வியாழன், 2 ஜூலை, 2015

WHO

மக்களிடம் இருக்கும் மதிப்பும் நம்பகத்தன்மையுமே மருத்துவர்களுக்கு மிகப் பெரிய மூலதனம்.
மகத்தான கண்டுபிடிப்புகளுடன் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்தான் மருத்துவத் துறை மாபெரும் சீரழிவுகளையும் சந்திக்கிறது. ஒருபக்கம் மருத்துவம் தொழில்நுட்பரீதியில் வளர வளர அதைவிட வேகமாக வர்த்தகரீதியாக ஊதிப்பெருக்கிறது. இந்த ஊதல் நோய் மருத்துவர்களை மருத்துவ வியாபாரிகளாக மாற்றுகிறது. அவர்களுடைய அடிப்படை மனிதநேய உணர்வுகளை மழுங்கடிக்கிறது. தொழில்நுட்பமும் வணிகமும் சேர்ந்து மருத்துவர்களை மருத்துவ இயந்திரங்களாக மாற்றுகின்றன. அவர்களுடைய சிந்தனைகளில், செயல்பாடுகளில் மருத்துவ நெறிமுறைகள் - விழுமியங்களைக் கொன்று, வெறும் மருந்து / சிகிச்சை பரிந்துரைக்கும் இயந்திரங்களாக மாற்றிவருகின்றன. இந்த மோசமான சூழலுக்கு முகம் கொடுக்க மருத்துவர்களாகிய நாம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோம்?
மக்கள் மதிப்பே மூலதனம்
மக்களிடம் மருத்துவர்களுக்கு இருக்கும் மதிப்பும் நம்பகத்தன்மையுமே என்றைக்கும் மருத்துவர்களுக்கு மிகப் பெரிய மூலதனம். ஆனால், தனிப்பட்ட மருத்துவர்களைத் தாண்டி மருத்துவச் சங்கங்களையும் இன்று வணிகமயம் சூழ்ந்துவிட்டது. அண்மையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தண்ணீர் சுத்திகரிக்கும் சாதனத்துக்கு நற்சான்றும் அங்கீகாரமும் மருத்துவர் சங்கத்தால் வழங்கப்பட்டிருப்பது ஓர் உதாரணம் (அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலரின் எதிர்ப்பையும் மீறியே இது நடந்திருக்கிறது). இன்னும் பன்னாட்டு நிறுவனங்களின் மென்பானங்களுக்கு, புட்டிகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளுக்கு, பற்பசைகளுக்கு, சோப்புகளுக்கு, உணவுப் பொருட்களுக்கு, ஊட்டச்சத்துப் பானங்களுக்கு என்று எத்தனை எத்தனை பெரிய நிறுவனங்களின் சரக்குகளுக்குத் ‘தரமானவை, ஆரோக்கியத்துக்கு உகந்தவை’எனச் சான்றுகள் அளிக்கப்படுவது தொடர்கிறது என்பது நமக்குத் தெரியும். இந்தச் சரக்குகள் எல்லாம் எந்தவிதமான சோதனைகளுக்கும் ஆய்வுகளுக்கும் மருத்துவர்கள் சங்கங்களால் உட்படுத்தப்படுவதில்லை என்பதும் நமக்குத் தெரியும். இப்படிச் சிறந்தவை என்று மக்கள் மீது திணிக்கப்படும் பல சரக்குகளின் பின்னணியில் மருத்துவர்களின் சங்கங்களுக்கு வழங்கப்படும் கோடிக் கணக்கான ரூபாய்கள் நன்கொடைகளின் பங்கும் நமக்குத் தெரியும். இதற்கெல்லாம் நம்முடைய எதிர்வினைகள் என்ன? இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் நம் மீது என்ன மாதிரியான மதிப்பீட்டுக்கு வருவார்கள்?
மக்கள் நலனும் மருத்துவர்கள் நலனும்
நம் நாட்டில் பொதுச் சுகாதாரத் துறை திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான, அரசு மருத்துவமனைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் திட்டமிட்டுக் குறைக்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளுக்குக் கோடிக் கணக்கான ரூபாய்கள், சலுகைகள் திட்டமிட்டுத் திருப்பிவிடப்படுகின்றன. மக்களுக்கான மருத்துவச் சேவைகளை வழங்க வேண்டிய தனது பொறுப்பை அரசு தட்டிக்கழிக்கிறது. மருத்துவக் காப்பீடு அட்டைகளை வழங்கி, மக்களைத் தனியார் மருத்துவமனைகளை நோக்கி விரட்டுகிறது. வலுவான பொதுச் சுகாதாரத் துறையின் மூலமான மருத்துவச் சேவை வழங்கல் என்பதற்குப் பதிலாக மருத்துவக் காப்பீட்டை அடிப்படையாகக் கொண்டதாக மருத்துவத் துறை மாற்றப்படுகிறது.
இதன் ஒரு பகுதிதான் அரசு மருத்துவமனைகளின் பணி நியமனங்கள், உணவுத் தயாரிப்பு, உடைகள் மற்றும் துணிகளை வெளுத்தல், மருத்துவமனைப் பராமரிப்புப் பணிகள், அவசர ஊர்தி சேவை, மருத்துவப் பரிசோதனைகள், உயர் சிறப்புச் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் அயல் ஒப்படைப்பு முறை நோக்கித் தள்ளப்படுவது மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவது. அவர்களின் உழைப்புக்கேற்ற, திறமைக்கேற்ற ஊதியம் வழங்கப்படாமல் திறமைமிகு மருத்துவர்களெல்லாம் பெருநிறுவன மருத்துவமனைகளை நோக்கித் தள்ளப்படுவது. தனியார் மருத்துவமனைகளின் லாப வேட்கை மருத்துவச் சமூகத்தின் மீதும் ஏவப்படுவது. மருத்துவ அறநெறிமுறைகள், விழுமியங்கள் யாவற்றையும் இழந்து, பணிக்காக வெறும் இயந்திரங்களாக மருத்துவர்கள் நிறுத்தப்படுவது.
நம் மருத்துவச் சமூகம் இதில் தன் பணி நியமனம், பணிப் பாதுகாப்பு தொடர்பான பேச்சுகள் வரும்போது கவனிக்கிறது, ஏனைய விஷயங்கள் என்றால், கண்டும் காணாததுபோல நகர்ந்துவிடுகிறது. பொதுச் சுகாதாரத் துறையின் பலவீனங்கள் மேல் ஏற்பட வேண்டிய மக்களின் கோபம், மருத்துவர்கள் மீது திரும்பக் காரணம் இதுதான். இந்த அவல நிலைக்கு எதிராக நம்மையன்றி யார் பேச முடியும்?
உலகமயமும் தனியார்மயமும் தாராளமயமும் பிசாசுகளாகச் சூழ்ந்து எல்லா அரசுகளையும் ஆட்டிப் படைக்கும்போது, எளிய மக்களின் சுகாதாரத்தைத் தூக்கி நிறுத்த நம்மையன்றி யாரால் முடியும்?
காத்திருக்கும் பேராபத்து
உலக நாடுகளின் சுகாதாரத் திட்டங்களுக்கும் கொள்கை களுக்கும் சூத்திரதாரி உலக சுகாதார நிறுவனம். அந்நிறுவனத்தின் 68-வது உலக நலவாழ்வுப் பேரவைக் கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில் அந்த அமைப் பில் உறுப்பினர்களாக உள்ள 192 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கூடவே, இந்த நாடுகளின் பிரதிநிதி களைத் தவிர, நூற்றுக்கும் மேற்பட்ட உலக நலவாழ்வுக் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் யார் தெரியுமா? பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள். அதாவது, நெஸ்லே, கோகோ கோலா , ஃபெரிரோ, மார்ஸ், மெக்டொனால்ஸ், பெப்சிகோ போன்ற பன்னாட்டு நுகர்பொருள் நிறுவனங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள். இவர்களுக்கு இந்தக் கூட்டத்தில் என்ன வேலை? நீங்கள் நண்டைச் சுட்டு நரியைக் காவலுக்கு வைத்த கதை படித்திருந்தால், புத்திசாலி!
ஆம்! உலக சுகாதார நிறுவனத்தின் முடிவுகளையும் கொள்கைகளையும் திட்டங்களையும் தங்களுக்குச் சாதகமாகப் பின்னிருந்து இவர்கள் நகர்த்திய காலகட்டம் மலையேறிவிட்டது. நேரடியாகவே இன்று காட்சிக்கு வந்துவிட்டார்கள். உலக சுகாதார நிறுவனமே இன்றைக்கு உலகப் பெருநிறுவனங்களின் தொகுப்புபோலத்தான் காட்சி தருகிறது. ஏனெனில், இந்த நிறுவனங்கள் வழங்கும் நிதிகளிலிருந்தே உலக சுகாதார நிறுவனத்தின் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களது பொருளாதார நலன்களை இந்நிறுவனங்கள் முன்நிறுத்துகின்றன.
ஓர் உதாரணம் இது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சர்க்கரை ஆலை முதலாளிகளின் நலனை ஒலித்தது. அதாவது, ஒரு நாளைக்கு ஒரு நபர் தனக்குத் தேவையான கலோரியில் 5%-க்குக் குறைவாக மட்டுமே சர்க்கரை மூலமாகப் பெற வேண்டும் என்ற 2014-ம் ஆண்டின் வழிகாட்டுதலை, 10% ஆக உயர்த்த வேண்டும் என இக்குழு வாதிட்டது. சர்க்கரை ஒரு அத்தியாவசிய ஊட்டச் சத்து என அறிவிக்கவும் வலியுறுத்தியது. இதெல்லாம் உணர்த்துவது என்ன?
மருத்துவத் துறை முற்றிலுமாக மருத்துவர்களின் கைகளை விட்டுப் பறிபோய்க்கொண்டிருக்கிறது. அதை மீட்கும் ஒரே வழி… மக்களுடன் மருத்துவர்கள் கை கோப்பதுதான். வாருங்கள் மாற்றத்துக்காக மக்களோடு கரம் கோப்போம்! மருத்துவத்தை மீண்டும் மருத்துவச் சமூகத்தின் கீழ் கொண்டுவருவோம்!
இன்று தேசிய மருத்துவர்கள் தினம்
- ஜி.ஆர். இரவீந்திரநாத்,
மருத்துவர், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர்,
தொடர்புக்கு: daseindia@gmail.co

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக