இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, தனி நபருக்கு 65 கிராம் பருப்பு பரிந்துரைத்துள்ளது.
ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கமானது கடந்த ஓர் ஆண்டில் கிடுகிடுவென குறைந்துள்ள போதிலும், பருப்பு வகைகளின் விலையில் கடந்த சில மாதங்களில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வானது, சாமானிய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழைகள் முதல் பணக்காரா்கள் வரை அன்றாடம் பயன்படுத்தக்கூடிய துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போன்றவற்றின் ஒரு கிலோ சில்லரை விலையானது 100 ரூபாயைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்தியாவின் பருப்புப் பயறுகளின் விலை ஏன் உயர்கிறது என்பதற்கு, உண்மைக்கு மாறான காரணங்களைச் சில பொருளாதார அறிஞர்களும் அரசின் கொள்கை ஆய்வாளர்களும் கூறிவருகிறார்கள். பருப்புப் பயிர்கள் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிற மகாராஷ்டிரம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், கோடைக் காலத்தில் பருவம் தவறி அதிகமாகப் பெய்த மழையால் நிகழ்ந்த பயிர்ச் சேதத்தால் ஏற்பட்ட உற்பத்திக் குறைவு விலை உயர்வுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இது உண்மையென்றால், பருவமழை சரியான நேரத்தில் பெய்த கடந்த சில ஆண்டுகளில்கூட, பருப்புப் பயறுகளின் விலை ஏன் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போனது?
பருப்பு உற்பத்தியில் முதலிடம்
பருப்பு உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது. உலகின் மொத்தப் பருப்பு உற்பத்தியில் 23% கொண்டுள்ள நம் நாட்டில், சுமார் 230 லட்சம் ஹெக்டேரில் பல்வேறு வகையான பருப்புப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. நீர்ப்பாசன வசதி இல்லாத மானாவாரி நிலங்களை அதிகமாகக் கொண்டுள்ள மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கா்நாடகம் மற்றும் ஆந்திரம் போன்ற மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.
பசுமைப் புரட்சியை 1965-66-ம் ஆண்டில் அறிமுகப் படுத்திய பிறகு, உணவு உற்பத்தியில் குறிப்பாக, நெல் மற்றும் கோதுமைப் பயிர்களில் தன்னிறைவு பெற்றது மட்டுமல் லாமல் பல நாடுகளுக்கு நம்மால் ஏற்றுமதியும் செய்ய முடிகிறது. ஆனால், பருப்பு உற்பத்தியில் இதுவரையில் மெச்சத்தக்க அளவில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் மொத்த உற்பத்தியில் சற்று உயா்வு இருந்தாலும், 1975-76-ம் ஆண்டிலி ருந்து 2009-10 வரையிலான காலகட்டத்தில் பருப்பு உற்பத்தி 130-140 லட்சம் டன்களாக மட்டுமே உள்ளது. பசுமைப் புரட்சியால் நெல் மற்றும் கோதுமைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பளவு எக்கச்சக்கமாக உயா்ந்தது மட்டுமல்லாமல், ஒரு ஹெக்டேரில் கிடைக்கும் மகசூலும் கணிசமான அளவுக்கு உயர்ந்தது. பருப்பு மொத்த சாகுபடிப் பரப்பளவானது 1964-65-ம் ஆண்டு முதல் இன்று வரை ஏறக்குறைய 230 லட்சம் ஹெக்டேர்களாகவே உள்ளது.
மொத்த உற்பத்தியில் பெரிய மாற்றம் இல்லாத காரணத்தால், 1950-51-ம் ஆண்டில் சராசரியாக, தனிநபருக்குக் கிடைத்த பருப்பின் அளவான 61 கிராம், 2012-13-ம் ஆண்டில் 42 கிராமாகக் குறைந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச அளவான 65 கிராமைவிடத் தற்போது தனிநபருக்குக் கிடைக்கும் பருப்பளவு மிகவும் குறைவானதாகும். மத்திய அரசால் 2007-08ம் ஆண்டு, துரிதப்படுத்தப்பட்ட பருப்பு வகைகள் உற்பத்தித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதே போன்று சமீபத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்திலும் இவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
விலைக் கொள்கை
2000-01 முதல் 2014-15 வரையிலான காலகட்டத்தில் பயறுகளுக்குக் கொடுக்கப்படும் குறைந்தபட்சக் கொள் முதல் விலை கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு குவிண்டால் துவரைப் பயிறுக்குக் கொடுக்கப்படும் ஆதார விலையானது ரூ. 1,200 லிருந்து ரூ.4,625 ஆகவும், பச்சைப் பயறுக்கான விலை
ரூ. 1,200-லிருந்து ரூ. 4,850 ஆகவும் மற்றும் உளுந்துக் கான விலை ரூ. 1,200 லிருந்து ரூ. 4,625 ஆகவும் உயர்த்தப்பட்டது. இது போன்ற விலை உயா்வு இந்தியாவில் வேறு எந்தப் பயிருக்கும் கொடுக்கப்படவில்லை. ஆனால், இந்த விலை உயர்வால், பருப்புப் பயறுகளின் உற்பத்தியில் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. இது ஏன்?
முக்கியக் காரணங்கள்
பசுமைப் புரட்சியின்போது நெல், கோதுமை போன்ற பயிர்களுக்கு ஆராய்ச்சி, வளா்ச்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பருப்புப் பயிர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இதனால், அதிக விளைச்சல் கொடுக்கக்கூடிய வீரிய ரகங்களை இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உதாரணமாக, ஒரு ஹெக்டேர் மூலமாகக் கிடைக்கக்கூடிய சராசரி பருப்பு மகசூல் 1970-71 ம் ஆண்டில் 524 கிலோவிலிருந்து வெறும் 699 கிலோவாக மட்டுமே (2011-12-ம் ஆண்டில்) உயர்ந்துள்ளது. இதன் காரணமாகப் பெரும்பாலான விவசாயிகள் நல்ல மண்வளம் உள்ள நிலங்களில் பருப்புப் பயிர்கள் சாகுபடி செய்வதைத் தவிர்த்துவருகிறார்கள்.
அறுவடை செய்த பருப்புப் பயிர்களை விவசாயிகள் விற்பதற்கு அரசால் நிர்வகிக்கப்படும் சரியான கொள் முதல் நிலையங்கள் இல்லாத காரணத்தால், பெரும் பாலான சமயங்களில் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் சிக்கி மிகவும் குறைந்த விலைக்குப் பொருட்களை விற்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது. பருப்புப் பயிர்கள் அதிகமாகச் சாகுபடி செய்யப்படும் மாநிலங்களில்கூட, அரசால் நிர்வகிக்கப்படும் நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் இல்லை.
தனியார் துறை மூலமாக ஒப்பந்த விவசாயத்தை (Contract Farming) ஊக்குவித்து பருப்பு சாகுபடி விவசாயிகள் பயன் பெறும் வகையில், நல்ல கொள் முதல் நடைமுறைகளை உருவாக்கி, பருப்பு சாகுபடியை உயா்த்த வேண்டும்.
பருப்புப் பயிர்கள் பெரும்பாலும் பருவ மழையைக் கொண்டு மானாவாரி நிலங்களிலேயே சாகுபடி செய்யப் பட்டுவருகின்றன. அரசின் புள்ளிவிவரப்படி, தற்போது பருப்புப் பயிர்கள் சாகுபடி செய்யப்படும் மொத்தப் பரப்பள வான 240 லட்சம் ஹெக்டேரில், வெறும் 16% மட்டுமே நீா்ப்பாசன வசதி பெற்றுள்ளது. இதனால், விளைச்சலில் இடர்பாடுகளும் நிச்சயமற்றதன்மையும் ஏற்படுவது மட்டுமல்லாமல், சராசரி மகசூலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவாக உள்ளது. எனவே, நீா்ப்பாசன வசதி பெற்றுள்ள நிலங்களில் பருப்பு சாகு படியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சொட்டு மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன முறைகள் மூலமாக, பருப்பு மகசூலை அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை விவசாயிகள் மத்தியில் அரசு கொண்டுசெல்ல வேண்டும்.
தற்போதுள்ள பெரும்பாலான பருப்புப் பயிர்கள் பூச்சித் தாக்குதலுக்கு உட்படுவது மட்டுமல்லாமல், வறட்சியின் பிடியில் சிக்கி, குறைந்த மகசூல் மட்டுமே கொடுக்கின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, 2009-ல் மத்திய அரசால் அமைக்கப்பட்ட பருப்புப் பயிர் உற்பத்திக்கான நிபுணா்கள் குழு கூறியுள்ளதுபோல, வீரிய பருப்பு ரகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரிசி மூலம் பசியைப் போக்கினால் மட்டும் போதாது; பருப்பின் மூலம் புரதத்தையும் அளித்தால்தான் ஊட்டக்குறைவற்ற சமூகமாக நம் சமூகத்தை மாற்ற முடியும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
- அ. நாராயணமூர்த்தி, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, தமிழ்நாடு.
தொடர்புக்கு: narayana64@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக