அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் அலமாகார்டோவில் 1945 ஜூலை 16-ல் உலகில் முதன் முறையாக அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனை செய்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை வீசி லட்சக் கணக்கான மக்களைக் கொன்றது அமெரிக்கா. இதையடுத்து அணு ஆயுதங்களுக்கு எதிரான குரல் உலகமெங்கும் எழுந்தது.
அணுகுண்டுக்கு எதிராகப் போராடிய வர்களில் முக்கியமானவர் டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்ஸர். ஜெர்மனியைச் சேர்ந்த இவர் மருத்துவர், இசைக் கலைஞர் என்று பல்வேறு முகங்களைக் கொண்டவர். மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் மருத்துவமனை யைத் தொடங்கி நடத்திய அவர், ஏழை மக்களுக்குச் சிகிச்சை அளித்தார். 1952-ல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கவில்லை. காரணம், காபோனில் இருந்த ஏழை மக்களுக்குச் சேவை அளிப் பதற்கே அவருக்கு நேரம் போதவில்லை.
1954-ல் ஓஸ்லோ பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் நோபல் பரிசைப் பெற்றுக்கொண்ட அவர், ஏற்புரையில் அணுகுண்டு சோதனை யைக் கண்டித்துப் பேசினார். ‘மனசாட்சி யின் அறிவிப்பு’ எனும் பெயரில், 1957 ஏப்ரல் 23-ல் ஓஸ்லோ வானொலி யில், அணுகுண்டு சோதனைக்கு எதிராக உரையாற்றினார்.
தொடர்ந்து ஏப்ரல் 27-ல் அவருடன் சேர்ந்து பல்வேறு நாடு களைச் சேர்ந்த அறிவியலாளர்கள் அணுகுண்டு சோதனைக்கு எதிராகக் குரல்கொடுத்தனர். ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் 3 தலைப்புகளில் இதே கோரிக்கை அடங்கிய உரைகளை அவர் நிகழ்த்தினார். இந்த உரைகள் தொகுக்கப்பட்டு ‘அமைதியா, அணு குண்டுப் போரா?’ எனும் தலைப்பில் ஹென்றி ஹோல்ட் என்பவரால் வெளியிடப்பட்டன. பல மொழிகளிலும் அந்தப் பிரசுரம் மொழி பெயர்க்கப்பட்டது.
டாக்டர் ஆல்பர்ட் ஸ்வைட்ஸர் உள்ளிட்டோரின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன் ஆகிய 3 நாடுகளும் அணு குண்டு சோதனையை நிறுத்திக் கொள்வ தாக அறிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக