
சட்ட தினம் கொண்டாடப்படும் தருணத்தில் அம்பேத்கரின் சிந்தனைகளை நினைவுகூர்வது அவசியம்
இதே தேதியில் 1949-ல் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வடிவத்துக்கு முழு ஒப்புதல் அளித்தது. அச்சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26-ம் தேதியைத்தான் நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 65 வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நீதிபதிகள் நியமனத்துக்காகக் கொண்டுவரப்பட்ட 99-வது சட்டத் திருத்தத்தை உச்ச நீதிமன்ற அமர்வு ரத்து செய்த தீர்ப்பு இன்று பொதுவெளிகளில் விவாதிக்கப்பட்டுவருகிறது.
இச்சூழ்நிலையில், அரசமைப்புச் சட்ட வடிவைத் தயாரித்து, அதற்கான ஒப்புதலைப் பெற, அரசியல் நிர்ணய சபை தொடர்ந்து விவாதங்களில் பங்கேற்ற பின்னர் உருவான, ஜனநாயகக் குடியரசின் முதல் அமைச்சரவையில் பதவி வகித்த டாக்டர் அம்பேத்கரை நினைவுகூராமல் இருக்க முடியாது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 17-ன்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டாலும் அன்றைய சமூக நிலைமை பற்றி டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் தனது மனக் குமுறலை இவ்வாறு வெளிப்படுத்தினார்:
“1950 ஜனவரி 26-ம் தேதியன்று, நாம் முரண்பாடுகளுற்ற வாழ்க்கையில் நுழையப் போகிறோம். அரசியலில் நமக்குச் சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக, பொருளாதாரத் தளத்தில் - சமத்துவமற்ற தன்மையே நீடிக்கும். அரசியலில் நாம் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு நெறி என்பதை அங்கீகரிப்போம். ஆனால் நமது சமூக, பொருளாதார வாழ்க்கையில் நம்முடைய பொருளாதார, சமூக அமைப்பின் காரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு நெறி என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து மறுத்து வருவோம். இதுபோன்ற முரண்பட்ட வாழ்க்கை முறைகளுடன் நாம் எவ்வளவு காலம் வாழப்போகிறோம்? நம்முடைய சமூக, பொருளாதார வாழ்க்கையில் இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் சமத்துவத்தை மறுக்கப்போகிறோம்? இப்படித் தொடர்ந்து மறுத்துவருவதன் மூலம் அரசியல் ஜனநாயகத்துக்குப் பேரிடர் மட்டுமே விளைவிப்போம். இம்முரண்பாடுகளை நாம் முடியும் வரை குறைந்த காலத்துக்குள் களைந்திட வேண்டும். இல்லையெனில், சமத்துவமின்மையால் அல்லலுறும் மக்களால் இம்மன்றம் மிகுந்த சிரமங்களுக்கு இடையே கட்டியுள்ள அரசியல் ஜனநாயகமே தகர்க்கப்பட்டுவிடும்.”
புத்தரின் கருத்துகளே வழிகாட்டி
இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அம்பேத் கர் அதன் முகப்புரையை இவ்வாறு வடிவமைத்தார்:
சுதந்திரம் - சிந்தனை, கருத்துரைத்தல், நம்பிக்கை, சமய உணர்வு மற்றும் வழிபாடு இவற்றுக்கான சமத்துவம் - படிநிலை மற்றும் வாய்ப்புகளுடன் அனைவரையும் மேம்படுத்துதல்.
சகோதரத்துவம் - தனிப்பட்ட ஒருவரின் கண்ணியத்துக்கான உத்தரவாதம்.
‘என்னுடைய வாழ்க்கைத் தத்துவம்’ என்கிற தலைப்பில் அகில இந்திய வானொலி உரையில் (3.10.1954) அம்பேத்கர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையைப் பற்றி ஒரு தத்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும். தத்துவம் என்பது தன்னை அளந்தறிவதற்கான ஓர் அளவுகோலாகும்” என்று கூறிய அவர் என்னுடைய சமூக தத்துவம், ‘சுதந்திரம்’, ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’ என்ற மூன்று வார்த்தைகளில் பொருந்தும். அவை பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து இரவல் பெற்ற என்னுடைய தத்துவமென்று யாரும் கருத வேண்டாம். என்னுடைய தத்துவங்களின் வேர் அரசியல் விஞ்ஞானத்தால் ஏற்பட்டதல்ல, அவை சமயம் சார்ந்தவை. நான் அவற்றை என்னுடைய குருநாதர் புத்தரின் போதனைகளில் இருந்துதான் பெற்றேன். என்னுடைய தத்துவங்களுக்கு ஒரு நோக்கம் உண்டு. நான் புத்த மதமாற்றத்துக்குப் பணிசெய்யக் கடமைப்பட்டவன்” என்று உரையாற்றினார்.
மதமாற்றம் ஏன்?
“தாயகம் திரும்புவோம்” (கர் வாப்சி) என்று இந்து அல்லாதவர்களிடம் பரப்புரை செய்யும் பாஜகவினரிடம் இது பற்றி அம்பேத்கரின் கருத்து என்னவென்று உணர்த்த வேண்டும். 1944-ல் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மாநாட்டில் அம்பேத்கர் இவ்வாறு கூறினார்:
“நேரடியாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் நடக்கும் போராட்டம் நிரந்தரமானது. அது எப்போதும் முடிவில்லாதது. ஏனெனில், அம்மதம் அச்சமூகத்தில் உன்னைக் கடைசி மட்டத்தில் வைத்திருப்பது காலம், சூழ்நிலைகளைப் பொருத்து எப்போதுமே நிரந்தரமானது. அச்சமூகத்தின் ஏணிப்படிகளின் கடைசிப் படியில்தான் நின்றுகொண்டிருக்கிறாய். அதிலேயே என்றென்றும் நின்றுகொண்டிருப்பாய். அதனால், இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையே உள்ள போராட்டம் என்றென்றும் தொடரும்.”
சாதி ஒழிப்பு தேவை
அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தில் 1949 நவம்பர் 11-ல் அம்பேத்கர் ஆற்றிய உரையில், “இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். பல ஆயிரம் சாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத் தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக்கு எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள்ளே ஆழமாக வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப்போகிறது. அதுவும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப்போகிறது. ஏனெனில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் சாதிகள் இல்லை. இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. சாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், சாதிகளை முடிவுக்குக் கொண்டுவந்தாக வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு
உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலுக்காக அதிதீவிரமாக உழைக்கும் மத்திய அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் விதமாகச் செயல்பட்டுவருகிறது. 1975-ல் பிரகடனப்படுத்தப் பட்ட நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி, சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவந்த இந்திரா காந்தி அரசமைப்புச் சட்டத்தைத் தனக்கேற்றவாறு திருத்தியமைக்க முயன்றார். புரட்சித் தலைவியாகச் சித்தரித்துக்கொள்ள முயன்ற அவர், அரசமைப்புச் சட்டத்தின் அறிமுக வரிகளில் ‘சோஷலிசம்’ என்ற வார்த்தையைச் சேர்த்து இந்தியா ஒரு இறையாண்மை பெற்ற சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்று அறிவித்தார். ஆனால், அத்தகைய சித்தரிப்பு வருவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலமைப்புச் சட்டத்தில் சோஷலிசச் சிந்தனைகளை விதைத்தவர் அம்பேத்கர்.
அரசமைப்புச் சட்டத்தின் 39-வது ஷரத்தில் அரசு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்ன என்று இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “மக்கள் அனைவருக்கும் சமூக-பொருளாதார அரசியல் நீதி கிடைக்கக்கூடியதான சமுதாய அமைப்பினை உருவாக்கி, நல அரசை உருவாக்க அரசாங்கம் முயல வேண்டும். தேசிய வாழ்வின் அனைத்து ஸ்தாபனங்களிலும் அவ்வுணர்வு பரவ வகை செய்ய வேண்டும் என்ற நெறிமுறைக் கோட்பாடுகளின் அடித்தளமாக விளங்கும். ஆண்-பெண் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களின் ஆரோக்கியமும், பலமும், சிறாரின் இளம்பிராயமும் தவறாகப் பயன்படுத்தாமலும், பொருளாதாரத் தேவைகளின் காரணமாகக் குடிமக்கள் தமது வயதுக்கும், வலுவுக்கும் பொருத்தமில்லாத வேலையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படாமலும் ; சிறாரும் இளைஞரும் சுரண்டப்படாமல் காக்குமாறும் அரசு தன்னுடைய கொள்கைளை நெறிப்படுத்த வேண்டும்.”
உணவு உண்ணும் உரிமை
உணவுப் பழக்கம் தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. அதைச் சமயக் கட்டுப்பாட்டாக்கவும் அதை யொட்டி மனித உறவுகளைப் பிரித்துக்கொள்வதும் ஏற்கத்தக்கதல்ல.
அம்பேத்கரின் நினைவாலயங்களை லண்டனிலும், மும்பையிலும் அமைத்துவருகிறது பாஜக அரசு. அவர்களது நடவடிக்கைகளை மதிப்பிட அம்பேத்கரின் சிந்தனைகளையும், அரசமைப்புச் சட்டத்தையும், அதையொட்டி எழுந்த விவாதங்களையும் இன்று நாம் நினைவு கூர்வோம்.
கே. சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்.
இன்று சட்ட தினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக