தமிழ் மொழிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவரும், தமிழ் தாத்தா என்று போற்றிக் கொண்டாடப்படும் தமிழறி ஞருமான உ. வே. சாமிநாத ஐயர். பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 19). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :
 கும்பகோணத்துக்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (1855). தந்தை ஒரு இசைக் கலைஞர். அதே ஊரில் தொடக்கக் கல்வி யும், இசையும் கற்றார்.
 இவருக்கு தமிழில் இருந்த பேரார்வத்தைக் கண்டு, எங் கெல்லாம் தமிழ்ப் பாடம் கற்றுத் தருபவர்கள் இருந்தார் களோ அங்கெல்லாம் சென்று குடியேறி மகனுக்கு கல்வி கற்பிக்கச் செய்தார், தந்தை! புகழ்பெற்ற மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 17-ஆவது வயதில் 5 ஆண்டு காலம் தமிழ் கற்று தமிழறிஞர் ஆனார்.
 1880 முதல் 1903 வரை கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1903 முதல் 16 ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பணி புரிந்தார்.
 பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. பல இடர்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் விடாப்பிடியாக முயன்று 1887-ல் சிந்தாமணியை வெளியிட்டார்.
 அன்று முதல் இறுதி மூச்சு வரையில், ஆங்காங்கே மறைந்து கிடந்த தமிழ்த் தாயின் ஒவ்வொரு அணி கலனாகத் தேடித் தேடிக் கண்டுபிடித்து, புதுப்பித்து தமிழன்னையை அலங்கரித்தார். இவரது காலத்துக்கு முன்பு பெரும் புலவர்களின் படைப்புகள், சங்க நூல்கள், அகநானூறு, புறநானூறு, மணிமேகலை ஆகியவை வெறும் பெயரளவிலேயே இருந்தன.
 அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித் தேடி அச்சிட்டு, பதிப்பித்தார். இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன் மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டுள்ளார். 3000க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்து பிரதிகளையும் அரும்பாடுபட்டு சேகரித்தார்.
 சமண இலக்கியங்களோடு சங்க இலக்கியங்கள், காப்பி யங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் அடங்கிய ஏராளமான ஓலைச் சுவடிகளையும் தேடித் தேடி , அவற்றை பகுத்து, வேறுபடுத்தி, தொகுத்து, பிழைதிருத்தி அச்சிலேற்றினார். இதன் மூலம் இவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார்.
 பின்னாளில் அவற்றுக்கு உரையும் எழுதினார். சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும், பழையதும் புதியதும், நல்லுரைக் கோவை உள்ளிட்ட பல உரைநடை நூல்களை யும் எழுதி வெளியிட்டுள்ளார். கருத்தாழமும், நகைச்சுவை யும் கலந்து இழையோடப் பேசும் திறன் கொண்டவர்.
 தமிழ் இலக்கியத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு முனை வர் பட்டம் வழங்கியது. இதைத் தவிர மகாமகோபாத்தியாய, தக்ஷிண கலாநிதி ஆகிய பட்டங்களும் பெற்றார்.
 இவரைச் சிறப்பித்து இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது. சென்னை பெசன்ட் நகரில் இவரது பெயரில் நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தாத்தா என்று போற்றப்படும் இவர், 1940-ஆம் ஆண்டு 84-ஆம் வயதில் மறைந்தார்.***
****
மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர், சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் தேவநேசன். 5 வயதில் பெற்றோரை இழந்தார். தமக்கையால் வளர்க்கப்பட்டார். சோழபுரத்தில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். ஆம்பூரில் நடுநிலைப் பள்ளி ஒன்றிலும், சி.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
 பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவர். 1919-ல் ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே. சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு, தென்மொழி என ஏராளமான கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை.
 பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள், கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர்.
 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் ரீடராக (1956 1961) பணி யாற்றினார். வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில்கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை.
 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ் கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.
 ‘தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.
 ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர். ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர்.
 கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டியவர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
 தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்.
*****
தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத் தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவருமான பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் (Pammal Vijayaranga Sambandha Mudaliar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பிறந் தவர். இவரது அப்பா தமிழ் ஆசிரியராக, பிறகு பள்ளி ஆய்வாளராக இருந்தவர். புத்தகங்களையும் வெளி யிட்டுவந்தார். அவர்கள் வீட்டில் தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் ஏராளமாக இருந்தன.
 சிறு வயது முதலே, புத்தகங்களை ஆர்வத் துடன் படிப்பார். புராணக் கதைகளை அம்மா கூறு வார். கோவிந்தப்பர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரியில் பயின்றார்.
 பிறகு, சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். நீதிபதியாகவும் பணியாற்றினார். ஆங்கில நாடகங்கள் அதிகம் பார்ப்பார். 1891-ல் பெல்லாரியில் இருந்து வந்திருந்த ஒரு நாடகக் குழுவில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள் இருப்பதை அறிந்ததும், இவருக்கு நாடகத்தின் மீதான ஈர்ப்பு அதிகமானது.
 சுகுண விலாஸ் சபா என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். சென்னைக்கு வந்த பார்சி நாடகக் குழுவினரின் பிரம்மாண்டமான திரை மற்றும் மேடை அமைப்புகள், சிறப்பான உடை அலங்காரம் இவரைப் பெரிதும் கவர்ந்தன. தீவிர முயற்சி எடுத்து தன் நாடகங்களிலும் அதை செயல்படுத்திக் காட்டினார்.
 தெருக்கூத்துதான் நாடகம் என்ற நிலையை மாற்றி, நகரங்களில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து பல வகையான நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும் பார்க்க வைத்தார். ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், எம்.கந்தசாமி முதலியார் ஆகியோரையும் நடிக்கவைத்தார்.
 சுப முடிவு என்ற வழக்கத்தை மாற்றி, சோக முடிவு கொண்ட நாடகங்களையும் அரங்கேற்றினார். நடிப்பவர்களை ‘கூத்தாடிகள்’ என்று அழைக்காமல் ‘கலைஞர்கள்’ என்று அழைக்கச் செய்தார்.
 22-வது வயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது. ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற ஹாம்லெட், ஆஸ் யு லைக் இட், மெக்பெத் உட்பட பல நாடகங்களை அவற்றின் நயம், சுவை குறையாமல் தமிழ் நாடகங்களாக ஆக்கினார்.
 ஆங்கில, வடமொழி நாடகங்களை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மேடையேற்றினார். மொத்தம் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அதில் 850 முறை மேடையேறிய மனோகரா, 300 முறை நடிக்கப்பட்ட லீலாவதி-சுலோசனா குறிப்பிடத்தக்கவை.
 இவரது ‘இந்தியனும்-ஹிட்லரும்’, ‘கலையோ காதலோ’ உள்ளிட்ட 30 தமிழ் நூல்கள், அமலாதித்யா, லார்ட் புத்தா உள்ளிட்ட 30 ஆங்கில நூல்களை தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியுள்ளது.
 சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண் விருது, நாடகப் பேராசிரியர் விருது உட்பட பல்வேறு விருது கள், பட்டங்களைப் பெற்றுள்ளார். நாடக உலகின் பிதாமகர் என்று போற்றப்பட்ட இவர் 91 வயதில் மறைந்தார்.