செவ்வாய், 21 ஜூலை, 2015

கிரீஸ்- இது நிரந்தரம் அல்ல!

நம் கதையை 2001-ல் தொடங்குவோம். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒரு நாடு ஐரோப்பியப் பொருளாதார மண்டலத்தில் சேர்வதற்கு, 1992-ல் நடந்த மாஸ்ட்ரிட் மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி கடன் அளவையும் பற்றாக்குறை பட்ஜெட் அளவையும் பராமரித்தாக வேண்டும். இந்த நிபந்தனைகளை ஏற்பது கடினம். எனினும், 2001 ஜனவரியில் ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தில் கிரேக்கமும் சேர்ந்தது.
கனாக்காலம்
2001 முதல் 2007 வரையில் கிரேக்கத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 4.3% ஆக உயர்ந்தது. அப்போது ஐரோப்பிய மண்டலத்தின் சராசரி வளர்ச்சி வீதமே 3.1% தான். 2002 முதல் 2007 வரையில் ஐரோப்பிய செலாவணி முதலாளித்துவ நாடுகளில் விரிவடைந்த நேரத்துடன் இந்த நேரமும் இசைந்திருந்தது. அதிக வருமானம் தேடி தனியார் முதலீடு, மையத்திலிருந்து பிற பகுதிகளுக்குப் பாய்ந்தது. எனவே கடன் பெறுவது எளிது என்ற நிலை ஏற்பட்டது. எளிதாகக் கடன் கிடைத்தது, தனியார் நுகர்வு அதிகரிப்பு, அரசு செலவு அதிகரிப்பு போன்றவை இதற்கு ஆதரவாக அமைந்தன. துரதிருஷ்டவசமாக அரசின் நிதியில் பெரும் பகுதி 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கும், ராணுவத்துக்கும் செலவிடப்பட்டது.
அமெரிக்க மந்தநிலை
அதற்குப் பிறகு அமெரிக்கப் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சரியத் தொடங்கியது. 2007 ஜனவரி தொடங்கி ஜூன் 2009 வரை நீடித்தது. உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி அமெரிக்காவைக் கடுமையாகப் பாதித்தது. அதன் லேமன் பிரதர்ஸ் நிறுவனம் 2008 செப்டம்பரில் திவாலானது. அதன் பிறகு நிதி நெருக்கடியும் பொருளாதார மந்த நிலையும் உலகம் முழுக்கப் பரவியது. தனியார் முதலீடு மையத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு 2002-ல் பாயத் தொடங்கியது நின்று, 2008-ல் எதிர்திசையில் போகத் தொடங்கியது. இவ்விரண்டு செயல்களும் கிரேக்கப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, கடன் தவணையை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தும் அதன் நிதிநிலையையும் கடுமையாகப் பாதித்தது. ஐரோப்பிய பொருளாதார மண்டலங்களில் சேராத நாடுகளுக்கு இருந்த ஒரு வசதி கிரேக்கத்துக்கு கிட்டாமல் போனது. அதனால் தன்னுடைய செலாவணியின் மதிப்பையும் குறைக்க முடியவில்லை, வட்டி வீதத்தையும் உயர்த்த முடியவில்லை. இதனால்தான் கிரேக்கம் தடுமாறத் தொடங்கியது.
பாப்பாண்ட்ரூ வீசிய குண்டு
தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு கிரேக்கம் தன்னுடைய பற்று வரவு கணக்கை எப்படியோ கூட்டி, குறைத்து 'சமாளித்தது'. ஆனால் 2009-ல் குட்டு அம்பலமானது. 2009 அக்டோபரில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பாப்பாண்ட்ரூ இந்தத் தில்லுமுல்லுகளைத் தவிர்த்து ஒழுங்காக கணக்கு, வழக்குகளை பராமரிக்கச் சொன்னார். அப்போதுதான் செலவுக்கு ரொக்கமில்லாமல் தவிக்கவில்லை, பணமே இல்லாமல் 'திவால்' ஆகிவிட்டது கிரேக்கம் என்று உலகம் அறிந்துகொண்டது. அதன் பிறகு என்ன, நரகத்தின் அனைத்து வாயில்களும் கிரேக்கத்துக்குத் திறந்துவிடப்பட்டன.
2010 மே மாதம் தொடங்கிய சிக்கலில் கிரேக்கம் மேலும் ஆழ்ந்தது. இந்த நெருக்கடி ஏற்பட்டதிலிருந்து 2010 மே மற்றும் 2012 மார்ச் என்று 2 முறை கிரேக்கத்தைக் கரைசேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, பலனில்லை. கிரேக்கத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு முன்பிருந்ததைவிட 27% குறைந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் 25% ஆனது. இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 60% ஆக இருக்கிறது. கிரேக்கத்தின் கடன் மொத்த உற்பத்தி மதிப்புக்கு இடையிலான விகிதம் 175% ஆக இருக்கிறது.
சிக்கனம் சீர்திருத்தம்தானா?
கடன் சுமையிலிருந்து மீள கிரேக்கம் சுதந்திரச் சந்தைக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று 'மும்மூர்த்திகள்' என்று அழைக்கப்படும் ஐரோப்பியப் பொருளாதாரச் சமூகம், ஐரோப்பிய மத்திய வங்கி (இ.சி.பி.), பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) ஆகிய மூன்று அமைப்புகளும் வலியுறுத்தின. அரசின் நிதித்துறைச் சீர்திருத்தங்களாக மேலும் மேலும் சிக்கன நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் பரிந்துரைகளை ஏற்பதன் மூலம் அரசுக்கும் குடும்பங்களுக்கும் செலவிடுவதற்கான தொகை மேலும் குறைக்கப்படுகிறது. அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்கள் என்ற பெயரில் ஓய்வூதியப் பலன் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை வெட்டுமாறு கூறப்பட்டது. இந்த யோசனைகளால் மக்களுடைய வாங்கும் சக்தி வெகுவாகக் குறுக்கப்படுகிறது. திறமையை அதிகப்படுத்த அரசு நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற யோசனையும் வலியுறுத்தப்படுகிறது.
ஆனால், இவையெல்லாம் எந்த அளவுக்கு உருப்படியான யோசனைகள்?
கிரேக்கப் பொருளாதாரம் வளருவதற்குப் பதிலாகப் பொருளாதாரச் சரிவு அதிகமாகவே இவை வழிவகுக்கும். காரணம், எல்லாத் துறைகளும் செலவைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாகச் செலவிட்டால் விற்பனை, கொள்முதல், விநியோகம் என்று அனைத்துமே குறைந்து பொருளாதாரம் முடங்க ஆரம்பிக்கும்.
ஆனால் நவ பழமைவாதச் சிந்தனையாளர்களோ அரசும் குடும்பங்களும் செலவைக் குறைத்தாலும் பொருளாதாரம் மீட்சி பெற்றுவிடும் என்று நம்புகின்றனர். சிக்கனமான தயாரிப்பினாலும் குறைந்த ஊதியத்தாலும் உற்பத்திச் செலவு குறையும், அதனால் லாபமும் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். அதாவது ஊதியம் குறைந்தாலும் தொழிலாளர்கள் வேறு வேலைக்குப் போகாமல் கிடைத்துக்கொண்டிருப்பார்கள் என்றே அவர்கள் கருதுகின்றனர்.
இப்போதைய உலகச் சூழலில் இவையெல்லாம் வெறும் கற்பனைதான். ஈரோ டாலர் என்பது ஐரோப்பிய நாடுகளின் பொதுச் செலாவணி. எனவே கடன் சுமையில் ஆழ்ந்துள்ள கிரேக்கத்தால் ஐரோப்பிய டாலரின் மதிப்பை மாற்ற முடியாது. அதே வேளையில் கிரேக்கத்துக்கு என்று தனிச் செலாவணி இருந்திருந்தால் அதன் மதிப்பைக் குறைத்து, ஏற்றுமதியையாவது அதிகப்படுத்திச் சிறிது பயன் கண்டிருக்கலாம். இதனால் வேலையும் இல்லாமல் கையில் பணமும் இல்லாமல் பட்டினியால் வாடும் கிரேக்கர்கள், அரசு நடத்தும் சூப் சமையலறைகளுக்குப் படையெடுக்கின்றனர். 1929-ல் உலகப் பொருளாதார வீழ்ச்சியின்போது சூப் சமையலறைகள்தான் மக்கள் பட்டினியைப் போக்கிக்கொள்ளும் பொது இடமாகத் திகழ்ந்தன. இப்போதும் சூப் சமையறைகளுக்கான தேவை அதிகரித்துவிட்டது.
ஏன் இந்த முறுக்கு?
இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துள்ள சுதந்திரச் சந்தை சீர்திருத்தங்களைத்தான் கிரேக்கர்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் நிராகரித்தனர். ஆனால், சிரிஸா கட்சி கருத்தறியும் வாக்கெடுப்புக்கு முன்பு என்ன பேசியதோ, அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை இப்போது எடுத்திருக்கிறது. இதுதான் முடிவென்றால், இந்த முழக்கங்கள், கருத்தறிவும் வாக்கெடுப்பு, முரண்டு எல்லாம் எதற்கு? எல்லாவற்றையும் உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது!
- 'தி இந்து' (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: சாரி

***********
பொருளாதார சீர்திருத்த ஒப்பந்தத்தைத் தொடரந்து 3 வாரங்களுக்கு பிறகு கிரீஸ் நாட்டு வங்கிகள் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன.
பொருளாதார நெருக்கடியால் சிக்கிக் கொண்டிருக்கும் கிரீஸில் கடந்த 3 வாரங்களாக மூடப்பட்டிருந்த வங்கிகள் அனைத்தும் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டன. ஐரோப்பிய யூனியன் விதித்த கடன் மீட்பு திட்டத்தை கிரீஸ் அரசு ஏற்று தனது நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதாவை நிறைவேற்றியதை அடுத்து, அரசின் உத்தரவின்படி வங்கிகள் அனைத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இயங்க தொடங்கியுள்ளன.
மசோதாவின்படி வருவாய் வரியை அதிகரிப்பது, முதியோர் ஓய்வூதியங்களைக் குறைப்பது, செலவினங்களை கட்டுப்படுத்துவது, ஊழியர்களுக்கான சலுகைகளை திரும்பப் பெறுவது என பல திட்டங்கள் இடம்பெறுகின்றன.
உச்சகட்டத்தில் விலைவாசி
மதிப்பு கூட்டு வரி அதிகரித்துள்ளதால், அன்றாட உபயோக பொருட்கள் அனைத்தின் விலையும் உச்ச கட்டத்தில் அதிகரித்துள்ளது. மூன்று வாரங்களாக சந்தைகள் மூடிக்கிடந்த நிலையில், இன்று பொருட்களை வாங்கச் சென்ற மக்கள், விலைவாசியை கண்டு அதிருப்தி அடைந்துள்ளனர்.
பதப்படுத்தப்பட்ட உணவு, பானங்கள், மற்றும் பார்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் ஒட்டல் மற்றும் பார்களில் 13 சதவீதத்திலிருந்து 23 சதவீதம் அதிகமாக மக்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது.
*************
கிரேக்கத்தின் தலை தப்பியிருக்கிறது தற்காலிகமாக. ஆனால், இதற்காக யாரும் சந்தோஷப்பட முடியாது. சிக்கன நடவடிக்கைகள், தனியார்மயம் உள்ளிட்ட ஐரோப்பிய சமூகத்தின் எல்லா நிபந்தனைகளையும் ஏற்று, தற்காலிகமாகக் கடன் தவணையை உடனே செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றிருக்கிறது கிரேக்கம். அத்துடன் பணப் பற்றாக்குறையால் கிட்டத்தட்ட செயலற்ற நிலைக்கு வந்துவிட்ட பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்ட சுமார் ரூ. 5,76,500 கோடி கடனுதவியும் பெற்றிருக்கிறது.
கிரேக்கத்தின் பொருளாதார நிலைமை மோசமடைந்ததால் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் வாங்கிய கடனுக்கு அசல், வட்டி என்ற ஆண்டுத் தவணையைக்கூட திருப்பிச் செலுத்த பணம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஏற்கெனவே உள்ள ரூ. 16,80,000 கோடிக்கான தவணைத் தொகையை அடைக்க முடியாததோடு புதிதாகக் கடன் வாங்கினால்தான் நாட்டையே காப்பாற்ற முடியும் என்ற நிலை வந்துவிட்டது. எனவே, பொருளாதார விவகாரங்களில் பன்னாட்டுச் செலாவணி நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஆணையம் ஆகியவற்றின் அறிவுரைப்படி நடக்க ஒப்புக்கொண்டு இந்தக் கடனைப் பெற்றிருக்கிறது. கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ், பொதுத் தேர்தலுக்கு முன்னால் பேசிய பேச்சுகளையும் உறுதிமொழிகளையும் ஓரங்கட்டிவிட்டு, நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
ஐரோப்பிய சமூகம் - கிரேக்கம் இடையிலான ஒப்பந்தத்துக்குப் பின், “கிரேக்கம் கடுமையாகப் போராடி வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். அத்துடன் தனது இறையாண்மையையும் பாதுகாக்கும்” என்று பிரதமர் சிப்ரஸ் கூறியிருக்கிறார். “கிரேக்கத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே பரஸ்பரம் நல்ல நம்பிக்கை நிலவ வேண்டும்” என்று இந்த உடன்பாட்டுக்குப் பிறகு ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கூறியிருக்கிறார். “இதுதான் கிரேக்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் போக வேண்டிய சுமுகமான பாதை” என்று பிரெஞ்சு அதிபர் பிராங்குவா ஹொல்லாந்து கருத்து தெரிவித்துள்ளார். எல்லாம் சம்பிரதாய வார்த்தைகளாகவே தோன்றுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க மாட்டோம் என்று கூறியே சிப்ரஸ் ஆட்சியைப் பிடித்தார். இந்தப் பிரச்சினை முற்றியதும் கிரேக்க மக்களிடையே நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பிலும், கிரேக்க மக்கள் ஐரோப்பியப் பொருளாதாரச் சமூகத்தின் நிர்ப்பந்தங்களுக்கு எதிராக நிற்க வேண்டும் என்றே வாக்களித்தனர். ஆனால், சிப்ரஸ் அரசு அப்படியே பல்டி அடித்திருக்கிறது.
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்போதே கிரேக்கத்தின் வீழ்ச்சி அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது. கடன் வாங்கியது, வரவை மீறிச் செலவு செய்தது என்பதையெல்லாம் தாண்டி, அந்த நாட்டின் வரவு - செலவுத் திட்டங்களைத் தயாரித்தவர்கள் உண்மையான நிதி நிலையை மக்கள் அறியாதபடிக்கு மறைத்து நாடகமாடியதும் கிரேக்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்திருக்கிறது. 2009 அக்டோபரில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பாப்பாண்ட்ரூ, இந்தத் தில்லுமுல்லுகளை இனியும் அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டதுடன், அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டபோது நிலைமை மேலும் மோசமானது. கிரேக்கம் திவாலாகிறது எனும் முடிவுக்கு அப்போதே வந்துவிட்டது சர்வதேசம். கடன் பிரச்சினைகளை எதிர்கொள்ள மேலும் மேலும் கடன் வாங்குவது ஒருபோதும் தீர்வாவதில்லை. சிக்கல், தாம் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கையா - கடனா என்பதை உணராதவரை கிரேக்கத்துக்கு விடிவு இல்லை!
*********
கிரேக்கத்தின் வீழ்ச்சிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஏதென்ஸில் கூடியிருந்தவர்களின் கைகளில் ஏராளமான பதாகைகள். ஏராளமான வாசகங்கள். ஒரு வயதான கிரேக்கர் தன் கைகளில் பிடித்திருந்த பதாகை வரலாற்றுக்கும் சமகால பொருளாதாரத்துக்கும் இடையே உள்ள பொருத்தப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது: “நாங்கள்தான் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கொடுத்தோம். இன்றைக்கு நாங்கள் வீழ்ந்துவிடாமல் நிற்க கேவலம் இந்தக் கடன் விஷயத்தில் ஐரோப்பா கொஞ்சம் விட்டுக்கொடுக்கக் கூடாதா?”
சத்தியமான வார்த்தைகள்! ஆனால், காசே எல்லாமுமான இன்றைய உலகத்தில் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் ஏதேனும் மதிப்பிருக்கிறதா? அதேசமயம், ஏகாதிபத்தியம் எல்லாவற்றையும் தன்னுடையதாக சுவிகரித்துக்கொள்ளக் கூடியது. கிரேக்கத்தைத் தங்களுடைய நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியவைத்த பிறகு, பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே அந்த கிரேக்க முதியவரின் வார்த்தைகளைத் தனதாக்கிக்கொண்டார்: “ஐரோப்பிய நாகரிகத்தின் இதயமாகவும் நம் கலாச்சாரத்தின் பகுதியாகவும் வாழ்க்கைமுறையின் அம்சமாகவும் இருக்கும் கிரேக்கத்தை எங்கே நாம் இழந்துவிடுவோமோ என்று நான் பயந்தேன்.”
கிரேக்கம் பண்டைய காலத்தில் ஐரோப்பாவுக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கிறது. ஐரோப்பாவையும் தாண்டியும் அது கற்றுக்கொடுக்கும் பெரிய பாடம் அதன் சமகால அனுபவம். குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளுக்கு. நம் இந்தியாவுக்கு!
தேசம் திவாலாகிவிடும் எனும் நிலைக்கு கிரேக்கம் வந்து நிற்கக் காரணம் என்ன? சர்வதேச ஊடகங்கள் வாயிலாக நமக்குச் சொல்லப்படும் செய்தி கிரேக்கம் இதுவரை வாங்கியிருக்கும் ரூ.16.8 லட்சம் கோடி கடன். அதில் இந்த ஜூன் 30-க்குள் திருப்பித் தந்திருக்க வேண்டிய தவணை ரூ.10,500 கோடியை கிரேக்க அரசால் தர முடியாமல் போனது. சரி, ரூ. 10,500 கோடியைத் திருப்பித் தர முடியாத ஒரு நாட்டுக்கு, அதே கடன்காரர்கள் எப்படி மீண்டும் ரூ. 5.90 லட்சம் கோடியைக் கடனாகத் தருகிறார்கள்?
உலகம் கடன் பொருளாதாரம் எனும் கொள்கையை உள்வாங்கிக்கொண்டு நீண்ட காலம் ஆயிற்று. ஆக, கடன் என்பது இங்கே வெளியே சொல்லப்படும் காரணம். உண்மையான காரணம் என்ன? அது நாம் பேச வேண்டியது.
ஐரோப்பாவில் கி.பி.1500-களுக்குப் பின் தோன்றிய பொருளாதாரக் கோட்பாடுகளில் முக்கியமானது, வணிக அடிப்படைவாதம் (Mercantalism). இன்றைய முதலாளித்துவம், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் எல்லாவற்றுக்கும் மூலக்கோட்பாடு என்று இதைச் சொல்லலாம். எது ஒன்றையும் லாப நோக்கில் அணுகச் சொல்லும் இந்தக் கோட்பாட்டின் அடிப்படை, ஒரு நாட்டின் பலமும் வளமும் அதன் செல்வ வளங்களே என்பது. அந்தச் செல்வ வளத்தைத் தக்கவைக்க ஏற்றுமதியை அதிகமாகவும் இறக்குமதியைக் குறைவாகவும் பேணும் வகையில் பொருளாதாரத்தைப் பராமரிப்பது. இந்தப் பொருளாதார ஆதிக்க நிலையைப் பராமரிப்பதற்கு ஏதுவாக காலனி நாடுகளை உருவாக்குவது.
நவீன யுகத்தில், வல்லரசுகள் தங்களுடைய பொருளாதாரச் சூறையாடல்களுக்குப் புதுப்புது பெயர்களைச் சூட்டிக்கொண்டாலும், அவற்றின் அடிப்படை இயக்கம் இன்னும் வணிக அடிப்படைவாதத்திலேயே நிலைகொண்டிருப்பதற்கும் அவற்றின் நவகாலனியாதிக்க முறைக்கும் அப்பட்டமான உதாரணம் ஆகியிருக்கிறது கிரேக்கம்.
கிரேக்கம் 1975-ல் மக்களாட்சியைத் தேர்ந்தெடுத்தபோதே, - ஏனைய வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் - பொருளாதாரரீதியாகப் பலவீனமாகத்தான் இருந்தது. எனினும், அன்றைக்கு அதன் பொருளாதாரம் சுயசார்புடன் இருந்தது. நாட்டின் முக்கியத் தொழிலான விவசாயம் சிறு விவசாயிகளின் கைகளில், குடும்பத் தொழிலாக, கூட்டுறவு அமைப்புடன் கை கோத்ததாக இருந்தது. 1980-ல் ‘நேட்டோ’ அமைப்பில் கிரேக்கம் இணைந்தது. 1981-ல் ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தில் இணைந்தது. அடுத்த மூன்று தசாப்தங்களில் அதன் பொருளாதாரம் இவ்வளவு நொறுங்குவதற்கு அடிப்படையான காரணம் அதன் தற்சார்பு அழித்தொழிக்கப்பட்டது. உற்பத்திசார் பொருளாதாரம் அடித்து நொறுக்கப்பட்டு, சந்தைசார் பொருளாதாரம் வளர்த்தெடுக்கப்பட்டது. விளைவு, இன்றைக்கு கிரேக்கத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 16%, சேவைத் துறையின் பங்களிப்போ 81%. வேளாண் துறையின் பங்களிப்பு வெறும் 3.4%. சுற்றுலாத் துறையின் பங்களிப்போ 18%.
கிரேக்கத்துக்கு அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைப் போல 175% அளவுக்குக் கடன்கள் இருப்பது உலகத்துக்குத் தெரியும். இதில் அதிகபட்ச கடன் கொடுத்திருக்கும் நாடு ஜெர்மனி என்பதும் உலகத்துக்குத் தெரியும். அந்தக் கடன்களில் ஜெர்மனியிடமே திரும்பச் சென்ற தொகை எவ்வளவு? ஒரு சின்ன உதாரணம், ஜெர்மனியின் ஆயுத ஏற்றுமதியில் 15% கிரேக்கத்துக்குதான் செல்கின்றன.
கிரேக்கத்தின் மோசமான செலவுகளில் ஒன்று அதன் அதீத ஆயுத நுகர்வு. ஒரு ஒப்பீட்டுக்காக எடுத்துக்கொண்டால், கிரேக்கத்திடம் இருக்கும் பீரங்கிகளின் எண்ணிக்கை 1300. இது இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்குக்கும் அதிகம். ஐரோப்பியப் பொருளாதாரச் சமூகத்தில் இணைந்த பின் - 1980-களில் - தன்னுடைய ஒட்ட்மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 6.2% ஆயுதங்கள் வாங்குவதற்காகச் செலவிட்டது. இவ்வளவு மோசமான நிலையிலிருக்கும் சூழலிலும்கூட ஆயுதங்கள் வாங்க 2.4% செலவிட்டிருக்கிறது. கிரேக்கம் செலவிட்ட இந்தப் பணமெல்லாம் யார் யாரிடம் போனது? கிரேக்கர்கள் இதைப் பற்றிதான் உலகம் பேச வேண்டும் என்கிறார்கள்.
ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்றே கிரேக்க மக்கள் இந்த முறை இடதுசாரி கட்சியான சிரிஸா கட்சியைத் தேர்ந்தெடுத்தார்கள். பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் நடத்திய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிலும் இதையே பெரும்பான்மை கிரேக்க மக்கள் உறுதிசெய்தனர் (தேர்தலில் சிரிஸா கட்சிக்குக் கிடைத்த வாக்குவீதத்தைவிடவும் இப்போது கருத்தறியும் வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குவீதம் அதிகம் என்பது இங்கே கவனிக்க வேண்டியது). அலெக்சிஸ் சிப்ராஸுக்குக் கிடைத்த வாய்ப்பு, இதேபோல, பல தசாப்தங்களாய் ஏகாதிபத்திய சக்திகளால், கடன்களின் பெயரால் காலனியாக்கப்பட்ட ஈகுவெடாரின் தலைவிதியை மாற்றியமைத்த ரஃபேல் உருவாக்கிய வாய்ப்புக்கு இணையானது. “எங்கள் நாட்டைவிடவும், மக்கள் நலனைவிடவும் வேறு எதுவும் எங்களுக்கு முக்கியம் இல்லை” என்று அதிரடி நடவடிக்கைகளை நோக்கி சிப்ராஸ் திரும்பியிருக்க வேண்டும். ஊழல் மற்று வரிஏய்ப்பு மூலம் நாட்டைச் சூறையாடிய அரசியல் - அதிகாரவர்க்கம், பெரும்பணக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மாற்று பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவரால் முடியவில்லை.
ஒரு நாட்டை ஆளும் பிரதான கட்சி ஏகாதிபத்திய சக்திகளின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிவதில்லை என்று முடிவெடுக்கிறது, அதையே நாடாளுமன்றமும் எதிரொலிக்கிறது, நாட்டின் ஆகப் பெரும்பாலான மக்களும் அதையே வழிமொழிகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு தேசமே கூடி எடுத்த முடிவு. எனினும், பிரதமரால் செயல்படுத்த முடியவில்லை. வெளிசக்திகளின் முடிவே இறுதியில் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது என்றால், உண்மையில் அந்த நாட்டை ஆள்பவர்கள் யார்? “பன்னாட்டுச் செலாவணி நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஆணையம் இவை மூன்றின் பிரதிநிதிகளே கிரேக்கத்தின் முடிவுகளைத் தீர்மானிப்பவர்கள். ஏதென்ஸில் அவற்றின் அதிகாரிகள் எப்போதும் தங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்கள் அவ்வப்போது மாறும்; குறிக்கோள்கள் ஒன்றே” என்கிறார்கள் கிரேக்கர்கள்.
இந்தியர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான இடம் இது. நம்முடைய பொருளாதாரக் கொள்கைகள் இன்றைக்கு யாரால் வடிவமைக்கப்படுகின்றன? மன்மோகன் சிங், மான்டேக் சிங் அலுவாலியாவில் தொடங்கி ரகுராம் ராஜன், அர்விந்த் பனகாரியா, அர்விந்த் சுப்ரமணியன் வரை யார்? எல்லாம் உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் முன்னாள் அதிகாரிகள்.
இன்றைக்கு, கிரேக்கம் அதன் வீழ்ச்சியிலிருந்து மேலே வர ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம் நிர்பந்தித்திருக்கும் பரிந்துரைகள்/ கட்டுப்பாடுகள் என்ன? “ கல்வி - சுகாதாரம் மக்களுக்கான நலத்திட்டப் பணிகள், மானியங்கள் போன்ற குடிமக்களுக்கான அடிப்படைக் கடமைகள், நாட்டின் தொழில்கள் / வேலைவாய்ப்புகள் சார்ந்த பொறுப்புகளிலிருந்து அரசு தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும்; முற்றிலுமாக தனியார்மயமாக்கலை நோக்கி நகர வேண்டும்.” இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறது கிரேக்கம். இதையேதானே வெவ்வேறு வார்த்தைகளில் நாமும் நம்முடைய ‘பொருளாதார மேதைகள்’ வாயிலிருந்து கேட்கிறோம்?
கிரேக்கத்தின் மீது இப்போது திணிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை, “உலகப் போருக்குப் பின் ஜெர்மனிக்கு உலக நாடுகள் இழப்பீடு விதித்த ஒப்பந்தத்தைப் போலக் கொடூரமானது” என்று கூறியிருக்கிறார் பதவிநீக்கப்பட்ட கிரேக்க நிதியமைச்சர் யானீஸ். “புதிய காலனியாதிக்கத்தை எதிர்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார் பதவி விலகிய எரிசக்தித் துறை அமைச்சர் லஃபாஸனிஸ்.
புதிய காலனியாதிக்கத்துக்குப் பல முகங்கள் உண்டு. தாம் எதிர்கொள்ளும் முகத்தின் அடையாளத்தை இந்தியர்கள் கண்டுணர வேண்டும்!
சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக