ஜெர்மன் தொழிலதிபரும் நாஜிக்களிடம் இருந்து ஏராளமான யூதர்களின் உயிரைக் காப்பாற்றியவருமான ஆஸ்கர் ஷிண்ட்லர் (Oskar Shindler) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஜெர்மனியில் இருந்த ஸ்விட்டாவ் (தற்போது செக் குடியரசில் உள்ளது) பகுதியில் 1908-ல் பிறந்தவர். கல்லூரி யில் தொழில்நுட்பக் கல்வி பயின்ற பிறகு, தந்தையின் விவசாயக் கருவி கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாற்றினார்.
l அப்போது ஜெர்மனியில் அதிரடியான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சிக்கு வந்தது. தன் வியாபாரத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் அக்கட்சியில் சேர்ந்தார்.
l போலந்து மீது ஹிட்லர் 1939-ல் படையெடுத்தார். ஒரே வாரத்தில் ஷிண்ட்லரும் அங்கு போய்ச் சேர்ந்தார். அங்கு நலிவடைந்திருந்த சமையல் பாத்திரங்கள் உற்பத்தி தொழிற்சாலையை விலைக்கு வாங்கினார். ராணுவத்துக்கு சமையல் பாத்திரம் சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை லஞ்சம் கொடுத்து பெற்றார். தன் தொழிற்சாலையில் சொற்ப சம்பளத்தில் யூதர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டார்.
l போலந்தில் யூதர்கள் இழிவாக நடத்தப்படுவதையும் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுவதையும் கண்டு இவரது மனம் இளகியது. தன்னிடம் வேலை செய்பவர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று உறுதிபூண்டார்.
l யூதர்கள் அடைக்கப்பட்டிருந்த முகாம்கள் மற்றும் இவரது தொழிற்சாலையை மூட 1943-ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஷிண்ட்லர் சுதாரித்துக்கொண்டார். தனக்குத் தெரிந்த அதிகாரியி டம் லஞ்சம் கொடுத்து, ராணுவத் தளவாட தொழிற்சாலையாக மாறிவிட்ட தன் தொழிற்சாலையை செக்கோஸ்லேவியாவுக்கு மாற்றவும் தனக்குத் தேவையான தொழிலாளிகளைத் தெரிவுசெய்து அழைத்துச் செல்லவும் அனுமதி பெற்றார்.
l யூதத் தொழிலாளர்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்தார். ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ என வரலாற்றில் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் சுமார் 1,200 பேர் இருந்தனர். உயிரைப் பணயம் வைத்து அவர்களை செக்கோஸ்லேவியாவுக்கு அழைத்துச் சென்றார். அவரது தொழிற்சாலையில் ஒரு ஆயுதம்கூட தயாரிக்கப்படவில்லை. யூதர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகவே ராணுவ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதை நடத்திவந்தார்.
l இரண்டாம் உலகப்போர் 1945-ல் முடிவுக்கு வந்தது. ஜெர்மனி சரணடைந்தது. ரஷ்யப் படையினரால் பிடிபடுவோம் என்ற பயத்தில் குடும்பத்துடன் ஜெர்மனிக்கு தப்பினார் ஷிண்ட்லர். ‘ஷிண்ட்லரின் யூதர்கள்’ 1,200 பேரும் ரஷ்ய ராணுவ அதிகாரி உதவியுடன் தப்பினர்.
l போருக்குப் பின் திவாலான இவருக்கு யூதர்கள் இறுதி வரை உதவி செய்துவந்தனர். 1968-ல் இவருக்கு இஸ்ரேலில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
l இவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
l அதிக லாபம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும் அப்பாவிகளை நேசிக்கும் மனிதநேயம் கொண்டவர். ஏராளமான யூதர்களின் உயிர்களைக் காப்பாற்றி உலக வரலாற்றிலும், யூதர்களின் மனங்களிலும் நீங்காத இடம்பிடித்த ஆஸ்கர் ஷிண்ட்லர் 66 வயதில் (1974) மறைந்தார். அவரது விருப்பப்படி இஸ்ரேலில் உடல் அடக்கம் செய்யப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக