திங்கள், 1 ஜூன், 2015

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் -- கல்வி மற்றும் அறிவியல்

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்


உலகில் வாழும் மக்களில் 17% பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆனால், பல்வேறு நோய்களால் வாழும் மக்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டாலோ, மக்கள்தொகை விகிதத்தைவிட அது அதிகம். உதாரணமாக, தொழுநோயாளிகளில் 68%, காசநோயாளிகளில் 30% பேர் இந்தியர்கள். பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களில் 20% பேர் இந்தியாவில்தான் இறக்கின்றனர். தடுப்பூசிகளின் மூலம் தடுக்கப்படக்கூடிய நோய்களால் உலகில் இறக்கும் குழந்தைகளில் 26% குழந்தைகள் இந்தியக் குழந்தைகள். ஒவ்வொரு நாளும் இங்கு 160 பெண்கள் கர்ப்பம் தொடர்பான காரணங்களால் இறக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கு 7.6 லட்சம் பச்சிளங்குழந்தைகள் பிறந்த 28 நாட்களுக்குள்ளேயே இறந்துவிடுகின்றன. அதேசமயம், இது உலக ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் வாழும் நாடு. ஆக, இந்திய அரசு சுகாதாரத் துறையில் செயல்பட வேண்டிய வேகமும் தீவிரமும் அதிகம். ஏழை எளிய மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும் எனில், அதற்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வது அவசியம்.
பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சுகாதாரத் துறையைப் பற்றி நிறையப் பேசியிருந்தது. ஆனால், செய்ததோ குறைவு. முன்னதாக, மன்மோகன் சிங் அரசு 2014 -15 இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்கிய நிதியில் 20%-ஐ (ரூ. 2,500 கோடியை) ஆட்சிக்கு வந்ததுமே குறைத்தது மோடி அரசு. பின்னர், அது உருவாக்கிய பட்ஜெட்டிலும் ரூ. 6,000 கோடியைக் குறைத்தது. 2014-15-ல் மக்கள் நல்வாழ்வுத் துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 39,238 கோடி. 2015-16-ல் இது ரூ. 33,152 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது நமது சுகாதாரத் துறைக்குப் பெரும் பாதிப்பை உருவாக்கும்.
ஒருபுறம், இப்படிப் பொதுமக்களின் சுகாதாரத்தில் தன்னுடைய பங்களிப்பைக் குறைத்துக்கொள்ளும் அரசு, மறுபுறம் மக்கள் மருத்துவத்துக்காகச் செலவிடும் தொகையும் உயர வழிவகுக்கிறது. அதாவது, மருத்துவத்தைக் காப்பீட்டு நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கும் நடவடிக்கைகளைத் தூக்கிப் பிடிக்கிறது. உதாரணமாக, முன்னதாக, ரூ.15,000 பிரிமியம் செலுத்தினாலே, மருத்துவக் காப்பீட்டுக்கான வருமான வரிவிலக்கு வழங்கப்பட்டது. இப்போதோ அது ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. பிரிமியத் தொகை அதிகரிக்கவும் மக்கள் கூடுதல் செலவை நோக்கி நகரவும் இது வழிவகுக்கும். இதேபோல, தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. திட்டத்தை ஒழித்து, அதற்கு மாற்றாக தனியார் காப்பீட்டை ஊக்கப்படுத்த மத்திய அரசு முயல்கிறது (1.86 கோடி தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்த 7.21 கோடிப் பேரும் பயனடையும் திட்டம் இ.எஸ்.ஐ.).
மோடி அரசின் `தேசிய நல்வாழ்வுக் கொள்கை 2015' மக்கள் விரோதக் கொள்கைகள் பலவற்றைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, அரசாங்கமே நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்குப் பதில், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதியை அதிகரிக்க தனித் தீர்வை வரி (செஸ்) வசூலிக்க இது பரிந்துரைக்கிறது. இதெல்லாம் எரியும் பிரச்சினையில் எண்ணெய் ஊற்றும் செயலாக அமையும்.
அதேபோல, மருந்து விலை நிர்ணய தேசிய ஆணையத்தின் விலை நிர்ணய அதிகாரம் பறிக்கப் பட்டிருக்கிறது மிகத் தவறான முடிவு. 509 மருந்துகளின் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது மக்களைப் பெரும் பாதிப்பில் தள்ளும். தொடர்ந்து, இத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர முயல்வது, நமது மருந்து உற்பத்தி நிறுவனங்களைப் பெரிதும் பாதிக்கும். இந்தியாவில், 70%-க்கும் மேலான மருத்துவ உபகரணங்களை ரூ. 10 கோடிக்கும் குறைவான முதலீட்டில் இயங்கும் சிறிய நிறுவனங்களே உற்பத்தி செய்கின்றன. இந்நிலையில், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தித் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவு நமது இந்திய நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவதோடு, இத்துறையைப் பெருநிறுவனங்களின் கைகளுக்குக் கொண்டுசென்றுவிடும்.
இந்தியாவில் 80% புறநோயாளிகள் சேவையும் 60% உள்நோயாளிகள் சேவையும் தனியார் மருத்துவத் துறையால்தான் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மூன்றாம் நிலை உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை முழுமையாகத் தனியார்மயமாக்கிடவும், அரசு மருத்துவ மனைகளின் பல்வேறு சேவைகளை வெளிக்கொணர்வு மூலமாக வழங்கவும் பாஜக அரசின் தேசிய நலவாழ்வுக் கொள்கை 2015 வலியுறுத்துகிறது. கூடவே, இப்போது 14% ஆக இருக்கும் தனியார் மருத்துவத் துறையின் வளர்ச்சியை அடுத்த 10 ஆண்டுகளில் 21% ஆக அதிகரிக்க அரசு விரும்புவதாகச் சொல்கிறார்கள். இதன் விளைவுகளையெல்லாம் நினைத்தால் பெரும் அச்சமும் கவலையும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மோடி அரசின் முதலாண்டில் சுகாதாரத் துறையில் நடந்திருக்கும் சந்தோஷமான செயல்பாடு என்றால், அனைத்து மாநிலங்களிலும் ‘எய்ம்ஸ்’ போன்ற மருத்துவமனைகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கையைச் சொல்லலாம். எண்ணற்ற மக்களுக்கு இது நல்வாழ்வு அளிக்கும். இந்த மருத்துவமனைகளில் ஒன்று தமிழகத்தில் அமையவிருப்பது இரட்டை மகிழ்ச்சி தருவது!
- டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம்,
தொடபுக்கு: daseindia2011@gmail.com

************

பாஜகவின் 2014 தேர்தல் அறிக்கையில் எனக்குப் பிடித்திருந்த ஒரே அம்சம், அதன் கல்வி மற்றும் அறிவியல் பற்றிய பார்வைதான்.
40 பக்க அறிக்கையில் அது கல்விக்கும் அறிவியலுக்கும் 5 பக்கங்கள் ஒதுக்கியிருந்தது. என்ன செய்யப்போகிறோம் என்பதைச் சற்று விரிவாகவே சொல்லியிருந்தது. குறிப்பாக, கல்வியைப் பொறுத்த அளவில். மூட நம்பிக்கைகள், வன்முறை வெறுப்பு போன்றவற்றிலிருந்து விடுபட்டுச் சிந்திக்க வேண்டிய தேவையை அது அறிவுறுத்தியிருந்தது.
நமது நாட்டின் சொத்து அதன் இளைஞர்களும் குழந்தை களும்தான். அவர்களுக்குத் தடையற்ற, தரமான, அதிகச் செலவெடுக்காத கல்வி மிகவும் அவசியம் என்ற தெளிவு அறிக்கையில் இருந்தது. தொழில்கல்வியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்ற உறுதிகொண்டிருக்கிறோம் என்றும் பாஜக அறிவித்திருந்தது. அதற்காக இணையத்தின் மூலம் படிப்பதற்கான வசதிகளை உருவாக்குவோம் என்று அறிக்கை கூறியது. இதேபோல, வறுமையை ஒழிக்க, நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையே உள்ள வேற்றுமையை அழிக்க, உணவு உற்பத்தியைப் பெருக்க, நோய்களின் தாக்கத்தைக் குறைக்க அறிவியலைப் பயன்படுத்துவோம்; இளைஞர்களை அறிவியல் பக்கம் திருப்புவோம்; உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிக் கூடங்களை உருவாக்குவோம் என்றெல்லாம் தேர்தல் அறிக்கை சொன்னது.
ஒரு வருடத்தில் நடந்தது என்ன? ஸ்மிருதி இரானிக்கும் கல்வித் துறை வல்லுநர்களுக்கும் இடையே அடிக்கடி நடைபெறும் கத்திச் சண்டைகளைப் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இரானி கல்வித் துறையை மேம்படுத்தக் கேட்ட பணம் பட்ஜெட்டில் கிடைக்கவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாக்குகின்றன. கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இந்த வருடம் சென்ற வருடத்தைவிட சுமார் ரூ. 13,700 கோடி குறைந்துவிட்டது. அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு 22% குறைப்பு; மதிய உணவுத் திட்டத்துக்கு 16.5% குறைப்பு; இடை நிலைக் கல்வித் திட்டத்துக்கு 29% குறைப்பு என்றால், உயர்நிலைக் கல்வித் திட்டத்துக்கு 48% குறைப்பு. சசி தரூர் தனது கட்டுரை ஒன்றில் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு அமைச்சகம் கேட்ட தொகை ரூ. 50,000 கோடி; கிடைத்ததோ ரூ. 22,000 கோடி என்று குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் கல்வி நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்பதற்கு எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. பக்கத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்குச் சென்று எட்டாம் வகுப்பு மாணவ - மாணவியரிடம் நான்கு வரிகள் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் எழுதச் சொல்லுங்கள். எளிய கணக்குகளைக் கொடுத்து விடை கேளுங்கள். அறிவியலிலும் சமூகவியலிலும் எளிய கேள்விகளைக் கேளுங்கள். 60% சதவீதத்தினர் தேற மாட்டார்கள். இது காலம் காலமாகப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கச் செய்ய வேண்டும், ஆனால் அவர்கள் எப்படிப் படிக்கிறார்கள், ஆசிரியர்கள் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பவற்றைப் பற்றி கண்டுகொள்ள வேண்டிய தேவையில்லை என்ற எண்ணத்தோடு அரசுகள் தொடர்ந்து இயங்கியதன் விளைவு. பல வருடங்களாகத் தொடர்ந்துவரும் வியாதியை ஒரு வருடத்தில் குணம் செய்துவிடலாம் என்று நினைப்பது முட்டாள்தனம். ஆனால், குணம் செய்ய முயற்சிகள் செய்யப்படுகின்றனவா என்பது அர்த்தமுள்ள கேள்வி.
மனிதவள மேம்பாட்டுத் துறையின் வலைதளத்தில் முயற்சி களுக்கான எந்தத் தடமும் கிடைக்கவில்லை. இதேபோல, பள்ளிகளில் தொழிற்கல்வியைத் துவங்குவதற்கும் தொழிற் கல்விக் கூடங்களை அமைப்பதற்குமான வழிமுறைகள் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. அவற்றுக்கான வேலைகளும் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. உயர் கல்வியைப் பொறுத்தவரையில், மத்தியப் பல்கலைக் கழகங்களைச் சீர் செய்ய வேண்டும் (அவை கட்டாயம் சீரமைக்கப்பட வேண்டும் என்பது உண்மை) என்ற சாக்கில், அவற்றின் உரிமைகளைப் பறித்துக்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது. இது உண்மையானால், மத்திய அரசு பல்கலைக்கழகங்களிலும் மாநிலப் பல்கலைக்கழகங்களைப் போல ஆமாம் சாமிகள் மிக விரைவில் பெருகிவிடுவார்கள்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மன்றத்தின் தலைமை இயக்குநர் பதவி ஓய்வுபெற்று ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும், இன்று வரை நிரந்தரத் தலைமை இயக்குநர் நியமிக்கப்படவில்லை. மேலும், ஆய்வு மன்றத்தின் கீழ் 39 ஆய்வுக் கூடங்கள் இயங்குகின்றன. இவற்றில் 12 ஆய்வுக் கூடங்களுக்கு இயக்குநர்கள் இல்லை. இதே போன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் தலைவர் இல்லாமல் செயல்படுகிறது. இந்திய ஆணைக் குழுவின் அதிகாரி ஒருவர் இன்று அந்த நிறுவனத்தை இயக்குகிறார். இது அரசு அறிவியலாளர்கள் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. எனவே, இந்திய ஆராய்ச்சியாளர்களில் 40% வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் நமக்கு எந்த வியப்பையும் தராது.
இவற்றுக்கெல்லாம் இடையில் சின்ன ஆறுதல், ஆறு மாநிலங்களில் மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (தமிழகத்தில் மதுரையில்) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தொடர்பான கள சோதனைகளுக்கு இந்தியாவில் அளிக்கப்பட்டிருக்கும் அனுமதி போன்றவற்றைச் சொல்லலாம். மொத்தத்தில் உடைத்துச் சொல்ல வேண்டும் என்றால், கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் அரசின் சாதனைகளைத் தேடத்தான் வேண்டியிருக்கிறது!
- பி.ஏ. கிருஷ்ணன், எழுத்தாளர்
‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

************************
வெளியுறவில் வெகு மும்முரமாகச் செயல்பட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு, நரேந்திர மோடி அவரது முன்னவர் மன்மோகன் சிங் ஒருமுறை சொன்னதுபோல இந்த முடிவுக்கு வரக்கூடும்: “இந்தியா சிறப்பாகச் செயல்பட வேண்டு மென்று உலகம் எதிர்பார்க்கிறது. ஆனால், நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களெல்லாம் நமது தாயகத்தில்தான் இருக்கின்றன.”
சர்வதேச உறவுகளையும் வெளியுறவுக் கொள்கையையும் இப்படிப் பார்ப்பது இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து மதிப்பிட உதவுகிறது. சர்வதேச உறவு என்பதை ‘அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு’ (அ-அ-உ), ‘மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு’ (ம-ம-உ), ‘தொழில் துறைக்கும் தொழில் துறைக்கும் இடையிலான உறவு’ (தொ-தொ-உ) என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
நாடுகளுக்கு இடையிலான உறவுகள் எப்படி இருக்கின்றன என்பதை இந்த மூன்று வகைகளைக் கொண்டு மதிப்பிடலாம். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு இந்த 3 பிரிவுகளிலும் உச்சத்தில் இருக்கிறது. முன்பு ரஷ்யாவுடன் இப்படிப்பட்ட உறவில் இந்தியா இருந்தது. 1970-களில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நெருக்கமான அ.அ. உறவு இருந்தபோது, இந்த மூன்று பிரிவுகளிலுமே சோவியத் ஒன்றியம் உச்சத்தில் இருந்தது. இரு நாடுகளுக்கு இடையிலும் அ.அ. உறவு நன்றாக இருந்தாலும் தொ.தொ.உறவும் ம.ம. உறவும் தொடர்ந்து சரிவுக்குள்ளாயின. 1962-க்குப் பிறகு சீனாவுடன் 3 பிரிவுகளிலும் உறவு மிகவும் மோசமடைய ஆரம்பித்தது. கடந்த இரண்டு தசாப்தங்களிலும் அ.அ. உறவில் முன்னேற்றமடைய ஆரம்பித்தது. ஆனால், தொ.தொ. உறவில் ஏற்பட்ட படுவேகமான ஏற்றத்தால் மற்ற இரண்டு பிரிவுகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஆசியாவின் புவியரசியலில் சீனாவின் நிலைகுறித்தும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதுகுறித்தும் இந்தியா சங்கட உணர்வின்றி இருக்கும்போதுதான் இந்தியா வுக்கும் சீனாவுக்கும் இடையிலான அ.அ. உறவு மேம்படும். இதைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது, இந்திய-சீன உறவில் தொ.தொ. உறவும் ம.ம. உறவும் முதலில் மேம்படட்டும்; அதன் மூலம் இருதரப்பு உறவில் பெருமளவு நம்பிக்கை ஏற்படும் என்று நினைத்து, எல்லைப் பிரச்சினை கொஞ்ச காலம் காத்திருக்கட்டும் என்று மோடி முடிவுசெய்ததுபோல் தோன்றுகிறது.
இந்தியப் பொருளாதார மேம்பாட்டுக்கான களத்தை விரிவுபடுத்துவதும், அதற்கேற்ற பிராந்தியச் சூழ்நிலையை ஏற்படுத்துவதும் வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்கள் என்பதால், பரஸ்பரத் தன்மையற்ற ‘ஒருதரப்பு தாராளமய மாக்கல்’ என்ற அணுகுமுறையை சீனாவிடம் மோடி மேற்கொண்டார். கடந்த காலத்தில் இந்த அணுகுமுறை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இருந்த வளர்ச்சியடையாத நாடுகளிடையே மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. நல்லுறவு ஏற்படும் வகையில், பரஸ்பரம் நன்மை தரும் விதத்தில் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலையையும் அமைப்பு களையும் உருவாக்குவதே இந்தக் கொள்கையின் நோக்கம்.
மோடியின் நிர்வாகத்தையும் அவரது பொருளாதாரக் கொள்கையையும் பற்றி நேரெதிர்க் கருத்துகள் நிலவுகின்றன. அவரது விமர்சகர்கள் மதப் பிரிவினைவாதம், விவசாயிகளின் துயரம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அவரது ஆராதகர்களோ ஓரங்கட்டப்பட்ட ஒரு மேட்டிமைக்குழுவின் குற்றச்சாட்டுகளாகவே இவற்றைப் பார்க்கிறார்கள். உள்நாட்டுக் களத்தில் மோடியின் செயல்பாடுகளில் நன்மை தீமை இரண்டுமே கலந்து காணப்படுகின்றன. பொருளா தாரத்தில் முன்பைவிட நிச்சயம் முன்னேற்றம் காணப்படுகிறது. ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ என்பதற்குப் பதிலாக, ‘தூய்மை இந்தியா’ பிரச்சாரத்தைப் போலவே, ‘இந்தியாவில் தயாரித்து இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற கோஷத்துடன் ‘தேசத்தைக் கட்டமைப்போம்’ என்ற அறைகூவலை விடுத் திருந்தால் பிரதமரும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய அவரது அமைச்சர்களும் இன்னும் விரிவாகச் செயல் படுவதற்கான அரசியல் களம் கிடைத்திருக்கும்.
முதலீடு, சேமிப்பு போன்றவற்றை நோக்கியும், குடிமக்கள் அதிக அளவில் செலவு செய்யும் நிலையை நோக்கியும் பொருளாதாரம் நகர வேண்டியது அவசியம். எதிர்பார்ப்புகளெல்லாம் மிகவும் தீர்மானமான விதத்தில் நேர்மறையாக மாற வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம். ஆகவே, ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற கோஷத்தை நடைமுறையாக்குவதற்கு இன்னும் நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மனிதர்கள் ரொட்டியினால் மட்டுமே வாழ்வதில்லை. நாடுகளும் அப்படியே. ஆகவே, பொருளாதாரத்தில் இந்தியா என்ன சாதிக்கிறது என்பது மட்டுமல்ல, உலக நாடுகளுட னான நம் உறவைத் தீர்மானிப்பது, உலகத்துக்கு இந்தியா என்ன சொல்கிறது என்பதும்தான். இந்தியா என்ற கருத்தாக் கத்தை சர்வதேசச் சமூகம் கொண்டாடுகிறது. இந்தியாவின் பொருளாதார எழுச்சி தவிர, மதச்சார்பின்மை, சுதந்திரச் சமூகம், பன்மைத்துவ ஜனநாயகம் ஆகியவற்றில் இந்தியா அடையும் வெற்றியும் இனம், நிறம், மதம் போன்ற பிரிவினை களால் துண்டாடப்பட்டிருக்கும் உலகத்தால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, அரசு இனியும் தாமதிக்க முடியாது. அரசு முன்னே சென்றே ஆக வேண்டும், இந்தியப் பன்மைத்துவத்தை முன்பைவிட அதிகமாக உள்வாங்கிக் கொண்டு!
© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை
##########
புதுவெளிச்சக் கீற்றாக மலர்ந்திருக்கிறது மோடியின் முதலாண்டு ஆட்சி. இனி, வரப்போகும் நான்காண்டுகளுக்குத் தெளிவான கட்டியம் கூறுகிறது இந்த ஓராண்டு.
மன்மோகன் சிங்கின் பத்தாண்டு ஆட்சியின் முதல் குறைபாடு, யார் ஆட்சியில் இருக்கிறார், யார் கொள்கைகளை வகுக்கிறார், யார் தேசமென்னும் வண்டியின் ஓட்டுநர் என்ற தெளிவு இல்லாமல் இருந்ததுதான். முக்கியமான இலாகாக்கள் எவை எவை தங்களுக்கு வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் பேரம் பேசிப் பிடுங்கிக்கொண்டன. சோனியா காந்தியின் விசுவாசிகள், சீனியர் காங்கிரஸ்காரர்கள் மன்மோகன் சிங்கிடம் பல விஷயங்களைக் கலந்து ஆலோசிக்கவே இல்லை என்று மன்மோகன் சிங்கின் பிரதமர் அலுவலக அதிகாரிகளே எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சரும் ‘தன் இலாகாவின் பிரதமராக’ தன்னைக் கருதிக்கொண்டு, மன்மோகன் சிங்கின் அறிவுரைகளை முற்றாக மறுத்து, தாம் வைத்ததே சட்டம் என்று நடந்துகொண்டனர். குரூப் ஆஃப் மினிஸ்டர்ஸ் (ஜி.ஓ.எம்) என்ற சிறு அமைச்சர் குழுக்கள் கேபினெட் மற்றும் பிரதமர் கீழ் உள்ள அதிகாரங்களை ஹைஜாக் செய்துகொண்டன. பல துறைகளில் ஊழல் தலைவிரித்தாடியது. சில துறைகளில் அமைச்சர்கள் பணிக்கே வரவில்லை. இவை அனைத்தும் மோடியின் முதல் மாதத்துக்கு உள்ளாகவே சரிசெய்யப்பட்டுவிட்டன. பிரதமர் தான் தேசத்தை வழிநடத்துபவர் என்பது தெளிவானது. திறமை மிக்கவர்கள் அமைச்சர்கள் ஆக்கப்பட்டனர். இன்று மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல், உள்கட்டமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் தத்தம் துறையை எவ்வாறு வெகுவாக முன்னெடுத்துச் சென்றுள்ளனர் என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டும். நிலக்கரி, அலைக்கற்றை ஆகியவற்றில் நடந்த வெளிப்படையான ஏலங்கள், ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியாத ஆட்சி என்பதைத் தனித்துக் காட்டுகின்றன.
ஆண்டுக்கு ஒரு கோடி புதிய வேலைகளை உருவாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுக் கடமை யாகிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளது அரசு.
இந்தியப் பொருளாதார அமைப்புமுறை தன் போக்கை மாற்ற வேண்டியிருக்கிறது. சென்ற ஆட்சியின் பத்தாண்டுகளில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே போனது. கையில் வருமானமே இல்லாமல் நலத்திட்டங்கள் என்ற பெயரில் எல்லாவற்றுக்கும் உரிமைகள் கொடுக்கிறேன், கேரண்டி கொடுக்கிறேன் என்று அரசு கஜானாவைத் திறந்துவிட்டது. பற்றாக்குறை அதிகரிக்க, அரசு வாங்கும் கடன்கள் அதிகரித்தன. இதன் காரணமாகவும் கடுமையான பணவீக்கம் காரணமாகவும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகமாகவே வைத்திருந்தது. இதன் காரணமாகத் தனியார் நிறுவனங்கள் கடன் வாங்கித் தொழில்களை வளர்ப்பது சாத்தியமற்றதாக இருந்தது. மோடியின் ஓராண்டில் பணவீக்கம் கடுமையாகக் குறைந்துள்ளது. அரசின் நிதிப் பற்றாக்குறை வாக்குறுதி அளித்த அளவுக்குள் இருக்கிறது. இதனால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைப் பல ஆண்டுகள் கழித்துக் குறைத்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்த வட்டி விகிதம் மேலும் குறையும்போது குறுங்கடன்கள் பெறும் ஏழைகள், வீட்டு, வாகனக் கடன்கள் பெறும் மத்திய வர்க்கம், தொழிலுக்கான கடன் பெறும் சிறு, பெரு நிறுவனங்கள் என அனைவருமே நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.
மத்திய-மாநில உறவுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சிரீதியாக அரசியலில் கடும் போட்டி இருந்தாலும், எந்த மாநில அரசு வளர்ச்சித் திட்டங்களைக் கோரினாலும் அதற்கான அனுமதியும் நிதியுதவியும் உடனடியாக வழங்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் மோடி. ஸ்மார்ட் சிட்டி திட்டம், சாலைகள், மின் உற்பத்தி போன்ற கட்டமைப்புத் திட்டங்கள் என அனைத்துமே இந்தியா முழுமையிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சீராகப் பிரித்துத் தரப்பட்டுள்ளன. இதற்கு முன் ஒவ்வொரு மாநில அரசும் திட்டக் குழு என்ற அமைப்பின்முன் கையேந்தி நிற்க வேண்டும். திட்டக் குழு கலைக்கப்பட்டு, இப்போது நிதி ஆயோக் என்ற ஆலோசனை கூறும் அமைப்பு மட்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நேரு, குஜ்ரால், வாஜ்பாய் முதலியோர் பிரதமராக இருக்கும்போதும் வெளியுறவின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். மோடி அவர்களைப் போலவே உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பிம்பத்தைக் கட்டமைக்க முற்படுகிறார். இதுவரை அவர் சந்தித்துள்ள முக்கியமான நாடுகளின் தலைவர்கள் அனைவரையுமே மோடி வெகுவாகக் கவர்ந்துள்ளார். பாகிஸ்தானுடனான உறவில் மேம்பாடு வருவது சாத்தியமில்லை என்றாலும், வரும் நான்காண்டுகளில் சீனாவுடனான உறவில் மிகப் பெரும் மாற்றம் வரும் என்று தெரிகிறது.
முந்தைய அரசு செய்த நல்ல செயல்கள், மோடி ஆட்சியின் பார்வையுடன் பொருந்திப்போகும்போது அவை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஆதார் அட்டை திட்டம், ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குத் திட்டம் வங்கதேசத்துடனான நில மாற்றல் திட்டம் போன்றவை. வளமான தேசத்தை, வலிமையான பாரதத்தை உருவாக்கும் மாபெரும் முயற்சியில் ஓய்வறியாது உழைக்கிறார் மோடி. அதில் ஒரு துளியும் சந்தேகமில்லை!
- பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், விமர்சகர், தொடர்புக்கு: bseshadri@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக