ஆச்சர்யமூட்டும் வகையில் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில், ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி. கருத்துக் கணிப்புகள் அனைத்துமே ‘இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது, இழுபறி நிலைமையே ஏற்படும், சிறிய கட்சிகள் ஆதரிக்கும் கட்சியால்தான் ஆட்சியை அமைக்க முடியும்’ என்று கூறிய நிலையில், மீண்டும் ஆளுங்கட்சியையே ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள் மக்கள்.
நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 331 தொகுதிகளில் வென்றுள்ளது. எட் மிலிபாண்ட் தலைமையிலான லேபர் கட்சியால் 232 தொகுதிகளைத்தான் பெற முடிந்திருக்கிறது. ஸ்காட்லாந்தின் 59 தொகுதிகளில் 56-ல் ஸ்காட்லாந்து தேசிய கட்சி வென்றதால் லேபர் கட்சிக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டுவிட்டது. இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளிலும் லேபர் கட்சிக்குக் கணிசமான தோல்வி ஏற்பட்டிருக்கிறது. இத்தோல்விகளுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று கட்சித் தலைமைப் பதவியை மிலிபாண்ட் ராஜிநாமா செய்திருக்கிறார். கடந்த முறை ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், வாக்காளர்களிடம் நம்பகத்தன்மையை இழந்த லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு (எல்.டி.பி.) மிகப் பெரிய தோல்வி ஏற்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலில் 57 தொகுதிகளில் வென்ற அது, இப்போது வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் இங்கிலாந்து உறவை பிரதான அரசியலாக்கிவந்த யுனைடெட் கிங்டம் இன்டிபென்டன்ஸ் கட்சியும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. கட்சி ஒரே ஒரு இடத்தை வென்றிருக்கும் சூழலில், அதன் தலைவர் நைஜல் ஃபரேஜ் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.
இந்த முடிவுகள் எல்லாம் சில செய்திகளைச் சொல்லாமல் இல்லை.
இங்கிலாந்தில் இப்போது நிலவரம் அவ்வளவாகச் சரியில்லை. அரசு தேசிய சுகாதார திட்டத்துக்கு ஒதுக்கும் நிதி போதவில்லை. ஊழியர் பற்றாக்குறையால் திண்டாடுகிறது சுகாதாரத் துறை. உயர் கல்வியோ நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனியாக மாறிக்கொண்டிருக்கிறது. நகரமயமாக்கலின் வேகத்துக்கு கட்டமைப்புகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. குடியிருக்க வீடுகள் கிடைப்பது பெரும் பாடாகிவருகிறது. போக்குவரத்து, மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்துகொண்டே வருகின்றன.
சுமார் 10 லட்சம் பிரிட்டிஷ் மக்கள் அன்றாடம் அரசு தரும் இலவச உணவைத்தான் நம்பியிருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் நாட்டின் வறியவர் எண்ணிக்கை 8 லட்சம் அதிகரித்திருக்கிறது. அதாவது 1.32 கோடியாக இருந்த வறியவர்களின் எண்ணிக்கை 1.4 கோடியாக உயர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் இடையில் ஆட்சியில் இருந்த கட்சியே அதிக தொகுதிகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் பொருளாதார நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டி ஏற்கெனவே சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அரசு, மேலும் மக்கள் நலத்திட்டங்களில் 1,200 கோடி பவுண்ட் அளவுக்கு ஒதுக்கீட்டை வெட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியும் வென்றிருக்கிறது என்றால், அது சுட்டிக்காட்டும் செய்தி என்ன? எதிர்க் கட்சிகளால் மக்கள் ஏற்கக் கூடிய அளவில் ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைக்க முடியவில்லை. எதிர்க் கட்சிகளுக்கு இது பெரிய பாடம்.
இந்த வெற்றியால் ஆளும் கட்சியும் பெரிய கொண்டாட்டத்தில் இறங்கிவிட முடியாது. தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து நீடிப்பதா, வெளியேறுவதா எனும் முடிவெடுப்பது உட்பட நிறைய சவால்கள் அரசுக்குக் காத்திருக்கின்றன. வெற்றி சவால்களையே பரிசாகக் கொடுத்திருக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக