பெல்ஜியம் நாட்டில் ஜோனேபெகியில் நூல்பிடித்தாற்போல வரிசையாக இருக்கும், முதலாம் உலகப் போரில் இறந்த வீரர்களின் கல்லறைகள் ஊடே நடக்கும்போது இனம்புரியாத அச்சம் ஏற்படுகிறது. சுமார் 12,000 வீரர்கள் இங்கே புதைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8,400 பேர், ‘பெரும் போரில் இறந்த வீரர், இவருடைய பெயர் கடவுளுக்கு மட்டுமே தெரியும்' என்று மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
100 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போரில் இறந்தவர்கள் பற்றிய நினைவுகள் இப்போது வரலாறாகி விட்டன. நவீன உலகத்தின் போர் என்பது எவ்வளவு பயங்கரமானது, நாடுகளின் வரலாறும் நில எல்லைகளும் எவ்வாறு மாறுகின்றன, போரில் ஈடுபடும் நாடுகளும் போருக்குச் செல்லும் வீரர்களின் குடும்பங்களும் எப்படிச் சிதைத்து எறியப்படுகின்றன என்பதையெல்லாம் பார்த்த பின்பும், போருக்கான சூழல்களை உலகம் இன்னமும் களையவேயில்லை.
முதல் பொறி
முதல் உலகப் போர் சரயேவோ என்ற இடத்தில் ஜூன் 28-ம் தேதி நடந்த சம்பவத்தை அடுத்து மூண்டது. மகா செர்பிய தேசம் கோரி போராடிய இளம் தேசியவாதி ஒருவர், ஆஸ்திரியா – ஹங்கேரி பட்டத்து இளவரசரான பிரான்ஸிஸ் ஃபெர்டினாண்டையும் அவருடைய மனைவி சோபியையும் படுகொலை செய்ததை அடுத்து சரியாக ஒரு மாதம் கழித்து ஜூலை 28 அன்று முதல் உலகப் போர் வெடித்தது. அடுத்தடுத்து ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாகப் போரில் இறங்கின. ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்குக்கும் ஆசியாவுக்கும் யுத்தம் பரவியது.
தகர்ந்த சாம்ராஜ்யங்கள்
இந்தப் போருக்குப் பிறகு பல மன்னர்கள், மாமன்னர்கள், ஜார்கள், சுல்தான்கள் அழிந்தனர். பல சாம்ராஜ்யங்கள் தகர்ந்தன. ரசாயன ஆயுதங்கள், டேங்குகள் முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்டன. வானிலிருந்து போர் விமானங்கள் குண்டுகளை வீசுவதும் முதல் உலகப் போரில்தான் தொடங்கியது. லட்சக் கணக்கான பெண்கள் தொழிற்சாலை வேலைகளில் சேர்ந்தனர். பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. உக்ரைன், போலந்து, பால்டிக் நாடுகள் விடுதலைபெற்றன. மத்திய கிழக்கில் புதிய நாடுகள் தற்காலிக எல்லைகளுடன் பிறந்தன. பல நாடுகளின் கலாச்சாரங்களும் மாறத் தொடங்கின. போர் என்பதன் உளவியல் பின்னணி புரியத் தொடங்கியது. வெடிகுண்டு அதிர்ச்சியும் (ஷெல் ஷாக்), போருக்குப் பிறகு குடும்பத் தலைவர்களை இழந்து தவிக்கும் அவலமும் மக்களுக்கு ஏற்பட்டன.
போர் முடிவுக்கு வந்திருந்தபோது ஜெர்மனி தரப்பிலும் நேச நாடுகள் தரப்பிலும் சேர்ந்து முதல் உலகப்போரில் சுமார் 85 லட்சம் பேர் இறந்திருந்தனர்; 2 கோடிக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
உலக வல்லரசு அமெரிக்கா
முதல் உலகப் போருக்குப்பின் அமெரிக்கா உலக வல்லரசு நாடாக உணரப்பட்டது. அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் புதிய உலக முறைமையை ஏற்படுத்தத் துடித்தார். போரிடும் நாடுகள், போரை நிறுத்திவிட்டுச் சமாதானப் பேச்சுகளில் ஈடுபடலாம் என்ற அவருடைய யோசனையையும், சுய நிர்ணய உரிமையையும் மற்ற நாடுகள் ஏற்கவில்லை. போர் முடிந்த உடனேயே ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க ராணுவம் விரைந்து வெளியேறியதால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமொரு உலகப் போருக்கு விதை ஊன்றப்பட்டுவிட்டது.
போரினால் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு அனுபவம் ஏற்பட்டது. ஜெர்மனியின் ஊடுருவலைத் தடுத்தேயாக வேண்டும் என்பதால் பிரான்ஸ் போரில் இறங்க நேர்ந்தது. மார்ன் என்ற இடத்தில் நடந்த சண்டைதான் சுதந்திரமா, அடிமைத்தனமா என்ற கேள்விக்கு பிரான்ஸ் விடை கண்டாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கத் துருப்புகளின் உதவியால்தான் பிரான்ஸ் இந்தப் போரில் வென்றது. அதுதான் ஜெர்மனியின் தோல்விக்கு ஆரம்பமானது. முதல் உலகப் போர் பிரான்ஸுக்கு நல்லதாக அமைந் தாலும் இரண்டாவது உலகப் போரினால் அது சீர்குலைந்தது.
ஜெர்மனிக்கு தோல்வி
போர் இயந்திரத்தில் பெரும் முதலீடு செய்த ஜெர்மனிக்கு, ஜீரணிக்க முடியாத தோல்வியைத் தந்தது முதல் உலகப் போர். அதே சமயம், புரட்சி, பாசிசம், இழந்த நிலப் பகுதியை மீண்டும் போரிட்டு மீட்பது, கும்பல்கும்பலாக எதிரிகளைக் கொல்வது ஆகிய கருத்துகளுக்கான விதைகள் அப்போதே தூவப்பட்டுவிட்டன.
முதல் உலகப் போரில் மட்டும் ஈடுபட்டிருக் காவிட்டால், ஜெர்மனி தனது பொருளாதார வலிமை காரணமாக ஐரோப்பா முழுவதையும் அடுத்த 20 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியும் என்று போர்களை ஆராய்ந்த வரலாற்று ஆசிரியர் மேக்ஸ் ஹேஸ்டிங்ஸ் கூறுகிறார்.
பனிப்போரும் பிறகும்
அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ' ஒப்பந்த நாடுகளுக்கும் சோவியத் யூனியன் தலைமையிலான ‘வார்சா' ஒப்பந்த நாடுகளுக்கும் இடையிலான பனிப்போர் முடிந்ததாகவே கருதப்படுகிறது. ஆனால், பனிப்போர் முடிந்ததாகக் கருதப்படும் இப்போதைய உலக நிலைமை கிட்டத்தட்ட, முதல் உலகப் போரின்போது இருந்த நிலைமையைப் போலவே இருக்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்துவருகின்றன. சீனா புதிய வல்லரசாகிவருகிறது. ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகளில் தேசியவாதம் மீண்டும் தலைதூக்கிவருகிறது. முதல் உலகப் போருக்குப் பிறகு கார்த்தேஜிய சமரச முயற்சியை நிராகரித்த ஜெர்மனியின் நிலையில் இப்போது ரஷ்யா இருக்கிறது என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். பனிப்போருக்குப் பிறகு ஏற்பட்ட சமரசம் தங்களுக்கு நியாயத்தைச் செய்யவில்லை என்று ரஷ்யா இப்போது உறுமுகிறது. புதிய பாய்ச்சலுக்கு அது தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறது.
2014: மூன்று சிறப்புகள்
முதல் உலகப் போரில் நாடுகள் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளாததால், இரண்டாம் உலகப் போர் தவிர்க்க முடியாததாகிவிட்டது. 2014-ம் ஆண்டுக்கு மூன்று சிறப்புகள் இருக்கின்றன: முதல் உலகப் போரின் 100-வது ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் 75-வது ஆண்டு, கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் தகர்ந்து 25-வது ஆண்டு.
இரண்டு உலகப் போர்களும் உணர்த்திய பாடங்கள் இப்போதைக்கும் பொருந்துமா? 1914-ல் நாடுகள் தங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தால் உலகப் போர் மூண்டிருக்காது. 1939-ல் அப்படிக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பையே ஜெர்மனி தரவில்லை. இப்போது சர்வதேச நிலைமை எப்படி? ரஷ்யாவும் ஜெர்மனியும் இப்போதும் தங்களை ஐரோப்பாவின் வல்லரசாக நிலைநிறுத்த முயல்கின்றன. உக்ரைனில் இப்போது பிரச்சினை நீடிக்கிறது. முதலாம் உலகப் போர் சரயேவோ நகரச் சம்பவத்தால்தான் தொடங்கியது.
பனிப்போர்க் காலத்துக்குப் பிறகு யூகோஸ்லாவியாவில் ஐரோப்பாவுக்குப் பல பிரச்சினைகள். போஸ்னியா, கொசாவோ மற்றும் அதற்கும் அப்பால் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பல இருக்கின்றன. வடக்கு அயர்லாந்தில் இன்னமும் பதற்றம் நிலவுகிறது. மத்திய கிழக்கில் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடக்கிறது. மத அடிப்படைவாதிகள் பாக்தாதைக் கைப்பற்ற படைகளுடன் செல்கின்றனர். இராக்கின் நில எல்லை தகர்ந்துவிடும்போலத் தெரிகிறது.
பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று தனி அரசு ஏற்படுவதற்கான ஒப்பந்தம் பால்ஃபோர் பிரகடனத்தால் 1917 நவம்பரில்தான் சாத்தியமானது. இப்போது பாலஸ்தீனமும் கொந்தளிப்பில் இருக்கிறது. எனவே, உலகப் போர்களிலிருந்து நாம் பாடம் கற்ற மாதிரியே தெரியவில்லை. உலகப் போர்களில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். காலங்கள் செல்லச்செல்ல அவரவர்களுடைய பகுதிகளிலேயே அவர்கள் அறியப்படாதவர்களாகிவிடுகிறார்கள். ஒரு
காலத்தில் அவர்களும் நம்மைப் போலவே ரத்தமும் சதையுமாய் வாழ்ந்தார்கள். நாளை நாமும் அவர்களைப் போலவே நிழல்களாகிவிடுவோம் என்பதை நினைவில் கொள்வது நல்லது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக