கிரையோஜெனிக் இன்ஜின்
இந்தியாவின் ஆற்றல்மிகு கிரையோஜெனிக் இன்ஜினை நேற்று வெற்றிகரமாக சோதித்து சாதனை படைத்துள்ளனர் இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) விஞ்ஞானிகள்.இந்தியாவின் ராக்கெட் இன்ஜின் தயாரிப்பு துறையில் இது முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கவில்லை. ஆனால் அதுவே கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் இந்திய விஞ்ஞானிகளை கடந்த 20 ஆண்டுகால முயற்சியில் நிபுணத்துவம் பெற உதவியுள்ளது.
இதற்கு முன்பு சிறியரக கிரையோஜெனிக் இன்ஜின்களை மட்டுமே இந்தியா தயாரித்து வந்தது. இப்போது மிகவும் ஆற்றல் மிகுந்த கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 டன் எடையுள்ள செயற் கைக்கோள்களை விண்ணில் ஏவ முடியும். இந்த இன்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்.
ஹைட்ரஜனையும், ஆக்சிஜ னையும் குளிர்வித்து அதனை திரவ வடிவத்தில் எரிபொருளாக பயன்படுத்துவதுதான் கிரையோ ஜெனிக் தொழில்நுட்பம். இந்த வகை இன்ஜினில்தான் அதிக உந்துசக்தி கிடைக்கும். அதன் மூலம் ராக்கெட் விண்ணை நோக்கி சிறப்பாக சீறிப்பாயும். ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் வாயுவாக ராக்கெட்டில் வைத்து அனுப்ப ராக்கெட்டில் போதுமான இடம் இருக்காது. எனினும் ஹைட்ரஜன் வாயுவை மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகும். ஆக்சிஜனை மைனஸ் 184 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர் வித்தால் திரவமாகும். இந்த திரவங்கள் ராக்கெட்டின் முன்புறத்தில் தனித்தனி இடங்களில் சேமித்து வைக்கப்படும். ராக்கெட் உயரே செல்லும்போது இந்த இரண்டும் ராக்கெட்டின் கீழ்ப்புற முள்ள பகுதியில் வாயுவாக மாறி ஒன்றுசேர்ந்து எரிந்து சிறப்பான உந்துசக்தியை வெளிப்படுத்தும்.
விண்வெளியில் மேலே செல்ல செல்ல எரிபொருளுக்கு உதவும் ஆக்சிஜன் கிடைக்காது என்பதால் அது ராக்கெட்டிலேயே வைத்து அனுப்பப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக