ருக்கடிநிலைக்குப் பெரிய விலை கொடுத்த இயக்கங்களில் ஒன்று திமுக. ஆனால், தமிழகத்தில் தேர்தலில் அதற்கான பலன்களை அப்போது திமுகவால் அறுவடை செய்ய முடியவில்லை. என்ன காரணம்? நெருக்கடிநிலையின் கொடூரச் சூழலைப் போதிய அளவுக்கு மக்களிடம் கொண்டுசேர்க்க திமுக தவறிவிட்டதா அல்லது நெருக்கடிநிலைச் சூழலையும் தாண்டி திமுகவின் ஆட்சி மீது அப்போது இருந்த அதிருப்தியா?
இரண்டுமே தவறு. சோதனைகளை எதிர்கொள்ளும் இயக்கங்களும், தலைவர்களும் அவற்றுக்கான பலன்களை நிச்சயமாகப் பெறுவார்கள் என்பதை அரசியலில் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா என்ன? இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் வெற்றிக்குக் காரணமாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில், அடுத்து நடைபெற்ற தேர்தலில் என்னவானார்? இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழகத்தில் நடந்த மிகப் பெரிய போராட்டத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பலர் தீக்குளித்தும், துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகியும் மாண்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர். ஆனால், அதையொட்டி நடந்த தருமபுரி தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது.1962 தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவும் 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜரும் தோல்வியடைந்தார்களே, என்ன காரணம்? தேர்தல் வெற்றி - தோல்வி என்பது எப்போதும் வாக்காளர்களின் மனநிலையைச் சார்ந்தது. அந்த மனநிலை ஏன் அப்படி இருந்தது என்பதற்கு, தர்க்கரீதியாக துல்லியமான - சரியான காரணங்களை யாராலும் சொல்ல முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக