2009 மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் என்ன என்பதைப் பரிந்துரைக்க பெங்களூருவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தொழில்துறை, நிதித்துறைகளில் மூத்த நிர்வாகியாகப் பதவி வகித்தவரும், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக அப்போது பதவி வகித்தவருமான ராகேஷ் மோகன் அன்றைக்குப் பேசினார்.
முதல் தலைமுறை சீர்திருத்தங்களால் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தொழில்துறை விடுதலை பெற்றதால் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்ய முடிந்தது என்ற ராகேஷ், அரசுத்துறை நிறுவனங்களின் தரம், திறன் ஆகியவற்றின் மீது இரண்டாவது தலைமுறைச் சீர்திருத்தங்களின்போது கவனம் செலுத்த வேண்டும் என்றார்.மோகனுடைய உரை என்னை ஈர்த்தது. காரணம், என்னுடைய குடும்பத்தினர் அரசு ஊழியத்தில் இருந்தவர்கள். அரசு சாராத பணியைத் தேர்ந்தெடுத்தாலும் ஒரு குடிமகன் என்ற வகையிலும் கல்வியாளன் என்ற வகையிலும் பல்வேறு மாநிலங்களின் பல துறை அதிகாரிகளுடன் தொடர்புவைத்திருக்கிறேன். அரசுப் பணிகளின் மற்றும் அரசுப் பணியாளர்களின் சேவைத் தரம் விரைவாகச் சரிந்துவருவதை நேரில் பார்த்துவருகிறேன். சில வேளைகளில் நானே பாதிக்கப்பட்டிருக்கிறேன்.
உருவான நம்பிக்கைகள்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பிரதமர் மன்மோகன் சிங்கின் முழுக் கட்டுப்பாட்டில் அரசு நிர்வாகம் இருந்ததைப் போலத் தெரிந்தது. இந்தியா துரிதமான வளர்ச்சி பெற, இதுவரை அந்நிய முதலீட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட துறைகளைத் திறந்துவிட வேண்டும், தொழிலாளர் சட்டங்களை மேலும் எளிதாக்க வேண்டும், நாடு முழுவதையும் ஒரே வர்த்தக மண்டலமாக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
நமக்கே தெரியும் - அப்போது ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும் பொய்த்துவிட்டனவென்று. ஐமுகூ அரசு இந்தக் கொள்கை சீர்திருத்தங்களைத் தீவிரமாக மேற்கொள்ளவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பதவிக்கு வந்ததும் மீண்டும் நம்பிக்கைகள் துளிர்விட்டன. மிகவும் சக்திவாய்ந்த பிரதமராக உருவெடுத்திருக்கும் நரேந்திர மோடி, குஜராத்தில் சிவப்பு நாடா முறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்ததால், மத்திய அரசிலும் அதேபோலச் செயல்படுவார் என்று தொழில்துறையினர் நம்பிக்கை வைத்தார்கள், இப்போதும் நம்புகிறார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடங்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்துவைப்பார் என்றே நம்பப்படுகிறது.
இரண்டாவது தலைமுறைச் சீர்திருத்தங்கள் என்பவை மிக எளிதாகத் தொழில் நடத்தக் களம் அமைத்துக் கொடுப்பவை. ஆனால், அரசுத்துறை நிறுவனங்களைச் சீர்திருத்த இப்போது அதிகக் கவனம் செலுத்தப்படவில்லை. இந்தியா தன்னுடைய சமூக, பொருளாதார நன்மைகளுக்கு இவற்றைத்தான் நம்பியிருக்கிறது.
முதல் தலைமுறைப் பொருளாதாரச் சீர்திருத்தங்களால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ராகேஷ் விவரிக்கிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆறு தனித்தனி அரசுகள் தனியார் முதலீட்டின் மீதும், தொழில்முனைவோரின் நடவடிக்கைகள் மீதும் அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்கின. இந்தியப் பொருளாதாரம் உயர் வளர்ச்சிப் பாதையில் செல்ல இவை வழிவகுத்தன. அதனால், வறியவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. அந்நியச் செலாவணி பற்றாக்குறை என்ற நீண்ட காலப் பிரச்சினை விடைபெற்றது.இந்த வளர்ச்சி வீதம் இப்படியே தொடரவும், அதன் ஆழம் அதிகப்படவும், அரசுகளுக்குச் சொந்தமான நிறுவனங்கள் தங்களுடைய சேவையைக் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களால் அளிக்க முடியாத அல்லது அளிக்க விரும்பாத சேவைத் துறைகளில் அரசுத் துறை நிறுவனங்களின் சேவை முழு அளவிலும் உயர் தரத்திலும் இருப்பது அவசியம்.
முதல் தலைமுறை சீர்திருத்தங்களால் தனியார் துறையினர் தங்களுடைய ஆற்றலுக்கு ஏற்ப சிறப்பாகச் செயல்பட வழியேற்பட்டது. இரண்டாவது தலைமுறை சீர்திருத்தங்கள் வாயிலாக அரசுத்துறை நிறுவனங்கள் சிறந்த பொருட்களையும் சேவையையும் அளிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ராகேஷ் கூறினார். தனியார் துறையினர், பெருந்தொழில் நிறுவனங்கள், மக்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பொருட்களையும் சேவைகளையும் அளிப்பவை அரசுத்துறை நிறுவனங்களே.
மாற்ற வேண்டிய ஆறு துறைகள்
இப்போது நான்கு துறைகளில் அரசுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு பொதுவான தரத்துக்கும் கீழேதான் இருக்கிறது. அவற்றை மேம்படுத்தினாலே பொருளாதாரத்துக்கும் சமூகத்துக்கும் நல்ல பலன்கள் ஏற்படும்.
முதலாவது, வேளாண்மைத் துறை. இங்கு இரண்டாவது பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். பால் உற்பத்தித் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, வருவாயைப் பெருக்குவது, தோட்டக்கலைத் துறை மூலம் காய்கறிச் சாகுபடியைப் பெருக்குவது, கால்நடைவளர்ப்பு, மீனளம் ஆகியவற்றை அதிகப்படுத்த வேண்டும். இவற்றின் வளர்ச்சிக்கு நல்ல அறிவியல் ஆலோசனைகள், வங்கிக் கடன், விளைச்சலை நல்ல விலைக்கு விற்க சந்தை வசதி ஆகியவை தேவை.
இரண்டாவது, நகர்ப்புற வளர்ச்சி. அதிக நகர்ப்புற மக்களைக் கொண்ட நாடாக இந்தியா விரைவிலேயே முதலிடம் பிடிக்கவிருக்கிறது. நகரங்களில் பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் தூய்மையான குடிநீர், சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கவில்லை. பொதுப் போக்குவரத்து வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன. இந்திய நகரங்களில் அனைத்துப் பிரிவு மக்களுக்குமான வசதிகளைச் செய்துதருவதில் மிகப்பெரிய தோல்வியையே அரசு சந்தித்திருக்கிறது. நகரங்களும் மாநகரங்களும் தங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள வரி வசூலை அதிகப்படுத்திக்கொள்ள அதிகாரங்களைப் பெற வேண்டும்.
மூன்றாவது, மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை. தொடக்க நிலைக் கல்வியும் உயர் நிலைக் கல்வியும் மிக மோசமான தரத்தில் இருப்பதை 'ஆசர்'ஆவணப்படுத்திய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நம்முடைய பல்கலைக்கழகங்கள் நிதிப் பற்றாக்குறையாலும் அபரிமிதமான அரசியலாலும் பீடிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% என்ற இலக்கை எட்ட வேண்டும் என்றால், நம்முடைய தொடக்கக் கல்வி, உயர் நிலைக் கல்வி, தொழில் கல்வி என்ற அனைத்தையுமே அடி முதல் நுனிவரையில் மாற்றியாக வேண்டும்.
நான்காவது, அரசுத் துறை நிறுவனங்களின் நிர்வாகம். கல்வி, போக்குவரத்து, மின்சாரம் ஆகிய சேவைகளுடன் சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதும் அரசின் தலையாய கடமை. ஆயினும் மின்சார வாரியங்கள், பஸ் நிறுவனங்கள், விமான ஆணையம், ரயில்வே வாரியம், காவல்துறை, நீதித் துறை ஆகியவற்றில் பணிபுரிபவர்களில் ஏராளமானோர் எந்தவிதமான சிறப்புப் பயிற்சியும் இல்லாமல் நேரடியாக வேலைக்குச் சேர்ந்தவர்கள். அவர்களில் திறமை குறைவானவர்களும், யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல தாங்கள் என்று நினைப்பவர்களும் கணிசமாக இருக்கின்றனர். நிலைமை இப்படி இருந்தாலும், அரசுத் துறைகளின் சேவையை நாம் மேம்படுத்தியாக வேண்டும். அதிகாரம் அல்லது செல்வாக்குக்காக அல்லாமல் திறமையான சேவைகளை மக்களுக்கு அளிப்பதில் எதிர்ப்படும் சவால்களை முறியடிப்பதற்காகவே நாம் சேவையின் தரத்தை உயர்த்தியாக வேண்டும்.
ராகேஷ் வலியுறுத்துவதைப் போல நானும்கூட அரசு நிர்வாகத்தின் இடை நிலையில், உச்சத்தில் நிபுணர்களுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதை ஆதரிக்கிறேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 'ஆதார்'அட்டை தயாரிப்புப் பணிக்கு நந்தன் நிலகேணியையும் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜனையும் தேர்ந்தெடுத்து நியமித்தது. ஆனால், அதை அதிகார வர்க்கமும் மத்திய அமைச்சர்களில் சிலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஆனால், அத்தகைய நியமனங்கள் அதிகப்படுத்தப்படவில்லை. அரசு இலாகாக்களின் இணைச் செயலாளர் பதவி அந்தஸ்திலிருந்து அதற்கும் மேலே உள்ள பதவிகள் வரைக்கும் உள்ள இடங்களைப் பொதுப் போட்டி மூலம்தான் நிரப்ப வேண்டும். இந்த நியமனத்துக்கான தேர்வில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பங்கேற்க வாய்ப்பு தரப்படலாம். ஆனால், அந்தந்தப் பதவிகளுக்கு உரிய கல்வி, அனுபவம், திறமை, அர்ப்பணிப்பு உள்ளவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட வேண்டும்.
ஐந்தாவதாக, சுகாதாரத் துறை. இதன் முக்கியத்துவத்தைப் பற்றி விவரிக்க வேண்டியதில்லை.
ஆறாவதாக, சுற்றுச்சூழல் கெடாமல் பராமரிப்பதற்கான துறை. இது இல்லை என்றால் நம்முடைய வளமை, பாதுகாப்பு, அரசியல் நிலைத்தன்மை என்ற எல்லாமும் கெட்டுவிடும்.
முக்கியமான சூத்திரம்
"அரசின் பொது நிர்வாகத்தைச் சீர்திருத்த தெளிவான பாதையை உருவாக்குவது எளிதான செயல் அல்ல. ஆனால், அந்தத் திசையில் ஆக்கபூர்வமான சிந்தனையைச் செலுத்த வேண்டியது அவசியம்" என்கிறார் ராகேஷ். இது முக்கியமானது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்த யோசனை மீது அதிகக் கவனம் செலுத்தவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசோ இதுபற்றிக் கவனமே செலுத்தவில்லை. தொழில்துறையினர் எளிதாகச் செயல்படுவதற்கான சீர்திருத்தங்கள்பற்றி மட்டும்தான் பேசப்படுகிறது. அதுவும் முக்கியம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அரசுத்துறை நிறுவனங்களைச் சீர்படுத்துவது மிக மிக முக்கியம்!
ராமச்சந்திர குஹா, 'இந்தியா ஆஃப்டர் காந்தி' உள்ளிட்ட வரலாற்று நூல்களின் ஆசிரியர்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக