நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி ‘முந்த்ரா ஊழலை’ நாடாளுமன்றத்தில் எழுப்பினார்
இந்தியாவின் தூதராக 1948-ல் பிரிட்டனில் பணியாற்றிய வி.கே. கிருஷ்ண மேனனைத் தொடர்புபடுத்தி ‘ஜீப் ஊழல்’ வெளியானது. இந்திய ராணுவத்துக்காக 200 ஜீப் ரக வாகனங்கள் வாங்க ரூ.80 லட்சம் வழங்கப்பட்டது. அவற்றில் 155 மட்டுமே வந்து சேர்ந்தன. ரூ.20 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மேனன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளினார் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு. 1959-ல் நாட்டின் ராணுவ அமைச்சராகவும் மேனனை நியமித்தார்.
அரசுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. விதிமுறைகளை மீறி, தொழிலதிபர் முந்த்ராவின் நிறுவனங்களில் செய்த ரூ.1.24 கோடி முதலீடு ஒரு ஊழலாக வெடித்தது. 1958-ல் முந்த்ரா ஊழலை நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பினார். முந்த்ராவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நிதித்துறை செயலர் எச்.எம். படேல் ஆகியோர் பதவி விலகினார்கள்.
அலைக்கற்றை ஊழல்
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர் ஆ. ராசா பதவி விலகினார். நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை அளித்த பிறகும்கூட இன்னும் விசாரணை அளவிலேயே இருக்கும் இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
அரசு நிறுவனமான ‘ஏர்-இந்தியா’ தனக்கான தேவையைவிட இரு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் விமானங்களைக் கடனுக்கு வாங்கியது. இதற்குக் காரணம் விமானக் கொள்முதலுக்காக அந்த நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட தரகுதான் என்று பின்னர் தெரியவந்தது. அப்போது விமானப் போக்குவரத்து அமைச்சராக பிரஃபுல் குமார் படேல் பதவி வகித்தார். விமானங்களை இரு மடங்காக வாங்கினாலும் வருவாய் தரும் விமான வழிப்பாதைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு இப்போது ரூ.35,000 கோடி கடனும், தொடர் இழப்பும் ஏற்பட்டிருக்கின்றன.
மக்கள் நல திட்ட ஊழல்
அரசுக்குத் தேவைப்படும் கொள்முதல்களில் மட்டுமல்லாமல், மக்கள் நலத்திட்டங்களிலும் கணிசமான அரசுப் பணம் தனியார் நிறுவனங்களுக்கு மடைமாற்றி விடப்படுகிறது. ஏழை மக்களுக்கான மண்ணெண்ணெயில் 40%, டீசலுடன் கலப்படம் செய்வதற்குக் கடத்தப்படுகிறது. மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 50% உரிய பயனாளிகளுக்குச் சென்று சேர்வதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இப்படி அரசின் கொள்முதல், விநியோகம், மக்கள் நலத் திட்டங்களுக்கான தொகை கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டும்கூட அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், இடைத் தரகர்கள், அதிகாரத் தரகர்கள் என்று யாருமே வழக்குகளில் சிக்குவதோ தண்டனை பெறுவதோ மிக மிகக் குறைவு. கொள்ளையில் கிடைக்கும் பணம் மேல்நிலையிலிருந்து கீழ்நிலை வரையுள்ள அதிகாரிகள், அரசியல் தலைவர்களிடையே பகிர்ந்துகொள்ளப்படுவதால் யாரும் தண்டனை பெறுவதில்லை, ஊழலும் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது.
தேசியமய நோக்கம்
1969-ல் தனியார் வங்கிகளையும் காப்பீட்டு நிறுவனங்களையும் இந்திரா காந்தி தேசியமய மாக்கினார். விவசாயிகளுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் வங்கிக் கடன்கள் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று கூறப்பட்டது..
ஆனால் நடைமுறையில் விவசாயிகளுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கும் வங்கிக் கடன் கிடைப்பது எளிதல்ல. வங்கிகளிலேயே ‘உள்நபர்கள்’ இடைத் தரகர்களாகச் செயல்பட்டு வங்கிப் பணத்தை, தங்களைக் கவனிப்பவர்களுக்குக் கொடுத்து, கூடுதல் வருமானம் பெறுகின்றனர். இப்போது இந்தத் தொகை இமாலய அளவுக்கு உருவெடுத்துவிட்டது.
சமதர்மம் (சோஷலிசம்) என்பது சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கானது; ஆனால் வரிவிதிப்பு என்பது ஏழைகளிடமிருந்து திருடி பணக்காரர்களுக்குக் கடனும் சலுகைகளும் வழங்குவதாக மாறிவிட்டது. வரி ஏய்ப்பும், ‘ஹவாலா’ என்று அழைக்கப்படும் சட்ட விரோதப் பணப் பரிமாற்றங்களும் அரசின் ஆசியோடு நடக்கின்றன. வரி விலக்கு பெற்ற நாடுகளாக சில நாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அந்நாடுகளின் முகவரிகளில் நிறுவனங்களைப் பதிவுசெய்துகொண்டு கருப்பை வெள்ளையாக்கிக் கொள்கின்றனர் தொழில் அதிபர்கள். இதற்காக ஏற்றுமதி மதிப்பைக் குறைத்தும், இறக்குமதி மதிப்பை அதிகரித்தும் போலியாக ஆவணங்களைத் தயாரித்துக் காட்டி இடைவெளியாகத் திரளும் பெரும் பணத்தை அப்படியே விழுங்குகின்றனர்.
ராஜீவும் ராவும்
1980-களில் ராஜீவ் காந்தியும் 1990-களில் நரசிம்ம ராவும் ‘லைசென்ஸ்-பர்மிட்-கோட்டா’ ராஜ்யத்தை ஒழிக்க முயன்றார்கள். முதலீடு, விற்பனை, வருமானம் போன்றவற்றுக்கு அரசு சில சலுகைகளை அளித்தாலும் அரசு இலாக்காக்களின் அதிகாரவர்க்கக் கட்டமைப்பு அப்படியே தொடர்கிறது. எனவே அதன் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும், ஊழல்களும் தொடர்கின்றன. இப்போதைய வித்தியாசம் என்னவென்றால் முன்பைவிடப் பல மடங்குக்குப் பணம் மடைமாறுகிறது.
இத்தகைய ஊழல்களை விசாரிக்கும் நடை முறைகளும் ஆண்டுக்கணக்காக மாற்றமில்லாமல் அப்படியே தக்கவைத்துக்கொள்ளப்படுகின்றன.
கோடிக் கணக்கில் பணம் கொள்ளையடிக்கப் பட்டால் அதை விசாரிக்கவும் தவறிழைத்தவர்களைத் தண்டிக்கவும் அரசு வலுவான கட்டமைப்பை உருவாக்காமல் இருப்பதால், தொழிலதிபர்களுடன் கூட்டுக் சேர்ந்து கொள்ளையடிப்பதே லாபம் என்று அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர். அப்படியே குற்றச்சாட்டுகள் பேரில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தாலும் அது ஆண்டுக் கணக்கில் நீடித்து, கடைசியில் ‘போதிய ஆதாரங்கள் இல்லை’யென்று வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது அல்லது சிறு தொகை மட்டும் அபராதமாக விதிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்படுகிறது.
அரசின் வளம், நிதி ஆகியவற்றை விநியோகிப் பதற்கான அமைப்புகள் தவறு செய்தால் தண்டிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் பலமோ, அதிகாரமோ வழங்கப்படுவதில்லை. அதன் தலைவர்களே பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், ஆளும் கட்சியின் தயவில் பதவி வகிப்பவர்கள் என்பதால் தங்களைப் போன்ற அதிகாரிகளைக் கடுமையாகத் தண்டிக்க அவர்கள் முன்வருவதில்லை.
மொரிஷியஸ், சிங்கப்பூர்
மொரிஷியஸ் நாட்டில் மூலதன ஆதாய வரி இல்லை. எனவே அங்கிருந்து முதலீடு செய்யப் படுவதாகக் காட்டி வரி விதிப்பிலிருந்து தப்புகின்றனர். சில சிங்கப்பூர் வங்கிகள் பங்கேற்புப் பத்திரங்கள் மூலம், முதலீட்டாளர் யார் என்றே அறிவிக்காமல் முதலீடு செய்யச் சட்டரீதியாக இடம் தருகின்றன. இதைப் போன்ற வழிகளால் கருப்புப் பணம் பெருகுவதுடன் வெள்ளையாக்கப்பட்டு புழக்கத்துக்கும் வந்துவிடுகிறது. வரி ஏய்ப்பு மிக எளிதாகவும் சட்டபூர்வமாகவும் நடக்கிறது. இப்படியொரு ஏற்பாட்டை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் வேண்டுமென்றே உருவாக்காமல், தற்செயலாக நடந்திருக்கிறது என்று நம்ப நீங்கள் தயாரா?
இப்போதுள்ள அரசும் முந்தைய நிர்வாக நடைமுறைகளை அப்படியே காப்பாற்றத்தான் நினைக்கிறது; இதை மாற்ற வேண்டும் என்ற விருப்பமோ நியாயமான சந்தை உருவாக வேண்டும் என்ற வேட்கையோ இப்போதைய அரசுக்குக் கிடையாது. ஊழலுக்கு எதிராகப் பேசும். ஆனால் ஊழலுக்கு வகை செய்யும் வழிமுறைகளை மாற்றாது, கருப்புப் பணம் புழங்குவதற்காகச் செய்துகொள்ளப்பட்ட ஏற்பாடுகளைக் களையாது. மிகப் பெரிய ஊழல் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கப் போதிய எண்ணிக்கையில் நீதிபதிகளையும் நீதிமன்றப் பணியாளர் களையும் நியமிப்பதுகூட இல்லை. ஊழலுக்கு எதிரான, கருப்புப் பணத்துக்கு எதிரான இயக்கம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்; மேடைப் பேச்சுக்கு மட்டும்தான்.
- எஸ்.எல். ராவ், பயன்பாட்டுப் பொருளாதாரத்துக்கான தேசியப் பேரவையின் உறுப்பினர்.
தமிழில்: சாரி
© பிசினஸ் லைன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக