செவ்வாய், 1 டிசம்பர், 2015

தடம் பதித்த நூல்கள்: உலக சரிதம்

தடம் பதித்த நூல்கள்: உலக சரிதம்

கலை
COMMENT   ·   PRINT   ·   T+  
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் இருந்தபோது தன் மகள் இந்திராவுக்குப் பல கடிதங்கள் எழுதினார். அப்போது இந்திராவுக்குப் பத்து வயது. அந்தக் கடிதங்களை விரிவுபடுத்தி எழுதப்பட்டதுதான் இந்த நூல். எந்தக் குறிப்பும் இல்லாது, நினைவிலிருந்து இந்த நூலை வடித்துள்ளார் நேரு. Glimpses of World History என்ற அந்த ஆங்கில நூல், நேருவின் அமைச்சர்களில் ஒருவரான ஓ.வி. அளகேசனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1947- ல் முதல் பதிப்பும் 1958-ல் இரண்டாம் பதிப்பும் வெளிவந்தன.
2013-ல் அதே நூலை பல்கலைப் பதிப்பகம் இரு தொகுதிகளாய் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை மொழிபெயர்த்தபோது ஓ.வி. அளகேசனும் சிறையில் இருந்துள்ளார். இவ்வளவு அருமையான இந்த நூல் இவர்கள் இருவரையும் சிறையில் வைத்த ஆங்கியேலயர்களின் உதவியில்லாமல் வெளிவந்திருக்காது.
மனித வரலாறு முழுக்க புரட்சிகளும் மாறுதல்களும் தொடர்ந்து வந்துள்ளன என்பதை நேரு நூலின் தொடக்கத்திலேயே பதிவு செய்துவிடுகிறார். மனிதனின் அறியப்பட்ட 7000 ஆண்டுகள் வரலாற்றை நேரு சுவையுடன் பரிமாறுகிறார். வெறுமனே வரலாற்று நிகழ்வுகளை அடுக்காமல், விமர்சனப் பார்வையை அவற்றுள் செலுத்தி, ஒரு தத்துவ விசாரணையையே நேரு நடத்துகிறார்.
ஆசிய, ஐரோப்பிய வரலாறுகளின் ஒற்றுமையையும் வேற்றுமையையும் முதலில் விவரிக்கத் தொடங்கி, மனித நாகரிகம் எப்படிப் படிப்படியாக வளர்ந்துள்ளது என்பதைப் படம் பிடிக்கிறார். திராவிட, ஆரிய மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த மொழிகளைப் பேசிய மக்கள் கடைபிடித்த நாகரிகங்களின் கலப்புதான் இந்திய நாகரிகம் என்கிறார். ஆரியர்களுடன் வந்த வர்ணப் பாகுபாடு அவர்களால் பாதுக்காக்கப்பட்டது ஏன் என்பதையும் நேரு விளக்குகிறார்.
2500 ஆண்டுகளுக்கு முன்பு மதங்களும் அறிவியலும் எதிரும், புதிருமாக தோன்றி, எவ்வாறு மோதிக்கொண்டன? கிறிஸ்தவ மதம் நிலப்பிரபுத்துவ உறவுகளுடனும், பண்ணை அடிமைத்தனத்துடனும் எப்படிச் சமரசம் செய்துகொண்டது என்பதையெல்லாம் விளக்குகிறார் நேரு.
நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்துக்கு எதிராக கிறிஸ்துவ மதத்துக்குள்ளேயே ஓயாத சண்டைகள் நடந்தன. இறுதியாக, போப்பாண்டவரின் ஆதிக்கத்திலிருந்து ஒரு பிரிவினர் பிரிந்து போனார்கள். அவர்கள் பிராட்டஸ்டண்டுகள் எனப்பட்டனர். கி.பி. 622-ல் உதித்த இஸ்லாமுக்கும், கிறிஸ்தவத்துக்கும் இடையே சிலுவை யுத்தம் 150 ஆண்டுகள் நடைபெற்றது. அதைவிடக் கொடுமையானது இங்கிலாந்துக்கும், அயர்லாந்துக்கும் இடையே 600 ஆண்டுகள் நடந்த போர். கிறிஸ்தவத்துக்கு எதிராக இஸ்லாம் எல்லோரையும் சமமாக பாவித்தபோதும் பெண்களை மட்டும் கீழ்நிலையில் வைத்திருந்தது.
இந்தியாவின் தத்துவஞானிகளில் முக்கியமானவரான ஆதிசங்கரரின் காலமான எட்டாம் நூற்றாண்டிலும்கூடப் பண்டைய இந்திய தத்துவ ஞானியான சார்வாகன் என்பவரின் நாத்திகக் கொள்கைகள் மக்களிடம் பரவியிருந்தன.
ஐரோப்பாவில் ஆலைத் தொழில்கள் தொடங்கியவுடன், பெருநகரங்களும் முதலாளித்துவமும் உருவாயின. முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்துடன் முரண்பட்டது. ஐரோப்பாவில் நடந்த தொழிற்புரட்சிக்கு முன்பாக, ஆசிய நாடுகளே உலக உற்பத்தியில் முன்னணியில் இருந்துள்ளன. ரயில் இன்ஜின், நீராவிக் கப்பல் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புக்கள் உற்பத்தியில் ஐரோப்பியர்களை முன்னிலைப்படுத்தின என்றும் தனது புத்தகத்தில் விவாதிக்கிறார் நேரு.
தென்னிந்திய வரலாற்றையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். காகிதம், அச்சு எந்திரங்களின் கண்டுபிடிப்பு சமூக மறுமலர்ச்சிக்கும் புரட்சிக் கருத்துக்களின் உதயத்துக்கும் வழிவகுத்தன. பிரெஞ்சுப் புரட்சி, ருஷ்யப் புரட்சி, இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டிய முதல் சுதந்திரப் போர், உலகையே புரட்டிப்போட்ட கம்யூனிசத் தத்துவம் மற்றும் டார்வினின் பரிணாமக் கொள்கை போன்ற புரட்சிக் கருத்துக்களும் நிகழ்வுகளும் அதன் பின்தான் வளரத் தொடங்கின என விவாதிக்கும் இந்த நூல் 1905-ல் ஜார் மன்னனுக்கு எதிரான ருஷ்யப் புரட்சி தோல்வியடைவதை விளக்குவது வரை முதல் தொகுதி முடிவடைகிறது.
இரண்டாவது தொகுதியில், முதலாளித்துவத்தின் வளர்ச்சி, அதற்கெதிராக கம்யூனிச சிந்தாந்தத்தின் தோற்றம், அமெரிக்க ஆதிக்கத்தின் வளர்ச்சி, 1914-19-ல் நடந்த முதல் உலகப்போர், அதைத்தொடர்ந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கள், 1930-களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, இந்திய விடுதலை இயக்கத்தின் எழுச்சி, ஜெர்மனியில் நாஜிகளின் வெற்றி, முதலாளித்துவத்துக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் ஆகியவற்றை விளக்குகிறது. 1938 நவம்பர் 14-ல் நேரு எழுதிய பிற்சேர்க்கையுடன் இரண்டாம் தொகுதி முடிவடைகிறது.
நேருவின் விருப்பத்துக்குரிய தேர்வு பழமையா, நவீனமா எனும் குழப்பம் இந்த நூலைப் படிக்கும்போது ஆங்காங்கே நமக்குள்ளே தலைகாட்டும். நேருவின் மேதைமை நூல் முழுக்க விரவிக் கிடக்கிறது. இந்த நூலைப் படிப்பதன் மூலம் இளைஞர்கள் தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும் பெறுவார்கள். நம்மை நாமே சரியாகப் புரிந்துகொள்ள இந்த நூல் உதவும்.
வெளியீடு
பல்கலைப் பதிப்பகம், 97/55, 
என்.எஸ்.கிருஷ்ணன் சாலை, 
கோடம்பாக்கம், சென்னை - 600 024, 
தொடர்புக்கு: 9444431344, 
இரு தொகுதிகளும் சேர்ந்து: ரூ.750.
தொடர்புக்கு: veeveekalai@gmail.com

பொதுச் சார்பியலின் நூற்றாண்டு: ஐன்ஸ்டைனின் மனப் பரிசோதனைகள்

பொதுச் சார்பியலின் நூற்றாண்டு: ஐன்ஸ்டைனின் மனப் பரிசோதனைகள்

வால்ட்டர் ஐஸாக்ஸன்
COMMENT   ·   PRINT   ·   T+  
ஐன்ஸ்டைனின் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’அறிவியல் வரலாற்றிலேயே மிகவும் அழகான கோட்பாடு என்று கருதப்படுகிறது. அது வெளியாகிச் சரியாக நூறு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனின் அற்புதமான அறிவியல் கோட்பாடுகள் உருவாவதற்குக் காரணமாக இருந்த ‘எண்ணப் பரிசோதனை’களையும் நாம் இந்தத் தருணத்தில் கொண்டாட வேண்டும். அவர் செய்த ‘எண்ணப் பரிசோதனைகள்’ என்பவை ஆய்வகத்தில் செய்தவையல்ல. தன் தலைக்குள் எண்ணங்களைச் சுழல விட்டுச் சுழல விட்டு அவர் நடத்திய மனப் பரிசோதனைகள்.
படைப்பாக்கம் என்பது கற்பனைத் திறனை அடிப்படையாகக் கொண்டது என்பதை இந்த எண்ணப் பரிசோதனைகள் நமக்கு உணர்த்துகின்றன. அறிவியலை நோக்கிக் குழந்தைகளை ஈர்க்க வேண்டுமென்றால் கணிதப் பாடத்தைக் கொண்டு அவர்களை சுளுக்கெடுப்பதும் சூத்திரங்களை மனப்பாடம் செய்யச் சொல்வதையும் முதலில் விட வேண்டும். அவர்களையும் பகல்கனவு காணச் செய்ய வேண்டும்.
தனது 16-வது வயதில்தான் ஐன்ஸ்டைன் முதலாவது எண்ணப் பரிசோதனையைச் செய்துபார்த்தார். ஒளிக்கதிர் ஒன்றின் வேகத்தில் சென்று அந்தக் கதிரை எட்டிப்பிடித்தால் என்ன ஆகும் என்பதை ஐன்ஸ்டைன் தனது மனதில் கற்பனைக் காட்சியாக பார்த்துக்கொண்டார். அப்படிப் பயணிக்கிறபோது “ஓய்வு நிலையில் இருக்கும் மின்காந்தப் புலத்தைப் போன்று அந்த ஒளிக்கதிர் எனக்குத் காட்சியளிக்கும்” என்று பின்னாட்களில் ஐன்ஸ்டைன் எழுதினார். அதாவது, அந்த (ஒளி) அலை நகராமல் ஒரே இடத்தில் இருப்பது போன்று தோன்றியிருக்கும். மின்காந்தப் புலங்களின் இயக்கத்தையும் அலைவுகளையும் பற்றி விவரிக்கும் மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின் படி இது சாத்தியமே இல்லை. அவரது எண்ணப் பரிசோதனைக்கும் மேக்ஸ்வெல்லின் சமன்பாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு காரணமாக ஐன்ஸ்டைன் பதற்றமடைந்தார்.
ஒளிக்கதிர் ஒன்றை நோக்குபவர்கள் அந்தக் கதிரின் தோற்றுவாயை நோக்கியோ அதிலிருந்து விலகியோ சென்றாலும் ஒளியின் வேகம் மாறுபடுவதில்லை என்பதை 1900-களின் தொடக்கத்தில் பல்வேறு சோதனைகள் உறுதிப்படுத்தின. இயற்பியல் வட்டாரம் இதனால் குழம்பிப்போயிருந்தது. ஐன்ஸ்டைனும் அப்படியே. ஆகவே, 1905-ல் அவர் புதிய எண்ணப் பரிசோதனைகள் சிலவற்றை நிகழ்த்திப் பார்த்தார்.
அப்போது அவர் சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் வேலை பார்த்தார். தூரத்தில் இருக்கும் கடிகாரங்களில் ஒரே மாதிரி நேரத்தைப் பொருத்துவதற்கான கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறுவது குறித்து வரும் விண்ணப்பங்களை ஆய்வுசெய்வதும் ஐன்ஸ்டைனின் பணிகளில் ஒன்று. தங்கள் நாடு முழுவதும் உள்ள கடிகாரங்கள் எல்லாம் சரியான நேரத்தை ஒரே நேரத்தில் காட்ட வேண்டும் என்பதில் விடாப்பிடியானவர்கள் சுவிஸ்காரர்கள். இந்தப் பின்னணியில், குறிப்பிட்ட மணி நேரத்தில் கடிகாரங்களிலிருந்து மற்ற கடிகாரங்களுக்கு சமிக்ஞை அனுப்பிவிட்டு அந்தக் கடிகாரங்களை நோக்கி ஒருவர் அதிஅதிவேகத்தில் பயணித்துச் சென்று பார்த்தால் அவர் என்ன தெரிந்துகொள்வாரோ அதற்கும், வேறு திசையில் அதிஅதி வேகத்தில் பயணித்தவருக்கு என்ன தோன்றுமோ அதற்கும் வேறுபாடு இருக்கும் என்பதைக் கற்பனைசெய்து பார்க்க ஐன்ஸ்டைனால் முடிந்தது.
இதை வேறொரு ‘எண்ணப் பரிசோதனை’யைக் கொண்டு பிறகு விளக்கினார். ஒரு ரயில் பாதையின் இரண்டு தொலைதூரப் பகுதிகளில் மின்னல்கள் தாக்குகின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். மின்னல் தாக்கிய இரண்டு இடங்களுக்கும் சரியாக நடுவில் ரயில்பாதையின் ஓரத்தில் ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இரண்டு மின்னல்களின் ஒளியும் அவரை ஒரே சமயத்தில் வந்துசேர்ந்தால் அந்த மின்னல்களெல்லாம் ஒரே நேரத்தில் நிகழ்ந்தவை என்று அவர் சொல்வார்.
அதே சமயத்தில் அந்த ரயில் பாதையின் வழியே அவரைக் கடந்துசெல்லும் ரயிலுக்குள், ரயிலின் மையப் பகுதியில் இருந்துகொண்டு ஒரு பெண் இதையெல்லாம் பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இரண்டு திசைகளிலிருந்து வரும் மின்னல் ஒளி அலைகளில், அந்த ரயில் செல்லும் திசையிலிருந்து வரும் ஒளிதான் சற்று முன்னதாகக் கிடைக்கப்பெறும். ஆகவே, அந்தத் திசையில்தான் மின்னல் முதலில் விழுந்ததாக அந்தப் பெண் சொல்வார்.
“ரயில் பாதைக்கு ஓரமாக நின்றுகொண்டு பார்த்தவரைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் நிகழ்ந்ததாகத் தோன்றும் நிகழ்வுகள் ரயிலைப் பொறுத்தவரை அப்படித் தோன்றுவதில்லை,” என்று எழுதினார் ஐன்ஸ்டைன். இதில் வேடிக்கையான கட்டம் இதுதான்: அந்த இருவரில் ஒருவர் சரி, இன்னொருவர் தவறு என்று சொல்லவே முடியாது, ஏனென்றால் ரயில் பாதையின் ஓரப் பகுதி நிலையாக இருந்து ரயில் மட்டுமே நகர்ந்துகொண்டிருக்கிறது என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது.
அந்த மனிதர், பெண், ரயில், பூமி, சூரியக் குடும்பம், நட்சத்திர மண்டலம் என்று பிரபஞ்சத்தில் எல்லாமே நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இப்படி இருக்கும்போது, தான் மட்டும் பூரண ஓய்வு நிலையில் இருப்பதாகக் கோருவது யாராலும் முடியாது. ஆகவே, ‘உண்மையான’ அல்லது ‘சரியான’ விடை என்று ஏதும் கிடையாது. ‘ஒரே நேரத்தில்’ என்று சொல்வதும் சார்பான விஷயமே, அதாவது அப்படிச் சொல்பவர் இயக்கத்தில் இருக்கிறாரா, ஓய்வு நிலையில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்தது.
அப்படியென்றால் காலம் என்பது சார்பு நிலை கொண்டது என்றே அர்த்தம். வேகமாகப் பயணிப்பவருக்கு ஒரு விதமாகவும் மெதுவாகப் பயணிப்பவருக்கு வேறு விதமாகவும் காலம் தோன்றுகிறது. இதுதான் காலத்தின் சார்பு நிலை. கிட்டத்தட்ட ஒளி வேகத்துக்கு அருகில் பயணித்தால் காலம் மெதுவாகிறது.
காலமும் இடமும் ஒன்றுக்கொன்று சார்புடையவை என்றுசொன்னதால் அது சிறப்பு சார்பியல் கோட்பாடு என்று அழைக்கப்பட்டது; அது ஒரே ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டுமே எடுத்துக்கொண்டது, அதாவது சீரான திசைவேகத்தில் ஒருவர் நகர்ந்துகொண்டிருப்பதைப் பற்றி. சீரான திசைவேகத்தில் செல்லாமல் சுற்றிக்கொண்டோ, திரும்பிக்கொண்டோ, தனது வேகத்தை அதிகரித்துக்கொண்டோ இருப்பவருக்கு மேற்கண்ட கோட்பாட்டைப் பொருத்திப் பார்க்க முடியாது. ஆகவே, எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுச் சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் உருவாக்குவதற்கு மேலும் பத்து ஆண்டுகள் ஆயின.
(இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதி ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ பற்றி விளக்கும்)
- கட்டுரையாளர் ஐன்ஸ்டைன், ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளிட்டோரின் வரலாற்று நூல்களின் ஆசிரியர்.- 
©நியூயார்க் டைம்ஸ், 
சுருக்கமாகத் தமிழில்: ஆசை

கவனத்தின் உயிர்ச்சூழல்!

கவனத்தின் உயிர்ச்சூழல்!

வெ. ஸ்ரீராம்
COMMENT   ·   PRINT   ·   T+  
மனதின் ஒரு பகுதி நமக்குள்ளிருந்து வெளியேறி, வேறொன்றில் லயித்துவிடுவதே கவனம்
சமூகவியல் பாடத்தில் கவனம் போதாது என்றது ஆறாவது வகுப்பு நோட்டுப் புத்தகத்தில் ஆசிரியரின் குறிப்பு. கடைக்குப் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மேல் கவனம், தெருவில் விளையாடும் போதும் சைக்கிள் ஓட்டும்போதும் கவனம் - இப்படி நம் வாழ்க்கைப் பாதையில் எத்தனை அன்றாட விஷயங்களில், எவ்வளவு விதங்களில் கவனம் நமக்குத் தேவையாக இருக்கிறது. ஆனால், இந்தக் ‘கவனம்’ என்பதை ஒரு ‘பொருளாக’, விலை கொடுத்து வாங்கப்படும் ‘பொருளாக’, நுகர்பொருளாகப் பார்க்க முடியுமா?
சற்றே நூதனமான அணுகுமுறையுடன் இந்தக் கருத்தை ஆராய்ந்து யீவ் சிதோன் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய ‘கவனத்தின் பொருளியல்’ என்ற புத்தகம் கடந்த ஆண்டு வெளிவந்தது. இவர் பிரான்ஸின் க்ரெநோபல் நகரத்தின் பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியரும்கூட. அதே ஆண்டு ‘கவனத்தின் உயிர்ச் சூழலுக்காக’ என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார் சிதோன். ‘பொருளியல்’ என்பது ஒரு நாட்டின் அல்லது ஒரு சமூகத்தின் நிதிநிலை, அங்குள்ள நுகர்பொருட்கள், அவற்றின் வணிகம் அல்லது சந்தை இவற்றிடையேயான தொடர்பு பற்றிய துறை. ஆனால், மக்களின் ஒட்டுமொத்த கவனம் என்ற பொருளை ஒரு சிலருடைய சுயநலத்துக்காகச் சுரண்டல் செய்வதை ஆராய்கிறது இந்தப் புத்தகம். அதுவும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தின் மிக வேகமான வளர்ச்சியின் உதவியால் சமூகத்தில் ‘கவனம்’ நுகர்பொருளாக்கப்படுகிறது என்ற கருத்தாக்கத்தை இவர் முன்வைக்கிறார்.
கவனத்தின் நெருக்கடி
ஆனாலும், இந்தப் பிரச்சினை தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்குப் பிறகுதான் தோன்றியதென்று சொல்ல முடியாதென்கிறார் இந்த ஆசிரியர்.
1880-களிலேயே, மேலைநாடுகளில் தொழில் புரட்சியைத் தொடர்ந்து நிலவிய முதலாளித்துவச் சூழலிலேயே ‘கவன’த்துக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் பற்றி ஜோனாதன் க்ரேரி என்ற அமெரிக்க ஆய்வாளர் முன்வைத்த கருத்தை இவர் சுட்டிக்காட்டுகிறார். அன்றைய நவீன மயமாக்கப்பட்ட தொழிற்சாலைகளில், சீராக நகர்ந்துகொண்டிருக்கும் மேஜைகளின் முன்னால் வரிசையாக நின்றுகொண்டிருக்கும் தொழிலாளிகள் ஒரு இயந்திரத்தின் உதிரி பாகங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பொருத்தும்போது, அவர்களுடைய கவனமும் அவர்களைக் கண்காணிக்கும் மேற்பார்வையாளரின் கவனமும் உற்பத்திப் பெருக்கத்திலேயே இருந்த நாட்களிலேயே ‘கவனம்’நெருக்கடியை எதிர்கொண்டது என்கிறார். உற்பத்தி பெருகப்பெருக, அவற்றைச் சேர்த்து வைப்பது, சேர்த்து வைத்ததை விற்றுத் தீர்ப்பது, விற்றுத் தீர்ந்த இடத்தில் மீண்டும் நிரப்புவது, இந்தச் சங்கிலி செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் விளம்பரங்கள் என எல்லாத் தளங்களிலும் கவனம் திரும்பியபோது ஏற்பட்ட நெருக்கடி.
மக்களின் கவனக் கண்காணிப்பின் நிர்ப்பந்தங்கள் ஊடகக் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டன. ஊடகங்களுடைய வளர்ச்சிக்கு விளம்பரதாரர்களுடைய உதவி தேவைப்பட ஆரம்பித்தவுடன், விளம்பரங்கள் ஆக்கிரமிக்கும் நேரமும் இடமும் விரிவடையத் தொடங்கின. நுகர்வோரின் கவனத்தைக் கவர்ந்து, கட்டுக்குள் வைத்து நிர்வகிப்பதில் போட்டி வளர்ந்தது. ‘‘மக்கள் கவனத்தை எப்போதும் தன் கட்டுக்குள் இருத்தும் நெருக்கடியின் வரலாறுதான் முதலாளித்துவத்தின் வரலாறு’’ என்று குறிப்பிடுகிறார் இவர்.
உள்ளுணர்வின் அங்கம்
தீவிரமான, ஒருமுகப்படுத்தப்பட்டது ‘நல்ல கவனம்’, பல திசைகளை நோக்கிச் சிதறும் ‘மோசமான கவனம்’ என்று மனிதர்களின் கவனத்தை மேம்போக்காகத் தரம் பிரிக்க முடியாது. மனித குலத்துக்கு இந்த இருவிதமான கவனங்களுமே அவசியமானவை என்று ‘கவனத்தின் உயிர்ச்சூழலுக்காக’ என்ற தன்னுடைய அடுத்த புத்தகத்தில் விளக்குகிறார் யீவ் சிதோன். ஒருமுகக் கவனத்தைவிட, பல திசைகளிலும் கவனம் கொள்வதென்பது மனித குலத்துக்கே அடிப்படையான ஒன்று. ஏனென்றால், அது உள்ளுணர்வைச் சார்ந்தது. பன்முகக் கவனச் சிதறலைக் குறித்து நரம்பியலாளர்களும் உளவியலாளர்களும் இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றின் மேல் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும்போதுகூட, வேறு பல திசைகளிலும் நம் கவனம் செயல்படுகிறது. உதாரணமாக, ஒரு சிறு கூட்டத்தில் ஒருவருடன் நாம் மும்முரமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, நமக்குப் பின்னாலிருந்து யாராவது நம்மைப் பெயர் சொல்லி அழைத்தால், அதுவும் நமக்குக் கேட்கிறது; திரும்பியும் பார்க்கிறோம். உளவியலாளர்கள் இதை ‘காக்டெய்ல் பார்ட்டி விளைவு’ என்று சொல்கிறார்கள். நம்முடைய மனத்தின் ஒரு பகுதியில், தானியங்கிக் கவனம் ஒன்று எப்போதும் அனிச்சையாக 360 டிகிரி கோணத்தில் விழிப்புடன் செயல்படுகிறது, ஆதிமனிதனுக்கு இருந்ததைப் போல. ஆதி மனிதனுக்கு அது வாழ்வா, சாவா என்ற பிரச்சினை. ஒரு சிறிய சத்தம், வானிலையில் லேசான மாற்றம், கொடிய மிருகம் ஒன்றின் அன்மை, விநோதமான வாடை இவற்றையெல்லாம் இனம் கண்டுகொள்ள அவனுடைய ஐம்புலன்களும் விழிப்புடன் இருக்க வேண்டியதாயிற்று. இன்றைய ஊடக ஆக்கிரமிப்புச் சூழலில் ஸ்மார்ட் போன் போன்ற ‘செயற்கைப் புலன்’அந்த வேலையைச் செய்கிறது. இது ஒரு வசதி; ஆபத்தானதும்கூட. (செல்போனில் பேசிக்கொண்டே விபத்துக்குள்ளான சம்பவங்கள் நவீன உலகின் மறுபக்கம்.)
கடந்த 50 ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சியில் மட்டும் கவனத்தை ஒருமுகப்படுத்தாமல் மற்ற தேவைகளிலும் ஓரளவாவது கவனத்தைச் ‘சிதற’ விட்டிருந்தோமானால், உயிர்ச்சூழல் சேதங்களைக் குறித்தும், இதே பொருளாதார வளர்ச்சி உருவாக்கிய சமூகப் பிரச்சினைகளைக் குறித்தும் ஒருவேளை நம்முடைய கவனம் பயனுள்ள வகையில் செயல் பட்டிருந்திருக்கும் என்கிறார் அவர்.
எப்படி வகைப்படுத்துவது?
‘தனக்குப் புறத்தேயிருக்கும் ஒன்றை நோக்கி மனத்தைச் செலுத்துவது’ என்பதுதான் ‘கவனம்’ என்கிறார் ஆசிரியர். (லத்தீன் மொழியிலிருந்து பிரெஞ்சு, ஆங்கிலத்துக்கு வந்திருக்கும் இந்தச் சொல்லுக்கு சொற்பிறப்பியல் வரையறையும் இதுதான்.) அதாவது, நம்முடைய மனதின் ஒரு பகுதி நமக்குள்ளேயிருந்து வெளியேறி, வேறொன்றில் லயித்துவிடுகிறது. ஒருவிதத்தில் இது ஒரு ‘அந்நியமாதல்’. ஆனாலும், அழகியல் ரீதியினாலான அனுபவங்களின் அற்புதமே அதுதான். ஒரு புத்தகம், இசை அல்லது திரைப்படத்தினால் ஈர்க்கப்பட்டு, தானாகவே ஒருவர் தன் அகவயத் தன்மையை விட்டுக்கொடுப்பது. இருந்தாலும், நமக்குள் சில மாறுதல்களை அது தோற்றுவித்து நம்மை வளப்படுத்துகிறது. வெளியுலகத்துடனான நம்முடைய உறவுகளுக்கு இந்தக் கவன ஈர்ப்பு தேவையாக இருப்பதால், இந்த அந்நியமாதலை மறுக்கும் வாழ்க்கை மனிதாபிமானமற்றதாக ஆகிவிடுகிறது என்ற கருத்தாக்கத்தை சிதோன் தன் புத்தகத்தில் முன்வைக்கிறார்.
க்ரெநோபல் நகர மேயர், நகரத்தின் பல பகுதிகளில், குறிப்பாக மக்கள் காத்துக்கொண்டிருக்கும் பொதுஇடங்களில், வித்தியாசமான தானியங்கி இயந்திரங்களை வைத்துள்ளார். ஒரு நாணயத்தை அதில் போட்டு, பித்தானை அமுக்கினால், பிஸ்கெட் பாக்கெட் அல்லது குளிர்பான டின்னைப் போல, அவற்றுக்குப் பதிலான இரண்டு அல்லது மூன்று தாள்கள் வரும். அவற்றில் ஒரு சிறுகதை இருக்கும். காத்திருக்கும்போது ‘ஸ்மார்ட் போனை’யே கவனித்துக்கொண்டு இருக்காமல் சிறுகதை ஒன்றைப் படிக்கலாம். தேர்வு மக்களுடையதே!
- வெ. ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர், இருமுறை செவாலியே விருது பெற்றவர்

திங்கள், 30 நவம்பர், 2015

வான் கொடையான பருவ மழை!

பருவக் காற்றுகள் வீசுவதற்குப் பூமியின் சுழற்சி அச்சு சாய்வாக இருப்பதும் முக்கியக் காரணம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் - நவம்பர் மாதங்கள் மழைக் காலமாகும். உலகின் மற்றெல்லா நாடுகளைக் காட்டிலும் இந்தியத் துணைக் கண்டம் மழை விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது.
மழைக் காலம் என்பது ஓரளவு வரையறுக்கப்பட் டிருப்பதால், விவசாயிகளும் மற்றவர்களும் தத்தமது செயல்பாடுகளை அதற்கேற்றபடி தகவமைத்துக்கொள்ள முடிகிறது. பருவ மழை பொய்ப்பது அரிதாக நடைபெறுகிறது. தென்மேற்கிலிருந்து வீசும் காற்று கொண்டுவரும் மழைக்குத் தென்மேற்குப் பருவ மழை என்றும் வடகிழக்கிலிருந்து வீசும் காற்றின் மூலம் வரும் மழை வடகிழக்குப் பருவ மழை என்றும் குறிப்பிடப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்குக் கரையோரங்களிலும் வட கிழக்குப் பருவ மழை கிழக்குக் கரைப் பகுதிகளிலும் பொழிகிறது. தென்மேற்குப் பருவம் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும்.
பருவ மழையின் பலன்கள்
ஏறத்தாழ ஆறு முதல் எட்டு மில்லியன் ஆண்டுகளாகத்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் பருவ மழைகள் பெய்கின்றன. இமய மலைத் தொடர்களும் திபெத்தியப் பீடபூமியும் உருவான பிறகுதான் பருவ மழைகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால அட்டவணையில் பெய்யத் தொடங்கின. இந்தியத் துணைக் கண்டம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து, யூரேசியக் கண்டத்துடன் மோதியபோது அவற்றின் விளிம்புகள் மேல்நோக்கி மடிந்து இமய மலைகளும் திபெத்தியப் பீடபூமியும் எழுந்தன. திபெத்தியப் பீடபூமி கோடையில் சூடாகி வறண்ட வளிமண்டலமுள்ளதாக மாறும். அதற்குத் தெற்கேயுள்ள இந்துமாக்கடல் அதைவிடக் குறைந்த வெப்ப நிலையில் இருக்கும். சூடான நிலப் பரப்புகளிலிருக்கும் காற்று சூடாகி வானை நோக்கி மேலே எழும்பும். அந்த இடத்தை இட்டு நிரப்புவதற்காக இந்துமாக் கடலிலிருந்து குளிர்ந்த காற்று நீராவியைச் சுமந்தபடி தென்மேற்குப் பருவக் காற்றாக வீசுகிறது.
குளிர் காலத்தில் வடகிழக்கிலுள்ள நிலப் பரப்புகளிலிருந்து குளிர்ச்சியுற்ற காற்று, ஒப்பீட்டளவில் உயர் வெப்ப நிலையில் உள்ள கடலை நோக்கி வீசத் தொடங்குகிறது. அக்டோபர் - நவம்பர் மாதங்களில் வங்கக் கடலைக் கடந்து வரும் இக்காற்று, இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பிரதேசங்களில் மழையைப் பெய்விக்கிறது.
தெற்காசியாவின் சிறப்பு
இமய மலைத் தொடர் இன்றிலிருந்து சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வளரத் தொடங்கியதாக நிலவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். அவை ஆறு முதல் எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இன்றிருக்கும் உயரங்களை எட்டின. இன்றளவும் அவை மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டேயிருக்கின்றன. அவை வளர்ந்த பிறகு, தென்மேற்கிலிருந்தும் வட கிழக்கிலிருந்தும் வீசிய ஈரமான காற்றை அவை இந்தியத் துணைக் கண்டத்துக்குள் திருப்பிவிடத் தொடங்கின. அந்தக் காற்று பருவ மழைகளைச் சுமந்து வந்து பொழிவித்தன. இத்தகைய தீவிரமான பருவ மழைக் காற்று உலகில் வேறு எங்கும் தென்படாதவை. இந்தியத் துணைக் கண்டம், இலங்கை மற்றும் தெற்காசியா ஆகிய இடங்களில் மட்டுமே வீசுகின்றன.
தென்மேற்குத் திசையிலும் வடகிழக்குத் திசையிலும் குறிப்பிட்ட காலகட்டங்களில் பருவக் காற்றுகள் வீசுவதற்குப் பூமியின் சுழற்சி அச்சு சாய்வாக இருப்பதும் ஒரு முக்கியக் காரணம். பூமி சூரியனைச் சுற்றி வரும்போது கடக ரேகைப் பகுதியும் மகர ரேகைப் பகுதியும் மாறி மாறி சூரியனுக்கு நேராக வருகின்றன. கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் நடுவிலுள்ள பகுதியில் கோடையில் நிலப் பரப்பு கடலைவிட அதிக வெப்பத்தைப் பெற்றுச் சூடாகிறது. குளிர் காலத்தில் நிலப் பரப்பு கடலைவிட அதிகக் குளிர்ச்சியடைகிறது. வளிமண்டலத்தின் வெப்பச் சலனம் காரணமாக கோடையில் கடலிலிருந்து நிலத்துக்கும் குளிர் காலத்தில் நிலத்திலிருந்து கடலுக்கும் முறையே தென் மேற்குத் திசையிலிருந்தும் வட கிழக்குத் திசையிலிருந்தும் காற்று வீசுகிறது.
மெளசிம், மெளசம் - மான்சூன்!
தீவிரமான மழைப் பருவக் காற்றுகள் தெற்காசியப் பகுதியில் உள்ள நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்துக்குப் பெரிதும் உதவின. பருவ மழைக் காலத்தைக் குறிக்க அரபியர்களும் இந்தியர்களும் பயன்படுத்திய மௌசிம், மௌசம் என்ற சொற்கள் ஆங்கிலத்தில் ‘மான்சூன்’ என உருமாறின. அரபிய வணிகர்கள் மிளகு, லவங்கம் வாங்க இந்தியாவுக்கு வரவும், தாயகம் திரும்பவும், தென்னகத்தின் வணிகர்கள் கீழ்த்திசை நாடுகளில் தமது வியாபாரத்தையும் கலாச்சாரத்தையும் பரப்பவும் பருவக் காற்றுகள் பாய்மரக் கப்பல்களை உந்தித்தள்ளி உதவியிருக்கின்றன. அதன் காரணமாக அவற்றை வணிகக் காற்றுகள் எனக் குறிப்பிடுவார்கள்.
பொய்த்தால் என்னாகும்?
பருவ மழை பொய்த்தால் எல்லாமே குலைந்துபோகும். 1970-ல் அவ்வாறு நிகழ்ந்து பெரும் வறட்சி ஏற்பட்டது. அடிக்கடி கனமழை கொட்டும் வடகிழக்கு மாநிலங்களில்கூட வறட்சி ஏற்பட்டது உண்டு. சில ஆண்டுகளில் ராஜஸ்தான் பாலைவனத்தில் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மழைக் கால அட்டவணையை உறுதியாக நிர்ணயிக்க முடியாததால், பழங்காலத்திலிருந்தே மக்கள் ஏரிகளையும் குளங்களையும் தடுப்பணைகளையும் அமைத்து மழை நீரைச் சேமித்து வைத்தார்கள்.
தவறாத பருவம்
ஜூன் மாதம் ஆரம்பித்தவுடன் இந்திய விவசாயிகள் ஆவலுடன் வானத்தைப் பார்க்கத் தொடங்கிவி டுகிறார்கள். எது தவறினாலும் ஜூன் மாதம் 20-ம் தேதி மும்பை பகுதியில் மழை பொழிவது தவறாது என்று அங்கிருந்து வந்த நண்பர் ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டுகிறார். அசாம், வங்காளம், ஒடிஷா, பிஹார் ஆகிய இடங்களில் ஏப்ரல், மே மாதங்களில் இடி மின்னல்கள் முழங்கப் பலத்த புயல்கள் வீசும். அதற்குக் ‘காலா பைசாகி’என்று பெயர். சில ஆண்டுகளில் அத்துடன் பெரும் மழையும் சேர்ந்துகொள்ளும். பருவ மழை தொடங்கிவிட்டதா இல்லையா என்று வானிலை ஆய்வர்கள் குழம்பிப்போவார்கள்.
பொதுவாக, அரபிக் கடல் வகை, வங்கக் கடல் வகை எனப் பருவ மழை பிரித்துப் பார்க்கப்படுகிறது. அரபிக் கடல் வகை சாதாரணமாக ஜூன் முதல் வாரத்தில் கேரளக் கரையை அடைந்து, இரண்டாவது வாரத்தில் மராட்டியக் கரையை எட்டும். வங்கக் கடல் வகை வடமேற்காக நகர்ந்து அசாம், வங்காளம் ஆகியவற்றை ஜூன் முதல் வாரத்தில் எட்டிய பிறகு, இமய மலை மதில்களால் மேற்கே திருப்பிவிடப்படும். ஜூன் மாத நடுவில் அரபிக் கடல் வகையும் வங்கக் கடல் வகையும் மத்திய நிலப் பகுதியில் சந்தித்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் மழையைப் பொழிவிக்கும். ஜூலை நடுவில் மழை காஷ்மீருக்கும் இமாசலப் பிரதேசத்துக்கும் பரவும். தென்னிந்தியாவில் ஒன்று முதல் இரண்டு கி.மீ. உயரமுள்ள முகடுக ளைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகள் அரபிக் கடல் வகை மழையைப் பெருமளவில் கறந்துகொண்டு விடுகின்றன. நல்வினைப் பயனாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் மூலம் அம்மழை நீர் ஓரளவாவது தமிழகத்துக்கும் தக்காணத்துக்கும் கிடைக்கிறது!
- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்

சனி, 28 நவம்பர், 2015

மண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்சான்டோ! - சிவா அய்யாதுரை நேர்காணல்

மண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்சான்டோ! - சிவா அய்யாதுரை நேர்காணல்

ந.வினோத் குமார்
COMMENT   ·   PRINT   ·   T+  
‘மான்சான்டோவுக்கு விஞ்ஞானி சவால்!' என்று மேற்கத்திய ஊடக செய்திகளில் சமீபத்தில் இடம்பிடித்தார் சிவா அய்யாதுரை. ‘இ மெயில் தமிழன்' என்பதுதான் இவருடைய அடையாளம். ஆனால், இப்போது மரபணு மாற்றப் பயிர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்து, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளராகவும் மாறியுள்ளார் சிவா.
மான்சான்டோவின் மரபணு மாற்ற சோயாவில் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்ற தனது ஆய்வைப் பொய் என நிரூபித்தால், 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 60 கோடி) மதிப்புள்ள தன்னுடைய கட்டிடம் ஒன்றை மான்சான்டோவுக்குப் பரிசாக அளிப்பதாகச் சவால் விட்டிருக்கிறார்.
இந்தப் பின்னணியில் அவருடன் தொலைபேசி மூலம் பேசியதிலிருந்து...
மான்சான்டோவின் மரபணு மாற்ற சோயா குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றியது?
உலகின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பத்திரிகைகளில் அமெரிக்காவின் ‘எம்.ஐ.டி. ரிவ்யூ' (மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) இதழ் புகழ்பெற்றது. அந்தக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவன் நான்.
அந்த இதழில் ‘மரபணு மாற்றப் பயிர்கள் மிகவும் பாதுகாப்பானவை' என்கிற ரீதியில் ஒரு கட்டுரை கடந்த ஆண்டு வெளியானது. அந்தக் கட்டுரை ஒரு விளம்பரதாரரின் கட்டுரையைப் போலிருந்தது. உலகின் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஒன்று, இதுபோன்ற செயலில் ஏன் ஈடுபட வேண்டும்? அதற்கு என்ன அவசியம் என்ற கேள்விகள் எனக்கு எழுந்தன. அப்படியானால், அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் தவறானவை என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. ஆய்வில் இறங்கினேன், என்னோடு 15 பேர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
அடிப்படையில் நீங்கள் ஒரு கணினி நிபுணர். ஆனால், உயிரியல் தொடர்பான ஆய்வை எதன் அடிப்படையில் மேற்கொண்டீர்கள்?
என்னுடைய பட்டப் படிப்பு கணினி தொடர்பானதுதான். ஆனால், என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை ‘சிஸ்டம்ஸ் பயாலஜி' துறையில் மேற்கொண்டேன்.
உடலில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்றால், அந்தப் பிரச்சினையை மட்டும் தனியாக அணுகாமல், ஒட்டுமொத்த உடல்நலனையும் அணுகுவதுதான் சிஸ்டம்ஸ் பயாலஜி. உதாரணத்துக்கு, நமது தோலில் சின்னச் சின்னதாகப் புள்ளிகள் தோன்றுகின்றன என்று வைத்துக்கொள்வோம். அதைத் தோல் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அந்தப் பிரச்சினைக்கான மூலம் எது என்று ஆராய்ந்து, அதற்குத் தீர்வு தருவதுதான் இந்தத் துறையின் சிறப்பம்சம். அந்த அடிப்படையில்தான் இந்த ஆய்வை மேற்கொண்டேன்.
எம்.ஐ.டி.யில் நீங்கள் மாணவராக இருந்தபோது உருவாக்கிய ‘சைட்டோ சால்வ்' எனும் கருவியைக் கொண்டுதான் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறீர்கள். அது குறித்து...
‘சைட்டோ சால்வ்' என்பது ஒரு மென்பொருள் போன்றது. இந்தக் கருவியின் செயல்பாட்டை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். வெள்ளைப்பூண்டை ஒருவர் எவ்வளவு உட்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு ஒரு மாடல் தயாரித்திருப்போம். அதேபோல இஞ்சியை ஒருவர் எவ்வளவு உட்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு ஏற்ப உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிய இன்னொரு மாடல் தயாரித்திருப்போம்.
‘சைட்டோ சால்வ்' என்பது ஒரு மென்பொருள் போன்றது. இந்தக் கருவியின் செயல்பாட்டை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். வெள்ளைப்பூண்டை ஒருவர் எவ்வளவு உட்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு ஒரு மாடல் தயாரித்திருப்போம். அதேபோல இஞ்சியை ஒருவர் எவ்வளவு உட்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு ஏற்ப உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அறிய இன்னொரு மாடல் தயாரித்திருப்போம்.
ஆனால், இவை இரண்டையும் ஒருவர் ஒரே நேரத்தில் எவ்வளவு உட்கொள்கிறார், அந்த அளவுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதற்குத் தனியாக ஒரு மாடல் இல்லாமல் இருக்கும். எனவே, இந்த இரண்டையும் கலந்து ஒரு புதிய மாடல் உருவாக்க முயற்சிப்போம், இல்லையா?
அது தேவையில்லை. ஏற்கெனவே பூண்டுக்கும் இஞ்சிக்கும் தனித்தனியாக உருவாக்கப்பட்டிருக்கும் மாடல்களை ஒன்றிணைத்தாலே, நமக்குத் தேவையான தகவல் கிடைத்துவிடும். இப்படித்தான் ‘சைட்டோ சால்வ்' செயல்படுகிறது.
மரபணு மாற்றப் பயிர்கள் குறித்து, ஏற்கெனவே நம்மிடம் உள்ள தகவல்களை ஒன்றாக இணைத்து, அதன்மூலம் கிடைக்கும் புதிய தகவலை 'சைட்டோ சால்வ்' ஆய்வு முடிவாகத் தரும். சிக்கலான மூலக்கூறு விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு, இந்தக் கருவி பெரிதும் பயன்படும்!
மரபணு மாற்றப் பயிர்களைப் புழக்கத்தில் அனுமதிக்கும்போது, ‘substantially equivalent to a non-GMO' என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதன் உள்ளர்த்தம் என்ன?
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மருத்துவக் கருவிகளுக்கு முறையான அனுமதி பெற வேண்டும் என்று 1976-ம் ஆண்டில் அமெரிக்க அரசு ஒரு சட்டத்தை இயற்றியது.
உதாரணத்துக்கு ஸ்டெதஸ்கோப் ஒன்றை 7 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு புழக்கத்தில்விட விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதைப் புழக்கத்தில் விடுவதற்கு மேற்கண்ட சட்டத்தின்படி அனுமதி பெற வேண்டும்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஸ்டெதஸ்கோப்பில் சின்னதாக மாற்றம் செய்து நீல நிறத்தில் கொண்டு வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நிறத்தை மாற்றியதால், மேற்கண்ட சட்ட நடைமுறைகளின்படி மீண்டும் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியமில்லை. அப்போது ‘substantially equivalent to the earlier product' (ஏற்கெனவே இருக்கும் பொருளுக்கு, இணையான பொருள்) என்று கூறி அதை அனுமதிப்பார்கள்.
மரபணு மாற்றப் பயிர்களை அனுமதிக்கும்போது, இதே ‘கான்செப்ட்'டை பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் வாதம்.
அமெரிக்காவில் இத்தகைய பயிர்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் ‘ஃபுட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன்' எனும் அமைப்புக்கு உண்டு. இந்த அமைப்பின் ‘டெபுடி கமிஷனர் ஆஃப் புட்ஸ்' பதவியில் மைக்கேல் டெய்லர் என்பவரை அதிபர் ஒபாமா நியமித்திருக்கிறார். இந்த மைக்கேல் டெய்லர் மான்சான்டோவின் முன்னாள் துணைத் தலைவர் என்பது நகைமுரண்!
மரபணு மாற்ற சோயாவில் உள்ள ‘ஃபார்மல்டிஹைட்' என்ன வகையான பாதிப்புகளைச் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படுத்தும்? ‘க்ளூட்டதியானி'ன் பங்கு என்ன?
‘ஃபார்மல்டிஹைட்' வேதிப்பொருள் இயற்கையாக விளையக்கூடிய பயிர்களிலும் குறைந்த அளவு இருக்கும். மரபணு மாற்ற நடவடிக்கையில், ஒரு பயிரில் இருக்கக்கூடிய அந்த வேதிப்பொருளின் சதவீதம் அதிகரிக்கும். இது புற்றுநோயைத் தூண்டக்கூடிய வேதிப்பொருள்.
அதேநேரம், இயற்கையாக விளையும் பயிர்களில் ‘க்ளூட்டதியான்' எனும் பொருள் உண்டு. இது ஒரு ஆன்டி ஆக்சிடன்ட். மனிதர்களுக்கு நன்மை பயக்கக் கூடியது. மரபணு மாற்ற நடவடிக்கையின்போது, இந்த வேதிப்பொருளின் சதவீதம் குறைந்துவிடும்.
உங்களது ஆய்வுக் கட்டுரை வெளியான ‘அக்ரிகல்சுரல் சயின்சஸ்' ஆய்விதழ், பணம் பெற்றுக்கொண்டு கட்டுரைகளை வெளியிடும் இதழ் என்று விமர்சிக்கப்படுகிறதே? இந்தப் பிரச்சினை எழுந்தபோது ‘ஓப்பன் ஆக்சஸ்' இதழ்கள் பற்றி நீங்கள் பேசினீர்களே...
இன்றைக்கு அறிவியல் உலகில் நேச்சர், சயின்ஸ் மற்றும் செல் ஆகிய மூன்று இதழ்கள்தான் மிகவும் பிரபலம். இந்த இதழ்களில் தங்களுடைய கட்டுரை வெளியாக வேண்டும் என்பது ஒவ்வொரு விஞ்ஞானியின் கனவு. ஆனால், இவற்றில் வெளியாகும் கட்டுரைகளை ஒரு சாமானிய மனிதர் படிக்க வேண்டும் என்றால், ரூ. 5 ஆயிரமோ அல்லது ரூ.15 ஆயிரமோ செலவழிக்க வேண்டும்.
ஆனால், ‘அக்ரிகல்சுரல் சயின்சஸ்' போன்ற ‘ஓப்பன் ஆக்சஸ்' இதழ்களில் ஒருவர் தனது கட்டுரையை வெளியிட வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். அது பதிவுக் கட்டணம் போன்று, ஒரே ஒரு முறை செலுத்தப்பட வேண்டியது! ஆனால், அதைக் கட்டுரையை வெளியிடுவதற்கு லஞ்சம் கொடுப்பதுபோலச் சிலர் சித்திரிக்கிறார்கள்.
மரபணு மாற்றப் பயிர்கள் தொடர்பாக இந்தியாவில் எழுந்து வரும் எதிர்ப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அந்த அமைப்புகளுடன் உங்களுக்குத் தொடர்பு இருக்கிறதா? அந்தப் பயிர்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் திட்டம் இருக்கிறதா?
நிச்சயமாக! அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறேன். அப்போது மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்திய அமைப்புகளுடன் இணைந்து, இத்தகைய பயிர்கள் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்வதற்கான ‘தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை' உருவாக்குவது குறித்து விவாதிக்க இருக்கிறேன்.
மனித வாழ்வின் அடிப்படையே உணவையும் விவசாயத்தையும் மையமாகக் கொண்டதுதான். பன்னாட்டு நிறுவனங்கள், அதில் கை வைக்கின்றன. இதை எப்படி எடுத்துக்கொள்வது?
மான்சான்டோ போன்ற நிறுவனங்கள் ஒரு நாட்டுக்குச் செல்வதற்கு முன்பு, அந்த நாட்டின் மண்ணைக் கட்டுப்படுத்துகின்றன. பிறகு அந்த நாட்டைக் கைப்பற்றுகின்றன. இதுபோன்ற நிறுவனங்களை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும். சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். வேலை நிறுத்தம் செய்ய வேண்டும். காந்தியின் ‘வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைப் போன்று ஓர் இயக்கம், மீண்டும் தோன்ற வேண்டும். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சில விஞ்ஞானிகளும் ஊழல் கறைபடிந்தவர்களாக உள்ளனர். நாம் அனைவரும் இயற்கையின் ஓர் அங்கம் என்ற எண்ணம் ஒவ்வொருவரிடமும் இருந்தால், மரபணு மாற்றப் பயிர்களுக்கு அவசியமே இல்லை!