் டக்குனா (Sylvester DaCunha), ஆர்ட் டைரக்டர் யூஸ்டஸ் ஃபெர்னாண்டஸ் (Eustace Fernandez) ஆகிய இருவரும்.
அமுல் பாப்பாவை எல்லோருக்கும் பிடித்துவிட்டது. அமுல் வெண்ணெய் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது அமுல் தங்களின் இரண்டாம் பொசிஷனிங் வியூகத்தைக் களம் இறக்கினார்கள்.
வித்தியாசமான விளம்பரம்
1967. மும்பையின் சர்னி ரோடு (Charni Road) பகுதி. காலை நேரம். ரோட்டில் ஒரே கூட்டம். ஒரே சப்தம். குடும்பத் தலைவி ஷீலா மானே வெளியே எட்டிப் பார்க்கிறார். அங்கே ஒரு பிரம்மாண்ட விளம்பரப் பலகை (Hording) அமுல் விளம்பரம்!
48 வருடங்கள் ஓடிவிட்டன. அமுல் விளம்பரப் பலகைகளின் வெற்றிப் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. எப்படித் தெரியுமா? பல காரணங்கள்:
மக்களின் நாடித் துடிப்பை முழுக்க முழுக்க உணர்ந்து, நாட்டு நடப்பில் அவர்கள் கவனத்தைக் கொக்கி போடும் தலைப்புச் செய்தியை எப்போதும் கண்டுபிடிக்கும் லாவகம்
செய்திகளின் சூடு கொஞ்சமும் குறையும் முன்னால் பொருத்தமான விளம்பரம் உருவாக்கும் அற்புத டைமிங். யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவைக் குறும்பு செய்தியோடு அமுல் வெண்ணெயை எப்படியோ இணைக்கும் அசகாயக் கற்பனை.
நாயகன்
சில விளம்பரங்களைப் பாருங்கள். அவற்றின் வீரியத்தை உணர்வீர்கள்.
1987-இல் நாயகன் படம் ரிலீஸ் ஆனவுடன் வந்த விளம்பரம். (எழுத்துப் பிழையை மன்னிப்போம்!) 2009. ரஹ்மான். ஆஸ்கர் ஜெயஹோ. சாய்னா நேவால் அண்மையில் உலக பாட்மின்டன் நம்பர் 1 ஆனவுடன்...
புதுமையான உத்தி
இந்த விளம்பரப் பலகைகள் மூலம் அமுல் இன்னொரு புதுமை, இல்லை, இல்லை,. உலக விளம்பர வரலாற்றில் பெரும் புரட்சி செய்திருக்கிறது. விளம்பரப் பலகைகள் எப்போதுமே துணிக் கடைகள், ஹோட்டல்கள், பொருட்காட்சிகள், சினிமாக்கள் போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகளை லோக்கல் மக்களுக்குத் தெரிவிக்க மட்டுமே பயன்பட்டுவந்தன.
நாடு முழுக்க விற்பனையாகும் தயாரிப் புப் பொருட்களுக்கு நாளிதழ்கள், பத்திரிகைகள், ரேடியோ, தொலைக் காட்சி ஆகிய ஊடகங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இந்தப் பொருட்களுக்கு விளம்பரப் பலகை கள் எப்போதாவது உபயோகப் படுத்தப்பட்டாலும், ஒப்புக்குச் சப்பாக, பிற ஊடகங்களோடு கருவேப்பிலை யாகத்தான் பயன்பட்டன.
தேசிய விளம்பரத்துக்கு விளம்பரப் பலகைகள் தகுதி இல்லாதவை என்பது விளம்பர மேதைகளின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை உடைத்தெறிந்த பெருமை அமுலுக்குத்தான். இதில் அனுகூலம் என்ன தெரியுமா? ஒரு தொலைக்காட்சி விளம்பரம் போடுகிற செலவில் நூறு விளம்பரப் பலகை கள் வைக்கலாம். பத்திரிகையில் விளம்பரம் போடுகிறீர்களா? தயாரிப்புப் பொருளுக்குப் பொருத்தமான மாடல் வேண்டும். விளம்பரம் பிளாக் அண்ட் ஒயிட்டில் வந்தால் யாரும் சீந்த மாட்டார்கள். கலர் விளம்பரம். செலவு எங்கோ....போய் விடும்.
அந்தச் செலவில் எத்தனை எத்தனையோ விளம்பரப் பலகைகள் வைக்கலாம். செலவுக்குச் செலவு மிச்சம். அமுலின் அனுபவத்துக்குப் பிறகுதான் விளம்பரப் பலகைகளின் மவுசு கூடியது.
பால், பால் பவுடர், தயிர், மோர், வெண்ணெய், நெய், சீஸ், ஐஸ்க்ரீம், சாக்லெட் என வகை வகையான பால் தயாரிப்புகள். ஆண்டு விற்பனை 14,000 கோடியை எட்டுகிறது. இந்த மாபெரும் வெற்றிக்கு என்ன காரணங்கள்? நான் சொல்லவேண்டாம். உங்களுக்கே தெரியும்.
slvmoorthy@gmail.com

திங்கள், 20 ஏப்ரல், 2015

Comment about Girls on Black Color

அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப் படுகிறதோ இல்லையோ, அரசியல்வாதிகள் தங்கள் வார்த்தை ஜாலங் களுக்கு வாகாகப் பெண்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் இணை அமைச்சர் கிரிராஜ் சிங், “ராஜீவ்காந்தி, நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை மணந்து, அந்தப் பெண் சோனியாவைப் போல் வெள்ளைத் தோலுடன் இல்லாமல் இருந்தால் அவரை காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தலைவியாக ஏற்றுக்கொண்டிருப்பார்களா?” என்று கேட்டிருக்கிறார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களிடம், “நீங்கள் இப்படி வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினால் உங்கள் தோல் கறுத்துவிடும். பிறகு உங்களுக்கு மணமகன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, திருமணம் தாமதமாகிவிடும்” என்று அறிவுரை வழங்கி யிருக்கிறார் கோவா மாநில முதல்வர் லகஷ்மிகாந்த் பர்சேகர்.
காப்பீட்டுத் துறை சீர்திருத்த மசோதா குறித்த விவாதத்தின்போது, “தென்னிந்தியப் பெண்கள் அழகான உடல் அமைப்பைக் கொண்டவர்கள். அவர்களின் கறுப்பு நிறமும் அழகானது. அவர்களுக்கு நடனமாடவும் தெரியும்” என்று சொல்லியிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ். தான் கறுப்பு, வெள்ளை நிற பேதத்தைக் குறித்து மட்டுமே பேசியதாகவும் தன் கருத்தைச் சிலர் திரித்துச் சொல்கின்றனர் என்றும் சரத்யாதவ் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பேச்சுகளுக்குப் பின் உள்ள அரசியல் நோக்கங்கள் தனி விவாதத்துக்கு உரியவை. கிரிராஜ் சிங்கின் கவலை நிறபேதம் பற்றியதா அரசியல் சார்ந்ததா என்பது கேள்விக்குரியது.
அறிவா, நிறமா?
ஆனால், அரசியலைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இவர்களின் இந்தப் பேச்சுகள், கறுப்பு நிறத்தின் மீதான ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றன. நிறம் சார்ந்த ஆதிக்கம் சமூகத்தின் எல்லாத் தட்டு மக்களிடமும் மேலோங்கி இருக்கிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் நிற வேறுபாடு குறித்த விருப்பு வெறுப்புகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு சமூக நிகழ்வும் மாற்றங்களும் அதைத்தான் சொல்கின்றன.
தொலைக்காட்சி விளம்பரங்களில் பெரும் பாலானவைச் சிவப்பழகு குறித்தவையாகவே இருக்கின்றன. சிவப்பாக இருந்தால் மட்டுமே ஒரு பெண்ணுக்குக் கல்வி, வேலை, நண்பர்கள், திருமணம் உட்பட அனைத்தும் சாத்தியம் என்பது போலவே பல விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன. சிவப்பாக இருந்தால் மட்டுமே தன்னம்பிக்கை சாத்தியம் என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும் விளம்பரங்களும் உண்டு. ஆண்களுக்கான பிரத்யேக சிவப்பழகு க்ரீம்களும் சந்தைக்கு வந்துவிட்டன. மூன்று வேளை உணவில்லாமல்கூட இருந்துவிடலாம், சிவப்பழகு இல்லாமல் இருக்கவே கூடாது என்கிற தொனியில்தான் விளம்பரங்கள் கூச்சலிடுகின்றன.
காட்சி ஊடகம் மட்டுமல்ல, நம்மைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளில் நிறம் என்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தன் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. வீடு, அலுவலகம், பொதுவெளி என்று எங்கேயும் எப்போதும் சிவப்புக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கிறவர்கள், கறுப்பு நிறத்தை அத்தனை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதில்லை. சிவந்த, அழகான என்பவை மட்டும்தான் மணப்பெண்ணுக்கான தகுதிகளா? பல்வேறு நிறுவனங்களில் வரவேற்பாளராகவும், விற்பனைப் பிரிவில் வேலை செய்யவும் சிவந்த நிறம்தான் அடிப்படைத் தேவையா? அங்கே அறிவு ஏன் இரண்டாம்பட்சமாக்கப்படுகிறதா? அறிவைவிட நிறம் சக்தி வாய்ந்ததா?