திங்கள், 6 ஜூலை, 2015

Mullai Periyaru

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-120-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/article7389064.ece


http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88/article7379763.ece

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-120-8-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88/article7391315.ece

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-999-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article7386048.ece


புவியீர்ப்பு அணை கட்டும் தொழில்நுட்பத்தை 18-ம் நூற்றாண்டிலேயே முழுமையாக அறிந்திருந்த பொறியாளர்களில் உலக அளவில் பென்னிகுவிக் மிகச்சிறந்தவர் என்பதை முல்லை பெரியாறு அணையை கட்டியதன் மூலம் நிரூபித்தார். பலரால், பலமுறை கைவிடப்பட்ட இந்த அணை திட்டத்தை சவாலாக எடுத்து சாதித்துக் காட்டினார். மிக சிக்கலான காலகட்டத்தில், நெருக்கடியான இடத்தில், மழை, வெள்ளம் என இயற்கை இன்னல்களுக்கு மத்தியில் முல்லை பெரியாறு அணையை வெற்றிகரமாக கட்டி முடித்தார். இந்த அணையின் மூலம் தென்மாவட்டங்களில் விவசாயம், குடிநீர் என அடிப்படைத் தேவைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருளாதார நிலையையே மேம்படுத்தி இப்பகுதி மக்களின் இதயத்தில் வாழும் தெய்வமாகத் திகழ்கிறார் பென்னிகுவிக்.
பென்னிகுவிக் ராணுவ குடும்பத்திலிருந்து வந்தவர். புனேயில் இந்திய ராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய ஜான் பென்னிகுவிக்- சாரா தம்பதிக்கு 1841 ஜனவரி 15-ம் தேதி மகனாகப் பிறந்தார். தனது 8-வது வயதில் தந்தையை இழந்தார். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்த பென்னிகுவிக் சிறு வயதிலேயே சமூக சிந்தனையுடன் காணப்பட்டார். லண்டனில் ஷெல்டன் காம் நகர பள்ளியில் தனது பள்ளி வாழ்க்கையைத் தொடங்கி அடிஸ்கோம்ப் ராணுவ அகாடமியில் பொறியியல் பயின்று பட்டம் பெற்றார்.
லெப்டினென்ட்டாக பொறுப்பேற்பு
பின்னர் தனது தந்தையைப்போல் ராணுவத்தில் பணியாற்ற ஆசைப்பட்டு 1858 டிசம்பர் 10-ம் தேதி பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட்டாக பொறுப்பேற்றார். 1874 அக்டோபர் 13-ம் தேதி கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் இரு ஆண்டுகளிலேயே 1876 டிசம்பர் 8-ம் தேதி மேஜர் ஆனார். 1877-ல் சேலம் மாவட்ட பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். சென்னை மாகாணம், மைசூர் அரசு என பல்வேறு இடங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவரது தொழில் திறமை காரணமாக அடுத்தடுத்து பதவி உயர்வுகள் இவரைத் தேடி வந்தன. 1886 மார்ச் 4-ம் தேதி கர்னலாக பொறுப்பேற்றார்.
திருமண வாழ்க்கை
கிரேஸ் ஜார்ஜினா ஜாம்பியர் என்ற பெண்ணை 1879-ல் பென்னிகுவிக் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், 5 மகள் களும் பிறந்தனர். மகனுக்கு பால் பென்னிகுவிக் என்று பெயர் சூட்டினார். பால் பென்னிகுவிக் பிற்காலத்தில் இங்கிலாந்து நாட்டின் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். 1962-ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
குடும்ப வாழ்க்கை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் பெரியாறு அணை கட்டும் திட்ட முயற்சியில் இரவு, பகலாக பென்னிகுவிக் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இதற்காக 1887-ல் பெரியாறு அணை கட்டுமானம் குறித்து ஒரு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து சென்னை மாகாண அரசுக்கு அனுப்பி வைத்தார். இரண்டு மலைகளுக்கிடையில் வழிந்தோடி செல்லும் நதிநீரை தடுத்து நிறுத்துவது, இதனால் தேங்கும் நீரை அணையின் மறுமுனையில் அமைக்கப்படும் குகை வழியாக தமிழகத்துக்கு கொண்டு செல்வது என்ற திட்டத்தை தொழில்நுட்ப ரீதியாக வெற்றிகரமாக எப்படி செயல்படுத்த முடியும் என்பதை திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அரசின் பாராட்டு
பொறியியல் வல்லுநர்களின் கட்டுமானத்தில் உலக அளவில் இது சிறந்ததாகவும் வியக்க வைக்கும் திட்டமாகவும் இருந்தது. இந்த அறிக்கையைப் பார்த்து வியந்த சென்னை மாகாண அரசு அதை உடனே ஏற்றுக்கொண்டதுடன் பென்னிகுவிக்கை வெகுவாக பாராட்டியது.
இதற்கிடையில் 1886-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கும் திருவிதாங்கூர் அரசுக்கும் அணை தொடர்பாக 999 ஆண்டுகள் ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டது. இதையடுத்து பென்னிகுவிக்கை 1887 மார்ச் 24-ம் தேதி பெரியாறு அணை கட்டும் திட்டத்துக்கு தலைமைப் பொறியாளராக பிரிட்டிஷ் அரசு நியமித்தது. பிரிட்டிஷ் அரசு தன்மீது வைத்திருந்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்ட அணையின் கட்டுமானப் பணியை தொடங்கினார்.
முல்லை மலரும்...

தமிழகத்தில் காவிரிக்கு அடுத்தபடியாக பயனளிப்பதிலும், இரு மாநில சர்ச்சைகளிலும் முக்கிய நதியாகத் திகழ்வது முல்லை பெரியாறு. மதுரை மாவட்டம் உட்பட 5 தென் மாவட்டப் பகுதிகளில் 2.13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பாசனம், 80 லட்சம் மக்களின் குடிநீர் தேவை உள்ளிட்ட அனைத்தும் இந்த நதியை நம்பித்தான் உள்ளன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நதியில் 18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் பின்னணியில், 120 ஆண்டுகளுக்கு முன் முல்லை பெரியாறு அணை உருவாகியுள்ளது. 3 பக்கங்களிலும் உள்ள மலைகளுக்கு இடையே சுவர் எழுப்பி புவிஈர்ப்பு அணையாக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. பல ஆயிரம் பேர் உயிர்த் தியாகங்களில், ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக்கின் கடும் முயற்சியால் கம்பீரமான அணை உருவானது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மட்டு மின்றி அவர்களின் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்துவிட்ட இந்த அணைக்கு கேரள மாநிலம் தரும் தொடர் இடையூறுகள், இதனால் கொதித்து எழும் தமிழக விவசாயிகளின் போராட்டம், வழக்கு மேல் வழக்குகளைத் தொடரும் இரு மாநில அரசுகள், ஆய்வு மேல் ஆய்வு நடத்தும் குழுக்கள் என வரலாற்று சம்பவங்கள் ஏராளம்.
தலைவிரித்தாடிய பஞ்சம்
18-ம் நூற்றாண்டு இறுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஆறுகள், குளங்கள் வறண்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயத் தொழிலும், உணவு உற்பத்தியும் முடங்கி பஞ்சம் தலைவிரித்து ஆடியது. கொடூரமாக நோய்கள் தாக்கின. குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மனிதர்கள் கால்நடைகளுடன் இறந்து மடிந்தனர். மொத்தம் 2 லட்சம்பேர் வரை இறந்ததாக டெய்லர் என்ற வெள்ளைப் பாதிரியாரின் நாட்குறிப்பு தெரிவிப்பதாக தகவல் உள்ளது. ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு தீர்வு கிடைக்காமல் மக்கள் தவித்தனர். தண்ணீரை தேடி ஊர், ஊராக அலைந்தனர்.
கடுமையான இந்த பஞ்சத்தைப் போக்க 1798-ம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி தனது அமைச்சர் முத்து அருளப்பரை அனுப்பி தண்ணீர் கிடைக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். பலநூறு மைல்களை தாண்டியும் நாலாபுறமும் ஏராளமானோர் தண்ணீரை தேடி அலைந்தனர். அப்போதுதான் கேரளப் பகுதியில் அபரிமிதமாக மழை பெய்வதாகவும், இந்த மழைநீர் வீணாக அரபிக்கடலில் கலப்பதும் தெரிந்தது. இந்த தகவல் குறித்து பல்வேறு நிலைகளில் தீவிரமாக ஆராயப்பட்டது.
ஆங்கிலேய அரசின் இன்னல்களுக்கு மக்கள் ஆளானாலும் தங்கள் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும்படி தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதன் பின்னர் ஆங்கிலேய அரசின் பொறியாளர்களான ஜேம்ஸ் கால்டுவெல், ரைவீஸ், பேயின், ஸ்மித் என பலரும் 1808 முதல் 1870-ம் ஆண்டு வரை கேரள வனப்பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகிரி சிகரம்
நெல்லை மாவட்டம் சுந்தரகிரி மலையில் சிவகிரி சிகரத்தில் தோன்றி பெருந்துறைஆறு, சின்னாறு, சிறுதோணியாறு, கட்டப்பனையாறு, இட மலை ஆகிய ஆறுகளுடன் முல்லை பெரியாற்றை சேர்த்துக்கொண்டு சுமார் 300 கிலோமீட்டர் வடமேற்கு திசையில் பாய்ந்து அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் பெரியாற்றில் அணை கட்ட லாம் என முடிவெடுத்தனர்.
மேற்கு நோக்கி பாயும் இந்த நீரை தடுத்து கிழக்கு திசையை நோக்கி திருப்பினால் தென் மாவட்டங்களை செழிப்பாக்கலாம் எனக் கண்டறியப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு இறுதி செயல்வடிவம் தந்து அணையை கட்டும் பணியை ராணுவப் பொறியாளரான கர்னல் பென்னி குக்கிடம் ஆங்கிலேய அரசு அளித்தது.
3 பக்கங்களில் உள்ள கம்பீர மலைகளுக்கிடையே புகுந்து ஓடும் நதி நீரை சுவர் எழுப்பி தடுக்கவும், இதன் மூலம் தேங்கும் நீரை எதிர்திசையில் சுரங்கம் அமைத்து எடுக்கலாம் என்ற தொழில்நுட்பத்தை பென்னி குக் கண்டறிந்தார். நதியின் போக்கையே திசை திருப்பும் வகையில் புவிஈர்ப்பு அணையாக கட்டுவதால் மிக உறுதியாக இருக்கும் என்பதற்கான திட்ட அறிக்கையையும், மாதிரி வடிவமைப்பையும் ராணுவப் பொறியாளர் பென்னிகுக் உருவாக்கினார்.
தண்ணீர் தேங்கும் நிலப்பரப்பு கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குள் இருந்தது. அங்கிருந்து தண்ணீரை தமிழக எல்லைக்குள் கொண்டுவர திருவிதாங்கூர் மன்னரிடம் ஆங்கிலேய அதிகாரிகள் அனுமதி கேட்டனர். பல்வேறு சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் 999 ஆண்டுகள் ஒப்பந்தம் தயாரானது.
முல்லை பெரியாறு பெயர் வந்தது எப்படி?
நெல்லை மாவட்டம் சிவகிரி மலையில் இருந்து உற்பத்தியாகும் பெரியாறு அடர்ந்த காட்டுப்பகுதியில் 16 கி.மீ. தூரம் பயணித்து பெரியாற்றின் துணை நதியான முல்லையாற்றை சந்திக்கிறது. முல்லையாறு வலதுபுறமாக 850 மீட்டர் உயர மலையில் இருந்து உருவாகி பெரியாற்றுடன் முல்லைக்கொடி என்ற இடத்தில் ஒன்றாகக் கலக்கிறது. ஒன்றாக இணைந்த பெரியாறும், முல்லையாறும் பெரிய நீர் பெருக்கை ஏற்படுத்தி மேற்கு நோக்கி திரும்புகின்றன.
இந்த இரு நதிகளும் சந்திக்கின்ற முல்லைக்கொடிக்கு கீழே 11 கி.மீ. பகுதியில் மலைகளுக்கு இடையே அணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்படுவதால் இது முல்லை பெரியாறு அணை என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு கோணங்களில் அணையை உருவாக்கிய பொறியாளர் பென்னி குக்.

பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணை
முல்லை பெரியாறு அணையை கட்டுவது தொடர்பான ஆய்வு முயற்சிகள் 1795-ம் ஆண்டு முதலே தொடங்கின. மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் வீணாகச் செல்கிறது என்பதை மட்டுமே அறிந்த பலராலும், தற்போது அணை கட்டப்பட்டுள்ள இடம் மிக அடர்ந்த வனப்பகுதி என்பதால் இந்த இடத்தின் அருகில் நெருங்கக்கூட முடியவில்லை.
1862-67 வரை ஆய்வு செய்த கேப்டன் ரியோஸ் முதன்முறையாக ரூ.17.49 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்தார். 1872-ல் ஸ்மித் ரூ.53.99 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு தயாரித்தார். 1882-ல் பென்னி குவிக் ரூ.64.39 லட்சத்துக்கு திட்ட அறிக்கை தயாரித்து அளித்தார். அனைவரின் தொழில்நுட்ப அறிக்கைகளையும் ஆய்வு செய்த ஆங்கிலேய அரசு பென்னிகுவிக்கின் அறிக்கையே சிறந்தது என்பதால் அதை ஏற்றது. பெரியாறு அணை திட்டத்தின் முதன்மைப் பொறியாளராக 1884 ஏப்ரல் 14-ல் பென்னிகுவிக் நியமிக்கப்பட்டார்.
பணிகள் தொடக்கம்
சென்னை மாகாண கவர்னராக இருந்த கன்னிமராபிரபு மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல் மாயோ ஆகியோர் 1887-ம் ஆண்டு பெரியாறு அணை கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தனர். ஜெனரேட்டர், இரும்புப் படகு, டர்பைன்கள், மண் அள்ளும் இயந்திரம், நீராவி இழுவை இயந்திரம் உட்பட ஏராளமான இயந்திரங்கள் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. 24 கி.மீ. செங்குத்தான கணவாய் பகுதி, இடையில் ஓடிய சிறிய ஆறு, 13 கி.மீ. அடர்ந்த வனத்தை கடந்து இந்த இயந்திரங்களைக் கொண்டு செல்வது பெரும் சவாலாக இருந்தது. மலை அடிவாரத்தில் நீராவி இயந்திரங்களை இயக்கி, இதன் மூலம் இழுப்பு கயிறை பயன்படுத்தி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
அணையை இழுத்துச்சென்ற வெள்ளம்
அப்போது பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த கம்பம், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். 1880-ல் பெரும்பாலான பணி முடியும் நிலையில் காட்டாற்று வெள்ளம் அணையை அடித்துச் சென்றது. 1890, 91, 92-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் அணையின் பல பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தை கட்டுப்படுத்த மணல் மூட்டைகளுடன் உயிரை துச்சமாக மதித்து தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். கட்டுமானத்தை முழுமையாகவும், பாதியாகவும் வெள்ளம் இழுத்துச்சென்றதும் நிகழ்ந்தது. வெள்ளம் வழிந்தோடும் வகையில் ஒவ்வொரு பத்து அடியாக அணையின் சுவர் எழுப்பப்பட்டது.
சுண்ணாம்பு கலவை
கட்டுமானத்துக்குத் தேவையான கல், மணல் அணை பகுதியிலேயே தாராளமாக கிடைத்தன. 80 ஆயிரம் டன் சுண்ணாம்பு, சுடப்பட்ட ஓடுகளை உடைத்து உருவாக்கப்படும் சுர்க்கி ஆகியன தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டன. பெரிய செக்கில் மாடுகளை வைத்து சுண்ணாம்பை அரைத்து, அதில் கடுக்காய் நீர், கருப்பட்டி கலந்த கலவை உருவாக்கப்பட்டது. கான்கிரீட்டுக்கு இந்தக் கலவைதான் பயன்படுத்தப்பட்டது.
தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் சுரங்கப்பாதை
முன்னும், பின்னும் சுர்க்கி கலவையால் கடினப்பாறை கற்கள் மூலம் சுவரும், நடுவில் சுண்ணாம்பு, சுர்க்கி, பாறை கற்களால் ஆன கான்கிரீட்டால் நிரப்பப்பட்டது. அணையின் மொத்த எடை 32,43,000 கிலோ நியூட்டன் என கணக்கிடப்பட்டுள்ளது. இது நீர், அலையால் ஏற்படும் எந்த அழுத்தத்தையும் தாங்கவல்லது.
அணையின் சிறப்பு
அணையைத் திறந்ததும் கால்வாயில் தண்ணீர் பாய்ந்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் நிலை இந்த அணையில் இல்லை. அணையின் நீளம் 1,200 அடி. உயரம் 155 அடி. அஸ்திவார சுவர் வரை உயரம் 158 அடி. அஸ்திவாரத்தின் அகலம் 115.5 அடி. நீர் தேக்க அளவு 152 அடி. நீர் வெளியேற்றும் மதகுகள் 13. தடுப்பணையின் பணி மேற்கு நோக்கி பாயும் பெரியாற்றை தடுப்பது மட்டுமே. நீர்போக்கிகள், உபரி நீர் வெளியேறும் மதகுகள் என பிரதான சுவரில் எதையும் பார்க்க முடியாது. நீர் தேங்கும் இடம், உபரிநீர் வெளியேறும் இடம், தமிழகத்துக்கு நீர் எடுக்கும் சுரங்கப்பகுதி என அனைத்துமே ஒவ்வொரு திசையில் இருக்கும். அணையில் 104 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை எடுக்க முடியாது. அணையில் மண் சேராது. அணை சுவரை அலைகள் மோதாது என பல அதிசயங்களை உள்ளடக்கியது. அணையில் தேங்கும் நீரை 6,100 அடி நீளம், 80 அடி அகலம், 60 அடி ஆழமான கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் எடுக்கும் சுரங்க பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பும் வகையில், மலை பாறையில் 15 அடி அகலம், ஏழரை அடி உயரம், 5,704 அடி நீளத்தில் ஆங்கில எழுத்து ‘D’ வடிவில் குடையப்பட்ட சுரங்கம் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
சொந்த பணத்தை செலவிட்ட பென்னிகுவிக்
அடித்தளம் அமைக்கும் திட்ட மதிப்பீட்டைவிட 5 மடங்கு கூடுதல் செலவானது. இதனால் கட்டுமான பணியை நிறுத்திவிட்டு திரும்பி வரக்கோரி கர்னல் பென்னிகுவிக்குக்கு பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது.
ஆனால் பென்னிகுவிக் இங்கிலாந்திலுள்ள தனது சொத்துகளை விற்று அதில் கிடைத்த பணத்தின் உதவியோடு 8 ஆண்டுகளில் உலகமே வியக்கும் வகையில் கம்பீரமான பெரியாறு அணையை 1895-ம் ஆண்டு கட்டி முடித்தார்.
லோகனின் சாதனை
பெரியாறு அணைக்கு நிகரான சவாலான பணியாக திகழ்ந்தது சுரங்கம் அமைக்கும் பணி. தேக்கடி மலைப்பகுதியிலிருந்து 1.98 கி.மீ. நீர்வழிப்பாதை, 1.79 கி.மீ. மலை குகைப்பாதை அமைக்கும் பணிக்கான பொறுப்பை ஆங்கிலேய பொறியாளர் இ.ஆர்.லோகன் ஏற்றிருந்தார். டர்பைன் மூலம் கடைசல் இயந்திரங்கள் இயக்கப்பட்டு, வெடிமருந்து மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டன. மிகுந்த சிரமங்களுக்கிடையே இப்பணியை லோகன் வெற்றிகரமாக முடித்தார். இவரது உழைப்பு, ஈடுபாடு பென்னிகுவிக்குக்கு அடுத்த நிலையில் இருந்ததால் இன்றும் விவசாயிகள் தங்கள் குழந்தைகளுக்கு லோகன், லோகன்துரை என்ற பெயரை வைத்து போற்றும் பழக்கம் தொடர்கிறது.
பல ஆயிரம் தொழிலாளர் உயிர் தியாகம்
வெள்ளம், குளிர் மற்றும் மலேரியா, காலரா போன்ற கொடிய நோய்களில் பலர் பலியானார்கள். ஆவணங்களில் உள்ள கணக்கின்படி 483 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் உண்மையான கணக்கு 10 ஆயிரத்தை தாண்டும் என்ற தகவலும் உள்ளது. சுரங்க வெடிவிபத்திலும் பலர் இறந்துள்ளனர். ஆங்கிலேயர் தரப்பில் கண்காணிப்பு அதிகாரி டைலர் உட்பட 18 பேர் இறந்துள்ளனர்.
முல்லை மலரும்...

முல்லை பெரியாறு அணை கட்டுவது என முடிவான பின்னர் இதற்கான திட்டம், அணையின் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுக் கவனித்து வந்தார். அணை கட்டுவதற்காக வேலையாட்கள், இயந்திரங்கள், கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை முன்னதாகவே திட்டமிட்டார் அவர். அணைப் பகுதியில் நிலவும் காலநிலை, மழை அளவு, வெள்ளம் பாயும் வேகம் என இயற்கை நிகழ்வுகள் குறித்து தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக அணை அமைந்துள்ள இடம் கேரள மாநிலம் திருவிதாங்கூர் அரசுக்கு கட்டுப்பட்டதாக இருந்தது. இங்கு அணையை கட்டி தண்ணீரை சென்னை மாகாணம் பயன்படுத்த வேண்டியிருந்ததால், அணை கட்டுவதற்கு முன்பே இது தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உயர்நிலைக் குழு நியமனம்
பிரிட்டிஷ் அதிகாரிகள் திருவிதாங்கூர் மன்னரிடம் புதிய அணை கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை குறிப்பிட்டு அனுமதிக்கும்படி கேட்டனர். அனுமதித்தால் திருவிதாங்கூர் அரசுக்கு ஏதாவது வகையில் இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய வனம், நிதி மற்றும் பொறியியல் அதிகாரிகள் கொண்ட ஒரு உயர்நிலைக் குழுவை மன்னர் நியமித்தார். இந்தக் குழுவினர் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கேரளம் வழியாக செல்லும் தண்ணீரை தமிழகத்துக்குத் திருப்பிவிடுவதால் கேரளத்தில் தண்ணீர் வரத்து குறையும். இதனால் வனப்பகுதிகளில் திருவிதாங்கூர் அரசு வெட்டும் தேக்கு மரங்களை தண்ணீர் மூலம் மிதக்க வைத்து அரபிக்கடலில் அமைக்கப்பட்டிருந்த ஆலவாய் துறைமுகத்துக்கு கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்படும் எனக் கருதியது. இதனால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் மாற்றுவழி குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த வர்த்தக வருவாய் இழப்பை ஈடுசெய்ய பிரிட்டிஷ் அரசு ரூ.6 லட்சம் மானியம் கொடுத்தால் ஒப்பந்தம் ஏற்படுத்தலாம் என மன்னர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மன்னரை தங்கள் வழிக்கு கொண்டுவர, வழக்கம் போலவே தங்களது ராஜதந்திரத்தைப் பயன்படுத்த திட்டமிட்டனர்.
அணை பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிலத்துக்கு, ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என ஆண்டுதோறும் குத்தகை தொகை பணம் செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. தொடர்ந்து வருமானம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதால் இந்த கோரிக்கையை ஏற்க மன்னர் முன்வந்தார்.
கையெழுத்தான ஒப்பந்தம்
தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு திருவிதாங்கூர் அரசு ஒருவழியாக ஒப்பந்தம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து 1886-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி பெரியாறு சுற்றியுள்ள 8000 ஏக்கர் நிலத்தை ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு ரூ.5 வீதம் ரூ.40 ஆயிரம் குத்தகை தருவதாகவும் 999 ஆண்டுகளுக்கு (கி.பி.2885-ம் ஆண்டு வரை) ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்த பத்திரத்தில் பிரிட்டிஷ் அரசு சார்பாக லண்டனிலுள்ள இந்திய அமைச்சரவை செயலர் ஜான் சைல்டு கேனிங்டனும், திருவிதாங்கூர் அரசு சார்பில் திருவிதாங்கூர் திவான் வெங்கட்ராமராவும் கையெழுத்திட்டனர்.
மன்னருக்கு கிடைத்தது புதையலா?
முல்லை பெரியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அடங்கிய பீர்மேடு- தேவிகுளம் தாலுகா கி.பி. 12-ம் நூற்றாண்டு வரை பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் இருந்த பகுதி. இதன் பின்னரும் சேர நாட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பூஞ்சார் சமஸ்தானம் என்கிற பூனையாறு சமஸ்தானத்தின் ஆட்சியில் இப்பகுதி இருந்தது. முல்லை பெரியாறுக்கும், இதனைச் சார்ந்த வனப்பகுதிக்கும் உண்மையான உரிமையுடையவர் பூனையாற்று தம்பிரான். இந்த விவரம் அப்போது மதுரையை ஆண்ட ஆங்கில அரசுக்குத் தெரியவில்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது என தவறாகக் கருதி 155 அடிக்கு தண்ணீர் தேக்கினால் நீர் பிடிக்கக்கூடிய பகுதியான 8 ஆயிரத்து 591 ஏக்கருக்கு குத்தகை ஒப்பந்தம் போட திருவிதாங்கூர் மன்னரை அழைத்தது. தனக்கு சம்பந்தம் இல்லாத 8 ஆயிரத்து 591 ஏக்கரை தனது பகுதியாக அறிவித்து குத்தகை பணம் பல ஆயிரம் அளிக்க ஆங்கிலேய அரசு முன்வந்ததும் திருவிதாங்கூர் மன்னர் புதையல் கிடைத்ததுபோல மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை என்ற தகவலும் உள்ளது.
ஒப்பந்த சாராம்சம்
திருவிதாங்கூர் அரசு பிரிட்டிஷ் அரசுக்கு கட்டிவரும் கப்பத்தொகையில் இருந்து ஒப்பந்தத் தொகை ரூ.40 ஆயிரத்தை ஆண்டுதோறும் கழித்துக்கொண்டு மீதியை செலுத்த வேண்டும். ஏரிப்பகுதியில் மீன்பிடிப்பு, மரங்களை வெட்டுதல், போக்குவரத்துக்காக சாலை அமைத்தல், கல்குவாரி அமைத்து கல் எடுத்தல், தாதுப்பொருட்கள் எடுத்துக்கொள்ள சென்னை மாகாணத்துக்கு முழு அனுமதியும் வழங்கப்பட்டது. அணை கட்டும் செலவு முழுவதையும் பிரிட்டிஷ் அரசு ஏற்க வேண்டும். அணை பராமரிப்பு, பழுது பார்த்தல் போன்ற பணிகளுக்கு திருவிதாங்கூர் அரசிடம் பணம் கேட்கக் கூடாது. இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். 999 ஆண்டுகள் முடிந்த பின்னரும் இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஒப்பந்த உடன்படிக்கையில் இரு அரசுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் 1882-ம் ஆண்டின் இந்திய சிவில் நடைமுறைச் சட்டம் அல்லது அதற்கு பின்னால் இயற்றப்படும் சட்டத்தின் அடிப்படையில் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் எனவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
999 ஆண்டு முடிந்த பின்னர் மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளலாம் என்ற வாசகம் இடம் பெற்றுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதி.
அப்பட்டமாக மீறும் கேரளம்
முல்லை பெரியாறு நீரினைப் பெற தமிழகத்துக்கு முழு உரிமை உண்டு என்றாலும் ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களை கேரளம் தொடர்ந்து மீறி வருகிறது. அணையைப் பராமரிக்க அதிகாரிகளை உள்ளே நுழைய விடுவதில்லை. கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு பொருட்களைகூட கொண்டு செல்ல அனுமதிப் பதில்லை. நீர்ப்பிடிப்பு பகுதியில் பல நூறு ஏக்கர் வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 152 அடிக்கு நீரை தேக்கினால் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கிவிடும் என்பதால் கேரளம் ஒப்பந்தத்தை பல்வேறு வழிகளில் மீறி வருகிறது.
முல்லை மலரும்...


உலகின் மிகச்சிறந்த அணையை பென்னிகுவிக் தலைமையிலான குழு வெற்றிகரமாக கட்டி முடித்தது ஆங்கிலேய அரசையே திகைக்கச் செய்தது. பொறியியல் துறையின் சாதனையாகக் கருதப்படும் இந்த அணையிலிருந்து, சென்னை மாகாண ஆளுநர் வென்லாக் பிரபு 1895 அக்டோபர் 10-ம் தேதி மாலை 6 மணிக்கு தண்ணீரை திறந்துவிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தேனி, நெல்லை பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அணை பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2,420 மி.மீ. மழையும், சுரங்கப் பாதை அமைந்துள்ள தேக்கடி பகுதியில் 1,952 மி.மீ. மழைப் பொழிவும் இருக்கிறது. நீர்பிடிப்பு பகுதி 240.80 சதுர மைல். சுரங்கப் பாதை வழியாக வெளியேறும் தண்ணீர், கூடலூரில் வைகையின் துணை நதியான வைரவன் ஆற்றில் விடப்படும். இந்த தண்ணீர் சுருளி ஆற்றுடன் கலந்து, தேனி அருகே வைகை ஆற்றில் நேரடியாக கலக்கிறது. அங்கிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. அணை கட்டி முடிக்கப்பட்ட பின் 1901-ம் ஆண்டு முதல் 1940-ம் ஆண்டுவரை 30 முறை அணையின் முழு கொள்ளளவான 152 அடியை எட்டியுள்ளது.
செழிப்பான கம்பம் பகுதி
பெரியாறு அணை நீர் கூடலூர் அருகேயுள்ள மைத்தலை மன்னாடி கால்வாய் (வாய்க்கால்), வைரவன் கால்வாய், குள்ளப்பகவுண்டன்பட்டி பேயத்தேவன் கால்வாய் உட்பட பல கால்வாய்கள் மூலம் 14,707 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இத்துடன் தற்போது உத்தமபாளையம் பரவு வாய்க்காலை இரண்டாகப் பிரித்து பி.டி.ஆர். வாய்க்கால், தந்தை பெரியார் வாய்க்கால் உருவாக்கப்பட்டுள்ளன. வாய்க்காலின் முடிவில் தண்ணீர் அந்தந்த பகுதியில் உள்ள குளத்துக்குப் போய் சேருகிறது. இதன்மூலம் 5,146 ஏக்கர் பாசன வசதி பெற்று செழிப்படைகிறது.
மாவட்டங்களுக்கு தண்ணீர் பிரிப்பு
பெரியாறு அணை தண்ணீரை தேக்கிவைத்து தேவைப்படும்போது வழங்கும் வசதி இல்லாத குறையை தீர்க்க வைகை அணை கட்டப்பட்டு 1959-ல் திறக்கப்பட்டது. இங்கு பெரியாறு அணை, வைகை ஆற்று தண்ணீர் தேக்கப்பட்டது. வைகை தண்ணீர் கொள்ளளவு பழைய ஆயக்கட்டுக்கு 2:3:7 என்ற விகிதத்தில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.
நிலக்கோட்டை அருகேயுள்ள பேரணை எனும் தடுப்பணை மூலம் தண்ணீர் 3 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. மேலூர் பகுதிக்கு 58.1 கி.மீ. தூரம் பெரியாறு பிரதான கால்வாய் கட்டப்பட்டுள்ளது.
பாசன வசதி பெறும் 2.13 லட்சம் ஏக்கர்
திருமங்கலம் பகுதிக்கு 36 கி.மீ. தூரத்துக்கான கால்வாய் 1958-ல் வெட்டப்பட்டது. நேராக வைகை ஆற்றில் விடப்படும் நீர், மதுரை அருகேயுள்ள விரகனூர் நீர் பகிர்மான அணையின் மூலம் பெறப்படும் நீர் மூலம் 27,529 ஏக்கர் கூடுதல் பாசன வசதி பெற்றது. விரகனூர் அணை முதல் பார்த்திபனூர் அணை வரையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள 87 கண்மாய்களில் 2,912 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்பட்டு 40,743 ஏக்கர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
பார்த்திபனூர் அணையிலிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரையிலான ராமநாதபுரம் மாவட்டத்தில் 67,837 ஏக்கர் பாசனத்துக்காக 241 கண்மாய்களில் 6,978 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்படுகிறது.
பெரியாறு, வைகை அணை நீர் மூலம் சோழவந்தான் பெரியாறு பிரதான கால்வாயில் 45,041 ஏக்கர், மேலூர் பெரியாறு பிரதான கால்வாயில் 85,563 ஏக்கர், மேலூர் விரிவாக்கப் பகுதியில் 38,248 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாயில் 19,439 ஏக்கர் என மொத்தம் 2.13 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
பொருளாதார நிலையில் மேம்பாடு
பெரியாறு அணை கட்டுவதற்கு முன், இப்பகுதியில் கடும் பஞ்சம் நிலவி வந்தது. உணவு கிடைக்காமல் பல்லாயிரம் பேர் மடிந்தனர். நிலங்களை விற்று, வேறு பகுதிக்கு மக்கள் குடியேறினர். பிழைக்க வழியின்றி கொலை, கொள்ளை, வழிப்பறியில் பலர் இறங்கினர். இதை சமாளிக்க வழி தெரியாமல் திணறிய ஆங்கிலேய அரசுக்கு கிடைத்த கருவிதான் பெரியாறு அணை.
இந்த அணை பயன்பாட்டுக்கு வந்தபின் 2.13 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெற்றன. பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் 80 லட்சம் மக்கள் வரை தினசரி பயன்பெறுகின்றனர். பல ஆயிரம் சதுர கி.மீட்டரில் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள், பஞ்சத்தால் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை விவசாயிகளாகவும், விவசா யத் தொழிலாளர்களாகவும், நில உரிமையாளர்களாகவும் மாற்றியது பெரியாறு அணை நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை.
இந்த அணை நீரால், ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வேளாண் உற்பத்தி நடைபெறுகிறது. இதை சார்ந்த உபதொழில்களும் ஏராளமாக பெருகிவிட்டன. பஞ்சம், பட்டினியால் அவதிப்பட்ட இப்பகுதியில் ஏற்பட்ட பசுமை புரட்சியால் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது.
திறப்பு விழாவில் பென்னிகுவிக்குடன் பங்கேற்ற மக்கள்.
பொன் விளையும் பூமி
கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத் தலைவர் எம்.தர்வேஸ் மைதீன் கூறியது: பெரியாறு அணை இல்லையென்றால் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு இப்பகுதி பாதிப்பை சந்தித்திருக்கும். இப்பகுதி பொன் விளையும் பூமியாக காட்சி தருவதும், மக்களின் வாழ்க்கைத் தரம், நிலமதிப்பு, நிரந்தர வருமானம், தொழில் என அனைத்துமே இந்த அணையால் வந்ததுதான். இந்த அணையும், இதை கட்டிய பென்னிகுவிக்கும் எங்கள் வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று என்றார்.
எம். தர்வேஸ்மைதீன்.

முல்லை மலரும்...

பெரியாறு அணை நீரால் தென் மாவட்டங்களில் பாசனம் செழித்தது. 1922, 1924, 1943 ஆகிய ஆண்டுகளில் அணை நிரம்பி கேரளப் பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்நிலையில் பெரியாறு அணை தண்ணீர் மூலம் நீர்மின் உற்பத்தி செய்யும் தமிழகத்தின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது கேரள அரசு.
சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராஜர் மேற்கொண்ட முயற்சியால் 1958 அக்டோபர் 12-ல் மின் திட்டம் தொடங்கியது. இதற்காகப் போர்பே அணையிலிருந்து தலா 400 கனஅடி தண்ணீரைக் கொண்டு வரும் 4 குழாய்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தண்ணீர் லோயர் கேம்ப்பிலுள்ள மின் உற்பத்தி நிலையத்திலிருந்த 4 டர்பைன்களில் விழச் செய்து, 140 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதைக் கேரள அரசால் சகிக்க முடியவில்லை.
இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து சுமார் 48 கி.மீ. தூரத்தில் 555 அடி உயரம், 1,200 அடி நீளத்தில் இடுக்கி அணையை 1973-ல் கேரளா கட்டியது. இதன் கொள்ளளவு 70 டிஎம்சி.க்கும் அதிகம். பெரியாறு அணையைப் போல் 7 மடங்கு பெரியது. இடுக்கி அணை மூலம் 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் நீர் மின் நிலையமும் கட்டப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்குத் தண்ணீர் அணைக்கு வராததால் நீர் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சரியான திட்டமிடல் இல்லாமல் அணையை இவ்வளவு செலவு செய்து ஏன் கட்ட வேண்டும் என அம்மாநிலத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், பெரியாறு அணையின் தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டு செல்ல கேரளா திட்டமிட்டது. இதற்குப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்கவிடாமல் செய்வதற்கான காரியத்தில் ஈடுபட்டது.
இதன்படி, 1979-ல் பெரியாறு அணை பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாகக் கேரள பத்திரிகை ஒன்றில் தவறான தகவலை வெளியிடச் செய்தது. 152 அடிவரை தண்ணீரைத் தேக்கினால் அணை உடைந்து, கேரளாவில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிடும் எனத் தவறான தகவல் தொடர்ந்து பரப்பப்பட்டு மக்களிடம் பீதி கிளப்பப்பட்டது. கேரள அரசியல்வாதிகளும் இப்பிரச்சி னையைப் பெரிதாக்கினர். இதை நம்பிய அம்மாநில மக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். கேரளத்தில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அவர்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதோடு உயிரிழப்பும் ஏற்பட்டது. போராட்டம் பெரிய அளவில் நடந்ததால் இரு மாநில உறவுகளிலும் விரிசல் ஏற்படும் நிலை உருவானது. அணை பலமாக இருப்பதாகவும், வெள்ளம் ஏற்பட்டால் எவ்விதப் பாதிப்பும் கேரளாவுக்கு ஏற்படாது என அறிவியல் பூர்வமாகத் தமிழக அரசு ஆதாரங்களை எடுத்துக்கூறியும் எடுபடவில்லை.
நீர்மட்டம் 136 அடியானது
அணையை ஆய்வு செய்ய மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் கே.சி.தாமஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு 1979-ம் ஆண்டு நவ. 23-ம் தேதி பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின்போது அணை பலமாக இருப்பதை தாமஸ் உறுதி செய்தார். 1979 நவம்பர் 25-ல் திருவனந்தபுரத்தில் இருமாநில அரசுகள் சார்பில் நடந்த பேச்சுவார்த்தையின்போது அணை பலப்படுத்துவது அவசியம் எனக்கூறிய தாமஸ், 3 கட்டமாகப் பலப்படுத்தும் பணி முடியும் வரை அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. கேரள அரசு நெருக்கடி மற்றும் வற்புறுத்தல் காரணமாக நீர்மட்டத்தை குறைக்கக் குழு தலைவரால் முடிவு செய்யப்பட்டுக் கையெழுத்திடப்பட்டது.
இதையடுத்து நீர்மட்டம் 136 அடிக்கும் மேல் உயர்ந்தால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வகையில், மதகுகள் உயர்த்தப்பட்டன. இதனால் தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது. இது திட்டமிட்டுப் பொய் பிரச்சாரம் செய்த கேரளத்துக்கும் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் மிகப்பெரிய வெற்றியாக அது அமைந்தது.
தமிழகத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு
136 அடியாக நீர்மட்டம் குறைக்கப்பட்டதால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 டிஎம்சி தண்ணீரைத் தமிழகம் இழந்தது. இதனால் செழிப்பாகி வந்த விவசாய நிலங்களில் தரிசாக மாறிய நிலப்பரப்பு மட்டும் 38 ஆயிரம் ஏக்கர். இரு போகச் சாகுபடியில் இருந்து ஒருபோகச் சாகுபடியான நிலம் 26 ஆயிரம் ஏக்கர். ஆற்றுநீரை நம்பி சாகுபடி நடந்த நிலையில், நீர்வரத்து இல்லாததால் ஆழ்குழாய் சாகுபடிக்கு மாறிய நிலம் 58 ஆயிரம் ஏக்கர். ஆற்றில் நீரோட்டம் குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு எனப் பல பிரச்சினைகளால் 5 மாவட்டத்தினர் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்.
விவசாய உற்பத்தி இழப்பு 1979-ம் ஆண்டு மதிப்பின்படி ஆண்டுக்கு ரூ.55 கோடி. மின் உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடி. தமிழகத்துக்கு 1980-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இழப்பு ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
- முல்லை மலரும்...


பிரதான அணையுடன் அடுக்கடுக்காக எழுப்பப்பட்ட சுவருடன் முழு பலத்துடன் காணப்படும் பெரியாறு அணை. (உள்படம்) அணையை பலப்படுத்த இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்ட நங்கூரம்.

எந்த அணைக்கும் வாழ்நாள் இவ்வளவு என எந்த காலக்கெடுவும் இல்லை. அதன் கட்டுமானத்தை முறையாகப் பராமரித்தால் காலத்தை வென்று நிற்கும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை எந்தப் பாதிப்பும் இல்லாமல் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் அணைகள் 150-க்கும் மேல் உள்ளன. பெரியாறு அணையில் நீர்க் கசிவின் அளவை குறைக்க 1930-32ம் ஆண்டுகளில் 80 துளைகளிட்டு 40 டன் சிமென்ட் கரைசல் உயர் அழுத்தத்துடன் செலுத்தப்பட்டது. 1933-ல் அணையின் வெளிப்புறத்தில் மெல்லிய எஃகு வலையை அமைத்து அதில் சிமென்ட் காரைக் கலவையைப் பலத்துடன் செலுத்தி ஒட்ட வைக்கப்பட்டது. 1960-ல் 502 டன் சிமென்ட் கரைசல் உயர் அழுத்தத்துடன் செலுத்தப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் கேரளத்தின் தலையீடு, வேண்டுகோள் என எதுவும் இல்லாத நிலையிலேயே, நன்றாகப் பராமரிக்கும் நோக்கில் தமிழகத்தால் மேற்கொள்ளப்பட்டன. இதனால் 1924, 1933, 1940, 1961, 1977-ம் ஆண்டுகளில் அணையின் நீர்மட்டம் 152 அடியாக எட்டியபோதும் அணை மிக உறுதியாக இருந்தது. கேரளத்தின் நெருக்கடியால் 136 அடியாக நீர்மட்டம் 1979-ம் ஆண்டில் குறைக்கப்பட்டது. மீண்டும் 152 அடியாக நீரைத் தேக்க மத்திய நீர்வள ஆணையம் கூறியபடி 3 கட்டங்களாக அணையைப் பலப்படுத்தும் பணிகள் 1980 மே 27-ம் ேததி தொடங்கின.
கான்கிரீட் தொப்பி அமைத்தல்
அணையின் மேல்பகுதியில் அதிக எடையுள்ள சிமென்ட் கான்கிரீட்டினால் தொப்பி போன்று மேல்மூடி அமைப்பதே முதல் கட்டம். கனமான கான்கிரீட் அணை சுவரின் மொத்த நீளமான 1200 அடி முழுமைக்கும் 21 அடி அகலம், 3 அடி தடிமனில் வலுவான தளம் அமைக்கப்பட்டது. இதனால் அணையின் எடை 12 ஆயிரம் டன் அதிகரித்தது. இதன்மூலம் எந்த நிலையிலும் நீர் அழுத்தத்தால் அணையின் அடிப்பகுதி பாதிக்கப்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இரும்புக் கம்பியால் நங்கூரம்
இரும்புக் கம்பி நங்கூரம் என்பது முன்தகைவுறு கற்காரை (Prestressed Concrete) என்ற நவீன தொழில்நுட்பத்தை அடிப்ப டையாகக் கொண்டது. அணையின் முன்பக்கச் சுவரில் 5 அடி தள்ளி அணையின் மேல்மட்டத்தில் இருந்து 4 அங்குலச் சுற்றளவில், அணையின் கீழே அடித்தளப் பாறையில் 30 அடி ஆழம்வரை செங்குத்தாகத் துளையிடப்பட்டது. இந்தத் துளைக்குள் 7 மில்லிமீட்டர் சுற்றளவுடைய 34 உறுதியூட்டும் கம்பிகள் ஒரே கட்டாகச் செலுத்தப்பட்டன. 95 இடங்களில் நங்கூரமாக நிறுத்தப்பட்ட இக்கம்பிகள் 120 டன் அழுத்தத்தில் அணையை அடித்தளத்துடன் இறுக்கிப் பிடித்துக்கொள்ளும். நங்கூரத்தால் அணை எந்த நில அதிர்வுகளையும் தாங்கும் வலிமை பெற்றுள்ளது.
கான்கிரீட் துணை அணை
அணையின் பின்புறத்தை ஒட்டி கான்கிரீட்டால் முட்டுச்சுவர்போல் துணை அணை அமைப்பதே 3-வது கட்டப் பணியாகும். பழைய அணையும், புதிய அணையும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு ஒரே கட்டுமானமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
32 அடி அகலத்தில் 1,200 அடி நீளத்துக்குத் துணை அணை அமைக்க 3.60 லட்சம் டன் கான்கிரீட் கலவை பயன்படுத்தப்பட்டது. நீர்க் கசிவைப் பதிவு செய்ய 2 சுரங்க வழிகள் அமைக்கப்பட்டன. கூடுதலாக அமைக்கப்பட்ட 3 ஷட்டர்களையும் சேர்த்து தற்போது 1.22 லட்சம் கனஅடி நீரை வெளியேற்றலாம். பலப்படுத்தும் பணிக்குப் பின்னர் மேற்கொண்ட ஆய்வில் அணையில் அதிகபட்ச நீர்க் கசிவு விநாடிக்கு 45 லிட்டர் மட்டுமே இருந்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவு விநாடிக்கு 250 லிட்டர் என்பதால் அணை மிகப் பலமாக இருப்பது உறுதியானது.
உச்ச நீதிமன்றம் சென்ற வழக்கு
பலப்படுத்தும் பணி முடிந்த பின் பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அணை நீர்மட்டத்தை 136 அடிக்குமேல் உயர்த்த முடியவில்லை. இரு மாநில உயர் நீதிமன்றங்களிலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதிலும் முன்னேற்றம் இல்லாததால், தமிழக அரசு 1998-ல் வழக்கை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது.
‘பாதியில் வெளியேறினார் கருணாநிதி’
பெரியாறு அணையின் கண்காணிப்பாளராக 1972-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற பொறியாளர் பி.ஆர்.சுந்தராஜன் கூறியது:
2000-ம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தலைமையில் திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கேரள முதல்வராக இருந்த ஈ.கே.நாயனார் மற்றும் இரு மாநில அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கேரள அரசு சார்பில் அச்சடிக்கப்பட்ட ஒரு காகிதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதில் 142 அடியாக நீரைத் தேக்க வேண்டாம். 136 அடியாகத் தேக்கிக் கொள்ளலாம் என அவர்களுக்குச் சாதகமாக எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்துப் பார்த்ததும் கருணாநிதி கோபப்பட்டு எழுந்திருக்க முயற்சி செய்தார். அப்போது அருகில் அமர்ந்திருந்த ஆற்காடு வீராசாமி அவரை சமாதானம் செய்து அமர வைத்தார். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை, இதனால் கருணாநிதி எழுந்து தனது அறைக்குச் சென்றுவிட்டார். கேரள செய்தியாளர்கள் கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை எப்படி இருந்தது எனக் கேட்டபோது, ‘வரவேற்பு பிரமாதம். நாங்கள் எதிர்பார்த்தது ஏமாற்றம்’ எனப் பதிலளித்துவிட்டுக் கிளம்பிவிட்டார்’ என்றார்.
முல்லை மலரும்..


பெரியாறு அணையைப் பலப்படுத்திய பின்னரும், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக் கேரள அரசு மறுத்துவிட்டது. 1998-ம் ஆண்டு ஜனதா கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி மற்றும் பெரியாறு பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சார்பில் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்குப் போட்டியாக கேரள விவசாயிகள் சங்கத்தினர் 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் 1998 டிசம்பர் 14-ம் தேதி தமிழகம் மனு தாக்கல் செய்தது. இதில் இரு மாநில வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததுடன், இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வு காணுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் 2000-ம் ஆண்டில் தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. புதுடெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் பங்கேற்ற சமரசப் பேச்சும் தோல்வியில் முடிந்தது.
நிபுணர் குழுவினர் ஆய்வு
அணையின் பலத்தை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க 2000 ஜூன் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய நீர்வளத் துறையின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பி.கே.மித்தல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அணையை ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதால், 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று கூறியது. இதற்கும் கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மத்திய மண் மற்றும் தாதுவள ஆராய்ச்சிப் பிரிவின் வல்லுநர்கள் 2000 நவம்பர் 20-ம் தேதி பேபி அணைப் பகுதியில் 5 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களும் அணை பலமாக இருப்பதாக 2001 ஜனவரி 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தனர்.
அணைகள் பாதுகாப்பு கமிட்டி அறிக்கை
மத்திய நீர் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அணைகள் பாதுகாப்புக் குழு 1900-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை 105 ஆண்டுகளாகத் தொடர்ந்து பெரியார் அணையை ஆய்வு செய்ததில், எந்தவித பாதிப்பும் இல்லை என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தங்களது அறிக்கையையும், நிபுணர் குழுவின் ஆய்வு அறிக்கையையும் இணைத்துப் பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மத்திய நீர் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அணைகள் பாதுகாப்புக் குழு 1900-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை 105 ஆண்டுகளாகத் தொடர்ந்து பெரியார் அணையை ஆய்வு செய்ததில், எந்தவித பாதிப்பும் இல்லை என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தங்களது அறிக்கையையும், நிபுணர் குழுவின் ஆய்வு அறிக்கையையும் இணைத்துப் பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
தமிழக விவசாயிகள் கேரளத்துக்கு செல்வதை தடுக்க, சாலைகளில் போலீஸார் தடைகளை ஏற்படுத்தினர் பெரியாறு அணையை காக்க கேரள மாநிலத்துக்குள் நுழைய முயன்ற தமிழக விவசாயிகளை கூடலூர் அருகே போலீஸார் மறித்தனர்.
மத்திய நீர் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அணைகள் பாதுகாப்புக் குழு 1900-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை 105 ஆண்டுகளாகத் தொடர்ந்து பெரியார் அணையை ஆய்வு செய்ததில், எந்தவித பாதிப்பும் இல்லை என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தங்களது அறிக்கையையும், நிபுணர் குழுவின் ஆய்வு அறிக்கையையும் இணைத்துப் பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
வழக்கின் முக்கியத்துவம் கருதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையில் 3 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த அமர்வு, நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும், அணை பாதுகாப்பற்றது என்ற கேரளத்தின் கவலை அர்த்தமற்றது எனவும் கடந்த 2006 பிப்ரவரி 27-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.
பேபி அணையை பலப்படுத்தும் பணி முடிந்ததும் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. இந்தத் தீர்ப்பால் தமிழகம் மகிழ்ச்சி அடைந்தபோதிலும், இதே காலத்தில் தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகளைத் தேர்தலுக்குப் பின் பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப்போடப்பட்டது.
தீர்ப்பை மதிக்காத கேரளம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, கேரளம் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 142 அடி நீரைத் தேக்கலாம் என்பதை உறுதி செய்தது. இதையும் கேரளா ஏற்றுக்கொள்வதாக இல்லை.
கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி 2003-ல் உருவாக்கப்பட்ட கேரள நீர்ப்பாசன மற்றும் நீர் பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்தது. இதன்படி, கேரளத்தில் உள்ள 22 அணைகளின் முழுக்கொள்ளளவு மட்டத்தை வரையறுப்பதற்கு கேரள அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. கேரளம் நினைத்தால் அந்த மாநிலத்தின் எந்த அணையின் செயல்பாட்டையும் நிறுத்திவிடலாம்.
இதில் மற்ற எந்த அரசும், நீதிமன்றங்களின் ஆணையும் குறுக்கிட முடியாது எனத் திருத்தப்பட்டது. 2006 மார்ச் 15-ல் கேரள சட்டப்பேரவையில் இந்தச் சட்டத்திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டது.
இதன்படி 22 அணைகளில் முதலாவது பெரியாறு அணை என்றும், இதன் அதிகபட்ச நீர்மட்டம் 136 அடி எனவும் சட்டப் பதிவு செய்தது. இதைக் காரணம் காட்டிப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கேரளம் அனுமதிக்கவில்லை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உள்ள கேரளத்தின் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய கோரி, தமிழக அரசு 2006 மார்ச் 31-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தது. இதனால் புதிய குழு, ஆய்வுகள் என்ற நிலைதான் தொடர்ந்தது.
தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்பு
திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன் கூறியது: திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற கருணாநிதி, ‘வந்தோம் பேசினோம் உபசரிக்கப் பட்டோம் கையை நனைத்தோம் ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்’ என்றார்.
தமிழக விவசாயிகள் கேரளத்துக்கு செல்வதை தடுக்க, சாலைகளில் போலீஸார் தடைகளை ஏற்படுத்தினர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
1979-ல் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராகவும், முகம்மது கோயா கேரள முதல்வராகவும் இருந்தனர். தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சராக ராஜாமுகம்மது இருந்தார். 1979, நவம்பர் 29-ல் இவர்கள் திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேசியபோது ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின், நீர்மட்டம் 3-ல் 2 பங்கு தண்ணீர் இடுக்கி அணைக்கு சென்றது. ஒரு பங்கு நீர் தமிழகத்துக்கு கிடைத்தது. மேலும், அணை பாதுகாப்பை கேரளமே ஏற்றது, படகுவிடும் உரிமை பறிப்பு, மீன்பிடி உரிமை பறிப்பு, கேரளத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்ற குமுளி அணை வரையிலான சாலை என பல இழப்புகள் தமிழகத்துக்கு ஏற்பட்டன. இதனால் ஏற்கெனவே பிரச்சினையில் இருந்த முல்லை பெரியாறு கேரள அரசுக்கு சாதகமாகிவிட்டது. மேலும் வடிகட்டிய பல பொய்களைச் சொல்லி பிரச்சினைகளை பூதாகரமாக்கியது கேரளம் என்றார்.

முல்லை மலரும்...

கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத் திருத்தத்தை ரத்து செய்யவும், பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்கவும் உத்தரவிடக் கோரி, தமிழக அரசு 2006-ம் ஆண்டில் தாக்கல் செய்த வழக்கை, 2009 அக்டோபரில் நீதிபதிகள் டி.கே.ஜெயின், முகுந்தகம் சர்மா, ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. மாநிலங்களுக்கிடையே நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல், ஒவ்வொரு மாநிலமும் சட்டம் இயற்றினால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என நீதிபதிகள் அப்போது கருத்து தெரிவித்தனர். 2009 நவம்பர் 10-ம் தேதி இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு நீதிமன்றம் மாற்றியது.
ஐவர் குழு அமைப்பு
அணையின் பலத்தை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் ஆய்வுசெய்து விரிவான அறிக்கை தரக்கோரி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழுவை 2010 பிப்ரவரியில் நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய நீர்வளத் துறை ஆணைய முன்னாள் செயலர் தத்வே, நீர்வளத் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் மேத்தா, தமிழகம் சார்பில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றனர்.
அடுத்தடுத்து புதுப்புது பிரச்சினைகளை கேரளா கிளப்பியதால் அணையில் 13 ஆய்வுகள் வரை நடத்தப்பட்டன.
நீர்மூழ்கி வீரர்கள் மூலம் ஆய்வு
டாக்டர் தத்வேயின் தலைமையில் உள்ள மத்திய தொழில்நுட்பக் குழுவினர் உத்தரவின் பேரில், ஒடிசா மாநில தலைமைப் பொறியாளர் ரத்னகர்-தலாய் தலைமையில் 4 நீர்மூழ்கி வீரர்கள் பெரியாறு அணை பகுதியில் தங்கியிருந்து, 3 நாட்கள் நவீன கேமராவுடன் நீருக்குள் மூழ்கி அணையின் அடிப்பகுதியை புகைப்படம் எடுத்து, அணையின் உறுதி குறித்து ஆய்வு செய்தனர்.
இந்திய நிலவியல் ஆய்வு நிலைய ஆய்வாளர் ராஜேந்திர சங்வால் தலைமையிலான குழு அணையின் அருகிலுள்ள பகுதிகளின் புவி அமைப்பு, நில வடிவமைப்பை முழுமையாக ஆய்வு செய்தது.
ஆளில்லா நீர்மூழ்கி வாகனம்
மத்திய மண்ணியல் ஆய்வு நிலைய ஆராய்ச்சியாளர்கள் அலெக்ஸ் வர்கீஸ், பீரேந்திர பிரசாத் தலைமையிலான குழு ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை பயன்படுத்தி ஒரு மாதம் ஆய்வு மேற்கொண்டது. அணையின் அடிப்பகுதியில் விரிசல் உள்ளதா என்றும், அதிர்வுகளை தாங்கும் சக்தி எந்தளவுக்கு இருக்கிறது என்பதையும் முழுமையாக ஆய்வு செய்தனர்.
அதிர்வலை மூலம் ஆய்வு
மத்திய மண்ணியல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் முராரி ரத்னம் அறிவுறுத்தலின்படி, பெரியாறு அணையை கட்ட பயன்படுத்திய சுருக்கி சுண்ணாம்பு, மணல் மாதிரிகளை பல்வேறு இடங்களில் தமிழக, கேரள அதிகாரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
மத்திய மண் மற்றும் கட்டுமான ஆராய்ச்சி நிலைய முதன்மை ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் திரிபாதி தலைமையிலான வல்லுநர்கள், பெரியாறு அணையில், அதிர்வலைகள் மூலம் அணையின் பலத்தை கண்டுபிடிக்கும் சோதனையை நடத்தினர்.
அணையின் மத்திய பகுதியான 650-வது அடியில் இந்த சோதனை நடைபெற்றது. முன்புறமாக நீர்மட்டத்துக்கு மேல் 10 அடி உயரத்தில் சுத்தி போன்ற கருவியால் அடித்து, அதனால் அணையின் பின்புறம் ஏற்படும் அதிர்வலைகளை 72 இடங்களில் பதிவுசெய்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
அணையின் அடிப்பகுதியை ஆய்வு செய்யும் அதிகாரிகள்.
கேபிள் ஆங்கரிங் பலம் குறித்த சோதனை
தமிழக அரசு கேபிள் ஆங்கரிங் என்ற முறையில், பெரியாறு அணையில் நங்கூரம் அமைத்து பலப்படுத்தியது. இந்த முறை எந்தளவுக்கு பலம் வாய்ந்தது என்பது குறித்து புனேயைச் சேர்ந்த பிஎஸ்சி என்ஜினீயர்ஸ் கம்பெனியின் பொறியாளர்கள் மற்றும் அலு வலர்கள் ஆய்வுசெய்தனர்.
இந்திய நிலவியல் ஆய்வுமைய கண்காணிப்பாளர் ராஜேந்திர சன்வால் தலைமையிலான குழு அணை பகுதியில் மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.
மகாராஷ்டிர அரசின் தபோடி பணிமனையின் பொறியாளர் சாங்லி தலைமையிலான குழு அணையில் பல இடங்களில் துளையிட்டு கலவை மாதிரி எடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்ஸ்டியூட் ஆப் ரிமோட் சென்ஸ் இயக்குநர் னிவாசன் தலைமையிலான குழு பெரியாறு அணைப்பகுதி முழுவதையும் செயற்கைக்கோள் மூலம் படம் பிடித்து ஆய்வு நடத்தியது.
உறுதிப்படுத்தப்பட்ட அணையின் பலம்
அணையின் கேலரி பகுதியில் நீர் கசிவு சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.
வேறு எந்த அணையும் இதுபோன்ற சோதனைகளை சந்தித்ததாக வரலாறு இல்லை. கேரளா தொடர்ந்து பரப்பும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்க இப்படி 13 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவிலுள்ள தலைசிறந்த அணை வல்லுநர் குழு மூலம் நடத்தப்பட்ட 13 ஆய்வு கள் முடிவின்படியும், அறிக்கைகளின் முடிவின் படியும் அணை பலமாக இருப்பது உறுதியானது. இதை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம் மீண்டும் நல்லதொரு தீர்ப்பை அளித்தது.
நீர்க்கசிவு சோதனை
மத்திய நீர்மின் ஆராய்ச்சித்துறை இயக்குநர் டாக்டர் தேசாய், மத்திய மண் மற்றும் கட்டுமான ஆராய்ச்சித்துறை அதிகாரி மெகுரா, வித்யார்த்தி ஆகியோர் தலைமையில், பேபி அணையில் 120 அடி ஆழத்தில் கலவை மாதிரி சேகரிக்கப்பட்ட துவாரத்தில், மூன்று இடங்களில் நீர்க்கசிவு சோதனை நடத்தினர்.
அணை பலப்படுத்தப்பட்டபோது அமைக் கப்பட்ட 2 கேலரிகளிலும் விநாடிக்கு எத் தனை லிட்டர் தண்ணீர் கசிகிறது எனத் துல்லியமாக கணக்கிட்டனர். அணை வலுப்படுத்தப்பட்ட நீர்க்கசிவு வெகுவாக குறைந்திருந்தது ஆய்வில் தெரிந்தது.

முல்லை மலரும்...

முல்லை பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஐவர் குழு தாக்கல் செய்த அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி லோதா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு 2014 மே 7-ம் தேதி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த தீர்ப்பை உறுதிப்படுத்திய துடன், அணையைக் கண்காணிக்க மூவர் குழு அமைக்கவும், தமிழக அரசு பேபி அணையைப் பலப்படுத்தியபின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது.
2014 ஜூலை 17-ம் தேதி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில் 13 ஷட்டர்களும் கீழே இறக்கப்பட்டன.
2014 நவம்பர் 20-ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு நீர்மட்டம் 142 அடியை எட்டியது. 152 அடியாக உயர்த்தினால் மேலும் 16,800 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 30 லட்சம் பேரின் குடிநீர் தேவை பூர்த்தியாகும். எனினும்142 அடியைத் தேக்கியது உண்மையான வெற்றி எனக் கூறிவிட முடியாது. 152 அடியைத் தேக்கும்போதுதான் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்.
மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தாலும் '…எனிற் சிந்தனை ஒன்றுடையாள்' என்ற மகாகவி பாரதியின் நம்பிக்கை பொய் அல்ல என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியது அவசியமாகிறது. பாசனமா குடிநீரா என்று வந்தால் குடிநீருக்கே முக்கியத்துவம் என்ற தேசியத் தண்ணீர் கொள்கைப்படி பார்த்தாலும் முல்லை பெரியார் அணை 30 லட்சம் மக்களின் தாகம் தீர்க்கும் அட்சயப்பாத்திரமாகத் திகழ்கிறது.
இருப்பினும் இன்னமும் 'புதிய அணை கட்டாயம் கட்டுவோம்' என்று கேரளம் தொடர்ந்து கூறி வருகிறது. முல்லை பெரியாறு விவகாரம் மட்டுமல்ல. மாநிலப் பிரச்சினைகள் என்றால் அரசியல் மாச்சரியங்களை கடந்து கேரளத்தில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. எனவே, நியாயமான கோரிக் கையை வென்றெடுக்க வேண்டிய தமிழகம் தனது உரிமையை விட்டுக் கொடுக்காமல், ஒரே அணியில் நின்று விவேகத்துடன் செயல்பட வேண்டிய நேரம் இது. தமிழகத்திலிருந்து மின்சார மும், உணவுப்பொருள்களும் கேரளத்தி லிருந்து தண்ணீர் என்ற அடிப்படையிலான மனம் திறந்த விட்டுக்கொடுக்கும் பேச்சு இருக்க வேண்டும்.
இதில் அரசியல் உட்பட எவ்விதச் சாயமும் பூசப்படாமல் இருந்தால் இரு மாநில மக்களிடையே சகோதரத்துவம் மேலோங்கும். 152-வது அடியைத் தொட்டு தழும்பும் தண்ணீரைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் தென் மாவட்ட மக்கள். அர்த்தமுள்ள இந்தக் காத்திருப்பு பலிக்குமா? பதில் காலத்தின் கையில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக