
சமீபத்தில், இந்தியாவின் மூத்த தூதர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் நானும் கலந்துகொண்டேன். அப்போது நரேந்திர மோடியின் அரசு முன்னெடுத்துள்ள பல வெளியுறவுக் கொள்கைகள் பாராட்டப்பட்டன. கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு உறுப்பினர் பேச்சுவாக்கில், “இந்தியாவில் பெண்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்களே?” எனக் கேட்டார். உடனே அங்கிருந்த மிகவும் மூத்த அதிகாரி ஒருவர், “ஒரு தூதராக நான் எதிர்கொள்ளும் மிகக் கடினமான கேள்வி இதுதான்” என்றார். “இது ஒரே ஒரு நாட்டுக்கு உரித்தான பிரச்சினை அல்ல” எனத் தொடர்ந்து அதுகுறித்து விரிவாகப் பேச ஆரம்பித்தார். இந்தியாவில் நிகழ்வதைக் காட்டிலும் அமெரிக்காவில்தான் அதிக எண்ணிக்கையில் வன்புணர்வு மற்றும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்கின்றன. பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடத்தப்படும் படுபயங்கரமான பாலியல் கொடுமைகளும் இதில் அடக்கம் என்றார். தனது வாதத்தின் வழியே சொல்ல நினைத்தது இதுதான். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இந்தியாவில் மட்டுமே நடப்பதுபோலக் காட்டுவதைச் சர்வதேச ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.
இந்தப் பதிலைக் கேட்டவுடன் எனக்கு மன உளைச்சலும் சுயபச்சாதாபமும் உண்டானது. ஒரு வரலாற்றாசிரியர் மற்றும் இந்திய விடுதலைக்காக காந்திய வழியில் போராடிப் பின்னர் இந்தியாவின் முதல் பெண்கள் அமைப்பைத் தோற்றுவித்த பெண்ணின் மகள் என்ற முறையில் இந்தியாவில் பெண்களின் நிலையை விளக்குவது மிகவும் கடினம் என்பது எனக்குத் தெரியும். அமெரிக்கர்கள் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கும்போதெல்லாம், “சூழல்தான் இதற்கான பதிலைத் தீர்மானிக்கிறது” என்பேன்.
முரண்பட்ட தேசம்
இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலை பன்முகத்தன்மை கொண்டது. அதைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு அந்நியருக்குக் குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது. அவர்களுக்கு வியப்பு என்னவென்றால், பிரதமர் தொடங்கி முதலமைச்சர்கள் வரையில் பெண் அரசியல் தலைவர்களை இந்தியாவால் உருவாக்க முடிகிறது. அதே நேரம், ‘காணாமல்போன பெண்கள்’என அமர்த்தியா சென் சொல்வதுபோல உலக அளவில் அதிகப்படியான பெண் சிசுக்கொலை நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. தேசிய நிதி நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளாக இந்தியப் பெண்கள் இடம்பிடிக்கிறார்கள். மறுபுறம் உலகத் தாய்மார்களின் நிலைகுறித்த கணக்கெடுப்பில் உள்ள 179 நாடுகளின் 140-வது இடத்தில், கவலைக்கிடமான நிலையில் இந்தியா உள்ளது. (ஆனால், சீனாவோ 61-வது இடத்தைப் பிடித்துள்ளது.)
உண்மைதான், பொதுமைப்படுத்த முடியாத விதத்தில் நேர்மாறான முரண்களோடு திகழ்கிறது இந்தியா. டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த கோரமான சம்பவம் தெரியவந்தபோது நான் அடைந்த துயரத்தின் தீவிரத்தை என் 98 வயதான தாயாரும் அடைந்தார். அடுத்து சமீபத்தில் நியூயார்க்கில் நிர்பயாவை முன்னிறுத்தி நிகழ்த்தப்பட்ட நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. அது என் மன உளைச்சலை உச்சத்துக்குக் கொண்டுசென்றது. இந்திய இளம் பெண்கள் தினம் தினம் பலியாகிறார்கள் என்றது அந்நாடகம். பெண்களைப் பொறுத்தவரை பன்முகத்தன்மை கொண்டது இந்தியா என்பதை முன்பின் அறிந்திராதவர்கள்தான் அந்நாடகத்தின் பார்வையாளராக இருந்தார்கள். எந்தப் பண்பாட்டையும் ஒற்றைப் பரிமாணம் கொண்ட பார்வையோடு அணுகுவது எத்தனை அபாயகரமானது என்பது அப்போதுதான் எனக்குத் துல்லியமாகப் புரிந்தது. உடனடியாக எழுந்து, “இந்தக் கதைக்கு மறுபக்கமும் உள்ளது. நான் ஒரு இரண்டாம் தலைமுறை பெண்ணியவாதி. என் தாயோ 1935-லேயே பெண்களின் சுயமரியாதைக்காகப் போராடியவர்” என உரக்கச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால், அதே நேரத்தில் பெருவாரியான இந்தியப் பெண்கள் ஆபத்தான வாழ்க்கைச் சூழலில்தான் அன்றாடம் உழன்றுகொண்டிருக்கிறார்கள் எனவும் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.
உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பெண்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் வளம் சமச்சீர் அற்ற நிலையில் இருப்பதாக ‘எகனாமிஸ்ட்’ பத்திரிகையில் படித்தேன். சீனாவை விடவும் எண்ணிலடங்கா இந்தியப் பெண்கள் மகப்பேற்றின்போதும் அடிப்படை மருத்துவ வசதியின்றியும் மரணமடைகிறார்கள். சமீப காலமாக வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பெண்கள் வெற்றி நடைபோட்டாலும் அவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்திய அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டிய நேரம் இது. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறைவுதான் என நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. மாற்றத்துக்கான திட்டங்களை வகுக்கும்போதே பெண்கள் குறித்த பார்வையும் மாற வேண்டும்.
ஆண் மையப் பார்வை
‘பெண்ணாக இருப்பினும்’என்று வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவைக் குறிப்பிட்டுப் பாராட்டிய மோடியின் பேச்சுக்குச் சரியான விதத்தில் பல்வேறு இந்திய பெண் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தெரிந்தோ தெரியாமலோ இத்தகைய பிற்போக்குத்தனமான பார்வைகள் இந்தியத் தலைவர்களிடம் பரவலாக உள்ளன. இந்தப் போக்கு நிச்சயம் சுட்டிக்காட்டப்பட வேண்டும். அத்தலைவர்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இதே போன்று தாய்மார்களின் நலன் காப்பதில், பெண் பிள்ளைகளுக்குக் கல்வி அளிப்பதில், அவர்களைப் பள்ளிகளில் தக்கவைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உலக அரங்கில் உள்ள பார்வையாளர்களுக்கு இந்தியப் பெண்களின் நிலையை விளக்குவதற்கு முன்னால், இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தர நினைக்கும் தீர்வை முன்னெடுத்துச் செல்வது இந்தியத் தூதர்களின் கடமையாகும். இப்படிச் செய்தால் இந்தியா மட்டுமல்லாது உலகின் எந்த மூலையில் உள்ள பெண் அவமதிக்கப்பட்டாலும் அவளுக்காக அவர்களால் குரல் கொடுக்க முடியும். ஊடகங்களும் வெளிநாட்டுச் சக்திகளும் இந்தியாவின் புகழை மங்கச்செய்ய முயல்கின்றன எனச் சொல்வதில் அர்த்தமில்லை. தன் பிரச்சினைகளை ஒப்புக்கொண்டு, அதற்கான தீர்வுகளைக் கண்டறிய முன்னோக்கி நடைபோடும் பலம் இந்தியாவுக்கு உள்ளது. அதற்கு முதலில் காலங்காலமாகப் பெண்களை முடக்கிவைத்த பழைய கோட்பாடுகளைக் களைய வேண்டும் என்ற இலக்கோடு தொடர்ந்து உழைக்க வேண்டும்.
- விஷாகா நிருபாய் தேசாய்
கொலம்பியா பல்கலைக்கழகத் தலைவரின் சர்வதேச விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகர்.
‘தி இந்து’ (ஆங்கிலம்) தமிழில்: ம.சுசித்ரா.
*********
18 வயதை எட்டாத சிறுவர் அல்லது சிறுமிக்கு இயல்பான பாதுகாவலராகத் தந்தையும் அவருக்குப் பிறகு தாயும் இருக்க முடியும் என்று ‘இந்து சிறார் மற்றும் பாதுகாவலர்கள் சட்டம்’தெரிவிக்கிறது. தந்தைவழி சமூக மரபை இச்சட்டம் தாங்கிப் பிடிப்பதாக நீண்ட கால விமர்சனங்கள் உண்டு. கணவனால் கைவிடப்பட்ட அல்லது கணவன் விலகிப்போன ஒரு பெண் தன் குழந்தையை எப்படிப் பராமரிக்க முடியும் அல்லது வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணோ, தத்தெடுத்த தாயோ தன் குழந்தையை எப்படிப் பராமரிக்க முடியும்? அவர்களுக்கெல்லாம் இந்தச் சட்டம் தரும் ஆதரவு / பாதுகாப்பு என்ன? நெடுநாள் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டுவந்தன. உச்ச நீதிமன்றம் தன்னுடைய சமீபத்திய தீர்ப்பில், “திருமணமாகாத தாயும்கூட, தனது குழந்தைக்குப் பாதுகாவலராக இருக்க உரிமை கோரலாம்” என்று கூறி, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது; ஆணாதிக்க மரபின் அடித்தளத்திலிருந்து ஒரு செங்கல்லை உருவியிருக்கிறது.
படித்த, வேலைக்குப் போகும் ஒரு இளம் தாய், தன்னுடைய முதலீட் டுக்குத் தனது ஐந்து வயது மகனை வாரிசாக நியமிக்க மனுச் செய்தார். ஆனால், அது தொடர்பான நடைமுறையோ, அந்தக் குழந்தை யின் தந்தை பெயரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் அல்லது பாதுகாவ லர் என்ற உரிமை தனக்கு இருக்கிறது என்பதற்கான சான்றிதழை அந்தத் தாய் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து, நீதிமன்றத்தை அவர் நாடினார். “பாதுகாவலர்கள், அவர்களுடைய பொறுப்பில் உள்ள குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் - 1890, பிரிவு 11-ன் கீழ், குழந்தையின் தந்தை, அவருடைய வசிப்பிடம் ஆகியவற் றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்” என்று கீழமை நீதிமன்றம் அவரிடம் கூறியது. அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதிசெய்தது.
உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்ரம்ஜீத் சென் தலைமையிலான அமர்வு, “மகனின் எதிர்காலத்துக்குத் தாய் பொறுப்பேற்றிருக்கிறார். தந்தையோ தனக்கு மகன் இருக்கிறான் என்பதைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார். இத்தகைய சூழலில், முதலில் குழந்தையின் நலன்தான் முக்கியமானது. அடுத்ததாக, தந்தையின் பெயரை வெளியிடாமல் இருக்க தாய் விரும்பினால், அவருடைய அந்த உரிமையை நாம் அங்கீகரிக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
வரவேற்க வேண்டிய, மிக முக்கியமான தீர்ப்பு இது. குடும்பம் என்கிற அமைப்புக்கு வெளியிலும் அந்த அமைப்பு சிதையும்போதும் முதல் பலிகடாக்கள் குழந்தைகள்தான். ஆக, அடிப்படையில் முக்கிய மானது குழந்தையின் நலனும் அவர்களைப் பாதுகாத்து வளர்ப்ப வருக்குமான அங்கீகாரமும்தான். 1999-ல் எழுத்தாளர் கீதா ஹரிஹரன் உச்ச நீதிமன்றத்திடம் இதே போன்ற காரணத்துக்காக வழக்காடினார். தன்னுடைய மகன் பெயரில் சில முதலீடுகளைச் செய்ய விரும்பினார். தந்தையின் பெயர்தான் வேண்டும் என்று வங்கி வலியுறுத்தியதால் நீதிமன்றத்தை நாடினார். குழந்தையின் தந்தை, தாய் இருவரையுமே சமமான பாதுகாவலராகக் கருத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அப்போது அறிவித்தது. “தந்தைக்குப் ‘பிறகு’ என்று சட்டத்தில் உள்ள வார்த்தையைக் கொண்டு, பாதுகாவலராக இருக்கும் முதல் உரிமை தந்தைக்குத்தான், தாய்க்கு இரண்டாம் பட்சம்தான் என்று பொருள் கொண்டுவிடக் கூடாது” என்றும் அப்போதே தீர்ப்பளித்தது. எனினும், நம்முடைய அமைப்பின், அலுவலகங்களின் காதுகளில் அது விழவில்லை. இனி விழும் என்று நம்பலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக