ஞாயிறு, 20 ஜூலை, 2014

மண்டேலாவின் 96-வது பிறந்த நாள்

இன்று மண்டேலாவின் 96-வது பிறந்த நாள்
கருணை, அன்பு, மன்னிப்பு: இதுதான் உலகுக்கு மண்டேலாவின் செய்தி.
சுமார் 27 ஆண்டுகளாக நெல்சன் மண்டேலாவைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர பார்த்ததில்லை; ஒரு பேச்சுப்போட்டிக்கு நடுவராகச் செயல்பட நான் இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு 1950-களில் வந்தபோது ஒரு முறை பார்த்தேன். அடுத்து 1990-ல் பார்த்தேன். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, பழைய உறுதியும் வேகமும் அவரிடம் இருக்காது, மிகவும் கலங்கியிருப்பார் என்று சிலர் அஞ்சினார்கள். புகழ்ந்து பேசும் அளவுக்கு அவர் பெரிய ஆளாக வர மாட்டார் என்றே பலர் சந்தேகப்பட்டனர். அவர் விடுதலையாவதைவிட சிறையிலிருப்பதே கட்சிக்கு லாபம் என்றுகூட சிலர் கருதினர்.
அசாதாரணமான சம்பவங்கள்
சிறையிலிருந்து அவர் விடுதலையானதும் அசாதாரணமான விஷயங்கள் நடைபெற்றன. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வெள்ளையர்களில் பலர் அவரைப் பயங்கரவாதி என்றே தொடர்ந்து சாடினாலும், வெள்ளையர்களின் தரப்பு என்ன, அவர்களுடைய அச்சம் என்ன என்று அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார் மண்டேலா. அவர் செய்த சில செயல்கள், வார்த்தைகளைவிட வெகு வலுவாக அவருடைய எண்ணங்களைப் பறைசாற்றின.
அவர் அதிபராகப் பதவி ஏற்றபோது. சிறைச்சாலையில் அவருக்கு சிறை அதிகாரியாக இருந்தவரை முக்கியப் பிரமுகராக வரவேற்று அரங்கில் இடம்பெறச் செய்தார். அவருக்கு எதிராக அரசுத்தரப்பில் வாதாடிய வழக்கறிஞரை மதிய உணவு விருந்துக்கு வரவழைத்து அருகில் அமர்ந்து உண்டார். எப்பேர்ப்பட்ட மகத்தான பெருந்தன்மை அது. அவருக்கு எதிராக வாதாடிய அந்த அரசு வழக்கறிஞர், அவருக்கு மரண தண்டனைக்குக் குறைவாக எந்த தண்டனையும் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்று தீவிரமாக வாதாடியவர். அதுமட்டுமல்ல, காலம்சென்ற தென்னாப்பிரிக்க வெள்ளையின அரசியல் தலைவர்களின் மனைவி யர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். 1958 முதல் 1966 வரை தென்னாப்பிரிக்கப் பிரதமராக இருந்தவரும், நெல்சன் மண்டேலாவைச் சிறைக்கு அனுப்பியதோடு தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸைத் தடைசெய்தவருமான எச்.எஃப். வெர்வேர்டின் மனைவிக்கும் அழைப்பு அனுப்பினார். உடல்நலம் சரியில்லாததால் வர முடியவில்லை என்று அந்த அம்மையார் தெரிவித்ததும், அவர் குடியிருந்த வீட்டுக்கே நேரே சென்று அவரிடம் நலம்விசாரித்து, தேநீர் அருந்திவிட்டு வந்தார்.
அன்பின் உறைவிடம்
நம்ப முடியாத அளவுக்கு அன்பின் உறைவிடமாகத் திகழ்ந்தார். முதல்முறையாகச் சுதந்திரத் தேர்தல் நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தைகளின்போது எதிராளிகளுக்குச் சலுகைகளை விட்டுத்தர அவர் தயாராக இருந்தவிதம் வியப்பூட்டுவதாக இருந்தது. இன்காதா சுதந்திரக் கட்சியின் தலைவர் புத்தலேசி, தங்களுடைய கட்சிக்கு இந்தச் சலுகை வேண்டும், அந்தப் பதவி வேண்டும், இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று எதைக் கேட்டாலும் சிரித்தபடியே, சரி எடுத்துக்கொள்ளுங்கள் என்று அன்போடு கூறினார். இன்காதா ஒன்றும் நியாயமான விடுதலை இயக்கம் அல்ல என்று அவருடைய கட்சியைச் சேர்ந்த சிலர் கூறியபோது மனம் வருந்தினார். புத்தலேசி கேட்டால் மூத்த அமைச்சராகக்கூட அவரைச் சேர்த்துக்கொள்வேன் என்றார். நாட்டில் மீண்டும் ரத்தக்களரி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
தென்னாப்பிரிக்க வெள்ளையர்களுக்குக் கருப்பர்கள் பற்றிய அச்சம் நீங்கி, நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக தென்னாப் பிரிக்க ரக்பி அணியான ஸ்பிரிங்பாக்கின் ஜெர்சியை அணிந்து விளையாட்டுத் திடலுக்குச் சென்றார். வேறு எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அந்த உடையை அருவருப்பாகப் பார்த்திருப்பார். அவரோ பெருமையோடு அணிந்து சென்றார். அந்த இடத்தை அவர் அடைந்தபோது அங்கிருந்தவர்களில் 99% வெள்ளையர்கள்தான் என்றாலும் அவர்களாலும் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் ‘நெல்சன், நெல்சன்’ என்று ஓலமிட்டு வாழ்த்தினார்கள்.
கோபமும் வரும்
அவருக்குக் கோபம் வந்தும் பார்த்திருக்கிறேன். 1992-ல் போய்படாங் என்ற இடத்தில் நடந்த படுகொலைகளில் 42 பேர் இறந்தபோது, அரசுடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை விலக்கிக்கொண்டார். இதுகுறித்து ஏற்கெனவே அதிபர் எஃப். டபிள்யு. கிளார்க்குக்கு எச்சரிக்கை வந்தபோதும் அவர் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரியாக எடுக்கவில்லை, கருப்பர்கள் உயிர் என்றால் அற்பம்தானே என்று மண்டேலா கோபப்பட்டார்.
ஆஸ்லோ நகரில் நோபல் பரிசு பெறச் சென்றபோது நடந்த சம்பவமும் மண்டேலாவைக் கோபமுறச் செய்தது. ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்டக் காலத்துப் பாடலை குழுவினர் இசைத்துக் கொண்டிருந்தபோது முன்னாள் அதிபர் கிளார்க்கும் அவருடைய மனைவியும் சளசளவென்று பேசிக்கொண்டே இருந்தார்கள். இதைக் கவனித்தபோதும் அவர் கோபமுற்றார். ஆனால், அவ ருடைய பொறுமை, மன்னிக்கும் தயாள குணத்தைவிட அவருடைய கோபம் எந்த நாளிலும் பெரிதாக இருந்ததில்லை.
அதிபராக அவர் பதவிவகித்தது சில ஆண்டுகளே என்றாலும் அப்போது செய்த சாதனைகளைப் பார்க்கும்போது சிறையில் 27 ஆண்டுகளை வீணாகக் கழித்துவிட்டாரே என்ற வேதனை ஏற்படுவதுண்டு. ஆனால், சிறைவாசத்தை வீண் என்று கருத வேண்டியதுமில்லை. ஏனென்றால், அங்குதான் அவர் பக்குவப் பட்டு, பண்பட்ட தலைவராகத் திரும்பிவந்தார். சிறைக்குச் சென்ற போது அவர் கோபக்கார இளைஞராக இருந்தார். ஆனால், திரும்பிவந்தபோது எவரையும் மன்னிக்கும் மனோபாவம் அவரிடம் மிகுந்திருந்தது.
வெள்ளையர்களின் தவறுகளை மறந்து மன்னித்துவிடுங்கள் என்று அவர் கூறினால், ‘மன்னிப்பதா, சிறைக்குப் போய் அடி பட்டிருந்தால் உங்களுக்கு அந்தக் கஷ்டம் புரியும்’ என்று சொல் வதற்கு வாய்ப்பில்லாமல், அவரே 27 ஆண்டுகள் வெஞ்சிறையில் இருந்துவிட்டார். வின்னியை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் அவரை விட்டுப் பிரிய நேர்ந்ததுதான் அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய துயரம். ஆனால், அதை ஓரளவு ஈடுகட்டும் வகையில் அவருக்கு கிரேசா கிடைத்தார்.
அவர் எதை நிறுவ விரும்பினாரோ அதை நிறுவுவதுதான் அவருக்கு நாம் செய்யக்கூடிய பொருத்தமான அஞ்சலி. உலகில் யாருமே, இழக்க முடியாத அளவுக்கு முக்கியமானவர்கள் இல்லை என்பது அவருடைய கருத்து. ஆப்பிரிக்க தேசிய காங் கிரஸ் கட்சியைவிட தான் பெரியவன் அல்ல என்று பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் நமக்கு உண்மை தெரியும். உலகின் எந்த மூலையில் யார் தலைமைப் பதவிக்கு வந்தாலும், தலை வராக இருப்பதற்கான தகுதிகள் எவை என்பதை மண்டேலா உணர்த்திவிட்டார்.
- டெஸ்மாண்ட் டூடூ, மனித உரிமை ஆர்வலர், ஆர்ச்பிஷப், சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.
தி கார்டியன், தமிழில்: சாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக