திங்கள், 30 மே, 2016

காஷ்மீர் பிரச்சினையின் வேர்கள்!

2014 மக்களவைப் பொதுத் தேர்தலின்போதும் அதற்குப் பின்னரும் வாக்காளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் கட்சிக்கு (நாட்டை ஆள) 60 ஆண்டுகளைக் கொடுத்தீர்கள், எனக்கு 60 மாதங்களைக் கொடுங்கள்” என்றார். சமூக வலைதளங்களில் அவருடைய ஆதரவாளர்கள் அதையே இன்னமும் பலமாக, வேறு வகையில் வலியுறுத்தினார்கள். “இந்தியாவின் பிரச்சினைகள் அனைத்துக்குமே காரணம் காங்கிரஸ் ஆட்சிதான்” என்று சாடினார்கள். “அப்படியென்றால், இந்த நாட்டில் எதெல்லாம் சரியாக இருக்கிறதோ அதற்கு நாங்கள்தானே பொறுப்பு?” என்று காங்கிரஸார் எதிர்க்கேள்வி கேட்டார்கள்.
நாடு சுதந்திரமடைந்த 1947 முதலே இந்தியாவுக்குப் பெருத்த பின்னடைவு ஏற்பட்டது காஷ்மீர் பள்ளத்தாக்கில்தான். அது தொடர்ந்து போராட்டக் களமாகத் திகழ்கிறது. அதன் மக்களில் கணிசமானவர்கள் இந்தியக் குடியரசின் ஆட்சியில் இருப்பதை எதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது அங்கே அதிருப்தியும் கோபமும் கொப்பளிக்கிறது. 2014-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு மிகக் குறைந்த அளவே நிவாரணம் அளித்திருக்கிறார்கள் என்ற அதிருப்தி அவர்களுக்கு. மாட்டுக் கறிக்குத் தடை விதிக்க முயன்றதற்கும் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (பி.டி.பி.) கூட்டரசு அமைத்தபோது அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை பாஜக நிறைவேற்றவில்லை. அதனால்தான் முஃப்தியின் மறைவுக்குப் பிறகு, புதிய அரசு பதவியேற்க அங்கே நீண்ட காலம் பிடித்தது.
கல்வி நிலையமா.. ஆயுத சாலைகளா?
இப்போது புதிய சர்ச்சை தோன்றியிருக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் காஷ்மீர மாணவர்களுக்கும் பிற மாநில மாணவர்களுக்கும் இடையில், கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றதைக் கொண்டாடியது தொடர்பாகக் கைகலப்பு ஏற்பட்டது. அது அப்படியே வேறு வடிவங்களில் தொடர்கிறது. பிற மாநில மாணவர்களை காஷ்மீர போலீஸார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முற்பட்டதைப் போலத் தெரிகிறது. எதிர் விளைவாக ஆயிரக்கணக்கில் துணை நிலை ராணுவப் படை வீரர்கள் அக்கல்லூரியின் வளாகத்தில் மத்திய அரசின் ஆணையின் பேரில் நிறுத்தப்பட்டனர். காஷ்மீரக் கல்வி நிலையங்கள் ஆயுதசாலைகளாக மாறிவிட்டன என்றே கொண்டாலும், ஆயிரக்கணக்கில் துருப்புகளை நிறுத்துவதால் அமைதி திரும்பிவிடுமா?
கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினையை மோடி அரசு புத்திசாலித்தனமாகவோ, கருணையுடனோ அணுகவேயில்லை. இந்தியாவுடன் காஷ்மீர் பள்ளத்தாக்கு உணர்வுபூர்வமாக ஒன்றியிருக்கச் செய்யத் தவறிவிட்டது, மத்தியில் நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ். காஷ்மீர் மாநிலத்தின் மாபெரும் அரசியல் ஆளுமை ஷேக் அப்துல்லாவை பிரதமர் ஜவாஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைத்து வைத்தார். பிறகு, 1964-ல் அவரை விடுதலை செய்தார். ஆனால், அடுத்துப் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி அவரை மீண்டும் சிறையில் அடைத்தார். 1967 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திரா காந்தியிடம் வேண்டுகோள் வைத்தார் ஜெயப்பிரகாஷ் நாராயண். அதை மறுத்துவிட்டார் இந்திரா. சில ஆண்டுகளுக்குப் பிறகு முதுமை, நோய் காரணமாக மிகவும் தளர்ச்சியுற்ற நேரத்தில், டெல்லி அரசுக்கு அணுக்கமாக நடந்துகொள்ள முன்வந்ததால் ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார்.
1982-ல் ஷேக் அப்துல்லா இறந்தார். அவருடைய இடத்துக்கு ஃபாரூக் அப்துல்லா வந்தார். காங்கிரஸ் கட்சியல்லாத பிற கட்சிகளின் முதலமைச்சர்களுடன் பேசினார் ஃபாரூக் அப்துல்லா என்ற கோபத்தில், அவருடைய தேசிய மாநாட்டுக் கட்சியை ஃபாரூக்கின் சகோதரி கணவர் குலாம் முகம்மது ஷாவைக் கொண்டே இந்திரா காந்தி உடைத்தார். ஷாவை முதல்வர் பதவியிலும் அமர்த்தினார். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால், அவருடைய மகன் ராஜீவ் காந்தி அடுத்து பிரதமரானார். 1987-ல் நடந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தேர்தலில் கள்ள ஓட்டு உட்பட எல்லா தில்லுமுல்லுகளும் நடந்தன. அதனால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்தது. இவ்வாறு அமைதியின்மை தொடர்கதையானது.
தியாகங்களைக் கவுரவிப்போம்
“நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் நாட்டுக்காகச் செய்த தியாகங்களைக் கவுரவிக்கத்தான் அரசியலுக்கு வந்தேன்” என்று சோனியா ஒரு முறை கூறினார். காஷ்மீர் பிரச்சினையில் அவர், அவர்களுடைய வழியையே பின்பற்றினார். இந்தியாவின் பிற பகுதி மக்களிடமிருந்து காஷ்மீரிகள் தங்களை அந்நியப்படுத்திக்கொள்ளும் வகையில் சில சம்பவங்கள், சோனியாவின் வழிகாட்டுதலில் இந்நாடு நிர்வகிக்கப்பட்டபோது நடந்தது.
அவற்றில் நான்கை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.
1. அடல் பிஹாரி வாஜ்பாய் 2003 ஏப்ரலில் ஸ்ரீநகருக்குச் சென்றார். பத்தாண்டுக் கால இடைவெளிக்குப் பிறகு, காஷ்மீர் சென்ற ஒரே பிரதமர் அவர்தான். 25 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மக்கள் ஜனநாயகக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்து அப்போது பதவியில் இருந்தது. அப்போது நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் வாஜ்பாயின் பேச்சை, தலைமையின் கட்டளைப்படி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காஷ்மீர் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர். மனிதாபிமானத்துடன் காஷ்மீரிகளின் மனப்புண்களை ஆற்ற வழி இருக்கிறதா என்று அறிவதற்காக வாஜ்பாய் அப்போது சென்றிருந்தார். அப்போது காஷ்மீரில் தீவிரவாதத்தின் தீவிரம் குறைந்திருந்தது. சுற்றுலாத் துறை செழித்தது. பிரதமரை ஆதரித்திருக்க வேண்டிய அந்நேரத்தில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் அவரைப் புறக்கணித்தது.
2. பி.டி.பி. கட்சியின் சார்பில் முதல்வர் பதவியை ஏற்ற முஃப்தி முகம்மது சய்யீத் நல்ல நிர்வாகியாக இருந்தார். அநேக ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் மாநிலத்தில் சுமுக நிலை காணப்பட்டது. காஷ்மீர் இனி வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. சோனியா காந்திக்கு நல்ல அரசியல் தெளிவும், தொலைநோக்குப் பார்வையும் சுயமாக இருந்திருந்தால் அல்லது அவருடைய அரசியல் ஆலோசகர்களாவது நல்ல அறிவுரையைக் கூறியிருந்தால் அந்த 6 ஆண்டுகளும் முஃப்தியே முதலமைச்சராகத் தொடரட்டும் என்று அனுமதித்திருப்பார். கட்சிக் கண்ணோட்டத்திலேயே எதிலும் செயல்படும் காங்கிரஸ்காரர்கள் ஒப்பந்தப்படி அடுத்து காங்கிரஸ்காரர்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று முரண்டுபிடித்தார்கள். சோனியா குடும்ப விசுவாசியான குலாம் நபி ஆசாத் முதல்வரானார். தேச நலனைவிடக் கட்சி நலனே பெரிது என்று எடுத்த முடிவால், நல்ல வாய்ப்பு வீணானது.
3. 2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தது. அப் போதும் காஷ்மீர் பிரச்சினை தீர தீவிர முயற்சி மேற்கொள்ளப் படவில்லை. 2009-லும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியே தொடர்ந்தது. அடுத்த ஆண்டே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண மக்களிடம் பேச ஒருவரை நியமிக்க முடிவுசெய்தது. (அதற்கு முன்னதாக 2008-ல் காஷ்மீர் போராட்டங்கள் வலுத்தன. சிறு பையன்கள் கல்வீச்சுப் போராட்டங்களை நடத்தினர்.) தென்னாப்பிரிக்காவிலும் இலங்கையிலும் இந்திய ஹை கமிஷனராகப் பணியாற்றி அனுபவம் பெற்ற கோபால கிருஷ்ண காந்தியை மட்டும் பேசுவதற்கு நியமிக்கலாம் என்ற யோசனை பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது ஏற்கப்படவில்லை. பூசல்கள் நிறைந்த நாடுகளில் பணியாற்றிய அனுபவத்துடன் உருது மொழியில் நல்ல தேர்ச்சியும் பெற்றவர் கோபால கிருஷ்ண காந்தி. நவீன இந்திய வரலாறும் அவருக்கு அத்துப்படி. காந்தி - ராஜாஜி ஆகியோரின் பேரன். அவரை நியமித்திருந்தால் ஹுரியத் தலைவர்கள்கூடப் பேச்சில் பங்கேற்றிருப்பார்கள் என்று உள்துறைச் செயலராக இருந்து ஓய்வுபெற்ற ஒருவர் என்னிடம் கூறினார்.
ஆனால், திலீப் பட்கோங்கர், எம்.எம். அன்சாரி, ராதா குமார் என்ற மூன்று பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்தது. எதிர்பார்த்ததைப் போலவே ஹுரியத் தலைவர்கள் அவர்களுடன் பேச மறுத்துவிட்டனர். சோனியாவின் மகன் ராகுல் காந்தி அப்போதுதான் அரசியலில் நடை பழகிக்கொண்டிருந்தார். மகாத்மாவின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ‘இன்னொரு காந்தி’ இடையில் புகுந்து பெயர் சம்பாதிப்பதை சோனியா விரும்பவில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும், காஷ்மீர் மாநிலத்தில் சமாதானம் ஏற்படுத்தத் தவறிய பொறுப்பு மத்திய அரசையே சாரும்.
4. 2012, 2013-ல் ஜம்மு - காஷ்மீர் மாநில முதலமைச்சர் ஓமர் அப்துல்லா மத்திய அரசிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் படிப்படியாக விலக்கிக்கொள்வதைப் பரிசீலியுங்கள். அச்சட்டம் ராணுவத்தினருக்கு அளவற்ற அதிகாரத்தைக் கொடுப்பதால், காஷ்மீரிகள் அதை விரும்பவில்லை” என்று மன்றாடினார். (அச்சட்டம் காஷ்மீரில் மட்டுமல்ல, மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும்கூட ஆயுதப் படைகளுக்கு வரம்பற்ற அதிகாரத்தைத் தருகிறது என்பதுதான் பலருடைய குற்றச்சாட்டு.) எல்லைக்கு அப்பாலிருக்கும் மாவட்டங்களிலாவது சட்டப்படியான அதிகாரத்தை விலக்கலாம் என்று ஓமர் ஆலோசனை கூறினார். ஆனால், அப்படிச் செய்ய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு நம்பிக்கையோ, துணிச்சலோ இல்லை. எனவே, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அத்தகைய நடவடிக்கையை எடுக்காமல் இருந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கைப் பொறுத்தவரை அரசியல் கட்சித் தலைவர்கள் கூறும் யோசனைகளை அல்ல - ராணுவத் தளபதிகள் சொல்லும் யோசனைகளை மட்டுமே மத்திய அரசு எப்போதும் கேட்கிறது என்று அனைவருமே கூறுகின்றனர்.
மூல வேர் எது?
காஷ்மீர் பிரச்சினை ஏன் இன்னும் தீராமல் நீடிக்கிறது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பாகிஸ்தானிய அரசின் - ராணுவத்தின் தீங்கரம் ஒன்று. காஷ்மீர இஸ்லாத்துக்கு வஹாபியிசத்தின் பங்களிப்பு இரண்டாவது. பண்டிட்டுகளை மாநிலத்திலிருந்து வெளியேறச் செய்தது மூன்றாவது. பிற மாநில இந்தியர்களுக்குக் காஷ்மீர் விவகாரத்தில் ஆர்வம் இல்லாதது நான்காவது. இந்திய ராணுவமும் துணை நிலை ராணுவப் படைகளும் மனித உரிமைகளை மீறுவதாகக் கூறப்படும் நிகழ்வுகள் ஐந்தாவது. காங்கிரஸ் கட்சியின் தவறுகளும் குற்றங்களும் ஆறாவது.
காஷ்மீரிகளின் அதிருப்திக்கு மூல வேர் எது என்று ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கோ, மோடிக்கோ தெரியாதது வியப்பே அல்ல; மத, கலாச்சார, அறிவார்ந்த பன்மைத்துவம் என்பதற்கு நேர் முரணானது இந்துத்துவா. ஜனநாயகம், சுதந்திரம், சகிப்புத்தன்மை, பன்மைத்துவம் போன்ற குணங்கள் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் குணங்களாகத் திகழ்ந்தன. மகாத்மா காந்தி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் அதை வளர்த்தனர். அவை அப்படியே அரசியல் சட்டத்திலும் இடம்பெற்றன. துரதிர்ஷ்டவசமாக காஷ்மீர் விவகாரத்தில் அவற்றைத் தவறாகவே பயன்படுத்தி வந்துள்ளனர் நேரு, இந்திரா, ராஜீவ் மற்றும் கடைசியாக சோனியா போன்ற தலைவர்கள்.
தமிழில்: சாரி

India communication

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போதுதான் தொலைத் தொடர்பு துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது என்று சொல்லலாம். அஞ்சல், டெலிகிராப் என தகவல் பரிமாற்றத்திற்குத் தேவையான துறைகளில் பிரிட்டிஷார் கவனம் செலுத்தினர். அதில் பல்வேறு புதுமைகளையும் கொண்டு வந்தனர். அப்படி வளர்ந்த இந்திய தொலைத் தொடர்புத் துறை இன்று சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு துறையாக வளர்ந்து நிற்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் சிறு கிராமங்களுக்கு கூட இன்று இணையதள வசதியும் மொபைல்போன் வசதியும் சென்றடைந்திருக்கிறது.
தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொண்டது என்றே சொல்லலாம். 2ஜி, 3ஜி, 4ஜி என்று அடுத்தடுத்த தொழில்நுட்பத்தை கடந்து நாம் சென்று கொண்டிருக்கிறோம். மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதற்கு மத்திய அரசும் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருவது வரவேற்கப்படவேண்டியது.
# 1851 - கொல்கத்தாவுக்கும் டைமண்ட் துறைமுகத்துக்கும் இடையே முதன் முதலில் மின்னணு டெலிகிராப் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
# 1853 - சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் டெலிபோன் எக்சேஞ்ச் திறக்கப்பட்டன.
# 1882 - 6,400 கிலோ மீட்டர் அளவுக்கு டெலிகிராப் இணைப்புகள் போடப்பட்டன.
# கொல்கத்தாவில் ஆரம்ப காலத்தில் 93 சந்தாதாரர்கள் மட்டுமே இருந்தனர்.
# உலகம் முழுவதும் 658 கோடி தொலைத் தொடர்பு சந்தாதாரர்கள் உள்ளனர்.
# மொத்த சந்தாதாரர்களில் 13 சதவீதம் பேர் இந்தியர்கள். அதாவது இந்தியாவில் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 86.30 கோடி.
# இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 6.1 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது.
# நேரடியாக 22 லட்சம் வேலைவாய்ப்புகளையும் மறைமுகமாக 20 லட்சம் வேலைவாய்ப்புகளையும் அளித்து வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 2.54 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
# உலகிலேயே தொலைபேசி கட்டணம் இந்தியாவில்தான் குறைவானது.
# சர்வதேச அளவில் இன்டர்நெட் வசதியை பயன்படுத்துவதில் இந்தியாவின் இடம் 3.
# 2016-ம் ஆண்டு ஜனவரி மாத தகவலின் படி இந்தியாவில் மொத்தம் உள்ள இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 46.2 கோடி.
# கடந்த 10 வருடங்களாக மிக அதிகமாக அந்நிய நேரடி முதலீடு வரும் துறையாக இந்திய தொலைத் தொடர்பு துறை உள்ளது.
# உலக அளவில் தொலைபேசி மற்றும் செல்போன்கள் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
# அடுத்த ஐந்து ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
# 2020-ம் ஆண்டுக்குள் 127 கோடி சந்தாதாரர்களை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
# 2013-14 ஆண்டு தகவலின்படி இந்த துறையின் மொத்த வருமானம் 4.29 லட்சம் கோடி ரூபாய்.
# 2014-15ம் ஆண்டு நிலவரப்படி இந்தத் துறையின் மதிப்பு ரூ. 1,34,000 கோடிக்கும் மேல் உள்ளது.
# இந்தியாவில் முதல் மொபைல் டெலிபோன் சேவை 1995-ம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்டது.
# இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை 5,00,000 கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது.
# 2014-ம் ஆண்டு தகவலின் படி இந்திய இ-காமர்ஸ் துறையின் மதிப்பு ரூ.1,47,499 கோடி
# 6.5 கோடி மக்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்குகின்றனர்.
# 2016-ம் ஆண்டு இரண்டாவது காலாண்டு படி இந்த துறையின் மொத்த வருமானம் ரூ.47,374 கோடி
# இந்தியாவில் உள்ள செல்போன் கோபுரங்களின் மொத்த எண்ணிக்கை 2.1 லட்சத்துக்கு அதிகம்.
# இந்த துறைக்கு கடந்த ஆண்டு வந்த அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு ரூ.19,443 கோடி

வியாழன், 14 ஏப்ரல், 2016

அம்பேத்கரின் முதல் நூல்

அம்பேத்கரின் முதல் நூல்

ஸ்டாலின் ராஜாங்கம்
COMMENT (1)   ·   PRINT   ·   T+  
2

தனித்து ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கம்தான் சாதி

அம்பேத்கர் ஒரு அரசியல் செயல்பாட்டாளர் மட்டுமல்ல. அவர் காலத்து தலைவர்களில் அதிகம் எழுதியவர். அன்றைய இந்திய அரசியலில் இருந்த தலைவர்களில் அதிகம் படித்தவர். அம்பேத்கருக்கு நவீன ஆய்வு முறையில் புலமை அதிகம். எதை எழுதினாலும் தேர்ந்த ஆய்வுப் பண்போடு இருக்கும். சாதி பற்றி மட்டுமல்ல, பல்வேறு துறைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய முதல் ஆய்வு நூலின் நூற்றாண்டும் இதுவே.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகவும் சமூகவியல், வரலாறு, தத்துவம், மானுடவியல், அரசியல் ஆகியவற்றைத் துணைப் பாடங்களாகவும் பயின்றார் அம்பேத்கர். மானுடவியல் பாடத்தின் ஓராண்டு முடிவில் 09.05.1916-ல் ஓர் ஆய்வுக் கட்டுரையை அளித்தார். அதுவே ‘இந்தியாவில் சாதிகள்’ எனும் நூல். அம்பேத்கர் எழுதிய முதல் நூல். இந்த ஆண்டு அதன் நூற்றாண்டு. அந்த நூல் அவரது பிற்காலச் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்வதற்கான வேர்.
சாதிகளை ஆயும் நூல்
சாதி ஒழிப்பு என்ற திட்டத்தை நவீன அரசியல் பின்னணியில் ஒரு கோட்பாடாக முன் வைத்தவர் அம்பேத்கர். ஒடுக்கப்பட்டோர் மட்டுமல்லாது சமூக மாற்றத்தை வலியுறுத்தும் பலரின் சிந்தனைகளை முக்கால் நூற்றாண்டாக நேரடியாகவும் மறை முகமாகவும் அந்தக் கோட்பாடு பாதித்திருக்கிறது. அதனாலேயே 1936-ல் வெளியான ‘சாதி ஒழிப்பு’ எனும் அவரது நூல் அதிகம் கவனிக்கப்படுகிறது. சாதியை ஒழித்தல் என்ற நேரடித் தன்மை காரணமாக இயல்பாகவே அந்த நூல் மீது ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், அதை ஒழிப்பது என்ற சிந்தனைக்குச் செல்லும் முன், சாதி என்றால் என்ன? அது எவ்வாறெல்லாம் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டாக வேண்டும். அந்த வகையில் சாதியை அவர் எவ்வாறெல்லாம் புரிந்துகொண்டிருந்தார் என்பதை அவரது முதல் நூலில் அறியலாம். ‘சாதி ஒழிப்பு’ நூலைப் புரிந்துகொள்ள ‘இந்தியாவில் சாதிகள்’ நூலிருந்துதான் தொடங்க வேண்டும்.
இரண்டு நூல்களுக்கு இடையே 20 ஆண்டுகள் இடைவெளி. சாதி ஒழிப்பு என்பதை அவர் லட்சியமாகக் கொண்டார் எனில், சமூகத்தில் சாதி நிலவுகிற யதார்த்த நிலைமைகள் பற்றிய ஆவணமாக இந்தியாவில் சாதிகள் நூலை முன் வைத்தார் என்று கூறலாம்.
நவீனமும் தொன்மையும்
இந்தியச் சமூகம் பழமையான சாதிய விதிகளையும் நாகரிகமற்ற காலத்தின் நம்பிக்கைகளையும் விடாமல் பற்றியிருக்கிறது என்ற பார்வை அம்பேத்கரிடம் இருந்தது. அதனாலேயே சாதி இன்றைக்கும் கடைப்பிடிக்கப்படுகிறதென்று கருதினார். இந்தப் பழமைப் பண்புக்கு மாற்றாகவே நவீன சமூகத்தின் மதிப்பீடுகளான சமத்துவம், பகுத்தறிவு, சாதி ஒழிப்பு ,சுதந்திர மனிதன் போன்ற கருத்துகளை அவர் வரித்துக்கொண்டார். இதற்கு அவர் கற்றிருந்த நவீனக் கல்வி தந்த ஆய்வியல் சட்டகம் முக்கியக் காரணம். தொன்மைச் சமுதாயத்தையும் நவீன சமுதாயத்தையும் இரு பிரிவாக அவர் அணுகுகிறார். சாதி பற்றிய அவரின் முக்கியமான பிற்காலப் பார்வைகளுக்கான முக்கியத் தொடக்கம் இந்த நூலில் உள்ளது.
அவர் சாதியமைப்பின் முக்கியப் பகுதியாகக் கூறுவது, ஒரே குழு அல்லது ஒரே சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளும் அகமண வழக்கத்தைத்தான். இந்தக் கருத்துகளின் பொருத்தத்தை சாதி ஆணவக் கொலைகளில் நாம் பார்க்கலாம். அகமண முறை என்பது அம்பேத்கரின் கருத்தல்ல. கெட்கர் என்கிற ஆராய்ச்சியாளர் சுட்டியதை அம்பேத்கர் மேலும் வளர்க்கிறார். அகமண முறை என்பது சமூக வளர்ச்சிப் போக்கில் எவ்வாறு உருவாகியிருக்க முடியும் என்று தேடுகிறார். அந்தத் தேடுதல் வழியாக சாதி பற்றிய அடுத்தடுத்த முடிச்சுகளுக்கும் அவர் வந்து சேர்கிறார். குல ஒழுங்குகளிலிருந்து பிறந்த சாதிக்கான இயல்புகள் பிற்கால மத - சாத்திர நூல்களில் தஞ்சம் பெறுவதை விளக்குகிறார். மேலும், ஒரு பெண்ணைக் குழுவுக்குள்ளேயே அடக்கிவைப்பதன் மூலம் அகமண வழக்கம் காப்பாற்றப்படுவதையும் விளக்குகிறார். அகமண முறையால் சாதி உருவானது மட்டுமல்ல. சாதியைத் தொடர்ந்து தக்கவைக்கவும் அது உதவுகிறது என்று கூறியது அம்பேத்கரின் கூடுதல் பங்களிப்பு.
கதவடைப்பு
தனித்து ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு வர்க்கம்தான் சாதி என்றார் அம்பேத்கர். அவ்வாறான முதல் வர்க்கமாக பிராமணர்களைச் சுட்டுகிறார். வர்க்கம் என்பது மாறக் கூடியது. ஆனால், இந்த வர்க்கங்கள் மாறா தன்மையடைந்த நிலையில் சாதிகளாயின. இந்த நிலைமையைப் பாதுகாப்பதற்காக புரோகித வர்க்கம் தன்னைத்தானே கதவடைப்பு செய்துகொள்கிறது. இந்த நிலையில் சிறிதும் பெரிதுமாகச் சிதறிப் போயிருந்த பிற வர்க்கங்களின் உட்பிரிவினர், வர்க்க அமைப்பின் திறந்த வழித் தன்மையை இழந்து, தம்மைத் தாமே அடைத்துக்கொண்டு தனித்தனி சாதிகளாயினர் என்று இந்த நூலில் அம்பேத்கர் விவாதிக்கிறார். அதன்படி சிலர் தாங்களாகவும் ஏற்கெனவே கதவடைப்பு செய்த சிலரைப் பார்த்தும் சாதிகளாக மாறினர் என்கிறார். தம்முடைய பிற்கால எழுத்துகளில் சாதியமைப்பில் பிராமணர்களுக்கான பாத்திரத்தை விரிவாக ஆய்வுசெய்தார். கதவடைப்பு பிராமணர்களிடமிருந்து ஆரம்பித்தாலும் சாதியமைப்பு உருவாக்கம் அவர்களின் பங்களிப்பு மட்டும்தான் என்று அம்பேத்கர் கருதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘போலச் செய்தல்’
‘போலச் செய்தல்’ என்கிற பண்பு மூலம் சாதிகள் உருப்பெற்றிருக்கக் கூடிய விதங்களை அம்பேத்கர் கூறுகிறார். பிறரால் பார்த்துப் பின்பற்றப்படும் குழுவினர் சமூகத்தில் மதிப்பு பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டுமென்று அவர் கருதுகிறார். அவ்வாறு பிராமணர்கள் இருந்ததால் அவர்களைப் பிற குழுவினர் பின்பற்றினார்கள். மனித மனதின் ஆழத்தில் பொதிந்துள்ள ‘போலச் செய்தல்’ என்கிற மனப்போக்கு கண்ணுக்குப் புலப்படாமல் செயல்படுகிற உளவியலை சாதிகள் ஏற்பு பெற்ற விதத்தைப் புரிந்துகொள்வதற்காக அவர் ஒப்பிடுகிறார். அதாவது, பிராமணர் அல்லாத குழுவினர் சாதியாக மாறியதைப் புரிந்துகொண்ட அவரின் பார்வை என்றே இந்த ‘போலச் செய்தல்’என்ற அணுகுமுறையைக் கூறலாம். மேலும், சாதியைத் தனித்துப் பார்க்காமல் சாதியமைப்பின் அங்கமாக அவர் பார்த்தார். சமூகத்தில் சாதியிலிருந்து பிற அம்சங்களையோ பிற அம்சங்களை விடுத்து சாதியைத் தனித்தோ பார்க்க முடியாது என்பது இதன் அடிப்படை.
இந்த நூலுக்கு இணையாக சாதியின் தோற்றம் பற்றி வேறெந்த நூலும் தெற்கிலிருந்து வெளியாகவில்லை என்பதே நூறாண்டுக்குப் பின்னரும் இந்த நூலை முக்கியமானதாக்குகிறது. இந்த நூல் இன்றைய பொருத்தப்பாட்டுக்கேற்ப விமர்சனபூர்வமாக ஆராயப்பட வேண்டும். உலகெங்கும் முக்கிய நூல்கள் மீது இத்தகைய விவாதங்கள் நடக்கின்றன.
சாதி மறுப்பும் சமூகநீதியும் பேசப்பட்டு வரும் தமிழகத்தில் ஆணவக் கொலைகள், சாதி அடையாளம் மீட்பு போன்றவை பரவலாகவும் வேகமாகவும் நடக்கின்றன. இந்நிலையில், மனிதர்களுக்குச் சாதி ஏன் தேவைப்படுகிறது? திரும்பத் திரும்ப மறு உறுதி செய்யப்படுவது ஏன் என்பன போன்ற யதார்த்தங்கள் சமூகப் பண்பாட்டு உளவியல் சார்ந்து ஆராயப்படவில்லை. அவற்றை அறிந்துகொள்ளாதபட்சத்தில் சாதிக் கலவரங்கள் நடக்கும்போது மட்டும் கொள்கை அளவில் சாதி கூடாது என்று கூறுவதால் அது எவ்வாறு ஒழியும்? இன்றைய சாதியம் செயல்படும் விதங்கள் பற்றிய யதார்த்தமான ஆய்வுகள் நிகழாத நிலையில், அம்பேத்கரின் ‘இந்தியாவில் சாதிகள்’ நூலின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.
- ஸ்டாலின் ராஜாங்கம், சனநாயகமற்ற சனநாயகம், தீண்டப்படாத நூல்கள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

புதன், 13 ஏப்ரல், 2016

ஆயிஷா இரா.நடராசன் - படைப்பாற்றலின் ஒளிக் கீற்று காவேரி

ஆயிஷா இரா.நடராசன்
COMMENT   ·   PRINT   ·   T+  
ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி
நாங்களே பொம்மைகளைக் கைப்பட உருவாக்கி விளையாடிய அந்தக் காலம் அற்புதமானது… கடையில் வாங்கிய பொம்மை எவ்வளவோ நேர்த்தியாக இருந்தாலும் அது நாங்கள் செய்ததுபோல அழகில்லை.
-ரவீந்திரநாத் தாகூர் (பால்ய காலங்கள்)
குழந்தைகளைவிட அதிகக் கற்பனைத் திறன் யாருக்கு இருக்க முடியும்! மூன்று வயதுக் குழந்தையைக் கவனித்திருக்கிறீர்களா? தனக்குத் தானே பேசிக்கொள்ளும். சுவரில் தொங்கும் நாட்காட்டி அசைவுக்குத் தக்கவாறு அதனோடு பேசும். குட்டி பென்சில், கரித்துண்டு என எது கிடைத்தாலும் தரையில், சுவரில் விதவிதமாகப் படம் வரைந்து தானும் ஒரு படைப்பாளி எனப் பெருமையாகச் சுற்றித் திரியும். இப்படி அபாரமான கற்பனைத் திறனோடும் படைப்பாற்றலோடும் குதூகலிக்கும் குழந்தையை நமது கல்வி முறை என்ன செய்கிறது? அனைத்தையும் சிதைத்து எல்லாக் குழந்தைகளையும் ஒரே மாதிரி வரிசையாகப் பிடித்து வைத்த மண் உருண்டையாக்கி, பாடமே பிரதானம் எனப் பிடிவாதம் பிடிக்கிறது.
சரி, அப்படியே பாடத்திட்டத்தைப் படித்துப் புரிந்துகொண்டு சொந்த அறிவை விடைத்தாளில், நோட்டுப் புத்தகத்தில் காட்ட முடியுமா? முடியாதே! ‘உன் சொந்தச் சரக்குக்கெல்லாம் மதிப்பெண் தர முடியாது’ என கேலி பேசியே முடக்கிவிடுவார்கள். இந்தச் சூழலை மீறிப் படைப்பாற்றலைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று எனக்குக் காட்டியவர் மாணவி காவேரி.
படைப்பாற்றலை வென்றெடுக்கும் கல்விமுறை
பள்ளிக்கல்வியில் குழந்தைகளின் சொந்தத் திறன்களை, படைப்பாற்றலை வென்றெடுக்கும் கல்விமுறையைத் தற்போது அற்புதமாக எடுத்துச்சொல்கிறார் சர் கென் ராபின்சன்(Sir Ken Robinson). இவரது கட்டுரைகளும், வீடியோக்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதிலும், கல்வி எனும் கொலைக்களத்திலிருந்து தப்புவது எப்படி (How to escape Educations death valley) போன்ற தலைப்புகளே நம்மை அதிரவைக்கின்றன.
கென் ராபின்சனின் படைப்பாற்றல் கல்வி மூன்று உட்கூறுகளைக் கொண்டது. முதலாவது, தனித்திறனைத் தானே கண்டறியும் வகையில் செயல்படும் வகுப்பறையும் பரந்த பாடத்திட்டமும். இரண்டாவது, ஆர்வத்தைத் தூண்டிக் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும் கற்பித்தல் முறை. அடுத்தது, மிக முக்கியமானது. தான் விரும்பும் வடிவத்தில் பாட்டாக, ஓவியமாக, நாடகமாகக் கதையாகக்கூட மாணவர் விடையளிக்கலாம். தேவையான நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரே மாதிரியான கேள்வி, ஒரே மாதிரி விடைகளைத் தரச் சொல்லும் உயிரற்ற தேர்வு முறைக்கு மாற்று இது. பள்ளி என்பது உயிரோட்டமான இடம். கலை அரங்க மேடை, கலை இலக்கியப் பட்டறை போன்ற கல்வியை ராபின்சன் முன்மொழிகிறார். ஆனால், அத்தனை கலை அம்சங்களையும் சவக்குழியில் புதைத்துவிட்டுத் தேர்வை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கிறது நமது கல்விமுறை. இத்தகைய சூழலில் குழந்தைகளின் கற்பனை வளத்தைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என எனக்குக் காட்டியவர் காவேரி.
நூலகத்தில் காத்திருந்த ஆச்சரியம்
நான் முன்பு பணிபுரிந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவியாக எனக்கு அறிமுகமானார் காவேரி. இளம்பிள்ளைவாத நோயின் லேசான தாக்கத்தால் ஒரு காலை விந்தி நடப்பார். எந்தச் சங்கடமும் இல்லாமல் அவருடைய உடல் குறையை அடைமொழியாக வைத்து அவரை அழைக்கும் ஆசிரியர்கள் பள்ளியில் இருந்தார்கள். ஆனால், இதற்கெல்லாம் காவேரி சோர்ந்துபோனதில்லை. இலக்கிய மன்ற விழாக்களில் தானாக முன்வந்து உரை நிகழ்த்துவது, காலை இறை வணக்கக் கூட்டங்களில் பங்கெடுத்துப் பேசுவது என அவரது திறமைகள் பளிச்சிடுவதைக் கவனித்திருந்தேன். ஆனால், அவர் ஒரு படைப்பாக்கச் சக்கரவர்த்தினி என்பதை நாங்கள் அறிந்துகொண்ட அந்தச் சம்பவம் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளது.
குழந்தைகள் சவுகரியமாக வாசிப்பதற்கு ஏற்றாற்போல பள்ளி நூலகத்தை மேம்படுத்தத் தலைமை ஆசிரியராகச் சில நடவடிக்கைகள் எடுத்தேன். விரைவில் பள்ளித் தணிக்கைக்கு அதிகாரிகள் வர இருந்ததும் ஒரு காரணம். குழந்தைகளுக்குச் சில பத்திரிகைகள் வாங்கிப்போடலாம் என்பதிலிருந்து அடுக்கடுக்காகச் சில வேலைகள் அவசரமாக நடந்தேறின. அதிகாரிகள் வருகை புரிந்த அன்று மிடுக்காக நூலகத்துக்கு அவர்களுடன் நடந்தேன். அங்கே எல்லாம் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் ஒரு நிமிடம் அதைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிட எத்தனித்தபோது நூலக வாசலில் காவேரி தயங்கியபடி நின்றார்.
எனக்கு ஒரு நொடியில் வியர்த்தது. ‘இங்கே ஏன் வந்தாய்?’ என்பது மாதிரி முறைத்த என்னை அவர் கண்டுகொள்ளவே இல்லை. ‘இது எங்கள் வகுப்பு மாணவர்களுக்காக நாங்களே நடத்தும் மாதப் பத்திரிகை’ என கையில் ஏழெட்டு தைத்த நோட்டுகளைத் திணித்தார். ஒரு கையெழுத்து இதழ். அதிகாரிகள் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ‘கவிதை, கதை , ஓவியம் , ஜோக்கு எல்லாம் எங்கள் வகுப்பு மாணவர்களே உருவாக்கியது. இதுவரை ஏழு இதழ் வந்திருக்கு. நாங்க எங்க வகுப்புப் பத்திரிகைக்கு ‘குறிஞ்சி’னு பேரு வெச்சிருக்கோம் இதையும் நூலகத்துல வைங்க சார்’என்றார்.
அதிகாரிகள் ஆச்சரியத்தோடு வாங்கிப் புரட்டியபோது அவர் அங்கு இல்லை. வகுப்புக்குப் போய்விட்டிருந்தார். அவர்களின் பாராட்டுகளுக்கிடையே நான் விழி பிதுங்கி நின்றேன். படைப்பாக்கக் கல்வியைக் குழந்தைகளிடம் கொண்டுசெல்ல என்ன செய்ய வேண்டும் என எனக்குப் புரிய வைத்த காவேரி இன்று இணைய வலைப்பூவில் அவ்வப்போது தன் படைப்புகளையும் வெளியிடும் ஒரு இல்லத்தரசி.

ஆய்லர் - கணிதத்தை ஆட்கொண்ட ஆய்லர்

சுவிஸ்சர்லாந்தில் பேசல் எனும் இடத்தில் 309 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று லியோனார்ட் ஆய்லர் என்ற மாபெரும் கணித மேதை பிறந்தார். இளம் வயதிலேயே அதீத ஆற்றல் கொண்ட ஆய்லர், தாம் படித்த புத்தகங்களில் தோன்றும் குறிப்புகளை ஒரு வார்த்தைகூடப் பிறழாமல் பல ஆண்டுகளுக்குப் பின்பும் அப்படியே ஒப்பிக்கும் நினைவாற்றல் பெற்று விளங்கினார். இளம் வயதிலேயே தனது கணித ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
இன்று கணிதத்தில் இவர் பெயர் கொண்ட கருத்துக்கள், சூத்திரங்கள் மற்றும் தேற்றங்கள் நூற்றுக்கும் மேல் உள்ளன. அந்த அளவுக்கு அனைத்துக் கணித உட்பிரிவுகளிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி மாபெரும் மேதையாக ஆய்லர் கணித உலகில் சஞ்சரிக்கிறார்.
கணிதத்தின் உச்சம்
கணிதத்தில் இன்று நாம் பயன்படுத்தும் அநேகக் குறியீடுகளை இவரே அறிமுகம் செய்தார். உதாரணமாக, சார்புகளைக் குறிக்கும் ƒ(x) குறியீடு, கூடுதல் மதிப்புக்கான Σ குறியீடு, முக்கோணவியல் சார்புகளான sin x,cos x போன்ற பெயர்கள், மடக்கை அடிமானமான e என்ற குறியீடு, கலப்பு எண்ணின் i என்ற கற்பனை அலகு போன்றவை குறிப்பிடத் தக்கவையாகும்.
கணித உலகில் இரு எண்களைத் தன் பெயரில் கொண்ட ஒரே கணித மேதை ஆய்லர்! மடக்கை சார்புகளின் அடிமானமான e என்ற எண்ணைக் கண்டறிந்து அதன் தோராய மதிப்பை 2.718 என வழங்கினார். இன்று இதை ‘ஆய்லர் எண்’ என அழைக்கிறோம். அதேபோல் காமா (ϒ) எனும் மாறிலியையும் இன்று ‘ஆய்லர் மாறிலி’ என அழைக்கிறோம். இதன் மதிப்பு 0.57721 என தோராயமாக அமைகிறது. காமா எனும் ஆய்லர் மாறிலி விகிதமுறு எண்ணா, அல்லது விகிதமுறா எண்ணா என இன்றுவரை கூற இயலவில்லை.
இன்று கணிதத்தில் மிகச் சிறப்பான சூத்திரமாகக் கருதப்படும் eiπ+1= 0 என்ற சமன்பாடை இவர் வழங்கிய eiθ= cos θ + i sin θ சூத்திரத்திலிருந்து θ = π எனப் பிரதியிட்டுப் பெறலாம். கோநிஸ்பெர்க் பாலக் கணக்கு எனும் கணிதப் புதிருக்கு இவர் வழங்கிய தீர்வு மூலம் Graph Theory எனும் கணித உட்பிரிவு உருவானது. அதேபோல், ν-e + ƒ=2 என்ற பன்முகி சூத்திரம் Topology எனும் கணித உட்பிரிவு தோன்ற வழிவகுத்தது. மேலும், பொருட்களின் தொடர்புகளைப் படங்கள் மூலம் வெளிப்படுத்தும் பண்பை வரைபடங்கள் மூலம் ஆய்லர் வெளிபடுத்தினார். இன்று இவ்வரைபடங்களை நாம் ஆய்லர் வரைபடங்கள் என அழைக்கிறோம். இவையே இன்று நாம் கணங்களில் தற்சமயம் பயன்படுத்தும் வெண் வரைபடங்களின் மாதிரியாகத் திகழ்கின்றன.
அற்புத நினைவாற்றல் படைத்தவர்
கணிதத்தில் மிக அதிகமான படைப்புகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் பல அழகு பொருந்திய சூத்திரங்களை ஏற்படுத்தி, கணிதத்துக்குப் பொலிவூட்டியவர் ஆய்லர். மேலும், பல நவீன கணித உட்பிரிவுகளுக்கு இவரது சிந்தனைகளே அடித்தளமாக அமைந்தன. இவரது படைப்புகள் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீள்பவை. இவர் கண்டறிந்த செய்திகளின் பட்டியலை நூற்றாண்டுகளுக்கு மேல் சேகரித்து அப்படைப்புகளின் சிறுகுறிப்புகளை நூறு தொகுதிகளுக்கு மேல் வழங்கியுள்ளனர். இதிலிருந்து இவரது படைப்பாக்கத்தின் பிரம்மாண்டத்தை நாம் உணரலாம்.
முப்பது வயதில் தனது வலது கண்ணை இழந்த ஆய்லர், தனது அறுபதாவது வயதில் மற்றொரு கண்ணையும் இழந்தார். இருப்பினும் அதன் பிறகு அவர் வாழ்ந்த 16 ஆண்டுகளில் வாரத்துக்கு ஓர் கண்டுபிடிப்பை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தினமும் காலை முதல் மாலை வரை தனது கண்டுபிடிப்புகளைக் குறிப்பதற்கென ஓர் நபரை நியமனம் செய்து அவர் மூலம் பதிவு செய்ததாக அறியப்படுகிறது. முதல் அறுபது ஆண்டுகளில் உருவாக்கிய கணிதப் படைப்புகளுக்கு இணையான கணிதப் படைப்புகளை பிற்காலத்திலும் அவர் உருவாக்கினார் என்பது அவரது அற்புத நினைவாற்றல், விடாமுயற்சி, உழைப்பு போன்றவற்றின் வெளிப்பாடே!
கணிதம் மட்டுமல்லாது இயற்பியல், வானியல், திரவ இயக்கவியல், ஒளியியல், இசைக் கோட்பாடு போன்ற பல்வேறு துறைகளிலும் கருத்துகளை வழங்கியுள்ளார். இவரது பெருமையை, பிற்காலத்தில் தோன்றிய பிரெஞ்சு கணித அறிஞரான லாப்லாஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஆய்லரைப் படியுங்கள், ஆய்லரைப் படியுங்கள், அவர்தான் நம் அனைவருக்கும் ஆசான்”
ஆய்லரின் குறிப்புகளைப் பற்றி https://goo.gl/d9pdNb என்ற இணையப் பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்

சூப்பர்நோவா

ஆசை
COMMENT (2)   ·   PRINT   ·   T+  
1
சூப்பர்நோவா!
பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான வாணவேடிக்கை! ஆனாலும், வெறுங்கண்களுக்கும் தொலைநோக்கிகளுக்கும் அந்தப் பிரம்மாண்டம் எளிதில் அகப்படாது. சூப்பர்நோவாவைப் பற்றிய இருவேறு தகவல்கள் அறிவியலாளர்கள் மத்தியில் தற்போது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் சூப்பர்நோவாவைப் பற்றிப் பார்ப்போம்.
நமது சூரியனை விடப் பல மடங்கு பெரியதாக இருக்கும் விண்மீன் ஒன்று தனது ஆயுளின் முடிவில் வெடித்துச் சிதறுவதற்குத்தான் சூப்பர்நோவா (Supernova) என்று பெயர். தமிழில் ‘பெருவிண்மீன் வெடிப்பு’ என்று பெயர் வைக்கலாம். பெருவிண்மீன் வெடிப்பின்போது ஒரு விண்மீன் தனக்குள்ளே குலைவுற்றுப் பின் பிரம்மாண்டமாக வெடித்துச் சிதறுகிறது. அப்போது வெளிப்படும் ஆற்றல் பத்தாயிரம் கோடி சூரியன்களின் ஆற்றலுக்கு இணையானது. ஆற்றல் மட்டுமல்ல அப்போது வெளிப்படும் ஒளியும் அந்த விண்மீன் இருக்கும் ஒட்டுமொத்த விண்மீன் மண்டலத்தின் (galaxy) ஒளியைவிடப் பிரகாசமாக இருக்கும்.
இவ்வளவு ஆற்றலுடன் வெடிக்கும் பெருவிண்மீன் வெடிப்பால் நமது பூமிக்கும் சூரிய மண்டலத்துக்கும் ஏதாவது ஆபத்து நிகழுமா என்ற கேள்வி நமக்கு எழுவது இயல்பானதே. சூரியக் குடும்பத்துக்குக் கிட்டத்தட்ட 30 ஒளியாண்டுகள் தொலைவுக்குள் பெருவிண்மீன் வெடிப்பு நிகழ்ந்தால் நாம் ‘சூரியக் குடும்பத்தோடு கைலாசம்’தான். நல்லவேளை நமக்கு அவ்வளவு ‘அருகில்’ பெருவிண்மீன் வெடிப்பு நிகழ்வதற்கு வாய்ப்புள்ள விண்மீன்கள் ஏதுமில்லை.
வெடிப்பின் எச்சங்கள்
பெருவிண்மீன் வெடிப்பின் எச்சங்களை சமீபத்தில் கடல் அடியில் உள்ள படிவங்களிலிருந்து கண்டறிந்திருக்கிறார்கள். அந்தப் படிவங்களிலிருந்து அரிய வகை ஐசோடோப் ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். இரும்பு-60 என்ற அந்த ஐசோடோப் பெருவிண்மீன் வெடிப்பிலிருந்து மட்டுமே உருவாகக்கூடியது. பூமியிலிருந்து 300 ஒளியாண்டுகள் தொலைவில், இருவேறு காலங்களில் நிகழ்ந்த இரண்டு பெருவிண்மீன் வெடிப்புகளின் எச்சங்கள்தான் அந்த ஐசோடோப்புகள்.
பிரபஞ்சம் உருவானபோது, அதாவது சுமார் 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற லேசான தனிமங்கள்தான் உருவாயின. ஆனால், சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பூமியில் உயிர் வாழ்க்கை உருவாவதற்கு அடிப்படையானவை கடினமான தனிமங்கள். அந்தத் தனிமங்கள் எங்கிருந்து வந்திருக்கும் என்ற கேள்வி நெடுங்காலமாக இருந்துவருகிறது. பெருவிண்மீன் வெடிப்புகள், பூமியின் மீதான வால் நட்சத்திரங்களின் மோதல், மாபெரும் எரிமலை வெடிப்புகள் போன்ற ஐந்து நிகழ்வுகள் பூமியின் மீது ஏற்படுத்திய தாக்கத்தால் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்கலாம் என்று இதற்கு விடை சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், மேற்கண்ட இரண்டு பெருவிண்மீன் வெடிப்புகளுக்கும் பூமியில் உயிர் தோன்றியதற்கும் தொடர்பில்லை. உயிர்கள் தோன்றியதற்குப் பிறகுதான் இந்த வெடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. 23 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருவிண்மீன் வெடிப்பும், 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெடிப்பும் நிகழ்ந்திருக்கின்றன. மேலும், பூமிக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் தொலைவில் இவை நிகழவில்லை. எனினும், இவற்றின் எச்சங்கள் கிடைத்திருப்பதைப் பார்க்கும்போது இதேபோல் பூமியின் ஆரம்ப காலத்தில் ஏதாவது பெருவிண்மீன் வெடிப்பு பூமியின்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்ற கருத்து உறுதிப்படுகிறது.
அதிர்வலைகள் கண்டுபிடிப்பு
இன்னொரு முக்கியமான கண்டுபிடிப்பு, முதன்முறையாகப் பெருவிண்மீன் வெடிப்புக்கு முந்தைய அதிர்வலைகளை (shock waves) கெப்ளர் தொலைநோக்கி பதிவுசெய்திருப்பது!
தற்போது பாதியளவு பழுதடைந்திருக்கும் கெப்ளர் தொலைநோக்கி 2011-ல் சேகரித்திருந்த தகவல்களை சர்வதேச வானியலாளர்கள் அலசிப்பார்த்தபோது இரண்டு பெருவிண்மீன் வெடிப்புகளை, அவை நிகழ்வதற்கு முன்பிருந்து கெப்ளர் உற்றுநோக்கியிருந்ததைக் கண்டறிந்தனர். பெருவிண்மீன் வெடிப்புக்கு முன்பு விண்மீனுக்குள் அதிர்வலைகள் ஏற்பட்டு வெடிப்பு நிகழும் என்று முன்பே அறிவியலாளர்கள் கணித்திருக்கிறார்கள். ஆனால், அந்த அதிர்வலைகளைத் தொலைநோக்கிக்கூடாகப் பார்த்திருப்பது இப்போதுதான். ஆனாலும் ஒரு சிக்கல்! ஒரு பெருவிண்மீன் வெடிப்புக்கு முன்புதான் அதிர்வலைகள் காணக் கிடைத்தன, இன்னொன்றில் அதிர்வலைகள் புலப்படவில்லை.
இருப்பினும் இந்த முரண்பாட்டால் அறிவியலாளர்கள் நம்பிக்கை இழந்துவிடவில்லை. ஒன்றில் அதிர்வலைகளைக் காண முடிந்து, இன்னொன்றில் காண முடியவில்லை என்றால் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஏதோ ஒரு விஷயம் இதில் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது என்கிறார் இந்தக் கண்டுபிடிப்பு பற்றி எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையொன்றின் ஆசிரியரான பிராட் டக்கர்.
அதிர்வலைகள் புலப்படாத விண்மீன் மிகவும் பெரியது. நமது சூரியனை விட 500 மடங்கு பெரியது. ஆக, அதிர்வலைகள்கூடத் தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு அதன் ஈர்ப்பு விசை மிகமிகச் சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கும் என்கிறார் பிராட் டக்கர்.
வேறுசில காரணங்களையும் அவர் முன்வைக்கிறார். ஏதாவது படலங்கள் மறைத்துக்கொண்டால் கூட அந்த அதிர்வலைகளை கெப்ளர் தொலைநோக்கியால் பார்க்க முடியாமல் போயிருக்கும். அல்லது, மற்றொரு பெருவிண்மீனை விட இந்தப் பெருவிண்மீன் 2,000 மடங்கு தொலைவில் இருந்ததால் அதன் அதிர்வலைகளின் கண்சிமிட்டலை கெப்ளர் தவறவிட்டிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
எண்ணற்ற சாத்தியங்களின் பிரபஞ்சம்!
பெருவிண்மீன் வெடிப்பு என்பது அடிக்கடி நிகழக்கூடிய ஒன்றல்ல பல ஆண்டுகளுக்கு ஒருமுறை, பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடியது. அப்படிப்பட்ட அரிதான ஒரு நிகழ்வின் இரண்டு வகைகளை நம் தொழில்நுட்பத்தால் உள்வாங்க முடிந்திருக்கிறது என்பது பெரும் சாதனை. இந்த இரண்டு நிகழ்வுகளும் வெவ்வேறு கதைகள் சொல்லியிருப்பது நம் பிரபஞ்சத்தின் எண்ணற்ற சாத்தியங்களின் ஓர் அடையாளம்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களுக்குச் சொந்தமான பெருவிண்மீன் வெடிப்புகளும், கெப்ளர் பார்த்த பெருவிண்மீன் வெடிப்புகளும் வேறு வேறு. என்றாலும் அவை சொல்லும் சேதி ஒன்று! ஆம், ரோஹித் வெமுலா சொன்னதுபோல் நாமெல்லாம் விண்மீன்களின் துகள்கள்தான். ரோஹித் வெமுலாவின் ஆதர்ச நாயகரான கார்ல் சகானும் இதையேதான் சொல்லியிருக்கிறார்:
“நமது டி.என்.ஏவில் உள்ள நைட்ரஜன், நம் பற்களில் உள்ள கால்சியம், நம் இரத்தத்தில் உள்ள இரும்பு, நாம் உண்ணும் ‘ஆப்பிள் பை’யில் உள்ள கார்பன் எல்லாமே, வெடித்துச் சிதறும் விண்மீன்களின் உட்பகுதியில் உருவானவை. நாமெல்லாம் விண்மீன் துகள்களால் உருவானவர்கள்.”
- ‘தி கார்டியன்’ இதழில் வெளியான 
இரு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது

ஓசூர்

http://tamil.thehindu.com/tamilnadu/election2016/krishnagiri2016/55-%E0%AE%93%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/article8433084.ece



ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சேலம் ஜில்லாவின் தலைநகராக திகழ்ந்த பெருமை கொண்டது ஓசூர் நகராகும். ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பண்ணை ஓசூர் மத்திகிரியில் தான் அமைந்துள்ளது. ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் மூதறிஞர் ராஜாஜி நினைவு இல்லம், பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வர் மலைக்கோயில் ஆகியவை உள்ளது.
ஓசூர் தமிழகத்தின் நுழைவுவாயிலாக உள்ளது. இங்கு ரெட்டி, கவுடா, நாயுடு, வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சமுதாய மக்கள் பரவலாக உள்ளனர். மேலும் முஸ்லிம் சமுதாய மக்களும் அதிக அளவில் உள்ளனர். இதனை தவிர வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். இதில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதனால் ஓசூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநில மக்களின் வாக்குகள் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது.
இந்த தொகுதியில் மலர், காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி மதிப்புள்ள ரோஜா, கொய்மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொகுதியில் நீண்ட கால பிரச்சனைகளுக்கு குறைவில்லை. மலர் ஏற்றுமதி மையம், யானைகள் சரணயாலயம், ஓசூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கையை விவசாயிகளும், தொழிலாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
குண்டு ஊசி முதல் விமானம் வரை தயாரிக்கும் நிறுவனங்கள் கொண்டு ஓசூர் தொகுதியில் 2 ஆயிரம் மேற்பட்ட சிறு, குறு, பெரிய நிறுவனங்கள் உள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கு அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையை தவிர கிராமபுறச்சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமபுறங்களுக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மகளிருக்கென தனியாக பேருந்தும், தங்கும் விடுதியும் ஏற்படுத்திட வேண்டும். குற்றச்செயல்கள் அதிகம் நடப்பதால், கூடுதல் போலீஸார் நியமிக்க வேண்டும். தொடர் விபத்துகள் நிகழும் தர்கா பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை, முன் வைக்கிறார்கள் மக்கள்.
1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் தேசிய கட்சிகளின் தாக்கம் அதிகம். இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 2 முறை சுதந்திரா கட்சியும், ஒருமுறை ஜனதா தளமும், 2 முறை சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் வெற்றி பெற்றார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ஓசூர் வட்டம் (பகுதி) சேவகானப்பள்ளி, கக்கனூர், சொக்கரசனப்பள்ளி, சிங்கசாதனப்பள்ளி, பெலத்தூர், பேபேபாலப்புரம், தேவீரப்பள்ளி, பாலிகானப்பள்ளி, எடிப்பள்ளி, புரம், பி.எஸ்.திம்மசந்திரம், வானமங்கலம், காட்டிநாயக்கந்தொட்டி, எலுவப்பள்ளி, புரம், பி.எஸ்.திம்மசந்திரம், பேரிகை, அமுதகொண்டபள்ளி, முகல்பள்ளி, வத்திரப்பள்ளி, ஆலூர், பள்ளி, ஒட்டப்பள்ளி, அலசப்பள்ளி, முதுகானப்பள்ளி, தின்னப்பள்ளி, பாகலூர், கொடியாளம், கொத்தபள்ளி, கூஸ்தானப்பள்ளி, சொக்கநாதபுரம், ஈச்சாங்கூர், மூர்த்திகானதின்ன, லிங்காபுரம், பட்டவாரப்பள்ளி, மல்லசந்திரம், துமனப்பள்ளி, கொளதாசபுரம், நாரிகானபுரம், சீக்கனப்பள்ளி, குருபரப்பள்ளி, அத்வானப்பள்ளி, அலேநத்தம், சுடுகொண்டபள்ளி, பலவனப்பள்ளி, நந்திமங்கலம், அட்டூர், படதாபள்ளி, நஞ்சாபுரம், கெம்பசந்திரம், கனிமங்கலம், ஜீமங்களம், நல்லூர், பேகேப்பள்ளி, அனுமேபள்ளி, கோவிந்தாக்ரஹாரம், ஜுஜுவாடி, சாந்தாபுரம், விஸ்வநாதபுரம், எலுவபள்ளி, மாரசந்திரம், காலஸ்திரபுரம், சித்தனப்பள்ளி, தட்டிகானப்பள்ளி, காருபள்ளி, பெத்த முத்தாளி, முத்தாலி, அட்டூர், தாசேப்பள்ளி, ஆலூர், பெத்தகுல்லு, சின்னகுல்லு, கெலவரபள்ளி, புனுகன் தொட்டி, ஆவலப்பள்ளி, முக்காண்டபள்ளி, மொத்தம் அக்ரஹாரம், கொத்தகொண்டபள்ளி, பூனப்பள்ளி, நாளிக பெட்ட அக்ரஹாரம், ஒன்னல்வாடி, அச்செட்டிப்பள்ளி, நாகொண்டபள்ளி, முதுகானப்பள்ளி, கோபனப்பள்ளி, முகலூர் மற்றும் பஞ்சாட்சிபுரம் கிராமங்கள், ஓசூர் (நகராட்சி) மற்றும் மத்தகிரி (பேரூராட்சி
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1951
எம். முனி ரெட்டி
சுயேச்சை
17850
53.9
1957
கே. அப்பாவு பிள்ளை
சுயேச்சை
10305
39.6
1962
இராமசந்திர ரெட்டி
காங்கிரஸ்
25577
64.46
1967
பி. வெங்கடசாமி
சுதந்திரா
21530
52.69
1971
பி. வெங்கடசாமி
சுதந்திரா
28259
63.81
1977
என். இராமசந்திர ரெட்டி
காங்கிரஸ்
30818
58.12
1980
டி. வெங்கட ரெட்டி
காங்கிரஸ்
25855
49.8
1984
டி. வெங்கட ரெட்டி
காங்கிரஸ்
35293
48.37
1989
என். இராமசந்திர ரெட்டி
காங்கிரஸ்
37934
39.78
1991
கே. எ. மனோகரன்
காங்கிரஸ்
47346
47.64
1996
பி. வெங்கடசாமி
ஜனதா தளம்
41456
34.89
2001
கே. கோபிநாத்
காங்கிரஸ்
45865
35.24
2006
கே. கோபிநாத்
காங்கிரஸ்
90647
---
2011
கே. கோபிநாத்
காங்கிரஸ்
65034
---
ஆண்டு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1951
கே. அப்பாவு பிள்ளை
காங்கிரசு
13863
41.86
1957
என். இராமசந்திர ரெட்டி
காங்கிரசு
9257
35.57
1962
கே. சாமன்னா
சுதந்திரா
14101
35.54
1967
கே. எ. பிள்ளை
காங்கிரசு
19329
47.31
1971
டி. வெங்கட ரெட்டி
சுயேச்சை
15063
34.01
1977
கே. எஸ். கோதண்டராமையா
ஜனதா கட்சி
13653
25.75
1980
கே. எஸ். கோதண்டராமையா
சுயேச்சை
21443
41.31
1984
ஈ. வெங்கடசாமி
ஜனதா கட்சி
15096
20.69
1989
பி. வெங்கடசாமி
ஜனதா கட்சி
35873
37.62
1991
பி. வெங்கடசாமி
ஜனதா தளம்
38600
38.84
1996
டி. வெங்கட ரெட்டி
தமிழ் மாநில காங்கிரசு
39719
33.43
2001
பி. வெங்கடசாமி
பாஜக
39376
30.25
2006
வி. சம்பனகிரி ராமய்யா
அதிமுக
78096
---
2011
ஜான்சன்
தேமுதிக
50882
---
2006 சட்டமன்ற தேர்தல்
55. ஓசூர்
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
K. கோபிநாத்
ஐ.என்.சி
90647
2
V. சம்பன்கிராமய்யா
அ.தி.மு.க
78096
3
B. வெங்கடசாமி
பி.ஜே.பி
23514
4
V. சந்திரன்
தே.மு.தி.க
14401
5
C. ராமசாமி
சுயேச்சை
3375
6
M. சித்ராம்பலம்
பி.எஸ்.பி
2227
7
N. கிருஷ்ணாரெட்டி
டி.என்.ஜே.சி
1186
8
A. பாட்ஷா
சுயேச்சை
1092
9
K. கவுரப்பா
சுயேச்சை
868
215406
2011 சட்டமன்ற தேர்தல்
55. ஓசூர்
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
K. கோபிநாத்
ஐ.என்.சி
65034
2
S. ஜான் திமோதி
தே.மு.தி.க
50882
3
S.A. சத்யா
சுயேச்சை
24639
4
பாலகிருஷ்ணன்
பி.ஜே.பி
19217
5
சித்ராம்பலம்
சுயேச்சை
6325
6
S. ராம்தேவன்
சுயேச்சை
2018
7
G.C. ராமசாமி
சுயேச்சை
1517
8
H. சனாவுல்லா ஷெரீப்
பி.எஸ்.பி
1430
9
V. மஞ்சுநாத்
சுயேச்சை
1044
172106