தூக்குக்கு எப்போது தூக்கு?
*
இன்றைக்கு நம்முடைய ஞாபக அடுக்குகளில் புதைந்துவிட்ட 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை மீண்டும் நினைவுகூர்வது பலருக்குச் சங்கடம் அளிப்பதாக இருக்கலாம். எனினும், நியாயத்தின் உண்மையை நோக்கி நகர வேண்டும் என்றால், ஆரம்பக் கதைகளை நாம் புறக்கணிக்க முடியாது. காட்சி ஊடகங்களால் ‘தேசத்தின் மீதான போர்’ என்று வர்ணிக்கப்பட்ட 2008 மும்பை தாக்குதலைவிடவும் பெரும் உயிர்ச் சேதத்தை உருவாக்கிய பயங்கரவாத நடவடிக்கை அது. 1993 மார்ச் 12 அன்று மதியம் 1.33-க்கும் 3.40-க்கும் இடையே மும்பை அன்றைய பம்பாய் - கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த ஒரு நகரமாகத்தான் இருந்தது.
முதல் குண்டு வெடித்தது மும்பைப் பங்குச்சந்தையில், அடுத்து கதா பஜார், சேனா பவன், செஞ்சுரி பஜார், மாஹீம், ஏர் இந்தியா வளாகம், சவேரி பஜார், ஹோட்டல் சீராக், பிளாஸா திரையரங்கம், ஜுஹு செந்தூர் ஹோட்டல், விமான நிலையம்… 127 நிமிடங்களில் அடுத்தடுத்து 12 இடங்களில் வெடித்தன குண்டுகள். சர்வதேச அளவில் முதல் முறையாக பயங்கரவாதக் குழுக்களால் ‘ஆர்டிஎக்ஸ்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டதும், உலகப் போருக்குப் பின் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதும் இந்தச் சம்பவத்தில்தான். எங்கும் ரத்தச் சகதியும் மரண ஓலமும். 257 பேர் செத்துப்போனார்கள். 713 பேர் படுகாயமுற்றார்கள்.எல்லா மதத்தினரும்தான் அதில் அடங்கியிருந்தார்கள்.
பாபர் மசூதி இடிப்பின் தொடர்ச்சியாக, அதற்கு இரு மாதங்களுக்கு முன்புதான் தொடர்ச்சியான மதக் கலவரங்களைச் சந்தித்திருந்தது நகரம். ஒவ்வொரு நாளும் இங்கே 10 பேர், அங்கே 15 பேர் என்று கிட்டத்தட்ட 900 உயிர்களைப் பறித்திருந்தன அந்தக் கலவரங்கள். இத்தகைய சூழலில், இந்தத் தொடர் குண்டுவெடிப்பு உருவாக்கிய சேதங்களைவிடவும், இது எத்தகைய பின்விளைவுகளை உருவாக்கும் என்ற அச்சம் ஏற்படுத்திய கலக்கம் அந்நாட்களில் அதிகம். பாகிஸ்தான் பின்னிருந்து நிகழ்த்திய மிகப் பெரிய சதி அது.
இந்த வழக்கை 20 வருஷங்கள் விசாரித்தது இந்திய நீதித் துறை. 2013 மார்ச் 22 அன்று இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். வழக்கின் பிரதான குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம், அனிஸ் இப்ராஹிம், டைகர் மேமன் ஆகியோர் சிக்காத நிலையில், இந்தியப் புலனாய்வு அமைப்புகளாலும் விசாரணை நீதிமன்றத்தாலும் தன் முன் நிறுத்தப்பட்டவர்களில், பெரும்பாலானோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது; யாகூப் மேமனுக்கு மட்டும் தூக்குத் தண்டனையை உறுதிசெய்தது.
இன்றைக்கு யாகூப் மேமன் தூக்குக் கயிற்றின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், நம்மைச் சுற்றி இரு கோஷங்கள் உரக்க எழுப்பப்படுவதைக் கேட்க முடிகிறது. “இப்படியான பயங்கரக் குற்றங்களோடு தொடர்புடைய யாகூப் மேமனைப் போன்றவர்கள் திருந்தவே மாட்டார்கள், அவரை உடனே தூக்கிலிட வேண்டும்” என்பது முதலாவது. “பிரதான குற்றவாளிகள் கிடைக்காத நிலையில், அகப்பட்ட அப்பாவியைத் தூக்கிலிட்டு ஆறுதல் தேடிக்கொள்கிறது இந்திய அரசு” என்பது இரண்டாவது. அடிப்படையில், இவை இரண்டுமே இரு துருவங்களைத் தொட்டு நிற்கும் வாதங்கள். இரண்டுமே ஆபத்தானவை. மரண தண்டனைக்கு எதிராகப் பேசுவது வேறு; அதற்கான நியாயங்களை அடுக்கப்போய் அதன் உச்சத்தில் குற்றவாளிகளை அப்பாவிகளாக உருமாற்றுவது வேறு.
மும்பை வீதிகளில் வெள்ளந்தியாகப் போய்க் கொண்டிருந்த யாரோ ஒருவர் அல்ல யாகூப் மேமன். பிரதான குற்றவாளிகளால் ஒருவரான டைகர் மேமனின் தம்பி என்பதைத் தாண்டியும் இந்தச் சம்பவத்தில் அவருக்கு இருந்த தொடர்புகளை விசாரணை அமைப்புகள் நிரூபித்திருக்கின்றன. “குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் அவர் மும்பையைவிட்டு, துபாய்க்குப் புறப்பட வேண்டிய தேவை என்ன?” என்ற ஒரு வரிக் கேள்வி போதுமானது அவருக்கு இந்தச் சம்பவத்தில் உள்ள தொடர்புக்கு. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் விசாரணையை எதிர்கொள்ள வசதியும் இல்லாமல், படிப்பறிவும் இல்லாமல், மொழியும் தெரியாமல் தனது விதியை நொந்துகொண்டு சிறைக்குள் வதைப்படும் எத்தனையோ ஆயிரம் ஏழைக் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அல்ல யாகூப். ஒரு தணிக்கையாளர். நல்ல ஆங்கில அறிவுகொண்டவர். வசதியானவர். போதுமான அவகாசம் அவருக்கு தரப்பட்டிருக்கிறது தன்னுடைய தரப்பை நிரூபிப்பதற்கு. இத்தனையையும் கடந்துதான் அவருடைய குற்றத்தை உறுதிசெய்திருக்கிறது நீதிமன்றம்.
யாகூப் மேமன் குற்றவாளி என்பது எப்படி நம்மில் பலருக்கும் நேரடியாகத் தெரியாதோ, அப்படியே அவர் நிரபராதி என்பதும் நமக்கு நேரடியாகத் தெரியாதது. இந்த வழக்கின் முடிவையே மாற்றக்கூடும் என்று சொல்லப்பட்ட, இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான மறைந்த ராமன் எழுதிய கட்டுரையிலும்கூட “தூக்கிலிடும் அளவுக்குக் குற்றங்களைச் செய்திடாத ஒருவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தேன்” என்றே யாகூப் மேனின் குற்றத்தைக் குறிப்பிடுகிறார் ராமன்; “குற்றத்தோடு தொடர்பே இல்லாதவர் யாகூப்” என்று அல்ல.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸிடம் “யாகூப் மேமனை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும்” என்று மனு அளித்தவர்களில் ஒருவரான துஷார் தேஷ்முக் கேட்கிறார்: “யாகூப் நிரபராதி என்றால், என் அம்மா எப்படி இறந்தார்? இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே?”
நாம் இந்தத் தவறைத் தொடர்ந்து செய்கிறோம், மரண தண்டனைக்கு எதிர்க் குரல் என்ற பெயரில் குற்றங்களிலிருந்து ஒருவரை விடுவிக்கும் வேலையில் ஈடுபடுவது; கூடவே நீதி அமைப்புகள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாகக் குலைப்பது. இது முறையற்றது மட்டும் அல்ல; நாம் எவருடைய உயிருக்காகக் குரல் கொடுக்கிறோமோ, அவர்களுக்கும் எதிராகத் திரும்பக் கூடியது. இன்னமும் நம் சமூகத்தில் மரண தண்டனைக்கு ஆதரவான குரல்களே ஆகப்பெரும்பான்மைக் குரல்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. வாதத்தில், நம்முடைய குரல்கள் உச்சத்தில் உண்மையற்றதாக மாறும்போது, எதிர்க் குரல்கள் உச்சத்தில் வெறுப்பை நோக்கியே நகரும்.
ஒரு கொலையை எதன் பொருட்டும் நியாயப்படுத்த முடியாது. இந்த ஒரு எளிய நீதி போதும் மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவதற்கு. ஒரு நாகரிகச் சமூகம் ஒருபோதும் மரணத்தை ஒரு நீதி வழிமுறையாகக் கொண்டிருக்க முடியாது. அதுவும் “கண்ணுக்குக் கண் என்பது ஒட்டுமொத்த உலகத்தையும் குருடாக்கவே வழிவகுக்கும்” என்று சொன்ன மகாத்மாவை தேசப் பிதாவாகக் கொண்ட இந்த தேசம் மரண தண்டனையைச் சுமந்துகொண்டிருப்பது அடிப்படை பொருத்தமற்றது. நாம் யாருடைய குற்றங்களுக்கும் வக்காலத்து வாங்க வேண்டியதில்லை. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். குற்றவாளி திருந்தி வாழ வாய்ப்பளிக்க வேண்டும். இது இன்றைக்கு யாகூப் மேமனுக்கு மட்டும் அல்ல; நாளை டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம் பிடிபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் பொருந்தும். கொலைகாரர்களுக்காகவும் பயங்கரவாதிகளுக்காகவும் ஒட்டுமொத்த சமூகமும் கொலைகாரர்களாகவும் பயங்கர வாதிகளாகவும் ஆக முடியாது!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

யாகூப் மேமன் | கோப்புப் படம்
தூக்குக்கு எப்போது தூக்கு?
*
யாகூப் மேமன் தனது கர்ப்பிணி மனைவி ராஹினைக் கராச்சியில் விட்டுவிட்டு காத்மாண்டுவில் இருக்கும் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 1994-ல் சரணடைந்தார். ராஹினுக்கு துபாயில் குழந்தை பிறந்தது. தானும் குழந்தையும் யாகூபுடன் மறுபடியும் சேர்ந்து புதுடெல்லியில் புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்.
“நான் மனசாட்சி உள்ள மனிதன். டைகரின் தவறான செயல்களிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ள விரும்பினேன்” என்றார் யாகூப் மேமன். அது 1998-ல் நடந்தது. அப்போது நான் மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ‘பிளாக் ஃபிரைடே’ என்ற எனது புத்தகத்துக்காக ஆய்வு மேற்கொண்டிருந்தேன். யாகூபைச் சந்தித்தபோது, தனது கதையைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஆனால், விசாரணை முடிவதற்கு முன் அந்தக் கதையை நான் எழுதப்போய், அதனால் இந்த வழக்குக்கு ஏதாவது குந்தகம் ஏற்படுமோ என்று அவர் பயந்தார். அவ்வப்போது தெளிவற்ற சில தகவல்களை உதிர்ப்பார். அவற்றை நான் பின்தொடர்ந்து சென்றால், மிகவும் முக்கியமான தகவல்களாக அவை இருக்கும்.
புத்திசாலித்தனமான, மனசாட்சியுள்ள மனிதர் யாகூப். சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்டாக இருந்திருக்கிறார். இந்து மதத்தவரான தனது பங்குதாரர் சேத்தன் மேத்தாவுடன் இணைந்து வெற்றிகரமான நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். சிபிஐ-க்கு யாகூப் அளித்த வாக்குமூலத்தின்படி, மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றி அவர் முதன்முதலில் கேள்விப்பட்டது, துபாயில் இருந்தபோது 1993 மார்ச் 13 அன்று மாலை 4 மணிக்கு பிபிசி செய்திகள் மூலமாகத்தான்.
பாகிஸ்தானில் சிறைவைப்பு
துபாயில் இருந்த ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் குண்டுவெடிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ந்துபோனார்கள். டைகர் மேமன் மட்டும் விதிவிலக்கு. அவர் அந்தக் குண்டுவெடிப்புகளைக் கொண்டாட விரும்பினார். துபாய் அரசு அந்தக் குடும்பத்தினரை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. அங்கே அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை டைகர் செய்திருந்தார். கராச்சியில் வெவ்வேறு மாளிகைகள், ராணுவக் குடியிருப்புகள் என்று அவர்கள் மாற்றப்பட்டுக்கொண்டேயிருந்தார்கள். எனினும், டைகர் மேமனையும் அயூப் மேமனையும் தவிர, ஒட்டுமொத்த மேமன் குடும்பத்தினருக்கும் இப்படிச் சிறைவைக்கப்பட்டிருப்பது குறித்துத் துளியும் விருப்பமில்லை. அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கு ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.
யாகூப் ஒன்றும் துணிச்சல் மிக்கவர் அல்ல. ஆனால், ஒரு நொடியில் ஏற்படும் துணிவுதான், துணிச்சலான நபரையும் கோழையையும் வேறுபடுத்துகிறது. தனது கொடிய சகோதரனையும் ஐஎஸ்ஐயையும் மீறிக்கொண்டு, எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்தியா திரும்புவதென்ற முடிவை அவர் தீர்க்கமாக எடுத்தார். மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐஎஸ்ஐயின் முக்கியப் புள்ளியான தௌஃபிக் ஜாலியாவாலாவுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தார். ரகசிய இடங்களை வீடியோ எடுத்துக்கொண்டார்; புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்; உரையாடல்களையெல்லாம் பதிவு செய்துகொண்டார். பிறகு, போலி பாஸ்போர்ட்டுகள், பாகிஸ்தான் அரசு வழங்கியிருந்த வெவ்வேறு அடையாள அட்டைகள் போன்ற ஆவண ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டார்.
தனது பயணப்பெட்டி முழுவதும் ஆதாரங்கள் நிரம்பியதும், காராச்சி-காத்மாண்டு-துபாய்-காத்மாண்டு-கராச்சி என்று சுற்றுவழி பயணச்சீட்டை லூஃப்தான்ஸா விமானத்தில் எடுத்துக்கொண்டார். அவர் திரும்பிவருவார் என்ற உறுதியில் ஐஎஸ்ஐ ஆட்கள் அவரது பயணத்துக்கு முட்டுக்கட்டை போட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படி ஒரு ஏற்பாடு. இந்தியாவுக்கு நேரடியாகப் போக முடியாதென்பது யாகூபுக்குத் தெரியும். பாகிஸ்தான் அதிகாரிகளும் துபாய் அதிகாரிகளும் கூட்டாளிகள் என்பதால், துபாயில் சரணடைவது என்பது மிகவும் ஆபத்தாக முடிந்துவிடும். நேபாளம் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு என்று அவர் நினைத்ததால் காத்மாண்டுவைத் தேர்ந்தெடுத்தார். நம்பகத்தன்மை கொண்ட ஒரு தவறை அவர் வேண்டுமென்றே செய்ய நினைத்தார்.
பாதுகாப்புப் பரிசோதனையின்போது யாகூப் தனது பெட்டியைத் திறப்பதற்காக வேண்டுமென்றே தடுமாறியபோது, நிறைய பாஸ்போர்ட்டுகள் பெட்டியிலிருந்து சிதறிக் கீழே விழுந்தன. அதிகாரிகள் பிடித்தார்கள். யூசுஃப் அஹமத் என்ற பெயரில் சென்றிருந்த அவர் தனது உண்மையான பெயர் யாகூப் மேமன் என்ற உண்மையை, தான் பிடிபட்ட உடனேயே வெளிப்படுத்தினார். ரகசிய ஏற்பாட்டின்படி 48 மணி நேரத்துக்குள் அவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். சிபிஐ தரப்பு கூறும் விளக்கம் சற்றே மாறுபடுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் யாகூபின் பெட்டியில் துப்பாக்கி போன்ற ஏதோ ஒன்றைக் கண்டதாகவும் அதனால் பெட்டியைத் திறந்துகாட்ட அவர்கள் கேட்டதாகவும் அப்போதுதான் பாஸ்போர்ட்டுகள் சிதறி விழுந்தன என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட பிறகு, நேபாள எல்லைக்கு அருகே யாகூப் விடப்பட்டார். தனி விமானம் ஒன்றில் அங்கிருந்து புதுடெல்லி அழைத்துவரப்பட்டார். புதுடெல்லி ரயில் நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அப்படியெல்லாம் ஏதும் தன் வாழ்க்கையில் நிகழவேயில்லை என்று தான் எழுதிய கடிதமொன்றில் யாகூப் தெரிவிக்கிறார்.
வெகு விரைவில் யாகூப் எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டார். சில வாரங்களுக்குள், யாகூப் மேமனின் உதவியோடு, மேமன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் துபாயிலிருந்து இந்தியாவுக்கு வரச்செய்தது சிபிஐ. யாகூப் கைதுசெய்யப்பட்டதும் மேமன் குடும்பத்தினரின் மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் அவர்களுடைய முந்தைய திட்டத்தின்படி இந்தியாவுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையில் துபாய்க்குச் சென்றிருந்தனர்.
பரபரப்பான ஒரு நடவடிக்கையின் மூலம் மேமன் குடும்பத்தினரை ஐஎஸ்ஐயின் கண்காணிப்பிலிருந்து சிபிஐ அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். பின்தொடரும் ஐஎஸ்ஐ ஆட்களை ஏமாற்றிவிட்டு, மேமன் குடும்பத்தினரில் எட்டுப் பேரை இந்தியாவுக்கு சிபிஐ அழைத்துவந்தது. எட்டு பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளில் சில நிமிடங்களுக்குள், அதுவும் விண்ணப்பதாரர்களைச் சந்திக்காமலேயே, இந்திய விசாக்களுக்கான முத்திரை இடப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுதான் ஒற்றை நிகழ்வாக இருக்கலாம். டைகர், அயூப், அவர்களின் மனைவியர் ஆகியோர் தவிர, ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் திரும்பிவந்துவிட்டார்கள். ஒரு மாதக் குழந்தை ஜுபைதாவைக் கைகளில் ஏந்திய ராஹினும் சில நாட்களுக்குப் பிறகு அவர்களோடு சேர்ந்துகொண்டார்.
மன்னிப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையில்
ஒட்டுமொத்த நடவடிக்கையும் சாத்தியமானது ஒரே ஒரு மனிதரின் அசாத்தியமான துணிவாலும் உறுதியாலும்தான்: அவர்தான் யாகூப் மேமன். கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத இந்தப் பணியை நிறைவேற்றியதற்குப் பரிசாகத் தண்டனைக் குறைப்பும் மன்னிப்பும் கிடைக்கும் என்று யாகூப் எதிர்பார்த்தார். ஆனால், அரசு அவர் மீது தாக்குதல் நிகழ்த்த ஆரம்பித்தது. சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ‘என்கவுன்ட்டர்’ செய்யப்போகிறோம் என்று சொல்லி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கும்கூட ஒரு முறை அழைத்துப்போயிருக்கிறார்கள். ஆனால், தொலைக்காட்சியிலும், ஆரம்பத்தில் தன்னைக் கையாண்ட சிபிஐ அதிகாரிகளிடமும் சொல்லியவற்றைத் தவிர, சொல்வதற்கு யாகூபிடம் வேறு எதுவும் இல்லை.
தண்டனை நிறுத்திவைக்கப்படும் என்று அவர் எதிர்நோக்கிக்கொண்டிருந்தார். வாரங்கள் மாதங்களாகின, மாதங்கள் ஆண்டுகளாகின, ஆண்டுகள் தசாப்தங்களாகின. இப்போது அவர் தூக்கு மேடையில் நிற்கிறார். ஒட்டுமொத்த விசாரணையிலும் பெரிய இழப்பு யாகூபுக்கு என்பதுதான் இதில் முரண்பாடான விஷயம். இந்திய விசாரணை முகமைகளுக்கு ஏராளமான ஆதாரங்களை அவர் கொடுத்து உதவியிருக்கிறார். அதனாலேயே, இந்தத் திட்டத்தின் மூளை என்று கடைசியில் ஆக்கப்பட்டிருக்கிறார். ஒருமுறை டைகர் மேமனும் யாகூப் மேமனும் அனல்பறக்க விவாதித்தபோது, டைகர் மேமன் யாகூபிடம் சொல்லியிருக்கிறார், “காந்தியவாதியாக இந்தியாவுக்கு நீ போகிறாய், ஆனால் கோட்சேவாக நீ இந்தியாவில் தூக்கிலிடப் படுவாய்”. இதற்கு யாகூப் மேனன் இப்படிப் பதிலடி கொடுத்தார், “நீ சொன்னது தவறு என்பதைக் கடைசியில் நான் நிரூபிப்பேன்.”
இந்த உலகில் டைகர் மேமன்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுவதும் யாகூப்களெல்லாம் தூக்கு மேடைக்கு அனுப்பப்படுவதும்தான் பெரும் துயரம்!
- எஸ். ஹுஸைன் ஜைதி, புலனாய்வுப் பத்திரிகையாளர், மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றிய ‘பிளாக் ஃபிரைடே’ புத்தகத்தின் ஆசிரியர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்),
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக