From Hindu Magainze :
விருதுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்படி என்னதான் உறவோ?
‘‘விருதுகள் சராசரிகளைச் சிறப்பிக்கிறது, உயர்ந்தவர்களை வெட்கமடைய வைக்கிறது, தாழ்ந்தவர்களால் அவமானத்துக்குள்ளாகிறது’’ என்ற ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் வரிகளைவிட விருதுகளின் ‘பெருமையை’ சிறப்பாகக் கூறிவிட முடியாது. விருதுகள் மனிதர்களைக் கௌரவிப்பதைவிட, மனிதர்கள்தான் (சில சமயங்களில்) விருதுகளைக் கௌரவிக்கிறார்கள். மகத்தான மனிதர்கள் யாரும் அவர்கள் பெற்ற விருதுகளுக்காக மக்களால் போற்றப்படுவதோ, நினைவுகூரப்படுவதோ இல்லை. சொல்லப்போனால், அவர்கள் ஏதாவது விருதுபெற்றார்களா இல்லையா என்பது அவர்களுக்கோ அல்லது விருதுகளின் மதிப்பை அறிந்தவர்களுக்கோ ஒரு பொருட்டே இல்லை. ஆனாலும், பொதுமக்கள் மத்தியிலும், சில சமயங்களில் அறிவுஜீவிகள் மத்தியிலும் விருதுகள் பெரும் சலசலப்பை உண்டாக்குகின்றன. விருதுகளால் கிடைக்கும் ஒரே பலன், சில சமயங்களில் சரியாக வழங்கப்படுகிறபோது, அதிகம் பிரபலமாகாத மகத்தான மனிதர்களை அவை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுவதுதான். அரசுகள் வழங்கும் விருதுகளில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் விருப்புவெறுப்புகள் வெளிப்படுவது இயல்பானது. உலகெங்கும் அரசுகள் விருதுகளைத் தங்களுக்குச் சாதகமானவர்களைக் கௌரவிக்கவே பயன்படுத்துகின்றன. இந்திய அரசும் அப்படியே. அபூர்வமாக விதிவிலக்குகளும் உண்டு.
தியான் சந்த், விஸ்வநாதன் ஆனந்த்?
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அறிவியல் அறிஞர் சி.என்.ஆர். ராவ் ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, வழக்கம்போல் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. கலை, இலக்கியம், அறிவியல், பொதுச்சேவை ஆகிய துறைகளில் மாபெரும் பங்களிப்பு செய்தவர்களுக்கே பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக அரசு கூறுகிறது. இந்த விருதைப் பெற்ற முதல் மூவரும் - ராஜாஜி, சி.வி.ராமன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தற்செயலானதே.
சச்சின் டெண்டுல்கருக்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சில ஆண்டுகளாகவே வந்துகொண்டிருந்தது. ஆனால், பாரத ரத்னா பெறுவதற்கான தகுதிப் பட்டியலில் விளையாட்டுத் துறை இல்லாதிருந்தது, அவருக்கு இந்த விருதை வழங்குவதற்கான தடையாக இருந்தது. ஆகவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதற்கான விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த விருதுக்கு சச்சின் முழுத் தகுதியானவர் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. இதுவரையிலான உலகின் ஆகச் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்கள் என்ற பட்டியலை எந்த நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் நிபுணர் தயாரித்தாலும் அதில் சச்சினுக்கு ஓர் இடம் இருக்கும். ஆனால், சச்சினுக்கு எல்லாருடைய பட்டியலிலும் முதலிடம் இருக்குமா என்று சொல்ல முடியாது. அதைப் போலவே இதுவரையிலான ஆகச் சிறந்த ஹாக்கி வீரர்கள் ஐந்து பேர் என்ற பட்டியலை எந்த நாட்டைச் சேர்ந்த ஹாக்கி நிபுணர் தயாரித்தாலும் அதில் ஓர் இடம் மட்டுமல்ல, முதலிடமே தியான் சந்துக்குத்தான் இருக்கும். கிரிக்கெட்டில் சச்சினின் சாதனைகளோடு ஒப்பிடுகிறபோது, ஹாக்கியில் தியான் சந்தின் சாதனைகள் ஒரு படி அதிகம் என்று வாதிடுவோர் உண்டு. விளையாட்டுத் துறையினருக்கு பாரத ரத்னா அளிப்பது என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டவுடன் அந்த விருது அளிக்கப்பட்ட முதல் விளையாட்டு வீரராக தியான் சந்த் ஏன் இருந்திருக்கக் கூடாது? அவருக்கு அளிப்பதன் மூலம் தனக்கென்ன பெரிய லாபம் என்று இன்றைய ஆளும் கட்சி நினைத்திருந்தால் ஆச்சர்யம் இல்லை. இன்றைய இந்தியர்களால் மறக்கப்பட்டுவிட்ட, ஒதுக்கப்பட்டுவிட்ட விளையாட்டில் மேதையாக இருந்தது தியான் சந்தின் குற்றம்போலும்.
அதே போன்று நமது சமகாலத்திய மற்றொரு விளையாட்டு மேதையையும் பாரத ரத்னா விஷயத்தில் இந்த அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை; தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். இதுவரையிலான, உலகின் ஆகச் சிறந்த முதல் ஐந்து செஸ் வீரர்கள் என்ற பட்டியலை யார் தயாரித்தாலும் அதில் ஆனந்துக்கு ஓர் இடம் இருக்கும். ஆனால், சச்சின்போல் கோடிக் கணக்கான ரசிகர்கள் இல்லையென்ற காரணத்தினாலோ என்னவோ, இந்திய அரசாங்கம் அவரது பெயரையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கோடிக் கணக்கான ரசிகர்களைப் பெற்றிருப்பது மட்டுமே பாரத ரத்னா விருதுக்கான தகுதிகளுள் ஒன்றாக இருக்க முடியுமா? விளையாட்டுத் துறை இதுவரை ஒதுக்கப்பட்டிருந்தது தவறே, அதற்காகத் திருத்தம் கொண்டுவரப்பட்டது சரியானது. ஆனால், தியான் சந்தும் ஆனந்தும் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஒவ்வொரு ஆளும் கட்சிக்கும் இருக்கும் அரசியல் கணக்குகளையே காட்டுகிறது.
இளையராஜா?
கலை உலகைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்ட விஷயத்திலும் அப்படியே. பாரத ரத்னா விருதுக்கு இந்தி சினிமா உலகப் பாடகியான லதா மங்கேஷ்கர் எவ்வளவு தூரம் தகுதியானவர் என்பதுபற்றிச் சில கருத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும். ஆனால், தமிழ் சினிமா இசை மட்டுமின்றி, மேற்கத்திய செவ்விய இசையுலகிலும் சாதனை புரிந்திருக்கும் இசை மேதை இளையராஜா இதுவரையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்? ராயல் பில்ஹார்மனிக் இசைக் குழுவுக்கான சிம்பொனி இசையமைத்த, வெள்ளையர் அல்லாத முதல் இசை மேதை இளையராஜாதான். ஆனால், இவரது சாதனைகள் தொடர்ந்து வந்த இந்திய அரசாங்கங்களுக்குப் பெரிதாகத் தெரியாததற்கான காரணம்?
வெளிநாட்டினரின் அங்கீகாரம்
சினிமா மேதை சத்யஜித் ராய், பொருளாதார மேதை அமார்த்திய சென் ஆகியோர் விஷயங்களில், அவர்கள் மேலை நாடுகளால் கௌரவிக்கப்பட்ட பிறகே இந்திய அரசு விழித்துக்கொண்டது. வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட பின்னரே இந்திய அரசு விழுந்தடித்துக்கொண்டு, மரணப்படுக்கையில் இருந்த சத்யஜித் ராய்க்குப் பாரத ரத்னா விருது அளித்தது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற பின்னரே சென்னுக்கு பாரத ரத்னா அளிக்கப்பட்டது. ஆக, வெளிநாட்டவர்கள் இந்திய அரசாங்கங்களுக்கு மேதைகளை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது போலும்.
அறிவியலாளர்களுக்குப் பாரத ரத்னா வழங்கும் விஷயத்தில்கூட சுப்ரமணியன் சந்திரசேகர், சத்யேந்திர நாத் போஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற மகத்தான அறிவியல் மேதைகள் ஏன் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதும் தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக