செவ்வாய், 1 ஜூலை, 2014

காந்திக்குச் சிகிச்சையளிக்கச் சென்ற மருத்துவர்

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. டாக்டர் பி.சி. ராயின் பிறந்த நாள்தான் மருத்துவர்கள் தினம். அவரது இறந்த நாளும் அதுவே! பி.சி.ராய் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். காந்தியவாதி. மகாத்மா காந்தியின் மருத்துவர். மேற்கு வங்கத்தில் 14 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர். பார ரத்னா விருது பெற்றவர்.
மருத்துவர்கள் தினம், மருத்துவர்கள் ஒன்றாகக் கூடிக் கொண்டாடி மகிழ்வதற்கு மட்டுமல்ல. மருத்துவர் களுடைய, மருத்துவத் துறையினுடைய பிரச்சினைகள் குறித்தும், இந்தியர்கள் அனைவருக்கும் நலவாழ்வு கிடைக்கச் செய்வதில் மருத்துவர்களின் பங்களிப்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாகும்.
*******************************
மருத்துவர்களின் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இன்று இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்னும் 6 லட்சம் மருத்துவர்கள் தேவை. மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்கிட, போதிய மருத்துவக் கல்லூரி களை உருவாக்கிட மத்திய-மாநில அரசுகள் தவறி விட்டன. இதனால், மருத்துவர்களும் மக்களும் பாதிக்கப் படுகின்றனர்.
*****************************
``இதுகாறும் போற்றிப் பாராட்டப்பட்டு, பணிவுக்கும் பக்திக்கும் உரியதாகக் கருதப்பட்ட ஒவ்வொரு பணித் துறையையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும் சமயக் குருவையும் கவிஞரையும் விஞ்ஞானியையும் அது தனது கூலி உழைப்பாளர்கள் ஆக்கிவிட்டது'' என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸும் ஏங்கல்ஸும் 1848-ல் கூறினர். அவர்கள் அன்று கூறியதை இன்று பெருநிறுவன மருத்துவமனைகள் எதார்த்தத்தில் நிரூபித்துக்காட்டியுள்ளன. மருத்துவர்களையும் கூலி உழைப்பாளர்களாக்கி மகிமை இழக்கச்செய்துள்ளன.
**********************************
கடந்த 40 ஆண்டுகளில் இந்திய மருத்துவத் துறையில் மிகப் பெரிய எதிர்மறை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 1978-ல் அல்மா அட்டாவில் நடைபெற்ற ஆரம்ப நலப் பராமரிப்புகுறித்த சர்வதேச மாநாட்டுப் பிரகடனம், ``நலவாழ்வு என்பது அடிப்படை மனித உரிமை'' என அறிவித்தது. அதை ஏற்றுக்கொண்டு இந்தியாவும் கையெழுத்திட்டது. கையெழுத்திட்ட பேனா மை காய்வதற்குள்ளாகவே ஏற்றுக்கொண்ட உறுதி மொழிக்கு எதிராகச் செயல்படத் தொடங்கியது நமது அரசு. விளைவு, மருத்துவம் மிக வேகமாகத் தனியார்மய மானது, வியாபாரமயமானது, பெருநிறுவன மயமானது.
************************************
நல வாழ்வுக்கான போராட்டம் என்பதே விரிந்த பொருளில் ஓர் அரசியல் போராட்டமாகும்'' எனப் பிரபல ஜெர்மானிய நோய்க்குறியியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.விர்ச்சோ சரியாகக் கூறினார். அத்தகைய போராட்டத்தை மருத்து வர்கள் மட்டுமே தனித்து நின்று நடத்திவிட முடியாது. இதர பகுதி மக்களுடன் இணைந்து சரியான சித்தாந்த வழிநின்றே நடத்திட வேண்டும்.
**************************************************

காந்திக்குச் சிகிச்சையளிக்கச் சென்ற மருத்துவர் பி.சி. ராயிடம், ``நமது நாட்டின் 40 கோடி மக்களுக்கும் இலவசமாகச் சிகிச்சை அளித்துவிட்டு வாருங்கள், உங்களது சிகிச்சையை நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என மகாத்மா காந்தி கூறினார். இப்போது உயிரோடு இருந்திருந்தால் நம்மிடமும் இப்படித்தான் கூறியிருப்பார் என நமது மருத்துவர்கள் அனைவரும் உணர வேண்டிய நாளே மருத்துவர்கள் தினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக