வியாழன், 16 ஜனவரி, 2014

உழவுக்கு வந்தனை செய்வோம் (சொல்லில்); வஞ்சனை செய்யோம்(செயலில் )

நன்றி தினகரன் ளிதழ் : (17-ஜன-2014):
Editorial : 

மத்திய அரசின் தலைமை பதிவாளர் சமீபத்தில் சென்சஸ் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார். கடந்த 2001 முதல் 2011 வரை உள்ள பொதுவான தகவல் தொகுப்பு. விவசாயத்தை பற்றி சொன்ன தகவல்கள் பெரும் அதிர்ச்சி தரத்தக்கவை. விவசாயம் செய்யும் விவசாயிகள் கணிசமான அளவு குறைந்து விட்டனர். விவசாய தொழிலாளர்கள் மட்டும் அதிகரித்துள்ளனர் என்பது தான் அது.ஒரு பக்கம் அதிர்ச்சியானது; இன்னொரு பக்கம் வேதனையானது. விவசாய நிலத்தை விற்று விட்டு, விவசாய கூலியாக சேருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தான் இன்னமும் சோகம். 

ஒரு காலத்தில் தொழில் சார்ந்த வகையில் விவசாயிகள் தான் இரண்டாவது பெரிய ஜனத்தொகையாக இருந்துள்ளனர். அதாவது, 12 கோடி பேர் இருந்துள்ளனர். ஆனால் இப்போது 2001ல்  7 சதவீதம் குறைந்து போய் விட்டனர்.கடந்த 50 ஆண்டுகளில் மொத்த ஜனத்தொகையிலும் விவசாயிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து தான் வந்துள்ளது. ஆனால், ஆபத்தான நிலையை உணர்த்தும் வகையில் குறைந்துள்ளது கடந்த 10 ஆண்டில் தான். 

கடந்த பத்தாண்டில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் இடையே எண்ணிக்கை வித்தியாசம் அதிகம். நாடுமுழுவதும் 26 கோடி விவசாயிகள் உள்ளனர். இந்த காலகட்டத்தில் 14 லட்சம் தொழிலாளர்கள் என சென்சஸ் கூறியுள்ளது. இந்த தொழிலாளர்களிலும் கடந்த 12 மாதங்களில் ஆறு மாதங்கள் விவசாய வேலை செய்தது வெறும் 2.6 சதவீதம் தான் என்பதிலேயே விவசாய பணிகள் எந்த அளவுக்கு நடந்துள்ளது  என்பது தெளிவாகும். 

பெண் தொழிலாளர்கள் விவசாயத்தில் வெகுவாக குறைந்து வருகின்றனர். டெல்லியில் தான் மிகவும் குறைவு. பஞ்சாப், சண்டிகார் போன்ற மாநிலங்களில் பெண் விவசாய தொழிலாளர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த பத்தாண்டில் 8 லட்சத்து 67 ஆயிரம் விவசாயிகள், தங்கள் நிலத்தை விற்றுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேல் விவசாய கூலியாகவே சேர்ந்துள்ளனர்.ரியல் எஸ்டேட்டுக்காக  நிலங்களை நல்ல விலைக்கு விற்று விட்டனர் என்று மட்டும் அவர்களை குற்றம்சாட்ட முடியாது. 

விவசாய பொருட்களுக்கு நியாயமில்லாத  விலை நிர்ணயம், இடுபொருட்கள் விலை உயர்வு, இறக்குமதி கொள்கை, தொழில்மயமாகும் நிலை உட்பட பல காரணங்கள் தான், பல விவசாயிகளை நிலத்தை விற்று விட நேர்ந்தது என்றால் அதுவே உண்மை.தமிழகத்தில் 2001ல் 49 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டு இருந்தனர். 2011ல் எடுத்த சர்வேயில் இது 42.1 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்தம் 3 கோடியே 29 லட்சம் பேர் விவசாய தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இதில் பாதிப்பேர் பெண்கள். ஆனால் இப்போது கணிசமாக குறைந்து விட்டது இந்த எண்ணிக்கை.உழவுக்கு வந்தனை செய்வோம்; வஞ்சனை செய்யோம் என்று இனி நினைக்கும் நாள் வருமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக