வியாழன், 16 ஜனவரி, 2014

வள்ளலார்

நன்றி ஹிந்து நாளிதழ் : (17-ஜன-2014):
ராஜேஸ்வரி ஐயர்

இராமலிங்கம் கல்வி கற்கச் சென்றபோது நிகழ்ந்த நிகழ்ச்சி ஓன்று அவர் குழந்தை ஞானி என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அது, ஆசிரியர் சபாபதி சக மாணவர்களுடன் ராமலிங்கத்தை அமரச் சொன்னார் . இராமலிங்கமோ தனியாக அமர்ந்து கொண்டார் . அன்று இராமலிங்கத்திற்கு முதல் நாள் முதல் பாடமாகும். ஆசிரியர் சொல்லச் சொல்ல அனைத்து மாணவர்களும் சொல்ல வேண்டும். ஆசிரியர் சொன்ன பாடல்.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் .
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்

என்ற பாடலை ஆசிரியர் சொல்ல, ராமலிங்கம் தவிர அனைத்து மாணவர்களும் திரும்பச் சொன்னார்கள். ஆனால் இராமலிங்கம் மட்டும் சொல்லவில்லை. அதற்கு மாறாக `வேண்டாம்’ போன்ற சொல் அமங்கலம் என்றும், தன்னால் அதனை மாற்றிச் சொல்ல முடியும் என்றும் கூறி ஆசிரியரின் அனுமதியுடன் வேண்டும் வேண்டும் என்று முடியும் பாடலை பாடிக் காட்டினார் எனக் கூறுகின்றனர்.

ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசுவார்தம்
உறவு கலவாமை வேண்டும்.

அதன் பின் அவர் எந்த பள்ளியிலும் பயின்றதாகச் செய்திகள் இல்லை.

அச்சிறு பருவத்திலே சாதி ஆசாரப் பொய் என்று அறிவித்து அவைகளை பின்பற்றாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்தார். உலகில் உள்ள பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை, முதலிய இச்சைகளில் தன் அறிவைச் செலுத்தாது இருந்தார். அனைத்து உயிர்களையும் சமமாக நோக்கினார், அனைத்து உயிர்களும் இன்பம் அடையச் சுத்த சன்மார்க்கத் தனிநெறியினை அமைத்தார். தனது ஒன்பதாவது வயதிலேயே இறைவன் குறித்த சொற்பொழிவுகளை ஆற்றினார்.

பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் அவரது சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்து கொண்டார். இல்வாழ்க்கையில் இருந்த அவர் 50 ஆண்டுகள் பூத உடலில் வாழ்ந்து, “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என காருண்யத்தை பூமியில் நிலைநாட்டினார், திருவருட் பிரகாசர் எனும் வடலூர் வள்ளலார். இவர் மனித வாழ்வின் மேன்மைக்கு உருவாக்கிய தத்துவங்களை இத்தைப்பூச திருநாளில் நினைவு கொள்வோமே. 

இயற்கையே இறைவன். 
சிவப்பரம்பொருளாய் உள்ள இறைவனை, உருவ வழிபாட்டில் நிறுத்தல் கூடாது.
சிறு தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலிகள் கொடுத்தல், சடங்குகள் கிரியைகள் செய்தல் போன்ற அனைத்தையும் நீக்குதல் வேண்டும். 
இறந்தவர்களை மண்ணில் நல்லடக்கம் செய்க, தீயிட்டுச் சுடல் வேண்டா. 
மாதந்தோறும் வரும் பூச நட்சத்திர நன்னாளில் இல்லங்களிலும், பொது இடங்களிலும் கூட்டு வழிபாடு, சோதி வழிபாடு நிகழ்த்தலாம், 
அருட்பா அகவல் ஓதலாம், ஏழைகட்கு அன்னமிடலாம். 
குழந்தைகளுக்குக் கல்வியுதவி செய்யலாம். 
ஆண்டுதோறும் தை மாதப் பூச நட்சத்திரத்தன்று வடலூர் சத்திய ஞான சபைக்குச் சென்று சோதி வழிபாடு செய்யலாம். 
எப்போதும், எவ்விடத்தும், “பசித்திரு”, “விழித்திரு” , “தனித்திரு” என்ற பெருநெறியைக் கைக்கொள்ளலாம். 
வழிபடும் முன்னும் பின்னும், “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி” என்ற மகா மந்திரத்தை மனம் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக