வியாழன், 8 ஜனவரி, 2015

நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனியில் விவசாயம் அழிந்திடும்


நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டத்தின் சுற்றுச் சூழல் அடியோடு நாசமாவதுடன், மலைப்பகுதி விவசாயமும் அழிந்துவிடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டை வஞ்சிப்பதிலேயே குறியாக இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, அரசு இன்னொரு அழிவுத் திட்டத்திற்கு நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளித்து இருப்பது கண்டனத்திற்கு உரியது.
இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டம் போடி மலைப்பகுதியில் பொட்டிப்புரம் கிராமத்தில், இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் (ஐ.என்.ஏ.) ரூ.1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கின்றது. 2010 மே மாதம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், இதற்கான கருத்துரு வெளியிடப்பட்டபோதே அதை முதன் முதலில் வன்மையாகக் கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டேன். மீண்டும் 2013 இல் மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி எடுத்தபோதும், கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்.
நியூட்ரினோ ஆய்வு மையத்தால் இயற்கை சுற்றுச் சூழல் நாசமாகி, அந்த மலைப்பகுதிகளே அழிந்துவிடும் என்பதால், தேனி மாவட்ட மக்களும், விவசாயிகளும் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர். எனவே, மத்திய அரசு அப்போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் பின்வாங்கியது.
முதலில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இமயமலை தேர்வு செய்யப்பட்டது. அங்குள்ள தட்பவெப்பம் சரிவராது என்பதால் கைவிடப்பட்டது. பிறகு அஸ்ஸாமிலும், கேரளாவிலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், சிங்கார் பகுதி தேர்ந்து எடுக்கப்பட்டபோது, வனவிலங்கு சரணாலயம் இருப்பதாலும், எதிர்ப்புகள் வந்ததாலும் முயற்சி கைவிடப்பட்டது.
இப்போது, தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிப்புரம் மலைத்தொடரான 'ஐம்பது ஊர் அப்பர் கரடு மலை' என்று மக்கள் அழைக்கும் பகுதியை இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் தேர்வு செய்து இருக்கின்றது.
நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்காக மலை உச்சியில் இருந்து 1.5. கிலோ மீட்டர் ஆழத்தில் 400 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட ஒரு சுரங்கம் அமைக்கப்படும். அருகிலேயே 170 அடி நீளம், 38 அடி அகலம், 15 அடி உயரம் கொண்ட இன்னொரு குகைச் சுரங்கமும் அமைக்கப்படுகிறது. சுமார் 2.5. லட்சம் கன சதுர மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்டுவதற்காக, மலையை வெடி வைத்துத் தகர்க்கும்போது, அந்தப் பகுதி முழுவதுமே பூமி அதிர்ச்சி ஏற்படுவதைப்போல குலுங்கும். மலையைத் துளைக்கும் கனரக வாகனங்களும், ராட்சத இயந்திரங்களும் ஊருக்குள் வர சாலை அமைக்கவும், கழிவுகளைக் கொட்டவும் விவசாய நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படும். இதனால் தேனி மாவட்டத்தின் சுற்றுச் சூழல் அடியோடு நாசமாவதுடன், மலைப்பகுதி விவசாயமும் அழிந்துவிடும்.
நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் தொழிற்சாலையோ, வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனமோ அல்ல. இது முழுக்க முழுக்க ஆராய்ச்சிப் பணி மட்டுமே!
இத்தாலி நாட்டில் கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு ரசாயனக் கசிவு ஏற்பட்டதன் விளைவாக போராட்டம் வெடித்தது. மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டதால் இத்தாலி அரசு, நியூட்ரினோ ஆய்வு மையத்தை 2003 இல் மூடியது.
அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் இயற்கையை அழித்து மக்களை வெளியேற்ற நடக்கும் சதித் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக