புதன், 8 ஜூலை, 2015

வறுமையின் பிடியில் கிராமப்புறங்கள் - SECC Report

மத்திய அரசு வெளியிட்டுள்ள சமூக, பொருளாதார, சாதிக் கணக்கெடுப்பு (எஸ்.இ.சி.சி.) அறிக்கைகளின் முடிவுகள் கவலை தருகின்றன. 90% குடும்பங்களில் குடும்பத்தின் தலைவர் அல்லது யாராவது ஒருவர்கூட அதிகபட்சம் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிப்பதில்லை. பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தலா ஒரு துண்டு நிலம்கூட இல்லை. பெரும்பாலானவர்கள் அன்றாட உடலுழைப்பில் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டுதான் குடும்பம் நடத்துகின்றனர். அந்த வருமானமும் நிரந்தரமல்ல. 20% குடும்பங்களிடம்தான் பைக் அல்லது கார் போன்ற வாகனங்கள் இருக்கின்றன. “இந்தியா வேகமாக வளர்ந்துவருகிறது, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் வல்லரசாகப்போகிறது” என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடுகிறவர்கள் சற்றே நிதானித்துப் பார்க்க வேண்டிய பல உண்மைகள் இந்த ஆய்விலிருந்து வெளிவருகின்றன.
கிராமப்புறக் குடும்பங்களை வறுமைக் கோட்டுக்கும் கீழிருந்து வெளியே தூக்கிவிடக்கூடிய வேலைவாய்ப்புகள் அரசிடமும் இல்லை, தனியாரிடமும் இல்லை. விவசாயத் துறையில் பெரும்பாலானவர் களுடைய வருமானம் பட்டினி இல்லாமல் கஞ்சி குடிக்கத்தான் இருக்கிறதே தவிர, மறு முதலீடு செய்து விவசாயத்தை வளப்படுத்தும் அளவுக்கு இல்லை. இயந்திரங்களின் பயன்பாடும் பாசன வசதிகளும் மிகமிகக் குறைவு. விவசாயத்துக்கான கடனுதவி மிகச் சிலருக்குத்தான் கிடைக்கிறது. கிராமங்களில் 3% குடும்பங்களில்தான் பட்டதாரிகள் இருக்கின்றனர்.
பெண்களே குடும்பத் தலைவர்களாக இருக்கும் குடும்பங்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் குடும்பங்களின் நிலைமை இன்னும் மோசம். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சமூக, பொருளாதார நிலைமை மிகவும் பின்தங்கி இருக்கிறது. முன்னேறிய மாநிலங்கள் என்று கருதப்படும் தமிழ்நாடு, கேரளம் ஆகியவற்றில்கூட கிராமப்புறக் குடும்பங்களின் வருவாய் குறைவு. நகர்ப்புற ஏழைகள் நிலைமை ஓரளவு பரவாயில்லை என்றாலும் குடிநீர், சுகாதாரம், குடியிருப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அதிர்ச்சிதரத்தக்க பல அம்சங்கள் நிலவுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் வழங்கியபோது, வறுமையை ஒழிக்க மாநிலங்கள் தங்களுக்கு வேண்டிய திட்டங்களை வகுத்துக்கொள்ள உதவும்வகையில் இந்தத் தரவுகள் உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது.
அரசுத் துறைகளில் உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்துவதே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உற்ற வழி. கிராமப்புற, நகர்ப்புற வீட்டுவசதித் தேவைகளைப் பூர்த்திசெய்வது, சாலைகள் அமைப்பது, குடிநீர் அளிப்பது, போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு, பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்றவற்றுக்கு அதிகம் செலவிட்டாலே ஏழைகளின் பெரும்பாலான தேவைகள் பூர்த்தியடையும். பொது விநியோகத் திட்டம், கிராமப்புற - நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவற்றை அனைவருக்கும் விரிவுபடுத்த வேண்டும். வறுமை ஒழிப்புத் திட்டங்களைத் தத்தமது தேவைக்கேற்ப மாநில அரசுகளே வடிவமைத்து நிறைவேற்ற சுதந்திரம் அளிப்பதுடன் போதிய நிதியையும் ஒதுக்க வேண்டும்.
சாதி அடிப்படையில் சமூக, பொருளாதார வளர்ச்சி எப்படி என்ற தகவலையும் ஊட்டச் சத்துக் குறைவு எப்படி இருக்கிறது என்ற தகவலையும் அரசு வெளியிட மறுக்கிறது. தர்மசங்கடத்தை விளைவிக்கக் கூடிய தரவுகளை அரசு மூடி மறைக்கக் கூடாது. அந்த விவரங்கள் மக்களிடையே கோபத்தையும் கடும் விவாதத்தையும் ஏற்படுத்தினாலும் அவற்றிலிருந்து நல்ல தீர்வுகளும் வழிகளும் பிறக்கக்கூடும். அப்போதுதான் இந்த ஆய்வின் நோக்கம் நிறைவேறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக