வியாழன், 30 ஜூலை, 2015

ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம்! - Children

ச.மாடசாமி
COMMENT (1)   ·   PRINT   ·   T+  
குழந்தைகளுக்குப் பள்ளியில் நேரும் அவமானங்களை நாம் பேசுவதில்லை.
பெங்களூரில் கடந்த மே மாதத்தில் நடந்த துயரச் சம்பவம் இது. நான் அந்த அடுக்ககத்தின் 16-வது மாடியில் இருந்தேன். 12-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள் ஒரு சிறுமி. மாணவி. மரணத்துக்குக் காரணம், தேர்வுத் தோல்வி. அது தமிழ்க் குடும்பம். அந்தக் குடும்பத்தின் நண்பர் சொன்னார், “குடும்பத்தில் தாத்தா- பாட்டிகூட உயிரோடு இருக்கிறார்கள். இந்தச் சிறுமியின் மரணம் - அந்தக் குடும்பத்தின் முதல் மரணம்.”
இதே மே மாதம். மதுரை அருகே தேர்வில் தோல்வியுற்ற இரு சிறுவர்கள் தண்டவாளத்தில் தலையைக் கொடுத்து உயிர்விட்ட செய்தி கேட்டு நண்பர் ஒருவர் சொன்னார், “கேட்கவே பயங்கரமா இருக்கு… சின்னஞ்சிறுவர்கள் எப்படி இந்த முடிவுக்குப் போனார்கள்?”
மரணத்தைவிட வலி மோசம்
விஷயம் இதுதான். நம் சமூகத்தில், குழந்தைகள் உயிரை மாய்த்துக்கொள்வதைத்தான் தற்கொலைகளின் பட்டியலில் சேர்க்கிறோம். அவர்கள் மனதுக்குள் மருகி மருகிச் சாவதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. விளைவு, அதன் உச்சத்தில் நடக்கும் மரணங்களே நம் பார்வைக்கு வருகின்றன. மரணத்தைவிட மோசமானது வலி என்கிறது மருத்துவம். அவமதிப்பும் மரணத்தைவிட மோசமானதுதான்.
குழலி என்று அழகாகப் பெயர் சூட்டப்பட்ட குழந்தை இப்படிக் கலங்கி அழுததாக அவளுடைய அம்மா சொன்னார், “வாத்தியார் ‘கெழவீ… கெழவீ’ன்னு சிரிப்புக் காட்டிக் கூப்பிடுறார்மா… பசங்கள்லாம் சிரிக்கிறாங்க. எனக்கு ஏன் இந்தப் பேரு வச்சீங்க?” - இந்த விசும்பலுக்குள் மரணத்தின் வாசனை இல்லையா? ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம்!
ஒரு குழந்தை எத்தனை முறை சாவது என்ற கேள்வியை மனம் பதறிப்போகுமாறு கேட்ட புத்தகம் ‘டெத் அட் அன் எர்லி ஏஜ்’ (Death at an early age - சிறு வயது மரணம்). நூலாசிரியர் ஜோனதன் கோசல். ஒரு ஆசிரியர். 1950-களில், நிறவெறி தலைவிரித்தாடிய அமெரிக்காவில், பாஸ்டன் பள்ளி ஒன்றில் கறுப்புச் சிறுவர்களை அரவணைத்துக் கற்பித்தவர். அதன் காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர். வகுப்பறைகளில் செத்துச் செத்துப் பிழைத்த கறுப்புக் குழந்தைகளின் வரலாறுதான் அவருடைய ‘டெத் அட் அன் எர்லி ஏஜ்’.
அதில் ஒருவன் இவன். பெயர் ஸ்டீபன். வயது எட்டு. உடல் மிக மெலிந்தவன். போதாத ஆரோக்கியம். ஸ்டீபனுக்கு அம்மா அப்பா கிடையாது. அரசிடம் சிறு உதவி பெற்று ஒரு பெண் அந்த அநாதைச் சிறுவனை வளர்த்தாள். அவள் கோபக்காரி. வீட்டில் ஒவ்வொரு நாளும் அடிவாங்கிப் பின் பள்ளிக்கு வருவான் ஸ்டீபன். ஆனால், அந்த அவமதிப்புகளைப் பள்ளியில் பகிர்வதில்லை.
கண்கள் காயப்பட்ட விதம்
ஒரு முறை கண்கள் சிவந்து வீங்கிப் பள்ளிக்கு வந்தான். கேட்டதற்கு விபத்து என்றான். பாதிக்கப்பட்ட அவன் கண்களைப் பார்க்கவே மற்ற குழந்தைகள் பயந்தனர். ஆனால், அவன் அழாமல் இருந்தான். ஆசிரியர் துருவிக் கேட்டபோது உண்மையைச் சொன்னான், வளர்ப்புத் தாய் அடித்து விரட்டியபோது மாடிப்படிக் கைப்பிடியில் முட்டிக் கண்கள் காயப்பட்ட விதத்தை.
ஸ்டீபன் நான்காம் வகுப்பு படித்தான். ஆனால், எண்ணும் எழுத்தும் அறிவதில் இரண்டாம் வகுப்பு குழந்தைக்கு உள்ள ஆற்றலே அவனிடம் இருந்தது. ஆனால், அவனிடம் ஒரு தனித் திறமை இருந்தது. ஓவியம் வரைவதும் வண்ணம் தீட்டுவதும்தான் அது. சொந்தக் கற்பனையில் வரைவான். அய்யோ, பாவம் அதுவும் அவனது ஓவிய ஆசிரியைக்குப் பிடிக்கவில்லை. “நான் வரையச் சொன்னபடி வரை”, “நான் காட்டிய படத்தில் இருப்பதுபோல் வரை!” என்பதுதான் ஓவிய ஆசிரியையின் ஆணை. சொந்தமாக வரையத் தெரிந்த அந்தக் குழந்தைக்குக் காப்பியடிக்க வரவில்லை. விளைவு, அவன் அவமதிக்கப்பட்டான்; தனித்துவிடப்பட்டான். அவன் வரைந்தவை யாவும் ‘குப்பைகள்’ ஆயின. பள்ளிக்கூடத்தில் அவமதிக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் அவன் மரணமடைந்தான். விரைவிலேயே அவன் ஒருவிதமான மனநோய்க்கு ஆளானான். சம்பந்தா சம்பந்தமில்லாமல் வகுப்பில் சிரித்தான். தானாகப் பேசிக்கொண்டான். வகுப்பில் ஓரமாய் ஒதுங்கிப் போய்ச் சுருண்டு படுத்துக்கொண்டான்.
பல முறை மரணமடைந்தவன்
ஸ்டீபனின் ஒரே ஆறுதல் புதிதாக வந்திருக்கும் ஆசிரியர் கோசல் (நூலாசிரியர்). எப்போதாவது நெருங்கி வந்து தான் வரைந்த படங்களை அவருக்குக் காட்டுவான். அவனைப் பாராட்டக்கூடிய ஒரே ஆள். ஓவிய ஆசிரியை கோசலைக் கண்டிக்கிறார். “அவன் உங்களிடம் அதிகச் சலுகை எடுக்கிறான். இனி, அவன் உங்கள் பக்கத்தில் வரக் கூடாது.” ஸ்டீபன் அவரிடம் இருந்தும் விலகுகிறான். இது ஸ்டீபனுக்கு எத்தனையாவது மரணம்?
இப்படி அவமதிக்கப்பட்ட குழந்தைகளின் வரலாறு களை அந்தப் புத்தகம் பேசுகிறது. எனக்கு நம்மூர் சூழல் ஞாபகத்துக்கு வருகிறது. கோவணம் கட்டாமல் பள்ளிக்கு வரும் ஏழைச் சிறுவர்களை, அவர்களின் துண்டையும் உரித்து நிர்வாணமாக வீதியில் விரட்டித் தண்டித்த 19-ம் நூற்றாண்டுக் காட்சிகள் துரத்துகின்றன.
இன்னும் தொடர்பவை
இப்போதும் நடப்பதென்ன? காது கேட்காத சிறுமியை, “ஏய் செவிடு! சொல்றது காதுல விழலையா?”என்று கேட்டுக் கன்னத்தில் ஓங்கி அறையும் ஆசிரியர்கள், வகுப்பு பூராவும் சுற்றி வளைத்து ஒரு சிறுவனைக் கொட்டவைத்த ஆசிரியர்கள், “ரெட்டைச் சடை போட்டுட்டு வரத் தெரியுது; ஹோம் வொர்க் போட முடியலையா” என்று அநாகரிகமாக உடல் அலங்காரங்களில் தலையிட்டுச் சிறுமியை வகுப்பறை வாசலில் அழ வைத்த ஆசிரியைகள், சில குழந்தைகளுக்கு ‘டிஸ்லெக்சியா’என்றொரு பிரச்சினை இருக்கிறது என்றறியாமலே, எழுத்துகளைப் பிறழ்ந்து எழுதும் குழந்தையை “ஏய்… ஏண்டா வவ்வால் மாதிரி எழுதுறே?” என்று ஆத்திரப்பட்டு வகுப்பை விட்டுத் துரத்திய ஆசிரியர்கள்... இவையெல்லாம் எப்போதோ, எங்கோ நடந்தவை அல்ல; இன்னும் தொடர்பவைதான்.
இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு மழலையர் பள்ளி ஆண்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். கலை நிகழ்ச்சியின்போது, ஒரு சிறுமி அசைவுகளை மெதுவாகச் செய்தாள் என்பதற்காக மேடைக்குள் நுழைந்து ஆசிரியை அச்சிறுமியை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினார். அந்தச் சிறுமியைக் கவனித்தேன். விலகித் தனிமைப்பட்ட அவள், பள்ளியின் சிறு மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல்மேட்டில் தனியாக உட்கார்ந்திருந்தாள். கண்கள் நனைந்திருந்தன. தனக்குள் பேசிக்கொண்டிருந்தாள். எனக்கு அந்தக் காட்சி இப்போது நினைத்தாலும் இடியாய் இறங்குகிறது. கூப்பாடு போட்டு வரும் மரணங்கள் இறுதியில் - முடிவுரையாக - வெளிப்பட்டு நிற்கின்றன. ஆனால், அவற்றின் முகவுரையாக, வீடுகளிலும் பள்ளிகளிலும் சத்தமில்லாமல் நிகழும் மரணங்களை எப்போது நாம் வாசிக்கப்போகிறோம்?
- ச. மாடசாமி, கல்வியாளர், ‘எனக்குரிய இடம் எங்கே?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: smadasamy1947@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக