பாலாறு - அவலத்தை அலசும் தொடர்
மனிதனுக்கு இயற்கை கற்றுக்கொடுத்த பாடங்கள் ஏராளம். அந்த வகையில் குன்றாத வளத்தைக் அள்ளிக்கொடுத்த ஒரு ஜீவநதியாக பாலாறு இருந்துள்ளது. பொன்னாய் படர்ந்திருக்கும் மணலுக்கு கீழே வற்றாத நதியாக பாலாறு இன்றும் ஓடி மக்களின் தாகத்தை தணிக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு நிகரான நெல் உற்பத்திக்கு மூலகாரணியும் இதே பாலாறுதான்.
லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பசுமையாக்கிய பாலாறு இன்று தனது அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறது. பொங்கும் நுரையுடன் புது வெள்ளமாய் கரைகளைத் தொட்டு பாய்ந்த நீரின் ஆர்ப்பரிப்பை இனி எப்போதும் கேட்க முடியாது. ஏரிகளுக்கு நீர் சுமந்து வந்த கால்வாய்கள் காணாமல் போய்விட்டன. உலகில் மாசுபட்ட நதியாக மாறிவிட்ட பாலாற்றின் சோகமான வரலாற்றுப் பதிவுதான் இந்த தொடர். இதற்காக பாலாறு உற்பத்தியாகும் நந்திதுர்கத்தில் இருந்து 'தி இந்து' தனது பயணத்தை தொடங்கியது.
பாலாற்றின் பிறப்பிடம் கர்நாடக மாநில நந்திதுர்கம். அம்மாநிலத்தில் 93 கி.மீ. பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ. கடந்து, தமிழகத்தில் அதிகப்படியாக 222 கி.மீ. என 348 கி.மீ. தூரம் தடம் பதித்த பாலாறு காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
பாலாறு பிறந்த நந்திதுர்கம்
கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்கம் மலை பாலாற்றின் பிறப்பிடம். கடல் மட்டத்தில் இருந்து 4,851 அடி உயரமுள்ளது. பெங்களூருவில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் இருக்கும் மிகச்சிறந்த கோடை வாசஸ்தலம். பாலாறு, வடபெண்ணை, தென்பெண்ணை, சித்ராவதி, அரக்காவதி, பாப்னாகி என 6 நதிகளின் பிறப்பிட மும் நந்திதுர்கம்தான்.
முன்னொரு காலத்தில் குஷ்மந்தகிரி என்று அழைக்கப்பட்ட நந்திமலையை, சோழர்கள் ஆட்சிக் காலத்தில் அனந்தகிரி என்று அழைத்துள்ளனர். சிவனின் வாகனமான நந்தியின் தோற்றத்துடன் இருந்த அனந்தகிரி மலை பிற்காலத்தில் நந்திதுர்கமாக பெயர் மாறியது. அடர்ந்த வனப் பகுதியாக இல்லாமல் சாதாரணமாக பசுமை நிறைந்த மலையாக நந்திதுர்கம் இருப்பது ஆச்சரியம். அடிவாரத்தில் இருந்து மலையை நோக்கிய நந்தி சிலைதான் நந்திதுர்கத்துக்கு செல்லும் வழிகாட்டியாக இருக்கிறது.

வறண்டுபோன ஊற்று
நெல்லிக்காய் பசவன்னா சிலைக்கு அருகில் பிரம்மாசிரமம். அதற்கு சற்று தூரத்தில் பாலாறின் நதி மூலம் இருக்கிறது. 4,800 அடி உயரத்தில் இருக்கும் இந்த ஊற்றில் பொங்கி வரும் பாலாற்றுக்கு கல் மண்டபம் கட்டியுள்ளனர். இது இன்று பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த அடையாளமும் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது.
ஊற்றில் பொங்கிப் பெருக்கெடுத்த பாலாறு மலை அடிவாரத்தை நோக்கி ஓடைகளாய் பாய்கிறது. பெரிய அளவிலான ஓடைகள் இல்லாவிட்டாலும், சிறு சிறு ஓடைகள் அருகில் இருக்கும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுகிறது.
கோடை வாசஸ்தலம் என்ற சுற்றுலா அடையாளத்தால் வேகமாய் வளர்ந்துவரும் கான்கிரீட் கட்டிடங்களால் நந்தி துர்கத்தின் அடையாளங்கள் சிதைந்து கொண்டிருக்கிறது. கூடவே பாலாற்றின் மூலமும்தான்.
திப்பு சுல்தானின் ஓய்வுக் கோட்டை
மராத்திய மன்னர் மாதவராவிடம் இருந்து 1770-ம் ஆண்டில் வாங்கப்பட்ட இந்த நந்திதுர்கம் திப்புவின் கோடை கால ஓய்வுக்கும், வேட்டையாடும் இடமாக இருந்துள்ளது. மிக உயர்ந்த மலைகளில் பலம் நிறைந்த கோட்டைகளை கட்டி வைத்திருந்த திப்பு சுல்தான், நந்திதுர்கத்தையும் தனது ராணுவ பலத்தை நிரூபிக்கும் கோட்டையாக மாற்றினார்.
மலையின் உச்சியில் திப்பு சுல்தான் ஓய்வெடுக்க 12 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்துடன் கூடிய சிறிய மாளிகை இருக்கிறது. சாதாரண மாடி வீட்டைப்போல காட்சியளிக்கும் இங்கிருந்து மலையின் அடிவாரத்தில் வருபவர்களை பார்க்க முடியும்.
கடுமையான குற்றங்கள் புரிந்தவர்கள் நந்தி மலையின் உச்சியில் இருந்து கீழே தள்ளி மரண தண்டனையை நிறை வேற்றிய இடம்தான் தற்போது திப்பு முனை என்றழைக்கப் படுகிறது. இந்த பகுதியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கின்றனர். மலையடிவாரத்தில் பதுங்கியிருக்கும் எதிரிகளை துப்பாக்கியால் சுடுவதற்கு, பலம்மிக்க மதில்களில் துவாரங்கள் வைத்து கட்டியிருப்பது திப்புவின் ராணுவ மதிநுட்பத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
யோக நந்தீஸ்வரர் கோயில்
மலை உச்சியின் ஒரு பகுதியில் இருக்கும் யோக நந்தீஸ்வரர் கோயில் 9-ம் நூற்றாண்டில் பாணர்கள் காலத்தில் கட்டியது. 11-ம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியில் கோயில் கோபுர மண்டபமும், பின்னாளில் வந்த ஹொய்சாலர்கள், விஜயநகர பேரரசுகள் ஆட்சிக் காலங்களில் கூடுதல் மண்டபம், சதுர வடிவ குளம் ஆகியவை வரலாற்றை நினைவூட்டுகின்றன.
நெல்லிக்காய் பசவன்னா
நந்திதுர்கத்தின் மற்றொரு அழகு நெல்லிக்காய் பசவன்னா (நந்தி). 6 அடி உயரம் 10 அடி நீளமுள்ள நந்தி சிலை, மலையில் இருந்து நிலத்தை நோக்கிப் பார்ப்பது கம்பீரத்தின் அழகு. நந்திதுர்கத்தின் காவல் தெய்வமாக காட்சியளிக்கும் பசவன்னாவுக்கு விசேஷ நாட்களில் வெண்ணைக் காப்பு சாற்றப்படும். விஜயநகர பேரரசு ஆட்சியில், கெம்பே கவுடாவால் இந்த கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

*
பெரிய புராணத்தில் பாலாறு
12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில், 'திருக்குறிப்புத் தொண்ட நாயனார்'என்ற பகுதியில் பாலாற்றின் வளமும் அது பாய்ந்தோடிய தொண்டை மண்டலத்தின் செழிப்பையும், மக்களின் வாழ்க்கை முறைகள், சைவ தலங்களின் சிறப்புகளையும் 11 பாடல்களில் விளக்கியுள்ளார்.
'துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலோடு மணிகள்
பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி' - 1098
(விளக்கம்: உயர்ந்த தவமுடைய வசிட்ட முனிவனிடமிருக்கும் காமதேனு சொரிந்த பாலானாது, பெருகும் தீர்த்தமாக உருபட்டு நந்தி மலையினின்றும் இறங்கி, அங்குள்ள முத்துக்களையும் சந்தனம் அகில் முதலானவற்றுடன், மணிகளையும் கொணர்ந்து தாமரைக் குளங்களை நிறைக்குமாறு கீழ் நோக்கி ஓடி வருவது பாலாறு).
பாலாறு பயணிக்கும்...

நந்திதுர்கத்தில் உருவான பாலாற்றின் வளத்தை முழுமையாக பயன்படுத்திய பெருமை கோலார் மாவட்டத்துக்கு மட்டுமே உண்டு. கர்நாடகத்தின் கிழக்கு நுழைவு வாயில் கோலார் மாவட்டம். தங்க வயல் சுரங்கத்தின் செழிப்பு ஒரு பக்கம், மடை திறந்த தண்ணீரால் விவசாயத்தின் வளம் மறுபக்கம். மக்களின் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாக இவை திகழ்ந்தன.
40 ஆண்டுகளுக்கு முன்பு வரை வளமாக இருந்த மக்கள், தங்கச் சுரங்கம் மூடப்பட்டதால் வேலை இழந்தனர். பருவம் தவறியதால் விவ சாயத்தையும் இழந்தனர். இது இரண்டும் ஒருசேர நடந்ததால் கோலார் மாவட்ட மக்கள் இன்று தண்ணீருக்கே தவிக்கிறார்கள்.
சிக்பெல்லாபூர், கோலார் மாவட்டத்தில் 93 கி.மீ. தொலைவு பயணிக்கும் பாலாற்றின் பெரும் பகுதி மனிதனின் ரத்த நாளங்களைப்போல ஓடை, கால்வாய் மற்றும் ஏரிகளால் பிணைந்துள்ளது. பாலாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து கிடைக் கும் மொத்த தண்ணீரையும் கோலார் மாவட்ட ஏரிகளை நிரப்பும் வகையில் வடிவமைத் துள்ளனர்.
கோலார் மாவட்டத்தில் வழி எங்கும் ஏரிகள் தென்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் அதிக எண்ணிக்கை யிலான ஏரிகளைக் கொண்டது இம்மாவட்டம்தான். 8,223 சதுர கி.மீ. பரப்பு கொண்ட கோலார் மாவட்டத்தில் மட்டும் 4,488 ஏரிகள் இருக்கின்றன. அதேபோல, அதிக எண்ணிக்கையில் ஆழ்துளைக் கிணறுகள் இருப்பதும் இங்குதான்.
பேத்தமங்கலா ஏரி
‘பேத்தமங்கலா ஏரி’ வேலூர் மாவட்ட மக்களின் எதிர்காலம் என்று குறிப்பிடலாம். பாலாற்றின் கழுத்துப் பகுதியில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஏரி. பாலாற்றின் போக்கில் மிகப்பெரிய தடுப்பை ஏற்படுத்தி கட்டப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இன்றும் ஒரு வழக்கு மொழி இருக்கிறது. ‘பேத்தமங்கலம் ஏரி உடைந்தால் பாலாற்றில் வெள்ளம் வரும்’ என்று. அதற்கு காரணமும் இருக்கிறது.

பேத்தமங்கலா தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை
1903-ம் ஆண்டு பாலாற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் (சிக்பெல்லாபூரில் 1346 மி.மீ., கோலார் மாவட்டத்தில் 1111 மி.மீ. மழை பெய்தது) ஏற்பட்ட பெருவெள்ளம் பலம்மிக்க பேத்தமங்கலா ஏரி கரைகளை உடைத் துக்கொண்டு சீறிப் பாய்ந்தது. வழியில் இருந்த சிறிய ஏரிகளை யும், ஆற்றின் கரைகளை இணைத்த பாலங்களை யும் வெள்ளத்தில் இருக் கும் இடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டன. பேத்தமங்கலா நகருக்கு செல்லும் வழியில், பெருவெள்ளத்தால் சேதமடைந்த பாலாற்று பாலம் 1904-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த பாலத்தில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு ஒன்று பெருவெள்ளத்தை நினைவூட்டுகிறது.
வரலாறு காணாத பெருவெள்ளத்தை கண்ட அன்றைய மைசூர் சமஸ்தானம், ஏரிக் கரையின் உயரத்தை அதிகரிக்க முடிவு செய்தது. விவசாயத்துக்கு மட்டும் இல்லாமல் பேத்தமங்கலா ஏரியில் இருந்து உறிஞ்சிய தண்ணீர், கோலார் தங்கச் சுரங்க பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை, தங்கச் சுரங்க பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டனர். இதற்காக, பேத்தமங்கலாவின் கரையை 9 அடியில் இருந்து 18 அடியாக உயர்த்தி, தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் தினமும் 72 மில்லியன் கன அடி தண்ணீர் சப்ளை செய்யும் திட்டத்தை தயாரித்தனர்.
இதற்காக, பேத்தமங்கலாவின் முழு கொள் ளளவான 222.56 மில்லியன் கனஅடியில் இருந்து 349.44 மில்லியன் கனஅடியாக கரையை உயர்த்தியுள்ளனர். இதற்காக, 1892-ம் ஆண்டு மைசூர்-சென்னை இடையிலான நதிநீர் ஒப்பந்தபடி கரையை உயர்த்திக் கொள்ள அனுமதி கேட்டு சென்னை மாகாண அரசாங் கத்துக்கு மைசூர் சமஸ்தானம் கடிதம் எழுதியது.
அதில், ‘பாசன வசதிக்கு மட்டுமல்லாமல், மக்களின் குடிநீர் தேவைக்கும், தங்கச்சுரங்க பணிகளுக்காகவும் தண்ணீர் தேவை இருக்கிறது. இதனால் தேவைப்படும் தண்ணீரைத் தேக்கி வைப்பதால் சென்னை மாகாண அரசாங்கத்தின் நீர்பாசனத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அனுப்பிய அப்போதைய சென்னை மாகாண நீர்பாசன முதன்மை பொறியாளர் கர்னல் ஏ.டபிள்யு.ஸ்மார்ட் ‘கரை உயர்த்திக்கொள்ள எந்தவித ஆட்சேபனையும் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார். ஆனால், அனு மதித்த அளவைவிட கூடுதல் நீரை தேக்கிய மைசூர் அரசாங்கம் பாசன பரப்பையும் அதிகரித்தது.
பேத்தமங்கலா ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் 34 மதகுகள் வழியாக பாலாற்றின் கரைகளை எட்டியபடி பாய்ந்ததை அப்பகுதி மக்கள் இன்றும் நினைவு கூறுகின்றனர்.
மைசூர் சமஸ்தானத்தின் 1000-மாவது ஏரி
பெருவெள்ளத்தால் இழந்த தண்ணீரை சேமித்து வைக்க ஏரிகளின் கரையை மைசூர் அரசாங்கம் அவசர அவசரமாக உயர்த்திக் கட்டியது. ஆந்திர மாநிலத்துக்கு மிக அருகில் இருக்கும் ராமசாகர் ஏரிக் கரையை உயர்த்தி நீர்த்தேக்க அளவை அதிகரித்தது. 1904-ம் ஆண்டு கணக்குப்படி ராமசாகர் ஏரியின் மொத்த பரப்பளவு 803.89 ஹெக்டர். ஏரியின் இடப்பக்க கரை 705 அடி நீளம், வலதுகரை 500 அடி நீளம். இந்த ஏரியில் 12 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
ராமசாகர் ஏரிக்கரையில் இடம் பெற்றுள்ள கல்வெட்டில், ‘மேல் பாலாற்றில் 999 ஏரிகள் உள்ளன. கீழ்பகுதியில் எந்த ஏரியும் இல்லை. ராமசாகர் ஏரியால் 1,280 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
நந்திதுர்கத்தில் தொடங்கி ராமசாகர் வரை மொத்தம் 1000 ஏரிகளில் பாலாற்று நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் தண்ணீரை தேக்கி வைக்கும் சிறந்த பாசன கட்டுமான திட்டங்களை மைசூர் சமஸ்தானம் திட்டமிட்டு செய்திருப்பது தெரியவருகிறது. இருப்பினும் அன்று ஆயிரமாவது ஏரியாக கட்டமைக்கப்பட்ட ராமசாகர் ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்கள் இன்று வானம் பார்த்த பூமியாகத்தான் இருக்கின்றன.
பாலாறு பயணிக்கும்…
-

சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் வளர்ந்துள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் | படங்கள்: விஎம்.மணிநாதன்
நந்திதுர்கத்தின் உச்சியில் இருந்து சமதளத்துக்கு வந்திறங்கும் பாலாறு, கர்நாடக மாநிலத்தின் சிக்பெல்லாபூர், கோலார் மாவட்டங்களை ஒரு காலத்தில் வளமாக்கியுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களின் 2,813 சதுர கி.மீ. பரப்பளவு பாலாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக கருதப்படுகிறது. இங்கு பெய்யும் மழையே பாலாறாக உருவெடுத்ததாக பொறியாளர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.
நந்திதுர்கத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவு வரை பாலாறு என்ற ஒரு நதியின் அடையாளத்தை எங்குமே பார்க்க முடியவில்லை. கோலார் மாவட்டத்தில் இருக்கும் தலகவரா என்ற இடமே பாலாற்றின் பிறப்பிடமாக கூறப்படுகிறது. நந்திதுர்கத்தில் இருந்து குப்தகாமினியாய் நிலத்துக்கு அடியில் பாய்ந்து தலகவராவில் பூமிக்கு வெளியே பாய்வதாக கூறுகிறார்கள். (150 ஆண்டுகளுக்கு முன்பு நந்திதுர்கத்தில் இருந்து பாலாறு ஓடும் பாதையில் அடுக்கடுக்கான ஏரிகள் கட்டியதால் அவை ஆறுக்கான அடையாளத்தை மறைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது)
வறட்சியின் பிடியில் சிக்பெல்லாபூர்
6 நதிகளின் ஊற்றாகவும், குப்தகாமினியாய் பாயும் பாலாற்றை தன்னிடத்தே உள்ளடக்கிய சிக்கபெல்லாபூர் மாவட்டம் 4,208 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. பட்டுக்கும், பாலுக்கும் பெயர்போன இந்த மாவட்டம் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் பருவமழை தட்டுப்பாட்டால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதித்துள்ளது. ஆயிரம் அடிக்கு கீழ்தான் தண்ணீரைக் கண்டுபிடிக்க முடிகிறது.
சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் விவசாயத்தின் உயிர் நாடியாக இருந்த 1,243 ஏரிகளில் பெரும்பாலானவை இன்று வறண்டுவிட்டன. ஆண்டின் சராசரி மழையளவு 676 முதல் 848 மி.மீ. ஆக உள்ளது. வற்றாத கால்வாய் பாசனத்தை நம்பி பயிரிட்ட விவசாயிகள் இன்று ஆழ்துளைக் கிணறுகளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.
சொட்டு நீர் பாசனத்தில் நிமிர்ந்த விவசாயம்
விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் இவர்கள், கிடைக்கின்ற கொஞ்சம் நிலத்தடி நீரையும் சொட்டு நீர் பாசனம் செய்து விவசாயத்தை பாதுகாக்கிறார்கள். மழைக் காலத்தில் மட்டுமே நந்திதுர்கத்தை சுற்றியிருக்கும் பகுதிகளை பசுமையாக பார்க்க முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள். சொட்டு நீர் பாசனத்தின் உதவி யுடன் ரோஜா, தக்காளி, மல்பெரி, முட்டைக் கோஸ், சாமந்திப்பூ, பப்பாளி, திராட்சை தோட்டங் களை உயிர்ப்பிக்கிறார்கள். தண்ணீர் கிடைத்தால் விவசாயம், இல்லாவிட்டால் தைல மரக் கன்றுகளை நட்டுவிடுகிறார்கள். வறண்ட பூமியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தைலமரத் தோப்புகள் தென்படுகின்றன.
குடும்ப உழைப்பே மூலதனம்

சேகர்
நந்திதுர்கம் மலைக்கு செல்லும் வழியில் இருக்கிறது தொட்டமார ஹல்லி கிராமம். பச்சை திராட்சை தோட்டங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. கடுமையான வறட்சியிலும் திராட்சை தோட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். திராட்சை தோட்ட பராமரிப்பில் இருந்த இளைஞர் சேகர் கூறும்போது, ‘‘20 ஆண்டுகளாக எனது குடும்பத்தினர் திராட்சைத் தோட்டத்தை பராமரிக்கிறார்கள். 1,200 அடி ஆழத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீர்தான் இந்த திராட்சை தோட்டத்துக்கு உயிராக இருக்கிறது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் நந்திதுர்கம் மலை இருந்தாலும் இங்கிருக்கும் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. கொஞ்சம் பெய்கின்ற மழையும் இல்லாவிட்டால் விவசாயிகள் கஷ்டப்பட வேண்டி இருக்கும்’’ என்றார்.
வறட்சிக்கு வித்திட்ட யூகலிப்டஸ்?
மிர்டேசிய என்ற தாவர வகையான யூகலிப்டஸ் எனப்படும் தைல மரம் ஆஸ்திரேலிய நாட்டை பூர்வீமாகக் கொண்டது. இந்தியாவில் 1843-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்ப காலத்தில் எரிபொருள் பயன்பாட்டுக்காக பயிரிடப்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் பிற்காலத்தில் காகித தொழிற்சாலையின் முக்கிய மூலப்பொருளாக மாறியது. மிகக் குறைந்த ஈரப் பதத்திலும் வளரும் தன்மைக்கொண்ட யூகலிப்டஸ் மரம் சுமார் 330 முதல் 1,500 மி.மீ மழையளவுள்ள பகுதியில் செழிப்புடன் வளரும். தினமும் 8 மணி நேரம் நீரை உறிஞ்சக்கூடிய சக்தி கொண்டது. அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சி தன்னை வேகமாக வளர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது.
விவசாயிகளுக்கு குறைந்த முதலீட்டில் அதிக பயன் கொடுக்கும் என்பதால் வறட்சியால் பாதித்துள்ள சிக்பெல்லாபூர் விவசாயிகளுக்கு யூகலிப்டஸ் வரப்பிரசாதகமாக இருக்கிறது. 6 நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியான சிக்பெல்லாபூர் மாவட்டத்தின் பெரும்பகுதி நிலத்தடி நீரை யூகலிப்டஸ் மரங்கள் உறிஞ்சியதால், பருவ மழைக்கான இயற்கை காரணிகளை இது சிதைத்ததாகக் கூறப்படுகிறது. யூகலிப்டஸ் மரங்கள்தான் பருவமழை குறைபாட்டுக்கும் காரணம் என்பது அவர்களின் கருத்து.
அமிர்த சரோவர் குளம்

திப்பு சுல்தான் தங்கும் விடுதிக்கு நேர் எதிரே இருக்கிறது அமிர்த சரோவர் குளம். 1936-ம் ஆண்டு மைசூர் திவான் மிர்சா இஸ்மாயில் காலத்தில் அமிர்த சரோவர் குளம் கட்டப்பட்டுள்ளது. அமைதி நிறைந்த பூந்தோட்டத்துக்கு நடுவில் பிரம்மாண்டமாக இருக்கிறது இந்த அமிர்த சரோவர். இதில் 50 அடி ஆழம் வரை தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். குளத்தின் தண்ணீர் பனித்துளியைப் போலவும், சுவையாகவும் இருப்பது இதன் தனிச்சிறப்பு.
பாலாறு பயணிக்கும்..
*********
*********
கர்நாடகத்தில் பாலாற்றை முழுமையாக பயன்படுத்த திட்டமிட்டு ஏரிக்கரைகளை உயர்த்தியது, ஏரிகளை கட்டியது என பல்வேறு கட்டமைப்புகளை அம்மாநில அரசு ஏற்படுத்தியது. இருப்பினும் இதுபோன்ற தடைகளைக் கடந்து குப்பம் சாந்திபுரத்தில் ஆந்திர மாநிலத்துக்குள் பாலாறு அடி எடுத்து வைக்கிறது.
தமிழ்நாடு-கர்நாடகம் மாநில எல்லையில் இருக்கும் குப்பம் தொகுதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி. இங்கு சற்று தூக்கலாகவே தமிழ் மணம் வீசுகிறது. காரணம் இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். வியாபார ரீதியாகவும், உறவுகளாலும் வேலூர் மாவட்டத்துடன் தொடர்பில் இருப் பவர்கள்.
இவர்களின் தொப்புள்கொடி உறவுகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியில் உள்ளன. தமிழ்நாட்டுக்கு பாலாற்று தண்ணீரை விட்டுக் கொடுக்க ஆந்திர அரசுக்கு மனது இல்லை. ஆனாலும், திருமண பந்தங்கள் காரணமாக இரண்டு மாநிலங்கள் இடையிலான உறவில் எந்த விரிசலும் ஏற்படவில்லை.
ஆந்திர மாநிலத்தில் வெறும் 33 கி.மீ. தொலைவு மட்டுமே பாலாறு பாய்கிறது. அதற்குள் 28 தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தேக்குகிறது ஆந்திரம். கர்நாடகத்திலிருந்து வெளியேறும் மிச்ச மீதி தண்ணீரையும் ஆந்திரா சிறை பிடிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த 28 தடுப்பணைகளை நிரப்பி மாறுகால் பாய்ந்திருக்கிறது பாலாறு.
குப்பம் தொகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க 2008-ம் ஆண்டு கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட அப்போதைய முதல்வர் ராஜசேகர ரெட்டி அரசு முயற்சி எடுத்தது. சந்திரபாபு நாயுடு, ராஜசேகர ரெட்டிக்கும் இடையிலான அரசியலில் கணேசபுரம் அணை கட்டும் திட்டத்துக்கு ஆர்வம் காட்டியது அப்போதைய காங்கிரஸ் அரசு.
கணேசபுரத்தில் அணை கட்டுவதால் எந்த பயனும் இல்லை என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இருந்தாலும், குப்பம் தொகுதியின் தண்ணீர் பிரச் சினையை முன்வைத்த காங்கிரஸ் அரசின் திட்டத்துக்கு சந்திரபாபு நாயுடுவும் ஆதரவு தெரிவித்தார்.
அணை கட்ட தீர்மானித்த இடத்தில் பாமக போராட்டம் நடத்தியது. மற்ற கட்சிகளும் கொடுத்த தொடர் நெருக்கடி மற்றும் வழக்கு காரணமாக அணை கட்டும் திட்டத்தை ஆந்திர அரசு கிடப்பில் போட்டது.
தண்ணீர் பஞ்சம்
சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் 2,070 கிராமங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப் பாடு நிலவுகிறது. இவற்றில் அதிகபட்ச எண்ணிக் கையாக 350 கிராமங்கள் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பத்தில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குப்பம் தொகுதியின் வளர்ச்சிக்காக KUPPAM AREA DEVELOPMENT AUTHORITY (KADA) என்ற தனி நிர்வாக அமைப்பை சந்திரபாபு நாயுடு ஏற்படுத்தியுள்ளார். குடிநீர், தொழிற்சாலை, சாலை போக்குவரத்து, கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு துறைகளில் KADA சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. ஆந்திராவின் விவசாயம், குடிநீர் தேவைக்காக அந்திரி-நீவா நதிநீர் இணைப்பு திட்டத்தை குப்பம் தொகுதிக்கு விரிவாக்கம் செய்ய KADA கவனத்துடன் செய்து வருகிறது.
என்.டி.ஆர். சுஜலா திட்டம்
குப்பம் நகர மக்களின் குடிநீர்த் தேவையை தற்காலிகமாக பூர்த்தி செய்ய என்.டி.ஆர். சுஜலா (NTR SUJALA PATHAKAM) குடிநீர் திட்டத்தை 2013 அக்டோபர் 2-ல் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 2 ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சுஜலா கார்டு மூலம் கேனில் தண்ணீர் நிரப்பும் இளைஞர்: படங்கள்: வி.எம்.மணிநாதன்
என்டிஆர் அறக்கட்டளை உதவியுடன் செயல்படும் இந்த திட்டத்துக்காக, குப்பம் நகரில் 110, நகரை ஒட்டிய கிராமத்தில் 163 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி இயந்திரங்கள் கட்டப்பட்டுள்ளன.
கார்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுகிறது. பொதுவான ஒரு இடத்தில் சுத்திகரிக்கப்படும் தண்ணீர், பிரத்யேக டிராக்டரில் கொண்டு வரப்பட்டு தினமும் இந்த தொட்டிகளில் நிரப்பப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட, சுகாதாரமான குடிநீர் தேவைப்படும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏடிஎம் வடிவ எலக்ட்ரானிக் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் இந்த அட்டையின் பிரத்யேக எண்ணுக்கு பணம் கொடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டும். பின்னர், குடிநீர் தொட்டியில் உள்ள இயந்திரத்தில் இந்த அட்டையை ஏடிஎம் கார்டைப்போல உள்ளே செலுத்தினால் 20 லிட்டர் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். இதற்காகவே, பயனாளிகள் வீட்டுக்கு 20 லிட்டர் கொள்ளவு கொண்ட மஞ்சள் நிற கேன் கொடுத்துள்ளனர். சுஜலா திட்டமே எங்களது தாகத்தை தீர்க்கிறது’’ என் பெருமையாக தெரிவிக்கின்றனர் குப்பம் மக்கள்.
பாலாறும் சேக்கிழாரும்
தனது பயணத்தில் கடைசி பாதை வரை தன்னை நம்பி வாழும் மக்களுக்கு எல்லா வளங்களையும் அள்ளிக்கொடுத்த பாலாற்றால், ‘‘எருமைக் கடாக்களை பூட்டி ஏர் உழுது பயிர் செய்த விவசாயிகள் எப்போதும் ஆர வாரத்துடன் இருந்தனர்’’ என சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
‘‘பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்
மள்ளல் வேனிலின் மணல்திடர் பிசைந்துகை வருட
வெள்ள நீரிரு மருங்குகால் வழிமிதந் தேறிப்
பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி’’
என்ற பாடல் வரியில் ‘‘குழந்தை தன் கையால் தடவவும் பெருகும் பால் சொரிகின்ற தாயைப் போல, உழவர்கள் வேனிற் காலத்தில் பாலாற்றில் மணல் மேடுகளை பிசைந்து கால்வாய் உண்டாக்கி ஒழுங்கு படுத்த, ஊறிப்பெருகும் நீர் இரண்டு பக்கங்களிலும் கால்வாய்களின் வழியே மிதந்து ஏறிச்சென்று பள்ளமான நிலத்தில் நீண்ட வயல்களின் பருத்த மடைகளை உடைக்கும். ‘‘வளமை வாய்ந்த ஊர்கள். குளிர்ந்த பெரிய வயல்களால் சூழப்பட்ட நிலங்கள், நெற் கூடுகள் நெருங்கிய இல்லங்கள், விருந்தினரை வரவேற்று உபசாரம் செய்யும் பெருமையில் நிலைத்த பெரிய குடில்கள், மாடங்கள் ஓங்கிய தெருக்களைப் பெற்றிருந்தன’’ என மக்களின் வாழ்க்கை முறையை சேக்கிழார் விவரித்துள்ளார்.
- பாலாறு பயணிக்கும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக