செவ்வாய், 9 டிசம்பர், 2014

மீத்தேன் எடுக்கும் திட்டம்

மீத்தேன் எடுக்கும் திட்டம் தொடர்பாக, பெட்ரோலியம் மண்ணியலாளர் முனைவர் கே.என்.ஜெயராமன் சில மாதங்களுக்கு முன் ‘தி இந்து’ தமிழில் எழுதிய சிறு கட்டுரை:
மீத்தேன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!
தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் விளைநிலங்களுக்கு அடியில் உள்ள நிலக்கரிப் படிமத்திலிருந்து, மீத்தேன் வாயுவை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். நிலத்தடியில் உள்ள தண்ணீரை வெளியேற்றினால்தான் மீத்தேன் வாயுவை எடுக்க முடியும். அதனால், முதலில் தண்ணீரை வெளியேற்றுவார்கள். நிலத்தடி நீர் மொத்தமாக வறண்டுவிடும். உடனே, அருகில் உள்ள கடல் நீர் நிலத்தடியில் ஊடுருவி, நிலத்தடி நீர் உப்பாகிவிடும்.
நிலக்கரியை எடுக்க ஆபத்தான ரசாயனங்கள் கலந்த கலவையைச் செலுத்தி, பாறைகளை விரிவடையச் செய்வார் கள். இதில் 30% ரசாயனக் கழிவுநீர் உள்ளேயே தங்கிவிடும். வெளியேற்றப்படும் கழிவுநீர் சுற்றுச்சூழலையும், மண் வளத்தையும் பாதிக்கும். இதனால், விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்படும். புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் ஏற்படும். திடீர் தீ விபத்துகளும், சிறிய அளவிலான நில நடுக்கங்களும் ஏற்படலாம்.
அமெரிக்கா, கனடா நாடுகளில் இந்தத் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்த்துள்ளேன். அங்கு என். அல்பெர்டா, அதபாஸ்கா காட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கு குட்டைகளில் கலந்த ரசாயனக் கழிவு நீரைக் குடித்த லட்சக் கணக்கான பறவைகள் இறந்து விட்டன. அங்கு, இந்தத் திட்டத்துக்கு எதிராக மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்தது சரியானதே. முழுவதுமாக இந்தத் திட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக