திங்கள், 8 டிசம்பர், 2014

கிருஷ்ணய்யரின் -மரண தண்டனைக்கு எதிராக இந்தியாவில் தொடர்ந்து குரல் கொடுத்தவர்களில் ஒருவரான

மரண தண்டனைக்கு எதிராக இந்தியாவில் தொடர்ந்து குரல் கொடுத்தவர்களில் ஒருவரான வி.ஆர். கிருஷ்ணய்யரின் மரணம், மனித உரிமைகளில் ஈடுபாடு கொண்டிருக்கும் அனைவருக்கும் பேரிழப்பு.
தனது நூறாண்டு வாழ்க்கையில் நம் சமூகத்தில் கிருஷ்ணய்யர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. மனித உரிமைகளுக்கு எந்தத் தீங்கு ஏற்பட்டாலும் அதற்கு எதிராக வரும் முதல் குரல் அவருடையது. பிறருடைய குரல்களைவிட கிருஷ்ணய்யரின் குரலுக்குக் கூடுதல் பலம் ஒன்று இருக்கிறது. அவரது நெடிய வாழ்க்கையின் சாரமாக அவர் மீது சமூகமும் அரசுகளும் நீதித்துறையும் கொண்டிருந்த மதிப்புதான் அது. அவரது இறப்பின்போது, ஒடுக்கப்பட்ட மக்களும், பாதிக்கப்பட்ட மக்களும் செலுத்திய அஞ்சலி, சமூகத்தில் அவருடைய இடத்தை உறுதிப்படுத்துகிறது.
கிருஷ்ணய்யரின் மறைவையொட்டி மரண தண்டனை குறித்த விவாதங்களை மீண்டும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
“மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்தே அகற்ற வேண்டும் என்று அதிகார மட்டத்துக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன். அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் எந்த மரண தண்டனையும் கொலையன்றி வேறென்ன?... வாழ்வதற்கான உரிமையை அரசு பறித்துவிட முடியாது. கிட்டத்தட்ட 90% உலக நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருக்கும் நிலையில், மரண தண்டனை என்ற படுகொலைக்கு எதிராகக் குரல்கொடுக்கும்படி என் நாட்டு மக்களிடமும், உலக நாடுகளிடமும் வேண்டிக்கொள்கிறேன்” என்று கிருஷ்ணய்யர் பலமுறை கேட்டுக்கொண்டார். எனினும், அவருடைய குரல் இந்திய அரசின் காதில் விழுந்ததுபோல் தெரியவில்லை.
சமீபத்தில்கூட மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை நடத்திய பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐ.நா. சபையின் 193 உறுப்பினர்களில் 114 பேர் தீர்மானத்தை ஆதரித்தார்கள். 36 பேர் எதிர்த்து வாக்களித்தார்கள். 34 பேர் வாக்களிப்புக்கே வரவில்லை. மரண தண்டனை ஒழிப்புக்கு எதிராக வாக்களித்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதைச் சொல்லத் தேவையில்லை.
சட்டம் என்பதை கிருஷ்ணய்யர் உயிரற்றதாகப் பார்க்கவில்லை. அதற்கு மனித முகம் வேண்டும் என்று கருதியவர் அவர். “உயிர் என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது, அது கடவுளால் மட்டுமே பறிக்கப்பட முடியும். ஆனால், அரசாங்கம் ஓர் உயிரைப் பறிப்பது என்பது மனிதத்தன்மையற்ற செயல். மரண தண்டனையை ஒழித்துக் கட்டுவதில் காந்தியின் தேசம் ஒரு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்” என்று அவர் சொன்னது சட்டப் புத்தகங்களில் இடம்பெற வேண்டியது.
அறத்தை அடித்தளமாகக் கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களின் காலகட்டம் எப்போதோ முடிந்துபோய்விட்டதென்றாலும் வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற வெகுசிலரால் அறத்தின் மீதான நம்பிக்கையை சமூகம் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் மறையும்போது அறம் சார்ந்து சமூகம் நிராதரவாக ஆகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
“வாழ்க்கை என்பது புனிதமானது; இதுதான் நமது முக்கியக் குறிக்கோள். இதைக் காப்பாற்றுவதே உன்னதமான கடமை” என்பது கிருஷ்ணய்யரின் வாசகம். மரண தண்டனைக்கு எதிரான தொடர் ஓட்டத்துக்கு இந்த வாசகத்தை விடப் பொருத்தமான தாரக மந்திரம் ஒன்றைச் சொல்லிவிட முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக