திங்கள், 20 ஏப்ரல், 2015

Know the fact about China

வருங்காலத்தில் உலகப் பொருளாதாரத் தலைமையை எந்த நாடு ஏற்கும்? என்ற கேள்விக்கு சோவியத் யூனியன் என்பது, 1970-களில் சர்வதேச பொருளாதார நிபுணர்களின் பதிலாக இருந்தது.
ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டார்கள். `மத்திய கிழக்கு நாடுகள்’. இப்படி மாற்றிக் கொண்டதற்குக் காரணம் அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான பெட்ரோலியக் கிணறுகள்.
ஆனால் அமெரிக்காவுக்கு இந்தப் பெருமை கிடைத்தது. “இன்னும் நூறு ஆண்டுகளில் அமெரிக்காவை நாம் தாண்டிவிட வேண்டும்’’ என்று ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
சில ஆண்டுகள்தான். அவர்கள் அத்தனை பேருக்கும் எழுந்தது ஒரு திகில் உணர்வு. “சீனாவும், இந்தியாவும் இணைந்து வருங்கால உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானித்து விடுமோ?’’.
ஆக சீனா நமக்கு கடும் போட்டியாளர் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் இந்தியாவும் பலவிதங்களில் அதற்கு போட்டியை அளித்துக் கொண்டிருக்கிறது. (மக்கள் தொகையில்தானே என்று கேலி பேச வேண்டாம்).
சீனாவுக்கும் நமக்கும் பல வருடங்களுக்கு முன் ஒரு நேரடிப் போர் நடந்தபோது, “சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது’’ என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலுக்கு தமிழகத்தின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்த காட்சி செய்திப் படமாக அத்தனை திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டன. ஆக சீனாவை ஒரு நாகப்பாம்போடு ஒப்பிட்டோம். இப்போதும் சீனா சீறிக்கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காகூட அதை அடக்க நினைத்தாலும் மனதில் அஞ்சிக் கொண்டுதான் இருக்கிறது.
சீனாவைப் பாம்பாக வர்ணிப்பது ஒருபுறம் இருக்க, சீனர்கள் பாம்புக் கறியையும் சாப்பிடுவார்கள் என்ற குறிப்பேகூட பலருக்கும் அருவருப்பையும், லேசான அச்சத்தையும் அளிக்கக்கூடியதுதான்.
சீனாவின் வர்த்தகம் கொஞ்சநஞ்சமல்ல. குறைவான விலையில் பொருள்களை சந்தைக்கு அனுப்புவதில் பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. உலக அளவில் துணிகள் ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் சீனாவுடையதுதான்.
தனது வளமான டி.வி.செட் விற்பனை முன்னணியை ஜப்பான் சீனாவுக்குத் தாரை வார்த்து விட்டது. அமெரிக்காவில் சீன ஃபர்னிச்சர் எக்கச்சக்கமாக விற்கின்றன. மிக மென்மையான பட்டுகளை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருந்தது இத்தாலி. அவர்களை ஒவர்டேக் செய்துவிட்டது சீனா.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சீனாவுக்குச் சென்று வருபவர்கள்கூட அங்கு உண்டாகியுள்ள மாற்றங்களைப் பார்த்து வாய் பிளக்கிறார்கள். 2012க்குள் பத்து புதிய விமான நிலையங்களை சீனா உருவாக்கிக் கொள்ள இருக்கிறது.
இனியும் உழைப்பாளர்களுக்கான கூலியைக் குறைக்க முடியாது என்ற நிலை வந்ததும், பல பிரம்மாண்டமான இயந்திரங்களை சீனத் தொழிற்சாலைகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டன.
“ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்’’ என்று கூறுகிறார் சீனப் பிரதமர் லீ கெகியாங். (சுருக்கமாக `லீ’). இந்த ஆண்டு மார்ச் 2 அன்று லஞ்சம் வாங்கியதற்காக தண்டனை அளிக்கப்பட்ட 14 ராணுவத் தளபதிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது சீனா. (என்றாலும் ராணுவ பட்ஜெட்டை 10 சதவீதம் உயர்த்தியிருக்கிறது).
தேசப்பற்று கொண்ட இந்தியர்களுக்கு சீனாவைப் பற்றிய ஒரு பிம்பம் உண்டு. அராஜக நாடு. பேராசை கொண்ட நாடு.
அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பஞ்சசீலக் கொள்கைகளுக்கு தலையாட்டியபடியே இந்தியாவின் முதுகில் குத்திய நாடு சீனா. நம் எல்லைப் பகுதிகளில் சிலவற்றை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது. அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு உரியதல்ல என்று வேறு சொல்கிறது.
எனவே இந்தத் தொடரில் சீனாவின் சில பெருமைகளை விளக்கும்போது நெருடல் ஏற்படுவது இயல்பு. என்றாலும் `அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை’ என்ற கோணத்திலும் இவற்றை அறிய வேண்டியது அவசியம்.
இன்று எப்படியோ, சீனர்கள் கால காலமாக வெள்ளைக் கொடியை நம்பியவர் கள். அமைதி விரும்பிகள். அதே சமயம் தங்கள் நாட்டைப் பற்றி எக்கச்சக்க பெருமை கொண்டவர்கள். `சேனா குவோ’ என்று தங்கள் நாட்டை அழைத்துக் கொண்டார்கள். இதற்குப் பொருள் `நடுநாயக சாம்ராஜ்யம்’ என்று அர்த்தம். பிற நாட்டினரை எல்லாம் (முக்கியமாக அமெரிக்கர்களையும், ஐரோப்பியர்களையும்) `சரியான காட்டுமிராண்டிகள்’ என்றுதான் குறிப்பிட்டார்கள்.
சமாதானத்தை அப்படி விரும்பினார்கள். வாழையடி வாழையாக வந்த அவர்களது நால்வகைப் பிரிவுகள் இவைதான். அறிஞர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வியாபாரிகள். கவனித்தீர்களா? க்ஷத்ரியர்கள் அல்லது போர் வீரர்கள் என்று ஒரு பிரிவு கிடையாது.
வேறு எந்த விதத்திலும் பிழைக்க வழியில்லை என்றால்தான் ராணுவத்தில் சேருவது அன்றைய சீனர்களின் வழக்கம்.
பின் எப்படி இப்போது தலைகீழ் மாற்றம்? சீன வரலாற்றில் திகைப்புகளுக்கும், அதிர்ச்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.
*********
சீனப் பெருஞ்சுவர் நமக்குத் தெரியும். ஆனால் அதற்கெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சீனா தன்னைச் சுற்றி ஒரு கற்பனைச் சுவரை எழுப்பிக் கொண்டிருந்தது. பிற நாடுகளை அது ஒரு பொருட்டாக நினைத்ததே இல்லை. தங்களுடையதுதான் புராதனமான கலாச்சாரம் என்ற எண்ணம் கொண்ட நாடு.
முதலில் கரன்ஸி நோட்டை வெளியிட்ட நாடு எது? நாங்கள்தான். பட்டாசுகளை முதலில் தயாரித்த நாடு? நாங்கள்தான். தத்துவத்திலிருந்து இசை வரை மிகவும் பாரம்பரியமான செல்வாக்கு கொண்ட நாடு எது? சந்தேகமென்ன, நாங்கள்தான். வேறு எந்த அந்நிய சக்தியும் அடக்கி ஆளாத நாடு எது? நாங்களேதான்.
சீனர்கள் கொண்டிருந்தது நியாயமான பெருமைகள்தான். ஆனால் இப்படியொரு கற்பனைச் சுவரை எழுப்பிக் கொண்டதில் சீனர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தத் தவறி விட்டார்கள். தட்டச்சில் நான்தான் மேதை என்று சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி? அதுவும் கணினி அறிமுகமாகி ஜாலங்கள் செய்யத் தொடங்கிய பிறகு? அப்படித்தான் ஆகிவிட்டது சீனா. அறிவியலும், தொழில் நுட்பமும் உலகெங்கும் பரவியபோது சீனா கண்களை மூடிக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் அது கண் திறந்தபோது நிலைமை கைமீறியதாக மாறிவிட்டிருந்தது. ஐரோப்பிய நாடுகள் தங்களை ‘நாங்களே உயர்ந்தவர்கள்’ என்று எண்ணத் தொடங்கி விட்டிருந்தன.
ஆனால் ஒரு வித்தியாசம். தன்னை உயர்வாக நினைத்த சீனா அந்த மகிழ்ச்சியோடு காலம் தள்ளியது. ஆனால் தங்களை உயர்வாக நினைத்த ஐரோப்பிய நாடுகள் பிற நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன.
இந்தக் காலகட்டத்தில் சீனாவை மிங் வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் ஆட்சி செய்யத் தொடங்கினார்கள்.
இந்த ஆட்சியில் திருநங்கைகளுக்கு முக்கிய பொறுப்பு இருந்தது. சொல்லப்போனால் ஒருவிதத்தில் சீனாவின் தலையெழுத்தை மாற்றி அமைத்ததில் அவர்களுக்கும் பங்கு உண்டு.
ஸி ஸுங் என்ற சீன சக்ரவர்த்திக்குப் பல உதவியாளர்கள் இருந்தார்கள். அவர்களில் வே சுங் ஸியென் என்ற திருநங்கையும் ஒருவர். இவருக்கு திறமைகள் மிக அதிக மாக இருந்தன. அடிக்கடி தன் புத்திசாலித் தனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ராஜ விசுவாசம் அவரிடம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. இதனால் சக்ரவர்த்திக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. அந்த உதவியாளர்மீது மிகுந்த நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்.
ஆட்சி தொடர்பான பல விஷயங்களை அவரிடம் ஒப்படைத்தார் சக்ரவர்த்தி. அரசு அறிக்கைகளை தயார் செய்யும் பொறுப்பும் அவற்றில் ஒன்று.
தனக்கு இவ்வளவு அதிகாரங்கள் கிடைத்ததும் வே சுங் ஸியென் செய்த முதல் காரியம் தன் இனத்தைச் சேர்ந்த பலரையும் அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளில் அமர்த்தியதுதான். ஆயிரக்கணக்கான திருநங்கைகள் அரசுப் பணிகளில் அமர்த்தப்பட்டார்கள்.
அடுத்ததாக வே சுங் ஸியென் செய்த காரியம் அராஜகமானது. தனக்காக நாட்டில் கோயில்களை எழுப்பச் செய்தார். மக்களில் பலரும் இந்தப் போக்கை வெறுத்தார்கள்.
“என்னை ஒன்பதாயிரம் ஆண்டுகள் என்று பிறர் குறிப்பிட வேண்டும்” என்று கட்டாயப்படுத்தினார். எதற்காக இப்படிக் குறிப்பிட வேண்டும்? காரணம் இருந்தது. அக்காலத்தில் சீனச் சக்ரவர்த்திகளை ‘பத்தாயிரம் ஆண்டுகள்’ என்று அழைப்பது வழக்கம். (அதாவது அவரது புகழ் குறைந்தது அவ்வளவு ஆண்டுகள் நிலைத் திருக்குமாம்). ‘நான் சக்ரவர்த்தியைவிட கொஞ்சம்தான் குறைந்தவள். எனவே என்னை ஒன்பதாயிரம் ஆண்டுகள் என்று குறிப்பிட்டால் என்ன தப்பு?’ என்று நினைத்தார் வே சுங் ஸியென்.
ஒருகட்டத்தில் சக்ரவர்த்தி இறந்தார். அடுத்து அவருடைய மகன் முடிசூட்டிக் கொண்டார். முடிசூடியதும் அவர் செய்த முதல் காரியம் வே சுங் ஸியெனை பதவி இறக்கம் செய்ததுதான். இதனால் மனம் நொந்து போனார் வே சுங் ஸியென். அடுத்த தாக புதிய மன்னன் தனக்கு ஏதாவது தண்டனை அளிப்பானோ, தான் கைது செய்யப்படுவோமோ என்றெல்லாம் பயந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
வே சுங் ஸியென் தலைக்கனமாக நடந்து கொண்டது மன்னனுக்குப் பிடிக்கவில்லையே தவிர அவர் திருநங்கை என்பதற்காக பதவி நீக்கப்படவில்லை. இதற்கு ஒரு முக்கிய சான்று, அரசுப் பணிகளில் இருந்த பிற திருநங்கைகள் பதவி நீக்கப்படவில்லை.
ஆக மிங் வம்சாவளி ஆட்சியில் பல திருநங்கைகள் தொடர்ந்து அரசுப் பதவிகளை அலங்கரித்தார்கள். முக்கியமாக ஒற்று வேலைகளில் அவர்களுக்கு தனித் திறமை இருந்தது.
இப்படிப்பட்ட மிங் வம்ச அரசர்கள் சீனாவை ஆண்டு கொண்டிருந்த போதுதான் மஞ்சூக்கள் சீனாவை ஆக்ரமிக்கத் தொடங்கினார்கள்.
சீனாவின் வடகிழக்கில் இருந்தது மஞ்சூரியா. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மஞ்சூக்கள். தொடக்கத்தில் சீனாவின் எல்லைப் பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். பிறகு துணிச்சல் பெற்று பெய்ஜிங்கை (அக்காலத்தில் அதன் பெயர் பீகிங்) நோக்கி படையோடு கிளம்பினார்கள்.
சீனா அதிர்ந்தது. முதல் முதலாக சீனர்கள் சந்தித்த வெளிநாட்டு எதிர்ப்பு.
**********
சீனாவில் வடகிழக்கிலிருந்த மஞ்சூக்கள் சீனாவை ஆக்கிரமிக்க முற்பட்டார்கள். இதை அறிந்ததும் மிங் வம்ச சக்ரவர்த்தி தனது திறமையான தளபதி ஒருவரின் தலைமையில் ஒரு பெரும் படையை வடக்கு நோக்கி அனுப்பினார். அந்தத் தளபதியின் பெயர் வூ சான் குயீ.
இந்த சமயத்தில் லீ சூ செங் என்பவர் தன் கொள்ளைக் கூட்டத்துடன் பெய்ஜிங்கில் நுழைந்தார். சீன ராணுவத்தில் பணியாற்றியவர். உள்நாட்டுக் கலகம் ஒன்றில் தனது ஒரு கண்ணை இழுந்தவர். சீனாவை ஆள வேண்டும் என்ற தாங்க முடியாத ஆர்வம் கொண்டவர்.
(இனி அந்தத் தளபதியை வூ என்றும் கொள்ளைக் கூட்டத் தலைவனை லீ என்றும் சுருக்கமாகக் குறிப்பிடுவோம்)
வூ மஞ்சூரியாவை நோக்கிச் செல்ல, இதுவே சரியான சமயம் என்று பெய்ஜிங் நகருக்குள் நுழைந்தார் லீ. (பரப்பளவில் மிகப் பெரிய நாடு என்றால் இதுபோன்ற ஆபத்துகளும் உண்டு!)
சக்ரவர்த்தி பதறினார். ஏற்கெனவே கஜானாவின் நிதி நிலைமை சரியில்லை. திருநங்கைகளின் கெடுபிடிகள் அதிகமான தால் மக்களுக்குப் பெரும் அதிருப்தி. மக்கள் ஆதரவும் இல்லாத நிலையில் தளபதியை அனுப்பி விட்டோமே!
அவசரமாக தளபதியை மீண்டும் அழைத்தார். ஆனால் அதற்குள் நிலவரம் கலவரம் ஆகியிருந்தது. துரோகியான திருநங்கை ஒருவர் பெய்ஜிங்கின் நுழைவுவாயிலை திறந்து விட்டு லீயின் கூட்டம் உள்ளே நுழைய வழி செய்தார்.
சக்ரவர்த்தி மாறுவேடத்தில் வெளியேற முயற்சி செய்தார். ஆனால் கோட்டைக் கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. (மீண்டும் துரோகம்). ஆராய்ச்சி மணியை அடித்தார். அப்படி அடித்தால் எல்லா அமைச்சர்களும் வந்திருக்க வேண்டும். ஆனால் ஒருவர் கூட வரக் காணோம்.
மன்னர் அவமானத்தில் துடித்தார். கோட்டை வளாகத்துக்குள்ளேயே இருந்த ஒரு குன்றின்மீது நின்று ஒரு கடிதத்தை எழுதினார். “என் திறமையின்மையை ஏற்றுக் கொள்கிறேன். என் எதிரிகளே, என் மக்களில் ஒருவரைக்கூட காயப்படுத்தி விடாதீர்கள்’’ இப்படி எழுதிவிட்டு தூக்கு மாட்டிக் கொண்டார்.
பெய்ஜிங்கில் நுழைந்த லீ முடிசூடிக் கொண்டார். அரண்மனையிலிருந்த அழகி ஒருத்தியை திருமணம் செய்து கொண்டார். அதில் கிளம்பின புதிய சிக்கல்கள். அந்த அழகி (மஞ்சூரியர்களை எதிர்க்கச் சென்றிருந்த) வூ-வின் காதலி.
இதை அறியாமல் தளபதிக்கு ஒரு கடிதம் எழுதினார் லீ. “தளபதியே, புதிய சக்ரவர்த்தியான நானும், நீங்களும் சேர்ந்து மஞ்சூக்களை அடக்கி விடலாம்’’.
தன் காதலியைக் கவர்ந்து கொண்ட லீயை மன்னிக்கத் தயாராக இல்லை வூ. கோபத்தில் விபரீதமான முடிவை எடுத்தார். யாரை எதிர்க்கப்படையோடு புறப்பட்டாரோ அந்த மஞ்சூக்களை அணுகி ‘லீயை அழிக்க உதவுங்கள்’’ என்றார்!.
மஞ்சூக்களுக்குப் படு குஷி. சீனத் தளபதியின் ஆதரவுடன் லீயை வெளியேற்றினார்கள்.
ஆனால் வூவின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. மஞ்சூக்கள் தன்னையே ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவார்கள். அதிகபட்சமாக பதிலுக்கு கப்பம் கேட்பார்கள். இப்படி அவர் நினைத்திருக்க, சீனாவின் ஆட்சிப் பொறுப்பை மஞ்சூக்களே எடுத்துக் கொண்டனர். ஏதோ போனால் போகிறது என்பது போல் ஒரு மாகாண அதிகாரி பதவி வூவுக்கு அளிக்கப்பட்டது.
இதனால் பல திருப்புமுனைகள் சீனாவில் நிகழ்ந்தன. முதன் முறையாக (1644ல்) வெளிநாட்டு சக்திகள் (மஞ்சூக்கள்) சீனாவை ஆளத் தொடங்கின. சீனப் பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் இனி அரச பதவி கிடையாது என்று முடிவெடுக்கப்பட்டது. சீனப் பெண்கள் வழக்கப்படி உடை அணியலாம். ஆனால் சீன ஆண்கள் மஞ்சூக்களைப் போல்தான் உடை அணிய வேண்டும் என்பவை சட்டங்களாயின.
மஞ்சூக்கள் ஆட்சியில் புதிய விதி ஒன்று அறிமுகமானது. எந்த அதிகாரிக்கும் அவரது மாகாணத்திலேயே பதவி கிடையாது. இதன் மூலம் லஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டது.
தொடக்கத்தில் வடக்கு சீனாதான் மஞ்சூக்களின் வசம் இருந்தது. பின்னர் அது முழுமையான சீனாவுக்குப் பரவியது. முழு சீனாவுக்குமான முதல் மஞ்சூ சக்ரவர்த்தி ஷூன் சி என்பவர். இவர் உலக அளவில் பல விவரங்களை அறிந்திருந்தார். (அப்போதைய சீனாவில் பலரும் நெருப்புக் கோழிகள்தான்).
ஹாலந்து மற்றும் ரஷ்ய தூதர்கள் இவர் அறைக்கு விஜயம் செய்ததுண்டு. கத்தோலிக்க மிஷினரிகளை பரிவுடன் நடத்தினார். தலாய் லாமா கூட இவரது அரசவைக்கு வந்திருக்கிறார்.
இவரது ஆட்சியில் மஞ்சூக்கள் தங்கள் ஆட்சிப் பரப்பளவை கணிசமாக விரிவாக்கிக் கொண்டனர். கொரியா, மங்கோலியா, தைவான் தீவு ஆகியவைகூட அப்போது இவர்கள் வசம் வந்து சேர்ந்தன.
அந்நிய ஆட்சி வந்து சேர்ந்ததே என்று சீனர்கள் துடித்தனர். தவிர அவர்களுக்குத் தலையாய பிரச்னை ஒன்றும் இருந்தது. தங்கள் தலைமுடியை பின்னி சுருட்டி கொண்டையாக முடிந்து கொள்வதுதான் சீன ஆண்களின் வழக்கம். ஆனால் “இரண்டு பின்னல்களாகப் பின்னிதான் தொங்க விட்டுக் கொள்ள வேண்டும்’’ என்று உத்தரவிட்டார் முன்னொரு காலத்தில் சீனாவின் ஒரு பகுதியை ஆண்டு வந்த மங்கோலியச் சக்ரவர்த்தி. கண்ணாடியில் தங்கள் இரட்டை ஜடையைப் பார்க்கும்போதெல்லாம் சீன ஆண்கள் குமுறினார்கள். அந்நிய ஆட்சியை அந்த இரட்டை ஜடை அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.
நாளடைவில் மங்கோலிய ஆட்சி முடிந்து மிங் ஆட்சி (இவர்கள் சீன பரம்பரைதான்) தொடங்கியது. சீனர்களுக்கு சந்தோஷம். பழையபடி தலையைப் பின்னி கொண்டையாக முடிந்து கொண்டார்கள். இந்த காலகட்டத்தில்தான் மஞ்சூக்கள் படையெடுப்பு.
“தலையின் முன் பாதியை ஷேவிங் செய்து கொள்ளுங்கள். பின் பக்கக் குடுமியை ஒற்றைப் பின்னலாக கட்டித் தொங்கவிட்டுக் கொள்ளுங்கள்’’ என்று ஆணையிட்டார் மஞ்சூ சக்ரவர்த்தி ஷூன் சி.
சீன மக்கள் கொதித்தனர். ஆங்காங்கே மோதல்கள் தொடங்கின. இதன் காரணமாக லட்சத்துக்கும் அதிகமான சீனர்கள் உயிரிழந்தனர். பின்னர் ஒருவழியாக ஒற்றைப் பின்னலுக்கு ஒப்புக் கொண்டனர்.
சக்ரவர்த்தி ஷூன் சி இறந்தவுடன், அவரது எட்டு வயது மகன் காங் சி முடிசூடிக் கொண்டார். இவர் திறமைசாலி. வளர்ந்தபின் சீன மொழி அகராதி ஒன்றை உருவாக்கினார். தனி மனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினார். பதினாறு ஒழுக்க விதிகளை உருவாக்கி நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பினார். அறுபது வருட ஆட்சிக்குப் பிறகு 1722ல் இறந்தார். அவரது ஆட்சியை சீனாவின் பொற்காலம் என்று கருதுபவர்கள் உண்டு
*******************
மன்னர் காங் சி அப்போது ரஷ்ய மன்னராக இருந்த மகா பீட்டருடன் (பீட்டர் தி கிரேட்) நட்பாகப் பழகி வந்தார்.
ஒரு கட்டத்தில் ‘எங்கள் நாட்டு மாணவர்கள் பெய்ஜிங்கில் கல்வி கற்கலாமா?’’ என்று ரஷ்ய மன்னர் கேட்க, அதை ஒரு கவுரவமாக கருதிய சீன மன்னர் இதற்கு ஒப்புக் கொண்டார். மாணவர்களோடு கூடவே வந்து சேர்ந்தனர் ரஷ்ய பாதிரிமார்கள்.
ஐரோப்பியர்களின் வருகைக்கு சீனாவில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஐரோப்பியர்கள் தங்கள் வணிகத்தையும் சீனாவில் தொடங்கினர். இவர்களின் மரியாதையான பழக்க வழக்கங்கள் சீனர்களுக்குப் பிடித்திருந்தன. கிறிஸ்தவ மதப் பிரதிநிதிகள் வேறு விதத்திலும் சாமர்த்தியம் காட்டினார்கள். புத்த சன்யாசிகள் போல உடை உடுத்தி, சீன அதிகாரிகளின் நட்பைப் பெற்று பிறகு மெல்ல மெல்ல கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார்கள்.
1514-ல் இருந்து 1784 வரை அடுத்தடுத்து பல நாடுகள் சீனாவில் தங்கள் வணிகத்தைத் தொடங்கின. போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஹாலந்து, பிரிட்டன், பிரான்ஸ் என்று இவை வரிசைக்கிரமமாக சீனாவில் கால் பதித்தன.
சீனர்களுக்குக் குழப்பம் வந்தது. இவர்களின் ஒரே நோக்கம் வணிகம்தானா?
அதுவும் முதன்முதலில் வந்து சேர்ந்த போர்ச்சுக்கீசியர்கள் சீன மன்னரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தார் கள். கொதித்துப் போன சீனர்கள் போர்ச்சு கீசியர்களைக் கொன்று குவித்தார்கள். எந்த அந்நிய சக்தியின் வணிகமும் இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். பரந்திருந்த சீனாவால் தனக்குத் தேவைப்படும் அனைத்தையும் தயாரித்துக் கொள்ள முடிந்தது.
ஆனால் ஐரோப்பியர்களுக்கு சீனா தேவைப்பட்டது. சீன பட்டு, சீனத் தேயிலை ஆகியவை காந்தம்போல் அவர்களைக் கவர்ந்தன. தவிர மக்கள் தொகை அதிகமான சீனாவில் தங்கள் இயந்திரங்களை மிக அதிக அளவில் விற்க முடியுமே. மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.
சீனா ஒருவழியாக ஒப்புக் கொண்டது. ஆனால் வணிகத்துக்குப் பல நிபந்தனை களை விதித்தது. ‘கான்ட்டன் துறைமுகத்தில் மட்டும்தான் வெளிநாடுகள் வணிகம் செய்யலாம். சீனர்களை கூலியாட்களாக நியமிக்கக் கூடாது. வணிகக் கிடங்குகளுக்கு பெண்களை அழைத்துவரக் கூடாது. வியாபாரம் செய்யும் காலம் மட்டும்தான் கான்ட்டன் நகரில் அந்நியர்கள் வசிக்கலாம்’.
பிற நாடுகள் ஒப்புக் கொண்டன. பிரிட்டனுக்கு மட்டும் இது மிகவும் கவுரவக் குறைச்சலாக இருந்தது. சீனர்களுக்கு ஓபியம் எனும் போதை மருந்தை கொஞ்சம் கொஞ்சமாக இறக்குமதி செய்து லாபம் பார்க்கத் தொடங்கியது.
இதனால் நேர்ந்த உரசல்களை இதே பகுதியில் ஹாங்காங் குறித்து எழுதியபோது விளக்கமாகவே பார்த்திருக்கிறோம்.
பிரிட்டனுக்கும் சீனாவுக்குமிடையே நடைபெற்றது ‘முதல் அபினி யுத்தம்’. பிரிட்டிஷ் படை சீனாவில் சில சிறிய தீவுகளை தன் வசம் ஆக்கிக் கொண்டது. மஞ்சூ சக்ரவர்த்தி நடுங்கினார். சமாதானம் பேசினார். இதைத் தொடர்ந்து ஹாங்காங் ‘நூறு வருட குத்தகைக்கு’ பிரிட்டனுக்குத் தாரை வார்க்கப்பட்டது. தவிர போதை மருந்து வியாபாரம் ஒப்பந்தத்தின் மூலம் சட்டப்பூர்வமாகவே ஆக்கப்பட்டது.
இந்த நிலையில் சீன அரசுக்கும் எதிர்ப்பு நாடுகளுக்கும் சமாதானம் செய்து வைக்க முன்வந்தது ரஷ்யா. இந்த ‘சமாதானப் பேச்சினால்’ சீனாவுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. தனது 11 துறைமுகங்களை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டு வணிகத் துக்குச் சீனா திறந்துவிட்டது.
கிறிஸ்துவ பாதிரிமார்களுக்குப் பாதுகாப்பு அளித்தது. (இதன் காரணமாக மத மாற்றங்கள் பகிரங்கமாகவே நடைபெறத் தொடங்கின). நாட்டாமை செய்த ரஷ்யா ஆமோர் என்ற சீன மாகாணத்தை ‘அன்புடன் பெற்றுக் கொண்டது’. ஆக வடக்கிலிருந்து ரஷ்யா நெருக்க, சீனாவின் அன்னாம் பகுதியை பிரான்ஸ் ஆக்கிரமித்துக் கொள்ள, ஹாங்காங் பிரிட்டனுக்குச் செல்ல சீனா கதறத் தொடங்கியது. அதற்கென்று அந்த காலகட்டத்தில் எந்த நட்பு நாடும் இல்லாமல் போனது.
அடுத்து சீனாவை கபளீகரம் செய்ய முயற்சித்தது ஜப்பான். ஒரு யானையை ஓர் எறும்பால் தின்ன முடியுமா என்பதுபோல் வியப்படைய வேண்டாம். அப்போது ஜப்பான் பெரும் பேராசை பிடித்த நாடாக இருந்தது.
1536 முதல் 1598 வரை ஹிதயோஸி என்பவர் ஜப்பானின் பிரதமராக விளங்கினார். அவர் சீனாவை தன்வசம் ஆக்கிக் கொள்ள நினைத்தார். அதற்கு முதல் கட்டமாக கொரியாவை வசப்படுத்திக் கொள்ள தீர்மானித்தார். (அப்போது கொரியப் பகுதி சீனாவின் ஆதிக்கத்தில் இருந்தது).
கொரியாவை நோக்கி ஜப்பான் ராணுவம் செல்ல, பதறிப் போன சீனா தனது ராணுவ வீரர்களை கொரியாவுக்கு அனுப்பியது. இருதரப்பினரும் மோதிக் கொள்ள, கொரியாவில் ரத்த ஆறு ஓடியது.
இடையே ஜப்பானியப் பிரதமர் இறந்துவிட போர் நின்றது. ஆனால் அதே சமயம் ஜப்பானிலும் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் நுழைந்தார்கள். பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஹாலந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக ஜப்பானில் நுழைந்தன, மிரட்டின. சீனாவில் நடந்த அதே நாடகக் காட்சிகள்.
ஆனால் ஜப்பான் கொஞ்சம் வக்கிரமாக யோசித்தது. ‘அமெரிக்கா - ஐரோப்பிய சக்திகளிடம் நாம் அடிபணிந்துவிட்டோம். நாமும் யாரையாவது ஆட்டிப் படைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
இந்த யோசனையைச் செயலாற்ற ஜப்பான் தேர்ந்தெடுத்த நாடு சீனா.
**************
சீனாவின் கிழக்கே உள்ள தீவுத் தொகுதி ஒன்றின் பெயர் லூ சூ. இதில் சுமார் ஐம்பது சின்னச் சின்ன தீவுகள் இருந்தன. சீனா, ஜப்பான் ஆகிய இரண்டுமே மாறி மாறி இந்தத் தீவுகளை ஆட்சி செய்து கொண்டிருந்தன. இந்த இரண்டு நாடுகளுக்குமே கப்பம் செலுத்தி வந்தார்கள் அந்தத் தீவுக் கூட்டத்தின் அதிகாரிகள்.
ஒருமுறை இந்தத் தீவுகளிலிருந்து சுமார் 60 பேர் ஒரு கப்பலில் கிளம்பினார்கள். வழியில் ஃபார்மோசா தீவு அருகே அந்தக் கப்பல் தரை தட்டியது. ஃபார்மோசா தீவுவாசிகள் கப்பலில் சென்றவர்களைக் கொன்று விட்டார்கள்.
இதையே சாக்காக வைத்துக் கொண்டு ஜப்பான் தன் ஆதிக்க சதுரங்கத்தைத் தொடங்கியது. சீனாவுக்கு செய்தி அனுப்பியது. “லூ சூ தீவுகள் இப்போது எங்கள் அதிகாரத்தில் உள்ளன. ஃபார்மோசா தீவு உங்கள் அதிகாரத்தில் உள்ளது. எங்கள் மக்களை உங்கள் மக்கள் கொன்று விட்டார்கள். இதற்கு நஷ்ட ஈடாக ஒரு பெரும் தொகையைத் தரவேண்டும். தவிர ஃபார்மோசா தீவின் மேற்குப் பகுதியையும் எங்களுக்கே தர வேண்டும்’’.
பல நாடுகளைப் பார்த்து பயப்பட்டுக் கொண்டிருந்த சீனா, ஜப்பானைப் பார்த்தும் நடுங்கியது. ஜப்பானின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டது.
அடுத்ததாக (சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்டிருந்த) கொரியாவைக் கடுமையாக எச்சரித்தது ஜப்பான். கொரியா சீனாவின் ஆலோசனையைக் கேட்க `ஜப்பானை அனுசரித்துச் செல்லுங்கள்’ என்று கூறியது முதுகெலும்பை முழுவதுமாகத் தொலைத்திருந்த சீனா.
எனவே ஜப்பானுக்கு சிறப்பு வணிக அந்தஸ்து அளித்தது கொரியா. பதிலுக்கு “இனி கொரியா சுதந்திர நாடு’’ என்று தடாலடியாக அறிவித்தது ஜப்பான். சீனா தவித்தது. ஜப்பானைப் பகைத்துக் கொண்டால் அதோடு எல்லா எதிரி நாடுகளும் சேர்ந்து விட்டால்? கையாலாகத்தனத்துடன் மெளனம் சாதித்தது சீனா.
அமெரிக்காவுக்குப் பொறுக்கவில்லை. தாங்களும் கொரியாவுடன் நட்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். தொடங்கியது வியாபாரச் சுரண்டல்.
அப்போதும்கூட “கொரியாவை சுதந்திர நாடு என்று ஜப்பான் அறிவித்தால் என்ன? கொரியா பிற நாடுகளுடன் வணிக ஒப்பந்தங்களில் ஈடுபட்டால்தான் என்ன? கொரியா சுயாட்சி பெற்ற பகுதி. ஆனாலும் நம் ஆளுகைக்கு உட்பட்டதுதான்’’ என்று நினைத்தது சீனா. இதைத் தொடர்ந்து கொரியாவில் பல வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது சீனா.
ஜப்பானுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. தொடங்கியது சீன - ஜப்பானிய யுத்தம். இது சீனா எதிர்பார்த்திராத யுத்தம். கொரியாவில் இருந்த சீனப்படைகளை விரட்டியடித்தது ஜப்பான். அங்கிருந்த சீனாவின் போர்க் கப்பல்களையும் மூழ்கடித்தது.
பெரிய நாடான சீனா எதனால் ஜப்பானிடம் தோற்க வேண்டும்? நியாயமான கேள்விதான். ஆனால் சீனா தோற்கப் பல காரணங்கள் இருந்தன. ஏற்கெனவே அதனிடம் கொட்டிக் கிடந்த தாழ்வு (தோல்வி) மனப்பான்மை ஒரு முக்கிய காரணம். தவிர சீனாவை ஆண்ட மஞ்சூ பரம்பரையில் ஊழல் வேரோடிப் போய் இருந்தது. ஜப்பானை எதிர்கொள்ள மிகமிக மெதுவாக ஐரோப்பியர்களின் உதவியை நாடியது சீனா. அதற்குள் நிலைமை கைமீறி விட்டது.
வேறு வழியின்றி ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது சீனா. இதன்படி கொரியாவை சீனா தனி நாடாக அங்கீகரிக்கும். சில தீவுகளை ஜப்பானுக்கு அளிக்கும். தவிர போரினால் உண்டான பாதிப்புகளுக்கு நஷ்டஈடாக 20 கோடி ரூபாயை ஜப்பானுக்கு சீனா அளிக்கும்.
அடுத்து தொடங்கியது மேலும் வீழ்ச்சிகள். “உனக்கு ஆதரவாக ஜப்பானை நாங்கள் எதிர்க்காவிட்டால் விளைவுகள் மிக பயங்கரமாக இருந்திருக்குமே. எனவே எங்களுக்கான பரிசுகள் என்ன?’’ என்று கேட்டன ஐரோப்பிய சக்திகள். உரிமையுடன் வெகுமதிகளைப் பெற்றன.
வட மஞ்சூரியா வழியாக விளாடிவாஸ்டாக் நகருக்கு ரயில் பாதை போட்டுக் கொள்ள அனுமதி பெற்றது ரஷ்யா. தவிர லியோடுங் தீபகற்பத்தை 25 வருடங்களுக்கு குத்தகை எடுத்துக் கொண்டது.
மூன்று சீன மாகாணங்களில் சுரங்கங்கள் தோண்டி பலன் பெறுவதற்கு பிரெஞ்சு முதலாளிகள் அனுமதி பெற்றனர். தன் பங்குக்கு கியாசெள என்ற பகுதியை 99 வருடக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது ஜெர்மனி.
சீன மக்கள் மனதில் பெரும் கசப்பு. ஐரோப்பிய சக்திகளைப் பற்றி அவர்களுக்கு ஒரு திகில் இருந்தது. எனவே அவர்களுக்கு அடிபணிந்ததைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் பக்கத்தில் இருந்த துண்டு நாடு ஜப்பான் தங்களை ஆட்டுவிப்பதா?
மஞ்சூ ஆட்சியாளர்கள்மீது அவர்களுக்கு வெறுப்பு பரவியது. இந்தச் சமயத்தில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் பரபரப்பாகச் செயல்பட்டனர். மதமாற்றத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் மேல்நாட்டுத் தத்துவங்களை சீனர்களிடம் புகுத்தினர். இதனால் பல சீனர்கள் மனம் மாறினர். அவர்களில் முக்கியமானவர் சன்யாட் சென். இவர் பின்னாளில் `சீனக் குடியரசின் தந்தை’ என்றே அழைக்கப்பட்டவர்.
சீன முறைப்படி கல்வி கற்றவர் அவர். ஆனால் ஏனோ அந்தக் கல்வி முறை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த நேரத்தில் வடஅமெரிக்காவில் வாழ்ந்த அவர் அண்ணன் அழைக்க, அங்கு சென்றார். அங்கு ஆங்கிலக் கல்வி படித்தார். ஒரு கட்டத்தில் கிறிஸ்தவ மதம் அவரை ஈர்த்தது. இதைக் கேள்விப்பட்டதும் பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு அவரை தங்கள் ஊருக்கே வரவழைத்தனர்.
சன்யாட் சென்னுக்கு மஞ்சூ ஆட்சியின்மீது அதிருப்தியும், கிறிஸ்தவத்தின்மீது பற்றும் அதிகமாகிக் கொண்டே வந்தன. ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராக புரட்சி செய்யத் தீர்மானித்தார். ஹாங்காங் சென்றார். அங்கு அவர் தங்கி இருந்தபோது அமெரிக்கப் பாதிரியார் ஒருவரோடு நட்பு ஏற்பட்டது. ஸன்யாட் சென் மதம் மாறினார். ஞான ஸ்நானம் செய்து வைக்கப்பட்டார்.
கிறிஸ்தவர்கள் உதவியுடன் மருத்துவம் படித்தார். ஹாங்காங் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்தது. எனவே அங்கிருந்தே சீன அரசுக்கு எதிராக பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார். “பல இடங்களிலிருந்து பெய்ஜிங் மீது படையெடுத்தால் மஞ்சூ அரசு கவிழும்’’ என்று முடிவு செய்தார்.
அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு `முற்போக்கு சீனர்கள் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.
(உலகம் உருளும்)
*************
சீனாவில் பாக்ஸர் கலகம் வெடித்தது. காரணம் இதுதான்.
பல வெளிநாட்டுப் பொருட்கள் சீனாவில் திணிக்கப்பட்டன. கிறிஸ்தவ மத மும்தான். இதனால் பெரும் கோபம் அடைந்தார்கள் கணிசமான சீனர்கள். ‘‘நாட்டின் பொருளாதாரமும், ஒழுக்க நெறிகளும் சீரழியும்போது பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா’’ என்று துடித்தார்கள். என்றாலும் மஞ்சூ ஆட்சிக்கு எதிராக வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை.
குத்துச் சண்டை, கத்தி விளையாட்டு போன்றவற்றில் பயிற்சி அளிப்பதுதான் தங்கள் நோக்கம் என்று குறிப்பிட்டுக் கொண்ட இந்தக் குழு தங்கள் அணியை ‘பாக்ஸர்கள்’ என்று அறிவித்துக் கொண்டார்கள். தாங்கள் வல்லவர்கள் என்றும் ஆதிக்க சக்திகள் தங்களை எதுவும் செய்ய முடியாது என்றும் கூறிக் கொண்டார்கள். தங்களை சீனக் கலாச்சாரத்தின் காவலர்கள் என்றும் அறிவித்துக் கொண்டனர். அரசும் பாக்ஸர்களுக்கு ஆதரவு தரத் தொடங் கியது. இதனால் வெளிநாட்டினர் அதிருப்தி அடைந்தனர். ஆங்கில இதழ்கள் சீன அரசைத் தாக்கி கட்டுரைகள் எழுதின.
இதெல்லாம் அப்போது லண்டனில் இருந்த சன்யாட் சென்னுக்கு மேலும் கசப்பை அளித்தது. தனது புரட்சிகரமான அமைப்பை ஓர் அரசியல் கட்சியாக மாற்றி னார். அதற்குப் பெயர் கோமின்டாங்.
பெய்ஜிங்கில் உள்ள மன்னர் ஆட்சிக்குப் போட்டியாக, (சீனாவின் மற்றொரு பகுதி யான) நான்கிங் என்ற பகுதியில் சீனக் குடியரசை நிறுவினார். 1912 ஜனவரி முதல் தேதியன்று அந்தக் குடியரசின் தலைவரானார். மன்னர் ஆட்சிக்கு எதிர்ப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது.
இந்த நிலையில் யுவான் ஷிகாய் என்ற உள்ளூர் தலைவர் ஒருவரிடமிருந்து சன்யாட் சென்னுக்கு தந்தி ஒன்று வந்தது. ‘’உங்கள் குடியரசை நான் விரும்பி ஏற்கி றேன்’’ என்றது தந்தி வாசகம்.
யுவானுக்கு பண பலம், படை பலம் இரண்டுமே அதிகம். எனவே அவரைக் கொண்டு மன்னர் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டார் சன்யாட் சென். ‘‘சீனா முழுவதுமே குடியரசானால் நீங்களே அதற்குத் தலைவராக இருக்கலாம்’’ என்றார் பெருந்தன்மையாக.
மஞ்சூ மன்னனுக்கு யுவான் எச்சரிக்கை விடுத்தார். ‘‘நீங்களே அமைதியாக பதவியை விட்டு இறங்கி விடுங்கள். உங்கள் வசதிகள் தொடரும். ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு நாற்பது லட்சம் டாலர் அளிக்கப்படும். இதற்கு ஓப்புக் கொள்ளாவிட்டால் நீங்கள் கட்டாயமாக பதவி இறக்கி, கொல்லப்படுவீர்கள்’’. ஏற்கெனவே மக்களின் கொந்தளிப்பில் பயந்திருந்த மன்னன் முடி துறக்க ஒப்புக் கொண்டார். 1912 பிப்ரவரி 12 அன்று சீனா ஒரு குடியரசு ஆனது.
சன்யாட் சென்னின் ஆதரவுடன் யுவான் சீனக் குடியரசின் முதல் அதிபர் ஆனார்.
ஆனால் நாளடைவில் யுவான் போக்கு மாறியது. சன்யாட் சென் கட்சிக்குப் போட்டி யாக யுவான் ‘முன்னேற்றக் கட்சியை’ தொடங்கினார். பின்னர் சட்டவிரோதமான கட்சி என்று கூறி தேசியக் கட்சியைக் கலைத்துவிட்டார். இதன் விளைவாக சன்யாட் சென்னும் யுவானும் ஒருவரை ஒருவர் நேரடியாகவே எதிர்க்கும் சூழல் உருவானது.
யுவானுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு வலுத்தது. ஆனால் அவரோ தன் ஆட்சிக்கு உலக நாடுகளின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந் தார். இதற்காக மங்கோலியாவுக்கு சுயாட்சி அளித்தார்.
திபெத்தில் பிரிட்டனுக்கு அதிக உரிமைகள் அளித்தார். ஆனால் உள்நாட்டில் எதிர்ப்பு மேலும் பெருகியது. கொதித்துப் போன யுவான் புதிய அரசியல் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதன்படி யுவான்தான் சீனாவின் வாழ்நாள் அதிபர். தவிர தன்னை சக்கரவர்த்தி என்று அறிவித்துக் கொண்டார்.
சன்யாட் சென் அதிர்ச்சி அடைந்தார். அவரது புரட்சிகளை யுவான் தன் படை பலத் தால் அடக்கினார். ஜப்பானுக்குச் சென்ற சன்யாட் சென் அங்கு தனது தேசியக் கட்சியைப் புதுப்பித்தார்.
அதே சமயம் சீனாவில் மீண்டும் சர்வாதிகாரம். ஒருவிதத்தில் மன்னர் ஆட்சி. (யுவான்தான் சக்கரவர்த்தி ஆயிற்றே).
இந்த சிக்கலை இயற்கை தீர்த்து வைத்தது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு 1916-ம் ஆண்டு யுவான் உயிரிழந்தார்.
****************
யுவான் இறந்த பிறகு சுமார் பத்து வருடங்களுக்கு குறிப்பாக எந்த அரசும் சீனாவில் ஆட்சி செய்யவில்லை. ஆட்சியில் அமர்ந்தவையெல்லாம் உள்ளூர் தாதாக்களின் தாற்காலிக அமைப்புகளாகவே இருந்தன. எனவே இந்த அரசுகளையெல்லாம் பிற உலக நாடுகள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அங்கீகரிக்கவும் இல்லை.
இதற்கிடையில் முதலாம் உலகப் போர் வெடித்தது. சீனாவின் ஆதரவு அப்போது நேச நாடுகளுக்குத் தேவைப்பட்டது. சீனாவின் நீண்ட கடற்கரையும், பெரிதான ராணுவமும் அவர்களுக்கு அவசியமாக இருந்தது.
சீனா ஆதரவு தர ஒப்புக் கொண்டது. அப்போது சீனாவிடமிருந்து ஜெர்மனி பிடுங்கிக் கொண்டிருந்த ஷாங்டாங் என்ற பகுதி போருக்குப் பிறகு சீனாவுக்கே அளிக்கப்படும் என்றன நேச நாடுகள்.
சீனாவைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேர் பிரான்ஸுக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து யுத்தம் செய்தனர்.
நேச நாடுகள் போரில் வென்றன. ஷாங்டாங் பகுதி ஜெர்மனியிடமிருந்து மாற்றப்பட்டது - சீனாவுக்கு அல்ல! மாறாக அந்தப் பகுதி ஜப்பானுக்கு அளிக்கப்பட்டது.
ஜப்பான் ரொம்ப பெரிய மனிதத்தனத்துடன் நடந்து கொள்வதுபோல் பாவனை செய்தது. ‘’ஷாங்டாங்கை நேச நாடுகள் சீனாவுக்கு அளித்தது போலவும், சீன அரசே அதை எங்களுக்கு அளித்ததுபோலவும் இருக்கட்டும்’’ என்றது. முட்டாள்தனமாக சீன அரசு இதற்கு ஒப்புக் கொண்டது.
இப்படியொரு வெட்கம்கெட்ட அரசா? சீன மாணவர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினார்கள். மே மாதம் 4-ம் தேதி அன்று மாணவப் பிரதிநிதிகள் பெய்ஜிங்கில் கூடினார்கள். மே 4 இயக்கம் என்றும், புதிய கலாசார இயக்கத்தின் தொடக்கம் என்றும் சரித்திரத்தில் அறியப்பட்டது இந்தக் கூட்டம்.
எதிர்ப்புகள் இருந்தாலும் ஷாங்டாங் ஜப்பானுக்குச் சென்றது.
இந்த நிலையில் ஜப்பானிலிருந்து மீண்டும் சீனாவுக்கு வந்திருந்தார் ஸன்யாட் சென். போட்டி அரசு ஒன்றுக்குத் தலைவர் ஆனார். சோவியத் யூனியனின் உதவியை நாடினார். சீனப் புரட்சி வீரர்களுக்கு உதவுவதற்கு சோவியத் ஒப்புக் கொண்டது. ஆனால் அப்போது சீனாவிலும் கம்யூனிஸ்ட் அரசு ஒன்று உருவாகவே, அதற்கும் ஆதரவு அளித்தது.
சில ஆண்டுகளில் ஸன்யாட் சென் புற்றுநோயால் இறந்தார். வலிமையாக விளங்கிய அவரது கட்சியின் அடுத்த தலைவராக வந்தவர் சியாங் கை ஷெக். இவர் தன் தலைமையின்கீழ் பாதி சீனாவை தங்கள் வசப்படுத்திக் கொண்டார். நான்ஜிங் என்ற நகரில் தனது அரசை ஏற்படுத்தினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஹுஹாங் நகரில் தங்கள் ஆட்சியை மையப்படுத்தினர். ஆக ஒரு கால கட்டத்தில் பெய்ஜிங், நான்ஜிங், ஹுஹாங் என்று மூன்று தலைநகரங்கள் சீனாவுக்கு இருந்தன.
ஒருகட்டத்தில் சியாங் ஒரு கடுமையான உத்தரவை வெளியிட்டார். தனது கட்சியை சீனக் கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டுப் பிளவு படுத்துகிறார்கள் என்ற செய்தியால் உருவான உத்தரவு அது. ‘சீனக் கம்யூனிஸ்ட்டுகளைக் கொன்றுவிடுவோம்’ என்பதுதான் அந்த உத்தரவு.
சீனக் கம்யூனிஸ்ட்டுகள் தப்பி ஓடினார்கள். அவர்களில் ஓர் இளைஞரும் இருந்தார் மா சே துங்.
ஏழை விவசாயியின் மகனாக ஷாவோஷான் என்ற கிராமத்தில் பிறந்தவர் மா சே துங். அவர் அப்பாவுக்கு நிறைய கடன் தொல்லை. விவசாயத்தில் கிடைத்த பணம் போதவில்லை. இந்த ஒரே காரணத்திற்காக ராணுவத்தில் சேர்ந்தார் அவர். சம்பளத்தை சேமித்தார். கிராமத்துக்குத் திரும்பினார். விவசாயம் கலந்த வியாபாரத்தில் ஈடுபட்டார்!
அதாவது கிராம விவசாயிகளிடமிருந்து தானியங்களை வாங்கி நகர வியாபாரிகளுக்கு அதிகத் தொகைக்கு விற்ற வியாபாரம்.
உள்ளூர் பள்ளியில் சேர்க்கப்பட்டார் மா சே துங். காலையிலும், மாலையிலும் வயலில் வேலை செய்ய வேண்டும். தன் அப்பா அடிக்கடி தன்னை மட்டம்தட்டிப் பேசியதை சிறுவன் மா சே துங்கால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும் விருந்தினர்களுக்கு எதிரே தன்னை ஒரு நாள் அவமானப்படுத்தியதும், வீட்டை விட்டே ஓடத் தொடங்கினார். பின்னாலேயே அப்பாவும், அம்மாவும் வந்தனர்.
இனி உன்னை அடிக்க மாட்டேன் என்று அப்பா உறுதி கொடுத்த பிறகு வீட்டுக்கு வந்தார் மா சே துங். ‘’வளைந்து கொடுக்காமல் இருந்தால் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதை முதன் முதலில் எனக்கு உணர்த்திய சம்பவம் அது’’ என்று பின்னாளில் இதைப் பற்றி குறிப்பிட்டார் மா சே துங்.
நிறைய கதைகளை ஆர்வமாகக் கேட்ட மா சே துங் மனதில் ஒரு கேள்வி மட்டும் பலமாக எழுந்தது. இலக்கிய நாயகர்களில் ஒருவர்கூட ஏன் விவசாயியாக இல்லை?
அதன் பிறகு அவர் கவனம் அரசியலுக்குத் திரும்பியது. தன் தாய் நாடும் அடிமை நாடாக ஆகிவிடுமோ என்று கவலைப்பட்டார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் பெய்ஜிங் சென்றார். அங்கு தேசிய பல்கலைக்கழக நூலகத்தில் ஒரு வேலை கிடைத்தது. சின்ன வேலை. ஆனால் மா சே துங்கின் அறிவுத்தளம் அங்கு பெரிதும் விரிவடைந்தது. பகுதி நேரமாக கல்லூரியில் படிக்கத் தொடங்கினார். முக்கியப் பாடங்களாக அவர் தேர்ந்தெடுத்தது இதழியல் மற்றும் தத்துவம்.
ரஷ்யப் புரட்சி வெற்றியடைந்ததை அறிந்து கொண்ட பிறகு மா சே துங்கிற்கும் புரட்சி அரசியல் பற்றிய தாகம் எழுந்தது. ஆனால் அப்போதும் அவர் கம்யூனிஸ்ட் ஆகவில்லை. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி சரியாக உருவாகாத காலம் அது.
(உலகம் உருளும்)
**************
மா சே துங் தேசியக் கட்சியில் இருந்தார். அது அரசியல் வார இதழ் ஒன்றை வெளியிட்டது. அதன் ஆசிரியராக மா சே துங் செயல் பட்டார். அதில் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் விவசாயிகளை அணிதிரட்டுவது சுலபம் என்று அவர் எழுத, அந்தக் கட்டுரை அச்சேறவில்லை. இத்தனைக்கும் தேசியக் கட்சியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டாகச் செயல்பட்ட காலம்தான் அது. மா சே துங் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தார்.
பின்னர் சரித்திர முத்திரை பெற்ற `வடக்குப் படையெடுப்பு’ தொடங்கியது. பெய்ஜிங் அரசுக்கு எதிராக தேசியக் கட்சித் தலைவர் சியாங் நடத்திய அந்தப் படையெடுப்பில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
ஆனால் நாளடைவில் கம்யூனிஸ்ட் கட்சியை சியாங் வெறுக்கத் தொடங்கினார். “இனி கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு நம் கட்சியைச் சேர்ந்த யார் தொடர்பு வைத்துக் கொண்டாலும் அவருக்கு மரண தண்டனைதான்’’ என்றார்.
ஆனால் மா சே துங் விவசாயிகள் புரட்சிக் குழுவின் தலைவராக உயர்ந்திருந்தார். கம்யூனிஸ்ட்டுகளின் பேரபிமானத்தை பெறத் தொடங்கி இருந்தார். எனவே மா சே துங்கை பலவிதங்களில் அலைக்கழித்தது சியாங் அரசு. அவர் நிலத்தைக் கைப்பற்றியது. அவர் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டார். மா சே துங்கை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் வெகுமதி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தங்கள் மீதான ராட்சதத்தனமான அடக்குமுறையைத் தாங்க முடியாமல் கம்யூனிஸ்ட்டுகள் தப்பிச் சென்றார்கள். அது ஒரு தோல்வியின் தொடக்கம்தான். ஆனால் முடிவு வெற்றிகரமாக இருந்தது. அதை `நீண்ட நடைப் பயணம்’ என்கிறார்கள்.
இந்தப் பயணத்தைத் தொடங்கியபோது அதில் ஒரு லட்சம் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் நடந்த தூரம் ஆறாயிரம் மைல்கள். ராணுவத்தினரிடம் அகப்படாமல் செல்ல வேண்டிய கட்டாயம். வழியில் 18 மலைத் தொடர்களை கடக்க வேண்டி இருந்தது.
செம்படை என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொண்ட இவர்கள் போகும் வழியில் எல்லாம் அரசுக்கு எதிரான வீதி நாடகங்களை நடத்தினார்கள். நிலப்பிரபுக்களின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு ஏழை விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டுமென்றால், பேச்சுரிமை வேண்டுமென்றால் கம்யூனிஸ ஆட்சிதான் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள்.
தொடக்கத்தில் கியாங்க்ஸ்லி மாகாணத்தை தங்கள் வசம் கொண்டு வந் தார்கள். போகப் போக பல மாகாணங்கள் அவர்கள் வசம் வந்து சேர்ந்தன.
இந்த நீண்ட பயணத்தில் பெரும் புகழ் பெற்றவர்கள் நால்வர். மா சே துங், சூ என் லாய், சூ தேக் மற்றும் டெங் ஜியோபிங்.
சியாங் ஆட்சியின்மீது அதிருப்தி பரவத் தொடங்கியது. இந்தச் சூழலை ஜப்பான் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. மெல்லமஞ்சூரியாவின் பெரும் பகுதியை தன் வசம் கொண்டு வந்தது. ஐ.நா.வின் எச்சரிக்கை வந்ததும், ஐ.நா.சபையிலிருந்தே விலகியது ஜப்பான். பின்னர் முழு மஞ்சூரியாவையும் கைப்பற்றியது. அடுத்து அதன் பார்வை சீனாவின்மீது விழுந்தது.
தங்கள் பகைமையைக் குறைந்த பட்சம் ஒத்திப் போட்டால்தான் ஜப்பானை எதிர்க்க முடியும் என்பதை சியாங் அரசும், சீன கம்யூனிஸ்ட்களும் உணர்ந்து கொண்டார்கள். ஒரே அணியில் நின்று ஜப்பானை எதிர்த்தார்கள். (என்றாலும் அவரவர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அவரவரிடம்தான் இருந்தன).
1945ல் ஜப்பான் - சீனா போர் முடிவடைந்தபோது இரண்டு கோடி சீனர்கள் போரில் இறந்திருந்தார்கள். ஷாங்காய், நான்ஜிங் ஆகிய பகுதிகள் ஜப்பானின் வசம் சென்றிருந்தன.
இரண்டாம் உலகப்போரின்போது சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா அதிகமாகவே தலையிட்டது. தேசியக் கட்சியான கோமிங்டாங்கிற்கு ராணுவ உதவி அளித்தது.
அமெரிக்காவும், பிரிட்டனும் சீனாவுடன் புதிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இதன் மூலம் பழைய ஒப்பந்தங்களில் சீனாவுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதிகள் பெரும்பாலும் முடிவுக்கு வந்தன.
ஆனால் சீனாவில் கோமிங்டாங்கும், கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்து நின்றதைப் பார்த்தபோது சீனாவிற்குக் கவலை ஏற்பட்டது. இதையே சாக்காக வைத்துக் கொண்டு சோவியத் யூனியன் சீனாவில் கால் ஊன்றி விடக் கூடாதே!
அந்தக் கவலை நிஜமானது. 1949 ஜனவரியில் பெய்ஜிங்கை கம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றினார்கள். சீனாவின் முக்கிய நகரங்கள் கம்யூனிஸ்ட்டுகள் வசம் வந்தன.
சியாங்கும், கோமிங்டாங் ராணுவத்தினரும் இருபது லட்சம் அகதிகளும் தைவான் தீவுக்கு தப்பி ஓடினார்கள். தைவானில் உள்ள தைபேதான் சீனக் குடியரசின் புதிய தலைநகர் என்று சியாங் அறிவித்தார்.
பிறநாடுகளுக்குக் குழப்பம். எந்த அரசை அங்கீகரிப்பது? அவர்கள் கோமிங்டாங் அரசு சீனக் குடியரசு என்றும், கம்யூனிஸ்ட் அரசை சீன மக்கள் குடியரசு என்று அறிவிக்கத் தொடங்கினார்கள்.
ஐ.நா.வைப் பொறுத்தவரை சீனாவில் கம்யூனிஸ அரசு என்பது ஓர் அநியாய ஆக்ரமிப்பு. எனவே அங்கீகாரம் கிடையாது.
ஆனால் போகப்போக பரந்து பட்ட சீனாவின் மக்களில் பலரும் கம்யூனிஸ ஆட்சியை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினார்கள்.
அதே சமயம் தைவானில் ஒரு மாற்றம். கிட்டத்தட்ட சர்வாதிகாரியாக இருந்த சியாங்கிற்குப் பிறகு வந்தவர்கள் அங்கே ஜனநாயகத்தைக் கொண்டு வந்தனர். கோமிங்டாங் கட்சி அல்லாத ஒருவர் தைவானுக்குத் தலைமை ஏற்ற அதிசயமும் நடந்தது.
ஐ.நா.வின் அடிப்படை உறுப்பினர்களில் ஒன்றாக விளங்கியது கோமிங்டாங் அரசு. ஆனால் 1971-ல் இந்த உறுப்பினர் பதவியை கம்யூனிஸ அரசுக்கு அளித்து விட்டது ஐ.நா.சபை.
*******************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக