திங்கள், 27 ஜூலை, 2015

Air Pollution

டெல்லி மாநகரில் அதிகரிக்கும் காற்று மாசு பெரும் கவலையை உருவாக்கிவருகிறது. தொடர்ந்து வரும் எச்சரிக்கைகளும் அறிக்கைகளும் பீதியூட்டுகின்றன. டெல்லி சமூகம் இப்போது இதை ஒரு பெரும் பிரச்சினையாக உணர ஆரம்பித்திருப்பது நல்ல சமிக்ஞை. ஆனால், நாட்டின் ஏனைய பகுதிகளில் இருப்பவர்களுக்கு இது குறித்து எந்தப் பிரக்ஞையும் இல்லாமலிருப்பது எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம், ‘காற்றின் தர அட்டவணை’யை வெளியிட்டார். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கிடையில் காற்றின் தரம் எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க இந்த அட்டவணை உதவியாக இருக்கிறது. கடந்த 6 மாதங்களாக இந்தியாவின் 11 நகரங்களில் காற்றின் தரம் எப்படி இருக்கிறது என்று பதிவுசெய்து ஆராய்ந்ததில், உத்தரப் பிரதேசத்தின் கான்பூர், வாரணாசி; தமிழகத்தின் சென்னை ஆகியவற்றில்தான் காற்றில் நச்சுப் பொருட்கள் அதிகம் கலந்திருப்பது தெரியவந்திருக்கிறது. நிச்சயம் நமக்கு இது கெட்ட செய்தி. ஆனால், தமிழகத்தில் இன்றைக்கு எத்தனை பேர் இந்தச் செய்தியை அதன் முழு அபாயத்துடன் உணர்ந்திருக்கிறோம்? அதற்கான காரணங்களில் நம்முடைய அலட்சியமும் கலந்திருப்பதைத் தெரிந்துவைத்திருக்கிறோம்?
சுற்றுச்சூழல் மாசு வகைகளில் முக்கியமானது காற்று மாசு. மேலும், ஏனைய விஷயங்களைவிடவும் எளிதாக மாசடையக் கூடியது காற்று. சமையலறைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகையில் தொடங்கி, தூய்மையற்று தெருக்களிலிருந்து கிளம்பும் புழுதி, குப்பையை எரிப்பதால் உண்டாகும் புகை, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் உண்டாகும் நஞ்சு, இரு சக்கர - நான்கு சக்கர வாகனங்கள் வெளியிடும் புகை, ரப்பர், தார் போன்றவற்றைக் காய்ச்சுவதால் உண்டாகும் புகை, அனல் மின் நிலையங்கள் வெளியேற்றும் கரிப் புகை, கடல் பரப்பிலிருந்து வரும் உப்பங்காற்றில் உள்ள மெல்லிய துகள்கள், வதைக்கூடங்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் நுண்ணுயிரிகள், உலோகக் கழிவுகளை எரிக்கும் ஆலைகள் வெளியேற்றும் நச்சுக் காற்று என்று காற்று மண்டலத்தைப் பாதிக்கும் காரணிகள் ஏராளம். ஏனைய நகரங்களுடன் ஒப்பிடும்போது, சென்னை மாநகரக் காற்றில் வழக்கமான கழிவுகளுடன் சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு போன்ற நச்சுக் காரணிகள் அதிகம் காணப்படுகின்றன.
புகை வருகிறதே என்று நாம் சமைக்காமல் இருக்க முடியாது; வாகனங்களைப் பயன்படுத்தாமல் முடங்கிப்போக முடியாது. எனினும், மாசைக் கட்டுப்படுத்த முடியும். ஆளுக்கொரு மோட்டார் சைக்கிள் / காரில் பயணிப்பதைக் காட்டிலும் பஸ்ஸில் பயணிக்க முடியும். பொதுப் போக்குவரத்தின் வாயிலாகக் கணிசமாகக் காற்று மாசைக் குறைக்க முடியும். பொதுவெளிகளில் குப்பைகளை வகை பிரிக்காமல் அப்படியே போடுவது, குப்பைக் கிடங்குகளில் போட்டு அப்படியே எரிப்பது போன்ற எவ்வளவோ காரியங்களை நம்மால் தடுக்க முடியும். அதேபோல, ஆலைகளிலிருந்து நச்சு வாயுக்களை அப்படியே வெளியேற்றாமல் சுத்திகரித்து வெளியேற்றுவது, கூடுமானவரை மாசைக் குறைக்கும் பசுமைத் தொழில்நுட்பத்துக்கு ஆலைகளை மாறச் செய்வது என்று அரசின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்ய முடியும். அடிப்படையில் நமக்கு வேண்டியது பிரக்ஞை. நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால், நம் குடும்பத்தினரின் உடல்நிலை பாதிக்கிறது என்றால், அதற்குரிய காரணிகளில் சுற்றுச்சூழலுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்ற பிரக்ஞை. அதிலிருந்துதான் நாம் எல்லாவற்றையும் தொடங்க வேண்டும். நஞ்சை சுவாசித்து எதைக் கட்டியெழுப்பப்போகிறோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக