இந்தியாவின் ஆன்மிக குரு பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் (Ramakrishna Paramahamsa) பிறந்ததினம் இன்று (பிப் 18). அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து:
மேற்குவங்க மாநிலம் காமார் புகூர் கிராமத்தில் பிறந்தவர். இயற்பெயர் கதாதர் சட்டோ பாத்யா. சிறு வயதில் ஆடல், பாடல், படம் வரைவது, மண் சிலை செய்வதில் ஆர்வமாக இருந்தார்.
பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை. இயற்கையை ரசிப் பதிலும், புராணக் கதை கேட் பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதையுமே அதிகம் விரும்பினார். அதே நேரம், ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தார்.
தந்தை காலமானதும் தாய் மற்றும் அண்ணன்களின் பராமரிப்பில் வளர்ந்தார். நண்பர்களுடன் சேர்ந்து நாடகக் குழு நடத்திவந்தார்.
இவரை தன்னுடன் கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றார் அண்ணன். அங்கு அவரது பாடசாலையில் கல்வி கற்றதுடன் அவருக்கு உதவியாக வீடுகளுக்குச் சென்று பூஜையும் செய்தார். தட்சிணேஸ்வரம் பவதாரிணி காளி கோயிலில் அர்ச்சகர் வேலை கிடைத்தது. தங்குவதற்கு அறையும் ஒதுக்கப்பட்டது. ராமகிருஷ்ணர் தன் வாழ்வில் பெரும் பகுதியைக் கழித்தது இங்குதான்.
காளியை நேரில் காணவேண்டும் என்ற ஏக்கம், ஆவல் தீவிரமானது. கடும் தியானம் மேற்கொண்டும், அது கைகூடாததால் காளி கையில் இருந்த வாளை உருவி உயிரை மாய்த்துக்கொள்ளவும் முயன்றார். உடனே சுயநினைவை இழந்ததாகவும் ஒரு பேரானந்த ஒளி தன்னை ஆட்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பிறகு அவரது நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தன. பித்து பிடித்துவிட்டதாக பயந்துபோன அம்மா, திருமண ஏற்பாடுகளைத் தொடங்கினார்.
பிற்காலத்தில் உலகமே அன்னையாகப் போற்றவிருந்த சாரதாதேவி எங்கு இருக்கிறார் என்று சொன்னதோடு அவரையே மணம் செய்துவைக்குமாறும் கேட்டுக்கொண் டார் ராமகிருஷ்ணர். அனைத்து பெண்களையும் காளியின் அம்சமாகவே போற்றியவர், தன் மனைவியையும் அலங் கரித்து பூஜை செய்து, அவரது காலில் விழுந்து வணங்குவார்.
பைரவி பிராம்மணி என்ற பெண்ணிடம் தாந்த்ரீகமும், தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தமும் கற்றார். சமாதி நிலையில் 6 மாதங்கள் இருந்தார். ராமர், கிருஷ் ணர், சீதை, ராதையின் காட்சி கிடைத்ததாக கூறியுள்ளார்.
இவரது புகழ் பரவியது. ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்களில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர்.
நாடி வருவோருக்கு எளிமையான ஆன்மிக, தத்துவ, யதார்த்த கதைகளைக் கூறி மகத்தான விஷயங்களைப் புரியவைப்பது ராமகிருஷ்ணரின் வழக்கம். இவரது உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமம் என்பார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை காளியாகவும், சிவனாக வும் பார்த்ததாக சீடர்கள் கூறியுள்ளனர். ‘ராமனாக, கிருஷ்ணனாக வந்தவன்தான் இப்போது ராமகிருஷ்ணனாக வந்துள்ளேன்’ என்று தன்னிடம் அவர் கூறியதாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.
19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒப்பற்ற ஆன்மிக குருவும் வங்கம் தந்த ஆன்மிகப் பேரொளியுமான ராமகிருஷ்ணர் 50 வயதில் மறைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக